கோடை தரும் கொடைகள்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1
முன்னுரை

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! சாந்தியும், சமாதானமும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீதும், சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! இஸ்லாம் எனும் பாக்கியத்தை நமக்கு வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்களாக நாமெல்லாம் இங்கே அமர்ந்திருக்கிறோம்.

உச்சி வெயில் அல்ல! காலை நேரத்தில் கிழக்கு ஓரத்தில் சூரியனின் சுடர் முகத்தின் சிவப்பு தகத்தகாயம் தெரியத் துவங்கிய மாத்திரத்திலேயே நிலப் பரப்பில் நெருப்புச் சூடு பற்றிக் கொள்கின்றது. அதன் பிறகு அது படிப்படியாக உச்சிக்கு வருகின்ற போது, உஷ்ணத்தின் அளவும் உச்சக்கட்டத்திற்கு வந்து விடுகின்றது.

அனல் பந்தான சூரியன் அந்தி நேரத்தில் மேற்கு வானத்தில் அடைந்த பிறகும், அடக்கமான பிறகும் அது கிளப்பி விட்ட சூடு தணிந்திடவில்லை.

மின் விசிறிக்குக் கீழ் படுத்து இருந்தாலும் மேனி, வியர்வை வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருக்கின்றது. பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் இந்த வெயிலில் சுருண்டு விழுந்தவர்களின் உயிரும் பறி போய் விடுகின்றது என்றால் இதன் உக்கிரமத்தை வர்ணிக்கத் தேவை இல்லை.

சின்னஞ்சிறு குழந்தைகளின் முகத் தாமரை மலர்களில் பொக்களங்கள்! மேனிகளில் வியர்க்குருகள்! கோடையின் இந்தக் கோரத் தாக்குதலுக்கு மாணவ, மாணவியர் பலியாகி விடக் கூடாது என்பதற்காக பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விடப்படுகின்றது.

வற்றி விடும் நீர் வறண்டு விடும் ஆறு

கோடைக் கால தாக்குதலின் காரணமாக நிலத்தடி நீர் வற்றி விடுகின்றது. பாய்ந்து ஓடும் ஆறுகள் காய்ந்து வறண்டு விடுகின்றன. குளம் குட்டைகள், எட்டிய தூரம் வரை தெரியும் ஏரிகள் எல்லாம் வற்றிப் பாலைவனமாகி விடுகின்றன.

இப்படிக் கோடையின் கொடூரங்களைப் பட்டியல் போட்டுக் கொண்டே செல்லலாம். இந்தக் கொடுமையின் ஊடே அல்லாஹ் கோடையிலும் சில அருட்கொடைகளை அருளி இருக்கின்றான்.

கோடை தரும் கொடைகள்

கொளுத்துகின்ற இந்தக் கோடையின் வெப்பத்தைத் தணிப்பதற்காக திடம் மற்றும் திரவ உணவாக இளநீர், பதநீர், நுங்கு, கிர்ணி, தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை கோடை தனது கொடைகளாகத் தந்து கொண்டிருக்கின்றது.

கோடையின் கொடூரத்திலிருந்து தப்பிப்பதற்காக, பனை ஓலையால் முடையப்பட்ட விசிறிகளால் காற்றை வரவழைத்து வெப்பத்தை விட்டும் மக்கள் தங்களைக் காத்துக் கொண்டனர். இன்றைய அறிவியல் உலகம், ஓலைகளை வைத்துக் கிளறும் காற்று மண்டலத்தை மின் விசிறியின் இலைகளை வைத்துக் கிளறினால் என்ன? என்று கிளறியதில் பிறந்தது மின் விசிறிகள்.

கொதிக்கும் வெப்பத்தைக் குளித்துத் தணித்தல்

கொதிக்கும் வெயிலிலிருந்து தப்பிப்பதற்காக, குளிரும் நீரில் விழுந்து குளித்து இளைப்பாறிக் கொள்கின்றான். குளிர்ந்த நீரைக் குடித்து, தாகத்தைத் தணித்து, தன்னை இதப்படுத்திக் கொள்கின்றான்; தன் இதயத்தை ஈரப்படுத்திக் கொள்கின்றான்.

கொஞ்சம் காசிருந்தால் ஏ.சி.யில் குளிர்ந்து கொள்கின்றான். இது செயற்கை! இந்தச் சுகத்தை இயற்கையாகவே அனுபவிக்க வேண்டும் என்று ஊட்டி, கொடைக்கானல் என்று குடும்பத்தோடு செல்கின்றான். இதற்காக முண்டி யடித்துக் கொண்டு முன்பதிவு செய்து கொள்கின்றான்.

எல்லாம் எதற்காக? ஓர் இரண்டு மாதக் கோடையிலிருந்து தப்புவதற்காக!

இப்போது கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! இந்த உலகத்தில் வருடம் முழுவதும் கோடையாக இருந்தால் நமது பாடு எப்படியிருக்கும்? கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்!

