கரணம் தப்பினால் மரணமே!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

இவ்வுலகம் விஞ்ஞானத்திலும் நாகரீகத்திலும் சிகரத்தை எட்டுமளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது. முந்தைய காலங்களில் மனிதன் மட்டுமே செய்து வந்த வேலைகளை தற்போது இயந்திரங்கள் வியக்கும் விதத்தில் நிறைவேற்றி வருகின்றன. புதிய புதிய இயந்திரங்கள், வாகனங்கள், சாதனங்கள் போன்ற பல கண்டுபிடிப்புகள் தலைதூக்கி நிற்கின்றன.

இந்த நாகரீக உலகத்தில் வாழும் மக்கள் இந்தக் கண்டுபிடிப்புகளின் பால் தேவையுடையவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் கண்டுபிடிப்புகளில் வாகனங்கள் இன்றியமையததாக இருக்கிறது.

இந்த வாகனங்களில் ஏதோ ஒரு விதத்தில் மக்கள் ஒவ்வொரு நாளும் பிராயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அது அவர்கள் பணிபுரிவதின் காரணமாக இருக்கலாம். அல்லது ஓட்டுநர்களாக இருக்கலாம். அவ்வப்போது தங்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்காக வெளியே செல்பவர்களாகக் கூட இருக்கலாம். இப்படி யாராக இருந்தாலும் சாலை விதிமுறைகள் என்று அரசாங்கம் பிறப்பித்த கட்டளைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْ‌ۚ فَاِنْ تَنَازَعْتُمْ فِىْ شَىْءٍ فَرُدُّوْهُ اِلَى اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْـتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَـوْمِ الْاٰخِرِ‌ ؕ ذٰ لِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَاْوِيْلًا

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.

(அல்குர்ஆன்: 4:59)

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«عَلَيْكَ السَّمْعَ وَالطَّاعَةَ فِي عُسْرِكَ وَيُسْرِكَ، وَمَنْشَطِكَ وَمَكْرَهِكَ، وَأَثَرَةٍ عَلَيْكَ»

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்பத்திலும் துன்பத்திலும் விருப்பிலும் வெறுப்பிலும் உம்மைவிடப் பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் போதும் (கட்டளையைச்) செவியுற்று (தலைமைக்குக்) கீழ்ப்படிந்து நடப்பீராக!’’ என்று கூறினார்கள்.

நூல்: (முஸ்லிம்: 3748) 

இன்றைய நவீன உலகில் மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக சாலை நெருக்கடி, சாலை விபத்துக்கள், படுகாயங்கள், உயிரிழப்புகள் போன்றவை அன்றாடம் நடந்து கொண்டிருக்கிறது. இதற்குச் சான்றாக ஹிந்து நாளேட்டில் வெளியான ஒரு செய்தியைக் காண்போம்.

அப்போலோ மருத்துவமனை துணைத் தலைவர் கூறுகையில் காசநோய், மலேரியாவில் இறப்பவர்களை விட சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தியாவில் ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கு ஒரு நபர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார். 2020ஆம் ஆண்டில் ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ஒருவர் உயிரிழக்க வாய்ப்புள்ளது. என்று தெரிவித்துள்ளார்.

 

இத்தகைய விபத்துகளுக்குக் காரணம் இன்றைய மக்களால் சாலை விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்று கூறுவர். அது போன்றே படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை சாலை விதிமுறைகளை சரியாகக் கடைபிடிக்காதவர்களாகவே இருக்கின்றனர். வெறும் பாடப் புத்தகத்தில் மட்டுமே சம்பிரதாயத்திற்காகப் பாடம் நடத்தப்படுகின்றதே ஒழிய படித்தவர்கள் கூட இந்த விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில்லை. எனவே இச்சூழ்நிலையில் இந்த விபத்துகளைத் தடுப்பது நம் ஒவ்வொருவர் மீதும் கடமை என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

عَنْ تَمِيمٍ الدَّارِيِّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«الدِّينُ النَّصِيحَةُ» قُلْنَا: لِمَنْ؟ قَالَ: «لِلَّهِ وَلِكِتَابِهِ وَلِرَسُولِهِ وَلِأَئِمَّةِ الْمُسْلِمِينَ وَعَامَّتِهِمْ»

தமீமுத் தாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “மார்க்கம் (தீன்) என்பதே நலம் நாடுவது தான்’’ என்று கூறினார்கள். நாங்கள், “யாருக்கு (நலம் நாடுவது)?’’ என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும், அவனுடைய வேதத்துக்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், அவர்களில் பொதுமக்களுக்கும்’’ என்று பதிலளித்தார்கள்.

