சத்தியத்தை சொல்லும் முறைகள்

பயான் குறிப்புகள்: கொள்கை

முன்னுரை

அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு யாரையும் வணங்குதல் கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைக் கோட்பாடாகும்.

இந்த சத்தியக் கொள்கையை மக்களிடையே எடுத்துரைப்பதற்காக எண்ணற்ற இறைத்தூதர்களை இறைவன் அனுப்பினான். இறைவனால் அனுப்பபட்ட எல்லா இறைத்தூதர்களும் இந்தக் கொள்கையைத் தான் பிரச்சாரம் செய்தார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

وَلَـقَدْ بَعَثْنَا فِىْ كُلِّ اُمَّةٍ رَّسُوْلًا اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاجْتَنِبُوا الطَّاغُوْتَ‌ۚ فَمِنْهُمْ مَّنْ هَدَى اللّٰهُ وَمِنْهُمْ مَّنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلٰلَةُ‌ ؕ فَسِيْرُوْا فِىْ الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ‏

“அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!” என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம்.

(அல்குர்ஆன்: 16:36)

இறைத்தூதர்களில் இறுதியானவராக முஹம்மது ஸல் அவர்களை மக்களிடையே அனுப்பி இந்த கொள்கையை பிரச்சாரம் செய்யப் பணித்தான்.

முஹம்மது நபிக்கு பிறகு எந்த இறைத்தூதரும் வரமாட்டார் என்பதால் அவர் செய்த சத்தியப் பிரச்சாரப் பணியை அவருடைய சமுதாயத்தாராகிய நாம் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் விதித்து, அதனால் சிறந்த சமுதாயம் என்ற அந்தஸ்தை அடைவீர்கள் என்றும் அல்லாஹ் தெரிவித்துள்ளான்.

كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰهِ‌ؕ وَلَوْ اٰمَنَ اَهْلُ الْكِتٰبِ لَڪَانَ خَيْرًا لَّهُمْ‌ؕ مِنْهُمُ الْمُؤْمِنُوْنَ وَاَكْثَرُهُمُ الْفٰسِقُوْنَ‏

நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!(அல்குர்ஆன்: 3:110)

நல்லதை ஏவி தீயதைத் தடுக்கும் சத்தியப் பிரச்சாரத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என்று இவ்வசனம் கட்டளையிடுகிறது.

இதை நபிகள் நாயகமும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

3461- حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ ، أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ ، حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ ، عَنْ أَبِي كَبْشَةَ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ :
بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً وَحَدِّثُوا عَنْ بَنِي إِسْرَائِيلَ ، وَلاَ حَرَجَ ، وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ.

“என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள்”.

அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் அம்ர்,(புகாரி: 3461)

சத்தியத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பணியே உலகில் சிறந்த, மிக அழகிய பணி என்று அல்லாஹ் பாராட்டுகிறான்.

وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْنَ‏

அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?

(அல்குர்ஆன்: 41:33)

சத்தியத்தை மக்களிடையே எடுத்துரைப்பது அழகிய பணி என்பதோடு நிறுத்திவிடாமல் அதை எவ்வாறு அழகிய முறையில் சொல்வது என பல வழிமுறைகளையும் இறைவன் கற்றுத் தந்துள்ளான்.

திருக்குர்ஆனையும் நபிமொழிகளையும் சிந்தனையுடன் படிப்பவர்கள் சத்தியப் பிரச்சாரத்திற்கு பல வழிமுறைகள் கையாளப்பட்டிருப்பதைக் காண்பார்கள்.

சத்தியப் பிரச்சாரம் மேற்கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் அதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்வது அவசியமாகும். எந்தெந்த வழிமுறைகளில் சத்தியத்தைச் சொல்லலாம் என்று அறிந்து அதன் வழியில் செயல்படும் போது மக்களிடையே உளப்பூர்வமான தாக்கத்தையும் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தலாம்.

அதே வேளை நாம் செய்யும் பிரச்சார முறைகள் குர்ஆனும் நபிமொழியும் போதிப்பவை தானா? என்று நம்மை நாமே பரிசோதித்துக் கொள்ளவும் இது உதவும்.

அன்பான வார்த்தைகள்

நாம் சொல்லும் சத்தியத்தை மக்கள் ஏற்க வேண்டும் எனில் முதலில் நாம் என்ன சொல்கிறோம் என்பதை அவர்கள் கவனிக்க வேண்டும். அவர்களின் கவனத்திற்குச் செல்லும் வகையில் நமது பிரச்சாரம் அமைந்தால்தான் அவர்களை சத்தியத்தின் பால் ஈர்க்க முடியும். அவர்களின் கவனத்தை நம் பக்கம் ஈர்ப்பதற்கும், உள்ளத்தளவில் நம்மோடு அவர்களை நெருக்கமாக்கி வைப்பதற்கும் அன்பான வார்த்தைகள் உதவுகின்றன.

அன்பான வார்த்தைகளைப் பயன்படுத்தி சத்தியத்தைச் சொல்லும்போது அவர்களின் கவனத்தை பெரிதாக ஈர்க்க இயலுகிறது. அதற்கு மாறாக வசவு வார்த்தைகளைப் பயன்படுத்தினால் மக்கள் அதிலேயே பிரச்சாரத்தை விட்டும் விலகி விடுகிறார்கள். இவர்கள் திட்டுகிறார்கள் என்று தங்கள் கவனத்தை ஒரு போதும் பிரச்சாரம் செய்வோரின் பக்கம் திருப்ப மாட்டார்கள். சொல்லப்படும் சத்தியக் கருத்துக்களை கவனிக்கவோ, உள்வாங்கவோ மாட்டார்கள்.

எனவே பிரச்சாரத்தின் போது வெறுப்பூட்டும் வார்த்தைகளை, வசவுகளை முற்றிலுமாக தவிர்த்து நம்மீது கவனத்தை திருப்பும் வகையில் அன்பான மென்மையான, வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த அணுகுமுறையை இறைத்தூதர்களின் பிரச்சாரத்திலிருந்து அறிகிறோம்.

