கேள்வி கேட்பது குற்றமா?
மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
இஸ்லாம் என்பது அறிவுப்பூர்வமான மார்க்கம். ஏன்? எதற்கு? எப்படி? என்று சிந்தித்து தெளிவு பெறுவதை ஊக்குவிக்கும் சித்தாந்தம். இத்தகைய சிறப்பான கொள்கையில் இருக்கும் சிலரோ, மார்க்கம் குறித்து கேள்வி கேட்பதை எதிர்க்கிறார்கள், தடுக்கிறார்கள். திருமறையை, நபிமொழியைப் படித்து சந்தேகத்தை கேட்கும் தன்மை வழிகேட்டில் விட்டுவிடும் என்று பாமர மக்களை பயமுறுத்துகிறார்கள்.
தங்களுடைய கருத்துக்கு ஆதாரம் என்று சில செய்திகளை எடுத்துக் காட்டுகிறார்கள். அந்தச் செய்திகள் பற்றிய விளக்கத்திற்கு முன்பாக, மார்க்கம் தொடர்பான கேள்விகளைத் தொடுப்பதற்கு ஏதேனும் தடை இருக்கிறதா என்பது பற்றி சுருக்கமாகக் காண்போம்.
அல்லாஹ் ஒருவன் மட்டுமே அனைத்தையும் அறிந்தவன். எல்லாம் தெரிந்த மனிதர் யாருமில்லை. அனைவருக்கும் அனைத்து விசயங்களும் தெரியாது. சிலருக்குத் தெரியாமல் இருப்பதை சிலர் தெரிந்து வைத்திருப்பார்கள். நமக்குத் தெரியாத செய்திகளை பிறரிடம் கேட்டு தெரிந்து கொள்வதில் எந்தவொரு தவறும் இல்லை. முக்கியமான விசயங்களை தெரிந்தவர்களிடம் கேள்வி கேட்டு தெரிந்து கொள்வது என்பது பாராட்டுதலுக்குரிய பண்பு.
இந்த வகையில், ஒருவர் மார்க்கம் பற்றிய சந்தேகங்களை மற்றவர்களிடம் கேள்வி கேட்டு கற்றுக் கொள்வதை இஸ்லாம் ஒருபோதும் எதிர்க்கவில்லை. மாறாக, இதற்கு அனுமதி கொடுத்து ஆர்வமூட்டும் வகையில் திருக்குர்ஆன் வசனங்கள் அமைந்து இருக்கின்றன. அறிந்து கொள்ள சிலவற்றை மட்டும் காண்போம்.
(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்!
மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.
(அல்குர்ஆன்: 16:43,44)
(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்!
(அல்குர்ஆன்: 21:7)
எத்தனை தெளிவான சான்றுகளை அவர்களுக்கு வழங்கியிருந்தோம் என இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக! அல்லாஹ்வின் அருட்கொடை தன்னிடம் வந்த பின்பு மாற்றி விடுபவனைத் தண்டிப்பதில் அல்லாஹ் கடுமையானவன்.
(அல்குர்ஆன்: 2:211)
இன்றைய காலத்தைப் போலவே, நபிகளார் காலத்திலும் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லும்போது அன்றைய மக்கள் ஏராளமான எதிர்க் கேள்விகளைக் கேட்டார்கள். அவர்களின் அறியாமை நிறைந்த வாதங்களுக்கு விளக்கம் கொடுக்கும் வகையில் அதிகமான வசனங்கள் அருளப்பட்டு இருப்பதை அருள்மறையில் காண முடிகிறது. இதோ பாருங்கள்:
وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ مِنْ فَوْقِهَا وَبَارَكَ فِيهَا وَقَدَّرَ فِيهَا أَقْوَاتَهَا فِي أَرْبَعَةِ أَيَّامٍ سَوَاءً لِلسَّائِلِينَ
பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்? மேலும் அவனுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்கிறீர்கள். அவனே அகிலத்தின் அதிபதியாவான்” என்று கூறுவீராக! நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.
(அல்குர்ஆன்: 41:9,10)
سَاَلَ سَآٮِٕلٌ ۢ بِعَذَابٍ وَّاقِعٍۙ
لِّلْكٰفِرِيْنَ لَيْسَ لَهٗ دَافِعٌ ۙ
مِّنَ اللّٰهِ ذِى الْمَعَارِجِؕ
தகுதிகள் உடைய அல்லாஹ்விடமிருந்து (ஏக இறைவனை) மறுப்போருக்கு நிகழக் கூடிய வேதனை குறித்துக் கேள்வி கேட்பவன் கேட்கிறான். அதை (வேதனையை) தடுப்பவன் யாருமில்லை.
(அல்குர்ஆன்: 70:1-3)
பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். “அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்” எனக் கூறுவீராக! வீடுகளுக்குள் அதன், பின் வழியாக வருவது நன்மை அன்று. (இறைவனை) அஞ்சுவதே நன்மை. எனவே வீடுகளுக்கு வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். இதனால் வெற்றி பெறுவீர்கள்.
