காற்று இறைவனின் சான்றே!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

சூரியக் கதிர்கள், சுடும் வெப்பத்தைத் தொடர்ந்து கொட்டிக் கொண்டிருக்கும் கோடை காலம் . அக்னிக் கதிர்களின் ஆவேசத் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள பல்வேறு வழிகளைக் கையாள வேண்டிய காலநிலை. அடிக்கடி நீர் ஆகாரங்களைப் பருகுவது, நிழல்களில் ஒதுங்கி ஓய்வெடுப்பது போன்றவை கட்டாயமாகிப் போன இக்கட்டான நிலை. சூழ்நிலை இவ்வாறிருக்க, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று, அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்படும் கொடுமை வேறு.

ஓடாத மின்விசிறிகளுக்கு கீழே வியர்வை வழிய மனமும் தேகமும் வெந்து, காத்துக் கொண்டிருக்கும் மக்களின் பரிதாப நிலையை என்னவென்று சொல்வது? இதனைத் தாக்குப்பிடிக்க இயலாத நபர்கள், தற்காலிக உதவியைத் தேடியவாறு ஓலை விசிறி, காகித விசிறி என்று பழைய சாதனங்கள் பக்கம் செல்லவும் தயாராகி விடுகிறார்கள். நெருக்கடியான அடுக்குமாடி வீடுகள் பெருகிவிட்ட காரணத்தால், காற்றோட்டத்திற்காக இரவு நேரத்தில் வீட்டு முற்றங்களிலும், மாடிகளிலும் படுத்துறங்கும் மக்கள் கூட்டம்.

இந்த நிகழ்வுகள் நமக்கு உணர்த்தும் உண்மைதான் என்ன? கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து காத்துக் கொள்வதற்கு இருக்கும் வாய்ப்புகளில் காற்றும் முக்கியமான ஒன்று என்பதை எவரும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இயற்கையின் பட்டியலில் இருக்கும் காற்றின் அருமையைப் புரிந்து கொள்ள வேண்டிய பொன்னான தருணம் இது. இப்போதாவது, இத்தகைய இன்றியமையாத காற்று குறித்து குர்ஆன் மற்றும் நபிவழிகளின் துணையோடு சில செய்திகளைத் இந்த உரையில் தெரிந்துக் கொள்வோம்.

காற்றின் முக்கியத்துவம்

திருமறைக் குர்ஆனைப் படித்துப் பார்க்கும் போது, பல்வேறு இடங்களில் ஒரே விதமான வசனங்கள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். அந்த வகையில், உலகிலே இருக்கும் முக்கியமான முக்கியத்துவமான பொருட்கள், காரியங்கள் மீது அல்லாஹ் சத்தியமிட்டுக் கூறும் வசனங்கள் ஆங்காங்கே அதிகம் காணப்படுகின்றன. அவற்றுள் ஓர் அங்கமாக, காற்றும் குறிப்பிடப்பட்டு இருப்பதை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 وَالذّٰرِيٰتِ ذَرْوًا ۙ‏  فَالْحٰمِلٰتِ وِقْرًا ۙ‏  فَالْجٰرِيٰتِ يُسْرًا ۙ‏ فَالْمُقَسِّمٰتِ اَمْرًا ۙ‏  اِنَّمَا تُوْعَدُوْنَ لَصَادِقٌ ۙ‏

வேகமாக புழுதியைப் பரத்துபவை மீதும், மழையைச் சுமப்பவற்றின் மீதும், எளிதாகச் செல்பவை மீதும், கட்டளைகளைப் பங்கிடுவோர் மீதும் சத்தியமாக! நீங்கள் எச்சரிக்கப்படுவது உண்மை.

(அல்குர்ஆன்: 51:1-5)

 وَالْمُرْسَلٰتِ عُرْفًا ۙ‏  فَالْعٰصِفٰتِ عَصْفًا ۙ‏  وَّالنّٰشِرٰتِ نَشْرًا ۙ‏  فَالْفٰرِقٰتِ فَرْقًا ۙ‏  فَالْمُلْقِيٰتِ ذِكْرًا ۙ‏  عُذْرًا اَوْ نُذْرًا ۙ‏

தொடர்ந்து அனுப்பப்படுபவை மீதும், கடுமையாக வீசும் புயல் மீதும் சத்தியமாக! பரப்பிவிடுபவை மீதும், ஒரேயடியாகப் பிரித்து விடுபவை மீதும் சத்தியமாக! மன்னிப்பாகவோ, எச்சரிக்கையாகவோ படிப்பினையைப் போடுபவற்றின் (காற்றின்) மீது சத்தியமாக! 

(அல்குர்ஆன்: 77:1-6)

காற்றே இல்லை; அப்படியே காற்று இருந்தாலும் அது சுவாசிப்பதற்கு உகந்ததாக இல்லை என்பதாலேயே பிற கோள்களில் ஜீவராசிகள் வாழ்வதற்குக் கடுகளவும் வாய்ப்பில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். நாம் உயிர் வாழ்வதற்குக் காற்று கட்டாயம் இருக்க வேண்டும். அத்துடன் அது தேவையான அளவில் தகுதியான நிலையில் இருப்பதும் அவசியம். இத்தகைய தன்மை பூமியில் மட்டுமே நிலவுகிறது.

மனிதன் ஒரு நிமிடத்தில் சுவாசிக்கும் காற்றின் அளவு, சுமார் 15.5. லிட்டர். பெரிய அகன்ற தாவரங்கள் தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தின் மூலம் தான் உயிர் வாழ்கின்றன. காற்றில் ஏற்படும் அழுத்த மாறுபாடு மழைப் பொழிவுக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. இப்படி, காற்றின் சிறப்புகளை, நன்மைகளை, பயன்களைச் சொல்வதாக இருந்தால் ஏடுகள் போதாது என்பதே நிதர்சனம்.

இறைவனை அறிவதற்குரிய சான்று

ஆகாய வெளியில் அங்கும் இங்கும் அலைபாயும் காற்று அற்பமானதும் அல்ல; அலட்சியம் செய்யத்தக்கதும் அல்ல. இந்தப் பிரபஞ்சத்தை வடிவமைத்து, கட்டுக்கோப்பாக அடக்கி ஆளும் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளத் துணைபுரியும் அற்புதமான சான்று. அவன் ஞானமிக்கவன்; அனைத்தையும் அறிந்தவன் என்பதை, திசை மாறிமாறி வீசும் காற்றின் மூலம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். இந்தப் பேருண்மையை எடுத்துரைக்கும் திருமறை வசனங்களைப் பாருங்கள்.

