கற்பனைக்கு அப்பாற்பட்ட சொர்க்கத்தின் இன்பங்கள்
சொர்க்கத்தில் கிடைக்கும் இன்பங்கள் ஏராளம் ஏராளம், அவற்றை முழுமையாக கற்பனை கூட செய்ய இயலாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அவற்றை பற்றி ஹதீஸ்களில் வந்துள்ளவற்றில் சிலவற்றை இந்த உரையில் காண்போம்!
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு நல்வாழ்வும், அழகிய தங்குமிடமும் உண்டு.
உங்களின் மக்கட்செல்வமும், பொருட் செல்வமும் நம்மிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்துபவை அல்ல. நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்களுக்கு அவர்கள் செய்தவற்றின் பன்மடங்கு கூலி இருக்கிறது. அவர்கள் உயர்ந்த மாளிகைகளில் கவலையற்றிருப்பார்கள்.
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரை சொர்க்கத்தில் உள்ள மாளிகையில் குடியமர்த்துவோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். உழைத்தோரின் கூலி அழகானது.
சுவன மாளிகைக்கும் நல்லமல்களுக்கும் எவ்வளவு பெரிய தொடர்பு உள்ளது என்பதை இறைவன் நமக்குத் தெளிவுபடுத்துகிறான்.
انْطَلِقُوا إِلَىٰ مَا كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ
انْطَلِقُوا إِلَىٰ ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ
لَا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ
إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ
كَأَنَّهُ جِمَالَتٌ صُفْرٌ
பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான். நீங்கள் எதைப் பொய்யெனக் கருதினீர்களோ அதை நோக்கி – மூன்று கிளைகளைக் கொண்ட நிழலை நோக்கி – நடங்கள்! அது நிழல் தருவது அல்ல. அது தீயிலிருந்து பாதுகாக்காது. அது மாளிகையைப் போன்ற நெருப்புப் பந்தங்களை வீசியெறியும். அது நிறத்தில் மஞ்சள் நிற ஒட்டகங்கள் போல் இருக்கும்.
அவன் பாக்கியமிக்கவன். அவன் விரும்பினால் இதை விடச் சிறந்த சோலைகளை உமக்காக எற்படுத்துவான். அவற்றின் கீழ் இப்பகுதியில் ஆறுகள் ஓடும். உமக்காக மளிகைகளையும் எற்படுத்துவான்.
சுவனத்தில் ஒவ்வொருவருக்கும் கிடைக்கப் பெறும் ஒரு கூடாரத்தின் நிலையைக் குறித்து பெருமானார் கூறுவதைப் பாருங்கள்.
“சொர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள சிறப்பு அறைகளில் வசிப்பவர்களை, அடிவானில் கிழக்கிருந்தோ மேற்கிருந்தோ பயணிக்கின்ற ஒளியுமிழும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள். (அந்தஸ்தில்) தமக்கும் அவர்களுக்கு மிடையேயுள்ள ஏற்றத் தாழ்வைக் கண்டு (ஏக்கம் கொண்டு தான்) அப்படிப் பார்ப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்ட) நபித் தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவை
நபிமார்கள் தங்குமிடங்கள் தாமே? அவற்றை மற்றவர்கள் அடைய முடியாதல்லவா?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “இல்லை. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! அ(ங்கே தங்குப)வர்கள் அல்லாஹ்வின் மீது (உறுதியான) நம்பிக்கை கொண்டு இறைத்தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்றுக் கொண்டவர்களே ஆவர்” என பதிலத்தார்கள்.
அறி ; அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : (புகாரி: 3256)
நாம் ஒரு வீட்டை செங்கல், மணல், சிமெண்ட், ஜல்லிபோன்றவைகளை வைத்தே கட்டுகிறோம். யாரேனும் மிக அரிதாக முழுவதும் டைல்ஸ் பதித்துள்ள வீட்டை கட்டியிருப்பதை கண்டால் அதையே வியப்புடன், ஆசையுடன் பாக்கின்றோம். மறுமையில் இறைவன் வழங்கவிருக்கும் வீடு இவ்வுலகில் உள்ள வீட்டை போன்றதல்ல. முழுக்க முழுக்க முத்துக்களால் ஆன முத்து மாளிகை அது. அதோடு மனிதனின் ஆசைக்கேற்றவாறு கண்கவரும் வடிவமைப்பும் அதில் செய்யப்பட்டிருக்கும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளருக்குச் சொர்க்கத்தில் ஒரு கூடாரம் உண்டு. அது நடுவில் துளையுள்ள (பிரமாண்டமான) முத்தால் ஆனதாகும். அதன் உயரம் அறுபது மைல்களாகும். அதில் இறை நம்பிக்கையாளருக்குத் துணைவியர் பலர் இருப்பர். அவர்களிடம் இறைநம்பிக்கையாளர் சுற்றி வருவார். அவர்களில் ஒருவர் மற்றவரைப் பார்க்க முடியாது.