(அல்குர்ஆன்: 2:189)
இஸ்லாத்திற்கு எதிராக வாதங்களை வைத்தவர்களுக்கு பல்வேறு வசனங்களின் மூலம் அல்லாஹ் பதிலடி கொடுத்தான். இதுபோன்று, நபியவர்களிடம் வந்து மக்கள் கேள்வி எழுப்பிய போது அவர்களுக்குப் பதில் சொல்வதற்கு அல்லாஹ்விடம் இருந்து இறைச் செய்தி அருளப்பட்டது. கேள்வி கேட்டதையும், கேட்டவர்களையும் கண்டிக்காமல் வஹீ மூலம் விளக்கம் கொடுக்கப்பட்டதை கவனிப்போருக்கு கேள்வி கேட்பது குற்றமில்லை என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். அப்போது அவர்கள் “என் வாழ்விற்குப் பின், உங்களுக்கிடையே உலகவளங்களும் அதன் கவர்ச்சிப் பொருட்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதைப் பற்றியே நான் அஞ்சுகிறேன்” எனக் கூறினார்கள். ஒருவர் “அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மை தீமையை உருவாக்குமா?” எனக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள் மௌனமாகி விட்டார்கள். உடனே அந்த நபரிடம், ” என்ன ஆனது உமது நிலைமை? நீர் நபி (ஸல்) அவர்களிடம் பேசுகிறீர்; ஆனால் நபி (ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமலிருக்கிறார்களே!” எனக் கேட்கப்பட்டது.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அருளப்படுகிறது எனக் கருதினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்துவிட்டு, “கேள்வி கேட்டவர் எங்கே?” என அவரைப் பாராட்டுவது போன்று கேட்டார்கள். பிறகு, “நன்மையானது தீமையை உருவாக்காதுதான்; நிச்சயமாக, நீர்நிலைகளின் கரைகளில் விளைகின்ற தாவரங்களில் சில, (தம் நச்சுத் தன்மையால் அவற்றை மேய்கின்ற) கால்நடைகளைக் கொன்று விடுகின்றன; அல்லது மரணத்தின் விளிம்புக்கே (அவற்றைக்) கொண்டு போகின்றன; பசுமையான (நல்ல வகைத்) தாவரங்களைத் தின்பவற்றைத் தவிர! அவற்றைக் கால்நடைகள் வயிறு புடைக்கத் தின்று சூரிய ஒளியை முன்னோக்குகின்றன. மேலும் சாணம் போட்டு, சிறுநீர் கழித்து, மீண்டும் மேய்கின்றன. (இது போலவே உலகிலுள்ள) இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும்.
எனவே ஒரு முஸ்லிம், தன் செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கின்றானோ, அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவனாவான். மேலும் மறுமை நாளில் அந்தச் செல்வம் அவனுக்கு எதிராக சாட்சியம் சொல்லும்” எனக் கூறினார்கள்.
அறி: அபூசயீத் அல்குத்ரீ (ரலி),
நூல்: (புகாரி: 1465)
أَنَّ رَجُلاً أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ بِالْجِعْرَانَةِ ، وَعَلَيْهِ جُبَّةٌ ، وَعَلَيْهِ أَثَرُ الْخَلُوقِ ، أَوْ قَالَ صُفْرَةٍ فَقَالَ كَيْفَ تَأْمُرُنِي أَنْ أَصْنَعَ فِي عُمْرَتِي فَأَنْزَلَ اللَّهُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَسُتِرَ بِثَوْبٍوَوَدِدْتُ أَنِّي قَدْ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَقَدْ أُنْزِلَ عَلَيْهِ الْوَحْيُ فَقَالَ عُمَرُ تَعَالَ أَيَسُرُّكَ أَنْ تَنْظُرَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَدْ أَنْزَلَ اللَّهُ الْوَحْيَ قُلْتُ نَعَمْ فَرَفَعَ طَرَفَ الثَّوْبِ فَنَظَرْتُ إِلَيْهِ لَهُ غَطِيطٌ وَأَحْسِبُهُ قَالَ كَغَطِيطِ الْبَكْرِ فَلَمَّا سُرِّيَ عَنْهُ قَالَ أَيْنَ السَّائِلُ ، عَنِ الْعُمْرَةِ اخْلَعْ عَنْكَ الْجُبَّةَ وَاغْسِلْ أَثَرَ الْخَلُوقِ عَنْكَ وَأَنْقِ الصُّفْرَةَ وَاصْنَعْ فِي عُمْرَتِكَ كَمَا تَصْنَعُ فِي حَجِّكِ.
நபி (ஸல்) அவர்கள் ஜிஃரானா எனுமிடத்தில் இருக்கும்போது வாசனை திரவியத்தின் அடையாளமோ அல்லது மஞ்சள் நிறமோ இருந்த சட்டை அணிந்திருந்த ஒருவர் அவர்களிடம் வந்து, “உம்ராவில் நான் என்ன செய்ய வேண்டும் எனக் கட்டளையிடுகிறீர்கள்?’ எனக் கேட்டார். அப்போது அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அறிவித்தான். எனவே நபி (ஸல்) அவர்கள் போர்வையால் மூடப்பட்டார்கள்.
நான் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதைப் பார்க்க வேண்டும் என ஆவல் கொண்டிருந்தேன். உமர் (ரலி), “நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வஹீ அருளும்போது அவர்களைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறாயா?’ எனக் கேட்டார். நான் “ஆம்’ என்றேன். உடனே அவர் நபி (ஸல்) அவர்கள்) மூடப்பட்டிருந்த ஆடையின் ஒரு புறத்தை நீக்கியதும் நான் நபி (ஸல்) அவர்களை உற்று நோக்கினேன். அப்போது ஒட்டகத்தின் குறட்டை போன்ற சப்தம் அவர்களிடமிருந்து வந்ததாக நான் எண்ணுகின்றேன். பிறகு (வஹீயின்) அந்நிலை அவர்களை விட்டு நீங்கி விட்டபொழுது, அவர்கள், “உம்ராவைப் பற்றிக் கேள்வி கேட்டவர் எங்கே?” எனக் கேட்டுவிட்டு (அவரிடம்), “உமது இச்சட்டையைக் கழற்றி வாசனை திரவியத்தின் அடையாளத்தைக் கழுவிவிட்டு, மஞ்சள் நிறத்தையும் அகற்றிவிடும்! மேலும் நீர் ஹஜ்ஜில் செய்வதைப் போன்று உம்ராவிலும் செய்வீராக!” எனக் கூறினார்கள்.
