குடும்ப அமைப்பின் அவசியம்
குடும்ப அமைப்பின் அவசியம்
அல்லாஹ் மனிதனைப் படைத்த காரணமே குடும்பமாக வாழவேண்டும் என்பதற்காகத் தான். எனவே குடும்ப அமைப்பில் வாழ்வது தான் இயற்கை நியதியாகும். இதைப் பற்றி இறைவன் திருக்குர்ஆனில் கூறுகிறான்.
அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான்.
இப்படி ஜோடியைப் படைத்ததே, அவர்கள் இருவரும் இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருப்பதற்காகத் தான். அதையும் அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்.
நீங்கள் அமைதிபெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
இறைவன் இருக்கிறான் என்பதற்குச் சான்று இந்த வசனத்தில் இருக்கிறது. அல்லாஹ் ஆதம் என்கிற ஒரு ஆணை களி மண்ணிலிருந்து படைத்து, அவரிலிருந்து ஒரு பகுதியை எடுத்து அவரது ஜோடியைப் படைக்கிறான். ஆதமை மண்ணிலிருந்து படைத்திருப்பதினால் அவரது மனைவியையும் மண்ணிலிருந்தே தனியாகப் படைப்பது ஆதமைப் படைத்ததை விட இலேசானது தான்.
அல்லாஹ் மண்ணிலிருந்து ஆதம் என்கிற ஆணைப் படைத்ததைப் போன்று, இன்னொரு பெண்ணையும் மண்ணிலிருந்து படைத்திருந்தால் அவ்விருவருக்கும் மத்தியில் எந்தத் தொடர்பும் இல்லாமல் ஆகிவிடும். எனவே தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு தொடர்பு இயற்கையாகவே இருக்க வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் மனித சமூகத்தைப் படைக்க விரும்பும் போது, ஆதமை மட்டும் மண்ணிலிருந்து படைத்துவிட்டு, அவரது மனைவியை அவரிடமிருந்து படைக்கிறான்.
அந்தக் காரணத்தையும் அல்லாஹ் திருமறையில் சொல்லிக் காட்டுகிறான். ஆண் பெண்ணிடத்தில் அமைதியையும் நிம்மதியையும் பெறவேண்டும் என்பதற்காகத் தான் ஆதமிலிருந்து ஹவ்வாவை அல்லாஹ் படைத்திருக்கிறான். எனவே ஆணுக்கு ஆண் என்றும், பெண்ணுக்குப் பெண் என்று தடம் புரண்டு போகிற மனித சமூகம், அல்லாஹ் ஆணிலிருந்து ஆணைப் படைக்கவில்லை என்றும் பெண்ணிலிருந்து பெண்ணைப் படைக்கவில்லை என்கின்ற அடிப்படைத் தத்துவத்தை சிந்திக்க வேண்டும்.
மேலும் ஆணுடைய ஒரு பகுதியிலிருந்து தான் பெண் படைக்கப்பட்டிருக்கிறாள் என்பதையும் அப்படிப் படைத்திருப்பதன் நோக்கமே ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் அன்பையும் கருணையையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் என்பதையும் இத்தகையவர்கள் சிந்திக்க வேண்டும்.
யாரோ எவரோ என்று தெரியாது; ஆணுக்கு ஒரு ஊராக இருக்கும்; பெண்ணுக்கு வேறொரு ஊராக இருக்கும். இவனது குலமும் மொழியும் அவளது குலமும் மொழியும் கூட வெவ்வேறானவையாக இருக்கும். இப்படிப் பல வித்தியாசங்கள் இருந்தாலும் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படுவதை நடைமுறையில் பார்க்கிறோம். அன்பைப் பரிமாறிக் கொள்கிறவர்களாகவும் பார்க்கிறோம்.
இது இறைவனால் ஏற்படுத்தப்படுகின்றது. குடும்பம் என்ற அமைப்புக்குள் கணவன் மனைவி என்றாகிவிடும் போது, ஒருவருக்கொருவர் மாய்ந்து மாய்ந்து அன்பையும் இரக்கத்தையும் பொழிகின்றனர். இவளுக்கு அவன் உதவுகிறான். அவனுக்கு இவள் பணிவிடை செய்கிறாள். இப்படியெல்லாம் ஆணும் பெண்ணும் தங்களுக்குள் ஈடுபாடு காட்டுவதையும் பார்க்கிறோம்.
எனவே கணவன் மனைவி என்ற குடும்ப அமைப்பை நிறுவி, அவர்களில் ஒவ்வொருவரும் தன்னைத் தானே ஈர்க்கப்படுவதாக ஏற்படுத்தியது இறைவனின் ஆற்றலில் உள்ளதாகும். அதனால் தான் இந்த ஈர்ப்பைச் சொல்லிக் காட்டிய இறைவன், இதில் சிந்திக்கிற சமுதாயத்திற்குப் பல சான்றுகள் இருப்பதாகவும் கூறுகிறான்.
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.
அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில், ஒரு ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும் இறைவன் படைத்தான் என்று கூறி அனைவரும் சமம் என்றும் மனிதர்களுக்கு மத்தியில் பிறப்பால் ஏற்றத் தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பதைப் போதிக்கிறான்.
ஆனால் இந்த வசனத்தில் அல்லாஹ் ஒரே ஒரு ஆத்மாவிலிருந்து படைத்ததாகச் சொல்லுகிறான். ஹவ்வா உட்பட அனைத்து மனிதர்களையும் சேர்த்துக் கொண்டு ஆதம் என்கிற ஒரு ஆத்மாவிலிருந்து படைத்ததாகச் சொல்கிறான். அதாவது ஹவ்வா உட்பட அனைவரும் ஆதமிலிருந்து தான் உருவாக்கப்பட்டார்கள் என்பதாகச் சொல்கிறான். அதாவது நம் அனைவருக்கும் ஆதாம், ஹவ்வா மூலமாக இருந்தாலும், ஹவ்வாவுக்கு மூலம் ஆதாமாகத் தான் இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அதனால் தான் அல்லாஹ் இந்த வசனத்தில் “ஒரே ஒரு ஆத்மாவிலிருந்து’ படைத்தாகச் சொல்கிறான். மேலும் அவரிலிருந்து அதாவது அவரில் ஒரு பகுதியை எடுத்து அதிலிருந்து அவரது ஜோடியைப் படைத்ததாகவும், இந்த இரண்டு பேர் மூலமாக இவ்வுலகத்திலுள்ள அனைத்து ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்த இறைவன் நான் தான் என்றும், எனவே எனக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.
இவைகளையெல்லாம் சொல்லக் காரணம், மனிதன் குடும்பமாக வாழ வேண்டும் என்பதற்காகத் தான் அல்லாஹ் படைத்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் குடும்ப அமைப்பை உடைத்து தனியாக மனிதனால் ஒருக்காலும் வாழவே முடியாது என்பதை மனித சமூகம் ஒத்துக் கொண்டாக வேண்டும். ஏதாவது காரணத்தைக் கூறி குடும்ப அமைப்பை மனிதன் உடைக்க முடியாது என்பதையும் நம்ப வேண்டும்.
அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். (உங்களுக்கு) தங்குமிடமும் ஒப்படைக்கப்படும் இடமும் உள்ளன. புரிந்து கொள்ளும் சமுதாயத்திற்குச் சான்றுகளை விளக்கியுள்ளோம்.
உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான்.
அதேபோன்று ஆதமைப் படைத்துவிட்டு, எல்லாவிதமான இன்பங்களையும் கொடுத்து, சொர்க்கத்திலோ அல்லது தோட்டத்திலோ தங்கச் சொல்லும் போதுகூட, ஆதமை மட்டும் தனியாகத் தங்கச் சொல்லவில்லை. அவரது துணையுடன் தான் தங்கச் சொன்னான். ஏனெனில் அதில் தங்க வைப்பதற்கு முன்னாலேயே ஆதமுடைய ஜோடியைப் படைத்துவிட்டான்.
“ஆதமே! நீயும், உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில் குடியிருங்கள்! இருவரும் விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள்! இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்” என்று நாம் கூறினோம்.
எனவே தோட்டத்திலோ அல்லது சுவர்க்கத்திலோ குடியமர்த்தும் போதே ஜோடியாகத் தான் அல்லாஹ் குடியமர்த்துகிறான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அல்லாஹ் ஆதமை மட்டும் படைத்து, அவர் தனக்கு ஒரு ஜோடி வேண்டும் என்கிற அளவுக்கு அவரைத் தனியாக ஏங்க வைத்து, காக்க வைத்த பிறகு அவரது ஜோடியான ஹவ்வாவைப் படைக்கவில்லை. ஆதமுக்கும் ஹவ்வாவுக்கும் மத்தியில் பெரிய இடைவெளியை ஏற்படுத்தியதாக எண்ணிக் கொள்ளக் கூடாது. ஆதமைப் படைத்தவுடனேயே அவருக்குரிய ஜோடியையும் உடனே படைத்துவிட்டான் என்றே இந்த வசனம் நமக்குச் சொல்லிக் காட்டுகிறது.
எனவே இந்த ஆதாரங்களையெல்லாம் அலசிப் பார்க்கின்ற போது, ஆண் பெண் என்கிற அடிப்படையில் படைத்திருப்பது தான் இறைவனால் ஏற்படுத்தப்பட்ட நியதி என்பதை மனமார ஏற்றுக் கொண்டு வாழவேண்டும். எனவே இறைவனால் ஏற்படுத்தப்பட்ட இயற்கை நியதிக்கு மாற்றமான உடலுறவு, பாலியல் உறவுகளுக்கு இஸ்லாத்தில் அறவே எந்த அனுமதியும் இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆண் பெண்ணல்லாத உறவு முறையை ஏற்றுக் கொள்ளவோ வலியுறுத்தவோ கூடாது.
