கோபமும் தாபமும்
நபியவர்களிடம் அவர்களது மனைவிமார்கள் கோபப்படுபவர்களாகவும் பிறகு அதைச் சரிசெய்து கொள்பவர்களாகவும் இருந்துள்ளார்கள். இப்படித்தான் வாழ்க்கை இருக்கும். சில நேரங்களில் மனைவி கோபமாகவும் சில நேரங்களில் அன்பாகவும் இருப்பாள். இப்படித் தான் கணவனும் பல நேரங்களில் இருப்பான்.
நபியவர்களே தமது மனைவி ஆயிஷாவைப் பற்றிச் சொன்னதாக இதை ஹதீஸ்களை நம்மால் பார்க்க முடிகிறது. நமது ஊர்களில் கணவனின் பெயர்களைச் சொல்வதே குற்றமாகக் கருதுகிறார்கள். அதை மரியாதைக் குறைவாகக் கருதுகிறார்கள். முஸ்லிம் ஊர்களில் மக்கள் தொகை கணக்கெடுக்க வருபவர்களிடம், கணவனின் பெயரைச் சொல்வதற்கே தயங்குவார்கள். அதில் ஒரு மனைவி, தனது கணவனின் நூர் முஹம்மது என்ற பெயரை சொல்வதற்குக் கூச்சப்பட்டு, இரண்டு ஐம்பது, ஒரு முஹம்மது என்று கூறியதாக தமாஷாகச் சொல்வார்கள்.
கணவனின் பெயரை மனைவி உச்சரிப்பதில் சொல்வதில் எந்தத் தவறும் கிடையாது. இதிலும் அதிகப்படியாகச் சொல்வது எனில், நபியவர்களுக்கும் ஆயிஷா (ரலி)க்கும் வயது மிகவும் வித்தியாசம் இருக்கத்தான் செய்தது. அதனால் கணவன் மனைவிக்குள் எந்தப் பிரச்சனைகளும் கிடையாது. முஹம்மது என்று தனது கணவரது பெயரைச் சொல்வதில் ஆயிஷா (ரலி)க்கு அலாதிப் பிரியம் என்பதைப் பார்க்கிறோம். நபியவர்களும் அதை விரும்பியிருக்கிறார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியுடன் இருக்கிறாய்; எப்போது நீ என் மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன்” என்று கூறினார்கள். அதற்கு நான், “எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்?” என்று கேட்டேன். அதற்கவர்கள், “என்னைக் குறித்து நீ திருப்தியுடன் இருக்கும் போது (பேசினால்), “முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக” என்று கூறுவாய்! என் மீது கோபமாய் இருந்தால், “இப்ராஹீம் (அலை) அவர்களுடைய அதிபதி மீது சத்தியமாக” என்று கூறுவாய்” என்று சொன்னார்கள்.
நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! ஆம் (உண்மைதான்), அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களது பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன். (தங்கள் மீதன்று)” என்று கூறினேன்.
எனவே நபியவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் கூட பாராமால் கணவன் மனைவி என்ற அடிப்படையிலேயே நபியவர்களிடம் அவர்களது மனைவிமார்கள் கோபமாக இருந்துள்ளதைப் பார்க்கும் போது இதுவெல்லாம் குடும்ப வாழ்வில் சகஜம் என்று புரிய வேண்டும். நபியவர்கள் ஒரு மனைவியின் வீட்டில் இருக்கும் போது இன்னொரு மனைவி ஒரு உணவைக் கொடுத்து அனுப்பினார்கள். இதனால் உணவு கொடுத்து விட்ட பாத்திரத்தையே அந்த மனைவி உடைத்து விட்டார்கள்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரிடம் இருந்(துகொண்டிருந்)தார்கள். இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் ஒருவ(ரான நபியவர்களுடைய மற்றொரு துணைவியா)ர் உணவுப் பண்டமுள்ள தட்டு ஒன்றை (நபியவர்களுக்காகப் பணியாள் ஒருவரிடம்) கொடுத்தனுப்பினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் யாரது வீட்டில் தங்கியிருந்தார்களோ அந்தத் துணைவியார் (ரோஷத்தில்) அந்தப் பணியாளின் கையைத் தட்டிவிட்டார். அந்தத் தட்டு (கீழே விழுந்து) உடைந்துவிட்டது. உடனே (ஆத்திரப்படாமல்) நபி (ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டின் துண்டுகளை ஒன்று சேர்த்தார்கள். பிறகு தட்டிலிருந்த உணவை (மீண்டும்) அதிலேயே ஒன்று சேர்க்கலானார்கள்.
மேலும், (அங்கிருந்த தோழர்களை நோக்கி), “உங்கள் தாயார் ரோஷப்பட்டு விட்டார் என்று சொன்னார்கள். பின்னர் அந்தப் பணியாளை நிறுத்திவிட்டு தாமிருந்த வீட்டுக்கார(துணைவியா)ரிடமிருந்து மற்றொரு தட்டைக் கொண்டு வரச் செய்து, உடைபட்ட தட்டுக்குரியவரிடம் நல்ல தட்டை (மாற்றாக)க் கொடுத்து அனுப்பி விட்டார்கள். உடைந்த தட்டை உடைக்கப்பட்ட வீட்டிலேயே வைத்து விட்டார்கள்.
