கவனத்துடன் இம்மையை கடப்போம்..!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

கவனமின்மை , பொடுபோக்கு, அலட்சியம், இன்னும் பல சொற்களால் அழைக்கப்படும் மனிதனின் கவனக்குறைவு இன்று பலவிதமான நஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு “படி படி” என அனுதினமும் கூறியும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியின் அவசியத்தை ஆழமாக கூறியும் அவர்களின் அனுபவ உபதேசத்தை பொருட்படுத்தாது கவனக்குறைவாக இருந்த மாணவர்கள் பரீட்சையின் போது தங்களுக்கு எந்த பதிலும் தெரியாது கைகளை பிசைந்து கொள்வார்கள். காரணம் என்ன ? படிப்பின் முக்கியம் அறியாது அசட்டையாக இருந்தமை.

வாகனம் செலுத்தும் போது மிக நுணுக்கமாக முன்னால் வரும் வாகனங்களை கவனித்து அவதானமாக செலுத்த வேண்டும். ஆனால் இளம்வயதினர் வாகனங்களை செலுத்தும் விதம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்து விடும். அதிக வேகம், மற்ற வாகனங்களை மயிரிடையில் முந்திச்செல்லுதல், தாறுமாறாக செலுத்துதல், ஒரு சக்கரத்தை உயர்த்தி மற்ற சக்கரத்தில் சர்க்கஸ் காட்டி ஓட்டுதல் இந்த செயல்கள் ஒரு நாளைக்கு அவனுடைய கை, கால்கள், எலும்புகளை உடைத்து விடும் ஒர் செயல் என்பதை ஒரு கணம் கவனிதிருந்தால் எத்தனையோ இளைஞர்கள் விபத்தின்றி காப்பாற்றப்பட்டு இருக்கலாம். இதற்கு என்ன காரணம் வாகனம் செலுத்தும் போது கவனமின்மை.

உலகத்தில் உள்ள படிப்போ, வாகனம் செலுத்துவதோ, இன்னும் உள்ள உலக காரியங்களில் கவனக்குறைவாக இருந்தாலோ அந்த பாதிப்பு உலகத்தோடு முற்றுபெறும். அல்லது மீண்டும் முயற்சித்து விட்டால் பிழையை திருத்தலாம். ஆனால் மறுமை சம்மந்தப்பட்ட காரியங்களில் கவனக்குறைவாக இருப்பது மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்திவிடும் என்று திருக்குர்ஆனும் நபிமொழிகளும் நமக்கு எடுத்துரைக்கிறது. அப்படிப்பட்ட செய்திகளை இந்த உரையில் காண்போம்..

மறுமையில் கவனக்குறைவு என்றால் என்ன?

பிறந்து விட்ட ஒரு மனிதர் மரணிப்பது உறுதி . அவன் இறப்புக்குப்பின் ஒன்று நரகவாதியாகவோ அல்லது சொர்கவாதியாகவோ இருப்பார். அவர் இந்த இரண்டுக்கும் இடைப்பட்டவராக அதாவது நரகத்திற்கு செல்லாமலும், சொர்க்கத்திற்கு செல்லாமலும் இருக்க முடியாது. இந்த நம்பிக்கையை மனதில் வைத்தே ஒரு முஸ்லிம் அனைத்து காரியங்களையும் செய்ய வேண்டும். இந்த நம்பிக்கை குறைந்து மறுமை விடயங்களில் அலட்சிமாக இருப்பது அவனை நரக பாதாளத்தில் தள்ளிவிடும்.

மறுமையை இலக்காக வைத்து பயணிக்கும் ஒரு முஸ்லிம் மார்க்க விடயங்களில் பொடுபோக்கின்றி மிக கவனமாக இருப்பார். இதை சில செய்திகள் மூலம் அறியலாம். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் தோழர்களில் ஒரு தோழர் ஒரு முறை நபியவர்களின் சபையில் அமர்ந்து நபியவர்கள் சொல்லும் மார்க்க செய்திகளை ஆழ்ந்து கவனித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது…. நபியவர்கள் கூறினார்கள்.