சமீப காலமாக ஆண் ஆணையும், பெண் பெண்ணையும் மணமுடிக்கும் அவல நிலையைச் சரிகாண்கிற கேடுகெட்ட நிலையைச் சமூகத்தில் பாôக்கிறோம். இந்த அவல நிலை இஸ்லாத்தில் இருப்பதாகவும், இஸ்லாம் அதை அங்கீகரிப்பதாகவும் சிலர் காட்டப் பார்க்கின்றனர். அவர்கள் முஸ்லிம்களின் பட்டியலில் வரமாட்டார்கள் என்பதையும் எச்சரிப்பதற்காகத் தான், கணவன் மனைவி அதாவது ஆண் பெண் உறவுகளை இப்படி மிகவும் வலியுறுத்தி சொல்கிறோம்.
அதேபோன்று ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் இல்லை என்பதைப் போன்றும் இப்படியெல்லாம் இஸ்லாமிய குடும்பங்களிலும் இருக்கத் தான் செய்கிறது என்றும் மீடியாக்களும் பத்திரிக்கைகளும் முஸ்லிம்கள் என்று பெயர் வைத்துக் கொண்டவர்களில் சிலரை வைத்து தவறாகச் சித்தரிக்கின்றனர்.
அதாவது முஸ்லிமல்லாதவர்கள் இதைச் சரி காண்பதினால் இஸ்லாமும் முஸ்லிம்களும் சரிகாண்கிறார்கள் என்று தவறாகக் காட்டுவதற்காக சில கேடுகெட்ட ஷியாக்களை முஸ்லிம்கள் எனக் காட்டப் பார்க்கிறார்கள். எனவே யாரெல்லாம் இப்படிச் சொல்கிறார்களோ அவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதையும், எந்தக் காலத்திலும் ஆணும் பெண்ணும் தான் இல்லறத்திலும் குடும்ப உறவுகளிலும் ஈடுபட வேண்டும் என்பதையும் சரியாகப் புரிய வேண்டும் என்பதற்காகவே இந்த விளக்கம்.
மேலும் இதுபோன்ற ஓரினக் கலாச்சாரத்தை அழிப்பதற்காகவே இறைவன் ஒரு நபியை அனுப்பி எச்சரித்து அந்தச் சமூகத்தை அழித்திருக்கிறான் என்பதிலிருந்தே அது மனித சமூகக் கட்டமைப்பையே நாசமாக்குகின்ற மிகப் பெரிய மாபாதகச் செயல் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
உறவுகளால் விளையும் நன்மைகள்
அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கும் இயற்கை நியதியாக இருக்கின்ற குடும்ப அமைப்பில் மனிதனுக்கு ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாகச் சேர்ந்து வாழ்கின்ற குடும்ப அமைப்பின் மூலம் நமது உடலுக்கும் மனதிற்கும், ஏன் இந்தச் சமூகத்திற்கும் கூட நன்மை கிடைக்கின்றது.
குடும்பம் என்றாலேயே ஒரு ஆண், பெண்ணிலிருந்து தான் துவங்கும். கணவனாக இருப்பவன் தந்தையாக மாறுவான். மனைவியாக இருப்பவள் தாய் என்ற அந்தஸ்தை அடைகிறாள். அதேபோன்று இந்தக் கணவன், மனைவிக்குத் தாய், தந்தையர் இருந்தால் அவர்கள் தாத்தா பாட்டி என்ற உறவாகின்றார்கள். அவர்களுக்கு அண்ணன், தம்பி, அக்காள், தங்கை என்ற உறவுகள் இருந்தால் மாமன், அத்தை என்ற உறவு முறைக்குள் வருவார்கள்.
ஆக, குடும்பம் என்ற அமைப்பை வைத்துப் பார்த்தால் தான் ஒரு சமூகம் உண்டாகும். கோத்திரம் உண்டாகும். இப்படி அமையும் அமைப்பு தான் மனிதன் நெருக்கடியான காலகட்டத்தை அடைகின்ற போது நெருக்கமாக வந்து நிற்பார்கள்.
நாம் பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டால், எவன் வருகிறானோ இல்லையோ நமது அண்ணன், தம்பி வந்து நிற்பார்கள். அதனால் தான் தமிழில் “தம்பியுடையான் படைக்கு அஞ்சான்’ என்று சொல்வார்கள். ஏனெனில், அண்ணனுக்குப் பிரச்சனை என்றால் தம்பிமார்கள் வந்து நின்று உதவுவார்கள் என்பதால் தான். தம்பிக்கு ஒரு கஷ்டம் என்றால் அண்ணுக்குத் துடிக்கும். எனவே அண்ணன், தம்பி என்ற உறவு முறை நமக்குக் கிடைக்க வேண்டுமாயின், குடும்பம் என்ற இந்த அமைப்பில் தான் கிடைக்கும்.
