சத்தியப் பாதையில் அழைப்புப் பணி
கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
நாம் அழைப்புப்பணி செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் அல்லாஹ் தனது திருமறைக்குர்ஆனில் கூறியுள்ளான்.
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே அல்லாஹ் தனது சான்றுகளைத் தெளிவு படுத்துகிறான்.
அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, நல்லறம் செய்து, நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னிடமிருந்து ஒரேயொரு செய்தி கிடைத்தாலும் சரி! அதை (பிறருக்கு) எடுத்துரையுங்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: (புகாரி: 3461)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உன் மூலமாக ஒரேயொருவருக்கு அல்லாஹ் நேர்வழியளிப்பது சிவப்பு ஒட்டகைகளை விட உங்களுக்குச் சிறந்ததாகும்.
அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி)
நூல்: (புகாரி: 4210)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் (மக்களை) நேரான வழியின் பால் அழைக்கிறாரோ அவருக்கு அதைப் பின்பற்றுபவரின் கூலிகளைப் போன்ற கூலி கிடைக்கும். இவ்வாறு கொடுப்பது அதைச் செய்தவர்களின் கூலியிலிருந்து கொஞ்சம் கூட குறைத்து விடாது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 1848) (4831)
ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை மாற்று மதத்தார்களிடம் எடுத்துச் சொல்வதற்காக தாயிஃப் நகரத்திற்குச் சென்றார்கள். ஆனால் அவ்வூர் தலைவர் நபி (ஸல்) அவர்களிடம் முறையாகப் பேசவில்லை. நபி (ஸல்) அவர்களுடைய விருப்பத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை. நபியவர்களுக்குக் கடும் துன்பங்களைக் கொடுத்தார்கள். மக்களுக்கு ஏகத்துவக் கொள்கையை சொல்ல முடியாமல் போனதை எண்ணி நபி (ஸல்) அவர்கள் மிகவும் கவலைப்பட்டவர்களாகத் திரும்பி வந்தார்கள்.
மக்களால் நபி (ஸல்) அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததால் சுய உணர்வையே இழந்து விட்டார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை இடையில் சந்தித்து, ‘நீங்கள் அனுமதி கொடுத்தால் இரண்டு மலைகளுக்கிடையில் இருக்கும் இந்த ஊரின் மேல் மலைகளைப் புரட்டிப் போட்டு அழித்து விடுகிறேன்’ என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”இவர்களை அழிக்க வேண்டாம். இவர்களுடைய சந்ததிகள் ஏகத்துவக் கொள்கைவாதிகளாக வருவார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: (புகாரி: 3231)
நபி (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் குறிப்பிட்ட தவணையில் திருப்பித் தருவதாக உணவுப் பொருளை வாங்கினார்கள். (அதற்காக) அவரிடம் தமது இரும்புக் கவசத்தை அடைமானமாக வைத்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: (புகாரி: 2068)
நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே அவனை நோய் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் அவனிடம் வந்து அவனது தலைமாட்டில் அமர்ந்துகொண்டு ”இஸ்லாத்தை ஏற்றுக்கொள்!” என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான்.
அப்போது அவர், ”அபுல் காசிம் (என்ற) நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படு!” என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டான். உடனே நபி (ஸல்) அவர்கள், ”இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்விற்கே சகல புகழும்” எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: (புகாரி: 1356)
யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
எனவே (ஏக இறைவனை) மறுப்போருக்கு நீர் கட்டுப்படாதீர்! இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் கடுமையாகப் போரிடுவீராக!
