12) கலீபாக்களைப் பின்பற்றுதல்

நூல்கள்: நபித் தோழர்களும் நமது நிலையும்

நேர்வழி பெற்ற கலீபாக்களைப் பின்பற்றுதல்

எனக்குப் பின் நேர்வழி பெற்ற கலீபாக்களைப் பின்பற்றுங்கள்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களே! என்று அடுத்த ஆதாரத்தை எடுத்துக் காட்டுகின்றனர்.

இவர்கள் கூறுகின்ற கருத்து அந்த நபிமொழியில் உள்ளதா? என்பதை விளக்குவதற்கு முன் இவர்களின் முரண்பாட்டை நாம் சுட்டிக் காட்ட வேண்டும்.

இவர்களது வாதப்படி நேர்வழி பெற்ற கலீபாக்கள் என்பது அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி (ரலி) ஆகியோர் தான். இந்த நபிமொழி இவர்களின் வாதப்படி இந்த நால்வரையும் பின்பற்றுமாறு தான் கூறுகிறது.

ஆனால் இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுபவர்கள் இந்த நால்வரைத் தவிர மற்ற நபித் தோழர்களைப் பின்பற்றக் கூடாது என்று கூறுவதில்லை. எல்லா நபித் தோழர்களையும் பின்பற்றலாம் என்று கூறிக் கொண்டு அதற்கு ஆதாரமாக இதைக் காட்டுவது அவர்களுக்கே எதிரானதாகும்.

நான்கு கலீபாக்களும் மார்க்கத்தில் எந்த ஒன்றை உருவாக்கினாலும் அதைப் பின்பற்றுங்கள் என்ற கருத்து இதில் உள்ளதா? இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது தானா? என்பதைப் பார்ப்போம்.

இந்த நபிமொழி பல்வேறு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்றிரண்டு அறிவிப்புகள் பலவீனமானவை என்றாலும் பெரும்பாலான அறிவிப்புகள் நம்பகமானவர்கள் வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளன.

திர்மிதி 2600, அபூ தாவூத் 3991,(இப்னு மாஜா: 42, 43), முனத்(அஹ்மத்: 16519, 16521, 16522), தாரிமி 95 மற்றும் பல நூல்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுபவர்கள் முழு ஹதீஸையும், அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு வார்த்தையையும் எடுத்துக் காட்டுவதில்லை. பெரும் பகுதியை இருட்டடிப்புச் செய்து விட்டு “எனது வழிமுறையையும் நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழிமுறையையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்பதை மட்டும் எடுத்துக் காட்டுகின்றனர்.

முழு ஹதீஸையும் இவர்கள் ஆய்வு செய்தால் இவர்களுக்கே இதன் சரியான பொருள் விளங்கிவிடும். அல்லது சிந்திக்கும் திறன் உள்ள மக்கள் இதன் உண்மையான பொருளைக் கண்டு கொள்வார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பொருத்த வரை தமது சொல் எங்கெல்லாம் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு விடுமோ அங்கெல்லாம் சரியான பொருளைக் கண்டு கொள்ளும் வகையிலான வார்த்தைகளையும் சேர்த்துக் கூறி விடுவார்கள்.

இஞ்சீலுக்குரியோர் அதில் அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்கட்டும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே குற்றவாளிகள்.

(அல்குர்ஆன்: 5:47)

இவர்கள் மேற்கண்ட நபிமொழியை விளங்கியது போல் இந்த வசனத்தையும் விளங்கினால் என்னவாகும்? கிறித்தவர்கள் இன்றளவும் பைபிளின் அடிப்படையில் வாழலாம் என்று குர்ஆன் அனுமதிப்பதாகப் பொருள் வரும். ஆனால் இவ்வாறு அவர்கள் பொருள் கொள்ள மாட்டார்கள். குர்ஆனில் இன்ஜீல் பற்றி குறிப்பிட்ட அனைத்தையும் தொகுத்து அவற்றுக்கு முரணில்லாத வகையில் அதை விளங்க வேண்டும் என்று நிலை மாறுவார்கள்.