‏”‏ كَانَ اللَّهُ وَلَمْ يَكُنْ شَىْءٌ غَيْرُهُ، وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ، وَكَتَبَ فِي الذِّكْرِ كُلَّ شَىْءٍ، وَخَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ
ذَهَبَتْ نَاقَتُكَ يَا ابْنَ الْحُصَيْنِ‏.‏
فَانْطَلَقْتُ فَإِذَا هِيَ يَقْطَعُ دُونَهَا السَّرَابُ، فَوَاللَّهِ لَوَدِدْتُ أَنِّي كُنْتُ تَرَكْتُهَا‏

நபி (ஸல்) அவர்கள், ‘(ஆதியில்) அல்லாஹ் மட்டுமே இருந்தான். அவனுக்கு முன் (அவனைத் தவிர வேறு) எந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) தண்ணீரின் மீது இருந்தது. பின்னர் வானங்கள் மற்றும் பூமியை அவன் படைத்தான். (லவ்ஹுல் மஹ்ஃபூழ் எனும்) பாதுகாக்கப் பெற்ற பலகையில் (பிரபஞ்சத்தின்) எல்லா விஷயங்களையும் எழுதினான்’ என்றார்கள்.

(அறிவிப்பாளர் கூறுகிறார்:) பின்னர் ஒருவர் என்னிடம் வந்து, ‘இம்ரானே! உங்கள் ஒட்டகத்தை (கண்டு) பிடியுங்கள்; அது (ஓடிப்) போய்விட்டது’ என்று கூற, நான் அதைத் தேட (எழுந்து) சென்றுவிட்டேன். சென்று பார்த்தால் ஒட்டகத்தைக் காண முடியாதபடி கானல் நீர் தடுத்துவிட்டது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது போனால் போகட்டும் என்று கருதி, (ஹதீஸ் முடிவதற்கு முன்) நான் அங்கிருந்து எழுந்து செல்லாமல் இருந்திருக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.

நூல்: (புகாரி: 7418) 

இங்கு நாம் கவனிக்கத் தவறிய ஓர் விடயம். இம்ரான் (ரலி) அவர்களின் ஒட்டகம் ஓடியது கூட அவர்களுக்கு தெரியாது. அந்த அளவுக்கு அல்லாஹ்வின் மார்க்கத்தில் அக்கறையாக இருந்து விடுகிறார். இன்று நாம் அப்படியா மார்க்கம் போனால் போகட்டும். நம்ம சொத்து சேதாரம் ஆகாமல் இருந்தால் சரி. இந்த நிலை மாற வேண்டும். நாம் அனைத்து விடயங்களையும் விட மார்க்கத்தை நேசிக்க பழக வேண்டும்.  

உமர் (ரலி)  அவர்கள் ஏன் இவ்வாறு கூறினார்கள்?

உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் அபூமூஸா (ரலி) அவர்கள் வந்து, உள்ளே வர அனுமதி கோரினார்கள். உமர் (ரலி) அவர்கள் அலுவலில் ஈடுபட்டிருந்தார்கள் போலும். அபூமூஸா (ரலி) அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை; உடனே அபூமூஸா (ரலி) அவர்கள் திரும்பி விட்டார்கள். அலுவலை முடித்த உமர் (ரலி) அவர்கள், ‘‘அபூமூஸாவின் குரலை நான் கேட்டேனே! அவருக்கு அனுமதி அளியுங்கள்” என்றார்கள். ‘‘அவர் திரும்பிச் சென்றுவிட்டார்” என்று கூறப்பட்டது.

உடனே உமர் (ரலி) அவர்கள் அபூமூஸா (ரலி) அவர்களை அழைத்துவரச் செய்தார்கள். (‘‘ஏன் திரும்பிச் சென்றுவிட்டீர்?” என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டபோது) அபூமூஸா (ரலி) அவர்கள், ‘‘இவ்வாறே நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம்” எனக் கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள், ‘‘இதற்குரிய சான்றை நீர் என்னிடம் கொண்டுவாரும்!” எனக் கூறினார்கள். உடனே அபூமூஸை (ரலி) அவர்கள் அன்சாரிகளின் அவைக்குச் சென்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘எங்களில் சிறியவரான அபூஸயீத் அல்குத்ரீயைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் உமக்கு சாட்சியம் சொல்லமாட்டார்கள்” என்றனர்.

எனவே, அபூமூஸா (ரலி) அவர்கள், அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களை அழைத்துக்கொண்டு உமர் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். (அபூஸயீத் (ரலி) அவர்கள், அபூமூஸா (ரலி) அவர்கள் கூறியதை உறுதிப்படுத்தியதும்) உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளை எனக்குத் தெரியாமல் போய்விட்டதே? நபி (ஸல்) அவர்களது காலத்தில் (வெளியே சென்று) சந்தைகளில் நான் வணிகம் செய்து கொண்டிருந்தது என் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டது (போலும்)!” என்று கூறினார்கள்.

