குடியரசுத் தலைவரையும் விட்டுவைக்காத தீண்டாமை

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

குடியரசுத் தலைவரையும் விட்டுவைக்காத தீண்டாமை

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றார். ராம்நாத் கோவிந்த் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த கோவிலின் பூசாரி, இவரை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்து விட்டார். இந்து மதத்தைச் சேர்ந்த தாழ்த்தப் பட்டவர்கள் இவ்வாறு அவமதிக்கப் படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு இந்திய ராணுவ அமைச்சராக இருந்த பாபு ஜகஜீவன் ராம் மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு சிலையை தொட்டுத் திறந்து வைத்து விட்டார். அவர் தாழ்த்தப் பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் சிலைக்கு தீட்டு பட்டு விட்டது

எனக் கூறி மராட்டியத்தைச் சேர்ந்த பார்ப்பனர்கள் அந்தச் சிலையைக் கழுவி தூய்மை செய்தனர். தாழ்த்தப் பட்டவர்களில் மிகப் பெரிய தலைவராக திகழ்பவர் அம்பேத்கர். இவருக்கு ஏற்பட்ட தீண்டாமைக் கொடுமையில் இந்துவாகப் பிறந்த நான் இந்துவாக சாக மாட்டேன் என இவரை சூளுரை ஏற்கச் செய்தது. இந்தியாவின் ஜனாதிபதியாகவும், ராணுவ அமைச்சராகவும், அரசியல் சாசனத்தை வகுத்த சிற்பியாகவும் இருந்தவர்களையே தீண்டாமைக் கொடுமை இந்தப் பாடு படுத்தியது என்றால் கடைக்கோடி தாழ்த்தப் பட்டவர்களை தீண்டாமை என்ன பாடுபடுத்தும்?

என்பதை நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. இந்த தீண்டாமைக் கொடுமையை அகற்ற அம்பேத்கர், பெரியார், ஜோதிபாபூலே, நாராயண குரு என்று பல தலைவர்களும்போராடினார்கள். தீண்டாமைக்கு எதிராக போராடிய இந்தத் தலைவர்கள் தான் மறைந்தார்களே தவிர தீண்டாமை மட்டும் மறையவே இல்லை. இந்தத் தலைவர்களின் போராட்டத்தால் ஒரே ஒருவருக்கு கூட தீண்டாமையிலிருந்து விடுதலை கிடைக்கவில்லை. காரணம் இவர்கள் இந்து மதத்திற்கு உள்ளிருந்து போராடினார்கள் என்பதை எல்லோரும் எண்ணிப் பார்க்க வேண்டும். கோவிலின் கருவறையில் எந்த சாதியினர் பூஜை செய்ய வேண்டும்?

கருவறைக்கு வெளியே எந்தெந்த சாதியினர் நிற்க வேண்டும்? கோவிலின் வாசலில் எந்த சாதியினர் நிற்க வேண்டும்? என இந்து மதத்தில் தனி அகமமே இருக்கிறது. இந்த அகம விதிகளை ஏற்று இந்துக்களாக இருக்க விரும்புபவர்கள் இந்து மதத்தில் இருக்கலாம். இந்த அகம விதிகளை ஏற்க மாட்டோம். ஆனால் இந்துக்களாகவும் இருப்போம் என கிளம்பியவர்கள் அகம விதிகளின் முன்னால் தோற்றுப் போயிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இந்து மதத்தில் மிகப் பெரிய புரட்சி செய்தவர் என்று ராமானுஜரை சொல்வார்கள். இந்த ராமானுஜரை ஹீரோவாக்கி, கலைஞர் கருணாநிதி ஒரு வரலாறு எழுதி, அது கலைஞர் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது.

இந்த ராமானுஜர் கீழ்ச் சாதியாக கருதப்பட்ட சாத்தாதயா ஸ்ரீ வைஷ்னவா என்ற சாதியினருக்கு அகம விதிகளுக்கு எதிராக பூணூல் அணிவித்தார். ராமானுஜரால் பூணூல் அணிவிக்கப் பட்ட இந்த சாதியினர் பார்ப்பனர்களைப் போல நடை, உடை, பாவனையில் பார்ப்பனர் போன்று காட்சியளிப்பார்கள். ஆனால் பார்ப்பனர்கள் இவர்களை இதுவரை பார்ப்பனர்களாக ஏற்றது இல்லை. இவர்களால் கோவில் வாசலில் அமர்ந்து சாமிக்கு பூ கட்டி கொடுக்க முடியுமே தவிர, கோவிலில் உள்ள கருவறைக்குள் நுழைந்து சாமிக்கு பூஜை செய்ய முடியாது. சாத்தாதயா ஸ்ரீ வைஷ்னவா சாதியினருக்கு சமஸ்கிருத மந்திரங்கள் தெரியாது.