 اِنَّ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِىْ تَجْرِىْ فِى الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ وَمَآ اَنْزَلَ اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنْ مَّآءٍ فَاَحْيَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيْهَا مِنْ کُلِّ دَآ بَّةٍ وَّتَصْرِيْفِ الرِّيٰحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَآءِ وَالْاَرْضِ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّعْقِلُوْنَ‏

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும், அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழையிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையே வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும் விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன்: 2:164)

وَمِنْ اٰيٰتِهٖۤ اَنْ يُّرْسِلَ الرِّيَاحَ مُبَشِّرٰتٍ وَّلِيُذِيْقَكُمْ مِّنْ رَّحْمَتِهٖ وَلِتَجْرِىَ الْفُلْكُ بِاَمْرِهٖ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏

அவன் தனது அருளை உங்களுக்குச் சுவைக்கச் செய்வதற்காகவும், கப்பல்கள் அவன் கட்டளைப்படி செல்வதற்காகவும், அவனது அருளை நீங்கள் தேடுவதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் நற்செய்தி கூறும் காற்றுகளை அனுப்பி வைப்பது அவனது சான்றுகளில் உள்ளவை. 

(அல்குர்ஆன்: 30:46)

وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ وَمَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنْ رِّزْقٍ فَاَحْيَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَ تَصْرِيْفِ الرِّيٰحِ اٰيٰتٌ لِّقَوْمٍ يَّعْقِلُوْنَ‏

இரவு பகல் மாறி மாறி வருவதிலும், வானிலிருந்து அல்லாஹ் (மழைச்) செல்வத்தை இறக்கியதிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் உயிரூட்டுவதிலும், காற்றுகளைத் திருப்பி விடுவதிலும் விளங்கும் சமுதாயத்துக்குப் பல சான்றுகள் உள்ளன. 

(அல்குர்ஆன்: 45:5)

وَمِنْ اٰيٰتِهِ الْجَوَارِ فِى الْبَحْرِ كَالْاَعْلَامِؕ‏  اِنْ يَّشَاْ يُسْكِنِ الرِّيْحَ فَيَظْلَلْنَ رَوَاكِدَ عَلٰى ظَهْرِهٖؕ اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّـكُلِّ صَبَّارٍ شَكُوْرٍۙ‏

மலைகளைப் போன்று கடலில் செல்லும் கப்பல்களும் அவனது சான்றுகளில் உள்ளவை. அவன் நினைத்தால் காற்றை நிறுத்தி விடுகிறான். உடனே அது அதன் (கடலின்) மேற்பரப்பில் நின்று விடுகின்றது. சகிப்புத் தன்மையும் நன்றியுணர்வும் உள்ள ஒவ்வொருவருக்கும் இதில் பல சான்றுகள் உள்ளன. 

(அல்குர்ஆன்: 42:32-33)

இறைவனின் கட்டுப்பாட்டில் காற்று

இயற்கையின் கட்டுப்பாடு என்பது இறைவனின் கைவசத்தில் இருக்கிறது. அதிலே காற்றுக்கு மட்டும் விதிவிதிலக்கு இருக்கிறதா என்ன? அவ்வாறில்லை. அவனே தான் விரும்பும் வகையில் காற்றை இயக்குகிறான். அதன் மூலம் பல விதமான மாற்றங்களை, விளைவுகளை ஏற்படுத்துகிறான்.

கடவுளே இல்லை என்று வாதிடுபவர்களும், காண்பதை எல்லாம் கடவுள் என்று சொல்பவர்களும், அழித்துவிட இயலாத காற்றைக் குறித்துக் கொஞ்சமாவது கண்டிப்பாகச் சிந்திக்க வேண்டும். பருவ மாற்றத்திற்குத் தோதுவாக வெவ்வேறு திசைகளில் பயணிக்கும் காற்றின் மாறுதலுக்குப் பின்னணியில் இருக்கும் படைத்தவனின் நுட்பத்தைப் புரிந்து அவனுக்கு அடிபணிந்து வாழவேண்டும்.

وَهُوَ الَّذِىْ يُرْسِلُ الرِّيٰحَ بُشْرًۢا بَيْنَ يَدَىْ رَحْمَتِهٖ ‌ؕ حَتّٰۤى اِذَاۤ اَقَلَّتْ سَحَابًا ثِقَالًا سُقْنٰهُ لِبَلَدٍ مَّيِّتٍ فَاَنْزَلْنَا بِهِ الْمَآءَ فَاَخْرَجْنَا بِهٖ مِنْ كُلِّ الثَّمَرٰتِ‌ؕ كَذٰلِكَ نُخْرِجُ الْمَوْتٰى لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏

தனது அருளுக்கு முன்னால் நற்செய்தியாக அவனே காற்றை அனுப்புகிறான். அது கனமான மேகத்தைச் சுமக்கும் போது இறந்து போன ஊருக்கு அதை ஓட்டிச் செல்கிறோம். அதிலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் எல்லாப் பலன்களையும் வெளிப்படுத்துகிறோம். இவ்வாறே இறந்தோரையும் வெளிப்படுத்துவோம். (இதன் மூலம்) நீங்கள் படிப்பினை பெறக் கூடும்.

(அல்குர்ஆன்: 7:57)

 اَمَّنْ يَّهْدِيْكُمْ فِىْ ظُلُمٰتِ الْبَرِّ وَ الْبَحْرِ وَمَنْ يُّرْسِلُ الرِّيٰحَ بُشْرًۢا بَيْنَ يَدَىْ رَحْمَتِهٖؕ ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِ‌ؕ تَعٰلَى اللّٰهُ عَمَّا يُشْرِكُوْنَؕ‏

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) தரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் உங்களுக்கு வழிகாட்டியவனா? தனது அருளுக்கு முன் நற்செய்தி கூறிட காற்றை அனுப்பியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அல்லாஹ் உயர்ந்தவன்.

(அல்குர்ஆன்: 27:63)

காற்றைக் இயக்கும் அற்புதம்

ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும்; அவனது ஆணைப்படி அழகிய முறையில் வாழ வேண்டும் என்பதைப் போதிப்பதற்கு ஏராளமான இறைத்தூதர்கள் வந்துச் சென்றுள்ளார்கள். அவர்களை அடையாளம் கண்டு கொள்வதற்கு அல்லாஹ் அவர்களுக்குச் சில அடையாளங்களைக் கொடுத்திருந்தான். அத்தகைய திருத்தூதர்களில் ஒருவர்தாம் சுலைமான் (அலை) அவர்கள்.

இந்த நபிக்குக் காற்றை வசப்படுத்தும் அற்புதம் கொடுக்கப்பட்டு இருந்தது. மனிதர்களால் ஒருபோதும் செய்ய முடியாத காரியத்தை சுலைமான் (அலை) அவர்கள் செய்ததன் மூலம், அவர் சத்தியத்தின் பக்கம் அழைக்கும் அல்லாஹ்வின் தூதர் என்பதை விளங்கிக் கொள்ளும் வாய்ப்பு அன்றைய கால மக்களுக்கு கிடைத்தது. இந்தச் செய்தியை இறைவனே தமது இறுதி வேதமான திருக்குர்ஆனில் குறிப்பிட்டும் இருக்கிறான்.

