கற்பா? கல்லூரியா?

பயான் குறிப்புகள்: குடும்பவியல்

முன்னுரை

பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிப் படிப்பையும் தாண்டி கல்லூரிப் படிப்பில் சேர்ப்பதற்குப் பெரும் முயற்சி மேற்கொள்கிறார்கள்; பெரும்பாடு படுகிறார்கள்.

கல்வி சிறந்ததே

அல்குர்ஆன் கல்வியின், அறிவின் அவசியத்தை எந்தளவு வலியுறுத்துகின்றதெனில், அறிஞர்களே அல்லாஹ்வைச் சரியாகப் பயப்படுபவர்களாக இருப்பர் என்று கூறுகின்றது.

وَمِنَ النَّاسِ وَالدَّوَابِّ وَالْأَنْعَامِ مُخْتَلِفٌ أَلْوَانُهُ كَذَلِكَ إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ إِنَّ اللَّهَ عَزِيزٌ غَفُورٌ

”அல்லாஹ்வை அவனது அடியார்களில் அஞ்சுபவர்கள் அறிஞர்களே.” (35:28) மேலும், அல்குர்ஆன் அறியாமையையும் மடமையையும் நரகத்தின் பாதையென வர்ணிக்கின்றது.

أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ ۗ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ ۗ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ

அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான். “அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்”.(அல்குர்ஆன்: 39:9)

قُلْ لَا أَقُولُ لَكُمْ عِنْدِي خَزَائِنُ اللَّهِ وَلَا أَعْلَمُ الْغَيْبَ وَلَا أَقُولُ لَكُمْ إِنِّي مَلَكٌ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ قُلْ هَلْ يَسْتَوِي الْأَعْمَى وَالْبَصِيرُ أَفَلَا تَتَفَكَّرُونَ

“குருடனும் பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டிர்களா? என்று கேட்பீராக!”(அல்குர்ஆன்: 6:50)

7028 – حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِىُّ وَأَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ الْعَلاَءِ الْهَمْدَانِىُّ – وَاللَّفْظُ لِيَحْيَى – قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِى صَالِحٍ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم
مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ يَسَّرَ اللَّهُ عَلَيْهِ فِى الدُّنْيَا وَالآخِرَةِ وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ فِى الدُّنْيَا وَالآخِرَةِ وَاللَّهُ فِى عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِى عَوْنِ أَخِيهِ وَمَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِى بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلاَّ نَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَحَفَّتْهُمُ الْمَلاَئِكَةُ وَذَكَرَهُمُ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ وَمَنْ بَطَّأَ بِهِ عَمَلُهُ لَمْ يُسْرِعْ بِهِ نَسَبُهُ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:   ”ஒருவர் ஓர் அறிவைத் தேடி ஒரு பாதையில் சென்றால், அல்லாஹ் அதனைக் கொண்டு அவருக்கு சுவனம் செல்லும் ஒரு பாதையை இலகுபடுத்திக் கொடுக்கின்றான்.’

(முஸ்லிம்)

என்றெல்லாம் கல்வியைப் பற்றி இஸ்லாம் புகழ்ந்து போற்றுகிறது.

எனவே, பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு ஒன்றும் தடையில்லை. குறைந்தபட்சம் ஒரு பெண்ணுக்குப் பத்தாம் வகுப்பு வரை கட்டாயம் கல்வி தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பள்ளிப் படிப்புக்கு மேலான படிப்புக்குச் செல்லும் பெண் பிள்ளைகள் கற்பைப் பறி கொடுக்கும் பேரபாயம் காத்திருக்கின்றது என்பதைப் பின்வரும் சில எடுத்துக் காட்டுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஆட்டோ அல்லது வேன் பயணம்.

சிலர் தங்களது பருவமடைந்த வயதுப் பெண்களை தன்னந்தனியாக, காரில் அல்லது ஆட்டோவில் அனுப்பி வைக்கின்றனர். சிலர் ஆட்டோவில் நான்கைந்து சக வயதுப் பெண்களுடன் அனுப்பி வைக்கின்றனர். ஆட்டோ ஓட்டுனர்களும் வாலிப வட்டங்கள்தான் என்பதைப் பெற்றோர் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.