அறி: யஅலா பின் உமய்யா (ரலி),
நூல்: (புகாரி: 1789)
நான் மதீனாவில் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு வேளாண் பூமியில் இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றின் மீது (கையை) ஊன்றியபடி நின்றிருந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் யூதர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள். அவர்களில் ஒருவர், “இவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள்” என்று சொன்னார். மற்றொருவர், “நீங்கள் அவரிடம் கேட்காதீர்கள்; ஏனெனில் நீங்கள் விரும்பாத பதிலை அவர் உங்களுக்குத் சொல்லிவிடக் கூடாது” என்று சொன்னார்.
பின்னர் அவர்கள் (அனைவரும் சேர்ந்து) நபி (ஸல்) அவர்களிடம் எழுந்து சென்று, “அபுல் காசிமே! உயிரைப் பற்றி எங்களுக்குத் தெரிவியுங்கள்!” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் எழுந்து நின்று கூர்ந்து பார்த்தார்கள்.
உடனே நான், “அவர்களுக்கு வஹீ (வேதஅறிவிப்பு) அறிவிக்கப்படுகின்றது என்று புரிந்து கொண்டேன். ஆகவே, வஹீ வருவதற்கு வசதியாக நான் அவர்களைவிட்டு சற்றுப் பின்தள்ளி நின்றேன். பிறகு, நபி (ஸல்) அவர்கள் (தமக்கு அருளப்பெற்ற) “நபியே! உயிரைப் பற்றி உங்களிடம் அவர்கள் வினவுகின்றார்கள். உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது என்று கூறுங்கள்” எனும் (அல்குர்ஆன்: 17:85) ஆவது இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
அறி: இப்னு மஸ்ஊத் (ரலி),
நூல்: (புகாரி: 7297)
சத்தியத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அநேகமான கேள்விகளை எழுப்பினார்கள். அதேசமயம், முஸ்லிம்களும் பல்வேறு கேள்விகளைக் கேட்டார்கள். ஆண்களைப் போன்று பெண்களும் வினா மூலம் மார்க்கத்தை சரிவர புரிந்து கொண்டார்கள்.
மார்க்கம் தொடர்பாக தங்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் இல்லை என்பதால் கேள்வி கேட்கக் கூடாது என்று சொல்லி சிலர் தப்பிக்க நினைக்கிறார்கள். நபிகளாரிடம் நபித்தோழர்களும் பொதுமக்களும் மார்க்கம் குறித்து பல்வேறு சந்தேகங்களைக் கேட்டார்கள். அவர்களை அதட்டாமல் அகற்றாமல் அவர்களுக்கு அழகிய முறையில் நபிகளார் பதில் கொடுத்தார்கள் என்பதற்கு எண்ணற்ற நபிமொழிகள் சாட்சிகளாக இருக்கின்றன. இதற்கு ஆதாரமாக சில செய்திகளை இப்போது காண்போம்.
تَعَلَّمَ أَصْحَابِي الْخَيْرَ وَتَعَلَّمْتُ الشَّرَّ
என் தோழர்கள் (நன்மை தரும் செயல்களைப் பற்றி அதிகமாகக் கேள்விகள் கேட்டு நபி (ஸல்) அவர்களிடமிருந்து) நன்மையைக் கற்றுக் கொண்டார்கள். நான் (தவிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பத் திரும்பக் கேட்டு இனி வரவிருக்கும்) தீமையைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.
அறி: ஹுதைஃபா பின் யமான் (ரலி),
நூல்: (புகாரி: 3607)
ஒரு கூட்டத்தார் நபி (ஸல்) அவர்களிடம், “(கிராமத்திலிருந்து) சிலர் எங்களிடம் இறைச்சி கொண்டு வருகிறார்கள். (அதை அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதா, இல்லையா என்று எங்களுக்குத் தெரியாது. (இந்த நிலையில் நாங்கள் அதை உண்ணலாமா?)” என்று கேட்டனர்.
நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் அதன் மீது அல்லாஹ்வின் பெயர் சொல்லி அதை உண்ணுங்கள்” என்று பதில் சொன்னார்கள். கேள்வி கேட்ட கூட்டத்தார் இறை மறுப்பை அப்போதுதான் கைவிட்டுப் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்தார்கள்.
அறி: ஆயிஷா (ரலி),
நூல்: (புகாரி: 5507)
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தனிப்பட்ட) கோபத்தினால் போரிடுகின்றார். (மற்றொருவர்) இன மாச்சர்யத்தினால் போரிடுகின்றார். இவற்றில் அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் போர் எது?’ என்று கேட்டார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், அவரை நோக்கித் தம் தலையை உயர்த்தி, “எவர் அல்லாஹ்வின் வாக்கே மேலோங்கியதாய் இருக்க வேண்டும் என்பதற்காகவே போரிடுகின்றாரோ அவர்தாம் வலிவும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் ஆவார்” என்று பதிலளித்தார்கள். கேள்வி கேட்டவர் நின்று கொண்டிருந்ததால்தான் நபி (ஸல்) அவர்கள் தம் தலையை உயர்த்திப் பார்த்தார்கள்.
அறி: அபூமூசா (ரலி),
நூல் : (புகாரி: 123)
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, “என் தாயார் ஹஜ் செய்வதற்காக நேர்ச்சை செய்திருந்தார். ஆனால், ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்குள் அவர் இறந்துவிட்டார். நான் அவர் சார்பாக ஹஜ் செய்யலாமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “ஆம்; அவர் சார்பாக ஹஜ் செய்” (எனக் கூறிவிட்டு) “உன் தாயார் மீது கடன் இருந்தால் நீ அதை (அவர் சார்பாக) நிறைவேற்றுவாய் அல்லவா?” என்று கேட்டார்கள்.