இன்ஜீல் கூறுவதன் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவர்கள் ஏற்க வேண்டும் என்பது தான் இதன் பொருள் என்று விளக்கம் தருகின்றனர்.

இதே விதமான ஆய்வு மனப்பான்மையை இந்த நபிமொழியிலும் பயன்படுத்தியிருக்க வேண்டுமல்லவா?

மார்க்கம் அல்லாஹ்வால் முழுமைப்படுத்தப்பட்டிருக்கும் போது வஹீயை மட்டும் பின்பற்ற வேண்டும் என்று தெளிவான கட்டளை இருக்கும் போது அதற்கு முரணில்லாத வகையில் மேற்கண்ட ஹதீஸை விளங்கியிருக்க வேண்டாமா?

நாட்டின் ஜனாதிபதிகள் தான் கலீபாக்கள் எனப்படுகின்றனர். ஒருவர் முஸ்லிம்களால் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இல்லாவிட்டால் நாடு சிதைந்து போய் விடும். ஜனாதிபதி என்ற முறையில் மார்க்க சம்மந்தமில்லாத நிர்வாக விஷயங்களில் அவர்கள் சில வழிமுறைகளை மேற்கொண்டால் அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்ற கருத்தில் தான் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்படிப் பொருள் கொண்டால் தான் மார்க்கம் முழுமையாகி விட்டது என்ற வசனத்திற்கும், வஹீயை மட்டும் பின்பற்றுங்கள் என்ற கருத்தில் அமைந்த வசனங்களுக்கும் பொருள் இருக்கும்.

மேலும் நேர்வழி பெற்ற கலீபாக்களைப் பின்பற்றுங்கள் என்ற ஹதீஸில் “மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். அவை அனைத்தும் வழிகேடுகள் என்ற வாக்கியத்தையும் சேர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.

மார்க்க விஷயம் இல்லாத மற்ற விஷயங்களில் தான் நேர்வழி பெற்ற கலீபாக்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதை மேற்கண்ட வாக்கியம் தெளிவுபடுத்தி விடுகிறது.

நேர்வழி பெற்ற கலீபாக்களைப் பின்பற்றுங்கள் என்பதைத் தொடர்ந்து “அபீஸீனிய அடிமை என்றாலும் கட்டுப்பட்டு நடங்கள் எனவும் சேர்த்துக் கூறுகிறார்கள்.

(இப்னு மாஜா: 43),(அஹ்மத்: 16519)

ஆட்சித் தலைவர் அபீஸீனிய அடிமை என்றாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதில் இருந்து நிர்வாக விஷயங்களில் கட்டுப்பட்டு நடப்பது பற்றியே கூறியுள்ளனர் என்பதை நாம் அறியலாம்.

நேர்வழி பெற்ற கலீபாக்கள் என்பது நான்கு கலீபாக்களைக் குறிக்கும் என்ற தவறான கருத்தும் இதன் மூலம் தகர்க்கப்படுகிறது. நான்கு கலீபாக்களில் ஒருவர் கூட அபீஸீனிய அடிமையாக இருக்கவில்லை. அபீஸீனிய அடிமையாக இருந்தாலும் கட்டுப்படுங்கள் எனக் கூறினால் கியாமத் நாள் வரை ஆட்சி செய்யும் கலீபாக்கள் அனைவருக்கும் மார்க்க சம்மந்தமில்லாத விஷயங்களில் கட்டுப்பட்டு நடங்கள் என்பது தான் இதன் பொருள்.

மேலும் அதே ஹதீஸில் “இறை நம்பிக்கையாளன் மூக்கணாங்கயிறு போட்ட ஒட்டகம் போன்றவன். இழுத்த இழுப்புக்கு கட்டுப்படுபவன் எனவும் சேர்த்துக் கூறுகிறார்கள்.

இப்னுமாஜா 43

இந்தச் சொற்றொடர் மார்க்க விஷயத்தைக் குறிக்காது. மார்க்க விஷயத்தில் கண்ணை மூடிக் கொண்டு கட்டுப்படுதல் என்பது கிடையாது.