நூல்: (முஸ்லிம்: 95) 

 

பொதுமக்களிடம் சாலைப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி முதல் வாரம் சாலை விழிப்புணர்வு வாரமாக அரசால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் பல்வேறு சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஆனால் அதைப் பொருட்படுத்தாத வாகனங்கள் வழக்கம் போல் சிட்டாய்ப் பறக்க போக்குவரத்து விதிகளும் காற்றில் பறக்கின்றன. தலைக்கவசம் உயிர்க்கவசம், சாலைப் பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்று சொல்கின்றோம். காரணம் பாதுகாப்பு இல்லாத சாலையில் பாதுகாப்பு இல்லாத பயணங்களால் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் மனிதர்களுக்குக் கிடைக்கும் அதிகப்பட்ச தண்டனை மரணம் தான்.

 

நம் உயிரும் நம்முடன் பிராயணிப்பவரின் உயிரும் விலை மதிக்க முடியாதவை. போக்குவரத்து விதிகளைச் சரியாகக் கடைபிடிக்கும் அப்பாவி மனிதர் கூட, விதிமுறைகளை மீறும் நபரால் விபத்தில் இறக்கின்றார். மக்களிடம் சாலை விதிமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்று நம்மை நாமே ஆறுதல் படுத்திக் கொள்வது இதற்கான தீர்வாகுமா? என்பதை ஒரு கணம் நாம் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அனைவரும் சாலை விதிமுறைகளை அறிந்து கொண்டு அதன்படி நடப்பது தான் இதற்கான தீர்வாகும். பாதைகளின் ஓரங்களில் வைக்கப்பட்டிருக்கும் அடையாளங்களை அறிந்து கொண்டு அதன்படி சென்றால் ஆபத்து ஏற்ப்படுவதை தடுக்கலாம். இது தொடர்பான மார்க்கத்தின் கட்டளைகளையும், பொதுவான சாலைப் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் இந்த உரையில்  காண்போம்.

பாதசாரிகளை கவனித்து சாலைகளைப் பயன்படுத்துதல்:

பல சமயங்களில் சாலை அனைவருக்கும் பொதுவானது என்பதை ஓட்டுநர்கள் மறந்து விடுவதால் பாதசாரிகள் மற்றும் பிற வாகன ஓட்டுநர்கள் தங்களது பாதுகாப்பை இழக்கின்றனர். எல்லா சமயங்களிலும் சாலையைக் கவனித்து வாகனத்தை ஓட்ட வேண்டும்.

வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள் சாலையை கடக்கும் போது, அவர்கள் சாலையை கடந்து விடுவார்கள் என்பதை சரியாகக் கணித்து எச்சரிக்கையாக வாகனத்தை ஓட்டாத ஓட்டுநர்கள் விபத்தைச் சந்திக்க நேரிடும். எனவே பாதசாரிகளுக்கும், பிற வாகனங்களுக்கும் முழு பாதுகாப்பு கொடுத்தே (அவர்கள் சாலை விதிமுறைகளை மீறுவதாக இருந்தாலும்) வாகனத்தை ஓட்ட வேண்டும்.

பாதசாரிகள் சாலையைக் கடக்கும் இடங்களில் அவர்கள் அனைவரும் சாலையை கடக்கும் வரை வாகனத்தை நிறுத்தி பின்னர் வாகனத்தை எடுத்துச் செல்ல வேண்டும். பொதுவாக வாகனங்களை வளைத்து வளைத்து ஓட்டுவது தனக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தாக முடியும் என்பதால் வாகனத்தை அவ்வாறு ஓட்டுதல் கூடாது. சாலையில் நின்று கொண்டிருக்கும் ஒரு வாகனத்தை வேகக் கட்டுப்பாடு இல்லாமல் கடந்து செல்ல முயற்சிப்பது விபத்தில் முடியலாம். எனவே பெரிய கனரக வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு இருக்க வேண்டிய அனைத்து பொறுப்புகளும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் இருக்க வேண்டும்.

விபத்துக்கள் ஏன் நிகழ்கின்றன?

விபத்துக்கள் ஏற்படுவதற்குக் காரணம் வாகன இயக்கத்தைத் தவிர்த்து ஓட்டுநர் மற்றும் சாலையில் செல்வோரின் வேறுபட்ட மனநிலையாகும். மனிதனுடைய சிந்தனைகளும், செயல்களும் நெருங்கிய தொடர்புடையவை. ஒரு மனிதன் ஒரு செயலைத் தவிர இரண்டு, மூன்று செயல்களை ஒரே சமயத்தில் செய்ய இயலாது. ஒருவரின் எந்தச் செயலும் அவருடைய சிந்தனைகள் அச்செயல் மீது இருக்கும் போது மட்டுமே நன்றாக இருக்கும்.