குடும்பம் இல்லாமல் தவறான முறையில் உடலுறவு கொள்பவனுக்கு எந்த உறவு முறையும் இருக்காது. ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண் என்று திரிகின்றவர்களுக்கு அண்ணன், தம்பி, மாமா, மச்சான், சித்தப்பா, பெரியப்பா, சின்னம்மா, பெரியம்மா, அக்கா, தங்கை போன்ற உறவு முறை இன்பங்களை இழந்துவிடுவார்கள். எனவே குடும்ப உறவு வேண்டாம் என்பவர்கள் அவர்களது இளமை முறுக்கில் எல்லாம் சரியாகத் தெரிந்தாலும் பிற்காலத்தில் உடல் மற்றும் மனநோய்களுக்கு ஆளாக்கப்படுவதோடு அனாதைகளாக்கப்படுகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
இப்படிப்பட்டவர்களுக்குக் கடைசிக் காலகட்டத்தில் எந்த சொந்தபந்தமும் உற்றார் உறவினர்களும் இல்லாமல் ஆக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு யாரும் உதவி செய்ய முடியாத நிலையில் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஒருவர் இன்னொருவருக்கு உதவி செய்வதாக இருந்தால் ஏதாவது ஒரு வகையில் ஒரு நெருக்கம், தொடர்பு இருக்க வேண்டும். எந்த உறவு முறை தொடர்பும் இல்லையென்றால் எப்படி ஒருவர் மற்றவருக்கு உதவி செய்யமுடியும்? தந்தை வழியில் உள்ள உறவாக இருக்க வேண்டும். அல்லது மனைவி வழியில் அந்த உறவு இருக்க வேண்டும். இவைகளெல்லாம் கிடைக்க வேண்டுமெனில், குடும்ப அமைப்புக்குள் சென்றால் தான் கிடைக்கும்.
ஆனால் சில விவரங்கெட்டவர்கள், சினிமாக்களிலும் சீரியல்களிலும் சுதந்திரம் என்ற பெயரில் தவறான படங்களையும் நாடகங்களையும் தயாரித்து, மக்களிடம் தவறான பாலியல் உறவுகளை, சரியெனச் சித்தரிக்கிறார்கள். அப்படியானால் அதைப் பற்றி அறியாத மக்களுக்கு இவர்கள் கேடு செய்கிறார்கள் என்று அர்த்தம்.
இளமையைத் தவறாகப் பயன்படுத்தி, கடைசிக் காலத்தில் அனாதரவாக நிற்கதியாக்கி விடுவதற்குத் தான் இந்தச் சிந்தாந்தங்கள் உதவும். இவற்றால் மனித சமூகத்திற்கு எந்த நன்மையும் விளையப் போவதில்லை. இதனால் தான் இந்தக் கேடுகெட்ட சித்தாந்தங்களைப் பின்பற்றி வாழும் நடிக, நடிகைகள் இறுதிக் காலத்தில் அனாதையாகி, தற்கொலை செய்து கொள்வதைப் பார்க்கிறோம்.
எனவே குடும்பம் என்ற அமைப்பின் மூலம் தான் மனிதர்கள் பல்வேறு உதவிகளை ஒருவருக்கொருவர் செய்து கொள்கின்றனர். அதன் மூலம் மனிதன் மனிதத் தன்மையுடையவனாக வாழும் நன்மை நமக்குக் கிடைக்கிறது.
விஞ்ஞான வளர்ச்சியின் அடிப்படை
குடும்பம் என்ற அமைப்பு இருப்பதால் தான் மனித குலம் பெருகியிருக்கிறது. மனித குலம் பெருகியிருப்பதால் தான், மனித வளங்களும் முன்னேற்றங்களும் வளர்ந்திருக்கின்றன. மக்கள் தொகைப் பெருக்கம் நாட்டிற்கு ஆபத்து என்று சிலர் தவறாகப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தாலும், மக்கள் தொகை பெருக்கத்தால் தான் நாம் இன்று அனுபவிக்கின்ற பல்வேறு நவீன வசதிகளைப் பெற்றிருக்கிறோம்.
பேருந்து என்ற கனரக வாகனம் மக்கள் தொகை பெருக்கத்தினால் தான் கண்டுபிடிக்கப்பட்டது. மனிதன் தனக்கு இலாபம் கிடைப்பதற்காகத் தான் கண்டுபிடிக்கிறான். ஊருக்கு பத்துப் பேர் மட்டும் இருந்தால் எப்படி நூற்றுக்கணக்கான பேருந்துகளை இயக்க முடியும். பேருந்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட அவனுக்குத் தோன்றியிருக்காது.
அதே போன்று இப்போது மைக்கில் பேசுகிறோம் எனில் அதிகமான மக்கள் தொகை இருப்பதால் தான். பத்துப் பேர் மட்டும் இருந்தால் மைக் வைத்துப் பேசுவதற்கு எந்தத் தேவையும் ஏற்படாது. அப்படி தேவைப்படவில்லை என்ற போது மைக்கைக் கண்டுபிடிப்பதால் என்ன இலாபம்? இந்தப் பேச்சை பதிவு செய்யத் தேவையில்லை. அதை ஒளிபரப்பத் தேவையில்லை. இப்படியே ஒன்றுமில்லாமல் ஆகிவிடும்.