 وَلِسُلَيْمٰنَ الرِّيْحَ عَاصِفَةً تَجْرِىْ بِاَمْرِهٖۤ اِلَى الْاَرْضِ الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا‌ؕ وَكُنَّا بِكُلِّ شَىْءٍ عٰلِمِيْنَ‏

வேகமாக வீசும் காற்றை ஸுலைமானுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அது நாம் பாக்கியம் செய்த பூமிக்கு அவரது கட்டளைப்படி சென்றது. நாம் ஒவ்வொரு பொருளையும் அறிவோராக இருக்கிறோம்.

(அல்குர்ஆன்: 21:81)

 وَلِسُلَيْمٰنَ الرِّيْحَ غُدُوُّهَا شَهْرٌ وَّرَوَاحُهَا شَهْرٌۚ وَ اَسَلْنَا لَهٗ عَيْنَ الْقِطْرِؕ وَمِنَ الْجِنِّ مَنْ يَّعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِاِذْنِ رَبِّهِؕ وَمَنْ يَّزِغْ مِنْهُمْ عَنْ اَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ السَّعِيْرِ‏

ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம். தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்கு சுவைக்கச் செய்வோம்.

(அல்குர்ஆன்: 34:12)

وَلَقَدْ فَتَنَّا سُلَيْمٰنَ وَاَلْقَيْنَا عَلٰى كُرْسِيِّهٖ جَسَدًا ثُمَّ اَنَابَ‏ – قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَهَبْ لِىْ مُلْكًا لَّا يَنْۢبَغِىْ لِاَحَدٍ مِّنْۢ بَعْدِىْ‌ۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏ – فَسَخَّرْنَا لَهُ الرِّيْحَ تَجْرِىْ بِاَمْرِهٖ رُخَآءً حَيْثُ اَصَابَۙ‏

ஸுலைமானை நாம் சோதித்தோம். அவரது சிம்மாசனத்தில் (அவரை) ஒரு சடலமாகப் போட்டோம். பின்னர் அவர் திருந்தினார். “என் இறைவா! என்னை மன்னித்து விடு! எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு! நீயே வள்ளல்” எனக் கூறினார். அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப்படி அவர் நினைத்தவாறு பணிந்து அது சென்றது.

(அல்குர்ஆன்: 38:34-36)

காற்றின் மூலம் அழிவு

நமக்கு வாழ்வைக் கொடுத்திருக்கும் ஏக இறைவனின் மகத்துவத்தையும் மாண்பையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவன் அளிக்கும் அருளை எதிர்பார்த்தவர்களாக, அழிவை அஞ்சியவர்களாக வாழ வேண்டும். அசத்தியத்திலே ஆணவத்தோடு இருப்பவர்களுக்கு, அழிச்சாட்டியம் செய்பவர்களுக்கு அவன் நாடினால் எந்த விதத்திலும் தண்டனை வழங்குவான் என்பதை மறந்துவிடக் கூடாது.

நமக்கு முன்னால் வாழ்ந்த ஆது எனும் சமுதாய மக்கள் மிகவும் வலிமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள்.  அவர்களுக்கு ஹூத் நபியை அல்லாஹ் அனுப்பினான். ஆனால் அந்த மக்களோ சத்தியத்தை ஏற்க மறுத்தார்கள்; பெருமையடித்தார்கள். காற்றை அனுப்பி அவர்களை அல்லாஹ் அழித்தான். இந்தக் கடந்த கால வரலாறு குர்ஆனில் இடம் பெற்றுள்ளது.

وَاذْكُرْ اَخَا عَادٍؕ اِذْ اَنْذَرَ قَوْمَهٗ بِالْاَحْقَافِ وَقَدْ خَلَتِ النُّذُرُ مِنْۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهٖۤ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ ؕ اِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ‏ قَالُـوْۤا اَجِئْتَـنَا لِتَاْفِكَنَا عَنْ اٰلِهَـتِنَا‌ ۚ فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ‏

قَالَ اِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللّٰهِ ‌ۖ وَاُبَلِّغُكُمْ مَّاۤ اُرْسِلْتُ بِهٖ وَلٰـكِنِّىْۤ اَرٰٮكُمْ قَوْمًا تَجْهَلُوْنَ‏

فَلَمَّا رَاَوْهُ عَارِضًا مُّسْتَقْبِلَ اَوْدِيَتِهِمْ ۙ قَالُوْا هٰذَا عَارِضٌ مُّمْطِرُنَا‌ ؕ بَلْ هُوَ مَا اسْتَعْجَلْتُمْ بِهٖ ‌ۚ رِيْحٌ فِيْهَا عَذَابٌ اَ لِيْمٌۙ‏

 تُدَمِّرُ كُلَّ شَىْءٍ ۭ بِاَمْرِ رَبِّهَا فَاَصْبَحُوْا لَا يُرٰٓى اِلَّا مَسٰكِنُهُمْ‌ؕ كَذٰلِكَ نَجْزِى الْقَوْمَ الْمُجْرِمِيْنَ‏

அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது; மகத்தான நாளின் வேதனையை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன் என்று ஆது சமுதாயத்திற்கு அவர்களின் சகோதரர் மணற்குன்றுகளில் நின்று எச்சரித்ததை நினைவூட்டுவீராக! எச்சரிப்போர் அவருக்கு முன்பும் பின்பும் சென்றுள்ளனர்.

எங்கள் கடவுள்களை விட்டும் எங்களைத் திருப்புவதற்காக நீர் எங்களிடம் வந்துள்ளீரா? நீர் உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வருவீராக! என்று கேட்டனர்.

(இது பற்றிய) ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. நான் எதைக் கொடுத்து அனுப்பப்பட்டுள்ளேனோ அதை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். எனினும் அறியாத கூட்டமாகவே உங்களை நான் கருதுகிறேன் என்று அவர் கூறினார்.

தமது பள்ளத் தாக்குகளை நோக்கி வரும் மேகமாகவே அதை அவர்கள் கருதினார்கள். இது நமக்கு மழை பொழியும் மேகமே எனவும் கூறினர்.

இல்லை! இது எதற்கு அவசரப் பட்டீர்களோ அதுவே. துன்புறுத்தும் வேதனை நிரம்பிய காற்றாகும் (என்று கூறப்பட்டது.) தனது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு பொருளையும் அது அழித்தது.

அவர்களின் குடியிருப்புகளைத் தவிர (வேறு எதுவும்) காணப்படாத நிலையைக் காலையில் அடைந்தனர். குற்றம் செய்யும் கூட்டத்தை இவ்வாறே தண்டிப்போம்.

