குடும்பச் செலவுக்கும் கூலி உண்டு

பயான் குறிப்புகள்: குடும்பவியல்

குடும்பச் செலவுக்கும் கூலி உண்டு

பெண்கள் வேலைக்குச் செல்வதால் பெண்களுக்குப் பல்வேறு பாதிப்பு ஏற்படுவதுடன் ஆண்களின் வேலை பாதிப்பதாகவும் கள ஆய்வு சொல்கிறது. ஆண்களை மட்டும் வேலைக்குச் சேர்த்தால் போட்டி போட்டுக் கொண்டு வேலை நடக்கிறது. அதுவே பெண்களுடன் வேலை செய்யும் ஆண்கள், வேலை செய்வதில் காட்டும் அக்கறையை விட, தன்னுடன் வேலைக்கு வந்த பெண்களின் மீது காட்டும் அக்கறை அதிகமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

அதாவது ஆண்களைத் திசை திருப்புகின்ற காரியமாக பெண் இருப்பதால் முழு ஈடுபாட்டுடன் ஆண்களால் வேலை செய்ய முடியவில்லை என்பதே உண்மை. இதனால் ஆண்களின் வேலைத்திறன் குறைந்து விடுகிறது என்று கண்டறிகிறார்கள்.

தனியாக வேலை செய்யும் ஆண்கள் பொறுப்புடனும், ஈடுபாட்டுடனும் அதிகக் கவனத்துடனும் வேலை செய்கிறார்கள். பெண்களுடன் வேலை செய்யும் போது, அதாவது பெண்கள் என்றால் சுமார் 18 லிருந்து 35 வயது வரைக்குமுள்ள நடுத்தர வயதுள்ள பெண்களுடன் வேலை செய்கின்ற போது பொறுப்பற்ற தன்மையுடனும், குறைவான ஈடுபாட்டுடனும் வேலை செய்வதாக கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பெண்களை வேலைக்குச் சேர்ப்பதால் ஆண்களின் வேலைத்திறன் குறைந்து நிறுவனங்கள் நஷ்டமடை வதாகவெல்லாம் கண்டறிகிறார்கள். ஆனாலும் இத்தனை காரண காரியங்களையும் உதறித் தள்ளிவிட்டு, புரட்சி, புதுமை என்று பெயர் வைத்துக் கொண்டு பெண்கள் வேலைக்குச் செல்வதைப் பீற்றிக் கொள்வதைப் பார்க்கிறோம்.

இவர்கள் இயல்பு வாழ்க்கையையும், யதார்த்தத்தையும் உணராமல் இவ்வாறு சொல்கின்றனர்; செய்கின்றனர். பெண்களின் உடற்கூறு எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை உணராமல் இருக்கின்றனர். கண்ணுக்கு முன்னால் என்ன பாதிப்புகள், விளைவுகள் ஏற்படுகிறது என்பதையும் பார்ப்பது கிடையாது.

வேலைக்குப் போகிறேன் என்ற பெயரில் பெண்கள் குடிகாரர்களாக மாறுவதைப் பார்ப்பது கிடையாது. இரவு 2 மணிக்கு வீட்டிற்கு வந்தாலும் அதையும் குடும்பத்தார்கள் கண்டு கொள்ளக் கூடாது; இவற்றையெல்லாம் கவனிக்காமல் புரட்சி, புரட்சி என்று கூப்பாடு போடுகின்றனர்.

பொதுவானவர்கள் இப்படி ஆண் ஆதிக்கம் என்றும் புரட்சி என்றும் சம உரிமை, சமத்துவம் என்றும் சொல்லிக் கொண்டு பெண்களை இன்னும் அடிமைத்தனம் செய்கின்றனர். ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தவரை, பெண்கள் வேலைக்குப் போகிற விஷயத்தில் அல்லது வேலைக்கு அனுப்புகின்ற விஷயத்தில் மிகத் தெளிவான முடிவில் இருக்க வேண்டும். அதாவது குடும்பப் பொருளா தாரத்திற்கு எல்லா வகையிலும் ஆண்களே முழுப் பொறுப்பு என்பதைப் புரிந்து நடக்க வேண்டும்.

மேலும் பொருளாதாரத்தைச் செலவு செய்வது ஆண்களுக்குக் கடமை தான். இருப்பினும் இத்துடன் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். பொருளாதாரத்தை ஆண்கள் குடும்பத்திற்குச் செலவு செய்வது கடமை என்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் அவற்றுக் கெல்லாம் மறுமையில் நன்மைகள் இருக்கிறது என்று இஸ்லாம் ஆர்வமூட்டுகிறது.

