கண்ணீர் சிந்தி அழுவோம்!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

முன்னுரை

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!  இஸ்லாம் எனும் பாக்கியத்தை நமக்கு வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்களாக நாமெல்லாம் இங்கே அமர்ந்திருக்கிறோம். சிரிப்பது மட்டுமே உடலுக்கு மனித குலத்திற்கு நல்லது என்று எண்ணி அதிகமான மக்கள் எப்போது பார்த்தாலும், சிரித்துக் கொண்டே இருப்பதை பார்க்கிறோம். சிரிப்பதற்கென்றே சில நாடுகளில் அமைப்புகள் உள்ளன. சிரிப்பு யோகா கூட உள்ளது.  உலக சிரிப்பு தினம் (World Laughter Day) முதன்முதலாக 1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் நாள் மதன் கட்டாரியா என்பவரால் சிரிப்பு தினம் தொடங்கப்பட்டது. அவர் இதை சிரிப்பு யோகாவாகவே அறிமுகப்படுத்தினார். இன்று 65 நாடுகளில் 6000 சிரிப்பு கிளப்புகள் நடந்து வருகின்றன. இதை வலியுறுத்தியே இத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

சிரிப்பு உடலுக்கு நன்மையை தந்தாலும், நாம் செய்யும் தவறுகளிலிருந்து திருந்துவதற்கு உரிய வழியை அது ஏற்படுத்தித் தருவதில்லை. தவறை நினைத்து கவலைப்படுவதும், அழுவதும் மாத்திரமே அதற்குரிய சரியான தீர்வு. உலகில் யாரும் யாரும் கவலைப் படுவதைப் பற்றி, கண்ணீர் விட்டு அழுவதைப் பற்றி எவருமே போதனை செய்வதில்லை. இஸ்லாமிய மார்க்கம் நன்மையான விஷயங்களுக்காக கவலைப் படுவதை பற்றியும், அழுவதைப் பற்றியும், அதற்கு உள்ள சிறப்பையும் சொல்லித் தருகிறது. அவற்றை வரிசையாக காண்போம்.

குர்ஆனை செவியேற்று அழுதல்
 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ مِنْ ذُرِّيَّةِ اٰدَمَ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ وَّمِنْ ذُرِّيَّةِ اِبْرٰهِيْمَ وَاِسْرَآءِيْلَ وَمِمَّنْ هَدَيْنَا وَاجْتَبَيْنَا‌ ؕ اِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُ الرَّحْمٰنِ خَرُّوْا سُجَّدًا وَّبُكِيًّا

அவர்கள் ஆதமுடைய வழித் தோன்றல்களிலும், நூஹுடன் நாம் கப்பலில் ஏற்றியவர்களிலும், இப்ராஹீம், இஸ்ராயீல் ஆகியோரின் வழித் தோன்றல்களிலும் நாம் நேர்வழி காட்டித் தேர்ந்தெடுத்த நபிமார்களாவர். அவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்தான். அவர்களிடம் அளவற்ற அருளாளனின் வசனங்கள் கூறப்பட்டால் அழுது, ஸஜ்தாவில் விழுவார்கள்.

(அல்குர்ஆன்: 19:58)

இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். ”எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை சான்று கூறுவோருடன் பதிவு செய்வாயாக!” என அவர்கள் கூறுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆன் வசனங்களை கேட்டு அழுதுள்ளார்கள்.

عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ قَالَ
قَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم اقْرَأْ عَلَيَّ قُلْتُ آقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ قَالَ فَإِنِّي أُحِبُّ أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي فَقَرَأْتُ عَلَيْهِ سُورَةَ النِّسَاءِ حَتَّى بَلَغْتُ {فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلاَءِ شَهِيدًا} قَالَ أَمْسِكْ فَإِذَا عَيْنَاهُ تَذْرِفَانِ

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம் எனக்கு (குர்ஆனை) ஓதிக்காட்டுங்கள் என்று சொன்னார்கள். நான் தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருக்க தங்களுக்கே நான் ஓதிக்காட்டுவதா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஏனெனில் நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன் என்று சொன்னார்கள்.

ஆகவே நான் அவர்களுக்கு அந்நிஸா அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும் (நபியே) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும் போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும் எனும் (அல்குர்ஆன்: 4:41) வது வசனத்தை நான் அடைந்தபோது நபி (ஸல்) அவர்கள் நிறுத்துங்கள் என்று சொன்னார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்துகொண்டிருந்தன.

நூல் : (புகாரி: 4582) 

«أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ يُصَلِّي وَلِجَوْفِهِ أَزِيزٌ كَأَزِيزِ الْمِرْجَلِ»

நான் நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்தேன். சட்டி கொதிப்பதைப் போன்ற சப்தம் அவர்களுடைய நெஞ்சிலிருந்து வந்துகொண்டிருந்த நிலையில் அவர்கள் தொழுதுகொண்டிருந்தார்கள். அதாவது அழுதுகொண்டிருந்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஷகீர்,
நூல் : (நஸாயீ: 1214) (1199)

நபி (ஸல்) அவர்கள் இறந்த போது உமர் (ரலி) அவர்கள் உட்பட பெரும்பாலான நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்கள் இன்னும் இறக்கவில்லை என்றே நினைத்தார்கள். துக்கம் தலைக்கு ஏறும் போது சரியான முடிவை பெரும்பாலானவர்கள் எடுக்கமாட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் மரண விசயத்தில் மக்களெல்லாம் தடுமாறிய நேரத்தில் அபூபக்கர் (ரலி) அவர்கள் எந்த விதமான சலனத்திற்கும் ஆளாகாமல் கொள்கையில் உறுதியாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று மக்களுக்கு புரிய வைத்தார்கள்.

