குர்ஆன் கூறும் விவாகரத்துச் சட்டம்
குர்ஆன் கூறும் விவாகரத்துச் சட்டம்
திருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம் என்ன? என்பதை நம் முன்னோர்கள் அறிந்திருந்தால் முத்தலாக் என்ற மூடத்தனத்திற்கு முட்டுக்கொடுத்திருக்க வேண்டியதில்லை.
- ஒரு கணவனுக்கு மனைவியைப் பிடிக்காவிட்டால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தலாக் கூற முடியாது.
- பல கட்டங்களைக் கடந்து தான் தலாக் எனும் முடிவுக்கு வர வேண்டும்.
- பிடிக்கவில்லை என்றவுடன் தலாக் கூறாமல் அறிவுரைகள் சொல்ல வேண்டும்.
- விவாகரத்து முடிவை எடுத்தால் அதனால் ஏற்படும் பாதகங்களை மனைவிக்குப் புரியவைக்கும் வகையில் அறிவுரை கூற வேண்டும்.
- இந்த அறிவுரைகள் பயனளிக்காத போது இருவரும் படுக்கையில் இருந்து விலகிப் பார்க்க வேண்டும்.
- இப்படி சில நாட்கள் மனைவியுடன் சேராமல் இருக்கும் போது அவனுக்கு மனைவியின் குறைகள் மட்டுமின்றி அவளது அருமையும் தெரிய வரும். அதுபோல் கணவனைப் பிரிந்தால் அது எத்தகையதாக இருக்கும் என்பது மனைவிக்கும் தெரிய வரும்.
- இதனால் தன்னிடம் தவறு இருந்தால் அவளும் திருத்திக் கொள்வாள். அவனிடம் தவறு இருந்தால் அவனும் திருத்திக் கொள்வான்.
- தலாக் கூறும் முடிவு இதனால் மாறக்கூடிய வாய்ப்பு உண்டு.
- தலாக் என்ற நிலைக்குப் போய்விடக் கூடாது என்பதற்காக மனைவியிடம் பெரிய குறைகள் இருந்தால் லேசாக அடித்துத் திருத்தியாவது தலாக் கூறும் முடிவுக்குச் செல்லாமல் இஸ்லாம் தடுக்கப் பார்க்கிறது.
- இதன் பின்னரும் இணக்கம் ஏற்படா விட்டால் உடனே தலாக் கூற முடியாது.
- ஜமாஅத்துக்கு அவன் பிரச்சனையைக் கொண்டு வந்தவுடன் அவனது குடும்பத்தில் இருந்து பக்குவமாக அணுகும் ஒருவரையும், அவளது குடும்பத்தில் இருந்து பக்குவமாக அணுகும் ஒருவரையும் ஜமாஅத்தார் நியமித்து அவர்கள் வழியாக சமரசம் செய்யும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இது திருக்குர்ஆனில் தெளிவான வார்த்தைகளால் சொல்லப்பட்டுள்ளது. அந்த வசனங்களைப் பாருங்கள்!
பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை (லேசாக) அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.
அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.
நடுவர்களை ஏற்படுத்துங்கள் என்று கூறப்படுவதால் ஆண்கள் சுயமாக தலாக் கூற முடியாது. மூன்றாம் தரப்பான ஜமாஅத் தலையீடு இதில் இருப்பது அவசியம் என்பதை இதிலிருந்து அறியலாம்.
இந்த நான்கு நடவடிக்கைகளாலும் இணக்கம் ஏற்படவில்லையானால் அவர்கள் இணைந்து வாழ்வதில் அர்த்தமேயில்லை! இந்நிலையில் வேறு வழி ஏதுமின்றி தலாக்கை இஸ்லாம் அனுமதிக்கிறது.
