கேள்விகள் ஒருவிதம் பதில்கள் பலவிதம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

முன்னுரை

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்களும், ஏனைய கொள்கையைச் சார்ந்தவர்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். அத்தனை கேள்விகளுக்கும் நபி (ஸல்) அவர்கள் அழகான முறையில் பதிலளித்துள்ளர்கள். கேள்விகள் எப்படி அமைந்தனவோ அதற்கு ஏற்றாற்போல் பதிலும் அமைந்திருந்தன.

கேள்விக்குரிய பதிலும் கூடுதல் விளக்கமும்

கேள்விக்கான பதிலைச் சொல்லிவிடலாம். அல்லது கேள்விக்கான பதிலையும் சொல்லிவிட்டு, அதைவிக் கூடுதலான செய்திகளையும் சொல்லலாம்.

فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

هُوَ الطَّهُورُ مَاؤُهُ، الحِلُّ مَيْتَتُهُ

ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் கடல் தண்ணீரைப் பற்றி கேள்வி கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கடல் தண்ணீர் தூய்மையானதுதான் என்று சொல்லிவிட்டு, கடலில் தாமாக செத்தவையும் உங்களுக்கு ஆகுமானதுதான் என்ற தகவலையும் கூடுதலாகச் சொன்னார்கள்.

நூல்: (திர்மிதீ: 69) (64)

கடல் தண்ணீரைப் பற்றி மட்டும்தான் கேட்டார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அதற்குரிய பதிலுடன் அதில் உள்ள மீனுக்கும் சேர்த்து பதிலளித்தார்கள்.

கேட்டதைவிட முக்கியமானதை தெளிவுபடுத்துதல்:
يَسْـــَٔلُوْنَكَ مَاذَا يُنْفِقُوْنَ ؕ قُلْ مَآ اَنْفَقْتُمْ مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِ‌ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ‏

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும், (செலவிட வேண்டும்) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன் எனக் கூறுவீராக.

(அல்குர்ஆன்: 2:215)

மக்கள் கேட்ட கேள்வி எதைச் செலவிட வேண்டும் என்றுதான். ஆனால் அல்லாஹ் கேள்விக்கான பதிலையும் சொல்லிவிட்டு யாருக்காக செலவிட வேண்டும் என்பதை முக்கியத்துவப்படுத்தி பதிலளிக்கின்றான்.

எதிர்மறை பதில்

சில நேரங்களில் கேள்விக்கான பதிலை நேரடியாகச் சொல்லாமல் எதிர்மறையான பதிலை நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا
أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللهِ ، مَا يَلْبَسُ الْمُحْرِمُ مِنَ الثِّيَابِ؟ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا يَلْبَسُ الْقُمُصَ ، وَلَا الْعَمَائِمَ ، وَلَا السَّرَاوِيلَاتِ ، وَلَا الْبَرَانِسَ ، وَلَا الْخِفَافَ ، إِلَّا أَحَدٌ لَا يَجِدُ نَعْلَيْنِ ، فَلْيَلْبَسْ خُفَّيْنِ ، وَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ ، وَلَا تَلْبَسُوا مِنَ الثِّيَابِ شَيْئًا مَسَّهُ الزَّعْفَرَانُ ، أَوْ وَرْسٌ

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் கட்டியவர் எதையெதை அணியலாம்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “சட்டை, தலைப்பாகை, முழுக்கால் சட்டை, (முக்காடுள்ள) முழுநீள அங்கி (அல்லது தொப்பி), காலுறை ஆகியவற்றை அணியக் கூடாது. செருப்பு கிடைக்காதவர், தம் காலுறையின் (மேலிருந்து) கரண்டைக்குக் கீழ் வரையுள்ள பகுதியை வெட்டிவிட்டு அதை அணிந்து கொள்ளலாம். குங்குமப்பூச் சாயம் மற்றும் வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடையை அணியாதீர்!” என்றார்கள்.

நூல்: (புகாரி: 1542) 

நபி (ஸல்) அவர்களிடம் இஹ்ராம் அணிந்தவர் எவற்றையெல்லாம் அணியலாம் என்று கேட்ட கேள்விக்கு அணியக்கூடாதவை எவை என்பதை நபி (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கேட்ட கேள்விக்கு எந்தெந்த ஆடைகளை அணிய வேண்டும் என்று சொல்லாமல் அணியக் கூடாததை சொல்லிவிட்டார்கள்.

அனுமதிக்கப்பட்டவை ஏராளமாக இருக்கின்றன. ஆனால் அனுமதிக்கப்படாதவை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுதான் இருக்கிறது எனும்போது குறைவானதை சொல்வதுதான் புத்திசாலித்தனமான பதிலாக இருக்க முடியும். அந்த அடிப்படையில்தான் நபியவர்களின் பதிலும் அமைந்திருந்தன.

முழுமையாக விளங்கும் ஆற்றல் இல்லாத போது சுருக்கமாக பதில் அளித்தல் :
وَيَسْـــَٔلُوْنَكَ عَنِ الرُّوْحِ‌ ؕ قُلِ الرُّوْحُ مِنْ اَمْرِ رَبِّىْ وَمَاۤ اُوْتِيْتُمْ مِّنَ الْعِلْمِ اِلَّا قَلِيْلًا‏

(முஹம்மதே) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். உயிர் என்பது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள் என்று கூறுவீராக.