நாவுகளால் போரிட வேண்டும் என்றால் இணை வைப்பாளர்களிடத்தில் உள்ள அசத்தியக் கருத்துக்களை எடுத்துக் கூறி, அவர்களை சத்தியத்தின் பால் கொண்டு வருவதாகும். நபி (ஸல்) அவர்கள் எந்த ஒரு போருக்குச் சென்றாலும் முதலில் அவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி எடுத்துச் சொல்வார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தக் கூட்டத்தார்களிடத்தில் போரிட்டாலும் அவர்களை (இஸ்லாத்தின் பால்) அழைக்காமல் இருந்ததில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: (அஹ்மத்: 2053) (2001)
கைபர் போர்க்களத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக யூதர்கள் களம் இறங்கினார்கள். அவர்களிடத்தில் போரிடுவதற்காக நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களைத் தலைவராக நியமிக்கிறார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், ”எதிரிகள் நம்மைப் போன்று இஸ்லாமியர்களாக ஆகும் வரை நான் அவர்களிடம் போர் செய்யட்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறிய பதில் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.
”நிதானத்தைக் கடைபிடிப்பீராக! அவர்களுடைய களத்திற்கு நீர் சென்றவுடன் அவர்களை இஸ்லாத்தின் பால் அழைத்து அவர்கள் மீது கடமையாகுபவற்றை அவர்களுக்குத் தெரிவிப்பீராக! அல்லாஹ்வின் மீதாணையாக உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது சிகப்பு ஒட்டகங்களை விட உங்களுக்குச் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி)
நூல்: (புகாரி: 2942)
ஆரம்ப கால கட்டத்தில் பெருமானாரை அதிகமான மக்கள் மறுத்தார்கள். விரல் விட்டு எண்ணும் விதத்தில் சில நபர்கள் மாத்திரம் பெருமானாரைத் தூதராக ஏற்றிருந்தார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் நபி (ஸல்) அவர்கள் எதற்கும் அஞ்சாமல் தன்னந்தனியாக ஏகத்துவக் கொள்கையை மக்களிடத்தில் பிரகடனம் செய்தார்கள். தாயிஃப் நகரத்திற்குத் தனிமையில் சென்ற போது அங்கு மக்கள் அவர்களுக்கு அளித்த கஷ்டங்களை அனுபவித்து விட்டுக் கவலையோடு திரும்பினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: (புகாரி: 3231)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்மஜாஸ் என்னும் இடத்தில் மக்களை இஸ்லாத்தின் பால் அழைத்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். (அப்போது) அவர்களுக்குப் பின்னால் மாறுகண் கொண்ட ஒருவர், ”இவர் உங்கள் மார்க்கத்தை விட்டும் உங்களது முன்னோர்களின் மார்க்கத்தை விட்டும் உங்களை (மாற்றி) வென்றுவிட வேண்டாம்” என்று கூறிக் கொண்டிருந்தார். அப்போது நான் சிறுவனாக இருந்தேன். என் தந்தையிடம் ”இவருக்குப் பின்னால் நடந்து வருபவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு என் தந்தை, ”இவர் முஹம்மதுடைய பெரிய தந்தை அபூலஹப் ஆவார்” என்று கூறினார்.
அறிவிப்பவர்: ரபீஆ பின் அப்பாத் (ரலி)
நூல்: (அஹ்மத்: 16022) (15447)
பெருமானாரின் பெரிய தந்தையான அபூதாலிப் அவர்கள் மரண வேளையில் இருந்த போது அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதற்குத் தடையாக அபூஜஹ்ல் இருந்தான். முடிவில் அபூதாலிப் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் தான் இருப்பதாகக் கூறிவிட்டு மரணித்தார்.
அறிவிப்பவர்: முஸய்யிப் (ரலி)
நூல்: (புகாரி: 1360)
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுடைய காலத்தில் (மக்களிடத்தில்) தன்னை (நபி என்று) எடுத்துரைத்தார்கள். தன்னுடைய கூட்டத்தாரிடம், ”என்னை அழைத்துச் செல்பவர் யாரும் (உங்களில்) இல்லையா? குரைஷிகள் எனது இறைவனின் கூற்றை எடுத்துரைக்க விடாமல் என்னைத் தடுத்து விட்டார்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: (திர்மிதீ: 2925) (2849)
ஓரிடத்தில் மக்கள் கூட்டம் காணப்படுமேயானால் நபி (ஸல்) அவர்கள் உடனே அங்கே இஸ்லாத்தை எடுத்துச் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். சிறியவர் பெரியவர் என்று பார்க்காமல் கூச்சப்படாமல் யாவருக்கும் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னார்கள். ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் ஒரு நபித்தோழரை நலம் விசாரிப்பதற்காகச் சென்று கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு சபையைக் கண்டார்கள். அதில் முஸ்லிம்களும் யூதர்களும் இணை வைப்பாளர்களும் கலந்திருந்தார்கள். வந்த நோக்கம் வேறாக இருந்தாலும் கூட்டத்தைப் பார்த்தவுடன் அவர்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு விட்டது.