மார்க்க சம்மந்தமில்லாத விஷயத்தில் மட்டும் நிர்வாகத் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்பதற்குத் தான் அந்த உதாரணத்தையும் சேர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

அதே ஹதீஸில் “நான் உங்களைப் பளீரென்ற பாதையில் விட்டுச் செல்கிறேன். அதில் இரவும் பகலைப் போன்றது. நாசமாகப் போகுபவனைத் தவிர வேறு யாரும் வழி கெட மாட்டார்கள் என்பதையும் சேர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

மார்க்கத்தில் வேறு யாரையும் பின்பற்றி நடக்கும் நிலையில் நான் உங்களை விட்டுச் செல்லவில்லை என்று கூறிவிட்டு நேர்வழி பெற்ற ஆட்சியாளர்களைப் பின்பற்றுங் கள் எனக் கூறினால் அது நிர்வாக விஷயத்தைத் தான் குறிக்குமே தவிர மார்க்க விஷயத்தை அறவே குறிக்காது.

அபூபக்ரையும், உமரையும் பின்பற்றுங்கள்

எனக்குப் பின்னர் அபூபக்ர், உமர் ஆகிய இருவரையும் பின்பற்றுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தியையும் தங்கள் வாதத்துக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.

இந்த ஹதீஸ் திர்மிதி 3595, 3596, 3735, 3741,(இப்னு மாஜா: 94),(அஹ்மத்: 22161, 22189, 22296, 22328)மற்றும் பல நூல்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

சஹாபாக்கள் அனைவரையும் பின்பற்ற வேண்டும் என்ற கருத்துடையவர்களுக்கு இதில் எந்த ஆதாரமும் இல்லை. இந்த இருவரைத் தவிர மற்றவர்களைப் பின்பற்றச் சொல்லும் ஆதாரம் இல்லை என்பதால் இவ்விருவரை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் வாதம் செய்தால் மட்டுமே இதை ஆதாரமாக எடுத்துக் காட்ட முடியும்.

மார்க்கம் முழுமையாகி விட்டது. வஹீயை மட்டும் பின்பற்றுங்கள் என்பன போன்ற எண்ணற்ற ஆதாரங்களுக்கு முரண்படாத வகையில் தான் இதற்கும் பொருள் கொள்ள வேண்டும்.

மார்க்க சம்மந்தமில்லாத விஷயங்களில் இவ்விருவரையும் சிறந்த தலைவர்களாக ஏற்று நடங்கள் என்று தான் இதற்கும் பொருள் கொள்ள முடியும்.

அடுத்த ஆட்சியாளரைத் தேர்வு செய்யும் விஷயத்தில் உமர் (ரலி) அவர்களின் வழிகாட்டுதலை ஏற்றுத் தான் அபூ பக்ரை மக்கள் கலீபாவாகத் தேர்வு செய்தனர். இது போன்ற விஷயங்களைத் தான் இது குறிக்குமே தவிர மார்க்க விஷயங்களில் பின்பற்றுவதைக் குறிக்காது.

ஃபாத்திஹா அத்தியாயம் கூறுவது என்ன?

நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்களின் வழியைக் காட்டுவாயாக! என்று பிரார்த்தனை செய்யுமாறு அல்லாஹ் நமக்குக் கற்றுத் தருகிறான். இது சஹாபாக்களைத் தான் குறிக்கிறது எனவும் இவர்கள் வாதம் செய்கின்றனர்.

இவர்கள் எந்த அளவுக்கு சிந்தனைத் திறன் அற்றவர்களாக உள்ளனர் என்பதை இந்த வாதத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

இந்தப் பிரார்த்தனையை நாம் மட்டும் செய்வதில்லை. முதன் முதலில் இதைச் செய்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான். இறைவா! எனக்கு சஹாபாக்கள் வழியைக் காட்டு என்ற அர்த்தத்தில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறினார்களா?

