02) குழந்தை பாக்கியத்தை கேட்க வேண்டும்

நூல்கள்: இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு

குழந்தை பாக்கியத்தை கேட்க வேண்டும்

பெற்றோர்கள் வயோதிகத்தை அடையும் போது பிள்ளைகள் பெற்றவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று எல்லா தம்பதியினரும் ஆசைப்படுகிறார்கள். எனவே தான் குழந்தை பாக்கியம் கிட்டாதவர்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்று இதற்காக பல ஆயிரங்களை செலவு செய்துகொண்டிருக்கிறார்கள்.

குழந்தைகளை பெற்றெடுப்பதினால் இந்த உலகத்தில் இன்னும் ஏராளமான நன்மைகள் ஏற்படுகிறது. மறுமையிலும் பெற்றோர்கள் நன்றாக வாழ்வதற்கும் இன்பத்தை அனுபவிப்பதற்கும் நல்லக் குழந்தைகள் காரணமாக அமைகின்றன,எனவே இந்த பாக்கியத்தை நாம் அனைவரும் கேட்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் நல்ல அடியானுக்கு சொர்க்கத்தில் அந்தஸ்த்தை உயர்த்துவான். அப்போது அந்த அடியான் என் இறைவா இது எனக்கு எப்படிக் கிடைத்தது என்று கேட்பான். அதற்கு அல்லாஹ் உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்குக் இந்த அந்தஸ்த்து கிடைத்தது.) என்று கூறுவான்.

அறி : அபூஹுரைரா (ரலி),

நூல் : அஹ்மத் (10202)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1.நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.

அறி : அபூஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் (3358)

ஈருலகத்திலும் பலனை அடைய வேண்டும் என்றால் பிறக்கும் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக வளர்க்கப்பட வேண்டும். பிள்ளையின் குணமும் நடத்தையும் கெட்டுவிட்டால் இவர்களே பெற்றோர்களுக்கு பெரும் சுமையாகவும் வேதனையாகவும் மாறிவிடுகிறார்கள்.

எனவே தான் இறைத்தூதர்கள் தங்களுக்கு குழந்தை பாக்கியத்தை வேண்டும் போது நல்ல குழந்தைகளைத் தருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.

எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக! அவர் எனக்கும், யஃகூபின் குடும்பத்தாருக்கும் வாரிசாவார். என் இறைவா! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராக ஆக்குவாயாக!” என்று (ஸக்கரிய்யா) கூறினார்.

(அல்குர்ஆன்:)

ஸக்கரிய்யா “இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்” என்று தம் இறைவனிடம் வேண்டினார்.

(அல்குர்ஆன்:)

“எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!” என்று (நல்லடியார்கள்) கூறுகின்றனர்.

(அல்குர்ஆன்:)

நம்பிக்கை இழந்து விடக்கூடாது

குழந்தை பிறக்காதவர்கள் தர்ஹாக்களுக்குச் சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் பிரார்த்தனை செய்தால் குழந்தை கிடைக்கும் என்று பலர் கருதிக்கொண்டு தர்ஹாக்களுக்குச் சென்று வருகிறார்கள்.

குழந்தையைத் தருகின்ற சக்தி அல்லாஹ் ஒருவனிடத்தில் மட்டும் தான் உள்ளது. அவனே தான் விரும்புகின்றதை மனிதர்களுக்குத் தருகின்றான்.

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும்,பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.

(அல்குர்ஆன்:)

இறைவனிடம் பல வருடங்களாக பிரார்த்தனை செய்து குழந்தை பிறக்காவிட்டாலும் அல்லாஹ்வின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது. தொடர்ந்து வேண்டிக்கொண்டே இருக்க வேண்டும். அவன் நாடினால் முதிய வயதில் கூட குழந்தை பாக்கியத்தை கொடுத்துவிடுவான்.

ஸக்கரிய்யா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆழமான நம்பிக்கையை வைத்திருந்தார்கள். முதிய வயதை அடைந்த போதும் அல்லாஹ்விடத்திலே குழந்தை பாக்கியத்தை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக!

(அல்குர்ஆன்:)