97) குழியை விசாலமாகத் தோண்டுதல்

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

அடக்கம் செய்வதற்காகக் குழிகளை வெட்டும் போது தாராளமாகவும், விசாலமாகவும் வெட்ட வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு ஜனாஸாவைப் பின் தொடர்ந்தோம். அவர்கள் கப்ருக்கு அருகில் நின்று கொண்டு, ‘தலைப் பக்கம் விசாலமாக்கு! கால் பக்கம் விசாலமாக்கு!’ என்று குழி வெட்டுபவரிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அன்ஸாரித் தோழர்

நூல்: அபூ தாவூத் 2894

மூன்று பிடி மண் அள்ளிப் போடுதல்

அடக்கம் செய்யும் போது அதில் கலந்து கொண்டவர்கள் மூன்று பிடி மண் அள்ளி கப்ரின் மேலே போடுகின்றனர்.

இந்தக் கருத்தில் வரும் ஹதீஸ்கள் பலவீனமாக இருந்தாலும் கீழ்க்காணும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமாக அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவுக்குத் தொழுகை நடத்தினார்கள். பின்னர் அடக்கத்தலம் வந்து அவரது தலைமாட்டில் மூன்று கைப்பிடி மண் அள்ளிப் போட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

(இப்னு மாஜா: 1554)

இவ்வாறு மண் அள்ளிப் போடும் போது ‘மின்ஹா கலக்னாகும் வபீஹா நுயீதுக்கும் வமின்ஹா நுக்ரிஜகும் தாரதன் உக்ரா’ என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை.