குறைஷிகள் இரகசியம் பேசிய போது

முக்கிய குறிப்புகள்: குர்ஆன் வசனம் இறங்கிய காரணம்

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) குறைஷியரில் இருவரும் அவர்களுடைய துணைவியரின் உறவினரான ஸகீஃப் குலத்தைச் சேர்ந்த ஒருவரும் அல்லது ஸகீஃப் குலத்தைச் சேர்ந்த இரண்டு பேரும், குறைஷிக் குலத்தைச் சேர்ந்த அவர்களுடைய மனைவிமார்களின் உறவுக்காரர் ஒருவரும் (ஆக மூவருமாக) ஒரு வீட்டில் (அமர்ந்து கொண்டு) இருந்தனர்.

அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் நமது பேச்சை அல்லாஹ் கேட்டுக் கொண்டிருக்கின்றான் என்று நீங்கள் கருதுகின்றீர்களா? என்று கேட்டார்.

அவர்களில் ஒருவர், (நமது பேச்சுகளில்) சிலவற்றை மட்டும் அவன் கேட்கிறான் என்று பதிலளித்தார்.

மற்றொருவர் நமது பேச்சுகளில் சிலவற்றை அவன் கேட்டுக் கொண்டிருப்பதானால் அனைத்தையும் அவன் கேட்கத்தானே செய்வான் என்று கூறினார்.

அப்போது தான் , ”(உலகில் நீங்கள் குற்றங்கள் புரிந்த போது) உங்கள் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக் கூட (குற்றங்களிலிருந்து) தவிர்ந்து கொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை” எனும் இந்த வசனம் (41:22) அருளப்பெற்றது.

(புகாரி: 4816)