எனவே இன்றைய உலகில் மனிதன் பயன்படுத்துகிற அனைத்து வசதிகளும் குடும்ப அமைப்பு என்று இருப்பதால் தான் கிடைத்திருக்கிறது. குடும்ப அமைப்பு என்று இல்லையென்றால் இன்று நாம் பயன்படுத்துகிற மனித வளம், அறிவியல் வளர்ச்சி பெருகியிருக்காது.
அன்பும் தியாகமும்
குடும்பத்தில் மற்ற உறவு முறைகளை விலக்கிவிட்டு ஆராய்ந்தால், கணவன், மனைவி என்ற கட்டுப்பாடுகளில் உடல் ரீதியான தொடர்புகள் ஏற்படுவதால், அவர்களுக்கு மத்தியில் எந்த ஒளிவு மறைவும் இருக்காது. மற்றதை விட உடல் ரீதியாக ஒளிவு மறைவு இல்லாததால் ஒருவர் மீது மற்றவர் அதிமான ஈர்ப்புடையவராகி விடுகிறார்கள்.
மனைவிக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் கணவனும் அந்தப் பிரச்சனையைக் களைவதில் முனைப்பு காட்டுகிறான். அதேபோன்று கணவனுக்கு எதாவது உடல் நலக்குறைவு எனில் மனைவி கண்விழித்து அவனைக் காக்கிறாள். இதற்கெல்லாம் காரணம் குடும்பம் என்ற அமைப்பு இருப்பதால் தான்.
குடும்பம் இல்லாதவர்கள் பெரும்பாலும் சுயநலவாதிகளாகத் தான் இருப்பார்கள். ஆனால் குடும்பம் என்ற அமைப்பில் உள்ளவர்கள் அனைவருமே தியாகம் செய்பவர்களாக இருப்பார்கள். அண்ணனுக்கு ஒரு தேவையிருந்தும், அதை தம்பிக்காக விட்டுக் கொடுப்பார். இது ஒரு தியாகம் தான்.
மனைவி என்பவள் நன்றாகச் சமைத்து, கணவனுக்கு வயிறு முட்டக் கொடுத்துவிட்டு, தான் சாப்பிட்டதைப் போன்று நடித்துக் கொள்வாள். தாய் தான் இந்த தியாகத்தில் முதல் இடம் வகிப்பாள். தான் பசியோடு இருந்தாலும் தன் பிள்ளையை நன்றாகக் கவனிப்பாள்.
இப்படி ஒழுங்கான குடும்பமாக இருந்தால் தாய்க்குத் தந்தையும், தந்தைக்குப் பிள்ளையும், பிள்ளைக்குப் பெற்றோர்களும், மனைவிக்குக் கணவனும், கணவனுக்கு மனைவியும், அண்ணனுக்குத் தம்பியும், தம்பிக்கு அண்ணனும் என ஒருவருக்கொருவர் தனது தேவைகளையும் விருப்பங்களையும் பிறருக்காக விட்டுக் கொடுத்து, அனுசரித்து, தியாகம் செய்வதைப் பார்க்க முடிகிறது.
சிலர் இப்படி குடும்பத்திற்காகச் செலவு செய்வதையும் சுயநலம் என்பார்கள். இது தவறான விமர்சனமாகும். ஒருவன் குடும்பத்திற்கும் சொந்த பந்தங்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் கொடுக்காமல் தான் மட்டும் வைத்துக் கொண்டால் தான் சுயநலம் என்று கூறலாம். தான் சார்ந்த குடும்பத்தினருக்குச் செலவு செய்தால் அதை சுயநலம் என்று விமர்சிப்பது நியாயமில்லை. இஸ்லாம் கூறும் குடும்ப அமைப்பில் ஒவ்வொருவனும் தன்னுடைய உறவினர்களுக்காகச் செலவு செய்ய ஆரம்பித்தாலே உலகில் பிச்சைக்காரர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். எனவே இதைச் சுயநலம் என்று கூறுவது பைத்தியக்காரத்தனமாகும்.
ஒருவன் இலட்சாதிபதியாக, கோடீஸ்வரனாக ஆவதற்கு முயற்சி செய்கிறான் எனில் சுயநலத்திற்காக இல்லை. தனது மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் போன்ற சொந்த பந்தங்களுக்காகவும் தான் உழைக்கிறான். எனவே ஒருசில கஞ்சர்களைத் தவிர மற்ற அனைவருமே குடும்ப அமைப்பிற்காகத் தான் உழைக்கிறார்கள், வாழ்கிறார்கள். இதை சுயநலம் என்று சொல்லக்கூடாது.
