காக்கப்படும் மனித உரிமைகள்
கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
மத சித்தாந்தங்கள் என்றால் கடவுள் கொள்கையுடன் தங்கள் போதனையை சுருக்கிக் கொள்ள வேண்டும் என்கிற பரவலான புரிதலுக்கு மாற்றமாக, மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் தலையிடுகின்ற, தீர்வளிக்கின்ற சித்தாந்தமாக இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே அமைந்துள்ளது. உலக வாழ்வில் எவையெல்லாம் அனுமதிக்கப் பட்டவை என்பதை இஸ்லாம் வரையறுத்துள்ளது.
என்னென்ன காரியங்களெல்லாம் தடுக்கப் பட்டவை எனவும் வரையறை செய்துள்ளது.
விபச்சாரம், வட்டி, கொலை போன்றவை பெரும்பாவங்கள் எனக் கூறுகின்ற இஸ்லாம், பிறருடைய மானம், மரியாதைக்குப் பங்கம் விளைவிப்பதையும் மிகப்பெரிய குற்றமாக, சம்பந்தப்பட்ட நபர் மன்னிக்காதவரை இறைவன் மன்னிக்க மாட்டான் என்கிற அளவிற்குப் பாரதூரமான எச்சரிக்கையுடன் கூடிய வகையில் நெறிப்படுத்துகிறது. அப்படி இஸ்லாம் நெறிமுறை படுத்தக்கூடிய நிகழ்வுகளை இந்த உரையில் காண்போம்…
மனிதன், இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் எந்த அளவிற்கு பேணுதலாக இருக்க வேண்டுமோ அதே அளவிற்கு, சக மனிதர்கள் விஷயத்திலும், அவர்களுடைய உரிமைகளைக் காக்கின்ற விஷயத்திலும் பேணுதல் காட்ட வேண்டும்.
மறுமை வெற்றி என்பது இறைவனுக்குத் தொண்டாற்றினால் மட்டுமே கிடைத்து விடாது என்பதே திருக்குர்ஆனும் அதைப் போதிக்க வந்த நபியவர்களும் உலக மாந்தர்களுக்குத் தருகின்ற நினைவூட்டலாக இருக்கிறது.
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், (மக்களிடம்) ‘திவாலாகிப் போனவன் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். அங்கு கூடியிருந்த மக்கள், ‘யாரிடம் வெள்ளிக்காசோ, பொருட்களோ இல்லையோ அவர் தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்’ என்று பதிலளித்தார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘என் சமுதாயத்தாரில் திவாலாகிப் போன ஒருவர் உண்டு. அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகியவற்றுடன் வருவார். (அந்நேரத்தில்) அவர் ஒருவரை திட்டியிருப்பர்; ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார்; ஒருவரின் பொருளை (முறைகேடாக) புசித்திருப்பார்; ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளில் இருந்து சிலவற்றை பாதிக்கப்பட்டவருக்குக் கொடுக்கப்படும்.
இன்னும் சிலவற்றை மற்றவருக்கு கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளில் இருந்து எடுத்து கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களில் இருந்து சிலவற்றை எடுக்கப்பட்டு, இவர் மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கி எறியப்படுவர். (அவரே திவாலாகிப்போனவர்).
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: (முஸ்லிம்: 5037)
உலகில் தவறு செய்தவரிடமிருந்து, அவரால் பாதிக்கப்பட்டவருக்கு மறுமை நாளில் நஷ்டஈடு வழங்கப்படுகிறது. உலகில் நன்மைகளைச் செய்தவர் மறுமையில் திவாலாகி விடுகிறார். இங்கே தீமைகளைச் செய்திருந்தாலும் அவரது உரிமைகள் பாதிக்கப்பட்டதன் காரணமாக அவர் அங்கே செல்வந்தராக மாறிவிடுகிறார்.