எல்லா இறைத்தூதர்களும் தங்களது பிரச்சாரத்தின் போது மக்களை தங்களளவில் ஈர்ப்பதற்காக என் சமுதாயமே என் சமுதாயமே என்று நெருக்கத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகளால் அழைத்து பிரச்சாரம் செய்துள்ளார்கள் என்பதை திருக்குர்ஆனில் அதிகமாகவே காண்கிறோம்.

கொடுங்கோல் மன்னன் பிர்அவ்னிடம் கூட இது போன்ற அணுகுமுறையை கடைப்பிடிக்குமாறு அல்லாஹ் மூஸா அலை அவர்களுக்கு கூறியுள்ளான்.

فَقُوْلَا لَهٗ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهٗ يَتَذَكَّرُ اَوْ يَخْشٰى‏

“அவனிடம் மென்மையான சொல்லையே இருவரும் சொல்லுங்கள்! அவன் படிப்பினை பெறலாம். அல்லது அஞ்சலாம்” (என்றும் கூறினான்.)

(அல்குர்ஆன்: 20:44)

மக்களை நமது பிரச்சாரத்தின் பால் ஈர்க்க அன்பான வார்த்தைகள் பெரிதும் உதவும் இயலும் என்பதை இதிலிருந்து உணரலாம்.

اُدْعُ اِلٰى سَبِيْلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ‌ وَجَادِلْهُمْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ‌ؕ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيْلِهٖ‌ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ‏

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; நேர் வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன்.(அல்குர்ஆன்: 16:125)

ஆர்வமூட்டும் பரிசுகள்

சத்தியத்தைப் பிரச்சாரம் பண்ணும் போது அதை ஏற்பதால் மக்களுக்குக் கிடைக்கும் இம்மை, மறுமை பலன்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

பொதுவாகவே இதைச் செய்தால் இன்ன பரிசு கிடைக்கும் என்று அறிவித்தால் பரிசுப் பொருளை பெறும் நோக்கில் குறிப்பிட்ட செயலை செய்யும் ஆர்வம் மக்களுக்கு அதிகரிப்பது இயல்பான ஒன்றாகும்.

அந்த வகையில் சத்தியத்தை ஏற்பதால் கிடைக்கவிருக்கும் பரிசுகளை, வெகுமதிகளை மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்லும் போது சத்தியத்தை ஏற்க மக்கள் ஆர்வம் கொள்வார்கள்.

சத்தியத்தை ஏற்றால் வானம் பூமியை விட பிரம்மாண்டமான சொர்க்கம் கிடைக்கும் என அல்லாஹ் ஆர்வமூட்டி சத்தியத்தை நோக்கி மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றான்.

وَسَارِعُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ‏

உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும் விரையுங்கள்! (இறைவனை) அஞ்சுவோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது.(அல்குர்ஆன்: 3:133)

தூதருக்கு கட்டுப்பட்டால் அல்லாஹ்வின் மன்னிப்பு என்ற பரிசு கிடைக்கும் என அல்லாஹ் ஆர்வமூட்டி அழைக்கிறான்.

قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

“நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 3:31)

இறைவனை அஞ்சி நடந்தால் இறையருள் கிடைக்கும் என்று பரிசு அறிவித்து அல்லாஹ் மக்களை அழைக்கிறான்

وَلَوْ اَنَّ اَهْلَ الْقُرٰٓى اٰمَنُوْا وَاتَّقَوْا لَـفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكٰتٍ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ وَلٰـكِنْ كَذَّبُوْا فَاَخَذْنٰهُمْ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏

அவ்வூர்களைச் சேர்ந்தோர் நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியிருந்தால் வானிலிருந்தும், பூமியிலிருந்தும் பாக்கியங்களை அவர்களுக்காக திறந்து விட்டிருப்போம். மாறாக அவர்கள் பொய்யெனக் கருதினர். எனவே அவர்கள் (தீமை) செய்து வந்ததன் காரணமாக அவர்களைத் தண்டித்தோம்.

(அல்குர்ஆன்: 7:96)

நபி நூஹ் அலை அவர்கள் தம் சமுதாய மக்களை சத்தியத்தை நோக்கி அழைக்கும் போது நீங்கள் புரிந்த குற்றச் செயலுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கோருங்கள் என்று கூறி இவ்வாறு செய்யும் போது பாவ மன்னிப்பு, மழை, பொருளாதாரம், மக்கள் செல்வம் ஆகியவற்றை அல்லாஹ் உங்களுக்கு பரிசாகத் தருவான் என்று ஆர்வமூட்டி பிரச்சாரம் செய்ததாக திருக்குர்ஆன் எடுத்துக் கூறுகின்றது.

ثُمَّ اِنِّىْۤ اَعْلَـنْتُ لَهُمْ وَاَسْرَرْتُ لَهُمْ اِسْرَارًا ۙ‏
فَقُلْتُ اسْتَغْفِرُوْا رَبَّكُمْؕ اِنَّهٗ كَانَ غَفَّارًا ۙ‏
يُّرْسِلِ السَّمَآءَ عَلَيْكُمْ مِّدْرَارًا ۙ‏
وَّيُمْدِدْكُمْ بِاَمْوَالٍ وَّبَنِيْنَ وَيَجْعَلْ لَّـكُمْ جَنّٰتٍ وَّيَجْعَلْ لَّـكُمْ اَنْهٰرًا ؕ‏

பின்னர் அவர்களைப் பகிரங்கமாகவும் அழைத்தேன். மிகவும் இரகசியமாகவும் அழைத்தேன். உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான்” என்று கூறினேன். உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான். செல்வங்கள் மூலமும், மக்கள் மூலமும் உங்களுக்கு உதவுவான். உங்களுக்காகச் சோலைகளை ஏற்படுத்துவான். உங்களுக்காக நதிகளையும் ஏற்படுத்துவான்.(அல்குர்ஆன்: 71:9),10,11,12

ஒன்று திரட்டும் நாளில் அவன் உங்களை ஒன்று திரட்டுவான். அதுவே நஷ்டமளிக்கும் நாள். அல்லாஹ்வை நம்பி நல்லறம் செய்பவரின் தீமைகளை அவரை விட்டும் அவன் நீக்குவான். அவரை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.(அல்குர்ஆன்: 64:9)

சத்தியத்தை ஏற்பதால் கிடைக்கும் நன்மைகளை எடுத்துச் சொல்லி பிரச்சாரம் செய்யும் யுக்தியை திருக்குர்ஆன் அதிகமாக வலியுறுத்துகிறது. அதற்குரிய சான்றுகள் குர்ஆனில் எண்ணிடலங்காத வகையில் உள்ளன.

