கிறைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் படுகொலைகள்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

கிறைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் படுகொலைகள்

கிறைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் படுகொலைகள் (Christchurch mosque shootings) 2019, மார்ச் 15 வெள்ளிக்கிழமை அன்று நியூசிலாந்து, கிறைஸ்ட்சேர்ச் நகரில் பிற்பகல் 1:40 மணியளவில் அல் நூர் பள்ளிவாசல், லின்வுட் இசுலாமிய மையம் ஆகியவற்றில் இடம்பெற்றது. வெள்ளி தொழுகையின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர், 50 பேர் காயமடைந்தனர்.இந்நிகழ்வு தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் மட்டுமே குற்றஞ்சாட்டப்பட்டார். இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என நியூசிலாந்து பிரதமர் யெசிந்தா அடர்ன் தெரிவித்தார். இப்படுகொலைகளை நிகழ்த்தியவர் பிரெண்டன் டராண்ட் என்ற ஆத்திரேலியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர் தனது தாக்குதலை முகநூலில் நேரலையாகப் பதிவு செய்திருக்கிறார்.

1943 ஆம் ஆண்டில், நியூசிலாந்து பெதர்ஸ்டன் போர்க்குற்றவாளிகள் முகாம் கலவரங்களில் 49 பேர் கொல்லப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் இந்நாட்டில் இடம்பெற்ற மிகப்பெரும் தாக்குதல் இதுவாகும்.1997 ஆம் ஆண்டிற்குப் பின்னர் நியூசிலாந்தில் இடம்பெற்ற முதலாவது பொதுமக்கள் மீதான துப்பாக்கிச்சூட்டு நிகழ்வு இதுவாகும்.

தாக்குதல்கள்

முதலாவது தாக்குதல் கிறைஸ்ட்சேர்ச்சின் ரிக்கார்ட்டன் என்ற புறநகரில் அமைந்துள்ள அல் நூர் பள்ளிவாசலில் 2019 மார்ச் 15 பிற்பகல் 1:40 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது. கொலையாளி மகிழுந்து ஒன்றில் வந்து பள்ளிவாசல் முகப்பிலுள்ளவர்களைக் குறிவைத்து சுட்டார். தனது தாக்குதல்களை தலைமேல் பொருத்தப்பட்டிருந்த படப்பிடிப்பு கருவி மூலம் படம்பிடித்து முகநூல் என்னும் சமூகவலைத்தளத்தினூடாக நேரடியாக ஒளிபரப்பினார். அக்காணொளியின் நீளம் சுமார் 17 நிமிடங்கள் ஆகும். அதன் தொடர்ச்சியாக 5 கிமீ தூரத்தில் அமைந்துள்ள லின்வுட் இசுலாமிய மையத்தில் நடத்தப்பட்டது. முன்னர் வெளிவந்த தகவல்களில் ஒரே நேரத்தில் பல்முனைத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டது. ஆனாலும்,இரண்டு பள்ளிவாசல்களிலும்  ஒருவரே திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாகப் பின்னர் வெளியிடப்பட்ட தகவல்கள் தெரிவித்தன.

அல் நூர் பள்ளிவாசல், ரிக்கார்ட்டன்

துப்பாக்கி சூடு பிர்பகல் 1:40 மணியளவில் ரிக்கார்ட்டன், டீன்சு சாலையில் அமைந்துள்ள அல் நூர் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை  அன்று தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது தானியங்கி துப்பாக்கி மூலம் சுட ஆரம்பித்தான். இத்தாகுதலை அவன் முகநூல் மூலம் பள்ளிவாசலுள் நுழைந்து தாக்குதல் முடிந்து வெளியே வரும்வரை 17 நிமிடங்கள் நேரலையில் காட்சிப்படுத்தினான். துப்பாக்கிதாரி நியோ நாட்சி குறியீடுகளுடன் 28-அகவை கொண்ட வெள்ளை ஆதிக்கவாதி ஆத்திரேலியன் என ஊடகங்கள் அவனை அடையாளப்படுத்தின. தாக்குதலுக்கு முன்னர் துப்பாக்கிதாரி தனது மகிழுந்தில் அமர்ந்தவாறு பிரித்தானிய இராணுவத்தின் பாரம்பரிய அணிவகுப்புப் பாடலையும், ரதொவான் கராட்சிச்சை புகழும் பொசுனியப் போரின் செர்பிய தேசியப் பாடலையும் இசைக்கவிட்டான். தாக்குதலை ஆரம்பிக்க முன்னர், பள்ளிவாசலில் நின்றிருந்த ஒரு தொழுகையாளரினால் “ஹலோ சகோதரா” என வரவேற்கப்பட்டான். அவரையே அவன் முதலில் சுட்டுக் கொன்றான்.

பள்ளிவாசலில் 300 முதல் 500 வரையானவர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். கொலையாளி அங்கிருந்து வெளியேறும் போது, துப்பாக்கி ஒன்றைக் கீழே விழுத்திவிட்டு சென்றதைத் தாம் கண்டதாக பள்ளிவாசலுக்கு அருகில் இருந்த ஒருவர் கூறினார். துப்பாக்கிதாரி பள்ளிவாசலில் இருந்து வெளியேறும் போது அப்பகுதியில் இருந்தோர் மீதும் சுட்டதாக முகநூல் நேரலையில் காணப்பட்டது. பள்ளிவாசலில் ஆறு நிமிடங்கள் வரை தங்கியிருந்தான். லின்வுட் இசுலாமிய மையத்தை நோக்கிச் செல்லும் போது, பீலி சாலை வழியே சென்ற போது நேரலை நிறுத்தப்பட்டது.

 

Source: https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D