ஆட்டோ பறக்கின்றபோது, ஆட்டோவே அதிர்கின்ற வகையில், அமர்க்களப்படுகின்ற வகையில் துள்ளிசைப் பாடல்கள் காதுகளைப் பிளக்கின்றன. பாடல் வரிகள் அத்தனையும் கொத்துக் கொத்தாய் ஆபாச வார்த்தைகளை வெடித்துத் தள்ளுகின்றன. உள்ளிருக்கைகள் நிரம்பி வழிந்து, ஓட்டுனரை ஒட்டியிருக்கின்ற பலகையில் பருவ வயதுப் பெண்கள் உட்கார்ந்து கொண்டு ஒட்டுகின்ற விரச விளையாட்டுக்கள்.

பள்ளியில் கொண்டு விட்ட பின்னர் மாலையில் படிப்பு முடிந்ததும் மாணவிகள் – நம் சமுதாயப் பெண்கள் வெளியே வருகின்றனர்.

வாசலில் ஆட்டோவுடன் காத்து நிற்கின்றான் ஆட்டோ ஓட்டுனர். அவனுக்குரிய காக்கிச் சீருடையை அணியாமால் கலர் கலர் பேண்ட், சர்ட் அணிந்து இன் செய்து, சீவிச் சிங்காரித்து எடுப்பாக நிற்கின்றான்.

பள்ளிக்கூடத்தில் மாணவிகளை விடுவது 4 மணி, நான்கரை மணி, 5 மணி என்று முறை வைத்து விடுகின்றார்கள். அல்லது டியூசன் போன்ற காரணங்களால் மாணவிகளின் வருகை நேரம் மாறுபடுகின்றது. இந்த ஆட்டோக்காரன் கடைசி அணி வருகின்ற வரை, ஏற்கனவே வந்த பிள்ளைகளுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கின்றான்.

மீண்டும் அதே உரசலுடன் நம் பிள்ளைகளை வீட்டில் விட்டுச் செல்கிறான். அதன் பின்னர் ஆட்டோ டிரைவர் கரையேறி விட்டாலும் அவனைத் துரத்துகின்ற கனவு அலைகளிலிருந்து அவன் கரையேறுவதில்லை. மறுநாள் காலையில் அதே சொகுசுப் பயணம். வேன் டிரைவர்களும் இதே போன்றுதான். இதில் ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம். ஆனால் பெரும்பகுதி இந்த நிலைதான். இப்போது சிந்தியுங்கள் இந்தக் கல்லூரிப் படிப்பு தேவையா என்று!

ஆட்டோ, வேன் பயணம்தான் இப்படியென்றால் பஸ் பயணமும் பாதுகாப்பாக இல்லை. நகரத்தை நோக்கி வருகின்ற பஸ்கள் தன்னுடைய கொள்ளளவையும் தாண்டியே ஆட்களை நிரப்புகின்றன. இங்கும் பெண் பித்தர்கள் சபலபுத்தியுடன் பெண்களின் உடல் உரசலுக்கு வாய்ப்பு கிடைக்காதா என்று எதிர்பார்த்து ஏங்கியே பயணிக்கின்றனர். நடத்தை கெட்ட சில நடத்துனர்கள், ஓட்டுனர்களுடன் வழிதவறும் பெண்களும் இருக்கிறார்கள். இது போன்ற விவகாரங்களும் சமுதாயத்தில் சந்தி சிரிக்கின்றன.

பட்டப்படிப்புக்காக வெளியூர்களுக்குச் செல்லும்போது, குழுவாகச் செல்லும் இப்பெண்களின் ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கின்றது. ஆர்ப்பரித்துச் சப்தமிடுவது, பாடல்களைப் பாடி ஆடுவது, கும்மாளமிடுவது என கல்லூரிப் பெண்கள் நடத்தும் அத்துமீறல்களுக்கு அளவே இல்லை. பேருந்து நடத்துனர்களுக்குக் கொண்டாட்டம்தான். கணவன், மனைவிபோல் அருகருகே அமர்ந்து கொண்டு கொஞ்சிக் குலாவுவது சர்வ சாதாரணமான ஒன்று!

பள்ளி, கல்லூரியில் மட்டுமல்ல! வருகின்ற வழிப் பயணத்திலும், வழிப் பாதையிலும் பெண்களின் கற்புகளைப் பறிப்பதற்கு ஷைத்தான் தன் பரிவாரங்களுடன் முற்றுகையிட்டு நிற்கின்றான். இப்படி ஆபத்துக்கிடையில் பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு தேவையா என்பதைப் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

பாடமா? படமா?