அச்சுறுத்தும் எச்சரிக்கைகள்

அன்பான வார்த்தைகளை பயன்படுத்தியும், ஆர்வமூட்டும் பரிசுகளை எடுத்துரைத்தும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று நாம் கூறியதால் மார்க்கம் அவர்களுக்கு தெரிவிக்கும் கண்டனத்தை மறைக்க வேண்டும் என்று பொருள் கொள்ளக் கூடாது.

மாறாக சத்தியத்தை சொல்லும் முறைகளில் மார்க்கம் கூறும் எச்சரிக்கைகளை தயவு தாட்சயமின்றி எடுத்துச் சொல்வதும் மிக முக்கிய ஒன்றாகும்.

மார்க்கம் விடுக்கும் எச்சரிக்கைகளுடன் சத்தியப் பிரச்சாரம் செய்யும் போது அசத்தியத்தில் உள்ளவர்களுக்கு அது கிலியை ஏற்படுத்தும். தாங்கள் இருக்கும் அசத்தியத்திலிருந்து சத்தியத்தை நோக்கி வருவதற்கு இத்தகைய அச்சம் அடித்தளம் அமைக்கும்.

ஆகவே சத்தியப் பிரச்சாரத்தின்போது அசத்தியத்தில் இருப்பதால் அவர்களுக்கு உண்டாகும் கேடு, இறைவனின் தண்டனை ஆகியவற்றை தவறாமல் கரிசனத்துடன் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

முஸ்லிம்கள், நயவஞ்சகர்கள், இறைமறுப்பாளர்கள் என முத்தரப்பு மக்களை திருக்குர்ஆன் எதிர்கொண்டது. இவர்கள் அனைவரையும் எச்சரித்து அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை சொல்லும் வசனங்கள் திருக்குர்ஆனில் அதிகமாகவே இடம் பெற்றுள்ளன.

முஸ்லிம்களுக்கு வட்டியைப் பற்றி குர்ஆன் எச்சரிக்கின்றது.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَذَرُوْا مَا بَقِىَ مِنَ الرِّبٰٓوا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏
فَاِنْ لَّمْ تَفْعَلُوْا فَاْذَنُوْا بِحَرْبٍ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ‌ۚ وَاِنْ تُبْتُمْ فَلَـكُمْ رُءُوْسُ اَمْوَالِكُمْ‌ۚ لَا تَظْلِمُوْنَ وَلَا تُظْلَمُوْنَ‏

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.

(அல்குர்ஆன்: 2:278)279

முனாஃபிக்குகளுக்கான எச்சரிக்கை
وَاللَّهُ أَعْلَمُ بِأَعْدَائِكُمْ ۚ وَكَفَىٰ بِاللَّهِ وَلِيًّا وَكَفَىٰ بِاللَّهِ نَصِيرًا

நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த உதவியாளரையும் நீர் காண மாட்டீர்

(அல்குர்ஆன்: 4:45)

இறைமறுப்பாளர்களுக்குரிய எச்சரிக்கை

இறைமறுப்பாளர்களுக்கு சத்தியத்தை சொல்லும் விதமாக திருக்குர்ஆன் அருளப்பட்டதால் அவர்களுக்குரிய எச்சரிக்கைகளே திருக்குர்ஆனில் நிரம்ப இருக்கின்றது. உதாரணத்திற்கு சில வசனங்கள்

اِنَّ الَّذِيْنَ يَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَيَقْتُلُوْنَ النَّبِيّٖنَ بِغَيْرِ حَقٍّۙ وَّيَقْتُلُوْنَ الَّذِيْنَ يَاْمُرُوْنَ بِالْقِسْطِ مِنَ النَّاسِۙ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَ لِيْمٍ‏
اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِيْنَ‏

அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுத்து, நபிமார்களை நியாயமின்றி கொலை செய்து, நீதியை ஏவும் மக்களையும் கொலை செய்வோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என எச்சரிப்பீராக! இவ்வுலகிலும், மறுமையிலும் நல்லறங்கள் அழிந்து போனவர்கள் அவர்களே. அவர்களுக்கு உதவி செய்வோர் யாருமில்லை.

(அல்குர்ஆன்: 3:21). 22

يُّصْلِحْ لَـكُمْ اَعْمَالَـكُمْ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيْمًا‏

(ஏக இறைவனை) மறுத்தோர் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு ஓட்டிச் செல்லப்படுவார்கள். அவர்கள் அங்கே வந்ததும் அதன் வாசல்கள் திறக்கப்படும். “உங்கள் இறைவனின் வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதர்கள் உங்களிலிருந்தே உங்களுக்கு வரவில்லையா? இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டியது வரும் என்பதை உங்களுக்கு அவர்கள் எச்சரிக்கவில்லையா?” என்று அதன் காவலர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள் “ஆம்” என்பார்கள். எனினும் (ஏக இறைவனை) மறுப்போருக்கு வேதனை என்ற கட்டளை உறுதியாகி விட்டது.

(அல்குர்ஆன்: 33:71)

هٰذٰنِ خَصْمٰنِ اخْتَصَمُوْا فِىْ رَبِّهِمْ‌ فَالَّذِيْنَ كَفَرُوْا قُطِّعَتْ لَهُمْ ثِيَابٌ مِّنْ نَّارٍ ؕ يُصَبُّ مِنْ فَوْقِ رُءُوْسِهِمُ الْحَمِيْمُ‌ۚ‏
يُصْهَرُ بِهٖ مَا فِىْ بُطُوْنِهِمْ وَالْجُلُوْدُؕ‏
وَلَهُمْ مَّقَامِعُ مِنْ حَدِيْدٍ‏
كُلَّمَاۤ اَرَادُوْۤا اَنْ يَّخْرُجُوْا مِنْهَا مِنْ غَمٍّ اُعِيْدُوْا فِيْهَاوَذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ

தமது இறைவனைப் பற்றி தர்க்கித்துக் கொண்டிருந்த இரண்டு வழக்காளிகள் இதோ உள்ளனர். (ஏக இறைவனை) மறுத்தோருக்காக நெருப்பால் ஆன ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தலைகள் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும். அதைக் கொண்டு அவர்களின் வயிறுகளில் உள்ளவைகளும், தோல்களும் உருக்கப்படும். அவர்களுக்காக இரும்புச் சம்மட்டிகளும் உள்ளன. கவலைப்பட்டு அங்கிருந்து அவர்கள் வெளியேற எண்ணும் போதெல்லாம் மீண்டும் அதில் தள்ளப்படுவார்கள். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்! (எனக் கூறப்படும்).