அது போலவே எந்த வாகனத்தை இயக்குபவர்களும் அல்லது சாலையை பயன்படுத்துபவர்களும் எதிரில் வரும் வாகனங்கள் மற்றும் சூழ்நிலைகள் போன்றவற்றின் மீது கவனமாக இருந்தால் விபத்தை தவிர்க்க இயலும்.

இதைத் தவிர நாம் எச்சரிக்கையாய் செல்லும் போது மட்டுமே பிற வாகனங்களினால் ஏற்படும் விபத்துகளில் திடீர் முடிவெடுக்கும் தன்மையை பொறுத்து, பாதுகாப்பைப் பெறுவது சாத்தியமாகும். எனவே சாலையில் நாம் செல்லும் போது நமது முழுக்கவனம் நமது பிரயாணத்தைப் பற்றியே இருக்கவேண்டும். நமது கவனம் பிரயாணத்தில் இல்லாத போதும் போக்குவரத்து விதிகள் மீறப்படும் பொழுதும் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

விபத்தைத் தவிர்க்க ஓட்டுநர்களுக்கான சில வழிமுறைகள்:

உலகத்தில் பெரும்பாலான சாலை விபத்துக்கள் போதிய திறமையும் பொறுப்பில்லாமல் அதிக வேகத்துடன் வாகனத்தை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்களால் தான் ஏற்படுகின்றன. இதனால் விபத்தில் மரணங்கள் ஏற்படுகின்றன.

பழகுநர் உரிமம் பெற்றவர்கள் தொடர்ந்து பல நாட்கள், பல மணி நேரங்கள் வாகனத்தை ஓட்டப் பழகுவதினால் மக்கள் தொகை அதிகம் இருக்கும் நெருக்கடியான இடங்களில் கூட வாகனத்தை நிறுத்தி, பிறகு எடுத்துச் செல்லும் திறமை பெறுகிறார்கள். எனவே அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்ளும் ஒருவர் சாலையில் பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டிச் செல்வதும் சாலை விதிகள் மற்றும் குறியீடுகளைப் பின்பற்றி ஓட்டும் திறமையும் பெறுகிறார்கள்.

விபத்திற்கான காரணங்கள்
  1. போதிய அளவு ஓய்வில்லாத போது அடுத்தவரின் கட்டாயத்தின் பேரில் வாகனத்தை ஓட்டுவது.
  2. மருந்து, மாத்திரைகள் உட்கொண்ட பிறகு வாகனங்களை ஓட்டுவது.
  3. மதுபான வகைகளை அருந்தி வாகனங்களை ஓட்டுவது.
  4. சிறுநீர், மலம் கழிக்க நினைத்துக் கொண்டே அதிக தூரம் வாகனத்தை ஓட்டுவது.
  5. வாகனத்திற்குள் சாலையை மறைக்கும் வண்ணம் அலங்கார பொம்மையைப் பொருத்துவது.
  6. வாகன ஓட்டுநர் மற்றவர்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பது.
  7. ஓடும் வாகனத்திலிருந்து எந்த ஒரு பொருளையும் வெளியே தூக்கியெறிவது.
  8. பயணத்தைப் பற்றிய சிந்தனையில்லாமல் மற்றவற்றைச் சிந்திப்பது.
  9. செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது.

இவைகளை தவிர்த்துக் கொண்டால் ஓட்டுநர்கள் விபத்தினை தவிர்க்கலாம்.

விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுநரின் மனநிலைகள்:

வாகனத்தை இயக்கும் போது அவசரம், கோபம், அதிக கவலை, பயம், அதிக சந்தோஷம், உடல் பலவீனம் போன்ற அதிகப்பட்ச உணர்ச்சிகளில் வாகனத்தை இயக்குவதை விட்டுவிட்டு சராசரியான மனநிலையில் செல்வது மட்டுமே பாதுகாப்பாகும்.

  1. குடி போதையில் வாகனத்தை இயக்குதல்.
  2. வாகன இயக்கத்தில் புகைபிடித்தல்.
  3. தூக்கத்தில் வாகனத்தை ஓட்டுதல்.
  4. நிதானிக்காமல் வாகனத்தை இயக்குதல்.
  5. போதைப் பொருட்களுக்கு அடிமையாய் இருத்தல்.
  6. தன்னை முந்திச் செல்லும் வாகனத்தை அவசியமில்லாமல் மீண்டும் முந்திச் செல்வது.
  7. பின்னால் வரும் வாகனங்களுக்கு வேண்டுமென்றே முந்த இடமளிக்காமல் செல்வது.
  8. விளையாட்டும், வேடிக்கையும் செய்து கொண்டு வாகனங்களை ஓட்டுவது.
  9. எதிர்வரும் வாகன ஓட்டுநரின் மன யூகங்கள் இவ்வாறு இருக்குமென தான் ஒரு யூகத்தை ஏற்படுத்தி வாகனத்தை ஓட்டுவது.
  10. தான் பாதுகாப்பாகச் சென்றால் போதும் என்றெண்ணி, பிறருக்கு ஏற்படும் விபத்தை பற்றிக் கவலைப்படாமல் வாகனங்களை ஓட்டுவது.
  11. பிறர் பயப்படும்படியாக வாகனங்களை ஓட்டுவது.
  12. தன்னிடத்தில் மிகுந்த திறமை உண்டென்றும், அதை மற்றவர்கள் காணவேண்டும் என்றெண்ணி வாகனத்தை வேகமாக ஓட்டுவது.
விபத்து ஏற்படும் போது பொதுமக்கள் செய்யவேண்டியவை:

சாலை விபத்துகளின் எண்ணிக்கை இன்று அதிகரித்து விட்டது. தினம், தினம் விபத்துச் செய்தி நாளிதழ்களில் பக்கம் பக்கமாய் வருகிறது. சாலையில் நாம் பயணிக்கும் போது நம் கண்ணெதிரே சாலை விபத்தில் அடிபட்டு காயத்துடன் உயிருக்குப் போராடுவோரைப் பார்க்க நேர்ந்தால் நாமும் விபத்து நடந்த பகுதிக்குச் சென்று கூட்டத்தோடு கூட்டமாக நின்று வேடிக்கை பார்க்காமல் காயமடைந்தோருக்கு உதவ நினைப்பது தான் நாம் செய்யும் மிகப் பெரிய நல்ல காரியம்.

‘108’ உட்பட அருகில் உள்ள ஆம்புலன்ஸ் சேவைகளுக்குத் தகவல் தெரிவித்தாலும் அவை வரும் வரை விபத்தில் காயமடைந்தவருக்கு மேற்கொள்ள வேண்டிய உடனடி சிகிச்சைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

كَتَبْنَا عَلٰى بَنِىْۤ اِسْرَآءِيْلَ اَنَّهٗ مَنْ قَتَلَ نَفْسًۢا بِغَيْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِى الْاَرْضِ فَكَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيْعًا ؕ وَمَنْ اَحْيَاهَا فَكَاَنَّمَاۤ اَحْيَا النَّاسَ جَمِيْعًا ‌ؕ

‘ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்’ என்றும், ‘ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’ என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம்.

(அல்குர்ஆன்: 5:32)

இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் கவனத்திற்கு:

இளைஞர்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது இரு சக்கர வாகனங்கள் தான். குறிப்பாக இன்றைய இளைஞர்கள் வாகனங்களை கண்மூடித்தனமாக ஓட்டிச் செல்கின்றனர். விளைவு சாலை விபத்துகளில் பலியாகின்றனர். சாலை விதிமுறைகளை முறையாகக் கடைபிடித்தாலும் சாலையில் மித வேகத்தில் வண்டியை ஓட்டிச் செல்வதும் ஒவ்வொரு குடிமகன் மீதும் கடமையாகும்.

பஸ்கள், லாரிகள், கார்கள், மூன்று சக்கர வாகனங்கள் போன்றவைகளை விட ஆண்களாலும், பெண்களாலும் அதிகம் பயன்படுத்தக்கூடியவைகள் இரு சக்கர வாகனங்கள் தான். தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த 2000ஆம் ஆண்டில் 50.12 லட்சம். இது கடந்த நவம்பர் மாத நிலவரப்படி 1.95 கோடி. இதில் இருசக்கர வாகனங்கள் மட்டும் 1.59 கோடி என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே அதை முறையாகக் கையாள முயற்சிக்க வேண்டும்.

அரசாங்கம் செய்ய வேண்டியவை :

பொதுமக்களிடமிருந்து சரியான முறையில் வரி வசூலிக்கும் அரசாங்கம் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்துவிட்டது. ஒரு ஆட்சியாளர் குடிமக்களுக்கு நலம் நாடவேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மற்றும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டிய அரசாங்கம் பொறுப்பற்று எவ்வாறெல்லாம் நடக்கின்றது என்பதைப் பார்ப்போம்.

