காதியானிகள் யார்?-2
காதியானிகள் யார்?
முஹம்மது நபி (ஸல்) அவர்களே இறைத்தூதர்களில் இறுதியானவர் என்பது பற்றித் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் கூறும் செய்திகளைக் கடந்த தொடரில் பார்த்தோம்.
இனி போலி இறைத்தூதர்கள் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ள முன்னறிவிப்புக்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
பொய்யான இறைத் தூதர்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
என்னுடைய உம்மத்திலிருந்து சில கோத்திரங்கள் இணை வைப்பாளர்களோடு இணைந்து சிலைகளை வணங்கும் வரை கியாமத் நாள் ஏற்படாது. என்னுடைய உம்மத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். ஒவ்வொருவரும் தான் நபி என்று வாதிடுவார்கள். நான்தான் நபிமார்களில் முத்திரையானவன். எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டு விட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்து விட்டு ஆச்சரியமடைந்து, “இந்தச் செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?” என்று கேட்கலானார்கள். நான் தான் அந்தச் செங்கல். மேலும், நான் தான் இறைத் தூதர்களில் இறுதியானவன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது நிலையும், இதர இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டிய மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டுவிட்டு முழுமையாகவும் நிறைவாகவும் அந்த வீட்டைக் கட்டி முடித்தார். மக்கள் அதனுள் நுழைந்து (பார்வையிட்டுவிட்டு) வியப்படைந்து, “இந்தச் செங்கலின் இடம் மட்டும் (காலியாக) இல்லாதிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!” என்று கூறலாயினர். நானே அந்தச் செங்கலின் இடத்தில் இருக்கிறேன். நானே நபிமார்களில் இறுதியாக வந்தேன்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் மற்ற இறைத்தூதர்களை விடவும் ஆறு விஷயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்:
- நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பெற்றுள்ளேன்.
- (எதிரிகளின் உள்ளத்தில்) என்னைப் பற்றிய (மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப்பட்டுள்ளது.
- போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன.
- எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கு ஏற்றதாகவும், தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.
- நான் மனித இனம் முழுவதற்கும் தூதராக நியமிக்கப் பெற்றுள்ளேன்.
- என்னோடு நபிமார்களின் வருகை முற்றுப்பெற்று விட்டது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபித்துவம் முடிந்து விட்டது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூதுத்துவமும், நபித்துவமும் நிறைவு பெற்றுவிட்டன. எனக்குப் பிறகு எந்த ரசூலும் இல்லை. நபியும் இல்லை. (நபியவர்கள் இவ்வாறு கூறியது) மக்களுக்கு மிகவும் கஷ்டமாகி விட்டது. உடனே நபியவர்கள் என்றாலும் நற்செய்திகள் (எஞ்சியுள்ளது) என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே (முபஷ்ஷராத்) நற்செய்திகள் என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ஒரு முஸ்லிம் காண்கின்ற கனவு. அது நபித்துவத்தின் (நாற்பத்தாறு) பங்குகளில் ஒரு பங்காகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நற்செய்தி கூறுகின்றவை (“முபஷ்ஷிராத்‘) தவிர, நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை” என்று கூற நான் கேட்டேன். அப்போது மக்கள் “நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன?” என்று வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நல்ல (உண்மையான) கனவு” என்று விடையளித்தார்கள்.
ரசூல் என்று வாதிடும் பொய்யர்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாத வரை உலக முடிவு நாள் வராது. அவ்விரு குழுக்களுக்குமிடையே பெரும் போர் நிகழும். ஆனால், அவ்விரண்டும் முன்வைக்கும் வாதம் ஒன்றாகவே இருக்கும். பெரும் பொய்யர்களான “தஜ்ஜால்கள்‘ ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை இறுதி நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் (ரசூல்) என்று வாதிடுவான்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நபி என்று வாதிடும் பொய்யர்கள் தோன்றுவார்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
என்னுடைய உம்மத்திலிருந்து சில கோத்திரங்கள் இணைவைப்பாளர்களோடு இணைந்து சிலைகளை வணங்கும் வரை கியாமத் நாள் ஏற்படாது. என்னுடைய உம்மத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். ஒவ்வொருவரும் தன்னை நபி என்று வாதிடுவார்கள். நான்தான் நபிமார்களில் முத்திரையானவன். எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது.
அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)
மிர்சா என்பவன் நபி என்பதற்குக் காதியானிகள் வைக்கும் ஆதாரங்களையும், அதற்குரிய பதில்களையும அடுத்த தொகுப்பில் பார்க்கலாம்.