திருக்குர்ஆன் 22 19-22

இறைவனின் கட்டளையின்படி இறைத்தூதர்கள் இத்தகைய வழிமுறையை தங்கள் பிரச்சாரத்தில் கடைபிடித்துள்ளனர்.

நபி நூஹ் அலை அவர்கள் தம் சமுதாயத்தாருக்கு சத்தியப்பிரச்சாரம் செய்யும்போது சத்தியத்தை ஏற்காது போனால் ஏற்படும் அல்லாஹ்வின் வேதனையை பற்றி எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

لَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖ فَقَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ؕ اِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ‏

நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பி வைத்தோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை மகத்தான நாளின் வேதனையை உங்கள் மீது நான் அஞ்சுகிறேன்” என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன்: 7:59)

நபி இப்றாஹீம் அலை அவர்களும் தம் தந்தைக்கு எச்சரிக்கையூட்டி பிரச்சாரம் செய்துள்ளார்கள்.

يٰۤاَبَتِ اِنِّىْۤ اَخَافُ اَنْ يَّمَسَّكَ عَذَابٌ مِّنَ الرَّحْمٰنِ فَتَكُوْنَ لِلشَّيْطٰنِ وَلِيًّا‏

என் தந்தையே! அளவற்ற அருளாளனிடமிருந்து உமக்கு வேதனை வந்து விடுமோ எனவும், ஷைத்தானுக்கு உற்ற நண்பராக ஆகி விடுவீரோ எனவும் நான் அஞ்சுகிறேன்” (என்றார்.)(அல்குர்ஆன்: 19:45)

இவற்றை இத்தனை ஆதாரங்களுடன் பட்டியலிட மிக முக்கிய காரணம் முஸ்லிம்களில் ஒரு சாரார் மக்கள் செய்யும் தவறைப்பற்றி எல்லாம் கண்டு கொள்ளக் கூடாது. அவற்றை விமர்சிக்கக் கூடாது, நல்லதை மக்களுக்கு ஏவினாலே போதும், அவர்களாக தங்கள் தவறை திருத்திக் கொள்வார்கள் என்று கூறுவது எவ்வளவு அபத்தமானது என்பதை உணர்த்தவே இணைவைப்பவர்களுக்கு அல்லாஹ் கூறும் எச்சரிக்கைகளை எச்சரிக்கைக் குரலாக நாம் மக்களிடையே பதிவு செய்யும் போது அதை குறைகாண்பவர்களின் போக்கு தவறானது என்பதை நாம் பட்டியலிட்ட இத்தனை வசனங்களும் சந்தேகமற உணர்த்துகின்றது. எனவே பிரச்சார முறைகளில் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் முக்கியமான ஒரு வகையே.

சிந்தனையூட்டும் வாதங்கள்

இஸ்லாத்திற்கும் ஏனைய மதங்களுக்கும் உள்ள மிக முக்கிய வேறுபாடு சிந்தனை சார்ந்த விஷயத்தில் உள்ளது. பிற மதங்கள் யாவும் மனிதனின் சிந்தனையைத் தூண்டும்படியோ அது போதிக்கும் மதக்கோட்பாடுகளை சிந்தனைக்கு உட்படுத்தும் படியோ போதிப்பதில்லை. இஸ்லாம் மட்டுமே மனிதர்களின் சிந்தனையைத் தூண்டும் மார்க்கமாக தன்னிகரற்று விளங்குகிறது.

கண்மூடித்தனமாக ஒருவன் இஸ்லாத்தில் இணைவான் எனில் இஸ்லாம் அதை விரும்பவில்லை. இஸ்லாத்தின் கோட்பாடுகளை, அது போதிக்கும் போதனைகளை சிந்தித்து ஏற்றுக் கொள்ளும் படியே இஸ்லாம் வலியுறுத்துகிறது.

أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ ۚ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللَّهِ لَوَجَدُوا فِيهِ اخْتِلَافًا كَثِيرًا

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 4:82)

சிந்தனைக்கு முக்கியத்துவம் வழங்குகிற மார்க்கமாக இஸ்லாம் விளங்குவதால் சத்தியப் பிரச்சாரத்தின் போதும் மக்களின் சிந்தனையைத் தூண்டும் வாதங்கள் நிரம்பி வழிய வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது.

தன் தூதர்களுக்கு இத்தகைய வாதங்களை இறைவன் கற்றுக் கொடுத்து இவ்வாறு பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளான் என்பதை திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.

நபி ஹூத் அலை அவர்கள் மக்களிடையே சத்தியத்தை எடுத்து சொல்லும் போது இந்த பிரச்சாரத்திற்காக உங்களிடம் நான் காசு பணம் கேட்கவில்லை. எனக்கு இதில் எந்த உலக ஆதாயமும் இல்லையே அப்படியிருந்தும் உங்களை நான் அழைக்க வேண்டிய அவசியம் என்பதை சிந்திக்க மாட்டீர்களா என்ற வாதத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்துள்ளார்.

يٰقَوْمِ لَاۤ اَسْـــَٔلُكُمْ عَلَيْهِ اَجْرًا‌ ؕ اِنْ اَجْرِىَ اِلَّا عَلَى الَّذِىْ فَطَرَنِىْ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏

“என் சமுதாயமே! இதற்காக உங்களிடம் நான் எந்தக் கூலியும் கேட்கவில்லை. என்னைப் படைத்தவனிடமே எனக்குரிய கூலி உள்ளது. விளங்க மாட்டீர்களா?”

