06) குர்ஆனுடன் நபிவழியும் அவசியம்
குர்ஆனுடன் நபிவழியும் அவசியம்
இறைவனிடமிருந்து அருளப்பட்டதை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றால் குர்ஆனை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வஹீ அடிப்படையில் தந்த விளக்கமும் இறைவன் புறத்திலிருந்து வந்தவையே. குர்ஆனைப் போலவே நபியில் வழிகாட்டுதலையும் பின்பற்றுவது கட்டாயக் கடமையாகும். இதுபற்றி திருக்குர்ஆனில் ஏராளமான வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
‘எங்கள் இறைவா! அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர், உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்’ (என்றனர்.)
உங்களுக்கு உங்களிலிருந்து தூதரை அனுப்பியது போல். (கிப்லாவை மாற்றுவதன் மூலமும் அருள் புரிந்தான்). அவர் உங்களுக்கு நமது வசனங்களைக் கூறுவார். உங்களைத் தூய்மைப்படுத்துவார். உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுத் தருவார். நீங்கள் அறியாமல் இருந்தவற்றையும் உங்களுக்கு அவர் கற்றுத் தருவார்.
நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங்களை அவர் கூறுவார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். இதற்கு முன் அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருந்தனர்.
உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழி கெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.
(அல்குர்ஆன்: 53:2) ➚,3,4
அவனே எழுதப்படிக்காத சமுதாயத்தில் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர்களுக்கு அவர் அவனது வசனங்களைக் கூறுகிறார். அவர்களைப் பரிசுத்தப்படுத்துகிறார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார். அவர்கள் இதற்கு முன் தெளிவான வழிகேட்டில் இருந்தனர்.
வசனங்களை வெறுமனே ஓதிக்காட்டுவதுடன் இறைத் தூதரின் பணி முடிந்து விடாது. அந்த வேதத்தை மக்களுக்கு கற்றுக் கொடுக்கும் பணியும் தூதருக்கு உள்ளது. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல்முறை விளக்கமும் மார்க்க ஆதாரமே என்பது இவ்வசனங்களில் இருந்து தெளிவாகிறது.
அவர்கள் முரண்பட்டதை அவர்களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்குவதற்காகவே உமக்கு இவ்வேதத்தை நாம் அருளியுள்ளோம். (இது) நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர்வழியாகவும், அருளாகவும் உள்ளது.
மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.
வேதத்தை மக்களுக்கு விளக்கும் கடமை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உண்டு; அவர்கள் விளங்குவதற்காகவே அவர்களுக்கு இவ்வேதம் அருளப்பட்டது என்று இவ்விரு வசனங்களும் கூறுகின்றன. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தையும் மார்க்க ஆதாரமாக ஏற்பது கட்டாயக் கடமை என இவ்விரு வசனங்கள் கூறுகின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் இறைவன் பதிவு செய்தவை, அல்லது கனவு மூலம் காட்டியவை, அல்லது ஜிப்ரீலையோ, மற்ற வானவர்களையோ அனுப்பி அவர்கள் வழியாகக் கற்றுத் தந்தவை ஆகிய மூன்றுமே வஹீ தான் என்பதையும் மேற்கண்ட வசனங்களில் இருந்து அறியலாம்.
மேலும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் பல்வேறு வசனங்களில் வலியுறுத்தியுள்ளான்.
‘அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!’ எனக் கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர்வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.
‘நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’ என்று கூறுவீராக! ‘அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்’ எனக் கூறுவீராக!
(அல்குர்ஆன்: 3:31) ➚,32
எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.
‘மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர். அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரியது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான்’ என்று (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வையும், அவனது தூதராகிய எழுதப் படிக்கத் தெரியாத இந்த நபியையும் நம்புங்கள்! இவர் அல்லாஹ்வையும், அவனது வார்த்தைகளையும் நம்புகிறார். இவரைப் பின்பற்றுங்கள்! நேர் வழி பெறுவீர்கள்.
(அல்குர்ஆன்:) ➚, 158
அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! எச்சரிக்கையோடு இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது தூதரின் கடமை என்பதை அறிந்து கொள்ளுங்கள்!!
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாகி விடுவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்..
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்..