சுய தொழில்கள் அல்லது பிறரிடம் கூலி வேலைகள் செய்வதும் இன்னும் சிலர் தனது ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்தி இளமையைத் தொலைத்துக் கொண்டு வெளிநாடுகளில் சிரமப்படுவதும் தனது குடும்பமாக இருக்கிற தாய், தந்தை மற்றும் மனைவி மக்களுக்குத் தான் என்பதை நாம் உணர வேண்டும். இன்னும் சொல்வதாக இருப்பின், வெளிநாட்டிற்குச் சென்று கஷ்டப்படுவதே தியாகம் தான்.
ஒருவன் தன் வயிற்றுக்கு மட்டும் சாப்பிடுவதற்காக உழைக்க வேண்டுமெனில், உள்நாட்டில் மாதத்தில் பத்து நாட்கள் வேலை பார்த்தால் போதும். வெளிநாட்டைப் பொறுத்தளவுக்கு மாதத்தில் இரண்டு மூன்று நாட்கள் உழைத்தாலே போதுமானதாகும். ஆனால் மாதம் முழுவதும் உழைக்கக் காரணம், நம்முடைய தாய், தந்தையர்களும் மனைவி மக்களும், குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். அதற்கு மேலும் அல்லாஹ் நமக்குத் தந்தால் உற்றார் உறவினர்களுக்கும் ஊருக்கும் சமூகத்திற்கும் உலகத்திற்கும் உதவுவதற்குத் தான்.
ஆக, குடும்பம் என்ற அமைப்பை விட்டு வெளியேறிவனுக்கு சுயநலத்தைத் தவிர வேறொன்றும் இருக்காது. அவர்களது எண்ணங்களில், எனது உடல், எனது சுகம், எனது ஆசைகளை நிறைவேற்றும் அளவுக்குக் கஷ்டப்படுவது என்பது மட்டுமே நிறைந்திருக்கும். அதனால் தான் இத்தகையவர்கள் எந்த தியாகத்தையும் செய்யாதவர்களாகவும் சமூக அக்கறை இல்லாதவர்களாகவும் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.
சமூக ரீதியாகக் கிடைக்கிற நன்மைகள் போக, கணவன் மனைவி என்று வாழும் குடும்ப அமைப்பில் அவ்விருவரும் சரியாகப் புரிந்து கொண்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு நன்மைகள் இருப்பதாகவும் குடும்பவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதாவது ஒழுங்கான இல்லற வாழ்க்கை இருந்தால் அது நிச்சயமாக சரியான பலனைத் தரும் என்பதில் சந்தேகமே இல்லை.
தாம்பத்தியத்தின் நன்மைகள்
மனிதன் எத்தனையோ வேலைகளைச் செய்கிறான். அதில் அவனது எந்த உறுப்பு பயன்படுத்தப்படுகிறதோ அது மட்டும் தான் வேலை செய்யும். உதாரணமாக, சாப்பிடுவதை எடுத்துக் கொள்வோம். சாப்பாட்டை வாயில் போடுவதற்கு கை பயன்படும். அவ்வளவு தான் அதன் வேலை. அதன் பிறகு அதை செரிமானம் செய்வதற்கு வயிற்றில் ஏதாவது சுரப்பிகள் சுரந்து அதைச் சரி செய்கிறது.
இதுபோன்று ஒவ்வொரு வேலைக்கும் தகுந்த மாதிரி 5, 10 அல்லது 20 உறுப்புக்கள் வேலை செய்யும். அதற்காக முழு உடலும் உடலிலுள்ள அனைத்து அணுக்களும் வேலை செய்யாது. ஆனால் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது மட்டும் தான் உடலிலுள்ள அனைத்து செல்களும் உழைக்கிறது. அனைத்து அணுக்களும் ஈடுபடுகிறது.
ஒரு மனிதனுடைய குழந்தை அச்சு அசலாக அவனைப் போன்று இருக்கிறது. அப்படியானால் அவனுடைய அனைத்து இடத்திலிருந்தும் செல்களை எடுத்திருப்பதாகத் தான் அர்த்தம். மனித உயிரணு என்பது மனிதனின் அனைத்து செல்களையும் சேர்த்து சுருக்கித் தான் வருகிறது.
சில பேருக்கு அச்சு அசலாக இல்லாமல் வேறொரு மாதிரியாக வருவதற்குக் காரணம், கணவன் மனைவி என்ற இரண்டு வெவ்வேறான செல்கள் கலந்து விடுவதாலாகும். எனவே தாம்பத்தியத்தில் ஈடுபடுகிற போது தான் மனித உறுப்புக்கள் முழுமையாக வேலை செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே முழு மனதுடன், சரியான ஈடுபாட்டுடன் தாம்பத்திய சுகத்தை அனுபவித்தால், மனிதனின் மூளைத் திறன் அதிகரிக்கும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் எலிகளை வைத்து ஆராய்ந்து கண்டறிந்துள்ளனர்.