(அல்குர்ஆன்: 17:85)

தேவையற்ற கேள்விகள்

இம்மை மறுமைக்கு பயனில்லாத மற்றும் அசியமில்லாத கேள்விகள் நன்மைக்குப் பதில் தீமையைத் தந்துவிடும்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَسْـــَٔلُوْا عَنْ اَشْيَآءَ اِنْ تُبْدَ لَـكُمْ تَسُؤْكُمْ‌ۚ وَاِنْ تَسْــَٔـلُوْا عَنْهَا حِيْنَ يُنَزَّلُ الْقُرْاٰنُ تُبْدَ لَـكُمْ ؕ عَفَا اللّٰهُ عَنْهَا‌ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ حَلِيْمٌ‏

நம்பிக்கை கொண்டோரே சில விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்பாதீர்கள். அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்கு தீங்கு தரும். குர்ஆன் அருளப்படும் நேரத்தில் அவை பற்றி நீங்கள் கேள்வி கேட்டால் அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுவிடும். அவற்றை அல்லாஹ் மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பவன். சகிப்புத்தன்மையுள்ளவன்.

(அல்குர்ஆன்: 5:101)

إِنَّ أَعْظَمَ المُسْلِمِينَ جُرْمًا، مَنْ سَأَلَ عَنْ شَيْءٍ لَمْ يُحَرَّمْ، فَحُرِّمَ مِنْ أَجْلِ مَسْأَلَتِهِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் தடை விதிக்கப்படாத ஒன்றைப் பற்றிக் கேள்வி கேட்டு, அவர் கேள்வி கேட்ட காரணத்தாலேயே அது தடை செய்யப்பட்டு விடுமானால் அவர்தாம் முஸ்லிம்களிலேயே பெருங்குற்றம் புரிந்தவர் ஆவார்.

அறி : சஅத் பின் அபீவக்காஸ் (ரலி),
நூல் : (புகாரி: 7289) 

தேவையற்றதை கேட்டு நன்மையை இழந்த சமுதாயம்

பதில் போதுமானதாக இருந்தும் தேவையற்ற கேள்விகள் கேட்டு நன்மையை இழந்த, மூஸா (அலை) அவர்களின் கூட்டத்தார்.

وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖۤ اِنَّ اللّٰهَ يَاْمُرُكُمْ اَنْ تَذْبَحُوْا بَقَرَةً ‌ ؕ قَالُوْآ اَتَتَّخِذُنَا هُزُوًْا ‌ؕ قَالَ اَعُوْذُ بِاللّٰهِ اَنْ اَكُوْنَ مِنَ الْجٰـهِلِيْنَ‏
قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَّنَا مَا هِىَ‌ؕ قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا فَارِضٌ وَّلَا بِكْرٌؕ عَوَانٌۢ بَيْنَ ذٰلِكَ‌ؕ فَافْعَلُوْا مَا تُؤْمَرُوْنَ‏
قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَّنَا مَا لَوْنُهَا ‌ؕ قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ صَفْرَآءُۙ فَاقِعٌ لَّوْنُهَا تَسُرُّ النّٰظِرِيْنَ‏
قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَّنَا مَا هِىَۙ اِنَّ الْبَقَرَ تَشٰبَهَ عَلَيْنَا ؕ وَاِنَّـآ اِنْ شَآءَ اللّٰهُ لَمُهْتَدُوْنَ‏
قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا ذَلُوْلٌ تُثِيْرُ الْاَرْضَ وَلَا تَسْقِى الْحَـرْثَ ‌ۚ مُسَلَّمَةٌ لَّا شِيَةَ فِيْهَا ‌ؕ قَالُوا الْـٰٔـنَ جِئْتَ بِالْحَـقِّ‌ؕ فَذَبَحُوْهَا وَمَا كَادُوْا يَفْعَلُوْنَ

“ஒரு மாட்டை நீங்கள் அறுக்க வேண்டும் என அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்” என்று மூஸா, தமது சமுதாயத்திடம் கூறியபோது “எங்களைக் கேலிப் பொருளாகக் கருதுகிறீரா?” என்று கேட்டனர். அதற்கு அவர், “அறிவீனனாக நான் ஆவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்” என்றார்.

“உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! “அது எத்தகையது’ என்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான்” என்று அவர்கள் கேட்டனர். “அது கிழடும், கன்றும் அல்லாத இரண்டுக்கும் இடைப்பட்ட மாடு என்று அவன் கூறுகிறான். எனவே உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்!” என்று அவர் கூறினார்.

“உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! “அதன் நிறம் என்ன’ என்பதை எங்களுக்கு அவன் விளக்குவான்” என்று அவர்கள் கேட்டனர். “அது பார்ப்போரைப் பரவசப்படுத்துகிற கருமஞ்சள் நிற மாடு என்று அவன் கூறுகிறான்” என்றார்.

“உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! “அது எத்தகையது’ என்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான். அந்த மாடு எங்களைக் குழப்புகிறது. அல்லாஹ் நாடினால் நாங்கள் வழி காண்போம்” என்று அவர்கள் கூறினர்.

“அது நிலத்தை உழவோ, விவசாயத்துக்கு நீரிறைக்கவோ பழக்கப்படுத்தப்படாத மாடு; குறைகளற்றது; தழும்புகள் இல்லாதது” என்று அவன் கூறுவதாகக் (மூஸா) கூறினார். “இப்போதுதான் சரியாகச் சொன்னீர்” என்று கூறி செய்ய முடியாத நிலையிலும் (மிகுந்த சிரமப்பட்டு) அம்மாட்டை அவர்கள் அறுத்தனர்.

(அல்குர்ஆன்: 2:67-71)

எனவே, நாமும் தேவையான கேள்விகளை மட்டும் கேட்டு, மார்க்க அறிவை வளர்த்துக் கொள்ளும் மக்களாக, அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!