அல்லாஹ்வின் விருப்பப்படி மக்கள் கட்டுப்பட வேண்டுமென்பதற் காகவே தவிர எந்தத் தூதரையும் நாம் அனுப்புவதில்லை. (முஹம்மதே) அவர்கள் தமக்குத் தாமே தீங்கு இழைத்து விட்டு உம்மிடம் வந்து, அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பும் தேடி, அவர்களுக்காக தூத(ராகிய நீ)ரும் பாவமன்னிப்புக் கோரினால் மன்னிப்பை ஏற்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் அல்லாஹ்வைக் காண்பார்கள்..
நேர்வழி தனக்குத் தெளிவான பின் இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) மாறு செய்து நம்பிக்கை கொண்டோரின் வழியல்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம். நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது..
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடன், உண்மையாளர்களுடன், உயிர்த் தியாகிகளுடன் மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்..
‘அல்லாஹ்வையும், இத்தூதரையும் நம்பினோம்; கட்டுப்பட்டோம்’ என்று அவர்கள் கூறுகின்றனர். பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் இதன் பிறகு புறக்கணிக்கின்றனர். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள்!
அவன் உங்களுக்காக உங்கள் செயல்களைச் சீராக்குவான். உங்களுக்காக உங்களின் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்..
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்!
‘நம்பிக்கை கொண்டோம்’ என்று கிராமவாசிகள் கூறுகின்றனர். ‘நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. மாறாக கட்டுப்பட்டோம்’ என்று கூறுங்கள்’ என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் நீங்கள் கட்டுப்பட்டால் உங்கள் செயல்களில் எதையும் அவன் குறைத்து விட மாட்டான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்..
உங்கள் இரகசியமான பேச்சுக்களுக்கு முன் தர்மங்களை முற்படுத்துவதற்கு அஞ்சுகிறீர்களா? அவ்வாறு நீங்கள் செய்யாத போது அல்லாஹ் உங்கள் மன்னிப்புக் கோருதலை ஏற்றான். எனவே தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தும் கொடுங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வது தான் நமது தூதர் மீது உள்ளது..
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்..
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை.
தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.
‘எங்கள் இறைவா! நீ அருளியதை நம்பினோம். இத்தூதரைப் பின்பற்றினோம். எங்களை இதற்கு சாட்சிகளாகப் பதிவு செய்து கொள்!’ (எனவும் கூறினர்.)
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்..
‘அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்’ எனக் கூறுவீராக!!
அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவது எந்த அளவு கட்டாயக் கடமையோ அதே அளவு அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படுவதும் கட்டாயக் கடமையாகும். தூதருக்குக் கட்டுப்படாதவர்கள் முஸ்லிம்களே அல்லர் என்ற அளவுக்கு கடுமையான இவ்விஷயம் மேற்கண்ட வசனங்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பின்வரும் ஒரு வசனத்தில் மட்டும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! தூதருக்குக் கட்டுப்படுங்கள் என்று கூறிவிட்டு உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் கட்டுப்படுங்கள் என அல்லாஹ் கூறுகிறான்.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.
அதிகாரம் படைத்தவர்களுக்கும் கட்டுப்பட வேண்டும் எனக் கூறும் இவ்வசனத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் குர்ஆனிலும், நபிவழியிலும் உரசிப் பார்த்து பின்பற்றுங்கள் என்ற நிபந்தனையையும் அல்லாஹ் விதிக்கிறான்.
குர்ஆன், ஹதீஸுக்கு முரணாகவோ, குர்ஆன் ஹதீஸில் கூறப்படாத வணக்க வழிபாடுகளாகவோ அதிகாரம் படைத்தவர்களின் கட்டளை இருந்தால் அதைப் பின்பற்றக் கூடாது என்று தெளிவாக அல்லாஹ் அறிவிக்கிறான்.
இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மிகத் தெளிவாக பல கட்டளைகளை நமக்குப் பிறப்பித்துள்ளார்கள்.
எனது கட்டளையில்லாமல் யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கை.
நூல் : முஸ்லிம், 3442
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடாத ஒன்றை நபித்தோழர் ஒருவர் செய்திருந்தால் அல்லது கட்டளையிட்டிருந்தால் அதைப் பின்பற்றக் கூடாது என்பதை மேற்கண்ட நபிமொழி மிகத் தெளிவாக அறிவிக்கிறது.
இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும் என்பதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கை.
நூல் : புகாரி, 2697
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும் போது “செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம்; வழிகளில் சிறந்தது முஹம்மது காட்டிய வழி; (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டவை; மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்பட்டவை (பித்அத்கள்) அனைத்தும் வழிகேடு என்று குறிப்பிடுவது வழக்கம்.
