குர்ஆன் விஷயத்தில் அலீ (ரலி)யைக் கொல்ல உமர் (ரலி) முயற்சி?

பயான் குறிப்புகள்: கொள்கை

குர்ஆன் விஷயத்தில் அலீ (ரலி)யைக் கொல்ல உமர் (ரலி) முயற்சி?

ஷியாக்களின் புரட்டு வாதம்

உலகில் ஷியாக்கள் அல்லாத முஸ்லிம்களில் உள்ள அனைத்து பிரிவினரும் குர்ஆன் எள்ளளவு  மாற்றத்திற்கும் இம்மியளவு  திருத்ததிற்கும் அறவே  உள்ளாகவில்லை என்று ஆணித்தரமான நம்பிக்கையில் உள்ளனர். ஆனால் ஷியாக்கள் மட்டும் இதற்கு நேர்மாற்றமான கருத்தில் இருக்கின்றனர்.

இதுவரை நாம் கண்ட அல்காஃபி என்ற நூலில் கலீனீ அறிவிக்கின்ற இரண்டு அறிவிப்புகளும் தற்போது இருப்பதைப் போன்ற குர்ஆனின் மூன்று மடங்கு வசனங்கள் காணாமல் போய்விட்டன என்று முழங்குகின்றன. இதில் வேடிக்கை என்ன தெரியுமா?

இந்த இலட்சணத்தில் ஷியாக்கள் மற்ற முஸ்லிம்களை போன்று “குர்ஆன் எந்த ஒரு மாற்றத்திற்கு உள்ளாகவில்லை” என்று  இன்னொரு பக்கம் சொல்லிக் கொள்கின்றனர். அப்படியானால் இது அவர்களின் கள்ளத்தனமும் குள்ளநரித்தனமும் நிறைந்த நடிப்பைத்  தவிர்த்து வேறெதுவுமில்லை என்பதை பகிரங்கமாக எடுத்துக் காட்டுகின்றது.

கலீனீ என்ற அறிவிப்பாளர் யார் தெரியுமா? ஷியாக்களின் முக்கிய இமாம்களின் ஒருவரான மஹ்தீ என்பவர் கொஞ்ச காலம் தலைமறைவாக இருந்தாராம். அதாவது ஆன்மீக தலைமறைவு என்று  ஷியாக்கள் இதைக் குறிப்பிடுகின்றனர். (கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்தார் என்று யாரும் தப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது) அந்த காலக் கட்டத்தில் அவர் ஷியாக்களை நான்கு தூதர்கள் மூலம் திரைமறைவில் இருந்துக் கொண்டு கண்காணித்திருக்கின்றார்.

இதற்கு சிறு தலைமறைவு என்று பெயர். இந்த நான்கு தூதர்களின் தொடர்பில் இருந்தவர் தான் கலீனி என்ற அறிவிப்பாளர். அப்படிப்பட்டவர் தான் குர்ஆனின் நான்கில் மூன்று பகுதிகளை காணவில்லை என்று பறைச்சாட்டுகின்றார்.

குர்ஆன் மாற்றத்திற்கு உள்ளானது என்று ஷியாக்களிடமிருந்து  வருகின்ற  அறிவிப்புகள் ஒன்றிரண்டல்ல! ஏராளமான அறிவிப்புகள், உள்ளன.  நம்மிடம் உள்ள இந்த குர்ஆன் ஷியாக்களின் குர்ஆன் கிடையாது நம்மிடம் உள்ள இந்த குர்ஆன் அவர்களுடைய நம்பிக்கைப்படி நம்பகமான குர்ஆனல்ல! கறைபடிந்தது. களங்கமானது. (அல்லாஹ் நம்மை காக்க வேண்டும்)  இது தொடர்பாக ஹதீஸ்கள் என்ற பெயரிலும் குர்ஆன் விரிவுரை என்ற பெயரிலும் அள்ளி விட்டிருக்கின்ற பொய்யான ஹதீஸ்களையும் கதைகளையும் பார்ப்போம்:

பொய்: 1

பஸாயிருத் தரஜாத் என்ற ஷியாக்கள் நூலில் அபூஜஃபர் வழியாக தெரிவிப்பதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மினாவில் தன்னுடைய தோழர்களை அழைத்து மக்களே! உங்களிடம் அல்லாஹ்வுடைய புனிதங்களை விட்டுச் செல்கின்றேன். அவை அல்லாஹ்வின் வேதமும் என்னுடைய குடும்பமும்  புனிதமிக்க ஆலயமான கஃபாவும் ஆகும் என்று அறிவித்தார். ஆனால் நபித் தோழர்கள் அல்லாஹ்வின் வேதத்தை  திரித்து விட்டார்கள். எனது குடும்பத்தை கொன்று விட்டார்கள். கஃபாவை இடித்து விட்டார்கள். மொத்தத்தில் அல்லாஹ்வின் அமானிதங்களை நாசமாக்கி விட்டார்கள் என்று அபூஜஃபர்  குறிப்பிட்டார்.

இந்த அறிவிப்புகள் மட்டும் இவர்களை அடையாளங்காட்ட போதாது. இதற்கு மேலும் அறிவிப்புகள் இருக்கின்றன. அவற்றையும் விடாமல் பார்ப்போம்.

பொய்:2

சிறையிலிருந்த அலீ பின் சுவைதுக்கு இமாம் அபுல்ஹசன் மூஸா எழுதிய கடிதத்தில், ஷியா அல்லாதவரின் மார்க்கத்தை நீ பின்பற்றாதே. அவர்களுடைய மார்க்கத்தை நீ நேசிக்கவும் செய்யாதே. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனது மார்க்கத்திற்கும் துரோகமிழைத்து விட்டார்கள். அல்லாஹ் அவனது தூதரின் அமானிதங்களுக்கும் அவர்கள் துரோகமிழைத்து விட்டார்கள்.  அமானிதத்திற்கு துரோகம் என்றால் என்ன? என்று உனக்கு தெரியுமா? அல்லாஹ்வின் வேதத்தை நம்பி ஒப்படைக்கப்பட்ட இவர்கள் அதை திரித்து மாற்றி விட்டார்கள் என்று குறிப்பிடுகின்றார். இவ்வாறு கலீனீ அல்காஃபி என்ற நூலில் அறிவிக்கின்றார்.

பொய்:3

இது போன்று அபூபஸீர் அறிவிக்கின்ற  மற்றொர் அறிவுப்பும் வந்துள்ளது. அதையும் கலீனீயே அறிவிக்கின்றார்:

இது நமது புத்தகம். உங்களுக்கு எதிராக இது உண்மையைப் பேசுகின்றது. (அல்குர்ஆன்: 45:29)

هَذَا كِتَابُنَا يَنْطِقُ عَلَيْكُمْ بِالْحَقِّ إِنَّا كُنَّا نَسْتَنْسِخُ مَا كُنْتُمْ  تَعْمَلُونَ

“ஹாதா கிதாபுனா யன்திகு அலைக்கும் பில்ஹக்” என்று அல்லாஹ் சொல்கின்றானே என அபூ அப்திஸ்ஸலாமிடம் கேட்டேன். அதற்கு அவர், “புத்தகம் பேசவில்லை. இனியும் அது ஒரு போதும் பேசாது. ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தான் புத்தகத்தின் வாயிலாக பேசவைக்கப்படுவார்கள்” என்று சொல்லி விட்டு, “ஹாதா கிதாபுனா யுன்தகு அலைக்கும் பில்ஹக்” என ஓதினார்.

அதாவது “யன்திகு” செய்வினையாக இருக்கும் வசனத்தை “யுன்தகு” என்று செயப்பாட்டுவினையாக மாற்றி ஓதினார். நான் உங்களுக்கு அர்ப்பணமாகமட்டும். “யுன்தகு” என்று நாம் ஓதுவதில்லையே! “யன்திகு” என்று தானே ஓதுகின்றோம் என்று கேட்டேன். அதற்கு அவர் ஜிப்ரயீல் அப்படித் தான் முஹம்மது (ஸல்) அவர்கள் மீது இறக்கினார்கள். ஆனால் அது அல்லாஹ்வின் வேதத்திலிருந்து மாற்றப்பட்டுள்ளது.

