11) கல்லெறியும் நாட்களும், இடங்களும்

நூல்கள்: நபி வழியில் நம் ஹஜ்

கல்லெறியும் நாட்களும், இடங்களும்

பத்தாம் நாள் அன்று ஜம்ரதுல் அகபா எனும் இடத்தில் மட்டும் ஏழு கற்களை எறிவது பற்றி முன்னர் அறிந்தோம். அதைத் தவிர கல்லெறிய வேண்டிய மற்ற இடங்களும் நாட்களும் உள்ளன. அவற்றையும் விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.

துல்ஹஜ் பதினொன்று, பனிரெண்டு, பதிமூன்று ஆகிய மூன்று நாட்கள் கல்

குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள்! இரண்டு நாட்களில் விரைபவர் மீதும் எந்தக் குற்றமுமில்லை. தாமதிப்பவர் மீதும் குற்றம் இல்லை.

(அல்குர்ஆன்: 2:203)

அந்த நாட்களில் கல்லெறிவதற்காக அதற்கு முந்திய இரவுகளில் மினாவிலேயே தங்கிட வேண்டும். தினமும் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததும் கல்லெறியும் மூன்று இடங்களிலும் தலா ஏழு கற்களை எறிய வேண்டும்.

மினாவுக்குள் நுழையும் போது இடது புறம் ஜம்ரதுல் அகபா அமைந்துள்ளதை நாம் முன்னர் அறிந்தோம்.

அங்கிருந்து 116.77 மீட்டர் தூரத்தில் ஜம்ரதுல் உஸ்தா எனும் இடம் அமைந்துள்ளது.

ஜம்ரதுல் உஸ்தாவிலிருந்து 156.4 மீட்டர் தூரத்தில் ஜம்ரதுல் ஊலா (அல்லது ஜம்ரதுல் ஸுக்ரா) அமைந்துள்ளது.

இம்மூன்றும் கல்லெறிய வேண்டிய இடங்களாகும்.

 

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஊலாஎனுமிடத்தில் ஏழு கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லுடனும் தக்பீர் கூறினார்கள். பிறகு சற்று முன்னேறி, சம தரையைத் தேர்வு செய்து கொண்டு, கிப்லாவை முன்னோக்கி நீண்ட நேரம் நின்றார்கள். தமது கைகளை உயர்த்தி துஆச் செய்தார்கள். பிறகு ஜம்ரதுல் உஸ்தாவில் கல்லெறிந்தார்கள். பிறகு இடது புறமாக நடந்து சென்று சம தரையில் கிப்லாவை நோக்கி நின்றார்கள். பிறகு கைகளை உயர்த்தி துஆச் செய்தார்கள். அங்கே நீண்ட நேரம் நின்றார்கள். பிறகு பதனுல் வாதிஎன்ற இடத்திலிருந்து ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்தார்கள். ஆனால் அங்கே நிற்காமல் திரும்பினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்திருக்கிறேன்எனவும் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாலிம்

(புகாரி: 1751, 1753)

 

சூரியன் உச்சியிலிருந்து சாய்வதைக் கவனித்து உடனே கல்லெறிய வேண்டும்.

நாங்கள் நேரத்தைக் கணித்துக் கொண்டே இருப்போம். சூரியன் உச்சி சாய்ந்ததும் கல்லெறிவோம்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(புகாரி: 1746)

 

இவ்வாறு மூன்று நாட்களும் கல்லெறிய வேண்டும். கல்லெறிவதற்காக மினாவில் இரவு தங்குவது நபிவழி என்றாலும் அது கட்டாயமானதல்ல. தக்க காரணம் உள்ளவர்கள் மக்காவிலேயே தங்கிக் கொண்டு கல்லெறிவதற்காக மினாவுக்குப் புறப்பட்டு வரலாம்.

மினாவில் தங்க வேண்டிய இரவுகளில் (மக்களுக்கு) நீர் புகட்டுவதற்காக மக்காவில் தங்கிக் கொள்ள அப்பாஸ் (ரலி) அனுமதி கேட்டார்கள். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(புகாரி: 1634, 1745)