ஆகையால் அவர்கள் அந்த சபையோர்களை நோக்கித் தமது வாகனத்தைச் செலுத்தினார்கள். வாகனத்தை விட்டு இறங்கி அவர்களுக்கு சலாம் கூறி இஸ்லாத்தை எடுத்துரைத்தார்கள். குர்ஆனுடைய வசனங்களையும் அவர்களிடத்தில் ஓதிக் காட்டினார்கள்.
நயவஞ்சகர்களின் தலைவனாகிய அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் நபிகளாரிடத்தில், ”இது போன்ற சபைகளில் உம்முடைய கூற்றைச் சொல்லி எங்களைத் தொல்லைப்படுத்தாதீர். இங்கிருந்து சென்று விடும். உம்மிடம் வருபவர்களிடம் மாத்திரம் இதை பரப்பிக் கொள்ளும்” என்று கூறினான். அங்கிருந்த நபித்தோழர் ஒருவரும் ”ஆம்! அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் நம்முடைய அவையில் இதை எடுத்துரைக்கலாம்” என்று அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் கூறியதை நியாயப்படுத்தினார். இவர்கள் கூறிய இந்தப் பதிலைக் கேட்டு நபியவர்கள் கவலைப்பட்டார்கள்.
அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)
நூல்: (புகாரி: 4566)
பெருமானார் (ஸல்) அவர்கள் தம்மை விட வயது குறைந்தவர்களிடத்திலும் இஸ்லாத்தை எடுத்துரைத்தார்கள்.
இப்னு சய்யாத் என்பவன் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் பருவ வயதை எட்டியிருந்தான். நபியவர்கள் இப்னு சய்யாதைத் தனது கையால் தட்டிக் கொடுத்து விட்டு இஸ்லாத்தை எடுத்துச் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: (புகாரி: 1355)
யமன் நாட்டிற்கு முஆத் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் ஆளுநராக நியமித்தார்கள்..
நபி (ஸல்) அவர்கள் முஆதை யமனுக்கு அனுப்பினார்கள். அப்போது அவரிடம், ”வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. நான் அல்லாஹ்வின் தூதர் என்ற உறுதிமொழியின் பால் அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டு விட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை அவர்களின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக!
இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வந்தவர்களிடம் பெற்று ஏழைகளுக்கு வழங்குவதற்காக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: (புகாரி: 1395)
நபி (ஸல்) அவர்கள் தம்முடைய நாவால் இஸ்லாத்தைப் பரப்பியதைப் போல் எழுத்தின் மூலமும் பரப்பினார்கள். அவர்களுக்கு எழுதத் தெரியாவிட்டாலும் எழுதத் தெரிந்தவர்களை வைத்து இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை கோட்பாடுகளை எழுதி அன்றைக்கு அவர்களைச் சுற்றி ஆட்சி செய்து கொண்டிருந்த பல மன்னர்களுக்கு அனுப்பினார்கள். இன்னும் பல கூட்டத்தார்களுக்கும் இவ்வாறு கடிதங்களை அனுப்பிக் கொண்டிருந்தார்கள்..