மூன்று வாய்ப்புகள்
தலாக் கூறிட ஆண்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திய பின் அவர்கள் திரும்பவும் சேர்ந்து வாழலாம். மூன்றாவது வாய்ப்பையும் பயன்படுத்தி விட்டால் அவர்கள் சேர்ந்து வாழ முடியாது. இதுதான் திருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டமாகும்.
ஒருவன் தன் மனைவியை ஒரு தடவை தலாக் கூறுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பெண்ணுக்கு மூன்று மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையாவதற்குள் இருவரும் சேர்ந்து கொள்ளலாம். (ஏறத்தாழ இரண்டரை முதல் மூன்று மாதங்கள் இதற்கு ஆகலாம்)
ஒருவன் தன் மனைவியை ஒரு தடவை தலாக் கூறும் போது, மனைவி மாதவிடாய் நின்று போன பருவத்தில் இருந்தால் மூன்று மாதங்களுக்குள் அவர்கள் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம். இதற்கு எந்தச் சடங்கும் கிடையாது.
இது குறித்துத் திருக்குர்ஆனில் மிகத் தெளிவாக, சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் கூறப்பட்டுள்ளது. அவ்வசனங்களைக் கீழே காண்க!
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் இதற்குள் (இந்தக் காலகட்டத்துக்குள்) அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள்.
இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டுவிடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை.
அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் (மஹரிலிருந்து) ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள்.
(இரண்டு தடவை விவாகரத்துச் செய்து சேர்ந்து கொண்ட பின் மூன்றாவது தடவையாக) அவளை அவன் விவாகரத்துச் செய்தால் அவள் வேறு கணவனை மணம் செய்யாத வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாகரத்துச் செய்து, (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அறிகின்ற சமுதாயத்திற்கு அவன் இதைத் தெளிவுபடுத்துகிறான்.
(திருக்குர்ஆன:2:230.)
முதல் தடவை தலாக் கூறியவுடன் திருமண உறவு அடியோடு முறிந்து விடுவதில்லை; மாறாக மனைவியின் பிரிவை உணர்ந்து மீண்டும் சேரும் வாய்ப்பு இருக்கிறது என்பதை இவ்வசனங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
மேற்கூறப்பட்ட காலக் கெடுவுக்குள் இருவரும் சேர்ந்து கொள்ளாவிட்டால் அதன் பிறகு சேரவே முடியாதா என்றால் அதுவும் இல்லை. பத்து வருடங்கள் கழித்து இருவரும் சேர்ந்து வாழ விரும்பினாலும் சேர வழியுண்டு. அதாவது இருவரும் மீண்டும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்வது தான் அந்த வழி.
இவ்வாறு சேர்ந்து வாழும் போது மீண்டும் அவர்களிடையே பிணக்கு ஏற்பட்டு, வாழ்வைத் தொடர இயலாத நிலை ஏற்பட்டால் இரண்டாவது தலாக்கைக் கூறலாம். தலாக் கூறும் இரண்டாவது வாய்ப்பைப் பயன்படுத்தினால் அப்போதும் திருமண உறவு அடியோடு முறிந்து விடுவதில்லை; மாறாக மனைவியின் பிரிவை உணர்ந்து மீண்டும் சேரும் வாய்ப்பு இருக்கிறது.
முதல் வாய்ப்பைப் பயன்படுத்திய பின் சேர்ந்து கொண்டது போன்று அந்தக் கெடுவுக்குள் திரும்ப அழைத்துக் கொள்ளலாம்; அல்லது கெடு முடிந்த பிறகு அவள் சம்மதித்தால் மீண்டும் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம்; அல்லது அப்படியே விட்டு விடலாம். இதையும் மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்களில் இருந்து அறியலாம்.