ஏதேனும் விழாக்காலங்களிலோ, விடுமுறை நாட்களிலோ தங்களுடைய வீட்டிற்கும், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் செல்லும் வழக்கமுடையவர்களாக மக்கள் இருக்கின்றார்கள். அவர்கள் செல்வதற்கு ஏதுவாக அரசு பேருந்துகளின் எண்ணிக்கைகள் இருப்பதில்லை. கிராமப் புறங்களை எடுத்துக் கொண்டால் ஒரு நாளில் குறிப்பிட்ட சில நேரங்களுக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அந்தப் பேருந்தும், பேருந்து நிலையங்களில் சரியான முறையில் நிறுத்தப்படுவதில்லை. இதனால் பேருந்து நிலையங்களில் நிற்பவர்கள் ஓடிச்சென்று ஏறும் நிலை உருவாகின்றது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர் என்பதை அரசு ஊழியர்கள் கருத்தில் கொண்டு அவர்களுக்கான விதிமுறைகளை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒரு வாகனத்தை இயக்கும் ஓட்டுநர் என்பவர் பத்து முதல் ஐம்பது உயிர்களுக்குப் பொறுப்பாளியாவார். அவர் தூக்கக் கலக்கத்துடனோ வேடிக்கை பார்த்துக் கொண்டோ கேளிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டோ தங்களுடைய திறமையைப் பிறருக்கு காட்டுவதற்காக ஓட்டுவதோ, தான் மட்டும் பிழைத்தால் போதும் என்ற நோக்கில் ஓட்டுவதோ விபத்தை ஏற்படுத்தும். அத்தனை உயிர்களையும் பாதுகாக்கும் பொறுப்பு ஓட்டுநர்களுக்குத் தான் இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொண்டு சரியான முறையில் வாகனத்தை இயக்க வேண்டும்.

இது மட்டுமில்லாமல் அரசாங்கம் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளைச் சரிசெய்ய வேண்டும். காட்டுப் பாதைகளிலும் மக்கள் உபயோகிக்கும் சாலைகளிலும் சரியான மின் விளக்குகளை எரிய விட வேண்டும். இதுவும் விபத்து ஏற்படுவதற்கு பெரிதும் காரணமாக அமைகின்றது.

أَلَا كُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالْأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ، وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ، وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ، وَهِيَ مَسْئُولَةٌ عَنْهُمْ، وَالْعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُ، أَلَا فَكُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ»

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஓர் ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான்.

ஒரு பெண், தன் கணவனின் இல்லத்துக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் உரிமையாளரின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.

நூல்: (முஸ்லிம்: 3733) 

சமூக நலன் காக்கும் சுமூக மார்க்கம்

சாலை பாதுகாப்பு தொடர்பாக மேற்சொன்ன விதிமுறைகள் அனைத்தும் மக்கள் தொகை பெருக்கெடுத்து ஓடக்கூடிய இக்காலகட்டத்தில் அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இஸ்லாம் மார்க்கமோ 1400 வருடங்களுக்கு முன்பாகவே மக்களுக்கு நலம் நாடும் விதமாக சாலை விதிமுறைகளையும் அதனைப் பின்பற்றுவதன் அவசியத்தையும் நமக்கு வலியுறுத்தியுள்ளது. ஒரு மனிதனின் வணக்க வழிபாடுகளை மட்டும் போதிக்காமல் பொது வாழ்வில் அவன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கும் வழிகாட்டுகின்றது. ஏனெனில் இஸ்லாம் மார்க்கம் இயற்கை மார்க்கமாகும்.

உதாரணமாக ஓட்டுநர்கள் மது அருந்தக்கூடாது என்று அரசு சட்டம் பிறப்பித்துள்ளது. மது என்பது ஓட்டுநர்களுக்கு மட்டும் தீங்கு விளைவிப்பவை அல்ல. பொது மனிதனுக்கு அவனது ஆரோக்கியமான உடலை ஆரோக்கியமற்றதாக ஆக்கிவிடும் கொடிய விஷம். அதனால் தான் இஸ்லாம் அதை மனித இனத்திற்கே முழுமையாக தடை செய்துவிட்டது.

عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«كُلُّ مُسْكِرٍ خَمْرٌ، وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ، وَمَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا فَمَاتَ وَهُوَ يُدْمِنُهَا لَمْ يَتُبْ، لَمْ يَشْرَبْهَا فِي الْآخِرَةِ»

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: போதை தரும் ஒவ்வொன்றும் மதுவாகும். போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும். யார் இவ்வுலகில் தொடர்ந்து மது அருந்தி, பாவமன்னிப்புத் தேடாமல் (திருந்தாமல்) குடிகாரராகவே இறந்துவிடுகிறாரோ அவர் மறுமையில் (சொர்க்க) மதுவை அருந்தமாட்டார்.