இவ்வளவு உறுதியும் மனவலிமையும் கொண்ட அபூபக்கர் (ரலி) அவர்கள் குர்ஆர் வசனங்களை கேட்கும் போது கடுமையாக அழுபவர்களாக இருந்தார்கள். தங்களுடைய மனைவிமார்கள் மற்றும் குழந்தைகளை அபூபக்கரின் அழுகை இஸ்லாத்திற்கு மதம்மாறச் செய்துவிடுமோ என்று அபூபக்கர் (ரலி) அவர்களின் அழுகையை கண்ட இணைவைப்பாளர்கள் பயந்தார்கள்.

أَنَّ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ
… وَقَالُوا لاِبْنِ الدَّغِنَةِ مُرْ أَبَا بَكْرٍ فَلْيَعْبُدْ رَبَّهُ فِي دَارِهِ فَلْيُصَلِّ وَلْيَقْرَأْ مَا شَاءَ ، وَلاَ يُؤْذِينَا بِذَلِكَ ، وَلاَ يَسْتَعْلِنْ بِهِ فَإِنَّا قَدْ خَشِينَا أَنْ يَفْتِنَ أَبْنَاءَنَا وَنِسَاءَنَا قَالَ ذَلِكَ ابْنُ الدَّغِنَةِ لأَبِي بَكْرٍ فَطَفِقَ أَبُو بَكْرٍ يَعْبُدُ رَبَّهُ فِي دَارِهِ ، وَلاَ يَسْتَعْلِنُ بِالصَّلاَةِ ، وَلاَ الْقِرَاءَةِ فِي غَيْرِ دَارِهِ ثُمَّ بَدَا لأَبِي بَكْرٍ فَابْتَنَى مَسْجِدًا بِفِنَاءِ دَارِهِ وَبَرَزَ فَكَانَ يُصَلِّي فِيهِ وَيَقْرَأُ الْقُرْآنَ فَيَتَقَصَّفُ عَلَيْهِ نِسَاءُ الْمُشْرِكِينَ وَأَبْنَاؤُهُمْ يَعْجَبُونَ وَيَنْظُرُونَ إِلَيْهِ ، وَكَانَ أَبُو بَكْرٍ رَجُلاً بَكَّاءً لاَ يَمْلِكُ دَمْعَهُ حِينَ يَقْرَأُ الْقُرْآنَ فَأَفْزَعَ ذَلِكَ أَشْرَافَ قُرَيْشٍ مِنَ الْمُشْرِكِينَ…

மக்கத்து குரைஷிகள் இப்னு தகினாவிடம் தமது வீட்டில் தமது இறைவனைத் தொழுது வருமாறும் விரும்பியதை ஓதுமாறும் அதனால் எங்களுக்குத் தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்ளுமாறும் அதை பகிரங்கமாகச் செய்யாதிருக்கும் படியும் அபூபக்கருக்கு நீர் கூறுவீராக. ஏனெனில் அவர் எங்களது மனைவி மக்களை குழப்பி (சோதனைக்குள்ளாக்கி) விடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம் என்றனர்.

இதை இப்னு தகினா அபூபக்கர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தார். பிறகு அபூபக்கர் (ரலி) அவர்கள் வீட்டிற்கு வெளியே தொழுது ஓதி பகிரங்கப்படுத்தாமல் தம் வீட்டிற்குள்ளேயே தம் இறைவனை வணங்கலானார்கள். பிறகு அவர்களுக்கு ஏதோ தோன்ற தமது வீட்டிற்கு முன்புறத்திலுள்ள காலியிடத்தில் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டி வெளியே வந்(து தொழு)தார்கள். அந்தப் பள்ளிவாசலில் தொழவும் குர்ஆன் ஓதவும் தொடங்கினார்கள்.

இணைவைப்பவர்களின் மனைவிமக்கள் திரண்டு வந்து ஆச்சரியத்துடன் அவரை கவனிக்கலானார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் குர்ஆன் ஓதும் போது (மனம் உருகி வெளிப்படும்) தமது கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுபவராக இருந்தார்கள். இணைவைப்பவர்களான குரைஷிப் பிரமுகர்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்தியது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : (புகாரி: 2297) 

குர்ஆனைக் கேட்டு அழுத கிருஸ்துவ அபீசீனிய மன்னர்

நஜ்ஜாஷீ என்ற அபிசீனிய நாட்டு மன்னர் கிருஸ்துவராக இருந்தார். அவருடைய அவையில் பல கிருஸ்துவ பாதரியார்களும் இருந்தார்கள். நபித்தோழர்கள் அவர்களிடத்தில் குர்ஆனைப் படித்துக்காட்டிய போது தாடி நினைகின்ற அளவிற்கு அம்மன்னர் அழுததாக வரலாறு கூறுகிறது.

عَنْ أُمِّ سَلَمَةَ ابْنَةِ أَبِي أُمَيَّةَ بْنِ الْمُغِيرَةِ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ
فَقَالَ لَهُ النَّجَاشِيُّ: هَلْ مَعَكَ مِمَّا جَاءَ بِهِ عَنِ اللَّهِ مِنْ شَيْءٍ؟ قَالَتْ: فَقَالَ لَهُ جَعْفَرٌ: نَعَمْ. فَقَالَ لَهُ النَّجَاشِيُّ: فَاقْرَأْهُ عَلَيَّ. فَقَرَأَ عَلَيْهِ صَدْرًا مِنْ كهيعص. قَالَتْ: فَبَكَى وَاللَّهِ النَّجَاشِيُّ حَتَّى أَخْضَلَ لِحْيَتَهُ، وَبَكَتْ أَسَاقِفَتُهُ حَتَّى أَخْضَلُوا مَصَاحِفَهُمْ حِينَ سَمِعُوا مَا تَلَا عَلَيْهِمْ، ثُمَّ قَالَ النَّجَاشِيُّ: إِنَّ هَذَا وَالَّذِي جَاءَ بِهِ مُوسَى