(அல்குர்ஆன்: 11:51)

சிலைகள் பேசாது என்பதை அதை வணங்குபவர்களின் வாயாலேயே ஒப்புக் கொள்ள வைக்குமளவு சிந்தனைப்பூர்வமான வாதங்களை எடுத்துரைத்து இப்றாஹீம் அலை பிரச்சாரம் செய்துள்ளார்கள்.

قَالُوْٓا ءَاَنْتَ فَعَلْتَ هٰذَا بِاٰلِهَتِنَا يٰۤاِبْرٰهِيْمُؕ‏
قَالَ بَلْ فَعَلَهٗ ‌‌ۖ كَبِيْرُهُمْ هٰذَا فَسْـــَٔلُوْهُمْ اِنْ كَانُوْا يَنْطِقُوْنَ‏
فَرَجَعُوْۤا اِلٰٓى اَنْـفُسِهِمْ فَقَالُوْۤا اِنَّكُمْ اَنْـتُمُ الظّٰلِمُوْنَۙ‏
ثُمَّ نُكِسُوْا عَلٰى رُءُوْسِہِمْ‌ۚ لَـقَدْ عَلِمْتَ مَا هٰٓؤُلَاۤءِ يَنْطِقُوْنَ‏
قَالَ اَفَتَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُكُمْ شَيْـًٔـا وَّلَا يَضُرُّكُمْؕ‏
اُفٍّ لَّـكُمْ وَلِمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏

“இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர்தான் இவ்வாறு செய்தீரா?” என்று அவர்கள் கேட்டனர். அதற்கவர், “இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!” என்று அவர் கூறினார். உடனே விழிப்படைந்து “நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்” என்று தமக்குள் பேசிக்கொண்டனர். பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, “இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!” என்றனர். “அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு எந்தப் பயனும் தீங்கும் தராதவற்றை வணங்குகின்றீர்களா?” என்று கேட்டார். “அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?” (என்றும் கேட்டார்.)

திருக்குர்ஆன் 21 62-67

பகலை நிரந்தரமாக்கி விட்டால் இரவை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரால் கொண்டு வர முடியும்? இதைப்பற்றி சிந்திக்குமாறு அல்லாஹ் மக்களுக்கு அறிவுறுத்துகிறான்.

قُلْ اَرَءَيْتُمْ اِنْ جَعَلَ اللّٰهُ عَلَيْكُمُ النَّهَارَ سَرْمَدًا اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ مَنْ اِلٰـهٌ غَيْرُ اللّٰهِ يَاْتِيْكُمْ بِلَيْلٍ تَسْكُنُوْنَ فِيْهِ‌ؕ اَفَلَا تُبْصِرُوْنَ‏

“கியாமத் நாள் வரை பகலை உங்களுக்கு அல்லாஹ் நிரந்தரமாக்கி விட்டால் அல்லாஹ்வையன்றி நீங்கள் அமைதி பெறும் இரவை உங்களுக்குக் கொண்டு வரும் இறைவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக!

(அல்குர்ஆன்: 28:72)

அல்லாஹ்வைத் தவிர்த்து ஏனையவைகளை வணங்குகிறீர்களே அவைகளுக்கு நடக்கும் கால்கள் உண்டா? என்பது உள்பட பல்வேறு சிந்தனையைத் தூண்டும் கேள்விகளை முன் வைத்து சத்தியப்பிரச்சாரம் மேற்கொள்ளுமாறு இறைவன் கட்டளையிடுகின்றான்.

اَلَهُمْ اَرْجُلٌ يَّمْشُوْنَ بِهَآ اَمْ لَهُمْ اَيْدٍ يَّبْطِشُوْنَ بِهَآاَمْ لَهُمْ اَعْيُنٌ يُّبْصِرُوْنَ بِهَآاَمْ لَهُمْ اٰذَانٌ يَّسْمَعُوْنَ بِهَا‌ ؕ قُلِ ادْعُوْا شُرَكَآءَكُمْ ثُمَّ كِيْدُوْنِ فَلَا تُنْظِرُوْنِ‏

“அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 7:195)

சாமிரி என்பவன் காளைக்கன்று சிற்பம் ஒன்றை செய்து மூஸா நபியின் காலடி மண்ணை எடுத்து அதில் போட்டவுடன் அந்தச் சிற்பத்திலிருந்து ஒரு சப்தம் வந்தது. உடனே இதுதான் கடவுள் என மக்களை அவன் வழிகேட்டிற்கு தள்ளினான்.

அதற்கு மறுப்பளிக்கும் இறைவன் அந்த சிற்பம் கடவுள் என்றால் அது பேசாதே, இவர்களின் பேச்சுக்கு எந்த மறுமொழியும் கூறாதே இதை சிந்திக்க மாட்டீர்களா என்று வினா எழுப்புகிறான்.

قَالُوْا مَاۤ اَخْلَـفْنَا مَوْعِدَكَ بِمَلْكِنَا وَلٰـكِنَّا حُمِّلْنَاۤ اَوْزَارًا مِّنْ زِيْنَةِ الْقَوْمِ فَقَذَفْنٰهَا فَكَذٰلِكَ اَلْقَى السَّامِرِىُّ ۙ‏
فَاَخْرَجَ لَهُمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌ فَقَالُوْا هٰذَاۤ اِلٰهُكُمْ وَاِلٰهُ مُوْسٰى  فَنَسِىَ‏
اَفَلَا يَرَوْنَ اَلَّا يَرْجِعُ اِلَيْهِمْ قَوْلًا ۙ وَّلَا يَمْلِكُ لَهُمْ ضَرًّا وَّلَا نَفْعًا

“நாங்கள் உம்மிடம் கொடுத்த வாக்குறுதிக்கு திட்டமிட்டு மாறு செய்யவில்லை. மாறாக அந்தச் சமுதாயத்தின் அணிகலன்கள் எங்கள் மீது சுமத்தப்பட்டன. அதை வீசினோம். இவ்வாறே ஸாமிரியும் வீசினான். அவர்களுக்காக உடலுடன் கூடிய காளைக் கன்றை (அவன்) வெளிப்படுத்தினான். அது சப்தமும் போட்டது. உடனே அவன் “இதுவே உங்கள் இறைவன். மூஸாவின் இறைவன். அவர் வழி மாறிச் சென்று விட்டார்” என்றான். “அது எந்தச் சொல்லுக்கும் பதிலளிக்காது என்பதையும், அவர்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அது அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?