நூல்: (முஸ்லிம்: 4076) 

عَنْ جَابِرٍ
أَنَّ رَجُلًا قَدِمَ مِنْ جَيْشَانَ، وَجَيْشَانُ مِنَ الْيَمَنِ، فَسَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ شَرَابٍ يَشْرَبُونَهُ بِأَرْضِهِمْ مِنَ الذُّرَةِ، يُقَالُ لَهُ: الْمِزْرُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوَ مُسْكِرٌ هُوَ؟» قَالَ: نَعَمْ، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ مُسْكِرٍ حَرَامٌ، إِنَّ عَلَى اللهِ عَزَّ وَجَلَّ عَهْدًا لِمَنْ يَشْرَبُ الْمُسْكِرَ أَنْ يَسْقِيَهُ مِنْ طِينَةِ الْخَبَالِ» قَالُوا: يَا رَسُولَ اللهِ، وَمَا طِينَةُ الْخَبَالِ؟ قَالَ: «عَرَقُ أَهْلِ النَّارِ» أَوْ «عُصَارَةُ أَهْلِ النَّارِ»

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் யமன் நாட்டிலுள்ள ‘ஜைஷான்’ எனுமிடத்திலிருந்து வந்து தம் நாட்டினர் சோளத்திலிருந்து தயாரித்துப் பருகிவருகின்ற ஒரு வகை பானம் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அது போதையளிக்கக் கூடியதா?’’ என்று கேட்டார்கள். அவர் “ஆம் (போதையளிக்கக் கூடியதே)’’ என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், “போதையளிக்கக்கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்.

(இவ்வுலகில்) போதைப் பொருட்களை உட்கொள்பவருக்கு (மறுமையில்) ‘தீனத்துல் கபாலை’ நிச்சயமாக நான் புகட்டுவேன் என அல்லாஹ் உறுதிமொழி எடுத்துள்ளான்’’ என்று கூறினார்கள். மக்கள் “அல்லாஹ்வின் தூதரே! ‘தீனத்துல் கபால்’ என்பது என்ன?’’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நரகவாசிகளின் வியர்வை அல்லது நரகவாசிகளின் சீழ்’’ என்று விடையளித்தார்கள்

நூல்: (முஸ்லிம்: 4075) 

ஈமானில் உள்ள அம்சம்
 عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«الْإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ – أَوْ بِضْعٌ وَسِتُّونَ – شُعْبَةً، فَأَفْضَلُهَا قَوْلُ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَدْنَاهَا إِمَاطَةُ الْأَذَى عَنِ الطَّرِيقِ، وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الْإِيمَانِ»

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கை என்பது ‘எழுபதுக்கும் அதிகமான’ அல்லது ‘அறுபதுக்கும் அதிகமான’ கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது ‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை’ என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான்.

நூல்: (முஸ்லிம்: 58) 

பாதைகளில் தொல்லை தரும் பொருட்களை அகற்றுவது இறைநம்பிக்கையில் உள்ள அம்சம் என்று கூறி, பிறர் நலம் நாட இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகின்றது.

போக்குவரத்துப் பாதைகளில் இடையூறு அளிக்கின்ற பொருட்களைக் கண்டும் காணாமல் இருப்பதினாலும் கூட விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்த இடையூறுகளை அகற்ற வேண்டிய கடமை உள்ள மக்களில் சிலரோ போக்குவரத்து சாலைகளில் திருஷ்டி எனக் கூறி பூசணிக்காயை உடைக்கின்றனர். இது போன்றே பாக்கெட்கள் மற்றும் பாட்டில்களில் அடைக்கப்பட்டிருக்கும் பானங்களைக் குடித்து விட்டு குப்பைத் தொட்டிகளில் அவற்றைப் போடாமல் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாலைகளில் வீசியெறிகின்றனர். இதனால் இரு சக்கர வாகனங்களும், வயதானவர்களும், ஊனமுற்றவர்களும், நோயாளிகளும், கர்ப்பிணிகளும், சிறுவர்களும், கவனமற்றுச் செல்லும் பொது மக்களும் விபத்துக்குள்ளாகி பாதிக்கப்படுகின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் ஒரு சாலை வழியே நடந்து செல்லும்போது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டார். உடனே அதை (எடுத்து) தள்ளிப் போட்டார். அவரது இந்த நற்செயலை அல்லாஹ் நன்றியுடன் ஏற்று, அவருக்குப் பாவமன்னிப்பு அருளினான்.     

நூல்: (முஸ்லிம்: 5105) 

பாதசாரிகளுக்கு இடையூறு தரும் பொருட்கள் சாலைகளில் கிடந்தால் அவற்றை அகற்றிவிட்டுச் செல்வது பாராட்டுக்குரிய நன்மையை பெற்றுத் தரும் செயலாகும். மேலும் இறை நம்பிக்கையில் ஒரு பகுதியுமாகும். மரம், மரக்கிளை, முள், கல், கண்ணாடி, அசுத்தங்கள் போன்ற மக்களுக்கு தொந்தரவு தரும் எந்தப் பொருளாக இருந்தாலும் அவற்றை அகற்றுவது மக்களின் கடமையாகும். இன்னும் சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் நல்லறங்களாகும்.