(அல்குர்ஆன்: 46:21-25)

 فَاَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوْا فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوْا مَنْ اَشَدُّ مِنَّا قُوَّةً  ‌ؕ اَوَلَمْ يَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِىْ خَلَقَهُمْ هُوَ اَشَدُّ مِنْهُمْ قُوَّةً  ؕ وَكَانُوْا بِاٰيٰتِنَا يَجْحَدُوْنَ‏ فَاَرْسَلْنَا عَلَيْهِمْ رِيْحًا صَرْصَرًا فِىْۤ اَيَّامٍ نَّحِسَاتٍ لِّـنُذِيْقَهُمْ عَذَابَ الْخِزْىِ فِى الْحَيٰوةِ الدُّنْيَا‌ ؕ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَخْزٰى‌ وَهُمْ لَا يُنْصَرُوْنَ‏

ஆது சமுதாயம் பூமியில் நியாயமின்றி ஆணவம் கொண்டனர். எங்களை விட வலிமை மிக்கவர் யார்? எனக் கேட்டனர். அவர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களை விட வலிமையானவன் என்பதை அவர் காணவில்லையா? அவர்கள் நமது சான்றுகளை மறுப்போராக இருந்தனர். எனவே இவ்வுலக வாழ்க்கையிலேயே இழிந்த வேதனையை அவர்களுக்குச் சுவைக்கச் செய்வதற்காக கெட்ட நாட்களில் அவர்கள் மீது கடும் புயல் காற்றை அனுப்பினோம். மறுமையின் வேதனை (இதை விட) மிகவும் இழிவு படுத்தக் கூடியது. அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 41:15-16)

 وَفِىْ عَادٍ اِذْ اَرْسَلْنَا عَلَيْهِمُ الرِّيْحَ الْعَقِيْمَ‌ۚ‏ مَا تَذَرُ مِنْ شَىْءٍ اَتَتْ عَلَيْهِ اِلَّا جَعَلَتْهُ كَالرَّمِيْمِؕ‏

ஆது சமுதாயத்திடமும் (படிப்பினை) உள்ளது. அவர்கள் மீது மலட்டுக் காற்றை அனுப்பினோம். அது எப்பொருளில் பட்டாலும் அதை மக்கிப் போனதைப் போன்று ஆக்காமல் இருந்ததில்லை.

(அல்குர்ஆன்: 51:41-42)

காற்றின் மூலம் உதவி

அல்லாஹ்வை முழுமையாக ஏற்றுக் கொண்டு அவன் சொன்னபடி வாழும் அடியார்களுக்கு அறியாப் புறத்தில் இருந்தும் அவன் அருள் புரிவான். நன்மைகளை அள்ளிக் கொடுப்பான். ஏதேனும் துன்பங்களின் போது எதிர்பார்க்காத விதத்திலும் காப்பாற்றுவான். இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், கண்ணுக்குத் தெரியாத காற்றின் மூலம்கூட உதவி செய்வான். இதற்கு ஆதாரமாக நபிகளார் காலத்தில் நடந்த சம்பவங்கள் இருக்கிகின்றன.

இஸ்லாத்தை வேரோடு ஒழிக்க வேண்டும்; முஸ்லிம்களை மொத்தமாக அழிக்க வேண்டும் என்பதற்காக இணை வைப்பவர்கள், காஃபிர்கள் என்று அனைவரும் ஒன்று திரண்டு போர் செய்ய வந்தார்கள். அவர்களின் தாக்குதலை முறியடிப்பதற்குக் கடந்து வர இயலாத அளவிற்கு முஸ்லிம்களால் பெரும் அகழ் தோண்டப்பட்டது. அந்த அகழ்ப் போரின் போது எதிரிகளை சீர்குலைக்க, திணறடிக்க அவர்களுக்கு எதிராக அல்லாஹ் கடும் காற்றை அனுப்பினான். அதன் மூலம் முஃமின்களுக்கு மிகப்பெரும் வெற்றி கிடைத்தது.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ جَآءَتْكُمْ جُنُوْدٌ فَاَرْسَلْنَا عَلَيْهِمْ رِيْحًا وَّجُنُوْدًا لَّمْ تَرَوْهَا‌ ؕ وَكَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرًا ۚ‏  اِذْ جَآءُوْكُمْ مِّنْ فَوْقِكُمْ وَمِنْ اَسْفَلَ مِنْكُمْ وَاِذْ زَاغَتِ الْاَبْصَارُ وَبَلَغَتِ الْقُلُوْبُ الْحَـنَـاجِرَ وَتَظُنُّوْنَ بِاللّٰهِ الظُّنُوْنَا ؕ‏ – هُنَالِكَ ابْتُلِىَ الْمُؤْمِنُوْنَ وَزُلْزِلُوْا زِلْزَالًا شَدِيْدًا‏

நம்பிக்கை கொண்டோரே! உங்களிடம் கூட்டுப் படையினர் வந்த போது அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடையை எண்ணிப் பாருங்கள்! அவர்களுக்கு எதிராகக் காற்றையும், நீங்கள் காணாத படையினரையும் அனுப்பினோம். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவனாக இருக்கிறான்.

அவர்கள் உங்கள் மேற்புறத்திலிருந்தும், உங்கள் கீழ்ப்புறத்திலிருந்தும் வந்த போது, பார்வைகள் நிலை குத்தி, இதயங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து, அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் பலவிதமான எண்ணங்களைக் கொண்ட போது, அங்கு தான் நம்பிக்கை கொண்டோர் சோதிக்கப் பட்டனர். அவர்கள் கடுமையாக ஆட்டுவிக்கப்பட்டார்கள்.

(அல்குர்ஆன்: 33:9-11)

نُصِرْتُ بِالصَّبَا، وَأُهْلِكَتْ عَادٌ بِالدَّبُورِ

(அகழ்ப் போரின் போது) நான் (ஸபா எனும்) கீழைக் காற்றின் வாயிலாக வெற்றி அளிக்கப் பட்டுள்ளேன்; ஆது சமுகத்தார் (தபூர் எனும்) மேலைக் காற்றினால் அழிக்கப்பட்டனர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(புகாரி: 1035, 3343)

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَدِمَ مِنْ سَفَرٍ، فَلَمَّا كَانَ قُرْبَ الْمَدِينَةِ هَاجَتْ رِيحٌ شَدِيدَةٌ تَكَادُ أَنْ تَدْفِنَ الرَّاكِبَ فَزَعَمَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «بُعِثَتْ هَذِهِ الرِّيحُ لِمَوْتِ مُنَافِقٍ» فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ، فَإِذَا مُنَافِقٌ عَظِيمٌ مِنَ الْمُنَافِقِينَ قَدْ مَاتَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தை முடித்து விட்டு வந்து கொண்டிருந்தார்கள். மதீனாவுக்கு அருகில் அவர்கள் வந்தபோது, கடுமையான (சூறாவளிக்) காற்று வீசியது. அது பயணிகளை மண்ணுக்குள் புதைத்துவிடப் பார்த்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இந்தக் காற்று ஒரு நயவஞ்சகனைக் கொல்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது என்று கூறினார்கள். மதீனாவுக்குள் வந்த போது, நயவஞ்சகர்களின் பெருந்தலைவன் ஒருவன் இறந்து விட்டிருந்தான்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
(முஸ்லிம்: 5367)

காற்றின் மூலம் எச்சரிக்கை

காற்றின் வேகத்தைப் பொறுத்து தென்றல், புயல் என்றெல்லாம் பெயரிட்டு அழைக்கிறோம். காற்றின் வேகத்தை அளக்க, திசையைக் கண்டறிய என்று அது தொடர்பாக ஆராய்வதற்குப் பல கருவிகளைக் கண்டுபிடித்துள்ளார்கள். இதற்குக் காரணம் என்ன? காற்று என்பது சாதாரணமானது அல்ல. அதன் மூலமும் அபாயகரமான அதிபயங்கரமான விளைவுகளும்கூட ஏற்படும்.

ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் என்று பழமொழி சொல்வார்கள். சில நேரங்களில் வீசும் காற்று மிகவும் வேகமானதாக இருக்கும். சுழன்று சுழன்று வீசுவது, மண்ணை, மணலை வாரி வீசுவது, மழையோடு சேர்ந்து தாக்குவது என்று பல வகையில் இருக்கும்.

இதனால் வீடுகள் இடிந்து விழும்; மின்கம்பங்கள் கோபுரங்கள் சாய்ந்து சரிந்துவிடும்; வாகனங்கள் தூக்கி எறியப்படும்; மனிதர்கள் சிக்கிப் பலியாவார்கள். இவ்வாறு, மோசமான பாதிப்புகள் கொடூரமான சம்பவங்கள் சூறாவளியால் நிகழ்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

இதுபோன்ற இன்னல்களில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற பயம் அனைவருக்கும் இருக்கும். இருந்தால் மட்டும் போதாது, ஏக இறைவனுக்கு மாறு செய்யாதவர்களாக நாம் இருக்க வேண்டும். அவனை நினைத்து துதித்து பெருமைப் படுத்துபவர்களாகத் திகழ வேண்டும். இந்த எச்சரிக்கை கலந்த அறிவுரையை பின்வரும் வசனங்கள் மூலம் பெற்றுக் கொள்ள முடிகிறது.

هُوَ الَّذِىْ يُسَيِّرُكُمْ فِى الْبَرِّ وَالْبَحْرِ‌ؕ حَتّٰۤى اِذَا كُنْتُمْ فِى الْفُلْكِ ۚ وَ جَرَيْنَ بِهِمْ بِرِيْحٍ طَيِّبَةٍ وَّفَرِحُوْا بِهَا جَآءَتْهَا رِيْحٌ عَاصِفٌ وَّجَآءَهُمُ الْمَوْجُ مِنْ كُلِّ مَكَانٍ وَّظَنُّوْۤا اَنَّهُمْ اُحِيْطَ بِهِمْ‌ ۙ دَعَوُا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَۙ  لَٮِٕنْ اَنْجَيْتَـنَا مِنْ هٰذِهٖ لَنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِيْنَ‏
  فَلَمَّاۤ اَنْجٰٮهُمْ اِذَا هُمْ يَبْغُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَـقِّ‌ ؕ 

கடலிலும், தரையிலும் அவனே உங்களைப் பயணம் செய்ய வைக்கிறான். நீங்கள் கப்பலில் இருக்கின்றீர்கள். நல்ல காற்று அவர்களை வழி நடத்துகிறது. அவர்கள் மகிழ்ச்சியடையும் போது புயல் காற்று அவர்களிடம் வருகிறது. ஒவ்வொரு இடத்திலிருந்தும் அவர்களிடம் அலையும் வருகிறது.

தாம் சுற்றி வளைக்கப்பட்டு விட்டதாக அவர்கள் முடிவு செய்கின்றனர். வழிபாட்டை உளத் தூய்மையுடன் அவனுக்கே உரித்தாக்கி இதிலிருந்து எங்களை நீ காப்பாற்றினால் நன்றியுள்ளோராக ஆவோம் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றனர். அவர்களை அவன் காப்பாற்றும் போது, நியாயமின்றி பூமியில் அட்டூழியம் செய்கின்றனர்.

(அல்குர்ஆன்: 10:22-23)

 اَيَوَدُّ اَحَدُكُمْ اَنْ تَكُوْنَ لَهٗ جَنَّةٌ مِّنْ نَّخِيْلٍ وَّاَعْنَابٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُۙ لَهٗ فِيْهَا مِنْ كُلِّ الثَّمَرٰتِۙ وَاَصَابَهُ الْكِبَرُ وَلَهٗ ذُرِّيَّةٌ ضُعَفَآءُ ۖۚ فَاَصَابَهَاۤ اِعْصَارٌ فِيْهِ نَارٌ فَاحْتَرَقَتْ‌ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُوْنَ

பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் ஒருவருக்கு இருக்கிறது; அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகளும் ஓடுகின்றன; அதில் அனைத்துக் கனிகளும் அவருக்கு உள்ளன; அவருக்குப் பலவீனமான சந்ததிகள் உள்ள நிலையில் அவருக்கு முதுமையும் ஏற்பட்டு விடுகிறது; அப்போது நெருப்புடன் கூடிய புயல் காற்று வீசி அ(த்தோட்டத்)தை எரித்து விடுகிறது. இந்த நிலையை உங்களில் எவரேனும் விரும்புவாரா? நீங்கள் சிந்திப்பதற்காக இவ்வாறே அல்லாஹ் சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறான்.

(அல்குர்ஆன்: 2:266)

وَاِذَا مَسَّكُمُ الضُّرُّ فِى الْبَحْرِ ضَلَّ مَنْ تَدْعُوْنَ اِلَّاۤ اِيَّاهُ‌ ۚ فَلَمَّا نَجّٰٮكُمْ اِلَى الْبَرِّ اَعْرَضْتُمْ‌ ؕ وَكَانَ الْاِنْسَانُ كَفُوْرًا‏ اَفَاَمِنْتُمْ اَنْ يَّخْسِفَ بِكُمْ جَانِبَ الْبَرِّ اَوْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا ثُمَّ لَا تَجِدُوْالَـكُمْ وَكِيْلًا ۙ‏ اَمْ اَمِنْتُمْ اَنْ يُّعِيْدَكُمْ فِيْهِ تَارَةً اُخْرٰى فَيُرْسِلَ عَلَيْكُمْ قَاصِفًا مِّنَ الرِّيْحِ فَيُغْرِقَكُمْ بِمَا كَفَرْتُمْ‌ۙ ثُمَّ لَا تَجِدُوْا لَـكُمْ عَلَيْنَا بِهٖ تَبِيْعًا‏

கடலில் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனைத் தவிர யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் மறைந்து விடுகின்றனர். அவன் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவுடன் புறக்கணிக்கிறீர்கள்! மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான். நிலப்பரப்பின் ஒரு பகுதியில் அவன் உங்களை விழுங்கச் செய்வது பற்றியோ, உங்கள் மீது கல் மழை பொழிவதைப் பற்றியோ அச்சமற்று இருக்கிறீர்களா?

பின்னர் உங்களுக்கு எந்தப் பொறுப்பாளரையும் காண மாட்டீர்கள். அல்லது மீண்டும் ஒரு தடவை அதில் (கடலில்) உங்களை அனுப்பும் போது, உங்களுக்கு எதிராகப் புயல் காற்றை அனுப்பி நீங்கள் (அவனை) மறுத்ததால் உங்களை மூழ்கடிக்க மாட்டான் என்று அச்சமற்று இருக்கிறீர்களா? பின்னர் நமக்கு எதிராக உங்களுக்கு அதில் உதவுபவரை காண மாட்டீர்கள்.

