சத்துணவில் வந்த சாதி சர்ச்சை

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

சத்துணவில் வந்த சாதி சர்ச்சை

உங்களை ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணில் இருந்து படைத்தோம் என இஸ்லாம் கூறுகின்றது. அதனால்தான் இஸ்லாம், சாதி என்ற பிரச்சினை இல்லாமல் அனைத்து மக்களும் சமம் என்று வெற்றி நடை போடுகின்றது. அனைத்து மக்களும் சரிசமம் என்று சொல்லும் இஸ்லாத்தை நோக்கி தினம் தினம் மக்கள் படையெடுத்து வருவதைக் காணலாம். வெளியூருக்குப் பயணம் செய்பவர்கள் ஹோட்டல்களில் சாப்பிடுவார்கள். ஆனால் அவ்வாறு சாப்பிடும் யாரும் இதை சமைத்தவன் எந்த சாதி என்று பார்ப்பது இல்லை.

அப்படி ஆராய ஆரம்பித்தால் யாருமே சாப்பிடவோ தண்ணீர் குடிக்கவோ இந்த உலகத்தில் வாழவோ முடியாது. ஆனால் உணவு சமைப்பவர் தாழ்ந்த சாதி என்பதால் பள்ளிக்கூடமே மூடப்பட்ட சர்ச்சை இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள கவுண்டம் பாளையத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில்தான் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. இந்தப் பள்ளிக்கூடத்திற்கு சத்துணவு சமைக்க பாப்பம்மாள் என்ற பெண் ஊழியர் வேறு ஊரில் இருந்து மாற்றலாகி வந்துள்ளார்.

இந்தப் பெண் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர். இதைக் கேள்விப்பட்ட அந்த ஊர் மக்களில் சிலர் பாப்பம்மாள் சமையல் செய்வதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். சத்துணவு செய்யத் தயாரான பாப்பம்மாளைத் தடுத்து நிறுத்தி பள்ளியைப் பூட்டினார்கள் ஆதிக்க சாதியினர். இந்தத் தகவலை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து பாப்பம்மாளை பழைய பள்ளிக்கூடத்திற்கே பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

ஆதிக்க சாதியினர்.. இவர்களின் கோரிக்கையை எவ்வித பரிசீலனையும் இல்லாமல் ஏற்ற அதிகாரிகள், பாப்பம்மாளை மீண்டும் பழைய பள்ளிக்கூடத்திற்கே மாற்றம் செய்து உத்தரவிட்டனர். பாப்பம்மாளும் தன் பழைய பள்ளிக்கு செல்லத் தயாரானார். இதனையறிந்த அந்த கிராமத்து மக்கள் பலர் ஒன்று திரண்டு அதிகாரிகளின் இந்த ஆணைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். பாப்பம்மாளுக்கு இழைக்கப்படுவது அநீதி என்றும், அவரை இதே பள்ளியில் பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து மறியல் செய்தனர்.

இதனால் அதிகாரிகள் வேறுவழியில்லாமல் பாப்பம்மாளுக்கு வழங்கிய பணி இட மாறுதலை ரத்து செய்தனர். பாப்பம்மாள் மீண்டும் கவுண்டம்பாளையம் பள்ளியிலேயே பணி புரியலாம் எனவும் மறு உத்தரவு வழங்கினார்கள். பாப்பம்மாளுக்கு பணி வழங்கிய உத்தரவுடன் சேர்த்து, பாப்பம்மாளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக 84 பேர் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாப்பம்மாள் மீண்டும் பணியில் சேர்ந்து சத்துணவு சமைக்கத் துவங்கினார்.

ஆனால் பாப்பம்மாள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டதால் பள்ளியில் படித்த பாதி மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வராமல் புறக்கணித்து விட்டார்கள். அந்தப் பள்ளியில் படிக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 45. ஆனால் பாப்பம்மாள் பணியை மீண்டும் துவங்கியதும் 27 மாணவர்களை பள்ளியில் இருந்து நிறுத்திக் கொண்டார்கள். இது குறித்து விசாரித்த வகையில் பாப்பம்மாள் பணியில் இருக்கும் வரை தங்களின் பிள்ளைகளை அந்தப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த பெற்றோர்கள்

