குர்ஆனை தூய்மையின்றி தெடாலாமா? ஓதலாமா?

முக்கிய குறிப்புகள்: முக்கிய ஆய்வுகள்

குர்ஆனை தூய்மையின்றி தெடாலாமா? ஓதலாமா?

உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்ட வந்த உலகப் பொதுமறை திருக்குர்ஆன் என்று இறைவன் அக்குர்ஆனிலேயே பல இடங்களில் தெளிவு படுத்தியுள்ளான். மறுமை வெற்றி திருக்குர்ஆன் வழியில் நடந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பதை அறிவுள்ள எவரும் அறிவர்.

இந்த உண்மையை முஸ்லிம் சமுதாயத்தினரும் உணர்ந்துள்ளனர். திருக்குர்ஆனைப் பற்றிப் பேசும் போது இந்த உண்மையை வெளிப்படுத்துவர். ஆனால் மார்க்கச் சட்டங்கள் என்ற பெயரில் திருக்குர்ஆனிலிருந்து மக்களை அந்நியப்படுத்தும் பல மார்க்கத்திற்கு முரணான சட்டங்களை உருவாக்கி வைத்துள்ளனர்.

திருக்குர்ஆனைத் தொடுவதற்கு உளூ அவசியம்! குளிப்பு கடமையானவர்கள், மாதவிடாய் ஏற்பட்டவர்கள், இஸ்லாத்தை ஏற்காதவர்கள் போன்றோர் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது; தொடுவது ஹராம் என்று கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, திருக்குர்ஆனின் பக்கம் மக்கள் செல்வதைத் தடுத்து வருகின்றனர்.

முஸ்லிமல்லாத ஒருவர், திருக்குர்ஆனை ஆராய்ந்து படித்துப் பார்த்தாரேயானால் கண்டிப்பாக அவர் இஸ்லாத்தைத் தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்வார். அந்த அளவுக்குத் திருக்குர்ஆன் எளிமையாகவும், மக்களுக்கு நேர்வழி காட்டும் வகையிலும் அருளப்பட்டுள்ளது.

ஆனால், திருக்குர்ஆனை முஸ்லிமல்லாதவர்கள் தொடக்கூடாது என்ற, மார்க்கம் கூறாத நிபந்தனையை இவர்கள் தேவையில்லாமல் திணித்ததால் அந்த மக்கள் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு அது தடையாக அமைந்து விட்டது.

இவ்வாறு தடுப்பதற்கு இஸ்லாத்தின் மூல ஆதாரங்களான திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் ஆதாரம் உள்ளதா? என்று வினவினால் அதற்கு சில ஆதாரங்களை எடுத்துரைக்கின்றனர். இந்த ஆதாரங்களின் தரம் என்ன? இவற்றை ஏற்கலாமா? என்பதைக் காண்போம்.

திருக்குர்ஆனை உளூவின்றி தொடக் கூடாது என்பதற்கு, திருக்குர்ஆனிலிருந்தே ஒரு சான்றை எடுத்து வைக்கின்றனர்.

தூய்மையான(வான)வர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தீண்ட மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 56:79).)

உளூவின்றி திருக்குர்ஆனைத் தொடக்கூடாது என்பதற்கு வலுவான ஆதாரமாக இந்த வசனத்தை எடுத்து வைக்கின்றனர். பல திருக்குர்ஆன் பிரதிகளின் அட்டை முகப்பிலும் இவ்வசனம் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகின்றது.

இந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள், ஆம்! திருக்குர்ஆனை உளூவின்றி, தூய்மையின்றி தொடக்கூடாது என்று தான் முடிவு செய்வார்கள். ஆனால் இந்த வசனத்தின் முந்தைய வசனங்களையும் இது எப்போது இறங்கியது என்பதையும் திருக்குர்ஆன், நபி (ஸல்) அவர்களுக்கு எவ்வாறு இறக்கப்பட்டது என்பதையும் விளங்கினால் இவர்களின் கருத்து முற்றிலும் தவறானது என்பதை விளங்கலாம்.

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள ‘தூய்மை யானவர்கள்’ என்றால் யார்? தொடமாட்டார்கள் என்றால் எதை? என்பதை முதலில் காண்போம்.

நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. ஒலி வடிவில் தான் அருளப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்கள் மனதில் பதிவு செய்து கொள்வார்கள் என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.

(முஹம்மதே!) காகிதத்தில் எழுதப்பட்ட வேதத்தை உமக்கு நாம் அருளியிருந்து அதைத் தம் கைகளால் தொட்டுப் பார்த்தாலும். “இது வெளிப்படையான சூனியத்தைத் தவிர வேறு இல்லை’’ என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறியிருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 6:7).)