உயர்நிலை மற்றும் கல்லூரியில் படிக்கின்ற மாணவிகள், தங்கள் சக மாணவிகளைப் பார்க்கப் போகின்றேன் என்று சொல்லிவிட்டு, பாய் ஃபிரண்ட்ஸ் – ஆண் நண்பர்களுடன் திரையரங்குகளுக்குச் செல்கின்றனர். அருகருகே அமர்ந்து படம் பார்க்கின்றனர். சினிமாக்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலத்திலும் காமக் களியாட்டங்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

முப்பது வருடங்களுக்கு முன்னால் உள்ள மக்கள் எதை ஆபாசம், விரசம் என்று கருதினார்களோ அதை சினிமாவில் காட்டினார்கள். தற்காலத்தில் உள்ள மக்கள் எதனை காமக் களியாட்டம் என்று வெறுக்கின்றார்களோ அதை தற்போதுள்ள சினிமாக்களில் காட்டுகின்றனர். இந்தப் படத்தைத்தான் நமது அருமை மகள் திரையரங்கில், திரை வெளிச்சத்தைத் தவிர வேறு வெளிச்சமில்லாமல் கொட்டிக் கிடக்கும் கும்மிருட்டில் அருகில் ஒருவனுடன் அமர்ந்து படம் பார்க்கும் காட்சியை பெற்றோர்கள் தங்கள் மனக்கண் முன்னால் சற்று ஓட விட்டுப் பார்க்கட்டும். இரத்தம் கொதிக்கும்; கையில் செருப்பை அல்ல, அரிவாளைக் கூட எடுக்க நினைப்போம்.

இப்போது நினைத்துப் பாருங்கள். இப்படி ஒரு கல்வி தேவையா?

பிற மதத்தவருடன் காதல் பயணம்.

கல்லூரிக்குச் செல்லும் வயதுப் பெண்களின் அவலம் இத்துடன் நிற்கவில்லை. பிற மதத்தவருடன் கற்பைப் பகிர்கின்ற, உள்ளத்தை உறையச் செய்யும் படுபாதகச் செயலும் பகிரங்கமாகவே நடைபெறுகின்றது. இவ்வாறு கூறுகையில், நம் சமுதாய ஆண்களுடன் ஓடலாமா? என்று கேட்கலாம். யாருடன் சென்றாலும் விபச்சாரம் தான். ஆனால் பிற மதத்தவருடன் ஓடும்போது கொள்கையும் சேர்ந்தே போய் விடுகின்றது.

கொள்கை மாறுதல் என்பது இஸ்லாத்தில் கொடிய பாவமாகும்.

يَسْأَلُونَكَ عَنِ الشَّهْرِ الْحَرَامِ قِتَالٍ فِيهِ قُلْ قِتَالٌ فِيهِ كَبِيرٌ وَصَدٌّ عَنْ سَبِيلِ اللَّهِ وَكُفْرٌ بِهِ وَالْمَسْجِدِ الْحَرَامِ وَإِخْرَاجُ أَهْلِهِ مِنْهُ أَكْبَرُ عِنْدَ اللَّهِ وَالْفِتْنَةُ أَكْبَرُ مِنَ الْقَتْلِ وَلَا يَزَالُونَ يُقَاتِلُونَكُمْ حَتَّى يَرُدُّوكُمْ عَنْ دِينِكُمْ إِنِ اسْتَطَاعُوا وَمَنْ يَرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ

உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்துவிடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 2:217)

ஓடும் பெண்களும் வாடும் பெற்றோரும்.

இவ்வளவு பெரிய கொடுமைகளுக்கு வித்திட்டது எது? இந்தக் கல்லூரிப் படிப்பு பெற்றோர்களின் கண்டு கொள்ளாத போக்கு! இம்மை வாழ்விற்காக மறுமையைப் பலியாக்கி நம்முடைய பிள்ளைகளை நரகப் படுகுழியின் விறகுகளாக்கத் துணிந்து விட்டோம்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.

(அல்குர்ஆன்: 66:6)

இந்த வசனத்தைக் கவனிக்கத் தவறி விட்டோம்.

தமிழகத்தின் தென் பகுதியில் முஸ்லிம்கள் நிறைந்த ஒரு சில ஊர்களில் கல்லூரி, உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்கள் பிற மதத்தவர்களுடன் ஓடுவது சர்வ சாதாரணமான ஒன்றாகி விட்டது.