அந்தப் பெண், “ஆம் (நிறைவேற்றுவேன்)” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் (நேர்ச்சையின் மூலம்) அல்லாஹ்வுக்குச் செலுத்த வேண்டியதை நிறைவேற்றுங்கள். ஏனெனில், வாக்கு நிறைவேற்றப்பட அல்லாஹ்வே மிகவும் அருகதையுடையவன்” என்று சொன்னார்கள்.
அறி: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: (புகாரி: 7315)
ஓர் அவையில் நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் (மார்க்க விஷயமாகப்) பேசிக்கொண்டிருக்கும் போது அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து, “மறுமை நாள் எப்போது?” எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு பதிலளிக்காமல்) தமது பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர், “நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்; ஆயினும் அவர் கேட்ட கேள்வியை நபி (ஸல்) அவர்கள் விரும்பவில்லை’ என்று கூறினர். மற்ற சிலர், “நபியவர்கள் அந்த மனிதர் கூறியதைச் செவியுறவில்லை’ என்றனர்.
நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்துவிட்டு, “மறுமை நாளைப் பற்றி (என்னிடம் கேள்வி) கேட்டவர் எங்கே?” என்று கேட்டார்கள். உடனே அவர் “அல்லாஹ்வின் தூதரே! இதோ நான்தான்’ என்றார். நபி (ஸல்) அவர்கள், “அமானிதம் (அடைக்கலம்) பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்!” என்று சொன்னார்கள். அதற்கவர், “அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அதிகாரங்கள் தகுதியற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்!” என்று பதிலளித்தார்கள்.
அறி: அபூஹுரைரா (ரலி),
நூல்: (புகாரி: 59)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “விடைபெறும்’ ஹஜ்ஜின்போது மினாவில் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் மக்கள் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “நான் (சட்டம்) தெரியாமல் குர்பானி (பலி) கொடுப்பதற்கு முன்னால் என் தலைமுடியை மழித்துவிட்டேன்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பரவாயில்லை; இப்போது குர்பானி கொடுத்துக் கொள்வீராக!” என்றார்கள்.
மற்றொருவர் வந்து “நான் தெரியாமல் கல் எறிவற்கு முன்பே குர்பானி கொடுத்து விட்டேன்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பரவாயில்லை; இப்போது கல் எறிந்து கொள்வீராக!” என்றார்கள். (அன்றைய தினம்) (பிற்படுத்திச் செய்யப்பட வேண்டிய) சில கிரியைகள் முற்படுத்திச் செய்யப்பட்டு விட்டதாகவும் (முற்படுத்திச் செய்யப்பட வேண்டிய) சில கிரியைகள் பிற்படுத்திச் செய்யப்பட்டுவிட்டதாகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போதெல்லாம் “பரவாயில்லை; (விடுபட்டதைச்) செய்யுங்கள்!’ என்றே சொன்னார்கள்.
அறி: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
நூல்: (புகாரி: 83) , 84
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, “(வெள்ளை நிறத்தவனான எனக்கு) என் மனைவி கறுப்பான மகனைப் பெற்றெடுத்தாள்; அவனை நான் (என் மனத்தில்) ஏற்க மறுத்துவிட்டேன்” என்று சொன்னார். அதற்கு அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன்னிடம் ஒட்டகங்கள் உள்ளனவா?” என்று கேட்டார்கள். அந்தக் கிராமவாசி, “ஆம்” என்று பதிலளித்தார்.
நபி (ஸல்) அவர்கள் “அவற்றின் நிறம் என்ன?” என்று கேட்டார்கள். அவர், “சிவப்பு” என்று சொன்னார். “அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்களும் உள்ளனவா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர் “(ஆம்) அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்கள் இருக்கவே செய்கின்றன” என்று பதிலளித்தார்.
“(தாயிடம் இல்லாத) அந்த (சாம்பல்) நிறம் அவற்றுக்கு மட்டும் எவ்வாறு வந்ததென நீ கருதுகிறாய்?” என்று கேட்டார்கள். அந்தக் கிராமவாசி, “ஆண் ஒட்டகத்தின் பரம்பரை காரணமாக வந்திருக்கலாம், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் “(உன்னுடைய) இந்த மகனும் உன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தைக் கொண்டிருக்கக் கூடும்” என்று கூறி, அவன் தன்னுடையவன் அல்லன் என்று மறுக்க அந்தக் கிராமவாசியை நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை.
அறி: அபூஹுரைரா (ரலி),
நூல்: (புகாரி: 7314)
அல்லாஹ்வின் தூதரிடம் அனைத்து விசயங்களைப் பற்றியும் மக்கள் கேட்டு தெரிந்து கொண்டார்கள். படைத்தவன் – படைப்பினங்கள், தனிமனிதன் – சமூகம், ஆண்கள் – பெண்கள், இம்மை – மறுமை, நம்பிக்கையாளர்கள் – மறுப்பாளர்கள், நேர்வழி – வழிகேடு, நன்மை – தீமை என்று எல்லா விதமான கோணங்களிலும் வினாக்களை எழுப்பி மார்க்கத்தைக் கற்றுக் கொண்டார்கள்.
இப்படி எதையும் சீர்தூக்கி ஆராய்ந்து, கேள்வி கேட்டு தெளிந்து பின்பற்றுவது என்பது நம்மை நேர்வழிக்கு அழைத்துச் செல்லும். தீய காரியங்களை விட்டு விலகுவதற்கு வழிகாட்டும். மார்க்கம் தொடர்பாக கேள்வி கேட்டு உண்மையைத் தெரிந்து தங்களைத் திருந்திக் கொள்பவர்கள் எல்லாக் காலத்திலும் இருக்கிறார்கள். ஷிர்க், பித்அத்தான காரியங்களில் இருந்து கொண்டு தவ்ஹீதை எதிர்த்து கேள்வி கேட்ட பலர் இன்று அதன் காப்பாளர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும் நிகழ்வொன்றைப் பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது ஒட்டகத்தில் ஒரு மனிதர் வந்து பள்ளி(யின் வளாகத்தி)ல் ஒட்டகத்தைப் படுக்கவைத்து அத(ன் முன்னங்காலி)னை மடக்கிக் கட்டினார். பிறகு மக்களிடம் “உங்களில் முஹம்மது அவர்கள் யார்?’ என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். “இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெள்ளைநிற மனிதர்தாம்’ என்று நாங்கள் சொன்னோம்.
உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களை “அப்துல் முத்தலிபின் (மகனின்) புதல்வரே!’ என்றழைத்தார். அதற்கு நபியவர்கள் “என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். அப்போது அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் “நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். சில கடினமான கேள்விகளையும் நான் கேட்கப் போகிறேன். அதற்கு நீங்கள் என் மீது கோபப்பட்டுவிடக் கூடாது” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “உம் மனதில் பட்டதைக் கேளும்!” என்றார்கள்.
உடனே அம்மனிதர் “உம்முடைய, உம் முன்னோருடைய இரட்சகன் மீது ஆணையாகக் கேட்கிறேன்; அல்லாஹ்தான் உம்மை மனித இனம் முழுவதற்கும் தூதராக அனுப்பினானா?’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம், அல்லாஹ் சாட்சியாக!” என்றார்கள். அடுத்து அவர் “அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ்தான் இரவிலும் பகலிலுமாக (நாளொன்றுக்கு) ஐவேளைத் தொழுகைகளைத் தொழுது வரவேண்டுமென்று உமக்கு(ம் மக்களுக்கும்) கட்டளையிட்டிருக்கின்றானா?” என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் “ஆம், அல்லாஹ் சாட்சியாக” என்றார்கள்.
அவர் “அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ்தான் ஒவ்வொரு ஆண்டிலும் (குறிப்பிட்ட) இந்த மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம், அல்லாஹ் சாட்சியாக!’ என்றார்கள்.
அவர், “அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்: அல்லாஹ்தான் எங்கள் செல்வர்களிடமிருந்து இந்த (ஸகாத் எனும்) தர்மத்தைப் பெற்று எங்கள் வறியோரிடையே விநியோகிக்குமாறு உமக்குக் கட்டளையிட்டிருக்கின்றானா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம், அல்லாஹ் சாட்சியாக!’ என்றார்கள்.
(இவற்றைக் கேட்டுவிட்டு) அம்மனிதர் “நீங்கள் (இறைவனிடமிருந்து) கொண்டு வந்தவற்றை நான் நம்பி ஏற்கின்றேன்” என்று கூறிவிட்டு “நான், எனது கூட்டத்தார்களில் இங்கு வராமல் இருப்பவர்களின் தூதுவனாவேன்; நான்தான் பனூ சஅத் பின் பக்ர் குலத்தாரின் சகோதரன் ளிமாம் பின் ஸஅலபா” என்றும் கூறினார்.
அறி: அனஸ் (ரலி),
நூல் : (புகாரி: 63)
மார்க்கம் என்று எந்தவொரு செய்தியைச் சொன்னாலும் ஆதாரம் கேட்டு அது குறித்து சிந்தித்து முடிவெடுக்கும் சிறந்த நிலைக்கு மக்கள் வந்திருக்கிறார்கள். இச்சூழ்நிலையில் சிலர், மக்களின் ஆய்வுச் சிந்தனையை மழுங்கடிக்க முனைகிறார்கள். மார்க்கம் பற்றிய கேள்விகளைக் கேட்கக் கூடாது; அந்தப் பண்பு நம்மைச் சீரழித்து விடும் என்று சில செய்திகளை முன்வைக்கிறார்கள். அதன் உண்மைத் தன்மையை இப்போது பார்ப்போம்.
மார்க்கத்தைப் போதிப்பவர்களிடம் எந்தவொரு எதிர்க் கேள்வியும் கேட்கக் கூடாது என்று சொல்பவர்கள் (அல்குர்ஆன்: 5:101) வசனத்தை ஆதாரமாக எடுத்துக் காட்டுகிறார்கள்.
மார்க்கம் தொடர்பாக கேள்வி கேட்பது தவறு என்ற கருத்தில் மேற்கண்ட இறைவசனம் அமையவில்லை. மாறாக, இறைவனிடம் இருந்து இறைத்தூதருக்கு இறைச் செய்தி அருளப்படும் நேரங்களில் கேள்வி கேட்பதைத்தான் குறிக்கிறது. மேலும் அதற்காக காரணமும் அதிலே தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. அந்தக் காரணத்திற்கு வலுசேர்க்கும் வகையில் நபிமொழியும் இருக்கிறது.
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَسْـــَٔلُوْا عَنْ اَشْيَآءَ اِنْ تُبْدَ لَـكُمْ تَسُؤْكُمْۚ وَاِنْ تَسْــَٔـلُوْا عَنْهَا حِيْنَ يُنَزَّلُ الْقُرْاٰنُ تُبْدَ لَـكُمْ ؕ عَفَا اللّٰهُ عَنْهَا ؕ وَاللّٰهُ غَفُوْرٌ حَلِيْمٌ
قَدْ سَاَ لَهَا قَوْمٌ مِّنْ قَبْلِكُمْ ثُمَّ اَصْبَحُوْا بِهَا كٰفِرِيْنَ
நம்பிக்கை கொண்டோரே! சில விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்பாதீர்கள்! அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்குத் தீங்கு தரும். குர்ஆன் அருளப்படும் நேரத்தில் அவை பற்றி நீங்கள் கேள்வி கேட்டால் அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு விடும்.
அவற்றை அல்லாஹ் மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மையுள்ளவன். உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்தினர் இவ்வாறு கேள்வி கேட்டனர். பின்னர் அவர்கள், அவற்றை மறுப்போராக ஆகி விட்டனர்.
சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விளையாட்டாகக் கேள்வி கேட்பது வழக்கம். இவ்வாறாக ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “என் தந்தை யார்?” என்று கேட்டார். தமது ஒட்டகம் காணாமற்போய் விட்ட இன்னொருவர் “என் ஒட்டகம் எங்கே?” என்று கேட்டார். அப்போதுதான் அல்லாஹ், அவர்கள் விஷயத்தில் இந்த வசனத்தை அருளினான்:
இறைநம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும். குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவற்றைப் பற்றி நீங்கள் வினவினால் அப்போது அவை உங்களுக்கு வெளிப்படையாகக் கூறப்பட்டுவிடும்.
நீங்கள் (இதுவரை விளையாட்டுத் தனமாக) வினவியவற்றை அல்லாஹ் மன்னித்து விட்டான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் சகிப்புத் தன்மையுடையவனாகவும் இருக்கின்றான்.
அறி: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: (புகாரி: 92) (4622) (7295)
என்னுடைய தந்தை யார்? என்றுகூட சில நபர்கள் இறைத் தூதர் (ஸல்) அவர்களிடம் சகட்டு மேனிக்கு கேள்வியைக் கேட்டனர். இது மாதிரியான கேள்விகள் கேட்கப்படும்போது, தம் தந்தை என இவர் யாரை நினைக்கிறாரோ அவர் அல்லாதவர் ஒருவேளை தந்தையாக இருந்து விட்டால் வீணான மனச் சங்கடத்தை கவலையை அவர் சந்திக்க வேண்டி இருக்கும். எனவேதான் இறைத்தூதரிடம் சில விஷயங்கள் குறித்து கேள்வி கேட்கக் கூடாது என மார்க்கத்தில் தடை விதிக்கப்பட்டது.
இதற்கு முன் மூஸாவிடம் (கேள்வி) கேட்கப்பட்டது போல் உங்கள் தூதரிடம் கேட்க விரும்புகிறீர்களா? நம்பிக்கையை (இறை) மறுப்பாக மாற்றுபவர் நேர்வழியை விட்டு விலகி விட்டார்.
மேலிருக்கும் வசனத்தை காட்டி கேள்வி கேட்கக் கூடாது என்று வாதம் வைக்கிறார்கள். இது குறித்து ஏற்கனவே விரிவான விளக்கமான பதில் கொடுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், ஜமாஅத்தின் மூத்த அறிஞர் சகோ. பீ.ஜே அவர்கள் இந்த வசனத்திற்கு குர்ஆன் விளக்கவுரை பகுதியில் கொடுத்திருக்கும் பதிலை இங்கு காண்போம்.
மூஸா நபியிடம் அவரது சமுதாயத்தினர் கேட்டது போல் நீங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்காதீர்கள் என்று (அல்குர்ஆன்: 2:108) வசனத்தில் கூறப்பட்டுள்ளது. மூஸா நபியிடம் அவரது சமுதாயத்தினர் கேட்டது என்ன என்பதைத் திருக்குர்ஆனில் தேடிப் பார்க்கும் போது, இறைவன் கண்டிக்கின்ற பாரதூரமான நான்கு விஷயங்களை அவர்கள் மூஸா நபியிடம் கேட்டுள்ளனர் என்பதை அறிய முடிகின்றது.
அந்த நான்கு விஷயங்களையுமே இவ்வசனம் குறிக்கும் என்று புரிந்து கொள்வது தான் முழுமையான விளக்கமாக அமையும்.
1. மூஸா நபியவர்களையும் அவர்களது சமுதாயத்தையும் கடலில் மூழ்காமல் இறைவன் காப்பாற்றிக் கரை சேர்த்தான். இதன் பின்னர் சிலைகளை வழிபடும் ஒரு கூட்டத்தினரை மூஸாவின் சமுதாயத்தினர் கண்டார்கள்.
“மூஸாவே! இவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எங்களுக்கும் பல கடவுள்களை ஏற்படுத்துவீராக” என்று கேட்டனர்.
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا خَرَجَ إِلَى حُنَيْنٍ مَرَّ بِشَجَرَةٍ لِلْمُشْرِكِينَ يُقَالُ لَهَا: ذَاتُ أَنْوَاطٍ يُعَلِّقُونَ عَلَيْهَا أَسْلِحَتَهُمْ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، اجْعَلْ لَنَا ذَاتَ أَنْوَاطٍ كَمَا لَهُمْ ذَاتُ أَنْوَاطٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” سُبْحَانَ اللَّهِ هَذَا كَمَا قَالَ قَوْمُ مُوسَى {اجْعَلْ لَنَا إِلَهًا كَمَا لَهُمْ آلِهَةٌ} [الأعراف: 138] وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَرْكَبُنَّ سُنَّةَ مَنْ كَانَ قَبْلَكُمْ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மரத்தைக் கடந்து சென்றனர். அம்மரம் இணை கற்பிக்கும் மக்களுக்கு உரியது. “தாத்து அன்வாத்’ என்று அழைக்கப்படும் அம்மரத்தில் இணை கற்பிப்பவர்கள் தமது ஆயுதங்களைத் தொங்கவிடுவார்கள். இதைக் கண்ட சில நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவர்களுக்கு “தாத்து அன்வாத்’ எனும் புனித மரம் இருப்பது போல் எங்களுக்கும் புனித மரம் ஒன்றை ஏற்படுத்துங்கள்” என்று கேட்டனர்.
அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் தூயவன். “அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எங்களுக்கும் பல கடவுள்களை ஏற்படுத்துவீராக’ என்று மூஸா நபியின் சமுதாயத்தினர் கேட்டது போல் இந்தக் கேள்வியும் அமைந்துள்ளது. எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ, அவன் மேல் ஆணையாக, உங்களுக்கு முன் சென்றோரின் வழிமுறையை நீங்கள் அப்படியே பின்பற்றுவீர்கள்” என்று கூறினார்கள்.