ஏனெனில் பார்ப்பனர்கள் இவர்களுக்கு சமஸ்கிருத மந்திரங்கள் சொல்லி தரமாட்டார்கள். மேலும் இந்த சாதியினரோடு பெண், கொடுக்கல், வாங்கலும் செய்யமாட்டார்கள். இவர்களுக்கு மிஞ்சியதெல்லாம் வெறும் பூணூல் கயிறு மட்டும் தான். எனவே அகம விதிகளுக்கு உட்பட்டு தான் ஒருவர் இந்துவாக இருக்க முடியுமே தவிர அதை மீறிய ஒருவர் இந்துவாக இருக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் புரியாமல் போராடப் போய் தான் இந்தியாவில் உள்ள ஒருவர் கூட தீண்டாமையில் இருந்து விடுதலை பெறவில்லை. மார்க்சிய சிந்தனையாளர்கள், பெரியார் தொண்டர்கள் என பலரும் தங்களை இந்துக்கள் இல்லை என்று அறிவித்துக் கொண்டு, இந்து மதத்திற்கு எதிராக பேசுவார்கள்.

ஆனாலும் அரசமைப்பு சட்டப்படி இவர்களும் இந்துக்களே என்பதை இவர்களாலும் மறுக்க முடியாது. ஒருவரை விட்டு தீண்டாமை விலக வேண்டும் என்றால் அதற்கு ஒரே தீர்வு இஸ்லாம் மட்டுமே. பெரியாரும் கூட இதை இன இழிவு நீங்க இஸ்லாமே நன் மருந்து என்றார். இப்படிச் சொன்ன இவர் ஏன் இஸ்லாத்தை தழுவ வில்லை? என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும். இந்தியாவில் உள்ள தாழ்த்தப் பட்ட மக்கள் தீண்டாமைக் கொடுமையில் சிக்கி உழலுவதைப் போல கறுப்பின மக்களையும் தீண்டாமை விரட்டி விரட்டி தாக்கியது. உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரர் முஹம்மது அலி இதற்கு தீர்வாக இஸ்லாத்தைக் கண்டு, அதைத் தழுவினார்.

கறுப்பின மக்களுக்காக போராடிய மிகப் பெரிய தலைவர் மால்கம் எக்ஹும் இஸ்லாத்தை தழுவுவதே இதற்கு தீர்வு என முடிவெடுத்து இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். தமிழ்நாட்டில் அடியார், டாக்டர் சேப்பன், கொடிக்கஸ் ஷேக் அப்துல்லாஹ், மணி, பெரியார் தாசன் போன்ற சிந்தனையாளர்கள் எல்லாம் இஸ்லாத்தை தழுவி, தீண்டாமையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டார்கள். இஸ்லாத்தை ஏற்ற இவர்களை விட்டு தீண்டாமை வெருண்டு ஓடியதே தவிர இவர்களை தொட்டுப் பார்க்கும் துணிவு தீண்டாமைக்கு இருக்கவே இல்லை. இதை தாழ்த்தப் பட்ட மக்கள் எண்ணிப் பார்த்து இஸ்லாத்தை ஏற்பதின் மூலமே தீண்டாமையை விரட்டியடிக்க முடியும் என்ற முடிவுக்கு வர வேண்டும்.

இந்த தீண்டாமையை விட்டு வெளிவர மனமில்லை எனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைப் போல இருப்பதில் யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இருக்க முடியாது. ஏனெனில் இந்தியக் குடிமகன் ஒருவன் தான் விரும்பிய மதத்தை தழுவ, பின்பற்ற, பிரச்சாரம் செய்ய அரசமைப்பு சட்டத்தின் 25(1)வது பிரிவு உரிமை வழங்குகிறது. இந்த உரிமையை அடிப்படை உரிமையாகவும் ஆக்கி வைத்துள்ளது. சரிதானே!

Source : unarvu ( 15/06/18 )