தொழுகை, நோன்பு என ஆன்மீகப் பாதையில் நெறி தவறாமல் வாழ்ந்த ஒருவன், நமது பார்வையில் சொர்க்கத்திற்குரியவன் போல் காட்சியளிக்கலாம். ஆனால், அவனால் இவ்வுலகில் சக மனிதர்களுக்கு ஏதும் சிரமங்கள் ஏற்பட்டிருப்பின், அவற்றை இவ்வுலகிலேயே அவன் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். அல்லாமல், அந்த நிலையிலேயே அவன் மரணத்தைத் தழுவி விட்டான் எனில், அவனுடைய இறைத்தொண்டு முழுமை பெற்றதாக ஆகாது என்று இஸ்லாம் கூறுகிறது.
சக மனிதர்களின் உரிமை சார்ந்த விஷயங்களில் நாம் காட்டும் அலட்சியப் போக்கு என்பது சமயத்தில் நரகப் படுகுழிக்கே நம்மைத் தள்ளி விடும்.
23 ஆண்டுகால நபித்துவ வாழ்வினை முஹம்மது நபியவர்கள் வாழ்ந்து வந்தார்கள். திருமறைக் குர்ஆனுடைய போதனைகளைத் தமது வாழ்வியல் மூலம் விளக்கிக் காட்டிய நபியவர்கள் இறுதிக் காலகட்டத்தில் ஹஜ் கடமையை நிறைவேற்றுகிறார்கள். நபிகள் நாயகத்துடன் சேர்த்து ஆயிரக் கணக்கான தோழர்களும் ஹஜ் எனும் கடமைக்காக, புனித மக்காவில் ஒன்று குழுமுகிறார்கள்.
23 ஆண்டுகளாக சிறுகச் சிறுக போதனை செய்த இஸ்லாமிய மார்க்கத்தினை சாறு பிழிந்து, அதனுடைய முக்கியமான சாராம்சங்களை மட்டும் மக்களிடம் நினைவூட்டும் பொருட்டு, தேர்வு செய்த மிக அவசியமான சட்ட திட்டங்களைத் தம் உரையில் சேர்த்துக் கொண்ட நபிகள் பெருமகனார், மக்களிடம் கூறிய அடிப்படையான விஷயம், சக மனிதர்களுடைய உரிமைகள் விஷயத்தில் பொடுபோக்காக இருந்து விடாதீர்கள் என்பது தான்.
“நீங்கள் மறுமையில் உங்கள் இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான். அறிந்து கொள்ளுங்கள். எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழி கெட்டவர்களாய் நீங்கள் மாறி விடாதீர்கள்”
அறிவிப்பவர்: அபூபக்ரா நுஃபைஃ பின் ஹாரிஸ் (ரலி),
நூல்: (புகாரி: 4406)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் உரிமைகளை உரியவர்களிடம் நிச்சயமாக நீங்கள் ஒப்படைப்பீர்கள். எந்தளவுக்கென்றால், கொம்பில்லாத ஆட்டுக்காக (அதை முட்டிய) கொம்புள்ள ஆட்டிடம் பழிவாங்கப்படும்”
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: (முஸ்லிம்: 5038)
இந்த உலகில் அநீதி இழைத்தவன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அல்லது தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, அநீதியான தீர்ப்பைப் பெற்று விடலாம். ஆனால் மறுமையில் இந்த அதிகாரம், சொல்வாக்கு, செல்வாக்கு எதுவும் செல்லுபடியாகாது. அங்கே நீதித் தராசு ஒன்று உண்டு. அது மனித நியாயங்களையும் அநியாயங்களையும் நீதமான முறையில் அளந்து காட்டி விடும்.
இது குறித்துத் திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
இன்னும், கியாம நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவுக்கும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது; மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறே கணக்கெடுக்க நாமே போதும்.
“நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நகரத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகின்றதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் கண்ணியமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்” என்று பல தடவை கூறினார்கள்.
நூல்: . (புகாரி: 1739)
இதுவும் இறுதி ஹஜ்ஜின் போது நபிகளார் செய்த பிரகடனமாகும்.