நூல்: (திர்மிதீ: 2180) (2106)
இஸ்லாத்தில் நல்லவை அனைத்துமே இருக்கும் போது, இஸ்லாம் அல்லாத மதங்களின் சடங்குகள் இஸ்லாத்திலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது என்ற கருத்தை இவ்வசனம் தாங்கி நிற்கின்றது. கந்தூரி விழாக்கள், பஞ்சா, சந்தனக்கூடு, மீலாது விழா, புத்தாண்டு கொண்டாடுதல், தாலி, பால் கிதாபு, இறந்தோருக்கு 3, 7, 40 நாட்களில் சடங்குகள் செய்தல், ஷைகுமார்களின் காலில் விழுதல் போன்றவற்றைச் செய்பவர்கள் மூஸா நபியிடம் பல கடவுள்களைக் கேட்ட இஸ்ரவேலர்களுக்கு ஒப்பானவர்கள் என்பதை இவ்வசனத்தைச் சிந்தித்தால் விளங்கலாம்.
2. மூஸா நபியின் சமுதாயத்தினர் இறைவனின் ஆற்றலையும், வல்லமையையும் கண்கூடாகக் கண்ட பின்னர் “அல்லாஹ்வை எங்கள் கண்முன்னே காட்டுவீராக!” என்று மூஸாவிடம் கேட்டார்கள். உடனே பெரும் சப்தம் ஏற்பட்டு மூர்ச்சையானார்கள்.
மனிதர்கள் இவ்வுலகில் இறைவனைக் காண முடியாது என்று இறைவன் அறிவித்திருக்கும்போது, அதை மாற்றியமைக்குமாறு இறைவனிடம் கேட்பது இறைவனுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். எதைத் தனது முடிவாக இறைவன் அறிவித்திருக்கிறானோ அதை மாற்றுமாறு கோரக் கூடாது என்பதையும் இவ்வசனம் உள்ளடக்கியுள்ளது.
3. இறைவன் எந்தச் சட்டத்தைப் போடுவதாக இருந்தாலும் தேவையான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி சட்டம் இயற்றுவான் என்று நம்ப வேண்டும். அதில் குடைந்து, குடைந்து கேள்வி கேட்டால் அது நமக்குத்தான் சிரமத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற கேள்விகளையும் மூஸா நபியின் சமுதாயத்தினர், மூஸாவிடம் கேட்டுள்ளனர். மூஸா நபியின் காலத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். கொலையாளியைக் கண்டுபிடிக்க ஒரு மாட்டை அறுத்து அதன் ஒரு பகுதியால் இறந்தவர் மீது அடியுங்கள்; இறந்தவர் உயிர் பெற்று தன்னைக் கொன்றவரை அடையாளம் காட்டுவார் என்று இறைவன் கட்டளையிட்டான்.
ஒரு மாட்டை அறுங்கள் என்று அல்லாஹ் கூறியவுடன் ஏதாவது ஒரு மாட்டை அவர்கள் அறுத்திருக்கலாம். எத்தகைய மாட்டை அவர்கள் அறுத்திருந்தாலும் இறைக் கட்டளையைச் செயல்படுத்தியவர்களாக ஆகியிருப்பார்கள். ஆனால், மாட்டின் வயது என்ன? நிறம் என்ன? தன்மை என்ன என்று தேவையற்ற பல கேள்விகளைக் கேட்டு தமக்குத் தாமே சிரமத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.
وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖۤ اِنَّ اللّٰهَ يَاْمُرُكُمْ اَنْ تَذْبَحُوْا بَقَرَةً ؕ قَالُوْآ اَتَتَّخِذُنَا هُزُوًْا ؕ قَالَ اَعُوْذُ بِاللّٰهِ اَنْ اَكُوْنَ مِنَ الْجٰـهِلِيْنَ
قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَّنَا مَا هِىَؕ قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا فَارِضٌ وَّلَا بِكْرٌؕ عَوَانٌۢ بَيْنَ ذٰلِكَؕ فَافْعَلُوْا مَا تُؤْمَرُوْنَ
قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَّنَا مَا لَوْنُهَا ؕ قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ صَفْرَآءُۙ فَاقِعٌ لَّوْنُهَا تَسُرُّ النّٰظِرِيْنَ
قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَّنَا مَا هِىَۙ اِنَّ الْبَقَرَ تَشٰبَهَ عَلَيْنَا ؕ وَاِنَّـآ اِنْ شَآءَ اللّٰهُ لَمُهْتَدُوْنَ
قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا ذَلُوْلٌ تُثِيْرُ الْاَرْضَ وَلَا تَسْقِى الْحَـرْثَ ۚ مُسَلَّمَةٌ لَّا شِيَةَ فِيْهَا ؕ قَالُوا الْـٰٔـنَ جِئْتَ بِالْحَـقِّؕ فَذَبَحُوْهَا وَمَا كَادُوْا يَفْعَلُوْن
4.வஹீ அருளப்படும் காலகட்டத்தில் இறைத்தூதரிடம் கூடுதல் விளக்கம் கேட்கக் கூடாது என்ற கருத்தையும் இவ்வசனம் உள்ளடக்கி நிற்கின்றது.
(அல்குர்ஆன்: 5:101,102) வசனங்களில் இது தெளிவாகவும் குறிப்பிடப்படுகின்றது.
