குர்ஆனின் போதனையை பின்பற்றி குழந்தை வளர்ச்சியில் மேம்பட்ட ஆப்கானிஸ்தான்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

குர்ஆனின் போதனையை பின்பற்றி குழந்தை
வளர்ச்சியில் மேம்பட்ட ஆப்கானிஸ்தான்

2004ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி ஆப்கனில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடு 54 சதவீதமாக இருந்தது. 10-ல் 4 குழந்தைகள் உடல் எடை குறையோடு பிறந்தன. 1000 குழந்தைகள் பிறந்தால் 257 குழந்தைகள் இறந்தே பிறந்தன. 182 நாடுகள் இடம் பெற்ற மனித வளர்ச்சி அட்டவணைப் பட்டியில் ஆப்கானிஸ்தான் 181-வது இடத்தில் மிகப் பரிதாபமான நிலையில் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த நிலைமை முற்றிலும் மாறி விட்டது. இது குறித்து டெல்லியில் நடைபெற்ற தெற்கு மற்றும் தெற்காசிய நாடுகளின் ஊட்டச்சத்து குறைபாடு மாநாட்டில் பேசிய ஆப்கன் அமைச்சர் ஹுமாயூன் ‘குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதின் அவசியம் குறித்து நாங்கள் எடுத்துரைத்தோம்.

தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து ஆப்கன் அதிபரின் மனைவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வலியுறுத்தினார். இதனால் கடந்த 2013ஆம் ஆண்டு நிலவரப்படி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு 29 சதவீதம் குறைந்து விட்டது. குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடு 54 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைந்துள்ளது. குழந்தைகளின் உடல் எடை குறைபாடு 39 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைந்து விட்டது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதின் அவசியத்தை நாங்கள் உணர்த்தியதாலும், பெண்கள் அதை உணர்ந்து நடந்து கொண்டதாலும் இந்த வளர்ச்சியை எங்களால் எட்ட முடிந்தது.

‘ஆப்கன் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் 17 அமைச்சகங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டன. அனைத்து அமைச்சர்கள், அதிகாரிகள் 2017-ல் கூடி விரிவான ஆலோசனை நடத்தி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி முடிவெடுத்தோம்’ என்றார். ‘தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும் என்று திருக்குர்ஆனின் 2:233-வது வசனத்தில் கூறப்பட்டுள்ளது. திருக்குர்ஆனின் இந்த போதனையை ஆப்கன் அரசு தீவிரமாக பிரச்சாரம் செய்து, ஆப்கன் தாய்மார்களும் இதைக் கடைபிடித்து தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டியதால் குழந்தை வளர்ச்சி விகிதத்தில் 182 நாடுகளில் 181-வது இடத்தில் இருந்த ஆப்கன் இன்று மிகப் பெரிய வளர்ச்சி கண்டு சாதனை படைத்துள்ளது.

ஆப்கனின் இந்த வழிமுறையைப் பின்பற்றி தாய்ப்பால் ஊட்டுவதின் அவசியம் குறித்து இந்தியாவிலும் பிரச்சாரம் முடுக்கி விடப்பட வேண்டும். இதன் மூலம் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட கோளாறுகளை சரி செய்ய வேண்டும். இதற்கு மோடி அரசு முக்கியத்துவம் தருமா? அல்லது தாய்ப்பால் ஊட்டுவதின் அவசியம் குறித்து குர்ஆன் வலியுறுத்துகிறது என்பதற்காக இதில் மெத்தனம் காட்டி பச்சிளம் குழந்தைகளின் உயிரோடு விளையாடுமா? பொறுத்திருந்து பார்ப்போம்…

 

Source : unarvu ( 25/05/28 )