(அல்குர்ஆன்: 20:87)88 89

وَاِذَا قِيْلَ لَهُمُ اتَّبِعُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَـتَّبِعُ مَآ اَلْفَيْنَا عَلَيْهِ اٰبَآءَنَا ؕ اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا يَعْقِلُوْنَ شَيْـًٔـا وَّلَا يَهْتَدُوْنَ‏

அல்லாஹ் அருளியதை பின்பற்றுங்கள் என்று மக்களுக்கு அறிவுரை கூறப்பட்ட போது இல்லை எங்கள் முன்னோர்களையே நாங்கள் பின்பற்றுவோம் என்று மக்கள் பதிலளித்தனர். அதற்கு முட்டாள்களாக இருந்தாலுமா முன்னோர்களை பின்பற்றுவீர்கள் என்று சிந்தனா பூர்வமான கேள்வியை முன்வைத்து இறைவன் பதிலளிக்கின்றான்.

பார்க்க(அல்குர்ஆன்: 2:170)

அல்லாஹ்வுடன் பல கடவுள்கள் இருந்திருந்தால் கடவுள்களுக்குள் சண்டை ஏற்பட்டு உலகில் குழப்பம் ஏற்பட்டிருக்கும் என்ற சிந்தனையூட்டும் வாதத்தை முன் வைத்து ஓரிறைக் கொள்கையே சரியானது என்று அல்லாஹ் நிறுவுகிறான்.

مَا اتَّخَذَ اللّٰهُ مِنْ وَّلَدٍ وَّمَا كَانَ مَعَهٗ مِنْ اِلٰهٍ‌ اِذًا لَّذَهَبَ كُلُّ اِلٰهٍۢ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ‌ؕ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يَصِفُوْنَۙ‏

அல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன்.(அல்குர்ஆன்: 23:91)

இவ்வாறாக சிந்தனையூட்டும் வாதங்கள் பலவற்றை முன்வைத்து சத்தியப்பிரச்சாரம் செய்யப்பட வேண்டும் என்று இதன் வாயிலாக இறைவன் கற்றுத்தருவதை அறியலாம்.

வாயடைக்கச் செய்யும் விவாதங்கள்

சத்தியத்தை சொல்வதற்கு விவாதக்களங்களும் மிகச் சிறந்த வழிமுறைகளாகும்.

ஆனால் சத்தியத்தை நிலைநாட்ட விவாதத்திற்கு வாருங்கள் என்று மாற்றுக்கருத்துடையோரை அழைத்தால் இவர்களுக்கு வேறு வேலையில்லை, ஆ ஊ என்றால் விவாதம் என்பார்கள் என அங்கலாய்க்கிறார்கள். ஏதோ விவாதம் புரிவது பழிப்பிற்குரிய செயல் போன்று இவர்களது செயல்பாடுகள் அமைந்துள்ளது. இன்னும் சிலர் இஸ்லாத்தில் விவாதத்திற்கு அனுமதியில்லை என்றும் கூறிக் கொண்டிருக்கின்றனர். இது போன்றவர்களை காணும் போது உண்மையில் ஆச்சரியமே நம்மை தொற்றிக் கொள்கிறது.

காரணம் சத்தியத்தை பிரச்சாரம் செய்வதில் ஆக்கபூர்வ விவாதத்திற்கு பெரும் பங்கிருப்பதை இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது.

அழகிய முறையில் விவாதம் செய்து சத்தியத்தை பரப்புமாறு அல்லாஹ் அறிவுறுத்துகிறான்.

اُدْعُ اِلٰى سَبِيْلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ‌ وَجَادِلْهُمْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ‌ؕ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيْلِهٖ‌ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ‏

அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக!

(அல்குர்ஆன்: 16:125)

وَلَا تُجَادِلُوْٓا اَهْلَ الْكِتٰبِ اِلَّا بِالَّتِىْ هِىَ اَحْسَنُ ۖ اِلَّا الَّذِيْنَ ظَلَمُوْا مِنْهُمْ‌ وَقُوْلُوْٓا اٰمَنَّا بِالَّذِىْۤ اُنْزِلَ اِلَيْنَا وَاُنْزِلَ اِلَيْكُمْ وَاِلٰهُـنَا وَاِلٰهُكُمْ وَاحِدٌ وَّنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ‏

வேதமுடையோரில் அநீதி இழைத்தோரைத் தவிர மற்றவர்களிடம் அழகிய முறையில் தவிர வாதம் செய்யாதீர்கள்!

(அல்குர்ஆன்: 29:46)

சத்தியப் பிரச்சார பயணத்தில் எதிர்த் தரப்புகளின் எதிர்ப்புகளை இறைத்தூதர்கள் விவாதம் எனும் ஆயுதத்தை கையிலெடுத்து எதிர்கொண்டிருக்கின்றார்கள் என்பதை திருக்குர்ஆன் உறுதிபடத் தெரிவிக்கின்றது.

நபி நூஹ் அலை அவர்கள் விவாதம் புரிந்திருக்கின்றார்கள்

قَالُوْا يٰـنُوْحُ قَدْ جَادَلْتَـنَا فَاَكْثَرْتَ جِدَالَـنَا فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ‏ ‏
قَالَ اِنَّمَا يَاْتِيْكُمْ بِهِ اللّٰهُ اِنْ شَآءَ وَمَاۤ اَنْتُمْ بِمُعْجِزِيْنَ‏

“நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர்! அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர்! உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்!” என்று அவர்கள் கூறினர். “அல்லாஹ் நாடினால் அவன் தான் அதை உங்களிடம் கொண்டு வருவான். நீங்கள் (அவனை) வெல்ல முடியாது” என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன்: 11:32). 33