நஜ்ஜாஷீ மன்னர், ஜஃபர் (ரலி) அவர்களிடத்தில் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்திலிருந்து கொண்டு வந்த ஏதாவது செய்தி உன்னிடம் உள்ளதா? என்று கேட்டார். அதற்கு ஜஃபர் (ரலி) அவர்கள் ஆம் என்றார்கள். அதை எனக்கு ஓதிக்காட்டுங்கள் என்று நஜ்ஜாஷீ கூறினார். ஜஃபர் (ரலி) அவர்கள் கஃப் ஹா யா அய்ன் ஸாத் என்ற அத்தியாயத்தின் ஆரம்பத்தை ஓதிக்காட்டினார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நஜ்ஜாஷீ தன்னுடைய தாடி நனைகின்ற அழவிற்கு அழுதார். ஜஃபர் (ரலி) அவர்கள் ஓதிக்காட்டியதை கேட்டபோது அவருடைய பாதரிமார்களும் ஏடுகள் நனைகின்ற அளவிற்கு அழுதார்கள். பின்பு நஜ்ஜாஷீ கூறினார் இதுவும் (குர்ஆனும்) மூஸா கொண்டு வந்த வேதமும் ஒரே அடிப்படையைக் கொண்டதாக உள்ளது.

அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி)
நூல் : (அஹ்மத்: 22498)   

இறை பயத்தால் கண்ணீர் வடித்தல்
 اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِيَتْ عَلَيْهِمْ اٰيٰتُهٗ زَادَتْهُمْ اِيْمَانًا وَّعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ

நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 8:2)

اَلَمْ يَاْنِ لِلَّذِيْنَ اٰمَنُوْۤا اَنْ تَخْشَعَ قُلُوْبُهُمْ لِذِكْرِ اللّٰهِ وَمَا نَزَلَ مِنَ الْحَـقِّۙ وَلَا يَكُوْنُوْا كَالَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ الْاَمَدُ فَقَسَتْ قُلُوْبُهُمْ‌ؕ وَكَثِيْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவாலும், (இறைவனிடமிருந்து) இறங்கிய உண்மையினாலும் பணியும் நேரம் அவர்களுக்கு வரவில்லையா? (அதற்கு) முன்னர் வேதங்கள் கொடுக்கப்பட்டோரைப் போல் அவர்கள் ஆகாமல் இருப்பதற்கும் நேரம் வரவில்லையா? காலம் நீண்டு விட்டதால் அவர்களின் உள்ளங்கள் இறுகி விட்டன. அவர்களில் அதிமானோர் குற்றவாளிகள்.
(அல்குர்ஆன்: 57:16)

மறுமை நாளில் அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலைத் தவிர வேறெந்த நிழலும் இருக்காது. சூரியன் தலைக்கு அருகில் கொண்டுவரப்படும். இந்த உலகத்தில் வாழும் போது அல்லாஹ்வை நினைத்து இரண்டு சொட்டு கண்ணீர் வடித்திருந்தால் கொளுத்தும் அந்த வெயிலில் அல்லாஹ்வின் சிம்மாசனத்திற்கு கீழே நிழல் பெற ஒதுங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். அல்லாஹ்வை நினைத்து அழுததின் மதிப்பும் மகத்துவமும் அந்த இக்கட்டான நாளில் தான் புரியவரும்.

 عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ الإِمَامُ الْعَادِلُ وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ وَرَجُلٌ تَصَدَّقَ أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தமது நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கின்றான். அவர்கள் நீதியை நிலைநாட்டும் தலைவர், அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டில் ஊரிய இளைஞர், பள்ளிவாசல்களுடன் தமது உள்ளத்தை தொடர்புபடுத்திக்கொண்ட ஒரு மனிதர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகின்ற இரு நண்பர்கள், உயர் அந்தஸ்த்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்கு தம்மை அழைக்கின்ற போது நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன் என்று சொல்லும் மனிதர், தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர் தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 660)

இறைவனுடைய பயத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள், இடங்களைக் கண்டால் கேளிக்கைகளில் ஈடுபடக்கூடாது. இந்த இடங்களுக்கு பயந்து நடுங்கியவர்களாக செல்ல வேண்டும்.

 عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ
لاََ تَدْخُلُوا عَلَى هَؤُلاَءِ الْمُعَذَّبِينَ إِلاَّ أَنْ تَكُونُوا بَاكِينَ فَإِنْ لَمْ تَكُونُوا بَاكِينَ فَلاَ تَدْخُلُوا عَلَيْهِمْ لاَ يُصِيبُكُمْ مَا أَصَابَهُمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைவனால் தண்டிக்கப்பட்ட இந்த (ஸமூத் கூட்டத்தினரின்) இடத்திற்கு அழுதவர்களாகவேத் தவிர நீங்கள் செல்ல வேண்டாம். நீங்கள் அழுதவர்களாக இல்லையென்றால் அவ்விடத்திற்குச் செல்லாதீர்கள். அவர்களுக்கு ஏற்பட்டது உங்களுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : (புகாரி: 433)

மரண பயத்தை ஏற்படுத்துவதற்காக மண்ணறைகளுக்கு நாம் சென்று வர வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு போதிக்கிறது. உஸ்மான் (ரலி) அவர்கள் மண்ணறைக்குச் சென்றால் கப்ரில் வழங்கப்படும் தண்டனைகளை நினைத்து அழுவார்கள்.