இந்தச் சம்பவத்தை ஆராய்ந்தால், இப்படியெல்லாம் நபியவர்களின் மனைவிமார்கள் நடந்திருப்பார்களா? என்று தோன்றும். ஆனால் இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது எனில், நமக்கெல்லாம் குடும்ப வாழ்க்கையில் ஒரு முன்மாதிரியைக் காட்டுவதற்காகத் தான் என்பதைப் புரிந்து நடக்க வேண்டும். இப்படி நபியவர்களின் மனைவிமார்களிடம் நிகழ்வுகளை நடக்க வைத்து அதை நபியவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை நமக்கு அல்லாஹ் கற்றுத் தருவதற்காகத் தான் இப்படியெல்லாம் நிகழ்த்துகிறான் இறைவன்.
நபியவர்களின் மனைவிமார்களே இப்படியிருந்துள்ளார்கள் என்பதால் பெண்கள் இப்படித்தான் படைக்கப்பட்டுள்ளார்கள் என்பதைப் புரிந்து கொண்டால் கணவன் மனைவிக்குள் ஏன் சண்டை வரப்போகிறது?
எனவே ஒரு பெண்ணிடம் இருக்கின்ற குறை இன்னொரு பெண்ணிடம் இருக்காது. ஒவ்வொரு பெண்ணிடமும் ஒவ்வொரு வகை நிறையும் உண்டு. பல வகையான குறைகளும் உண்டு. இந்த ஏற்ற இறக்கங்களை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டு வாழ்க்கை நடத்துதவற்குத்தான் இஸ்லாம் குடும்பவியலில் பயிற்சி வழங்குகிறது. எனவே குடும்பம் என்ற நிர்வாகத்தை ஆண்கள் நடத்துகிற போது, பெண்களுக்கு என இருக்கும் பண்பியல்புகளை பிரச்சனையாக்காமல் மனம் பொறுத்துக் கொண்டு வாழ்வதைத்தான் நிர்வாகம் என்று மார்க்கம் சொல்கிறது. அதைத் தான் நபியவர்கள், வளைந்த விலா எலும்பு என்றும் அதை உடைத்து விடாதீர்கள் என்றும் நமக்கு எச்சரித்தார்கள்.
நமக்கெல்லாம் சொன்ன நபியவர்கள் வளைந்த விலா எலும்பை நிமிர்த்தாமல் செய்துகாட்டி வழிநடத்துகிறார்கள். அதை எப்படியாவது சரிசெய்யாலாம் என்று கங்கணம்கட்டி இறங்கினால் கணவன் மனைவி என்கிற ஒப்பந்தம் முறிந்து விவாகரத்தில்தான் முடியும்.
குறைகளுக்கு மாற்றாக எத்தனையோ நிறைகள் இருக்கும், அவற்றை வைத்து திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியதுதான். நம்மீது வைத்திருக்கிற பாச உணர்வு, கவனிக்கும் அக்கறைத் தன்மை, பிள்ளைகளைப் பார்க்கும் பாங்கு, நமது பெற்றோரைப் பேணும் முறைகள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு குறைகளை மன்னிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். கற்பொழுக்கத்தைப் பேணுவது போன்று ஒவ்வொன்றாக ஆய்வு செய்து குறைகளைப் பொறுத்துக் கொள்வதுதான் நபிகள் நாயகம் நிர்வாகம் செய்த முறை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
அதேபோன்று நபியவர்கள் ஒரு முறை கோபப்பட்டும் இருக்கிறார்கள். அதை நபியவர்களின் கோபத்தின் உச்சக்கட்டம் என்றே சொல்லலாம்.
ஆயிஷா நாயகியும் ஹப்ஸா நாயகியும் நபியவர்களிடம் கடுமையான முறையில் சண்டையிழுத்து விடுகிறார்கள். இப்படி சண்டை போட்டதால் நபியவர்களுக்குக் கோபம் வந்து, இனிமேல் உங்களுடன் எந்த உறவும் கிடையாது என்று கூறி, ஒரு மாதத்திற்குச் சேரமாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்துவிடுகிறார்கள். இதற்கு அரபியில் ஈலா என்று சொல்லப்படும். பிறகு இந்தச் செய்தி, நபியவர்கள் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டார்கள் என்று ஊர் முழுவதும் பரவிவிட்டது. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு உமர் (ரலி) அவர்களிடத்தில் ஒரு சஹாபி வந்து கூறுகிறார்கள்.
பிறகு உமர் தனது மகள் ஹப்ஸாவைக் கண்டிக்க வருகிற போது, அப்படித்தான் செய்வேன் என்கிற மாதிரி பதில் வருகிறது. ஆனால் என்ன பேசிக் கொண்டார்கள். என்ன சண்டை என்றெல்லாம் அந்தச் சம்பவத்தில் கிடையாது. வீட்டுக்குள்ளேயே மாடி போன்ற மேற்பகுதியுடைய பரணில் சென்று அமர்ந்து விடுகிறார்கள் நபியவர்கள்.
பொறுமையின் சிகரம் நபியவர்களுக்கே இவ்வளவு மன உளச்சலை அவர்களது மனைவிமார்கள் கொடுத்தபோதும், நபியவர்கள் பொறுமை இழந்து அடித்துத் துன்புறுத்தவில்லை. ஒப்பந்தம் குறித்து பயம் காட்டுகிறார்கள் அவ்வளவுதான். இது தலாக்குடைய சட்டம் கிடையாது. ஒரு மாதத்திற்கு மட்டும் பிரிந்து வாழ்கிற ஈலா என்கிற சட்டம். நபியவர்கள் தானாக ஒதுங்கியிருந்தது தான் தீர்வே தவிர, அடித்து உதைத்து சித்ரவதை எதையும் மனைவிமார்களுக்கு நபியவர்கள் செய்யவில்லை.
(பார்க்க:(புகாரி: 4913)