இப்படி தலாக் கூறிய பின் உடனே மனைவியை அவளது தாய் வீட்டுக்கு அனுப்பக் கூடாது. மாறாக மூன்று மாத காலம் கணவன் வீட்டில் தான் அவள் இருக்க வேண்டும். இருவரும் எப்படியாவது சேர்ந்து கொள்ளமாட்டார்களா என்று கருணை கொண்டு அல்லாஹ் இந்தக் கட்டளையைப் பிறப்பிக்கிறான்
நபியே! பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பகிரங்கமான வெட்கக்கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்! அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர் தமக்கே தீங்கிழைத்துக் கொண்டார். இதன் பிறகு அல்லாஹ் ஒரு கட்டளை பிறப்பிக்கக் கூடும் என்பதை நீர் அறிய மாட்டீர்.
(திருக்குர்ஆன்:65:)
இருவரும் எப்படியாவது சேர்ந்து வாழ வேண்டும் என்ற அல்லாஹ்வின் கருணை இதில் வெளிப்படுகிறது.
முஸ்லிமல்லாத மக்கள் செய்து கொள்ளும் விவாகரத்தினால் அவர்கள் முழுமையாகப் பிரிந்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது. ஆனால் திருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம் தற்காலிக விவாகரத்தாக இரு வாய்ப்புகளை வழங்கி அவர்கள் எப்படியாவது சேர்ந்து கொள்ள வேண்டும் என்று அக்கறை செலுத்துகிறது.
உலகில் உள்ள எந்த நாட்டின் விவாகரத்துச் சட்டங்களையும் விட இஸ்லாத்தின் விவாகரத்துச் சட்டம் பன்மடங்கு சிறந்து விளங்குகிறது.
எஸ்.எம்.எஸ். மூலம், தபால் மூலம், போன் மூலம், வாட்சப் மூலம் தலாக் சொல்வதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. இது இஸ்லாத்தை அறியாத மூடர்களின் செயலாகும். ஏனெனில் விவாகரத்துச் செய்வதாக இருந்தாலும், பின்னர் சேர்ந்து கொள்வதாக இருந்தாலும் இரு சாட்சிகள் முன்னிலையில் தான் சொல்ல வேண்டும்.
இது பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
அவர்கள் தமக்குரிய தவணையை அடையும்போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலைநாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.
(அல்குர்ஆன்: 65:2) ➚.)
சாட்சிகள் என்றால் தலாக் கூறுவதற்கும், சேர்வதற்கும் மட்டும் சாட்சிகள் என்று கருதக் கூடாது. மாறாக முன்னர் நாம் எடுத்துக் காட்டிய எல்லா வழிமுறைகளையும் அந்த ஆண் கடைபிடித்துள்ளானா? என்பதையெல்லாம் அறிந்தவன் தான் சாட்சி சொல்ல வேண்டும். அநீதியாக சாட்சி கூற இஸ்லாத்தில் தடை உள்ளது. எல்லா முயற்சிகளையும் கடைப்பிடித்து விட்டு இறுதியாகத் தான் இந்த முடிவுக்கு வந்துள்ளான் என்பதை அறியாத ஒருவன் தலாக்குக்கு சாட்சியாக இருக்கக் கூடாது.
இரண்டு முறை தலாக் கூறி சேர்ந்து வாழும்போது மீண்டும் தலாக் கூறும் முடிவுக்கு ஒருவன் வந்தால் அதுதான் கடைசி வாய்ப்பு என்பதால் அதைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, அவனது மனம் எளிதில் ஒப்பாத, அவனால் ஜீரணிக்க இயலாத, மிகக் கடுமையான நிபந்தனையை இஸ்லாம் விதித்துள்ளது. அந்த நிபந்தனையை அறிந்த எந்தக் கணவனும் இந்தக் கடைசி வாய்ப்பைப் பயன்படுத்தத் தயங்குவான்.
அவளை அவன் விவாகரத்துச் செய்து விட்டால் அவள் வேறு கணவனை மணம் செய்யாத வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாகரத்துச் செய்து, (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அறிகின்ற சமுதாயத்திற்கு அவன் இதைத் தெளிவுபடுத்துகிறான்.