நபி இப்றாஹீம் அலை விவாதம் புரிந்திருக்கிறார்கள்.
اَلَمْ تَرَ اِلَى الَّذِىْ حَآجَّ اِبْرٰهٖمَ فِىْ رَبِّهٖۤ اَنْ اٰتٰٮهُ اللّٰهُ الْمُلْكَ‌ۘ اِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّىَ الَّذِىْ يُحْىٖ وَيُمِيْتُۙ قَالَ اَنَا اُحْىٖ وَاُمِيْتُ‌ؕ قَالَ اِبْرٰهٖمُ فَاِنَّ اللّٰهَ يَاْتِىْ بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَاْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِىْ كَفَرَ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‌ۚ

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? “என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்” என்று இப்ராஹீம் கூறியபோது, “நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்” என்று அவன் கூறினான். “அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!” என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன்: 2:258)

நபி மூஸா அலை அவர்களும் பிர்அவ்னுடன் வாதம் புரிந்திருக்கிறார்கள். மூஸா அலை அவர்களுக்கும் பிர்அவ்னுக்கும் இடையில் நடைபெற்ற வாதப்பிரதி வாதங்களை (குர்ஆன் வசனங்களை) புரிவதற்காக பின்வருமாறு தருகிறோம்.

قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ الْعٰلَمِيْنَؕ‏
قَالَ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَاؕ اِنْ كُنْتُمْ مُّوْقِنِيْنَ‏
قَالَ لِمَنْ حَوْلَهٗۤ اَلَا تَسْتَمِعُوْنَ‏
قَالَ رَبُّكُمْ وَرَبُّ اٰبَآٮِٕكُمُ الْاَوَّلِيْنَ‏
قَالَ اِنَّ رَسُوْلَـكُمُ الَّذِىْۤ اُرْسِلَ اِلَيْكُمْ لَمَجْنُوْنٌ‏
قَالَ رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَمَا بَيْنَهُمَا ؕ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ‏
قَالَ لَٮِٕنِ اتَّخَذْتَ اِلٰهًا غَيْرِىْ لَاَجْعَلَـنَّكَ مِنَ الْمَسْجُوْنِيْنَ‏
قَالَ اَوَلَوْ جِئْتُكَ بِشَىْءٍ مُّبِيْنٍ‌ۚ‏
قَالَ فَاْتِ بِهٖۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ‏
‌فَاَ لْقٰى عَصَاهُ فَاِذَا هِىَ ثُعْبَانٌ مُّبِيْنٌ‌ ۖ ‌‌ۚ‏
وَّنَزَعَ يَدَهٗ فَاِذَا هِىَ بَيْضَآءُ لِلنّٰظِرِيْنَ‏

பிர்அவ்ன் “அகிலத்தின் இறைவன் என்றால் என்ன?”

மூஸா அலை “நீங்கள் உறுதியாக நம்பினால் வானங்கள், பூமி, மற்றும் அவ்விரண்டுக்கும் இடைப்பட்டதற்கும் அவனே இறைவன்”

பிர்அவ்ன் தன்னைச் சுற்றியிருந்தோரிடம் “(இதை) நீங்கள் செவிமடுக்கிறீர்களா?”

மூஸா அலை “அவன் உங்களுக்கும் இறைவன். உங்கள் முன்னோர்களான மூதாதையருக்கும் இறைவன்”

பிர்அவ்ன் “உங்களிடம் அனுப்பப்பட்டுள்ள உங்கள் தூதர் பைத்தியக்காரர் தான்”

மூஸா அலை “நீங்கள் விளங்கிக் கொள்வோராக இருந்தால் கிழக்கு, மேற்கு, மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டதற்கும் அவன் இறைவன்”

பிர்அவ்ன் “என்னைத் தவிர வேறு கடவுளை நீர் கற்பனை செய்தால் உம்மைச் சிறைப்படுத்துவேன்”

மூஸா அலை “தெளிவான ஒரு பொருளை நான் உன்னிடம் கொண்டு வந்தாலுமா?”

பிர்அவ்ன் “நீர் உண்மையாளராக இருந்தால் அதைக் கொண்டு வாரும்”

மூஸா அலை தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது பெரிய பாம்பாக ஆனது. தமது கையை வெளிப்படுத்தினார். அது பார்ப்போருக்கு வெண்மையாக இருந்தது

பிர்அவ்ன் தம்மை சுற்றியுள்ள சபையோரிடம் “இவர் திறமை மிக்க சூனியக்காரர்”

பார்க்க திருக்குர்ஆன் 26 23-34

இப்படி விவாதம் புரிய எண்ணற்ற ஆதாரங்கள் குர்ஆனில் நிறைந்துள்ள போதும் தங்களுக்கு பதிலளிக்க இயலவில்லை, எதிர்கொள்ள தெம்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டால் விவாதம் கூடாது என்று கூறி பின்வாங்கி விடுகிறார்கள்.

தங்களிடம் இருப்பது சத்தியம் என்று உறுதியாக நம்புபவர்கள் விவாதக் களங்களை கண்டு அஞ்ச மாட்டார்கள். துணிந்து எத்தனை விவாதக்களங்களையும் சந்திப்பார்கள். அத்தகைய துணிவு இல்லாதோர் இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்றோ அல்லது விவாதம் இஸ்லாத்தில் கூடாது என்றோ கூறிக்கொண்டே காலத்தை கடத்தி விடுவார்கள்.

இது போன்றவர்கள் மேற்கூறிய இறைவசனங்களை சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளனர். இன்னொன்றையும் சிந்திக்க வேண்டும்.

  • நம் தரப்பு கருத்தை ஆதாரங்களுடன் நிலைநாட்டுவது
  • எதிர்த்தரப்பு கருத்துக்களுக்கு தகுந்த மறுப்பளிப்பது
  • எதிராளிகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பது
  • மாற்றுக் கருத்துடையோரின் கருத்துக்கு ஆதாரம் வேண்டுவது

இவையாவும் விவாதத்தில் அடங்கியிருக்கும் பகுதிகளாகும். இத்தகைய பாணிதான் திருக்குர்ஆன் முழுக்க கடைபிடிக்கப்பட்டுள்ளது என்பதை அதை படிக்கும் யாரும் புரிந்து கொள்ள இயலும்.