 حَدَّثَنِى عَبْدُ اللَّهِ بْنُ بَحِيرٍ أَنَّهُ سَمِعَ هَانِئًا مَوْلَى عُثْمَانَ قَالَ
كَانَ عُثْمَانُ إِذَا وَقَفَ عَلَى قَبْرٍ بَكَى حَتَّى يَبُلَّ لِحْيَتَهُ فَقِيلَ لَهُ تُذْكَرُ الْجَنَّةُ وَالنَّارُ فَلاَ تَبْكِى وَتَبْكِى مِنْ هَذَا فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « إِنَّ الْقَبْرَ أَوَّلُ مَنَازِلِ الآخِرَةِ فَإِنْ نَجَا مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ ». قَالَ وَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَا رَأَيْتُ مَنْظَرًا قَطُّ إِلاَّ وَالْقَبْرُ أَفْظَعُ مِنْهُ »

உஸ்மான் (ரலி) அவர்கள் மண்ணறைக்குச் சென்றால் தனது தாடி நினைகின்ற அளவிற்கு அழுவார்கள். சொர்க்கம் நரகத்தைப் பற்றி சொல்லப்படும் போது நீங்கள் அழுவதில்லை. ஆனால் இதற்காக (மண்ணறைக்கு வந்தால்) அழுகிறீர்களே என்று அவர்களிடத்தில் கேட்கப்பட்டது. அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மண்ணறை என்பது மறுமையில் நிலைகளில் முதல் நிலையாகும். இதில் அடியான் தப்பித்துவிட்டால் இதற்குப் பின்பு உள்ள (நிலை) இதை விட இலகுவாக இருக்கும். இதில் அவன் வெற்றிபெறவில்லையானால் இதற்குப் பிறகுள்ள (நிலை) இதை விட கடுமையாக இருக்கும். மண்ணறைகளில் (நடக்கும்) காட்சியை விட மோசமான எந்த ஒரு காட்சியையும் நான் பார்க்கவில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஹானிஃ
நூல் : (திர்மிதீ: 2308) (2230)

பிறர் சிரமப்படும் போது கவலைப்படுதல்
.. فَلَمَّا كَانَ مِنَ الْغَدِ جِئْتُ فَإِذَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- وَأَبُو بَكْرٍ قَاعِدَيْنِ يَبْكِيَانِ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِى مِنْ أَىِّ شَىْءٍ تَبْكِى أَنْتَ وَصَاحِبُكَ فَإِنْ وَجَدْتُ بُكَاءً بَكَيْتُ وَإِنْ لَمْ أَجِدْ بُكَاءً تَبَاكَيْتُ لِبُكَائِكُمَا…

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்கர் (ரலி) அவர்களும் அமா்ந்து அழுதுகொண்டிருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே நீங்களும் உங்களுடைய தோழரும் ஏன் அழுகிறீர்கள்? உங்கள் அழுகைக்கான காரணத்தை அறிந்தால் நானும் அழுவேன். அழுகை வராவிட்டாலும் உங்கள் இருவரது அழுகையைக் கண்டு அழுவது போன்றாவது இருப்பேன் என்று கூறினேன்.

நூல் : (முஸ்லிம்: 3621) 

நல்லகாரியம் தவறியதற்காக அழுகுதல்

நபித்தோழர்கள் தம்மால் நற்செயலை செய்ய முடியாமல் போகும் போது கண்ணீர்விட்டு அழுபவர்களாக இருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்பிய நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தங்களுக்கு வாகன வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களிடத்தில் வாகன வசதி இல்லாத காரணத்தினால் வாகனம் இல்லை என்று கூறிவிட்டார்கள். இதனால் அவர்களிடத்தில் வந்த நபித்தோழர்கள் அழுதுகொண்டு திரும்பிச் சென்றார்கள். இதை அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்.

وَّلَا عَلَى الَّذِيْنَ اِذَا مَاۤ اَتَوْكَ لِتَحْمِلَهُمْ قُلْتَ لَاۤ اَجِدُ مَاۤ اَحْمِلُكُمْ عَلَيْهِ تَوَلَّوْا وَّاَعْيُنُهُمْ تَفِيْضُ مِنَ الدَّمْعِ حَزَنًا اَلَّا يَجِدُوْا مَا يُنْفِقُوْنَؕ

(முஹம்மதே!) வாகனம் கேட்டு உம்மிடம் வந்தோரிடம் ”உங்களை ஏற்றி அனுப்புவதற்குரியது (வாகனம்) என்னிடம் இல்லை” என்று நீர் கூறிய போது, (நல்வழியில்) செலவிடுவதற்கு ஏதுமில்லை என்ற கவலையால் கண்கள் கண்ணீர் வடிக்கும் நிலையில் திரும்பிச் சென்றோர் மீதும் குற்றம் இல்லை.

(அல்குர்ஆன்: 9:92)

ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ் செய்வதற்காக புறப்பட்ட போது அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிடுகிறது. நாம் ஹஜ் செய்வதற்கு மாதவிடாய் தடையாய் அமைந்துவிட்டதோ என்று நினைத்து அழுதார்கள்.

سَمِعْتُ عَائِشَةَ تَقُولُ
خَرَجْنَا لاَ نَرَى إِلاَّ الْحَجَّ فَلَمَّا كُنَّا بِسَرِفَ حِضْتُ فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَأَنَا أَبْكِي ، قَالَ : مَا لَكِ أَنُفِسْتِ قُلْتُ نَعَمْ قَالَ إِنَّ هَذَا أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ فَاقْضِي مَا يَقْضِي الْحَاجُّ غَيْرَ أَنْ لاَ تَطُوفِي بِالْبَيْتِ قَالَتْ وَضَحَّى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَنْ نِسَائِهِ بِالْبَقَرِ

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஹஜ் செய்வதற்காக (மதீனாவிலிருந்து) புறப்பட்டுச் சென்றோம். (மக்காவை அடுத்துள்ள) ஸரிஃப் என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுதுகொண்டிருந்த என்னைப் பார்த்து உனக்கு என்ன மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? என்று வினவினார்கள். நான், “ஆம்” என்று சொன்னேன். இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்கள் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஃபதுல்லாவை தவாஃப் செய்வதைத் தவிர ஹாஜிகள் செய்யும் மற்ற எல்லாக்காரியங்களையும் நீ செய்து கொள்! என்று சொல்லிவிட்டு நபி (ஸல்) அவர்கள் தங்கள் மனைவியருக்காக மாட்டைக் குர்பானி கொடுத்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : (புகாரி: 294) 

உம்மு அய்மன் என்ற நபித்தோழியரின் கவலை

நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் வரை அல்லாஹ்வின் புறத்திலிருந்து உபதேசங்கள் வஹியின் மூலமாக வந்துகொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்கள் இறந்த பின்பு வஹீ வரும் வாசல் அடைக்கப்பட்டுவிட்டது என்பதை நினைத்து உம்மு அய்மன் அழுதார்.