தெரிவித்துள்ளதாக தகவல் கிடைக்கின்றது. இது போன்று ஒரு சம்பவம் 3 வருடங்களுக்கு முன்னாள் பீகாரில் நடந்துள்ளதை நினைவு கூற வேண்டியுள்ளது. பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கல்யாண்பூர் என்ற கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் கணவரை இழந்த ஒரு பெண் சமையல் வேலைக்குச் சேர்க்கப்பட்டார். எவ்வித வாழ்வாதாரமும் இல்லாத தாழ்ந்த சாதியைச் சேர்ந்த அந்த விதவைப் பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள். பிள்ளைகளைக் காப்பாற்றவே அவர் அந்தப் பள்ளியில் சமையல் வேலைக்கு வந்தார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த விதவைப் பெண் உணவு சமைத்ததால் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என அந்த ஊர் மக்கள் புறக்கணித்தனர். பிள்ளைகள் வராமல் அந்தப் பள்ளிக்கூடம் பல நாட்கள் பூட்டப்பட்டது. இதனால் மனம் நொந்து போன அந்தப் பெண் இதை அந்த மாவட்ட ஆட்சியரிடம் மனுவாகக் கொடுத்தார். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் ராகுல் குமார் என்பவர் இந்த பிரச்சனையை வித்தியாசமாக கையாண்டார். தன் அலுவலக அதிகாரிகளை அனைவரையும் அழைத்துக் கொண்டு அந்தப் பள்ளிக்கு வந்த ராகுல் குமார்,

அந்த விதவைப் பெண்ணை சமையல் செய்யச் சொன்னார். அத்தோடு அதிகாரிகள் அனைவரையும் அழைத்து தரையில் அமர்ந்து உணவை சாப்பிட்டார். மாவட்ட ஆட்சியரின் இந்தச் செயல் அந்தப் பகுதி மக்களிடையே மன மாற்றத்தை ஏற்படுத்தியது. அடுத்த சில நாட்களில் தங்களின் பிள்ளைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்ப ஆரம்பித்தார்கள். மிகவும் கடினமான பிரச்சினையை   மிக எளிதாக கையாண்ட மாவட்ட ஆட்சியர் ராகுல் குமாருக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்தனர்.

சாதிகள் இல்லையடி பாப்பா என பள்ளிக்கூடங்களில் பயிற்றுவிக்கப்படும் பாடம் வெறும் ஏட்டளவில் மட்டும்தான் இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவங்கள் நல்ல உதாரணம். அழித்து ஒழிக்கப் பட வேண்டிய சாதி பாகுபாடு பள்ளிப் பிள்ளைகளின் பிஞ்சு மனதில் விதைக்கப்படுவதுதான் கொடுமையிலும் கொடுமை. படிக்கும் பிள்ளைகளுக்கு சாதி என்றால் என்னவென்றே தெரியாது, தன்னோடு படிக்கும் மாணவர்கள் யார் என்ன சாதி என்று தெரியாமல்தான் பழகுவார்கள் விளையாடுவார்கள்.

ஆனால் பசுமரத்தாணி போன்ற பள்ளிப்பிள்ளைகளின் மனதில் விதைக்கப்படும் சாதி வன்மம்தான் கடைசிவரைக்கும் அவர்களின் வாழ்க்கையில் ஓங்கியிருக்கும் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சாதி கொடுமை தங்களின் தலைமுறையோடு ஒழிந்து போக வேண்டும் என்று நினைத்தால் எந்தப் பெற்றோரும் தன் பிள்ளைக்கு சாதி போதனையை செய்ய மாட்டார்கள்.

சாப்பாடு சமைப்பவர் என்ன சாதி என்று ஆராய்பவர்கள் அந்த நெல்லை விதைத்தவர் என்ன சாதி? தாங்கள் உடுத்தும் துணியை நெய்தவர்கள் என்ன சாதி என்று ஆராய்வார்களா? அரசாங்கம் எவ்வளவோ சாதி ஒழிப்புப் பிரச்சாரம் செய்தாலும் அது எப்போதும் ஒழியாது என்பதை பாப்பம்மாள் விவகாரம் போன்ற பல சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. எனவே சாதியை ஒழிக்க இஸ்லாம் மார்க்கம் ஒன்று மட்டுமே சரியான தீர்வு என்பதை அனைவரும் உணர வேண்டும்.

Source : unarvu ( 27/07/18 )