சஹாபாக்களும் கூட இதே பிரார்த்தனையைச் செய்தார்களே! அதன் பொருள் என்ன?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின் இது இறைவனால் அருளப்பட்டது போல் எண்ணிக் கொண்டு இவ்வாறு வாதிடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் ஏராளமான நபிமார்கள், நல்லவர்கள் சென்று விட்டனர். அவர்கள் நேர்வழியில் சென்றதால் இறைவனின் அருளையும் பெற்றனர். அவர்கள் எந்த வழியில் சென்றனர் என்பதற்கு நம்மிடம் ஆதாரம் இல்லை. எனவே தான் “இறைவா! இதற்கு முன்னர் நீயாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழியைக் காட்டு என்று பிரார்த்திக்குமாறு அல்லாஹ் கற்றுத் தந்தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் அந்த நேர்வழி எது? என்பதையும் காட்டி விட்டான். இதைத் தான் இவ்வசனம் கூறுகிறது என்பதை சாதாரண அறிவு படைத்தவர்களும் விளங்க முடியும்.

குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வஹீயாக அறிவிக்கப்பட்டதையும் தவிர வேறு எதுவும் மார்க்க ஆதாரமாக முடியாது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

சஹாபாக்களை விட மற்றவர்கள் நன்கு விளங்க முடியுமா?

மார்க்கத்தைச் சரியான முறையில் அறிந்து கொள்வதற்கு மார்க்க ஆதாரங்கள் பரவலாக்கப்பட்டும் எளிதில் கிடைக்கும் வகையிலும் முழுமையாகத் திரட்டப்பட்டும் இருக்க வேண்டும்.

ஆதாரங்கள் சிதறிக் கிடந்தால், முழுமையாகத் திரட்டப் படாமல் இருந்தால், எளிதில் கிடைக்காமல் இருந்தால் ஒவ்வொருவரும் தமக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப் படையில் தான் முடிவு செய்வார். ஆதாரம் கிடைக்காத போது சுயமாக முடிவு எடுப்பது தவிர அவருக்கு வேறு வழி இல்லை.

நபித் தோழர்களின் கடைசி காலத்தில் தான் குர்ஆன் முழுமைப்படுத்தப்பட்டது. ஆனாலும் அச்சிட்டு பரவலாக அனைவருக்கும் கிடைக்கும் நிலை இருக்கவில்லை.

மனனம் செய்தவர்களும், ஏடுகளில் எழுதி வைத்துக் கொண்டவர்களுமான மிகச் சில நபித் தோழர்கள் தவிர பெரும்பாலான நபித் தோழர்களுக்கு முழுக் குர்ஆனும் கிடைக்கவில்லை.

சந்தேகம் வந்தால் புரட்டிப் பார்க்கும் வகையில் ஏடுகளாகவும் அனைவரிடமும் இருக்கவில்லை.

அது போல் நபிமொழியை எடுத்துக் கொண்டால் இதற்கு அடுத்த நிலையில் தான் இருந்தது.

முழு ஹதீஸ்களையும் எழுதி வைத்த ஒரு நபித் தோழரும் இருக்கவில்லை.

முழு ஹதீஸையும் மனனம் செய்த ஒரு நபித் தோழரும் இருக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் பத்து சதவீதத்தை மனனம் செய்தவர்களோ எழுதி வைத்துக் கொண்டவர்களோ கூட அன்றைக்கு இருக்க வில்லை.

இந்த நிலையில் நபித் தோழர்கள் தாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் அனைத்து ஹதீஸ்களையும் ஆய்வு செய்து தேடிப் பார்த்து தீர்ப்பளிக்கும் வாய்ப்பை பெறவே இல்லை. எனவே தான் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியாக எதை அறிந்தார்களோ அதைப் பின்பற்றினார்கள். மற்ற விஷயங்களில் தாமாக முடிவு செய்வது மட்டுமே அவர்கள் முன் இருந்த ஒரே வழி என்பதால் அதைத் தான் அவர்கள் செயல்படுத்த முடிந்தது.

ஆனால் இன்றைக்கு ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொரு நபரும் தமக்கென குர்ஆனை வைத் துள்ளோம்.

ஹதீஸ்கள் அனைத்தும் பாடம் வாரியாகத் தொகுக்கப்பட்டு நூல்களாக உள்ளன. அனைவரிடமும் அனைத்து நூல்களும் இல்லாவிட்டாலும் நூலகங் களிலும், மதரஸாக்களிலும் அவை உள்ளன.

சாப்ட்வேர்களாகவும் அனைத்தும் வந்துள்ளன.