عَنْ أَنَسٍ قَالَ
قَالَ أَبُو بَكْرٍ رضى الله عنه بَعْدَ وَفَاةِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- لِعُمَرَ انْطَلِقْ بِنَا إِلَى أُمِّ أَيْمَنَ نَزُورُهَا كَمَا كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَزُورُهَا. فَلَمَّا انْتَهَيْنَا إِلَيْهَا بَكَتْ فَقَالاَ لَهَا مَا يُبْكِيكِ مَا عِنْدَ اللَّهِ خَيْرٌ لِرَسُولِهِ -صلى الله عليه وسلم-. فَقَالَتْ مَا أَبْكِى أَنْ لاَ أَكُونَ أَعْلَمُ أَنَّ مَا عِنْدَ اللَّهِ خَيْرٌ لِرَسُولِهِ -صلى الله عليه وسلم- وَلَكِنْ أَبْكِى أَنَّ الْوَحْىَ قَدِ انْقَطَعَ مِنَ السَّمَاءِ. فَهَيَّجَتْهُمَا عَلَى الْبُكَاءِ فَجَعَلاَ يَبْكِيَانِ مَعَهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்ததற்குப் பின்னால் அபூபக்கர் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களிடத்தில் என்னை உம்மு அய்மன் (ரலி) அவர்களிடத்தில் அழைத்துச் செல்லுங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு அய்மன் (ரலி) அவர்களை சந்திக்கச் சென்றதைப் போல் நாமும் அவர்களை சந்திக்கச் செல்வோம். நாங்கள் உம்மு அய்மன் (ரலி) அவர்களிடத்தில் வந்த போது அவர்கள் அழுதுவிட்டார்கள். அபூபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகிய இருவரும் உம்மு அய்மன் (ரலி) அவர்களிடத்தில் ஏன் அழுகிறீர்கள்? அல்லாஹ்விடத்தில் உள்ளவை நபி (ஸல்) அவர்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்று கூறினார்கள்.

அதற்கு அவர்கள், அல்லாஹ்விடத்தில் உள்ளது தான் அல்லாஹ்வின் தூதருக்கு சிறந்ததாக இருக்கும் என்பது எனக்குத் தெரியாமல் நான் அழவில்லை. மாறாக இறைச் செய்தி வானத்திலிருந்து (வருவது) முடிவுற்றுவிட்டது என்பதால் தான் அழுகிறேன். உம்மு அய்மன் (ரலி) அவர்கள் அபூபக்கரையும் உமரையும் அழவைத்துவிட்டார்கள். உம்மு அய்மன் (ரலி) அவர்களுடன் அவர்களும் சேர்ந்து அழ ஆரம்பித்துவிட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : (முஸ்லிம்: 4849) (4492)

 أَخْبَرَنِى أَبُو الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ
لَبِسَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- يَوْمًا قَبَاءً مِنْ دِيبَاجٍ أُهْدِىَ لَهُ ثُمَّ أَوْشَكَ أَنْ نَزَعَهُ فَأَرْسَلَ بِهِ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ فَقِيلَ لَهُ قَدْ أَوْشَكَ مَا نَزَعْتَهُ يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ « نَهَانِى عَنْهُ جِبْرِيلُ ». فَجَاءَهُ عُمَرُ يَبْكِى فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَرِهْتَ أَمْرًا وَأَعْطَيْتَنِيهِ فَمَا لِى قَالَ « إِنِّى لَمْ أُعْطِكَهُ لِتَلْبَسَهُ إِنَّمَا أَعْطَيْتُكَهُ تَبِيعُهُ ». فَبَاعَهُ بِأَلْفَىْ دِرْهَمٍ

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் தமக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட அலங்காரப்பட்டு நீளங்கி ஒன்றை அணிந்தார்கள். பின்னர் விரைவாக அதைக் கழற்றி உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். அப்போது அவர்களிடம் ஏன் விரைவாக அதைக் கழற்றிவிட்டீர்கள் அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அதை அணிய வேண்டாம் என ஜிப்ரீல் என்னைத் தடுத்துவிட்டார் என்று பதிலளித்தார்கள்.

பிறகு உமர் (ரலி) அவர்கள் அழுதுகொண்டே வந்து அல்லாஹ்வின் தூதரே தாங்கள் வெறுத்த ஒன்றை எனக்குக் கொடுத்துள்ளீர்களே? எனக்கு மட்டும் என்னவாம்? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதை நீங்கள் அணிந்துகொள்வதற்காக உங்களுக்கு இதை நான் தரவில்லை. இதை நீங்கள் விற்று (க் காசாக்கி)க் கொள்வதற்காகவே உங்களுக்கு வழங்கினேன் என்று சொன்னார்கள். எனவே அதை உமர் (ரலி) அவர்கள் இரண்டாயிரம் திர்ஹங்களுக்கு விற்றுவிட்டார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 4207) 

நபி (ஸல்) அவர்களிடத்தில் இருக்கும் போது ஒரு விதமாகவும் வீட்டிற்குச் சென்றால் இன்னொரு விதமாகவும் நடந்துகொள்வது நயவஞ்சகத்தனம் என்று சிலர் கருதினார்கள். ஆகையால் தூய்மையான இறைநம்பிக்கையாளர்களாக அவர்கள் இருந்தும் கூட தங்களை நயவஞ்சகர்கள் என்று சொல்லிக்கொண்டு கவலையுடன் நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்தார்கள். தனது மார்க்கத்தின் மீது எல்லையில்லா அக்கரை இவர்களுக்கு இருந்த காரணத்தினால் தான் இவர்களுக்கு இந்தக் கவலை ஏற்பட்டது.