ஆண்களாகிய கணவன்மார்களும் தந்தைமார்களும் தாங்கள் சிரமப்பட்டு சம்பாத்தியம் செய்கிறார்கள் என்பது உண்மைதான். சம்பாதித்த பணத்தில் மனைவிக்குச் செலவு செய்வதில், வீட்டுத் தேவைகளுக்குச் செலவளிப்பதில் ரொம்பவும் கணக்கு பண்ணக் கூடாது. மிகவும் மூடி மூடி வைக்கக் கூடாது.

இன்னும் சிலர் உலகத்திற்கு வள்ளலாக இருப்பார்கள். ஆனால் குடும்பத்தில் கஞ்சனாக இருப்பார்கள். எனவே ஒரு மனிதன் தன்னுடைய சம்பாத்தியத்தில் யாருக்கு நல்லபடியாக செலவு செய்ய வேண்டும் என்பதையும் நபியவர்கள் கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் (இறைவனிடம்) நன்மையை எதிர்பார்த்தவராகத் தம் குடும்பத்தினர்க்குச் செலவு செய்தால் அது அவருக்குத் தர்மமாகிவிடும்.

அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி),

(புகாரி: 55, 4006, 5351)

எனவே, மனைவி மக்களைப் பேணவேண்டும் என்று அல்லாஹ் சொன்னதால் செய்கிறேன், அதற்கான நன்மையை இறைவனிடம் தான் எதிர்பார்க்கிறேன் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு குடும்பத் தலைவரும் குடும்பத்திற்காகச் செலவளித்தால் அது அவருக்குத் தர்மம் செய்த நன்மையைப் பெற்றுத் தரும்.

மனைவி மக்களைக் கவனிப்பது கணவனுக்குக் கட்டாயக் கடமை. கடமையை நிறைவேற்றிய நன்மையும் கிடைக்கும். கூடுதலாக தர்மம் செய்த நன்மையையும் இறைவன் தருகிறான் என்பதைத்தான் நபியவர்கள் இப்படிக் கூறுகிறார்கள். அதே நேரத்தில் நமது குடும்பத்தைச் சாராத நபர்களில் ஏழைகளுக்கும் இல்லாதவர்களுக்கும் கொடுத்தால் அதற்கு தர்மத்தின் நன்மை மட்டும்தான் கிடைக்கும். ஆனால் குடும்பத்திற்குச் செலவளித்தால் இரட்டை நன்மைகள் கிடைக்கிறது.

எனவே கணவன்மார்கள் செலவு செய்யும் போது அடிக்கடி தாங்கள் செலவு செய்வதைக் குத்திக்காட்டி, எடுத்தெறிந்து பேசிவிடக் கூடாது. ஏனெனில் அப்படி நமது செலவைச் சொல்லிக் காட்டிக் கொண்டிருந்தால் நாம் இறைவன் சொன்னதற்காகச் செய்யவில்லை என்றாகிவிடும். மறுமையில் எந்த நன்மையும் கிடைக்காமல் போய்விடும் என்பதைக் கவனத்தில் கொண்டு குடும்பத் தலைவர்கள் செலவு செய்திட வேண்டும்.

அதே போன்று, தனது குடும்பத்திற்கு ஒரு ஆண் மகன் செலவு செய்வது மற்றும் கவனிப்பதன் சிறப்பு பற்றி மேலும் நபியவர்கள் கூறுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி, அதற்காக உமக்கு நற்பலன் நல்கப்படும். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ்(ரலி),

(புகாரி: 56, 1296, 4409, 5668)

எனவே குடும்பத்தைக் கவனிப்பதை விரும்பிச் செய்ய வேண்டும். குடும்ப விவகாரத்தில் வெறுத்துக் கொண்டு எதையும் செய்யவே கூடாது. அதனால்தான் நபியவர்கள் மனைவிக்கு ஊட்டி விடுகின்ற ஒரு கவள உணவுக்கும் இறைவன் நன்மையைத் தருவான்; அதில்கூட இறைவன் எதையும் குறைத்து விடமாட்டான் என்கிறார்கள்.

தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற இபாதத்துகளைச் செய்யும் போது எவ்வாறு உலகில் எந்தத் தேவைகளையும், காரணங்களையும் பார்க்காமல் மறுமையில் நன்மை கிடைக்க வேண்டும் என்று செய்கிறோமோ அது போன்றுதான் குடும்பத்திற்குச் செலவு செய்வதையும் குடும்பத்தினரைக் கவனித்துப் பேணுவதையும் செய்ய வேண்டும். ஏனெனில் தொழச் சொன்ன இறைவன் தான், நோன்பு வைக்கச் சொன்ன இறைவன் தான் குடும்பத்தையும் பேணச் சொல்லி யிருக்கிறான் என்பதை உணர்ந்து விரும்பி வேண்டிச் செய்ய வேண்டும். ஏதோ கடமை என்றெல்லாம் செய்யவே கூடாது.