(அல்குர்ஆன்: 17:67-69)

காற்று இறைவனின் சான்று என்பதையும், காற்றின் முக்கியத்துவம், காற்றின் அற்புதங்கள், அதன் செயல்பாடுகள் பற்றியும் நாம் பார்த்தோம்.

காற்று கடுமையாக வீசும்போது

எந்தவொரு நிகழ்வுகளிலும் நேரங்களிலும் படைத்தவனை மறக்காதவர்களாகவும் அவனிடமே முறையிடுபவர்களாகவும் நாம் இருக்க வேண்டும். அதன் ஒரு பகுதியாக, காற்று கடுமையாக, பலமாக வீசும் போதும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அவனிடமே ஆதரவை, பாதுகாப்பைத் தேட வேண்டும். இந்தப் பாடத்தை நபிகளாரின் வாழ்க்கையில் இருந்து பெற்றுக் கொள்ள முடிகிறது. காற்றின் வேகம் வீரியமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் நாம் சொல்ல வேண்டிய துஆவை நபிகளார் கற்றுத் தந்துள்ளார்கள்.

«كَانَتِ الرِّيحُ الشَّدِيدَةُ إِذَا هَبَّتْ عُرِفَ ذَلِكَ فِي وَجْهِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

கடுமையான காற்று வீசும்போது அது (பற்றிய கலக்கத்தின் ரேகை) நபி (ஸல்) அவர்களின் முகத்தில் காணப்படும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(புகாரி: 1034)

وَكَانَ إِذَا رَأَى غَيْمًا أَوْ رِيحًا عُرِفَ فِي وَجْهِهِ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ النَّاسَ إِذَا رَأَوْا الغَيْمَ فَرِحُوا رَجَاءَ أَنْ يَكُونَ فِيهِ المَطَرُ، وَأَرَاكَ إِذَا رَأَيْتَهُ عُرِفَ فِي وَجْهِكَ الكَرَاهِيَةُ، فَقَالَ: ” يَا عَائِشَةُ مَا يُؤْمِنِّي أَنْ يَكُونَ فِيهِ عَذَابٌ؟ عُذِّبَ قَوْمٌ بِالرِّيحِ، وَقَدْ رَأَى قَوْمٌ العَذَابَ، فَقَالُوا: هَذَا عَارِضٌ مُمْطِرُنَا

மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால், நபி (ஸல்) அவர்களின் முகத்தில் (ஒருவிதமான கலக்கத்தின்) ரேகை தென்படும். (ஒருநாள்) நான், “அல்லாஹ்வின் தூதரே! மக்கள் மேகத்தைக் காணும்போது அது மழை மேகமாக இருக்கலாம் என்று எண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், தாங்கள் மேகத்தைக் காணும்போது ஒருவிதமான கலக்கம் தங்கள் முகத்தில் தென்படக் காண்கிறேனே (ஏன்)?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “ஆயிஷா! அதில் (அல்லாஹ்வின்) வேதனை இருக்கலாம் என்பதால் என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. (“ஆத்” எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றினால் வேதனை செய்யப்பட்டனர். (அந்தச்) சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்து விட்டு, “இது நமக்கு மழையைப் பொழிவிக்கும் மேகம்‘ என்றே கூறினர்” என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
(புகாரி: 4829)

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا عَصَفَتِ الرِّيحُ، قَالَ: «اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ»، قَالَتْ: وَإِذَا تَخَيَّلَتِ السَّمَاءُ، تَغَيَّرَ لَوْنُهُ، وَخَرَجَ وَدَخَلَ، وَأَقْبَلَ وَأَدْبَرَ، فَإِذَا مَطَرَتْ، سُرِّيَ عَنْهُ، فَعَرَفْتُ ذَلِكَ فِي وَجْهِهِ، قَالَتْ عَائِشَةُ: فَسَأَلْتُهُ، فَقَالَ: ” لَعَلَّهُ، يَا عَائِشَةُ كَمَا قَالَ قَوْمُ عَادٍ: {فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا هَذَا عَارِضٌ مُمْطِرُنَا} [الأحقاف: 24]

நபி (ஸல்) அவர்கள் சூறாவளிக் காற்று வீசும்போது, “இறைவா, இந்தக் காற்றின் நன்மையையும் அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும் அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக் காற்றின் தீங்கிலிருந்தும், அதனுள்ளே மறைந்திருக்கும் தீங்கிலிருந்தும், அது எதனுடன் அனுப்பப்பெற்றுள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
(முஸ்லிம்: 1640)

மறுமை வாழ்வில் காற்றின் பங்கு

இந்தப் பூமியில் நமது வாழ்க்கை மாற்றத்திற்கும் இயற்கைக்கும் பெரும் தொடர்பு இருக்கிறது. இதில், காற்றுக்கும் பங்கு இருப்பதை மறுத்து விட முடியாது. இந்த அம்சம் மறுமை வாழ்விலும் தொடரும். நரகத்திலே வீசும் காற்று அனல் நிறைந்ததாக இருக்கும். தேகத்தைச் சுட்டெரிக்கும். சுவாசிப்பதற்குத் தடுமாறும் வகையில் நச்சுத் தன்மை கொண்டிருக்கும். இதற்கு மாற்றமாக, சொர்க்கமோ சொக்க வைக்கும் நிலையில் இருக்கும்.

நறுமணம் கொண்டிருக்கும். அங்கு முழுவதும் தென்றல் காற்று தவழும். சொர்க்க வாசிகளைத் தழுவும் காற்று அவர்களுக்கு அழகையும் புதுப் பொலிவையும் அள்ளித் தரும். எனவே, இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் காற்றால் நேரும் அசம்பாவிதங்களில் மாட்டிக் கொள்ளக் கூடாது. இதற்கு ஒரே வழி, அசத்தியக் கொள்கைகளை, சிந்தனைகளைத் தூக்கி எறிந்துவிட்டு இஸ்லாத்தின்படி வாழ்வது மட்டுமே!

 وَاَصْحٰبُ الشِّمَالِ ۙ مَاۤ اَصْحٰبُ الشِّمَالِؕ‏  فِىْ سَمُوْمٍ وَّحَمِيْمٍۙ‏  وَّظِلٍّ مِّنْ يَّحْمُوْمٍۙ‏ لَّا بَارِدٍ وَّلَا كَرِيْمٍ‏  اِنَّهُمْ كَانُوْا قَبْلَ ذٰ لِكَ مُتْرَفِيْنَۚ  ۖ‏  وَكَانُوْا يُصِرُّوْنَ عَلَى الْحِنْثِ الْعَظِيْمِ‌ۚ‏

இடது புறத்தில் இருப்பவர்கள்! இடது புறத்தில் இருப்போர் என்பது என்ன?  அவர்கள் அனல் காற்றிலும், கொதி நீரிலும், அடர்ந்த புகை நிழலிலும் இருப்பார்கள். அதில் குளிர்ச்சியும் இல்லை. இனிமையும் இல்லை. இதற்கு முன் அவர்கள் சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்தனர். பெரும் பாவத்தில் பிடிவாதமாக இருந்தனர்.

