காதியானிகள் வரலாறு- 4
திருக்குர்ஆனில் இறைத்தூதர்களைக் குறிக்க இரண்டு விதமான சொற்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. ஒன்று நபி, இரண்டு ரசூல். இந்த இரண்டு சொற்களுக்கும் இருவேறு கருத்துக்களைக் கொடுத்து, தான் நபி என்று மிர்சா குலாம் வாதிடுகின்றான். இது எந்த வகையில் தவறானது என்று கடந்த இதழில் தெளிவுபடுத்தி இருந்தோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னர் நபிமார்கள் வரலாம் என்ற கருத்துடையவர்கள் எடுத்து வைக்கும் முக்கியமான வாதம் இதுதான்,
“உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பின் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?’’ என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்து “இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?’’ என்று கேட்டபோது, “ஒப்புக் கொண்டோம்‘’ என்று அவர்கள் கூறினர். “நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்’’ என்று அவன் கூறினான்.
மேற்கண்ட வசனத்தில் ஒரு தூதர் வருவார் அவரை அனைவரும் ஈமான் கொள்ள வேண்டும்; அது மட்டுமில்லாமல் அவருக்கு உதவியும் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் மக்களுக்குக் கட்டளை இடுகிறான். இந்த வசனம் நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கப்பட்டதாகும். எனவே அவர்களுக்குப் பிறகு இறைத்தூதர் வருவார். அவருக்கும் உதவி புரியவேண்டும் என்பதே இந்த வசனத்தின் கருத்தாகும் என்று இவர்கள் வாதிடுகிறார்கள்.
நமது பதில்
இந்த வசனத்தில் நபிமார்களிடம் இறைவன் எடுத்த ஒரு உறுதிமொழி பற்றி கூறப்படுகிறது. 33:7 வசனத்திலும் இதுபற்றி கூறப்பட்டுள்ளது.
இவ்வசனம் என்ன சொல்கிறது என்பதை, இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகங்களை வைத்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும். நபிமார்களிடம் உறுதிமொழி எடுத்ததாக இவ்வசனம் பொதுவாகக் கூறுகின்றது. அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட அனைத்து நபிமார்களும் அடங்குவார்கள். என்ன உடன்படிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் இவ்வசனத்திலிருந்தே நாம் தெளிவாக அறிய முடிகின்றது.
“உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பின் இன்னொரு தூதர் உங்களிடம் வந்தால் நீங்கள் அவரை ஏற்று உதவ வேண்டும்‘’ என்பது தான் உடன்படிக்கை.
“உங்களுக்குப் பின் ஒரு தூதர் வந்தால்’’ என்று இங்கே கூறப்பட்டிருந்தால் எதிர்காலத்தில் வரவுள்ள ஒரு நபியைப் பற்றிய முன்னறிவிப்பு என்று கருத முடியும். உங்களுக்குப் பின் என்று கூறாமல், ‘உங்களிடம் ஒரு தூதர் வந்தால்’ என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு நபி வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவரிடம் இன்னொரு நபி வருவதையே இவ்வாசகம் குறிக்கிறது.
“உங்களை நான் நபியாக நியமனம் செய்து விட்டேன்; இது உங்கள் தகுதியினாலோ, உழைப்பினாலோ கிடைத்தது அல்ல. மாறாக, நானாக உங்களுக்கு வழங்கியதாகும். நபியாக நியமனம் செய்யப்பட்டதால் இனிமேல் நமது தகுதிக்கு எந்தக் குறையும் ஏற்படாது என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள்! நீங்கள் நபியாக இருக்கும் போதே உங்களிடம் இன்னொரு தூதரை நான் அனுப்பினால் உடனே அவரை நீங்கள் ஏற்க வேண்டும். அவருக்கு உதவி செய்திட முன் வர வேண்டும். இந்த நிபந்தனையின் அடிப்படையிலேயே உங்களுக்கு இந்தத் தகுதி வழங்கப்படுகிறது’’ என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.
இதை இவ்வசனத்தின் வாசக அமைப்பே உறுதி செய்கிறது.
நபி என்ற தகுதி, மனிதனின் உழைப்புக்காகவோ, திறமைக்காகவோ வழங்கப்படுவதல்ல; எனது கருணையால் வழங்கப்படுவது. வேறொருவருக்கு அதை நான் வழங்கினால் அதற்கும் கட்டுப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இதை வழங்குகிறேன் என்பது தான் உடன்படிக்கை.
- உங்களிடம் அவர் வந்தால்
- அவரை நீங்கள் நம்ப வேண்டும்
- அவருக்கு நீங்கள் உதவ வேண்டும்
ஆகிய வாசகங்கள் இதைத் தெளிவாகக் கூறுகின்றன.