அறி : அபூமூசா அல்அஷ்அரீ (ரலி)
நூல் : (முஸ்லிம்: 5458)
இதுவெல்லாம் போக, கற்பனைக்கு எட்டாத வகையில் இன்னொரு மாளிகையைக் குறித்தும் நபிமொழிகள் பேசுகின்றன.
நபி (ஸல்) கூறினார்கள்:
சொர்க்கத்தில் ஒரு மாளிகை இருக்கும். அதில் உட்பகுதியில் இருந்து வெளிப்பகுதியையும் வெளிப்பகுதியிலிருந்து உட்பகுதியையும் பார்க்க முடியும்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: (இப்னு ஹிப்பான்: 509) , பாகம்: 2, பக்:262, ஹாக்கிம் 270, தப்ரானீ கபீர், பாகம்:3, பக்:301
இவ்வளவு பிரம்மாண்டமான தோற்றம் கொண்ட கூடாரங்கள், மாளிகைகள் சுவனத்தில் வழங்கப்படுகிறது என்றால் நம்மால் அவற்றைப் பற்றிக் கற்பனையால் கூட வர்ணிக்க முடியாது என்பதை நம்மால் உணர முடிகிறது.
மனிதனையும், தண்ணீரையும் பிரித்து பார்க்கவே முடியாது என்கிற அளவிற்கு மனிதனின் வாழ்க்கையில் தண்ணீர் பெரும் பங்கு வகிக்கின்றது. மனிதன் உயிர் வாழ அத்தியாவசிய தேவைகளில் தண்ணீரும் ஒன்று.
அது போல ஆறு, அருவி போன்றவைகளும் மனிதனுக்கு மிகுந்த விருப்பத்திற்குரியதாக இருக்கிறது. இதில் குளிப்பது ஒரு வித சந்தோஷத்தை அளிப்பதனாலே பல ஆயிரங்களை செலவு செய்து, வெளியூருக்கும், வெளிநாட்டுக்கும் பயணம் புறப்பட்டேனும் இவற்றில் குளிக்க மனிதன் விரும்புகிறான்.
இறைவன் தரும் மாளிகையில் இவற்றிருக்கும் பஞ்சமில்லை. மாளிகையின் கீழே வசதியாக பல ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் என இறைவன் தெரிவிக்கிறான்.
மாறாக, தமது இறைவனை அஞ்சியோருக்கு மாளிகைகளுக்கு மேல் எழுப்பப்பட்ட மாளிகைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இது அல்லாஹ்வின் வாக்குறுதி. அல்லாஹ் வாக்குறுதியை மீற மாட்டான்.
أَعْدَدْتُ لِعِبَادِيَ الصَّالِحِينَ، مَا لَا عَيْنٌ رَأَتْ، وَلَا أُذُنٌ سَمِعَتْ، وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ، ذُخْرًا، بَلْهَ مَا أَطْلَعَكُمُ اللهُ عَلَيْهِ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்” என்று கூறினான். எனினும், (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துள்ளது சொற்பமே! – இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல்: (முஸ்லிம்: 5438))
أَعْدَدْتُ لِعِبَادِيَ الصَّالِحِينَ، مَا لَا عَيْنٌ رَأَتْ، وَلَا أُذُنٌ سَمِعَتْ، وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ، ذُخْرًا، بَلْهَ مَا أَطْلَعَكُمُ اللهُ عَلَيْهِ ” ثُمَّ قَرَأَ {فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ} [السجدة: 17]
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “நான் என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்”என்று கூறினான்.
(சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) உங்களுக்கு அல்லாஹ் அறிவித்திருப்பது சொற்பமே! இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் பிறகு, “அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாக அவர்களுக்காக மறைத்துவைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை எவரும் அறியமாட்டார்” (அல்குர்ஆன்: 32:17) எனும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
(நூல்: (புகாரி: 5439))
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் நிழலில் ஒரு பயணி நூறு வருடங்கள் பயணிப்பார்.