(இங்கு ஒரு விளக்கத்தை புரிந்துக் கொள்ள வேண்டும். புத்தகம் என்று அல்லாஹ் குறிப்பிடுவது மறுமையில் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்படும் நன்மை தீமை அடங்கியிருக்கும் பதிவேடு. ஆனால்  ஷியாக் கூட்டம் புத்தகம் என்ற வார்த்தையை குர்ஆன் என்ற அர்த்தத்தில் பயன்படுத்துகின்றது.)

பொய்:4

“1. குர்ஆன் 2. புனித மஸ்துல் ஹராம் 3. (எனது) குடும்பம் ஆகிய மூன்றும் மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் வந்து முறையிடும். அப்போது என்னைக் கரித்து விட்டார்கள். என்னைக் கிழித்து விட்டார்கள் என்று  குர்ஆன் கூறும்”  என்று அல்லாஹ் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

இவ்வாறு சதூக் ஷீஅத் பின் பாபவைஹ் அல்கிம்மிய்யி என்பவர் தனது நூலில் அறிவிக்கின்றார்.

பொய்: 5

ஷியாக்களிடத்தில் மிகப் பெரிய குர்ஆன் விரிவுரையாளர் என்று போற்றப்படுகின்ற ஒருவரிடமிருந்து முஹ்ஸின் அல் காஷி என்ற குர்ஆன் விரிவுரையாளர் குறிப்பிடுவதாவது;  அல்லாஹ்வின் வேத்ததில் கூட்டியும் குறைத்தும் சொல்லப்பட்டிருக்காவிட்டால் நம்முடைய (தலைமைத்துவம் தொடர்பான) உரிமை அறிவுடையோருக்கு தெளிவாக தெரிந்திருக்கும்.

(அது நபித்தோழர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது) நம்மில் ஒருவர் அந்த உரிமையைக் கோரினால் அவருக்கு குர்ஆன் சான்று பகரும் என்று அபூஜஃபர் கூறுவதாக அந்த பெரிய அறிஞரின் விரிவுரையில் இடம்பெற்றிருக்கின்றது.

(இவர்கள் நபித் தோழர்கள் மீது குற்றஞ்சாட்டுவதற்கு அடிப்படைக் காரணம் ஷியாக்கள் நம்புகின்ற தலைமைத்துவம்  அமையாமல் போனது தான். அதை பொருத்தமான இடத்தில் பார்ப்போம்)

அலி (ரலி)யைக் கொல்ல உமர் (ரலி) முயற்சி?

சஹாபாக்கள்  தான் குர்ஆனில் விளையாடி விட்டார்கள் என்பது ஷியாக்களின்  பகிரங்க, பயங்கர குற்றச்சாட்டாகும். இதை தான் அபூஜஃபர் என்பவர் சொன்னதாக மேலே பார்த்தோம். இதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு இன்னொரு அபத்தம் வருகின்றது. தப்ரஸீ அறிவிக்கும் அந்த செய்தி இஹ்திஜாஜ் என்ற நூலில் இடம் பெறுகின்றது.

இது ஒட்டுமொத்த ஷியாக்களின் நம்பகத்தன்மையை பெற்ற நூலாகும். இந்த செய்தியை படிப்பவர்களுக்கு முஹாஜிர் மற்றும் அன்சாரி சஹாபாக்கள் மீது ஷியாக்கள் கொண்டிருக்கின்ற குரோத மனப்பான்மையும் விரோத விஷச் சிந்தனையும் அப்பட்டமாக விளங்கும். இப்போது அபூதர் அல்கிஃபாரி (ரலி) அறிவிப்பதாக தப்ரஸீ கூறும் புரட்டுச் செய்தியை பார்ப்போம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணித்ததும் அலீ (ரலி) குர்ஆனை தொகுக்க ஆரம்பித்தார். பிறகு அதை முஹாஜிர்கள், அன்சாரிகளிடம் கொண்டு வந்து காண்பித்தார்கள். இதற்கு காரணம் இவ்வாறு ரசூல் (ஸல்) அவர்கள் அலீ (ரலி)க்கு  அறிவுரை செய்தது தான். அதை அபூபக்ர் (ரலி) திறந்ததும்  முதல் பக்கத்திலேயே அவர்களின் கண்ணில் பட்டது  சஹாபாக்களின் கேவலமான செய்திகள் தான்.