“எழுத்து வடிவில் தந்திருந்தாலும் இவர்கள் ஏற்க மாட்டார்கள்’ என்று கூறப்படுவதில் “எழுத்து வடிவில் அருளப்படவில்லை’ என்ற கருத்து அடங்கியுள்ளதை அறியலாம். திருக்குர்ஆன் எழுத்து வடிவில் இறக்கப்படவில்லை எனும் போது தொடுதல் என்ற கேள்வியே எழாது.

தொடும் விதத்தில் திருக்குர்ஆன் இறக்கப் பட்டிருந்தால் மட்டும் தான் ‘இந்தக் குர்ஆனை தூய்மையானவர்களைத் தவிர யாரும் தொட மாட்டார்கள்’ என்று கூற முடியும்.

இந்த அடிப்படையில் (56:79) வசனத்தில் கூறப்பட்ட தொடுதல் என்பது நமது கையில் உள்ள குர்ஆனைக் குறிக்காது என்பதை விளங்கலாம். மேலும் இக்கருத்தை வலுவூட்டும் வகையில் முந்தைய வசனங்கள் அமைந்துள்ளன.

இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும். தூய்மையான(வான)வர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தீண்ட மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 56:77-79)

(56:79) வசனத்தின் முந்தைய இரண்டு வசனங்களை நீங்கள் படிக்கும் போது ஓர் பேருண்மை உங்களுக்கு விளங்கும்.

‘இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கின்ற மதிப்பு மிக்க திருக்குர்ஆன்’ என்று கூறுகின்றான். அடுத்த வசனத்தில் ‘தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள்’ என்று கூறுகின்றான்.

இப்போது ‘அதை’ என்ற சொல் நம் கையில் இருக்கும் திருக்குர்ஆனைப் பற்றிப் பேசவில்லை. பாதுகாக்கப் பட்ட ஏட்டில் (லவ்ஹுல் மஹ்ஃபூலில்) உள்ள திருக்குர்ஆனைப் பற்றித் தான் பேசுகின்றது என்ற பேருண்மை தெளிவாகின்றது.

இக்கருத்தை மேலும் வலுவூட்டும் வகையில் திருக்குர்ஆனின் 80ம் அத்தியாயம் 11-16 வசனங்களில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அமைந்துள்ளன.

அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை. விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார். இது தூய்மைப்படுத்தப்பட்டு உயர்வாக்கப்பட்ட மதிப்பு மிக்க ஏடுகளில் உள்ளது. மரியாதைக்குரிய நல்லோர்களான எழுத்தர்களின் (வானவர்களின்) கைகளில் உள்ளது.

(அல்குர்ஆன்: 80:11-16)

இவ்வசனமும் திருக்குர்ஆனின் மூலப் பிரதி எங்குள்ளது என்பதைப் பற்றிப் பேசுகின்றது. இவ்வசனங்களிலும் 56:79 வசனத்தில் கூறப் பட்டதைப் போன்றே கூறப்பட்டிருந்தாலும் 56:79 வசனத்தை விட கூடுதல் தெளிவுடனும் விளக்கத்துடனும் காணப்படுகின்றது.

‘தூய்மையானவர்கள்’ என்று 56:79 வசனத்தில் கூறப்பட்டுள்ளவர்கள் யார்? என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது. அவர்கள் வானவர்கள் தாம் என்பது இவ்வசனத்திலிருந்து அறிய முடிகின்றது.

‘தூய்மையானவர்கள்’ என்பது வானவர்களையும், ‘குர்ஆன்’ என்பது வானத்தில் உள்ள குர்ஆனையும் தான் குறிக்கும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

“அதைத் தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) தொட மாட்டார்கள்’’ என்ற வசனத்தில் கூறப்பட்டுள்ள தொடுதல் என்பது வானத்தில் உள்ள வேதமாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிடுகின்றார்கள்.

(நூல்: தஃப்ஸீர் தப்ரீ, பாகம்: 27, பக்கம்: 205)

தூய்மையான(வான)வர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தீண்ட மாட்டார்கள். அதாவது வானவர்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.

(நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர்,

பாகம்: 4, பக்கம்: 299)

நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இந்தக் குர்ஆன் ஷைத்தான்கள் கொண்டு வந்தது என்று இணை வைப்பவர்கள் குற்றம் சாட்டிய போது, இக்குர்ஆன் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்ற) பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கின்றது. இதைத் தூய்மையான வானவர்களைத் தவிர மற்றவர்கள் தொட முடியாது. அவ்வாறிருக்க ஷைத்தான் எவ்வாறு கொண்டு வர முடியும்? என்று அல்லாஹ் கேட்பது போல் இந்த வசனம் அமைந்துள்ளது.

