04) குழந்தைகளை கொல்வது மாபெரும் குற்றம்
பெற்றெடுத்த குழந்தையை கொலை செய்வது இறைநிராகரிப்பாளர்களின் பண்பாகும். அல்லாஹ்வும் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் இதை தடைசெய்துள்ளார்கள். மேலும் இது பெரும்பாவங்களில் ஒரு பாவமாகும்.
இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தைகளைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பிவிட்டன.
அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டி, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் நஷ்டம் அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை.
“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, “நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது” என்பதே. பெற்றோருக்கு உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.
வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.
நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து “அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்” என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அன்னையரைப் புண்படுத்துவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான்.
அறி : முஃகீரா பின் ஷுஅபா (ரலி),
நூல் : புகாரி (5975)
நபி (ஸல்) அவர்கள், “பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவை யாவை?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று கூறினார்கள்.
அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி (6857)