(அல்குர்ஆன்: 56:41-46)

(நரகத்திற்குரியவர்களில் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுமாறு மறுமையில் இறைவன் கட்டளையிடுவான். அவ்வாறே வானவர்கள் அவர்களை வெளியேற்றுவார்கள்) இறுதியாக ஒரே ஒரு மனிதன் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே எஞ்சி நிற்பான். அவன்தான் நரகவாசிகளில் கடைசியாக சொர்க்கத்திற்கு செல்பவன். அவன் நரகத்தை முன்னோக்கியபடி “இறைவா! நரகத்தை விட்டும் என் முகத்தை திருப்புவாயாக! அதன் நச்சுக் காற்று என்னை அழித்துவிட்டது.

அதன் ஜுவாலை என்னைக் கரித்து விட்டது.” என்று கூறுவான். அப்போது அல்லாஹ், “(உனது கோரிக்கைப்படி) இவ்வாறு உனக்கு செய்து கொடுக்கப்பட்டால் வேறு எதனையும் நீ கேட்காதிருப்பாயா?” என்று கேட்பான்.  அதற்கு அம்மனிதன், “இல்லை, உன் கண்ணியத்தின் மீதாணையாக! (வேறுறெதையும் கேட்கமாட்டேன்)” என்பான். அந்தமனிதன் அல்லாஹ்விடம் தான் நாடிய உறுதி மொழியையும் வாக்குறுதிகளையும் வழங்குவான். அல்லாஹ் நரகத்தை விட்டும் அம்மனிதனுடைய முகத்தை திருப்பிவிடுவான்.

சொர்க்கத்தை நோக்கி அவனுடைய முகத்தை திருப்பியதும் அம்மனிதன் சொர்க்கத்தின் செழிப்பைப் பார்த்துக் கொண்டு அல்லாஹ் நாடிய அளவு நேரம் அமைதியாக இருப்பான். பிறகு “இறைவா! என்னைச் சொர்க்கத்தின் வாசலருகே செல்ல வைப்பாயாக!” என்று கேட்பான். அதற்கு இறைவன், “முன்பு கேட்டதைத் தவிர வேறெதையும் நீ என்னிடம் கேட்கமாட்டேன் என்று கூறி உறுதிமொழியும் வாக்குறுதியும் அளித்தாயே?” என்று கேட்பான்.

அதற்கு அம்மனிதன், “இறைவா! நான் உன் படைப்புக்களிலேயே நற்கதியற்றவனாய் ஆகிவிடக் கூடாது!” என்று கூறுவான்.  அதற்கு இறைவன், “(நீ கேட்டது) உனக்கு வழங்கப்பட்டால் வேறு எதையும் நீ கேட்காமலிருப்பாயா?” என்பான். அம்மனிதன், “இல்லை, உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதல்லாத வேறெதையும் நான் கேட்க மாட்டேன்” என்பான். இதுகுறித்து இறைவனிடம் உறுதிமொழியும் வாக்குறுதியும் அந்த மனிதன் அளிப்பான்.

உடனே இறைவன் அந்த மனிதனை சொர்க்கத்தின் வாசல் வரை செல்ல வைப்பான். அதன் வாசலை அவன் அடைந்ததும் அதன் ரம்மியத்தைக் காண்பான்; அதிலுள்ள செழுமையையும் (மனதிற்கு) மகிழ்ச்சி (தரத் தக்கவை)யையும் காண்பான். பிறகு அல்லாஹ் நாடிய அளவுக்கு அவன் அமைதியாக இருப்பான். அதன்பின் அந்த மனிதன், “இறைவா! என்னை சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிப்பாயாக!” என்று கூறுவான். 

அதற்கு உயர்ந்தோனாகிய அல்லாஹ், “ஆதமின் மகனே! உனக்கு என்ன கேடு! ஏன் வாக்கைக் காப்பாற்றத் தவறி விட்டாய்? முன்பு வழங்கப்பட்டதைத் தவிர வேறெதையும் நான் கேட்க மாட்டேன் என உறுதிமொழியும் வாக்குறுதியும் அளித்தாயே!” என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், “இறைவா! உன் படைப்புகளிலேயே என்னை நற்கதியற்றவனாய் ஆக்கி விடாதே!” என்பான். இம்மனிதனின் நிலை கண்டு சிரிப்பான்.

பிறகு அவனுக்கு சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதியளித்துவிடுவான். அதன் பின் இறைவன் அம்மனிதனிடம், “நீ ஆசைப்படுவதைக் கேள்!” என்று கூறுவான். அம்மனிதனும் தான் ஆசைப்படுவதை கூறுவான். இறுதியில் அவன் தன் ஆசைகள் யாவும் முற்றுப் பெறும்போது (அவனிடம்) இறைவன், “இதைவிட அதிகத்தை நீ ஆசைப்படு!” என்று சொல்லிக் கொடுப்பான். இறுதியில் ஆசைகள் முற்றுப் பெற்றுவிடும் போது உயர்ந்தோனாகிய அல்லாஹ் “உனக்கு இதுவும் உண்டு. இதைப் போன்று இன்னொரு மடங்கும் உண்டு” என்பான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 806)

إِنَّ فِي الْجَنَّةِ لَسُوقًا، يَأْتُونَهَا كُلَّ جُمُعَةٍ، فَتَهُبُّ رِيحُ الشَّمَالِ فَتَحْثُو فِي وُجُوهِهِمْ وَثِيَابِهِمْ، فَيَزْدَادُونَ حُسْنًا وَجَمَالًا، فَيَرْجِعُونَ إِلَى أَهْلِيهِمْ وَقَدِ ازْدَادُوا حُسْنًا وَجَمَالًا، فَيَقُولُ لَهُمْ أَهْلُوهُمْ: وَاللهِ لَقَدِ ازْدَدْتُمْ بَعْدَنَا حُسْنًا وَجَمَالًا، فَيَقُولُونَ: وَأَنْتُمْ، وَاللهِ لَقَدِ ازْدَدْتُمْ بَعْدَنَا حُسْنًا وَجَمَالًا

சொர்க்கத்தில் (மக்கள் ஒன்று கூடும்) சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக் காற்று வீசி அவர்களுடைய முகங்களிலும் ஆடையிலும் (கஸ்தூரி மண்ணை) வாரிப் போடும். உடனே அவர்கள் மேன்மேலும் அழகும் பொலிவும் பெறுவார்கள். பிறகு அழகும் பொலிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார்கள்.