விவாகரத்துச் செய்த பின்னர் மீண்டும் சேர்வதற்கான வாசலை உலகில் எந்தச் சட்டமும் இந்த அளவுக்கு விசாலமாகத் திறந்து வைக்கவில்லை. எல்லா நாடுகளிலும் எல்லா மதத்தினரும் விவாகரத்துச் செய்கின்றனர். அந்தச் சட்டங்களை விடப் பெண்களுக்கு அதிக நன்மைகள், இஸ்லாம் கூறும் தலாக் சட்டத்தில் தான் உள்ளது. இந்த நேரத்தில் முத்தலாக் என்பதற்கும் மூன்று தலாக் என்பதற்கும் உள்ள வேறுபாட்டையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
முத்தலாக்கா? மூன்று தலாக்கா?
தலாக் கூறுவதற்கு இஸ்லாம் மூன்று வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இதை அறியாத சில முஸ்லிம்கள் ஒரே சமயத்தில் தலாக், தலாக், தலாக் என்று கூறுகின்றனர். அல்லது முத்தலாக் என்று கூறுகின்றனர். இப்படிக் கூறிவிட்டதால் மூன்று தலாக்கும் முடிந்து விட்டது என்றும், இனிமேல் மனைவியுடன் சேர வழியில்லை என்றும் கருதுகின்றனர். மார்க்க அறிவு குறைந்த மதகுருமார்கள் சிலரும் இப்படி மார்க்கத் தீர்ப்பு வழங்கி நிரந்தரமாகப் பிரித்து விடுகின்றனர்.
இது இஸ்லாம் அனுமதிக்காத வழக்கமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இப்படி சிலர் சொன்ன போது அது ஒரு தலாக் என்றே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
ஒரே அமர்வில் மூன்று தலாக் என்று ஒருவன் கூறினாலும் முப்பது தலாக் என்று கூறினாலும் அவன் ஒரு சந்தர்ப்பத்தைத் தான் பயன்படுத்தியுள்ளான். குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அவன் அவளுடன் சேரலாம். காலம் கடந்து விட்டால் மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம். இதன் பிறகு மேலும் இரண்டு தடவை விவாகரத்துக் கூறும் உரிமை அவனுக்கு உள்ளது.
மூன்று தலாக் இஸ்லாத்தில் உள்ளது. முத்தலாக் இஸ்லாத்தில் இல்லை என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். திருக்குர்ஆன் சொல்லும் தலாக் சட்டத்தை விருப்பு வெறுப்பின்றி சிந்திக்கும் எவரும் இதை பெண்களுக்குப் பாதகமாகக் கருதமாட்டார்கள்.மாறாக, பாதுகாப்பாகவே கருதுவார்கள்.
ஒரு குடும்பத்தின் பாதுகாப்புக்காகவே இந்தச் சட்டங்களை இறைவன் அருளியுள்ளான். இப்படிப்பட்ட உன்னதமான சட்டத்தை உள்ளடக்கிய இறைவேதத்தை இந்தச் சமுதாயம் புறக்கணித்ததன் விளைவுதான் இத்தகைய விபரீதங்களுக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: இந்த வேததின் மூலம் எத்தனையோ சமுதாயத்தை அல்லாஹ் உயர்த்தியுள்ளான். இவ்வேதத்(தை கைவிட்ட)தின் மூலம் எத்தனையோ சமுதாயத்தை இழிவுபடுத்தியுள்ளான்
அறிவிப்பவர்: உமர் (ரலி)
அல்லாஹ்வின் வேதத்தில் சொல்லப்பட்ட அறிவுரைகளைப் படித்து, அதன் வழி நடந்தால் நாம் கண்ணியத்துடன் வாழ இயலும். அந்த இறைவனின் வேதத்தைக் கண்டும் காணாமல் விட்டால் இழிவதான் நிகழும்.