எலிகளை வெறுமனே சகட்டுமேனிக்கு ஆராய்ச்சி செய்யாமல், ஆண் பெண் என்று ஜோடிகளைப் பிரித்து, எப்போதும் ஜோடியுடனே திரியக்கூடிய சுதந்திரமான எலிகளையும், ஒரு வாரத்திற்கு ஒரு தடவை ஜோடியுடன் சேருகிற சில எலிகளையும், ஒரு மாதத்திற்கு ஒரு தடவை ஜோடியுடன் சேருகிற சில எலிகளையும், சில ஆண் எலிகளைத் தனியாகவும் சில பெண் எலிகளைத் தனியாகவும் வைத்து ஆராய்ந்த பிறகு ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.
அதில் ஜோடிகள் பிரிக்கப்பட்டு தவணை முறையில் மாதக் கணக்காகவும் வாரக் கணக்காகவும் சேர்ந்த எலிகளை விட, எப்போதும் ஜோடியாக இருக்கும் சுதந்திரமான தாம்பத்திய உறவு கொள்கின்ற எலிகள் தான் மிகவும் சுறுசுறுப்பாகவும் மூளை வளர்ச்சியுடன் திறம்பட செயல்படுவதாகக் கண்டறிந்துள்ளனர்.
ஏனெனில் சரியான அளவிலும் முழு மனதுடனும் தாம்பத்தியத்தில் ஈடுபடுகிற போது, மூளையில் சில சுரப்பிகள் நன்றாக சுரந்து அதன் வளர்ச்சிக்கு வித்திடுகிறது என்ற உண்மையைக் கண்டறிந்துள்ளனர். இந்தப் பயன் கணவன் மனைவி என்ற குடும்ப அமைப்பில் தான் மனிதனுக்குக் கிடைக்கிறது.
இதுபோன்று நடைமுறையில் பெண்களிலும் ஆண்களிலும் சிலரிடம் ஓர் அதிசயத்தைப் பார்க்க முடியும். சிலர் திருமணத்திற்கு முன்னால் விவரமில்லாதவர்களாக இருப்பார்கள். ஆனால் திருமணம் முடித்து தாம்பத்தியத்தில் ஈடுபடத் துவங்கிவிட்டார்களெனில் அவர்களின் பேச்சுக்களிலும் நடைமுறைகளிலும் முதிர்ந்த நிலையில், ஆச்சரியப்படுகின்ற அளவுக்கு நல்ல மாறுதல்களைக் காணலாம்.
அதேபோன்று ஒரு மனிதன் உடற்பயிற்சி செய்யும் போது, நடைப்பயிற்சி செய்யும் போதெல்லாம் நமது உடலில் 300 முதல் 500 கலோரிகள் தான் குறைகிறது. ஏனெனில் உடற்பயிற்சியிலும் நடைப்பயிற்சிலும் சில குறிப்பிட்ட உடலுறுப்புக்கள் மட்டுமே வேலை செய்கின்றன.
ஆனால் உடலுறவு கொள்ளும் போது, நமது உடலிலுள்ள அனைத்து செல்களும் வேலை செய்வதால் நமது உடலில் அதிகமான கலோரிகள் எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்புக்கள் நீங்கிவிடுகிறது. இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம், இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அதிகரிக்கவும் குறையவும் காரணம் இல்லற வாழ்க்கையில் பிரச்சனைகள் இருப்பது தான்.
இல்லற வாழ்வில் ஆண்கள் எப்படி நடக்க வேண்டும், பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாமல் இருப்பதால் சிலருக்கு இல்லற வாழ்வு சரியாக அமைவதில்லை. இல்லற வாழ்வில் ஏற்படுகிற பிரச்சனையால் தேவையற்ற மன உளைச்சலும் இரத்த அழுத்தமும் தேவையற்ற கொழுப்புக்களும் உருவாகி விடுகின்றது. இதனால் இரத்த ஓட்டம் தடைபட்டு சில நேரங்களில் இதயக் கோளாறு வரை சென்றுவிடுகிறது.
கணவன் மனைவி என்ற குடும்ப அமைப்பில் இல்லற வாழ்வை சரியான முறையில் தொடர்ந்தால் இவற்றிலிருந்து மனித சமூகம் தப்பித்துவிடும்.
உதாரணமாக, தலைவலி வரக் காரணம் சில நேரங்களில் தலையிலுள்ள நரம்புகளுக்குச் சரியான முறையில் இரத்த ஓட்டம் இல்லாமல் போவதால் தான். அதே போன்று உடலின் சில பகுதிகள் திடீரென வலியை ஏற்படுத்தக் காரணம் இரத்த ஓட்டம் சரியாக இல்லை என்பதால் தான். எனவே இரத்த ஓட்டம் சரியாக இருக்கின்ற போது நமது உடல் உறுப்புக்களும் சரியாக இயங்கும். அப்படி இயங்கினால் மனித உடல் அமைதியான நிலையை அடையும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இல்லறத்தில் ஈடுபடும் போது மனிதனுக்கு வியர்வை வரும். அதேபோன்று உடல் உழைப்பில் ஈடுபடும் போது, மண்வெட்டி பிடித்து வேலை செய்தாலோ அல்லது கோடரியினால் வேலை பார்த்தாலோ அல்லது மூட்டை தூக்கும் போதோ அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடும் போதோ வியர்வை வரும். ஆனால் இல்லறத்தில் ஈடுபடும் போது வருகின்ற வியர்வைக்கும் உடல் உழைப்பின் மூலம் வருகிற வியர்வைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது வரும் வியர்வையில், அனைத்து செல்களிலுள்ள உப்புத் தன்மையும் கழிவுகளும் வெளியேற்றப்படுகின்றது. அப்போது மனிதன் உடற்கூறு ரீதியாக தூய்மையான மனிதனாக மாறி விடுகிறான். அதனால் தான் ஒழுங்கான முறையில் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு முடித்ததும் நன்றாகத் தூக்கம் வருகிறது.