இதைப் பார்த்த உமர் (ரலி) அவர்கள், அலீ (ரலி) மீது பாய்ந்து, “அலீயே!  இதை திரும்பக் கொண்டு போய் விடும்! இந்த குர்ஆன் எங்களுக்கு தேவையில்லை” என்றார். உடனே அதை அலீ (ரலி) எடுத்துக் கொண்டு திரும்பி விட்டார்கள்.  பிறகு சைத் பின் சாபித் வந்தார்கள். அவர், குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவர். அவரிடம், “அலீ (ரலி) நம்மிடம் ஒரு குர்ஆனைக் கொண்டு வந்தார். முஹாஜிர்கள், அன்சாரிகளின் கேவலங்கள் தான் அதில் நிறைந்து வழிகின்றன.

அதனால் நாம் முஹாஜிரிகள், அன்சாரிகள் மானங்களை வாங்குகின்ற கேவலமான செய்திகளைக் களைந்து விட்டு ஒரு குர்ஆனை தொகுக்க விரும்புகின்றோம்” உமர் (ரலி) என்று குறிப்பிட்டார்கள். அதற்கு சரி என்று பதிலளித்த சைத், “நீங்கள் கேட்ட மாதிரி நான் தொகுத்து முடித்ததும் அலீ (ரலி) ஒரு குர்ஆனை தொகுப்பார். அது நீங்கள் செய்த அந்த வேலையை எல்லாம் பாழாக்கி விடும். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். அதற்கு “வேறு என்ன தந்திரம் இருக்கின்றது?” என்று உமர் (ரலி) கேட்டார். “நீங்கள் தான் இதைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள்” என்று சைத் (ரலி) பதிலளிக்கின்றார்.

ثم قال: فإن أنا فرغت نم القرآن على ما سألتم وأظهر علي القرآن الذي ألفه أليس قد بطل كل ما عملتم؟- قال عمر: فما الحيلة؟ قال زيد: أنتم أعلم بالحليلة، فقال عمر: ما حيلة دون أن نقتله ونستريح منه، فدبر في قتله على يد خالد بن الوليد فلم يقدر على ذلك

அப்போது உமர் (ரலி), “ஆளை கொல்வதை விட வேறு என்ன தந்திரம் இருக்கின்றது” என்று சொன்னார்கள். அதனால் அவர்கள்  காலித் பின் வலீத் மூலம் அலியை கொல்லலாமா? என்று உமர் (ரலி) யோசித்தார்கள். ஆனால் அது அவர்களுக்கு முடியவில்லை.

உமர் (ரலி) ஆட்சிக்கு வந்ததும் நபித்தோழர்கள்  அலீ (ரலி)யிடம்  குர்ஆனைக் கொண்டு வந்து தங்கள் தொடர்பாக அதில் இடம் பெற்றிருக்கும் கேவலமான செய்திகளை மாற்றி விடலாம் என்று கேட்டனர்.  அலீ (ரலி)யிடம்,  “ஹசனின் தந்தையே!  அபூபக்கரிடம் ஏற்கனவே நீங்கள் கொண்டு வந்த குர்ஆனை (இப்போது)  கொண்டு வந்தால் அது தொடர்பாகப் பேசி நாம் ஒருமித்து ஒரு முடிவு எடுத்துக் கொள்வோம்” என்று உமர் (ரலி) கூறினார்கள்,

அதற்கு அலீ, “காலம் கடந்த முடிவு இது. இதற்கு இப்போது எங்களுக்கு எந்த வழியும் இல்லை. ஆதாரம் உங்களுக்கு எதிராகத் திரும்ப வேண்டும் என்பதற்காகவும் நாளை மறுமையில் இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம் என்று நீங்கள் சாக்கு போக்கு சொல்லாமல் இருப்பதற்காகவும் அல்லது (அலீயாகிய) நீங்கள் என்னிடம் இந்த குர்ஆனை  கொண்டு வரவில்லை என்று எனக்கு எதிராக சொல்லி விடக்கூடாது என்பதற்காகவும் வேண்டித் தான் நான் அந்தக் குர்ஆனை அபூப்பக்கரிடம் கொண்டு வந்தேன்.

