29) கல்வி கற்றுத்தர வேண்டும்

நூல்கள்: இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு

குழந்தைகளுக்கு கல்வியறிவு கிடைக்கச் செய்வது குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான அம்சம். மார்க்கக் கல்வி உலகக்கல்வி ஆகிய இரண்டையும் குழந்தைகள் பெறுவது அவசியம.

கல்வியற்றக் குழந்தைகள் நாகரீகம் தெரியாமலும் நல்லவற்றிலிருந்து தீயதை பிரித்தரியாமலும் வளர்கின்றன. இவ்வுலகத்திலும் மறுஉலகத்திலும் மனிதன் சிறப்பாக வாழ்வதற்கு கல்வி உதவியாக இருக்கிறது.

கல்விக்கூடத்திற்கு செல்லமாட்டேன் என்று குழந்தை அடம்பிடித்தால் அடித்தாலாவது அவர்களைப் படிக்க வைக்க வேண்டும். இந்த விஷயத்தில் பெற்றோர்கள் கண்டிப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும்.

மார்க்கக் கல்வியை அறிந்துகொள்வதற்கு காலை மாலை மத்ரஸாக்களுக்கு அனுப்பலாம். கல்வியைத் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் இஸ்லாம் சமத்துவத்தை போதிக்கிறது. ஆனால் கல்வியைப் பெற்றவன் உயர்ந்தவன் என்றும் கல்வி அற்றவன் தாழ்ந்தவன் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.

அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்.

 (அல்குர்ஆன்:)

உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும் கல்வி வழங்கப் பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

 (அல்குர்ஆன்:)

உலகக்கல்வி மார்க்கல்வி என்று இஸ்லாம் தனித் தனியாகப் பிரிக்கவில்லை. மாறாக பலனுள்ளக் கல்வி பலனற்றக் கல்வி என்று இருவகையாகப் பிரிகிறது. உலகக்கல்வியை பலனுள்ள வகையில் பயன்படுத்தினால் அதன் மூலமும் இறைவனை நெருங்க முடியும்.

மனிதன் நேர்வழி பெறுவதற்கு உலக்கல்வி மட்டும் போதாது. இன்றைக்கு உலகக்கல்வியில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்ற எத்தனையோபேர் அநியாயத்தையும் அக்கிரமத்தையும் செய்துகொண்டிருக்கிறார்கள். காரணம் என்னவென்றால் அவர்களிடத்தில் மார்க்கத்தைப் பற்றிய அறிவு இல்லை என்பது தான்.

எனவே உலகக்கல்வியுடன் மார்க்க அறிவை சேர்த்து கற்றுத்தரும் போது தான் பலனுள்ளக் கல்வி கிடைக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1. நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.

அறி : அபூஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் (3358)