துர்நாற்றம் வீசக்கூடிய, அருவருப்பாகக் காட்சி தரக்கூடிய, வழுக்கி விட்டு காயங்களை ஏற்படுத்தக்கூடிய, போக்குவரத்துக்கு  இடையூறு அளிக்கின்ற, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் அனைத்துமே இவற்றில் அடங்கும்.

பேருந்து நிலையம் என்றாலே நம் நினைவுக்கு வருவது துர்வாடை வீசும் கழிவறைகளும், தேங்கி நிற்கும் சாக்கடைகளும், சுத்தம் செய்யப்படாத குப்பைத் தொட்டிகளும் தான். இவைகள் பயணிகளுக்கு  உடலளவிலும், மனதளவிலும் மிகவும் வெறுப்பை ஏற்படுத்துவை. சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் இவற்றில் போதுமான கவனம் செலுத்தவில்லை என்பது நாம் அறிந்த கசப்பான உண்மை.

ஆகவே அரசாங்கம் மக்களின் நலன் கருதி இவற்றில் தக்க கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இந்திய நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் அனைத்திற்குமே வரி செலுத்துகின்றனர். எனவே இதில் முறைப்படி கவனம் செலுத்துவது அரசின் கடமையாகும்.

பாதையின் உரிமை

இன்றைய காலத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் போக்குவரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபடுகின்றனர். பொது மக்களுக்கும், பொதுச் சொத்துக்களுக்கும் சேதத்தை ஏற்படுத்துகின்றனர். இது மட்டுமின்றி வன்முறைகளிலும், பாலியல் பலாத்காரங்களிலும், வழிப்பறியிலும் ஈடுபடுகின்றனர். மேலும் சாலைகளை அவர்களால் இயன்ற அளவிற்கு அசுத்தப்படுத்துகின்றனர்.

இளைஞர்களும் இதற்கு விதிவிலக்கு இல்லை. சாலைகளில் ஒன்று கூடி சீட்டியடிக்கின்றனர். மேலும் அங்கு வரக்கூடிய பெண்களிடம் கேலி கிண்டல் செய்து தவறான முறைகளிலும் அவர்களிடம் நடக்கின்றனர். இன்றைய கால சூழ்நிலையில் ஒரு பெண் பக்கத்தில் இருக்கும் கடைத்தெருவுக்குச் சென்று வருவது கூடக் கேள்விக்குறியாகி விட்டது. இவை பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துபவைகளாகும். இவற்றை உணர்ந்த இஸ்லாம் சாலையில் பேண வேண்டிய ஒழுங்குமுறைகளை அழகிய முறையில் நமக்கு கற்றுத் தருகின்றது.

قالَ أَبُو طَلْحَةَ
كُنَّا قُعُودًا بِالْأَفْنِيَةِ نَتَحَدَّثُ، فَجَاءَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَ عَلَيْنَا فَقَالَ: «مَا لَكُمْ وَلِمَجَالِسِ الصُّعُدَاتِ اجْتَنِبُوا مَجَالِسَ الصُّعُدَاتِ، فَقُلْنَا إِنَّمَا قَعَدْنَا لِغَيْرِ مَا بَاسٍ قَعَدْنَا نَتَذَاكَرُ وَنَتَحَدَّثُ» قَالَ: «إِمَّا لَا فَأَدُّوا حَقَّهَا غَضُّ الْبَصَرِ، وَرَدُّ السَّلَامِ، وَحُسْنُ الْكَلَامِ»

அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் வீட்டு முற்றங்களில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம். (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து எங்களிடையே நின்று, “சாலையோரங்களில் அமர்ந்து (பேசிக்) கொண்டிருப்பதற்கு உங்களுக்கு என்ன (அவசியம்) நேர்ந்தது? சாலையோரங்களில் அமர்வதைத் தவிர்த்துவிடுங்கள்’’ என்று கூறினார்கள். நாங்கள் “அவசியத்தை முன்னிட்டே அமர்கிறோம். (இங்கு அமர்ந்துதான் பல விஷயங்கள் குறித்து) நாங்கள் பேசிக்கொள்கிறோம்; கலந்துரையாடுகிறோம்’’ என்று கூறினோம்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதைத் தவிர்க்க முடியாது என்றிருந்தால், சாலைகளுக்கு அவற்றின் உரிமையை வழங்கிவிடுங்கள். (அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக்கொள்வதும், முகமனுக்குப் பதிலுரைப்பதும், நல்ல பேச்சுக்களைப் பேசுவதும் (அவற்றின் உரிமை) ஆகும்‘’ என்று சொன்னார்கள்.

