16) குழந்தைகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்

நூல்கள்: இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு

குழந்தைகள் விஷயத்தில் அக்கரை காட்டாமல் அழுக்கான ஆடையில் அசிங்கமானத் தோற்றத்தில் அவர்களை தெருக்களில் திரிய விடும் தயார்மார்கள் சிலர் இருக்கிறார்கள். பின்வரும் ஹதீஸ்களை கவனத்தில் வைத்து இனிமேலாவது தங்கள் குழந்தைகளை பார்ப்பதற்கு அழகானவர்களாகவும் தூய்மையானவர்களாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு மனிதர், “தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்” என்று கூறினார்கள்.

அறி : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),

நூல் : முஸ்லிம் (147)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை மோசமான ஆடையில் கண்டார்கள். உன்னிடத்தில் செல்வம் இருக்கிறதா? என்று (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான் எல்லா செல்வங்களும் உள்ளது. அல்லாஹ் எனக்கு ஒட்டகத்தையும் ஆட்டையும் தந்துள்ளான் என்று கூறினேன். (நல்ல ஆடைகளை நீ அணிவதின் மூலம் உனக்கு இறைவன் அளித்த பாக்கியம்) உம்மிடத்தில் பார்க்கப்படட்டும் என்று கூறினார்கள்.

அறி : மாலிக் பின் நள்லா (ரலி),

நூல் : திர்மிதி (1929)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது தலைவிரிக் கோலமாய் இருந்த ஒரு மனிதரைக் கண்டார்கள். அவரது முடி (சீவப்படாமல்) பிரிந்திருந்தது. தனது முடியை படிய வைக்கும் பொருளை இவர் பெற்றுக்கொள்ளவில்லையா? (என்று கண்டித்துக்) கூறினார்கள். அழுக்கு படிந்த ஆடையில் இன்னொரு மனிதரைக் கண்டார்கள். தன் ஆடையைக் துவைத்துக்கொள்வதற்கு இவருக்குத் தண்ணீர் கிடைக்கவில்லையா? என்று (கடிந்துக்) கூறினார்கள்.

அறி : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),

நூல் : அபூதாவுத் (3540)