(நூல்: (முஸ்லிம்: 5441))
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் (மறுமையில்) சொர்க்கவாசிகளை நோக்கி, “சொர்க்கவாசிகளே!” என்று அழைப்பான். அதற்கு அவர்கள், “எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம். நன்மைகள் அனைத்தும் உன் கரங்களிலேயே உள்ளன” என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ், “திருப்தி அடைந்தீர்களா?” என்று கேட்பான். அதற்கு சொர்க்கவாசிகள், “உன் படைப்புகளில் யாருக்கும் நீ வழங்கியிராத (கொடைகள், இன்பங்கள் ஆகிய)வற்றை எங்களுக்கு நீ வழங்கியிருக்க, நாங்கள் திருப்தியடையாமல் இருப்போமா?” என்று கூறுவார்கள்.
அப்போது அல்லாஹ், “இதைவிடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கட்டுமா?” என்பான். அவர்கள், “அதிபதியே! இதை விடச் சிறந்தது எது?” என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ், “உங்கள்மீது என் உவப்பை அருள்கிறேன்; இனி ஒருபோதும் உங்கள்மீது நான் கோபப்படமாட்டேன்” என்று கூறுவான்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல்: (முஸ்லிம்: 5444))
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் என்னை ஆழமாக நேசிப்போரில் சிலர் எனக்குப்பின் தோன்றுவார்கள். அவர்களில் ஒருவர் என்னைப் பார்க்க வேண்டுமே என்பதற்காகத் தம் குடும்பத்தாரையும் செல்வத்தையும்கூடத் தியாகம் செய்ய விரும்புவார்.
(நூல்: (முஸ்லிம்: 5447))
إِنَّ فِي الْجَنَّةِ لَسُوقًا، يَأْتُونَهَا كُلَّ جُمُعَةٍ، فَتَهُبُّ رِيحُ الشَّمَالِ فَتَحْثُو فِي وُجُوهِهِمْ وَثِيَابِهِمْ، فَيَزْدَادُونَ حُسْنًا وَجَمَالًا، فَيَرْجِعُونَ إِلَى أَهْلِيهِمْ وَقَدِ ازْدَادُوا حُسْنًا وَجَمَالًا، فَيَقُولُ لَهُمْ أَهْلُوهُمْ: وَاللهِ لَقَدِ ازْدَدْتُمْ بَعْدَنَا حُسْنًا وَجَمَالًا، فَيَقُولُونَ: وَأَنْتُمْ، وَاللهِ لَقَدِ ازْدَدْتُمْ بَعْدَنَا حُسْنًا وَجَمَالًا
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் (மக்கள் ஒன்றுகூடும்) சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக் காற்று வீசி அவர்களுடைய முகங்களிலும் ஆடையிலும் (கஸ்தூரி மண்ணை) வாரிப்போடும். உடனே அவர்கள் மேன்மேலும் அழகும் பொலிவும் பெறுவார்கள். பிறகு அழகும் பொலிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார்கள்.
அப்போது அவர்களிடம் அவர்களுடைய துணைவியர், “எங்களிடமிருந்து சென்ற பின்னர் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றுவிட்டீர்களே!” என்று கூறுவர். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தான் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றிருக்கிறீர்கள்” என்று கூறுவர்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல்: (முஸ்லிம்: 5448))
أَوَّلُ زُمْرَةٍ تَدْخُلُ الْجَنَّةَ مِنْ أُمَّتِي عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ عَلَى أَشَدِّ نَجْمٍ فِي السَّمَاءِ إِضَاءَةً ثُمَّ هُمْ بَعْدَ ذَلِكَ مَنَازِلُ لاَ يَتَغَوَّطُونَ وَلاَ يَبُولُونَ وَلاَ يَمْتَخِطُونَ وَلاَ يَبْزُقُونَ أَمْشَاطُهُمُ الذَّهَبُ وَمَجَامِرُهُمُ الأَلُوَّةُ وَرَشْحُهُمُ الْمِسْكُ أَخْلاَقُهُمْ عَلَى خُلُقِ رَجُلٍ وَاحِدٍ عَلَى طُولِ أَبِيهِمْ آدَمَ سِتُّونَ ذِرَاعًا ”
قَالَ ابْنُ أَبِي شَيْبَةَ عَلَى خُلُقِ رَجُلٍ وَقَالَ أَبُو كُرَيْبٍ عَلَى خَلْقِ رَجُلٍ وَقَالَ ابْنُ أَبِي شَيْبَةَ عَلَى صُورَةِ أَبِيهِمْ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் ஒளிரும் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். பிறகு அவர்களுக்கு அடுத்து நுழைபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று காட்சியளிப்பார்கள். அவர்களுக்குப் பிறகு இன்னும் பல படித்தரங்களும் உண்டு.
(சொர்க்கத்தில்) அவர்கள் மலஜலம் கழிக்கமாட்டார்கள். மூக்குச் சிந்தவுமாட்டார்கள். சளி துப்பவுமாட்டார்கள். அவர்களின் (தலைவாரும்) சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களுடைய (நறுமணப் புகையிடும்) தூபக் கலசங்கள் அகில் குச்சியால் எரிக்கப்படும். அவர்களுடைய வியர்வையில் கஸ்தூரி மணம் கமழும். அவர்கள் அனைவரது குணமும் ஒரே மனிதரின் குணத்தைப் போன்றிருக்கும். அவர்கள் தம் தந்தை ஆதம் (அலை) அவர்களைப் போன்று அறுபது முழம் உயரம் கொண்டவர்களாயிருப்பார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னு அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அவர்கள் அனைவரது குணமும் ஒரே மனிதரின் குணத்தில் அமைந்திருக்கும்” என்று காணப்படுகிறது. அபூகுரைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அவர்கள் அனைவரது (உடல்) அமைப்பும் ஒரே மனிதரின் (உடல்) அமைப்பில் இருக்கும்” என்று இடம்பெற்றுள்ளது. அதாவது “அவர்கள் தம் தந்தை (ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் இருப்பார்கள்” என்று இப்னு அபீஷைபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
(நூல்: (புகாரி: 5451))
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் நுழைபவர் இன்பத்திலேயே இருப்பார்; துன்பம் காணமாட்டார். அவரது ஆடை இற்றுப்போகாது. அவரது இளமை அழிந்துபோகாது.
(நூல்: (புகாரி: 5456))
يُنَادِي مُنَادٍ: إِنَّ لَكُمْ أَنْ تَصِحُّوا فَلَا تَسْقَمُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَحْيَوْا فَلَا تَمُوتُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَشِبُّوا فَلَا تَهْرَمُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَنْعَمُوا فَلَا تَبْأَسُوا أَبَدًا ” فَذَلِكَ قَوْلُهُ عَزَّ وَجَلَّ: {وَنُودُوا أَنْ تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ} [الأعراف: 43]
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்த பின்னர்) பொது அறிவிப்பாளர் ஒருவர், “(இனி) நீங்கள் ஆரோக்கியத்துடனேயே இருப்பீர்கள்; ஒருபோதும் நோய் காணமாட்டீர்கள். நீங்கள் உயிருடன் தான் இருப்பீர்கள்; ஒருபோதும் இறக்கமாட்டீர்கள். இளமையோடுதான் இருப்பீர்கள்; ஒருபோதும் முதுமையடையமாட்டீர்கள். நீங்கள் இன்பத்தோடுதான் இருப்பீர்கள்; ஒருபோதும் துன்பம் காணமாட்டீர்கள்” என்று அறிவிப்புச் செய்வார்.
இதையே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “இதுதான் சொர்க்கம்; நீங்கள் (உலகில்) நற்செயல் புரிந்துகொண்டிருந்ததற்காக இது உங்களுக்கு உடைமையாக்கப்பட்டுள்ளது என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லப்படும்” (அல்குர்ஆன்: 7:43) என்று கூறுகின்றான்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி), அபூ ஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
(நூல்: (முஸ்லிம்: 5457))
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சிரமங்களால் சொர்க்கம் சூழப்பெற்றுள்ளது. மன இச்சைகளால் நரகம் சூழப்பெற்றுள்ளது. இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல்: (முஸ்லிம்: 5436))
எனவே மேற்கூறிய அனைத்து விஷயங்களும் நம் வாழ்கையில் பாடமாகவும் படிப்பினையாகவும் கொண்டு வாழும் நன் மக்களாய் அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.!