நான் திருடவில்லை, யாரையும் ஏமாற்றி இந்தப் பணத்தை சம்பாதிக்கவில்லை, எனக்கு இன்னார் கொடுத்தார், நான் வாங்கிக் கொண்டேன் என்று நாம் நமக்குக் கிடைத்த ஒரு பொருளையோ பணத்தையோ ஆகுமானதாகக் கருதினால் அதைக் கூட இஸ்லாம் நுணுக்கமாக வேறுபடுத்துகிறது.
உனக்கு அந்தப் பணத்தை தந்தவர், மனம் விரும்பித் தந்தாரா அல்லது மனம் வெதும்பி, வேறு வழியின்றி தந்தாரா என்பதை வைத்து தான் அந்தப் பணம் உனக்கு ஆகுமானதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும் என்கிறது இஸ்லாம்.
மனமுவந்து தராத, தன் சகோதர முஸ்லிமின் பொருள் எதுவும் அடுத்த முஸ்லிமுக்கு ஆகுமானது அல்ல.
அறிவிப்பவர்: அம்ர் பின் அல் அஹ்வல் (ரலி),
நூல்: (திர்மிதீ: 3087) (3012),(ஹாகிம்: 318)
அரசு அலுவலகம் ஒன்றில் ஒரு காரியத்திற்காக அதிகாரி லஞ்சம் பெறுகிறார். அவர் தந்தார், எனவே நான் வாங்கிக் கொண்டேன் என்று விளக்கம் சொல்லி விட்டால் அந்தப் பணம் அவருக்கு ஹலாலாகி விடாது. ஏன் அந்தப் பணம் அவருக்குத் தரப்பட்டது? அவருக்கு இந்த அதிகாரி என்ன மாமன் மச்சானா? உறவா? நண்பனா? மகிழ்ச்சியுடன் தான் இதை அவருக்குத் தந்தானா?
நிச்சயமாக இல்லை.
இந்தப் பணம் உனக்கு தரப்படவில்லையெனில் அந்தக் காரியத்தை நீ செய்து கொடுக்க மாட்டாய் என்பதால் தரப்பட்டது, மனம் நொந்து தரப்பட்டது. எனவே அது உனக்கு ஹராம். பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாருக்கு வரதட்சணை கொடுப்பது கூட இதே அளவுகோலின் படி தான் பார்க்கப்பட வேண்டும்.
அவர்கள் தருகிறார்கள், எனவே நாங்கள் பெறுகிறோம் என்று சால்ஜாப்பு சொல்வதை இஸ்லாம் ஏற்காது. அவர்கள் அந்த சீதனப் பணத்தைத் தரவில்லையெனில், தங்கள் வீட்டுப் பெண் மணமகன் வீட்டில் நிம்மதியாகக் காலம் தள்ள முடியாது என்கிற அச்சத்தின் காரணமாகவே அதைத் தருகின்றனர்.
அதை சொல்லிக் காட்டி, காலமெல்லாம் தன் மகளின் உள்ளத்தை நோகடிப்பதற்குப் பதில் இதை விட்டெறிந்து விடுவோம் என்பதே பெண்களைப் பெற்ற, பெரும்பாலான பெற்றோரின் எண்ணமாக இருக்கிறது எனும் போது இதைப் பெறுவது எப்படி ஒருவருக்கு ஆகுமானதாகும்?
நபி (ஸல்) அவர்கள் மினாவில் இருந்த போது “இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும், அவன் தூதருமே நன்கறிவர்!” என்றனர். உடனே அவர்கள், “இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?”என்று கேட்க மக்கள் “அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிவர்!” என்றனர். அவர்கள் “(இது) புனிதமிக்க நகரமாகும்!”என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள், “இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?”என்றதும் மக்கள், “அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர்” என்றனர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இது புனிதமிக்க மாதமாகும்” எனக் கூறிவிட்டு, “உங்களுடைய இந்தப் புனித நகரத்தில், உங்களுடைய இந்தப் புனித மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போலவே அல்லாஹ் உங்கள் உயிர்களையும், உடைமைகளையும், உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!” எனக் கூறினார்கள்.