ஒரு நபியை அனுப்பிய பின் அவருக்குப் பக்கபலமாக இருப்பதற்காக மேலும் சிலரை அல்லாஹ் அனுப்பியதாக 36:14 வசனம் கூறுகிறது. அவ்வாறு அனுப்பப்பட்டவர்களை முதலில் அனுப்பப்பட்ட நபிமார்கள் ஏற்றுக் கொண்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின் தம்மை நபியென்று கூறிக் கொண்ட பொய்யர்கள் அனைவரும் இந்த வசனம் தங்களைப் பற்றிய முன்னறிவிப்பு என்று கூறி மக்களை ஏமாற்றாமல் இருந்ததில்லை.
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட எல்லா நபிமார்களிடமும், இனி வரும் நபியைப் பற்றி அல்லாஹ் முன்னறிவிப்புச் செய்துள்ளான். அந்த நபி நான் தான்’’ என்று தம்மை நபியெனப் பொய் வாதம் செய்தவர்கள் கூறியுள்ளனர்.
“உங்களுக்குப் பின் ஒரு நபி வந்தால்’’ என்று கூறாமல், ‘’ஜாஅகும் – உங்களிடம் ஒரு நபி வந்தால்’’ என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளதை இந்தப் பொய்யர்கள் இருட்டடிப்புச் செய்கின்றனர்.
ஒரு நபி வாழும்போது அவரது பகுதிக்கு இன்னொரு நபி அனுப்பப்பட்டால் அவரை ஏற்க வேண்டும் என்பது தான் இவ்வசனத்தின் நேரடியான பொருள் எனும்போது, இது எப்படி முன்னறிவிப்பாக இருக்க முடியும்?
“இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதராவேன். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்’’ என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக! அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது “இது தெளிவான சூனியம்‘’ எனக் கூறினர்.
மேற்கண்ட வசனத்தில் ஈஸா (அலை) அவர்களுக்குப் பிறகு ஒரு தூதர் வருவார்; அவருக்குப் பெயர் அஹ்மத் என்று கூறப்பட்டுள்ளது. அந்த அஹ்மத் நான்தான். நான் தான் அந்தத் தூதர் என்னுடைய பெயர்தான் குலாம் அஹ்மத். நபி (ஸல்) அவர்களுடைய பெயர் முஹம்மது தான். எனவே இந்த வசனத்தில் கூறப்பட்டது என் வருகையைப் பற்றியதுதான் என்று மிர்சா குலாம் கூறுகின்றான். முஹம்மது நபிகளைப் பற்றியது அல்ல என்றும் கூறுகிறான்.
நமது பதில்
மேற்கண்ட வசனத்தில் அஹ்மத் என்ற பெயருடைய தூதர் வருவார் என்று தான் அல்லாஹ் கூறுகிறான். ஆனால் இவனுடய பெயர் குலாம் அஹ்மத் என்பதாகும். இதன் பொருள் அஹ்மதுடைய ஊழியன் என்பதாகும். எனவே அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் மிர்சா குலாம் அஹ்மத் வருவது பற்றி கூறவில்லை. அப்படி அவனைப்பற்றிக் கூறுவதாக இருந்தால் அல்லாஹ் தெளிவாகவே குலாம் அஹ்மத் என்ற பெயருடைய தூதர் வருவார் என்று கூறியிருப்பான். அஹ்மத் என்று கூறியிருப்பதிலிருந்தே அந்த வசனத்தில் கூறப்பட்ட தூதர் இவன் இல்லை என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) என்ற சொல் எப்படி அல்லாஹ்வைக் குறிக்காதோ அதுபோல் அஹ்மதின் அடிமை என்பதும் அஹ்மதைக் குறிக்காது என்பது தெளிவு. இவனுக்கு இவனுடைய தந்தை தான் குலாம் அஹ்மத் என்று பெயர் வைத்திருப்பார். இவனுடைய தந்தை, அஹ்மதின் அடிமை என்று பெயர் வைத்திருந்தால் அந்த அஹ்மத் இவனாக எப்படி இருப்பான்?
முஹம்மது நபிக்கு அஹ்மத் என்ற பெயரும் இருந்ததால் தான் அந்த அஹ்மதின் அடிமை அல்லது அஹ்மதின் ஊழியன் என்று பெயர் சூட்டினார். இவ்வளவு தெளிவான உண்மைக்கு மாற்றமாக நான் தான் அஹ்மத் என்று இவன் உளறியுள்ளான். எனவே இவனது பெயர் அஹ்மதாக இல்லாமல் இருந்தும் அஹ்மத் என்பது நான் தான்; எனவே நானும் நபி தான் என்று கூறுவது முட்டாள் தனமானதாகும்.
மேற்கண்ட வசனத்தில் வரக்கூடிய அஹ்மத் என்பது நபி (ஸல்) அவர்களை குறிக்கக் கூடியதாகும்.
பரவலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயர் ‘முஹம்மத்’ என்று அறியப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு ‘அஹ்மத்’ என்ற மற்றொரு பெயரும் இருந்தது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் முஹம்மது -புகழப்பட்டவர்- ஆவேன். நான் அஹ்மத் -இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன். நான் மாஹீ- அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கின்றான். நான் ஹாஷிர்- ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள். நான் ஆகிப் (இறைத் தூதர்களில்) இறுதியானவர் ஆவேன்.