சரியான சவால்கள்

சவால்களை விடுவதும் எதிர்த்தரப்பால் விடப்படும் சவால்களை துணிந்து எதிர்கொள்வதும் சத்தியப்பிரச்சார முறைகளில் மற்றுமொரு முக்கிய அங்கமாகும்.

திருக்குர்ஆனையும் சவால்களையும் பிரித்துப் பார்க்க இயலாது எனுமளவு திருக்குர்ஆன் பல்வேறு சவால்களைக் கொண்டே தன்னை இறைவேதம் என்பதை நிரூபணம் செய்கின்றது.

ஏராளமான சவால்கள் திருக்குர்ஆனில் நிறைந்துள்ளன. அந்த சவால்களில் எதுவும் இன்றளவும் முறியடிக்கப்படவில்லை மட்டுமல்ல, இனி எப்போதும் அவை முறியடிக்கப்பட மாட்டாது. ஏனெனில் அவையாவும் சர்வ வல்லமை கொண்ட படைத்தாளும் இறைவனின் சவால்களாகும். அவன் விடுக்கும் சவால்களில் சிலவற்றை இங்கு பட்டியலிடுகிறோம்.

திருக்குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டது என்பதில் சந்தேகம் கொண்டால் குர்ஆனைப் போன்று ஒரு அத்தியாயத்தைக் கொண்டு வருமாறு உலக மக்கள் அனைவருக்கும் இறைவன் சவால் விடுத்துள்ளான்.

وَاِنْ کُنْتُمْ فِىْ رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلٰى عَبْدِنَا فَاْتُوْا بِسُوْرَةٍ مِّنْ مِّثْلِهٖ وَادْعُوْا شُهَدَآءَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
فَاِنْ لَّمْ تَفْعَلُوْا وَلَنْ تَفْعَلُوْا فَاتَّقُوْا النَّارَ الَّتِىْ وَقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ  ۖۚ اُعِدَّتْ لِلْكٰفِرِيْنَ‏

 

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்! உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! (கெட்ட) மனிதர்களும், கற்களுமே அதன் எரி பொருட்கள். (ஏக இறைவனை) மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன்: 2:23)24

அல்லாஹ் அல்லாத இறந்துபோன மனிதர்களையும் கற்சிலைகளையும் வணங்குவோரை நோக்கி அவர்களை அழையுங்கள். பதிலளிப்பார்களா என்று பார்ப்போம் என சவால் விடுத்துள்ளான்.

اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ عِبَادٌ اَمْثَالُـكُمْ‌ فَادْعُوْهُمْ فَلْيَسْتَجِيْبُوْا لَـكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!(அல்குர்ஆன்: 7:194)

பல கடவுள் கோட்பாடு கொண்ட மக்களை நோக்கி அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? ஆதாரத்துடன் நிரூபியுங்கள் என சவால் விடுக்குமாறு தன் தூதருக்கு அல்லாஹ் கற்றுத்தருகிறான்.

اَمَّنْ يَّبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ وَمَنْ يَّرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ‌ؕ ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِ‌ؕ قُلْ هَاتُوْا بُرْهَانَكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) படைப்பினங்களை முதலில் படைத்து பின்னர் மறுபடியும் படைப்பவனா? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்!” என்று கேட்பீராக!

(அல்குர்ஆன்: 27:64)

நாங்கள் வணங்கிய கடவுள்கள் தாம் உங்களுக்கு தீங்கு ஏற்படுத்திவிட்டன என்று நபி ஹூத் அலை அவர்களை நோக்கி அவரது சமுதாயம் கூறிய போது

முடிந்தால் நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எனக்கு எதிராக சூழ்ச்சி செய்யுங்கள் உங்கள் கடவுள்களால் எதுவும் செய்ய முடியாது என்று ஹூத் அலை அவர்கள் சவால் விட்ட நிகழ்வை திருக்குர்ஆன் எடுத்தியம்புகிறது.

قَالُوْا يٰهُوْدُ مَا جِئْتَـنَا بِبَيِّنَةٍ وَّمَا نَحْنُ بِتٰـرِكِىْۤ اٰلِهَـتِنَا عَنْ قَوْلِكَ وَمَا نَحْنُ لَـكَ بِمُؤْمِنِيْنَ‏
اِنْ نَّقُوْلُ اِلَّا اعْتَـرٰٮكَ بَعْضُ اٰلِهَتِنَا بِسُوْٓءٍ‌ ؕ قَالَ اِنِّىْۤ اُشْهِدُ اللّٰهَ وَاشْهَدُوْۤا اَنِّىْ بَرِىْٓءٌ مِّمَّا تُشْرِكُوْنَ ۙ‏
مِنْ دُوْنِهٖ‌ فَكِيْدُوْنِىْ جَمِيْعًا ثُمَّ لَا تُنْظِرُوْنِ‏

ஹூதே! நீர் எங்களிடம் எந்தச் சான்றையும் கொண்டு வரவில்லை. நீர் சொல்வதற்காக எங்கள் கடவுள்களை நாங்கள் விடுவோராக இல்லை. நாங்கள் உம்மை நம்புவோராகவும் இல்லை. “எங்கள் கடவுள்களில் சிலர் உமக்குக் கெடுதி செய்து விட்டார்கள்” என்றே கூறுகிறோம் (என அவர்கள் கூறினர்). “நான் (இதற்கு) அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன்; நீங்களும் சாட்சியாக இருங்கள்! அவனையன்றி நீங்கள் எதை இணை கற்பித்தீர்களோ அதை விட்டும் நான் விலகியவன்; எனவே அனைவரும் எனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! பின்னர் எனக்கு எந்த அவகாசமும் அளிக்காதீர்கள்!” என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன்: 11:53)54 55

அதே போன்று நபி நூஹ் அலை அவர்களும் நீங்கள் வணங்கும் பொய் கடவுள்களால் எனக்கு எதுவும் ஆகாது. முடிந்தால் சூழ்ச்சி செய்து பாருங்கள் என்று சவால் விடுத்துள்ளதாக திருக்குர்ஆன் தெரிவிக்கின்றது.

இது போன்ற முறைகளை பின்பற்றி, பிரச்சாரம் செய்து, இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெறும் மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!