நூல்: (புகாரி: 1742)
அண்டை வீட்டுக்காரனுக்குச் சொத்தில் பங்களித்து விடுவார்களோ என்று கூறுமளவுக்கு, அண்டை வீட்டுக்காரனைப் பற்றி அறிவுரை செய்கிறேன் என அதிகமாக வலியுறுத்தினார்கள்.
நூல்: தப்ரானீ-7523 (பாகம்: 8. பக்: 111)
சக மனிதனின் சொத்துக்களையும், அவனுடைய மானம் மரியாதையையும் புனிதமாகக் கருத வேண்டும் என்கிற கடுமையான எச்சரிக்கை அந்த உரையில் மிளிர்ந்தது.
அத்தோடு நிறுத்தாமல், முஃமின் என்பதற்கும் முஸ்லிம் என்பதற்கும் நபிகள் நாயகம் அந்தத் தருணத்தில் மிக அழகிய இலக்கணம் ஒன்றை விளக்குகிறார்கள். எவரது நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகின்றார்களோ அவரே முஸ்லிம் ஆவார்.
நூல்கள்: பஸ்ஸார் 2435
தப்ரானீ 3444, பாகம்: 3, பக்: 293
மக்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் அபயம் அளிப்பவரே முஃமின்.
நூல்கள்: பஸ்ஸார்-3752 (2435)
(இப்னு ஹிப்பான்: 4862), பாகம்:11, பக்: 203
குற்றங்களையும், தவறுகளையும் விட்டு ஒதுங்கிக் கொள்பவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்.
நூல்: (இப்னு ஹிப்பான்: 4862) , பாகம்:11, பக்: 203
அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதில் தனது உள்ளத்துடன் போராடியவரே தியாகி (ஷஹீத்) ஆவார்.
(இப்னு ஹிப்பான்: 4862)பாகம்:11, பக்: 203
அறியாமைக் காலத்து (கொலைக்காக இப்போது) பழி வாங்குதல் (இன்றுடன்) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன்முதலில் ரத்து செய்யப்படுவது எங்களது குடும்பத்தைச் சார்ந்த ரபீஆவுடைய குழந்தைக்காக வாங்க வேண்டிய பழியாகும். ரபீஆ, அப்துல் முத்தலிபுடைய பேரர் ஆவார். இந்த ரபீஆவின் குழந்தை ஸஃத் கிளையாரிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும் போது ஹுதைல் கிளையினர் கொன்று விட்டனர். (இதுவரை பழி தீர்க்கப்படாமல் இருக்கும் அந்த உயிருக்காக இனி பழி தீர்க்கப்படாது என்று இப்போது அறிவித்து விட்டேன்)
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: (இப்னு மாஜா: 3074) (3065),(முஸ்லிம்: 2137),(திர்மிதீ: 3012),(அபூதாவூத்: 1628, 2896),
இப்னு குஸைமா
அறியாமைக் காலத்து வட்டி (இன்று) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன் முதலில் நான் ரத்து செய்யும் வட்டி (எனது பெரிய தந்தை) அப்பாசுக்கு வர வேண்டிய எங்களுடைய வட்டியாகும். (இன்று) அந்த வட்டி அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றது.
நூல்கள்: (திர்மிதீ: 3087) (3012), இப்னுமாஜா 3074,(முஸ்லிம்: 2137),(அபூதாவூத்: 1628, 2896),
3065, இப்னு குஸைமா
இரவல் (திருப்பிச்) செலுத்தப்பட வேண்டியதாகும். (பிறரது) கடனுக்குப் பொறுப்பேற்றவனும் கடனாளியே! கடன் நிறைவேற்றப்பட வேண்டியது ஆகும்.
நூல்கள்: (திர்மிதீ: 1265) (1186),(அபூதாவூத்: 2046), இப்னுமாஜா 2396,(அஹ்மத்: 21263)
சக மனிதர்களின் உரிமை சார்ந்த விஷயம் என வருகிற போது, ஒரு முஸ்லிம் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதற்கு இது போன்ற நிகழ்வுகள் சான்று பகர்கின்றன.