جَاءَنَا كِتَابٌ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَمَا وَجَدْنَا لَهُ كَاتِبًا يَقْرَؤُهُ عَلَيْنَا ، حَتَّى قَرَأَهُ رَجُلٌ مِنْ بَنِي ضُبَيْعَةَ : مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى بَكْرِ بْنِ وَائِلٍ ، أَسْلِمُوا تَسْلَمُوا.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து எங்களுக்குக் கடிதம் வந்தது. அதை எங்களுக்குப் படித்துக் காட்டுவதற்கு ஒருவரும் இல்லை. கடைசியாக ளுபைஆ கோத்திரத்தைச் சார்ந்த ஒருவர் அதைப் படித்தார். (அதில்) ”பக்ர் பின் வாயிலிற்கு, அல்லாஹ்வின் தூதர் எழுதிக் கொண்டது நீங்கள் இஸ்லாத்தைத் தழுவுங்கள்; சாந்தியடைவீர்கள்” என்று இருந்தது.
அறிவிப்பவர்: மிர்சத் பின் லப்யான் (ரலி)
நூல்: (அஹ்மத்: 20667) (19746)
நபி (ஸல்) அவர்கள் அரபியல்லாதவர்களான (ரோம் நாட்டைச் சேர்ந்த) ஒரு குழுவினருக்கு அல்லது மக்களில் சிலருக்குக் கடிதம் எழுத விரும்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் அரபியரல்லாதோர் முத்திரையுள்ள கடிதத்தையே ஏற்றுக் கொள்வார்கள் என்று சொல்லப்பட்டது.
உடனே நபி (ஸல்) அவர்கள் ஒரு வெள்ளி மோதிரத்தைச் செய்து அதில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்) என்று இலச்சினைப் பொறித்தார்கள். இப்போதும் நான் நபி (ஸல்) அவர்களின் விரலில் அந்த மோதிரம் மின்னியதைப் பார்ப்பது போன்றுள்ளது.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: (புகாரி: 5872)
புஸ்ராவின் ஆளுநர் மூலம் ஹெர்குலிஸ் மன்னரிடம் கொடுப்பதற்காக திஹ்யா வசம் நபி (ஸல்) அவர்கள் கொடுத்தனுப்பிய கடிதத்தைத் தம்மிடம் கொடுக்குமாறு மன்னர் ஆணையிட்டார். ஆளுநர் அதை மன்னரிடம் ஒப்படைத்தார். மன்னர் அதைப் படித்துப் பார்த்தார். அந்தக் கடிதத்தில், ”அளவற்ற அருளாளனும் கருணையாளனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்… அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமான முஹம்மது என்பார் ரோமபுரி சக்கரவர்த்தி ஹெர்குலிஸுக்கு எழுதிக் கொள்வது. நேர்வழியைப் பின்பற்றுவோர் மீது சாந்தி நிலவட்டுமாக! நிற்க! இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். நீர் இஸ்லாத்தை ஏற்பீராக! நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர். அல்லாஹ் உமக்கு இருமடங்கு சன்மானம் வழங்குவான். (இவ்வழைப்பை) நீர் புறக்கணித்தால் (உமது) குடிமக்களின் பாவமும் உம்மைச் சாரும்.
வேதத்தை உடையவர்களே! நாம் அல்லாஹ்வைத் தவிர (வேறு யாரையும்) வணங்கக் கூடாது. அல்லாஹ்வை விட்டுவிட்டு நம்மில் சிலர் சிலரை நமது இரட்சகராக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்ற எங்களுக்கும் உங்களுக்கும் பொதுவான கொள்கையை நோக்கி வந்து விடுங்கள். (இக்கொள்கையை) நீங்கள் (ஏற்க மறுத்து) புறக்கணித்தால் நாங்கள் நிச்சயமாக (அந்த ஒரே இறைவனுக்கு கீழ்படிந்த) முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக ஆகிவிடுங்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: (புகாரி: 7)
அரசன் இஸ்லாத்தைத் தழுவி விட்டால் அந்த அரசனுக்குக் கீழ் வாழும் குடிமக்கள் சுலபமாக இஸ்லாத்தில் வந்து விடுவார்கள் என்பதால் அரசனுக்கு இக்கடிதத்தை அனுப்புகிறார்கள்.
இறைவனிடத்தில் நன் மக்களாய் நம் அனைவரும் இருப்போமாக.! அதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.!