என்னிடமுள்ள இந்தக் குர்ஆனை, தூய்மையானவர்களையும் என்னுடைய சந்ததியில் தோன்றுகின்ற வஸிய்யத் பெற்றவர்களையும் தவிர தொடமாட்டார்கள்” என்று அலீ (ரலி) பதிலளித்தார். அப்போது உமர் (ரலி), “இதை வெளியே கொண்டு வருவதற்குக் குறிப்பிடப்பட்ட நேரம் ஏதேனும் உண்டா?” என்று கேட்டார்கள். அதற்கு அலீ (ரலி), “ஆம்!  எனது சந்ததியிலிருந்து உரிமைக் கோருபவர் உரிமைக் கோரும் போது அதை அவர் வெளியிடுவார். மக்களை அதன் மீது தூண்டுவார்” என்று பதிலளித்தார்கள்.

நமது விளக்கம்  1

இதுவரை பார்த்த இந்த பொய்களின் மொத்த சாராம்சம் நபித் தோழர்கள் குர்ஆனில் தங்களுடைய கைவரிசையைக் காட்டி விட்டார்கள். நபித் தோழர்கள் குர்ஆனை திரித்து விட்டார்கள், மாற்றி விட்டார்கள். என்பது தான். இவ்வாறு சொல்லக் கூடிய இந்த ஷியா ஷைத்தான்கள் தான் பொய் 3ல் இடம் பெற்றிருக்கும் வசனத்தில் யன்திகு என்று வரக்கூடிய வார்த்தையை யுன்தகு என்று திரிக்கும்  வேலையை செய்கின்றார்கள். குர்ஆன் தலைமுறை தலைமுறையாக மாற்றத்திற்கும் திரித்தலுக்கும் உள்ளாகாமல் பாதுக்காக்கப்பட்டிருக்கின்றது. கீழ்க்கண்ட வசனம் இதை தெளிவுப்படுத்துகின்றது.

إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

(அல்குர்ஆன்: 15:9)

ஷியாக்கள் இந்த குர்ஆன் வசனத்தையே மறுக்கின்றார்கள்.

நமது விளக்கம்: 2

அலீ (ரலி) தனக்கென்று ஒரு தனிக்குர்ஆனை வைத்திருந்ததாக  ஷியாக்கள் புளுகித் தள்ளுகின்றனர்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ مُطَرِّفٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ
قُلْتُ لِعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ: هَلْ عِنْدَكُمْ كِتَابٌ؟ قَالَ: ” لاَ، إِلَّا كِتَابُ اللَّهِ، أَوْ فَهْمٌ أُعْطِيَهُ رَجُلٌ مُسْلِمٌ، أَوْ مَا فِي هَذِهِ الصَّحِيفَةِ. قَالَ: قُلْتُ: فَمَا فِي هَذِهِ الصَّحِيفَةِ؟ قَالَ: العَقْلُ، وَفَكَاكُ الأَسِيرِ، وَلاَ يُقْتَلُ مُسْلِمٌ بِكَافِرٍ “

‘உங்களிடம் (எழுதி வைக்கப்பட்ட) ஏடு ஏதாவது உள்ளதா? என்று அலீ(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, ‘(திருக்குர்ஆன் என்ற) அல்லாஹ்வின் வேதத்தையும் ஒரு முஸ்லிமான மனிதருக்கு வழங்கப்படும், விளக்கத்தையும், இந்த ஏட்டில் இருப்பவற்றையும் தவிர, வேறு ஒன்றுமில்லை’  என்று அவர் கூறினார். ‘அந்த ஏட்டில் என்னதான் இருக்கிறது?’ என்று நான் கேட்டதற்கு, ‘நஷ்ட ஈடுகளைப் பற்றியும் சிறைக்கைதிகளை விடுவிப்பது பற்றியும் (சத்தியத்தை) நிராகரிப்பவன் கொலை செய்யப்பட்டதற்காக ஒரு முஸ்லிம் கொல்லப்படக் கூடாது’ என்ற சட்டங்களும் இதிலுள்ளன’ என்று கூறினார்கள்’ என அபூ ஜுஹைஃபா (ரலி) அறிவித்தார்.

(புகாரி: 111)

இந்த ஹதீஸ் இதை மறுக்கின்றது. தனக்கென்று தனி ஞானம்  எதையும் ரசூல் (ஸல்) ஒதுக்கீடு செய்யவில்லை என்று அடித்துச் சொல்கின்றார்கள்.