ஹன்ளலா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்கர் (ரலி) அவர்கள் என்னை சந்தித்து ஹன்ளலாவே நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு நான் ஹன்ளலா நயவஞ்சகராக ஆகிவிட்டார் என்று கூறினேன். அதற்கு அவர்கள் அல்லாஹ் தூய்மையானவன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு நான், நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் இருக்கும் போது அவர்கள் நமக்கு சொர்க்கத்தையும் நரகத்தையும் நினைவூட்டுகிறார்கள். எந்த அளவிற்கென்றால் கண்கூடாக (அவற்றை) நாம் காண்வதைப் போல் (மார்க்க சிந்தனையில் இருக்கிறோம்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து பிரிந்து வந்துவிட்டால் மனைவிமார்களுடனும் குழந்தைகளுடனும் விளையாடுகிறோம். வியாபாரம் போன்ற காரியங்களில் ஈடுபடுகிறோம். அதிகமான (மார்க்க) விசயங்களை மறந்துவிடுகிறோம் என்று கூறினேன்.

அபூபக்கர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாமும் இப்படித் தான் இருக்கிறோம் என்று கூறினார்கள். ஆகையால் நானும் அபூபக்கர் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தோம். நான் அல்லாஹ்வின் தூதரே ஹன்ளலா நயவஞ்சகனாகிவிட்டான் என்று கூறினேன். அதற்கு அவர்கள் என்ன ஆயிற்று? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் எங்களுக்கு சொர்க்கத்தையும் நரகத்தையும் நினைவூட்டும் போது கண்கூடாக (சொர்க்கம் நரகத்தை) காணுவதைப் போன்ற நிலையில் உங்களிடத்தில் இருக்கிறோம். ஆனால் உங்களிடமிருந்து பிரிந்து சென்றுவிட்டால் மனைவிமக்களுடன் விளையாட ஆரம்பித்துவிடுகிறோம். வியாபாரம் போன்ற காரியங்களில் ஈடுபடுகிறோம். அதிகமான (மார்க்க) விசயங்களை மறந்துவிடுகிறோம் என்று கூறினேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக என்னிடத்தில் நீங்கள் இருப்பதைப் போன்றும் இறைதியானத்திலும் நீங்கள் எப்போது திளைத்திருந்தால் வானவர்கள் (போட்டி போட்டுக்கொண்டு) நீங்கள் உறங்கச் செல்லும் இடங்களிலும் செல்லும் வழிகளிலும் உங்களிடத்தில் கை கொடுப்பார்கள். எனவே ஹன்ளலாவே சிறிது நேரம் (மார்க்க விசயங்களில் கவனத்தைச் செலுத்துங்கள்) சிறிது நேரம் (மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக இருங்கள்) என்று மூன்று முறை கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஹன்ளலா (ரலி)
நூல் : (முஸ்லிம்: 5305) (4937)

நபித்தோழர்கள் தங்களது சொந்த ஊரான மக்காவை இஸ்லாத்திற்காக துறந்துவிட்டு மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்தார்கள். இறைவனுக்காக அவர்கள் இந்த தியாகத்தை செய்தார்கள். பின்பு மக்கா வெற்றி கொள்ளப்பட்டது. என்றாலும் மறுபடியும் மக்காவை சொந்த ஊராக ஆக்கிக்கொள்ளக் கூடாது என்ற சட்டம் இவர்களுக்குப் போடப்பட்டது.

மக்காவைத் துறந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்த தியாகிகளில் சஃத் (ரலி) அவர்களும் ஒருவர். அவர்கள் மக்காவில் கடுமையான நோய்க்குள்ளாகி மரண தருவாயில் இருந்தார்கள். இந்த நிலையில் பயணம் செய்து சொந்த ஊராக ஆக்கிக்கொண்ட மதீனாவிற்கும் இவர்களால் செல்ல முடியவில்லை. மக்காவிலே தங்கி இறந்துவிட்டால் நாம் செய்த ஹிஜ்ரத் என்ற தியாகத்தை இறைவன் ஏற்றுக்கொள்ளமாட்டானோ என்ற கவலை அவர்களுக்கு மேலோங்கியது.

பிறந்த மண்ணில் இறப்பதற்குத் அதிகமானோர் ஆசைப்படுவார்கள். ஆனால் சஃத் (ரலி) அவர்கள் பிறந்த ஊர் மக்காவாக இருந்த போதிலும் மதீனாவில் மரணிக்க வேண்டும் என்று தான் விரும்பினார்கள். மரண நேரத்தில் தான் செய்த நற்காரியம் அழிந்துவிடக்கூடாது என்ற எண்ணித்தில் அவர்கள் புழுவாய் துடிதுடித்துக்கொண்டிருந்தார்கள்.

நாம் செய்கின்ற நல்லறங்கள் மிகவும் குறைவாக இருக்கின்றன. இந்தக் குறைவான நல்லறங்களை அழிக்கும், தீயகாரியங்களை நிறைவாக செய்துகொண்டிருக்கிறோம். ஆவலுடன் சிரமத்துடன் சமைக்கப்பட்ட உணவு மண்ணில் கொட்டிவிட்டால் எவ்வளவு கவலை ஏற்படுமோ அது போன்ற கவலை சஃத் (ரலி) அவர்களுக்கு ஏற்பட்டதைப் போல் நமக்கும் ஏற்பட்டால் வெற்றி நிச்சயம்.

أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- دَخَلَ عَلَى سَعْدٍ يَعُودُهُ بِمَكَّةَ فَبَكَى قَالَ « مَا يُبْكِيكَ ». فَقَالَ قَدْ خَشِيتُ أَنْ أَمُوتَ بِالأَرْضِ الَّتِى هَاجَرْتُ مِنْهَا كَمَا مَاتَ سَعْدُ ابْنُ خَوْلَةَ. فَقَالَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- « اللَّهُمَّ اشْفِ سَعْدًا اللَّهُمَّ اشْفِ سَعْدًا ». ثَلاَثَ مِرَارٍ.

சஃத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் (உடல் நலிவுற்றிருந்த) என்னை நலம் விசாரிப்பதற்காக என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுதேன். நபி (ஸல்) அவர்கள் ஏன் அழுகிறீர்கள்? என்று கேட்டார்கள். நான் சஃத் பின் கவ்லா இறந்ததைப் போன்று நாடு துறந்து சென்ற, இந்த மண்ணிலேயே (மக்காவிலேயே) இறந்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன் என்று நான் சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இறைவா சஃதுக்கு குணமளிப்பாயாக சஃதுக்கு குணமளிப்பாயாக என மூன்று முறை பிரார்த்தித்தார்கள்.

நூல் : (முஸ்லிம்: 3352) 

நபிவழி அடிப்படையில் மக்களுடைய தொழுகை இல்லாதிருப்பதை கண்டு அனஸ் (ரலி) அவர்கள் அழுதார்கள். இன்றைக்கு எங்கு திரும்பினாலும் நபிவழிக்கு மாற்றமான காரியங்கள் தலைதூக்குவதை கண்கூடாக பார்க்கலாம். அனஸ் (ரலி) அவர்களுக்கு ஏற்பட்ட கவலை நமக்கு வந்தால் இஸ்லாம் மின்னல் வேகத்தில் பரவத்தொடங்கி அசத்தியம் காணல் நீராகிவிடும்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் டமாஸ்கஸ் நகரிலிருக்கும் போது நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் அழுதுகொண்டிருந்தார்கள். ஏன் அழுகிறீர்கள்? என்று நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் கண்டவைகளில் இந்தத் தொழுகையைத் தவிர வேறெதனையும் என்னால் (இன்றைய சமூகத்தில்) காண முடியவில்லை. அந்தத் தொழுகையும் கூட பாழ்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது என அனஸ் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸுஹ்ரீ
நூல் : (புகாரி: 530) 

குடும்பத்தார்களின் நேர்வழிக்காக கவலைப்படுதல்

மறுமை வாழ்க்கையைப் பற்றிய நிலை நபி (ஸல்) அவர்களுக்கு ஆழமாகவும் உறுதியாகவும் தெரிந்த காரணத்தினால் இறந்துவிட்ட தன் தாயின் நிலை குறித்து அழுதார்கள்.

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ
زَارَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- قَبْرَ أُمِّهِ فَبَكَى وَأَبْكَى مَنْ حَوْلَهُ فَقَالَ « اسْتَأْذَنْتُ رَبِّى فِى أَنْ أَسْتَغْفِرَ لَهَا فَلَمْ يُؤْذَنْ لِى وَاسْتَأْذَنْتُهُ فِى أَنْ أَزُورَ قَبْرَهَا فَأُذِنَ لِى فَزُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُ الْمَوْتَ

நபி (ஸல்) அவர்கள் தன் தாயின் மண்ணறைக்குச் சென்றார்கள். தானும் அழுது தன்னை சுற்றி இருந்தவர்களையும் அழவைத்துவிட்டார்கள். அப்போது அவர்கள் என் தாய்க்காக பாவமன்னிப்புத் தேடுவதற்கு என் இறைவனிடம் அனுமதி வேண்டினேன். அவன் எனக்கு அனுமதி தரவில்லை. என் தாயின் மண்ணறைக்குச் சென்றுவர அவனிடத்தில் அனுமதி கேட்டபோது எனக்கு அனுமதியளித்தான். மண்ணறைகளைக்குச் செல்லுங்கள். ஏனென்றால் அவைகள் மரணத்தை ஞாபகமூட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி)
நூல் : (முஸ்லிம்: 1777) 

நாமும் நமது உறவினர்களும் நேர்வழி பெறுவதை விட சிறந்த பாக்கியம் ஒன்றுமில்லை என்ற நம்பிக்கை அபூஹுரைரா (ரலி) அவர்களிடத்தில் மேலோங்கியிருந்தது. எனவே இணைவைத்துக் கொண்டிருந்த தன் தாய் இஸ்லாத்தைத் தழுவிபோது ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனது தாய் இணைவைப்பவராக இருக்கும் போது அவரை இஸ்லாத்திற்கு வருமாறு அழைத்துக்கொண்டே இருந்தேன். ஒரு நாள் அவர்களை இஸ்லாத்திற்கு வருமாறு அழைப்பு விடும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி நான் வெறுக்கக்கூடிய (மோசமான வார்த்தையை) கூறிவிட்டார். எனவே நான் அழுதுகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் வந்தேன். நான் அவர்களிடத்தில் அல்லாஹ்வின் தூதரே எனது தாயாரை இஸ்லாத்திற்கு வருமாறு அழைத்துக் கொண்டே இருந்தேன். ஆனால் அவர் வர மறுத்தார். இன்று நான் அவரை (இஸ்லாத்திற்கு வருமாறு) அழைத்தபோது நான் வெறுக்கக்கூடிய ஒன்றை உங்களைப் பற்றி அவர் கூறிவிட்டார். எனவே அபூஹுரைராவின் தாயாருக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டுமாறு பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறினேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இறைவா அபூஹுரைராவின் தாயாருக்கு நேர்வழிகாட்டு என்று பிரார்த்தித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனையால் மகிழ்ச்சியடைந்தவனாக (அவர்களிடமிருந்து வீட்டிற்கு) நான் வந்தேன். அப்போது வாசல் அடைக்கப்பட்டிருந்ததை கண்டேன். என் கால் சப்தத்தை என் தாய் கேட்டுவிட்டார். அபூஹுரைராவே நீ அங்கேயே நில் என்று சொன்னார். தண்ணீர் சப்தத்தை நான் கேட்டேன். என் தாய் குளித்துவிட்டு ஆடையை அணிந்துவிட்டு விரைவாக முக்காடு போட்டுக்கொண்டார். நான் கதவைத் திறந்தேன்.