இறந்த பிறகு இறைவனிடத்தில் சுவனம் பெறவேண்டும் என்பதற்காக வாழ்க்கை முழுவதும் தொழுகையை நிறைவேற்றுகிறோம். பெரும் பொருளாதாரத்தைச் செலவு செய்து ஹஜ் செய்கிறோம். ரமலான் மாதம் வந்துவிட்டாலே மாதம் முழுவதும் பட்டினி கிடக்கிறோம். இப்படி நாம் பசி பட்டினியுடன் நோற்கும் நோன்பு, கஷ்டப்பட்டு செய்யும் வணக்கங்களின் முழுமையான கூலி நமக்குக் கிடைக்க வேண்டுமானால், மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.
இல்லையேல், நாம் மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் தவறிய காரணத்தால் அல்லது மற்ற மனிதர்களின் உரிமையைப் பறித்த காரணத்தினால், இந்த வணக்கங்களால் நமக்குக் கிடைக்கும் அளப்பெரும் நன்மைகளை நம்மால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுமையில் அள்ளித்தர வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படும்.
அன்றாட வாழ்வுடன் பின்னிப் பிணைந்த மனித உரிமை பேணல் கால ஓட்டத்தில் மிகவும் மலிவாகிப் போன பல விஷயங்களுல் முதன்மையானது மனித உரிமைகள். சாதியின் பெயராலும், ஆதிக்க வர்க்கத்தின் அடக்குமுறைகளாலும் மனித குலம் எதிர்கொள்கிற சவால்களில், மனித நேயத்தை இழந்து விடுவதே அதன் உச்சக்கட்ட பாதிப்பு எனலாம்.
சுய நலம், பணத்தாசை, புகழாசை போன்ற நோய்கள் மனிதனை ஆட்கொண்டு விட்ட இக்காலகட்டத்தில், அவற்றைத் தக்க வைப்பதற்காக எத்தகைய கீழ் நிலைக்கும் மனிதன் இன்று இறங்கத் தயாராக இருக்கிறான். சக மனிதனின் உயிர் அவனுக்கு மதிப்பாகத் தெரியவில்லை. அந்த உயிரைப் பறிப்பதால் சில லட்சங்கள் பணமோ, சொகுசான வாழ்க்கையோ இவ்வுலகில் அவனுக்கு அமையுமானால் அவ்வுயிரை எடுப்பதற்குக் கூட துணிகிறான்.
விலங்குகளுக்கு இருக்கும் உரிமைகளைக் கூட மனிதன் இன்று நம் சமூகத்தில் இழந்து நிற்கிறான் என்ற மோசமான உதாரணங்களை நாம் பட்டியலிட முடியும். மாட்டிறைச்சி வைத்திருந்தான் எனக் காரணம் கற்பித்து, வீடு புகுந்து ஒருவர் கொல்லப்படுகிறார். அங்கே மத வெறியும், ஆதிக்க வெறியும் தான் ஓங்கியதே தவிர, மனித நேயம் மண்ணோடு மண்ணாய்ப் போனது.
ஆனால் இஸ்லாமோ, மனிதன் அன்றாடம் எதிர்கொள்ளும் சிறு சிறு காரியங்களில் கூட அவனுடைய சுய மரியாதைக்கு இழுக்கு ஏற்படா வண்ணம் சட்டங்களை வகுப்பதைப் பார்க்கிறோம். அற்பமான காரியங்களாக நாம் கருதுகின்றவற்றில் கூட ஒரு மனிதனின் உரிமை சார்ந்த விஷயம் என வருகின்ற போது அதில் மிகுந்த கவனமெடுக்கிறது இந்த மார்க்கம். மனித உரிமைகளைப் பேணுவதில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு நிகரான ஒரு சித்தாந்தத்தை உலகில் எங்குமே பார்க்க முடியாது என்பது தான் உண்மை.
ஆகவே இஸ்லாம் கூறும் மனித உரிமைகளை பேணி பின்பற்றி வாழ்வோமாக.!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.