ஒரு மனிதர் செலவு செய்வதிலேயே சிறந்தது எது? என்று நபியவர்கள் பட்டியல் போடும் போது, ஒரு ஆண் செலவளிப்பதிலேயே சிறந்தது, அதுவும் முதலாவது சிறப்பிற்குரியது தனது குடும்பத்திற்குச் செலவு செய்கிற பொருளாதாரம் தான். அதன் பிறகுதான் அறப்போருக்குச் செலவு செய்வதுகூட வருகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் தம் குடும்பத் தாருக்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசும் (தீனார்), அல்லாஹ்வின் பாதையில் தமது வாகனத்திற்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசும், அல்லாஹ்வின் பாதையில் தம் நண்பர்களுக்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசுமே அவர் செலவிடுகின்ற பொற்காசுகளிலேயே சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி),

(முஸ்லிம்: 1817)

அதே போன்று இன்னும் நபியவர்கள் குடும்பத்திற்குச் செலவு செய்வதன் சிறப்புகளைப் பற்றிக் கூறுகிறார்கள்.

… மேலும், அல்லாஹ் உங்களில் ஒருவருக்குச் செல்வத்தை வழங்கினால் முதலில் தமக்கும் தம் குடும்பத்தாருக்கும் செவழிக்கட்டும்! மேலும், நான் உங்களை (அல் கவ்ஸர் தடாகத்தின் அருகில்) எதிர்பார்த்துக் காத்திருப்பேன் என்று கூறியதை நான் கேட்டேன்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் சமுரா (ரலி),

(முஸ்லிம்: 3723)

குடும்பத்திற்குச் செலவு செய்வதன் சிறப்பை அறிந்து கொள்ள அபூதல்ஹா (ரலி) அவர்களின் தியாகத்தை எடுத்துச் சொல்கிற சம்பவம் நல்ல சிறந்த உதாரணம்.

அனஸ் பின் மாலிக் (ரலி) கூறியதாவது:

அன்ஸாரிகளில் அபூதல்ஹா (ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரது செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ந் நபவீ பள்ளிவாசலு)க்கு எதிரில் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள நல்ல தண்ணீரைக் குடிப்பது வழக்கம்.

“நீங்கள் நேசிக்கும் பொருட் களிலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் நன்மையை அடையவே மாட்டீர்கள்” என்ற (3:92) இறை வசனம் இறங்கியதும், அபூதல்ஹா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹு தஆலா, “நீங்கள் நேசிக்கும் பொருட் களிலிருந்து தர்மம் செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்” எனக் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அது அல்லாஹ்விற்காக தர்மம் ஆகட்டும்! நான் அதன் மூலம் அல்லாஹ்விடம் நன்மையையும் அது (அவனிடம் எனது மறுமை வாழ்வின் நலனுக்கான) சேமிப்பாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே “அல்லாஹ்வின் தூதரே! அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” எனக் கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் “ஆஹா! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாகவே செவியேற்று விட்டேன். நீர் அதை உமது நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் உசிதமாகக் கருதுகின்றேன்” எனக் கூறினார்கள்.

அதற்கு அபூதல்ஹா (ரலி) “அல்லாஹ்வின் தூதரே! நான் அவ்வாறே செய்கிறேன்!” எனக் கூறிவிட்டு, அத்தோட்டத்தைத் தமது நெருங்கிய உறவினருக்கும் தமது தந்தையுடன் பிறந்தவரின் குழந்தைகளுக்கும் பங்கிட்டுவிட்டார்.

(புகாரி: 1461, 2318, 2769, 4555, 5611)

எனவே குடும்பத்தினருக்காகச் செலவு செய்வது மற்ற தான தர்மங்களை விடவும் மேலானது என்பதை இந்தச் சம்பவத்தின் மூலம் நாம் புரிந்து கொள்கிறோம்.  குடும்பத்தினரைத் தன்னிறைவான வர்களாக மாற்றிய பிறகு குடும்பத்தை யும் தாண்டி மற்றவர்களுக்கு தான தர்மங்கள் செய்வது நல்லது. குடும்பத்திற்குச் செலவு செய்வதும் தான தர்மத்தில் உள்ளது தான் என்றும், இதற்கும் மறுமையில் எண்ணிலடங்கா நற்கூலிகள் கிடைக்கும் என்றும் நம்பிச் செயல்பட வேண்டும்.