நூல் : முஸ்லிம், 1435
* நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேதத்தை ஓதுவார் என்பதுடன் கற்றுக் கொடுப்பார் என்பது அவர்களின் விளக்கம் அவசியம் என்பதைக் காட்டுகிறது.
* மனோ இச்சைப்படி அவர் பேச மாட்டார்.
* இவ்வேதத்தை நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் தான் விளக்க வேண்டும்.
* தூதருக்குக் கட்டுப்படுவது அவசியத்திலும் அவசியம்.
* நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் கூறாத ஒன்றை உருவாக்குவது வழிகேடு.
என்றெல்லாம் மேற்கண்ட வசனங்களிலும் நபிமொழிகளிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இவற்றிலிருந்து இரண்டு விஷயங்கள் நமக்குத் தெளிவாகின்றன.
1. குர்ஆனுடைய வழிகாட்டுதலைப் பின்பற்றுவது எந்த அளவுக்கு அவசியமோ அதே அளவுக்கு குர்ஆனுக்கு விளக்கமாக அமைந்த நபிவழியையும் பின்பற்றுவது அவசியமாகும்.
2. குர்ஆனுடைய போதனையையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரிகாட்டுதலையும் தவிர வேறு எதுவும் மார்க்க ஆதாரமாக ஆக முடியாது.
இவ்விரு விஷயத்திலும் தெளிவாக இருப்பவர்கள் நபித்தோழர்களின் நடவடிக்கைகளை மார்க்க ஆதாரங்கள் எனக் கூறத் துணிய மாட்டார்கள்.
இறைவன் விரும்பாத ஒன்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருந்தால் அதில் நமக்கு எந்தக் குழப்பமும் ஏற்படாது. ஏனெனில் வஹீயின் தொடர்பு அவர்களுக்கு இருந்ததால் அல்லாஹ் அதைச் சுட்டிக்காட்டி திருத்தி விடுவான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடவடிக்கைகளில் எவற்றை இறைவன் திருத்தம் செய்ததாக நமக்குச் சான்றுகள் கிடைக்கின்றனவோ, அவற்றைத் தவிர மற்ற அனைத்தையும் இறைவன் அங்கீகரித்துக் கொண்டான் என்று நாம் அறிந்து கொள்ள முடியும்.
ஆனால் நபிமார்கள் அல்லாத மற்றவர்கள் எடுக்கும் முடிவுகள் தவறானதாக இருந்தால் இறைவன் புறத்திலிருந்து அவை திருத்தப்படாது. எனவே அவர்களின் நடவடிக்கைகள் சரியா? தவறா? என்பதை எவராலும் பிரித்தறிய முடியாது.
நபித் தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்களாக முடியாது என்று நாம் கூறுவதற்கு இதுவும் காரணமாக அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரண்டு நிலைகள்
நபித் தோழர்களை விட நபிமார்கள் சிறந்தவர்கள் என்பதில் எந்த முஸ்லிமுக்கும் இரண்டாவது கருத்தில்லை.
மக்களுக்கு நல்வழி காட்டுவதற்கு நபிமார்களைத் தான் அல்லாஹ் தேர்வு செய்தான். அவர்களைத் தான் மக்களுக்கு முன்மாதிரிகளாக ஆக்கினான். நபிமார்களை மக்கள் பின்பற்றுவதைக் கடமையாக்கிய இறைவன் அதைக் கூட நிபந்தனையுடன் தான் கடமைக்குகிறான். நபிமார்கள் இறைவன் புறத்திலிருந்து பெற்ற செய்திகளின் அடிப்படையில் வழிகாட்டினால் அதைத் தான் பின்பற்ற வேண்டும். இறைச் செய்தியின் அடிப்படையில் இல்லாமல் சுய விருப்பத்தின் பேரில் சுய சிந்தனையின் பேரில் நபிமார்கள் செய்தவைகளைப் பின்பற்றுவது நமக்குக் கடமையாகாது.
அப்படியானால் வஹீ எனும் இறைச் செய்தியுடன் எந்தத் தொடர்பும் இல்லாத நபித்தோழர்களின் நட வடிக்கைளைப் பின்பற்றுவது எப்படி மார்க்கத்தின் கடமையாக அமையும்? இதைச் சிந்தித்தாலே இந்தப் பிரச்சனையில் மாற்றுக் கருத்துடையவர்கள் தெளிவடைவார்கள்.
நம் அனைவருக்கும் தெரிந்த சில விபரங்களின் மூலமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தின் மூலமும் இதை நாம் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.