பெண் பிள்ளைகள் ஓடுகின்றனர்; பெற்றோர்களோ வாடிக் கொண்டிருக்கின்றனர். கண்ணீரும் கம்பலையுமாக கவலையில் ஆழ்ந்து கிடக்கின்றனர். பள்ளிப் படிப்புக்கே இந்தக் கதி என்றால் கல்லூரிப் படிப்பிற்கு என்ன கதி?

ஒரு முஸ்லிம் கல்லூரி நீண்ட காலம் ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரியாகச் செயல்பட்டது. அப்போது கல்லூரி சீருடனும் சிறப்புடனும் செயல்பட்டது. இக்கல்லூரியில் பெண்கள் படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இக்கல்லூரி நிர்வாகம் பெண்களுக்காக தனிக் கல்லூரியைத் துவங்கியிருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு, ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கோ எஜுகேஷன் முறையைக் கொண்டு வந்தது. அதன் விளைவு என்ன?

பிற சமுதாய மாணவர்களுடன் நமது சமுதாயப் பெண்கள் சேர்ந்து வழி தவறுகின்றனர். சமுதாயப் பெண்களின் கற்பு மட்டுமல்ல! சமுதாயத்தின் கண்ணியமும் கவுரவமும் சேர்ந்தே காற்றில் பறக்கின்றது. மேலும் இஸ்லாத்தைவிட்டே இந்தப் பெண்கள் வெளியேறும் நிலையும் ஏற்படுகின்றது. இதன்படிப் பார்க்கும்போது கல்லூரியா? கற்பா? என்ற கேள்வியைத் தாண்டி, கல்வியா? இறை மறுப்பா? என்று கேட்க வேண்டியுள்ளது.

அத்துடன் இங்கு நாம் இன்னொரு விளைவையும் உணர்ந்தாக வேண்டும். இது போன்று நமது சமுதாயப் பெண்கள் பிற சமுதாயத்தவருடன் ஓடும்போது அதைத் தட்டிக் கேட்பதற்காகச் சில இளைஞர்கள் கிளம்புகின்றனர்; சட்டத்தைக் கையில் எடுக்கின்றனர்.

இது, இஸ்லாமிய சமுதாயத்திற்கும் பிற சமுதாயத்திற்கும் மத்தியில் ஒரு விதமான மோதல் போக்கை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் வகுப்புக் கலவரம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்ச வேண்டிய சூழலும் ஏற்படுகின்றது.

எனவே இத்தகைய விளைவுகளைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் ஒரு பெண்ணுக்கு அவசியத் தேவை கற்பா? கல்லூரியா? ஈமானா? இறை மறுப்பா? என்று சிந்திக்க வேண்டும்.

நம் மகள் கற்பிழந்தால், அல்லது மதம் மாறினால், அவள் செய்த பாவத்தில் நமக்குப் பங்கில்லை என்று நாம் தப்ப முடியாது.

ஒவ்வொருவரும் பொறுப்பாளர்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே.

2409- حَدَّثَنَا أَبُو الْيَمَانِ ، أَخْبَرَنَا شُعَيْبٌ ، عَنِ الزُّهْرِيِّ قَال ، أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللهِ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ
كُلُّكُمْ رَاعٍ وَمَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ فَالإِمَامُ رَاعٍ وَهْوَ مَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ وَالرَّجُلُ فِي أَهْلِهِ رَاعٍ وَهْوَ مَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ وَالْمَرْأَةُ فِي بَيْتِ زَوْجِهَا رَاعِيَةٌ ، وَهْيَ مَسْؤُولَةٌ عَنْ رَعِيَّتِهَا وَالْخَادِمُ فِي مَالِ سَيِّدِهِ رَاعٍ

தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள், தன் எஜமானின் உடைமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்.

(புகாரி: 2409)

இந்த ஹதீஸின்படி பெற்றோர்களும் அந்தப் பாவத்தின் சுமையை மறுமையில் சுமந்தே ஆக வேண்டும்.

கண்ணை விற்றுச் சித்திரம் வாங்க வேண்டுமா என்று சிந்திக்க வேண்டும்.