நூல்: (புகாரி: 2062)

தனக்கு இந்த செய்தி தெரியாமல் போனதே என கவலைப்படுகிறார்கள்.

” ஆஹா உமருக்கே ஹதீஸ் தெரியாமல் இருக்கும் போது எனக்கு தெரியாமல் இருந்தால் என்ன ? ” என சிந்திக்கிறீர்களா? அப்படி சிந்திக்க வேண்டாம்! உமர் (ரலி) அவர்களுக்கு ஒன்று தான் தெரியவில்லை மற்றவைகள் தெரிந்தே வைத்திருந்தார்கள்.

தனக்கு அந்த ஒன்று தெரியாமல் போய் விட்டதே என்று தான் கவலைப்பட்டார். அதே போல் நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் தனக்கு ஏற்பட்ட நிகழ்வை மக்களிடம் பதிய வைக்கிறார்கள்.

ஆயிஷா (ரலி) அறிவித்தார். கோடுகள் போடப் பட்ட ஒரு மேலாடை அணிந்து நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். ‘இதன் கோடுகள் என் கவனத்தைத் திருப்பிவிட்டன. இதை அபூஜஹ்மிடம் கொடுத்துவிட்டு மற்றோர் ஆடையைக் கொண்டு வாருங்கள்! என்று கூறினார்கள்.

நூல்: (புகாரி: 752)

பார்த்தீர்களா ஒரு சின்ன கவனக்குறைவு தன் எஜமானோடு உரையாடும் தொழுகையைப் பால்படுத்தி விடுமோ என அச்சம் கொண்டு ஆடையை திருப்பி அனுப்பி விட்டார்களே! என்ன காரணம்? மறுமையில் என் வாழ்க்கையை நாசமாக்கும் ஏதும் எனக்கும் வேண்டாம் என உறுதியாக இருந்தார்கள். நாமும் இவ்வாறான உலகத்தின் பக்கம் சாய்ந்து மறுமையை நாசம் செய்து விடக்கூடாது. இந்தக் கவனக்குறைவு உண்மையான தீனுல் இஸ்லாத்தை அறிந்துகொள்ள விடாமல் தடுத்து விடும் நிலையையும் உருவாக்கும். அல்லாஹ் கூறும் போது…

وَأَنِ احْكُم بَيْنَهُم بِمَا أَنزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَاحْذَرْهُمْ أَن يَفْتِنُوكَ عَن بَعْضِ مَا أَنزَلَ اللَّهُ إِلَيْكَ ۖ فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ ۗ وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ لَفَاسِقُونَ

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக!

அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக! மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர். 

(அல்குர்ஆன்: 5:49)

وَهُمْ يَصْطَرِخُونَ فِيهَا رَبَّنَا أَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلُ ۚ أَوَلَمْ نُعَمِّرْكُم مَّا يَتَذَكَّرُ فِيهِ مَن تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيرُ ۖ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِن نَّصِيرٍ

“எங்கள் இறைவா! எங்களை வெளியே அனுப்பு! நாங்கள் செய்து வந்தது போலன்றி (இனிமேல்) நல்லறங்களைச் செய்கிறோம்” என்று அங்கே அவர்கள் கதறுவார்கள். “படிப்பினை பெறும் அளவு உங்களுக்கு நாம் வாழ்நாளை அளித்திருக்கவில்லையா? எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா? எனவே அனுபவியுங்கள்! அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை” (என்று கூறப்படும்) .  

(அல்குர்ஆன்: 35:37)

ஒரே வேதம், ஒரே இறைவன், அவன் வழியே சுவர்க்கப்பாதை என்ற கொள்கையில் அலட்சியமாக இருந்தால் மேலே கூறிய வசனங்கள் போல நாம் மறுமையில் தோல்வி அடைந்து விடுவோம். எமது கொள்கையை ஒரு முறை  மீள்பரிசோதனை செய்யுங்கள். அதில் ஷிர்க் இருந்தால் அல்லது பித்அத் இருந்தால் நமது நிலை என்னவாகும்? அதனால் நாம் கவனக்குறைவாக இருந்து விடாமல் உண்மையான கொள்கையில் வாழ்வோம். இறை உதவியை அடைய இமயமலை அளவுக்கு உழைப்போம்… அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்..

பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.