கோடையைத் தணிப்பதற்குக் காற்று, மாலை நேரத் தென்றல், ஏ.சி., குடிக்கத் தண்ணீர், குளிக்க ஆறுகள், கோடை மழை, ஊட்டி கொடைக்கானல் போன்ற கோடை வாசஸ்தலங்கள் என அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பயன்படுத்திக் கொள்கிறோம். இது அனைத்தும் இந்த உலகத்தில் தான். மறுமை உலகம் ஒன்றுள்ளது. அங்குள்ள நரகம், அதில் தங்குவோருக்கு அது தான் நிரந்தர உலகம். அதைப் பற்றி அல்லாஹ் சொல்வதைக் கேளுங்கள்.

நிரந்தர நெருப்புலகம்
  اِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا
لِّلطّٰغِيْنَ مَاٰبًا ۙ‏
 لّٰبِثِيْنَ فِيْهَاۤ اَحْقَابًا‌ ۚ‏

வரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் யுகம் யுகமாகத் தங்குவார்கள்.

(அல்குர்ஆன்: 78:21-23)

الَّذِىْ يَصْلَى النَّارَ الْكُبْرٰى‌ۚ‏
ثُمَّ لَا يَمُوْتُ فِيْهَا وَلَا يَحْيٰىؕ‏

அவனே பெரும் நெருப்பில் கருகுவான். பின்னர் அதில் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான்.

(அல்குர்ஆன்: 87:12,13)

يَوْمَ يَغْشٰٮهُمُ الْعَذَابُ مِنْ فَوْقِهِمْ وَمِنْ تَحْتِ اَرْجُلِهِمْ وَيَقُوْلُ ذُوْقُوْا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏

அவர்களின் மேற்புறத்திலிருந்தும், கால்களுக்குக் கீழே இருந்தும் அவர்களை வேதனை மூடிக் கொள்ளும் நாள்! “நீங்கள் செய்து கொண்டிருந்ததைச் சுவையுங்கள்” என்று (இறைவன்) கூறுவான்.

(அல்குர்ஆன்: 29:55)

குளிர் நீரல்ல! கொதி நீரே!
وَقُلِ الْحَـقُّ مِنْ رَّبِّكُمْ‌ فَمَنْ شَآءَ فَلْيُؤْمِنْ وَّمَنْ شَآءَ فَلْيَكْفُرْ ‌ۙاِنَّاۤ اَعْتَدْنَا لِلظّٰلِمِيْنَ نَارًا ۙ اَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا‌ ؕ وَاِنْ يَّسْتَغِيْثُوْا يُغَاثُوْا بِمَآءٍ كَالْمُهْلِ يَشْوِى الْوُجُوْهَ‌ؕ بِئْسَ الشَّرَابُ وَسَآءَتْ مُرْتَفَقًا‏

அநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதி நீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம்.

(அல்குர்ஆன்: 18:29)

 فَشٰرِبُوْنَ عَلَيْهِ مِنَ الْحَمِيْمِ‌ۚ‏
فَشٰرِبُوْنَ شُرْبَ الْهِيْمِؕ‏

அதற்கு மேல் கொதி நீரைக் குடிப்பீர்கள். தாகம் கொண்ட ஒட்டகம் குடிப்பது போல் குடிப்பீர்கள்.

(அல்குர்ஆன்: 56:54,55)

مِّنْ وَّرَآٮِٕهٖ جَهَـنَّمُ وَيُسْقٰى مِنْ مَّآءٍ صَدِيْدٍۙ‏
يَّتَجَرَّعُهٗ وَلَا يَكَادُ يُسِيْـغُهٗ وَيَاْتِيْهِ الْمَوْتُ مِنْ كُلِّ مَكَانٍ وَّمَا هُوَ بِمَيِّتٍؕ‌ وَمِنْ وَّرَآٮِٕهٖ عَذَابٌ غَلِيْظٌ‏

அவனுக்கு முன்னே நரகம் உள்ளது. அவனுக்குச் சீழ் நீர் புகட்டப்படும். அதை மிடறு மிடறாக விழுங்குவான். அது அவனது தொண்டைக்குள் இறங்காது. ஒவ்வொரு திசையிலும் அவனுக்கு மரணம் வரும். ஆனால் அவன் மரணிக்க மாட்டான். இதற்கு மேல் கடுமையான வேதனையும் உள்ளது.

(அல்குர்ஆன்: 14:16,17)

இப்படி நிரந்தர உலகை நினைவுறுத்துவது தான் கோடை!
عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّهُمَا حَدَّثَاهُ عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ
إِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا ، عَنِ الصَّلاَةِ فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ

“வெப்பம் கடுமையாகும் போது லுஹரைத் தாமதப்படுத்துங்கள். ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 534) ,(முஸ்லிம்: 72)

இந்தக் கொடிய நரகத்திலிருந்து நிரந்தர சுவனபதி செல்வதற்காக இந்தக் கோடையிலிருந்து பாடம் கற்போமாக! நிரந்தர நரகத்தில் சேர்க்கும் கொடிய பாவமான இணை வைப்பு என்னும் பாவத்தை விட்டு நம்மையும் நம் சமுதாய மக்களையும் காப்பதற்கு நாளும் உழைப்போமாக! அதுவே நமது இலட்சியமாகும்.

இறைவனிடத்தில் நன் மக்களாய் நம் அனைவரும் இருப்போமாக.! அதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.!