அப்போது அவர்களிடம் அவர்களுடைய துணைவியர், “எங்களிடமிருந்து சென்ற பின்னர் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றுவிட்டீர்களே!” என்று கூறுவர். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தான் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றிருக்கிறீர்கள்” என்று கூறுவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
(முஸ்லிம்: 5448)

காற்று கற்றுத் தரும் பாடம்

திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் காற்றுடன் தொடர்புபடுத்திப் பல்வேறு செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. எளிதாகப் புரிந்து கொள்வதற்குக் காற்று உதாரணமாகப் சொல்லப்பட்டு உள்ளது. வெப்பம் நிறைந்த காற்றினால் பயிர்கள் எரிந்து கருகி பாழாகிப் போவது போன்று இறை மறுப்பாளர்களின் நன்மைகள் அழிந்துவிடும்.

அல்லாஹ்விற்கு இணைவைப்பவர்கள் இடம் தெரியாமல் தடம் தெரியாமல் போய் விடுவார்கள். காற்றைப் போன்று துன்பங்கள் குழப்பங்கள் வரும் என்று, என்றென்றும் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்கள் காற்றின் வாயிலாக கற்றுத் தரப்பட்டுள்ளன.

مَثَلُ مَا يُنْفِقُوْنَ فِىْ هٰذِهِ الْحَيٰوةِ الدُّنْيَا كَمَثَلِ رِيْحٍ فِيْهَا صِرٌّ اَصَابَتْ حَرْثَ قَوْمٍ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ فَاَهْلَكَتْهُ ‌ؕ وَمَا ظَلَمَهُمُ اللّٰهُ وَلٰـكِنْ اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ‏

இவ்வுலக வாழ்க்கையில் அவர்கள் செலவிடுவதற்கு உதாரணம் வெப்பக் காற்றாகும். தமக்குத் தாமே தீங்கு இழைத்த கூட்டத்தின் பயிர்களில் அக்காற்று பட்டு அவற்றை அழித்து விடுகிறது. அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கு இழைக்கவில்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கு இழைத்தனர்.

(அல்குர்ஆன்: 3:117)

حُنَفَآءَ لِلّٰهِ غَيْرَ مُشْرِكِيْنَ بِهٖ‌ؕ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَكَاَنَّمَا خَرَّ مِنَ السَّمَآءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ اَوْ تَهْوِىْ بِهِ الرِّيْحُ فِىْ مَكَانٍ سَحِيْقٍ‏

அல்லாஹ்வுக்கு அர்ப்பணித்து, அவனுக்கு இணை கற்பிக்காதோராக (ஆகுங்கள்!) அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் தூக்கிச் சென்றவனைப் போல், அல்லது காற்று தூரமான இடத்தில் கொண்டு போய்ப் போட்டவனைப் போல் ஆவான்.

(அல்குர்ஆன்: 22:31)

مَثَلُ المُؤْمِنِ كَالخَامَةِ مِنَ الزَّرْعِ، تُفَيِّئُهَا الرِّيحُ مَرَّةً، وَتَعْدِلُهَا مَرَّةً، وَمَثَلُ المُنَافِقِ كَالأَرْزَةِ، لاَ تَزَالُ حَتَّى يَكُونَ انْجِعَافُهَا مَرَّةً وَاحِدَةً

ஓர் இறைநம்பிக்கையாளரின் நிலையானது இளம் பயிர் போன்றதாகும். காற்றடிக்கும் திசையில் அதன் இலை சாயும். காற்று (அடிப்பது) நின்றுவிட்டால் நேராக நிற்கும். இவ்வாறுதான் இறை நம்பிக்கையாளரும் சோதனைகளின் போது அலைக்கழிக்கப்படுகின்றார்.

(எனினும், அவர் பொறுமை காப்பார்.) இறைமறுப்பாளனின் நிலையானது உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதாரு மரத்தைப் போன்றதாகும். தான் நாடும் போது அதை அல்லாஹ் (ஒரேயடியாக) உடைத்து (சாய்த்து) விடுகின்றான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 5643, 7466)

 قَالَ حُذَيْفَةُ بْنُ الْيَمَانِ
وَاللهِ إِنِّي لَأَعْلَمُ النَّاسِ بِكُلِّ فِتْنَةٍ هِيَ كَائِنَةٌ، فِيمَا بَيْنِي وَبَيْنَ السَّاعَةِ، وَمَا بِي إِلَّا أَنْ يَكُونَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسَرَّ إِلَيَّ فِي ذَلِكَ شَيْئًا، لَمْ يُحَدِّثْهُ غَيْرِي، وَلَكِنْ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: وَهُوَ يُحَدِّثُ مَجْلِسًا أَنَا فِيهِ عَنِ الْفِتَنِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَهُوَ يَعُدُّ الْفِتَنَ: «مِنْهُنَّ ثَلَاثٌ لَا يَكَدْنَ يَذَرْنَ شَيْئًا، وَمِنْهُنَّ فِتَنٌ كَرِيَاحِ الصَّيْفِ مِنْهَا صِغَارٌ وَمِنْهَا كِبَارٌ» قَالَ حُذَيْفَةُ: فَذَهَبَ أُولَئِكَ الرَّهْطُ كُلُّهُمْ غَيْرِي

அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! நான், எனக்கும் யுக முடிவு நாளுக்குமிடையே நிகழப் போகும் குழப்பங்கள் குறித்து மக்களிலேயே நன்கு அறிந்தவன் ஆவேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் குறித்து எனக்குச் சிலவற்றை இரகசியமாகச் சொல்லியிருந்ததே அதற்குக் காரணமாகும். மற்றவர்கள் அவற்றை அறிவிக்கவில்லை. எனினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அவையில் குழப்பங்கள் குறித்துப் பேசினார்கள்.

அங்கு நானும் இருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நிகழப்போகும்) குழப்பங்களை எண்ணிக் கணக்கிட்டபடி, “அவற்றில் மூன்று குழப்பங்கள் உள்ளன. அவை எதையுமே விட்டுவைக்காது. அவற்றில் இன்னும் சில குழப்பங்கள் உள்ளன. அவை கோடைகால (வெப்பக்) காற்றைப் போன்றவையாகும். அவற்றில் சிறிய குழப்பங்களும் உள்ளன; பெரிய குழப்பங்களும் உள்ளன” என்று கூறினார்கள். (இந்தச் செய்தியைச் செவியுற்ற) அக்குழுவினரில் என்னைத் தவிர மற்ற அனைவரும் (இறந்து) போய்விட்டனர்.

(முஸ்லிம்: 5541)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று சொல்வார்கள். உடம்பில் உயிர்க்காற்று உள்ள போதே முடிந்தளவு நற்காரியங்களைச் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக இவ்வாறு சொல்லப்பட்டது. அல்லாஹ்வை அறிந்து கொள்ளவும் அவனது ஆற்றலை விளங்கிக் கொள்ளவும் காற்று நம்மைத் தூண்டக் கூடியதாக இருக்கிறது. அதன் அடிப்படையில் பல்வேறு செய்திகளை அறிந்து கொண்டோம். இந்தச் செய்திகளை மனதில் நிறுத்திக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.