அதேபோன்று விளையாட்டு வீரர்கள் ஒரு குறிப்பிட்ட நாட்கள் கடந்த பிறகு சரியாக விளையாட மாட்டார்கள். எனவே விளையாட்டு வீரர்களை ஆய்வுக்குட்படுத்தி அவர்களைச் சோதித்த போது, அவர்கள் தங்களது மனைவிமார்களைப் பிரிந்திருப்பது தான் ஒழுங்காக விளையாடாமல் இருப்பதற்குக் காரணம் என்பதைக் கண்டறிந்தார்கள்.
விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் போது, மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபட்டால் தளர்ந்து விடும் எனவும் உடல் பலவீனமாகி விடுவதாகவும் தவறாகப் போதிக்கின்றனர். பலர் இந்தத் தவறான சிந்தனைக்குட்பட்டு விட்டதால் தாங்களாகவே மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்வதால் தான் விளையாட்டில் மனநிலை குன்றியவர்களாகி, தோல்வியைத் தழுவுவதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.
எனவே யார் தனது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபாட்டுடன் இருந்து கொண்டு விளையாட்டையும் தொடர்கிறார்களோ அவர்களது செயல்திறன் அதிகரிப்பதாகவும் அவரின் வீரம் கூடுவதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.
அதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போர் செய்யும் போது கூட மனைவிமார்களுடன் செல்வார்கள் என்று ஹதீஸ்களில் படிக்கிறோம். போர் என்பது மனிதன் சந்திக்கின்ற மிகவும் இக்கட்டான சூழ்நிலையாகும். ஆனால் அந்த நேரத்திலும் நமது மனது தெளிவாக இருந்தால் தான் நாம் போரில் முழுக் கவனம் செலுத்த முடியும் என்று தமது மனைவியை சீட்டுக் குலுக்கிப் போட்டு தேர்ந்தெடுத்து அழைத்துச் செல்வார்கள் என்று ஹதீஸ் நூற்களில் பார்க்கிறோம்.
அதாவது, நமது உடலும் மனமும் ஒரே நேர்க்கோட்டில் செயல்பட வேண்டுமானால் நமது மூளையில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும். நமது மூளை நிம்மதியாக இருக்க வேண்டுமெனில் எப்போதும் செய்கின்ற காரியத்தில் தடங்கல் வரக்கூடாது. மனைவிமார்களை மதீனாவில் விட்டுவிட்டு, தான் மட்டும் போருக்குச் சென்றால் என்ன நடக்கும்? உடல் மட்டும் தான் போர்களத்தில் இருக்கும். மனது மதீனாவை நோக்கித் தான் இருக்கும்.
இப்படி இருநிலை ஒரு மனிதனிடத்தில் இருந்தால் எதையுமே ஒழுங்காகச் செய்ய முடியாது என்பது தான் யதார்த்தம். அதனால் தான் நபியவர்கள் போர்க்களமாக இருந்தால் கூட, நமக்குச் சரியான வழிமுறையை செயல் வடிவில் காட்டித் தந்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரயாணம் செய்ய நாடினால் தம் மனைவிமார்களுக்கிடையே (எவரைத் தம்முடன் அழைத்துச் செல்வது என்று) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். எவரது பெயர் (குலுக்கல்) வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்படுவார்கள். தம் மனைவிமார்களில் ஒவ்வொருவருக்கும் தம் பகலையும் இரவையும் பங்கு வைத்து வந்தார்கள்.
ஆனால், சவ்தா பின்த்து ஸம்ஆ (ரலி) அவர்கள் மட்டும் தம் பங்குக்குரிய நாளை, நபி (ஸல்) அவர்களின் (பிரியத்திற்குரிய) மனைவியான ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி விட்டிருந்தார்கள். அதன் வாயிலாக, அல்லாஹ்வின் தூதருடைய திருப்தியை அடைவதற்காகவே அவர்கள் அவ்வாறு செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவரது (பெயருள்ள) சீட்டு வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள்.
இவ்வாறே, அவர்கள் செய்த ஒரு புனிதப் போரின் போது (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களுக்கிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். எனது (பெயருள்ள) சீட்டு வந்தது. ஆகவே, நான் அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
எனவே இத்தனை பயன்களையும் நன்மைகளையும் குடும்பம் என்ற அமைப்பில் தான் நாம் பெறமுடியும்.