“எதை நான் தெளிவுபடுத்தாமல் விட்டு விட்டேனோ அந்த விஷயத்தில் என்னை விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் சென்றவர்கள் தமது நபிமார்களிடம் அதிகம் கேள்வி கேட்டதாலும், நபிமார்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதாலும்தான் அழிந்து போயினர்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
(நூல்: (புகாரி: 7288) )
“தடை செய்யப்படாத ஒன்றைப் பற்றி ஒருவர் கேள்வி கேட்டு அக்கேள்வியின் காரணமாக அது தடை செய்யப்பட்டது என்றால் அந்த மனிதர்தான் முஸ்லிம்களிலேயே மிகப் பெரிய குற்றவாளி” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
(நூல்: (புகாரி: 7289) )
மூஸா நபியிடம் இஸ்ரவேலர்கள் கேட்டது போல் நபிகள் நாயகத்திடம் கேட்கக் கூடாது என்பது மேற்கண்ட நான்கு விஷயங்களையும் உள்ளடக்கும். நபிமார்களிடம் இவ்வாறு கேள்வி கேட்கக் கூடாது என்ற கருத்தைத்தான் இவ்வசனம் கூறுகின்றது.
தங்களிடம் யாரும் கேள்வி கேட்கக் கூடாது; தாங்கள் கூறுவதைக் கண் மூடி நம்ப வேண்டும் என்பதற்கு இவ்வசனத்தைப் போலி அறிஞர்கள் ஆதாரமாக்க முயல்கின்றனர். நபிமார்களிடம் கேள்வி கேட்டால் அதற்கு அவர்கள் அளிக்கும் பதிலைப் பொருத்து அது ஹலாலாகவோ, ஹராமாகவோ ஆகிவிடும். ஆனால் நபிமார்கள் அல்லாத மற்றவர்களுக்கு இந்த நிலை இல்லாததால் அவர்களிடம் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்கு இந்த வசனத்தை ஆதாரமாகக் காட்ட முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்திற்குப் பின் எந்த அறிஞரிடம் கேள்வி கேட்டாலும் அதன் காரணமாக ஹலாலான எதுவும் ஹராம் ஆகாது. ஹராமான எதுவும் ஹலால் ஆகி விடாது. எனவே மார்க்க அறிஞர்கள், தம்மிடம் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்கு இவ்வசனத்தைக் கேடயமாகப் பயன்படுத்தக்கூடாது.
மார்க்கம் தொடர்பாக கேள்வி கேட்பதற்கு எந்தவொரு தடையும் இல்லை. இஸ்லாம் கேள்வி கேட்பதை அனுமதித்து இருக்கிறது. அதேசமயம், எப்படி வேண்டுமானாலும் கேள்வியைக் கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. எதிலும் வரம்பு மீறக் கூடாது என்று சொல்லும் மார்க்கம், கேள்வி கேட்பதிலும் சில கட்டுப்பாடுகளை வரையறையை வைத்துள்ளது.கேட்கப்படும் கேள்விகள் அவசியமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும். மார்க்கம் தொடர்பாக தமக்குள்ளும் சரி, பிறர் மத்தியிலும் சரி தேவையில்லாமலும் அறிவற்ற முறையிலும் கேள்விகளைக் கேட்கும் பழக்கம் நம்மிடம் இருக்கவே கூடாது.
மக்கள் (பல புதிரான விஷயங்கள் குறித்து) ஒருவரையொருவர் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். இறுதியில், “அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் அல்லாஹ்; இது (சரிதான்). அல்லாஹ்வைப் படைத்தவன் யார்?” என்றுகூடக் கேட்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி: அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல்: (புகாரி: 7296)
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் எழுத்தரான வர்ராத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்கள் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களுக்கு (ஒரு கடிதம்) எழுதியிருந்தார்கள். அதில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து தாங்கள் செவியேற்ற ஹதீஸ் ஒன்றை எனக்கு எழுதியனுப்புங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்கள். அப்போது முஃகீரா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) எழுதினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்தவுடன், “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு நிகரானோர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே சொந்தம். அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன்” என்று கூறுவார்கள்.
மேலும், நபி (ஸல்) அவர்கள், (இவ்வாறு) சொல்லப்பட்டது; (இவ்வாறு) அவர் சொன்னார் என்று (ஊர்ஜிதமில்லாதவற்றை, அல்லது தேவைக்கதிகமாகப்) பேசுவது, அதிகமாகக் (கேள்வி அல்லது யாசகம்) கேட்பது, செல்வத்தை வீணாக்குவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கோருவது, அன்னையரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றுக்குத் தடை விதித்து வந்தார்கள்.
நூல்: (புகாரி: 2408) , 6473
திருக்குர்ஆனை, நபிமொழிகளைப் படித்தால் நமக்குப் புரியாது; மக்களின் கேள்விகளைத் தொகுத்து விளக்கம் கொடுத்திருக்கும் இமாம்களைப் பின்பற்றுங்கள் என்று ஒருபுறம் சொல்கிறார்கள். இன்னொரு புறம், மார்க்கம் தொடர்பாக யாரிடமும் கேள்விகளை கேட்கக் கூடாது என்கிறார்கள். இவர்கள் இப்படி முரண்பட்டுப் பேசுவதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.
கடந்த காலங்களைப் போன்று மார்க்கத்தில் இல்லாத பொல்லாத செய்திகளை எல்லாம் சொல்லி இவர்களால் மக்களை ஏமாற்ற முடிவதில்லை. இப்போது பெரும்பாலான மக்கள் எந்தவொரு செயலுக்கும் சரியான ஆதாரம் இருக்கிறதா? என்று சிந்தித்து செயல்பட ஆரம்பித்து விட்டார்கள். இந்த நிலை மலர தவ்ஹீத்வாதிகளை அல்லாஹ் காரணமாக ஆக்கியிருக்கிறான் என்றால் அது மிகையல்ல, (அல்ஹம்துலில்லாஹ்). எனவே, சத்திய மார்க்கத்தை கண்மூடித்தனமாக அணுகாமல், சீரிய முறையில் சிந்தித்து தூய மூறையில் பின்பற்றுவோமாக.
ஈருலகிலும் வெற்றிபெறுவோமாக! அதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவனாக!
எம். முஹம்மது சலீம், MISc, மங்கலம்.