மேற்கூறப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் ஒன்றிணைத்துப் பார்க்கும் போது, 56:79 வசனத்தில் கூறப்பட்ட ‘தூய்மையானவர்கள்’ என்பது வானவர்கள் என்பதும், ‘அதை’ என்று கூறப்பட்டுள்ளது, வானத்தில் பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள குர்ஆன் என்பதும் ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகின்றது. எனவே 56:79 வசனத்தை வைத்துக் கொண்டு, தூய்மையான நிலையில் தான் குர்ஆனைத் தொட வேண்டும் என்று வாதிட முடியாது.

திருக்குர்ஆனை தூய்மையின்றி தொடலாம் என்பதற்குத் திருக்குர்ஆனுடைய பல வசனங்கள் சான்றாகத் திகழ்கின்றன. இவ்வேதம் யாருக்காக அருளப்பட்டது? அதன் நோக்கம் என்ன என்பதை அறிந்தால் கூட திருக்குர்ஆனைத் தூய்மையின்றி தொடக் கூடாது என்று கூற மாட்டார்கள்.

மனிதர்களே! உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும், உள்ளங்களில் உள்ளதற்கு நோய் நிவாரணமும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும், அருளும் வந்து விட்டன. 

(அல்குர்ஆன்: 10:57)

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.

(அல்குர்ஆன்: 2:185)

இவை போன்ற இன்னும் ஏராளமான வசனங்கள் மனித சமுதாயம் அனைவருக்கும் இந்தத் திருக்குர்ஆன் நேர்வழிகாட்டியாகத் திகழ்கின்றது என்பதைக் கூறுகின்றன. அல்லாஹ்வை ஏற்காதவன், இணை வைப்பவன் என்று எல்லா தரப்பு மக்களுக்கும் இக்குர்ஆன் நேர்வழி காட்டும் என்று கூறும் போது உளூச் செய்யாமல் இதைத் தொடக் கூடாது என்றால் அவர்கள் எவ்வாறு இக்குர்ஆனைப் படிப்பார்கள்? எப்படித் திருந்துவார்கள்?

இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கி உள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?

(அல்குர்ஆன்: 54:17), 22, 32, 40)

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். 

(அல்குர்ஆன்: 4:82)

அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?

(அல்குர்ஆன்: 47:24)

இக்குர்ஆனை அனைவரும் எடுத்துப் படிக்க வேண்டும் என்பதற்காகத் தான் மிக எளிமையாக ஆக்கி வைத்துள்ளான். மேலும் இதை நன்றாக ஆய்வு செய்து பார்க்குமாறும் இதில் முரண்பாடுகள் உள்ளனவா? என்றும் மனித சமுதாயம் அனைவரிடமும் அல்லாஹ் கேட்கின்றான்.

மனித இனம் அனைவரும் இதைப் படிக்க வேண்டும் என்று இவ்வளவு தெளிவாக அல்லாஹ் கூறிய பிறகும் குர்ஆனைத் தொட உளூ அவசியம் என்று கூறி மாற்று மதத்தவர் மற்றும் ஆய்வு செய்ய எண்ணுபவர்களைத் தடை செய்வது இறைக் கட்டளையை மறுப்பதாக ஆகாதா?

நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் வசனங்களை மாற்று மதத்தவர்களுக்கு எழுதி அனுப்பியுள்ளார்கள் என்பதற்கும் சான்றுகள் உள்ளன.

“வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!’’ என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் “நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!’’ எனக் கூறி விடுங்கள்! என்ற 3:64 வசனத்தை ரோமாபுரி மன்னர் ஹெர்குலிசுக்கு நபி (ஸல்) அவர்கள் எழுதியுள்ளார்கள்.

(பார்க்க: புகாரி எண் 7 மற்றும் 4553)

மாற்று மதத்தவர்களும் இவ்வசனங்களைப் படித்துத் திருந்த வேண்டும் என்பதற்காகத் தான் நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் வசனத்தை எழுதி அனுப்பினார்கள். தூய்மையற்றவர்கள் தொடக் கூடாது, ஓதக் கூடாது என்றிருக்குமானால் நபி (ஸல்) அவர்கள் ஹெர்குலிஸ் மன்னருக்கு எழுதி அனுப்பியிருக்க மாட்டார்கள்.

நாம் மேற்கூறிய திருக்குர்ஆன் வசனங்கள், நபிமொழிகள் இவற்றைப் பார்க்கும் போது திருக்குர்ஆனை எவரும் எந்நிலையிலும் தொடலாம் என்பது மிகத் தெளிவாக விளங்கும். ஆனால் தூய்மையின்றி திருக்குர்ஆ