அப்போது அவர் அபூஹுரைராவே வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் இல்லை, முஹம்மத் அல்லாஹ்வின் தூதராகவும் அவனது அடியாராகவும் இருக்கிறார் என்று ஒப்புக்கொள்கிறேன் என்று கூறினார். சந்தோஷத்தினால் அழுதவனாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் நான் வந்தேன். (அவர்களிடத்தில்) நான் அல்லாஹ்வின் தூதரே சந்தோஷப்படுங்கள் திட்டமாக அல்லாஹ் உங்கள் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான். அபூஹுரைராவின் தாயாருக்கு நேர்வழிகாட்டிவிட்டான் என்று கூறினேன்.

அப்போது அவர்கள் அல்லாஹ்வை புகழ்ந்து துதித்துவிட்டு நல்லது என்று கூறினார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே இறைநம்பிக்கையாளர்களாக விளங்கும் அல்லாஹ்வின் அடியார்களுக்கு நானும் எனது தாயும் விருப்பமானவர்களாக இருப்பதற்கும் எனக்கும் என் தாய்க்கும் அவர்கள் விருப்பமானவர்களாக இருப்பதற்கும் அல்லாஹ்விடத்தில் பிரார்ததனை செய்யுங்கள் என்று கூறினேன். எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவா உனது இந்த அடிமையையும் அதாவது அபூஹுரைராவையும் அவரது தாயாரையும் இறைநம்பிக்கையுள்ள உனது அடியார்களுக்கு விருப்பமானவர்களாக ஆக்குவாயாக! இறைநம்பிக்கையாளர்களை இவர்களுக்கு விருப்பமானவர்களாக ஆக்குவாயாக என்று பிரார்த்தித்தார்கள். (நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனையின் விளைவாக) என்னைப் பற்றி கேள்விப்பட்டு என்னைப் பார்த்த எந்த இறைநம்பிக்கையாளரும் என்னை விரும்பாமல் இருந்ததில்லை.

நூல் : (முஸ்லிம்: 4904) (1289)

حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ
أَنَّ أُمَّ الرُّبَيِّعِ بِنْتَ الْبَرَاءِ وَهْيَ أُمُّ حَارِثَةَ بْنِ سُرَاقَةَ أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا نَبِيَّ اللهِ أَلاَ تُحَدِّثُنِي عَنْ حَارِثَةَ ، وَكَانَ قُتِلَ يَوْمَ بَدْرٍ أَصَابَهُ سَهْمٌ غَرْبٌ فَإِنْ كَانَ فِي الْجَنَّةِ صَبَرْتُ وَإِنْ كَانَ غَيْرَ ذَلِكَ اجْتَهَدْتُ عَلَيْهِ فِي الْبُكَاءِ قَالَ يَا أُمَّ حَارِثَةَ إِنَّهَا جِنَانٌ فِي الْجَنَّةِ وَإِنَّ ابْنَكِ أَصَابَ الْفِرْدَوْسَ الأَعْلَى

ஹாரிஸா பின் சுராகா (ரலி) அவர்களின் தாயாரான உம்மு ருபைய்யிஉ பின்த்து பராஉ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! ஹாரிஸாவைப்பற்றி எனக்கு தாங்கள் செய்தி அறிவிக்கமாட்டீர்களா? அவர் பத்ரு போரன்று கொல்லப்பட்டிருந்தார். அவர் மீது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று பாய்ந்து விட்டிருந்தது. அவர் சொர்க்கத்தில் இருந்தால் நான் பொறுமையை மேற்கொள்வேன். அவர் வேறெந்த (துன்ப) நிலையிலாவது இருந்தால் அவருக்காக நான் கடுமையாக அழுவேன் என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஹாரிஸாவின் தாயே! சொர்க்கத்தில் பல (படித்தரங்கள் கொண்ட) தோட்டங்கள் உள்ளன. உன் மகன் (அவற்றில்) மிக உயர்ந்த ஃபிர்தவ்ஸ் என்னும் சொர்க்கத் (தோட்டத்)தை (தன் உயிர் தியாகத்திற்கான பிரதிபலனாகப்) பெற்றுக்கொண்டார் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல்: (புகாரி: 2809) 

إِنَّمَا مَرَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَلَى يَهُودِيَّةٍ يَبْكِي عَلَيْهَا أَهْلُهَا فَقَالَ إِنَّهُمْ لَيَبْكُونَ عَلَيْهَا وَإِنَّهَا لَتُعَذَّبُ فِي قَبْرِهَا

இப்பெண் இறந்ததற்காக இவர்கள் அழுது கொண்டிருக்கிறார்கள். அவளோ கப்ரில் வேதனை செய்யப்படுகிறாள் என்று யூதப்பெண்ணொருத்தி இறந்ததற்காக அவளது குடும்பத்தார் அழுது கொண்டிருப்பதைப் பார்த்த போதுதான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : (புகாரி: 1289) 

இறைவனிடத்தில் நன் மக்களாய் நம் அனைவரும் இருப்போமாக.! அதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.!


https://en.wikipedia.org/wiki/World_Laughter_Day