நமது விளக்கம்: 3

ஸைத் இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) – அன்னார் வேத அறிவிப்பினை (வஹீயை) எழுதுவோரில் ஒருவராக இருந்தார் அவர்கள் கூறினார்.

أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ الأَنْصَارِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ – وَكَانَ مِمَّنْ يَكْتُبُ الوَحْيَ – قَالَ: أَرْسَلَ إِلَيَّ أَبُو بَكْرٍ مَقْتَلَ أَهْلِ اليَمَامَةِ وَعِنْدَهُ عُمَرُ، فَقَالَ أَبُو بَكْرٍ: إِنَّ عُمَرَ أَتَانِي، فَقَالَ: إِنَّ القَتْلَ قَدْ اسْتَحَرَّ يَوْمَ اليَمَامَةِ بِالنَّاسِ، وَإِنِّي أَخْشَى أَنْ يَسْتَحِرَّ القَتْلُ بِالقُرَّاءِ فِي المَوَاطِنِ، فَيَذْهَبَ كَثِيرٌ مِنَ القُرْآنِ إِلَّا أَنْ تَجْمَعُوهُ، وَإِنِّي لَأَرَى أَنْ تَجْمَعَ القُرْآنَ “، قَالَ أَبُو بَكْرٍ: قُلْتُ لِعُمَرَ: «كَيْفَ أَفْعَلُ شَيْئًا لَمْ يَفْعَلْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟» فَقَالَ عُمَرُ: هُوَ وَاللَّهِ خَيْرٌ، فَلَمْ يَزَلْ عُمَرُ يُرَاجِعُنِي فِيهِ حَتَّى شَرَحَ اللَّهُ لِذَلِكَ صَدْرِي، وَرَأَيْتُ الَّذِي رَأَى عُمَرُ، قَالَ زَيْدُ بْنُ ثَابِتٍ: وَعُمَرُ عِنْدَهُ جَالِسٌ لاَ يَتَكَلَّمُ، فَقَالَ أَبُو بَكْرٍ: إِنَّكَ رَجُلٌ شَابٌّ عَاقِلٌ، وَلاَ نَتَّهِمُكَ، «كُنْتَ تَكْتُبُ الوَحْيَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، فَتَتَبَّعِ القُرْآنَ فَاجْمَعْهُ، فَوَاللَّهِ لَوْ كَلَّفَنِي نَقْلَ جَبَلٍ مِنَ الجِبَالِ مَا كَانَ أَثْقَلَ عَلَيَّ مِمَّا أَمَرَنِي بِهِ مِنْ جَمْعِ القُرْآنِ، قُلْتُ: «كَيْفَ تَفْعَلاَنِ شَيْئًا لَمْ يَفْعَلْهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟» فَقَالَ أَبُو بَكْرٍ: هُوَ وَاللَّهِ خَيْرٌ، فَلَمْ أَزَلْ أُرَاجِعُهُ حَتَّى شَرَحَ اللَّهُ صَدْرِي لِلَّذِي شَرَحَ اللَّهُ لَهُ صَدْرَ أَبِي بَكْرٍ وَعُمَرَ، فَقُمْتُ فَتَتَبَّعْتُ القُرْآنَ أَجْمَعُهُ مِنَ الرِّقَاعِ وَالأَكْتَافِ، وَالعُسُبِ وَصُدُورِ الرِّجَالِ، حَتَّى وَجَدْتُ مِنْ سُورَةِ التَّوْبَةِ آيَتَيْنِ مَعَ خُزَيْمَةَ الأَنْصَارِيِّ لَمْ أَجِدْهُمَا مَعَ أَحَدٍ غَيْرِهِ، {لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ} [التوبة: 128] إِلَى آخِرِهِمَا، وَكَانَتِ الصُّحُفُ الَّتِي جُمِعَ فِيهَا القُرْآنُ عِنْدَ أَبِي بَكْرٍ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ، ثُمَّ عِنْدَ عُمَرَ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ، ثُمَّ عِنْدَ حَفْصَةَ بِنْتِ عُمَرَ تَابَعَهُ عُثْمَانُ بْنُ عُمَرَ، وَاللَّيْثُ ، عَنْ يُونُسَ، عَنْ ابْنِ شِهَابٍ، وَقَالَ اللَّيْثُ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنْ ابْنِ شِهَابٍ، وَقَالَ: مَعَ أَبِي خُزَيْمَةَ الأَنْصَارِيِّ، وَقَالَ مُوسَى: عَنْ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، مَعَ أَبِي خُزَيْمَةَ، وَتَابَعَهُ يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، وَقَالَ أَبُو ثَابِتٍ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ. وَقَالَ: مَعَ خُزَيْمَةَ أَوْ أَبِي خُزَيْمَةَ

யமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூபக்(ரலி), எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்துவரக் கூறினார்கள். (நான் சென்றேன். அங்கே) அவர்களுக்கு அருகில் உமர் இப்னு கத்தாப் (ரலி) இருந்தார்கள். அப்போது அபபக்ர்(ரலி) (என்னிடம்) கூறினார்கள்:

உமர் அவர்கள் என்னிடம் வந்து, ‘இந்த யமாமாப் போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். (இறைமறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனை நீங்கள் திரட்டினால் தவிர, அதன் பெரும் பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன்.

(எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க வேண்டுமென கருதுகிறேன்’ என்று கூறினார்கள். நான் ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன்?’ என்று உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்’ என்று கூறினார்கள்.

இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (பொறுத்தமானதாகக்) கண்டேன். (இதை அபூபக்ர் அவர்கள் என்னிடம் கூறியபோது) உமர்(ரலி) (ஏதும்) பேசாமல் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள்.

(பிறகு) அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) ‘நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும் சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக வஹீ (வேத வசனங்களை) எழுதக்கூடியவராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்’ என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது; குர்ஆனை ஒன்று திரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது.

நான், நபி(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யப்போகிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி)தான்’ என்று பதிலளித்தார்கள். இதையே நான் தொடர்ந்து (அவர்கள் இருவரிடமும்) வலியுறுத்திக் கொண்டிருந்தேன்.

முடிவில் எதற்காக அபூபக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்று திரட்ட முன்வந்தேன்.) எனவே, நான் எழுந்து சென்று (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை துண்டுக் தோல்கள், அகலமான எலும்புகள், பேரிச்சமட்டைகள் மற்றும் (குர்ஆன் வசனங்களை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகள் ஆகியவற்றிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டிபோது) ‘அத்தவ்பா’ எனும் (9வது) அத்தியாயத்தின் (கடைசி) இரண்டு வசனங்களை குஸைமா இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; இவை வேறெவரிடமிருந்தும் (எழுதப்பட்டு) கிடைக்கவில்லை.

(அவை:) ‘உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதியாயிருக்கிறான்.’

(அல்குர்ஆன்: 09:128),129)

(என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப்ப பெற்ற குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூபக்ர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்தது. பின்னர். (கலீஃபாவான) உமர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்தது. பிறகு உமர் அவர்களின் புதல்வியார் ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் இருந்தது.

(புகாரி: 4679)

குர்ஆன்  எப்படி திரட்டப்பட்டது என்பதை இந்த ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது. இதற்கு நேர்மாற்றமான செய்தியைத் தான் ஷியாக்கள் பதிவு செய்கின்றனர். இவர்கள் பொய் சொல்வதற்கு அஞ்சாதவர்கள். எதை வேண்டுமானாலும் செய்யக் கூடிய அநியாயக்காரர்கள்.

நமது விளக்கம்: 4

எல்லாவற்றிற்கும் மேலாக அலீயைக் கொல்வதற்கு உமர் (ரலி) முயற்சித்தார்கள். கொலை செய்யத் தூண்டினார் என்று ஆதாரமின்றி சொல்வதை ஒரு போதும் எந்த ஒரு முஸ்லிமும் ஏற்க துணிய மாட்டான். இது ஷியாக்களின் உச்சபட்ச வெறித்தனமும் விஷமத்தனமும்  ஆகும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடம் இருக்க முடியாது.

அல்லாஹ்வின் மீதும் அவனது திருத்தூதரின் மீதும் அவர்கள் சொல்லாததை இட்டுக் கட்ட துணிந்த ஷியாக்கள், உமர் (ரலி) மீது இப்படிப்பட்ட அபாண்டத்தையும் அபத்தத்தையும் இட்டுக் கட்டுவதற்குத் தயங்குவார்களா?