எந்தக் கடினமான கேள்விக்கும் அரை மணி நேரம் செலவிட்டு அதற்கான ஆதாரங்களைக் கண்டு பிடிக்கும் அளவுக்குத் தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது.

இந்தக் காலத்தில் நபித் தோழர்கள் வாழ்ந்தால் நம்மை விடச் சிறப்பாக இந்த வசதியைப் பயன்படுத்தி சரியான பத்வாக்களை வழங்குவார்கள். அவர்கள் காலத் தில் நாம் இருந்தால் அவர்களிடம் ஏற்பட்ட தவறுகளை விட அதிகத் தவறு செய்பவர்களாக நாம் இருப்போம்.

இந்த நிலை ஏற்படும் என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் “எனது செய்திகளை வந்தவர்கள் வராதவருக்கு எடுத்துச் சொல்லுங்கள். எடுத்துச் சொல்பவரை விட யாரிடம் எடுத்துச் சொல்லப்படுகிறதோ அவர்கள் அதனை நன்கு பேணிப் பாதுகாப்பவர்களாக இருப்பார்கள் என்று முன்னறிவிப்பு செய்தனர்.

(புகாரி: 1741, 7074)

உலகம் அழியும் வரை என்ன நடக்கும் என்பதையெல்லாம் அறிந்து வைத்துள்ள இறைவனால் தரப்பட்டதே இஸ்லாம். உலகம் அழியும் வரை தோன்றும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லக் கூடிய வகையில் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

அந்தந்த காலத்தை அடைபவர்களால் தான் அதன் சரியான பொருளை அறிந்து கொள்ள முடியும்.

எனவே இது போன்ற விஷயங்களில் நபித்தோழர்கள் புரிந்து கொள்ளாத பல விஷயங்களை இன்று நாம் ஆய்வு செய்து புரிந்து கொள்ள முடியும்.

சந்திர மண்டலத்தில் கிப்லாவை எவ்வாறு நோக்குவது? செயற்கை முறையில் கருத்தரிப்பது கூடுமா? குடும்பக் கட்டுப்பாடு செய்யலாமா? என்பன போன்ற கேள்விகளை அன்றைக்கு அவர்களிடம் கேட்டால் இதெல்லாம் நடக்குமா என்ன? என்பது தான் அவர்களின் பதிலாக இருக்கும்.

இன்று நாம் பல நவீன பிரச்சனைகளை நேரடியாகவே சந்திப்பதால் இதற்கெல்லாம் தீர்வு தரும் வகையில் நிச்சயம் குர்ஆனிலும், நபிவழியிலும் வாசகம் இடம் பெற்றிருக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆய்வு செய்தால் அதற்கான விடை கூறக் கூடிய ஆதாரங்களைப் பார்க்க முடிகின்றது.

ஆழ்கடலில் அலைகள் உள்ளன.

வானத்தைக் கூரையாக ஆக்கியுள்ளோம்.

மலைகளை முலைகளாக ஆக்கியுள்ளோம்.

ஃபிர்அவ்னின் உடலை நாம் பாதுகாத்து வைத்துள்ளோம்.

ஜுதி மலையில் நூஹ் நபியின் கப்பல் அத்தாட்சியாக உள்ளது.

இது போல் எண்ணற்ற வசனங்கள் குர்ஆனில் உள்ளன. இவற்றை நாம் விளங்கியது போல நபித்தோழர்களால் விளங்க முடியாது. ஆய்வு செய்து இதற்கான விளக்கம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் நாம் வாழ்வதால் நமக்கு இது சாத்தியமாகிறது.

ஒவ்வொரு செய்திக்கும் நிகழ்விடம், நிகழும் நேரம் உள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான்.

ஒவ்வொரு செய்திக்கும் நிகழ்வதற்கான நேரம் உள்ளது. பின்னர் அறிந்து கொள்வீர்கள்!!

(அல்குர்ஆன்: 6:67)

எனவே குர்ஆனும் நபிவழியும் மட்டுமே மார்க்க ஆதாரங்களாகும். இவ்விரண்டைத் தவிர நபித்தோழர்கள் உள்ளிட்ட எவரது சொல்லும் மார்க்க ஆதாரங்களாகாது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.