ஒரு பெண்ணை உயர் கல்வி படிக்க வைக்கும் போது சாதகங்களை விட, பாதகங்களைத்தான் பார்க்க வேண்டும். அப்படியே ஒருவர் தமது மகளைப் படிக்க வைக்க வேண்டுமானால்…

1. குறைந்தபட்சம் அந்தப் பள்ளி அல்லது கல்லூரி ஊருக்குள்ளேயே அமைந்திருக் வேண்டும். நம்முடைய கண்காணிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.

2. உள்ளூராக இருந்தாலும், வெளியூராக இருந்தாலும் பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரியாக இருக்க வேண்டும். (அதிலும் ஆண் நிர்வாகிகள் ஆட்டம் போடுகின்ற, வயதுப் பெண்களிடம் சில்மிஷம் செய்கின்ற பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்)

3. தூரத்தில் இருந்தால் ஆட்டோ, கார் அல்லது வேன் போன்றவற்றில் தனித்துச் செல்லக் கூடாது.

1171- حَدَّثَنَا قُتَيْبَةُ ، قَالَ : حَدَّثَنَا اللَّيْثُ ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ، عَنْ أَبِي الخَيْرِ ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ
إِيَّاكُمْ وَالدُّخُولَ عَلَى النِّسَاءِ ، فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ : يَا رَسُولَ اللهِ ، أَفَرَأَيْتَ الحَمْوَ ، قَالَ : الحَمْوُ الْمَوْتُ
وَفِي البَاب عَنْ عُمَرَ ، وَجَابِرٍ ، وَعَمْرِو بْنِ العَاص
حَدِيثُ عُقْبَةَ بْنِ عَامِرٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
، وَإِنَّمَا مَعْنَى كَرَاهِيَةِ الدُّخُولِ عَلَى النِّسَاءِ عَلَى نَحْوِ مَا رُوِيَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : لاَ يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ إِلاَّ كَانَ ثَالِثَهُمَا الشَّيْطَانُ ، وَمَعْنَى قَوْلِهِ : الحَمْوُ ، يُقَالُ : هُوَ أَخُو الزَّوْجِ ، كَأَنَّهُ كَرِهَ لَهُ أَنْ يَخْلُوَ بِهَا

(அந்நிய)ஆணும் பெண்ணும் தனித்திருக்க வேண்டாம். ஏனெனில் மூன்றாவதாக ஷைத்தான் (அங்கு) இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 திர்மிதி

4. இந்தப் பெண்கள் ஆட்டோ அல்லது வேனில் பயணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் டிரைவர் திருமணம் முடித்த, வயதானவர்களாக, ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும்.

இதுபோன்ற நிபந்தனைகளுக்கு ஒத்து வரவில்லையென்றால், பத்தாம் வகுப்புடன் பெண்கள் கல்வியை நிறுத்திக் கொண்டு மார்க்கக் கல்வியைப் பயிற்றுவிப்பது அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையைப் பயக்கும்.

ஒரு சில கட்டங்களில் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பது சிரமமாக உள்ளது. பட்ட மேல்படிப்பு படித்த பெண்களுக்கு அதைவிடச் சிரமமாக உள்ளது. அப்படியே மாப்பிள்ளை அமைந்தாலும் ஒரு குழந்தை, இரு குழந்தைகளுடன் விவாக ரத்தில் போய் முடிகின்றது.

எனவே இப்படிப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் பெண்களின் கல்லூரிப் படிப்பின் சாதக பாதகங்களைப் பெற்றோர்கள் தூக்கிப் பார்க்க வேண்டும். அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும்.

கற்பா? கல்லூரியா? என்ற இந்தத் தலைப்பில் கல்லூரிப் படிப்பில் ஏற்படுகின்ற பாதகங்களைப் பட்டியலிடும்போது கல்லூரியில் படித்த பெண்கள் எல்லாம் தவறானவர்கள் என்று விளங்கிக் கொள்ளக்கூடாது.

இங்கு எழுதப்பட்டவை அனைத்தும் நடப்பவை, நடந்து கொண்டிருப்பவை. இந்தத் தீமைகளைக் கண்டு நெஞ்சு பொறுக்காமல் இந்த உரையை நிகழ்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அல்லாஹ் நம் அனைவரையும், நல்லொழுக்கமுள்ள முஸ்லிமாக வாழ்ந்து, நல்லொழுக்கமுள்ள முஸ்லிமாக மரணிக்கிற நல்லடியார்களாக ஆக்கி அருள்புரிவானாக!