நூல்: (முஸ்லிம்: 4365) 

எனவே சாலை ஓரங்களில் அமர்வதைத் தவிர்ப்பதே நல்லது. அமர வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மேற்சொன்ன ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பயணம் வேதனையின் ஒரு துண்டு

பிரயாணம் செய்வதென்றாலே அனைவருக்கும் ஒரு விதமான மகிழ்ச்சி ஏற்படும். இந்த மகிழ்ச்சி ஒரு சில மணிநேரங்களே. அதன் பிறகு நாம் சேர வேண்டிய இடம் எப்போது வரும் என்ற எதிர்ப்பார்ப்பு தான் நமக்குள் எழும். ஏனெனில் பிரயாணம் என்பது வேதனையின் ஒரு துண்டு என்று நமது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அதற்கேற்ப பிரயாணம் செய்வதால் உடல் களைப்பு, தூக்கமின்மை, சோர்வு போன்ற காரணங்களால் பிரயாணிகள் பலவீனர்களாக ஆகிவிடுகிறார்கள்.

 عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«السَّفَرُ قِطْعَةٌ مِنَ الْعَذَابِ، يَمْنَعُ أَحَدَكُمْ نَوْمَهُ وَطَعَامَهُ وَشَرَابَهُ، فَإِذَا قَضَى أَحَدُكُمْ نَهْمَتَهُ مِنْ وَجْهِهِ، فَلْيُعَجِّلْ إِلَى أَهْلِهِ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பயணம் வேதனையின் ஒரு துண்டாகும். உங்கள் தூக்கத்தையும் உணவையும் பானத்தையும் அது தடுத்துவிடுகிறது. ஆகவே, உங்களில் ஒருவர், தாம் நாடிச் சென்ற பயண நோக்கத்தை முடித்துவிட்டால், உடனே அவர் தம் வீட்டாரை நோக்கி விரைந்து செல்லட்டும்.

நூல்: (முஸ்லிம்: 3892) 

சுமைகளை ஏற்ற, இறக்க உதவுவதும் தர்மமே!

இதுபோலவே பிரயாணிகள் தங்களது வாகனங்களைப் பிடிக்க விரையும் போதோ அல்லது வாகனங்களிலிருந்து இறங்கும் போதோ அவர்களின் சுமைகள் அவர்களுக்குப் பாரமாகவே இருக்கும். இந்நிலையில்  அங்கே இருக்கும் இதர மக்கள் அவர்களின் சுமைகளை ஏற்ற இறக்க உதவுவது நற்காரியமாகும்.

மேலும் சில வாகனங்களில் முதியவர்களுக்கென்றும், மாற்றுத்திறனாளிகளுக்கும், பெண்களுக்கும் தனித் தனி இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் அதை எவரும் கவனிப்பதில்லை. இதுவும் மனிதாபிமானமற்ற செயலாகும். இப்படிப்பட்ட இரக்கமற்ற பண்புக்குரியவர்களாக நாம் இருந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

مَنْ لاَ يَرْحَمُ لاَ يُرْحَمُ

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (படைப்பினங்கள் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார்

நூல்: (புகாரி: 6013) 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«كُلُّ سُلاَمَى عَلَيْهِ صَدَقَةٌ، كُلَّ يَوْمٍ، يُعِينُ الرَّجُلَ فِي دَابَّتِهِ، يُحَامِلُهُ عَلَيْهَا، أَوْ يَرْفَعُ عَلَيْهَا مَتَاعَهُ صَدَقَةٌ، وَالكَلِمَةُ الطَّيِّبَةُ، وَكُلُّ خَطْوَةٍ يَمْشِيهَا إِلَى الصَّلاَةِ صَدَقَةٌ، وَدَلُّ الطَّرِيقِ صَدَقَةٌ»

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதனின் (உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்கு அவரது வாகனத்தில் ஏறிட உதவுவது, அல்லது அவரது வாகனத்தின் மீது அவரது மூட்டை முடிச்சுகளை ஏற்றி வைப்பது கூட தர்மமாகும். நல்ல சொல்லும் தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், (வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்குச் சரியான) பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்.

நூல்: (புகாரி: 2891) 

அடுத்தவர்களின் உடைமைகளை அபகரிப்பது

ஒரு சிலர் பயணம் மேற்கொள்ளும் அப்பாவி மக்களிடம் அவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்றி அவர்களின் பொருட்களை அபகரிக்கின்றனர். இன்னும் சிலர் குழந்தைகளைக் கடத்துவது போன்ற மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

மேலும் சில பஸ் நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் பிரயாணிகள் பதற்றத்துடன் இருப்பதால் தங்களது பொருட்களைத் தவற விடுவதுண்டு. அந்தப் பொருட்களை அதற்குரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்களை அடையாளம் தெரியவில்லையென்றால் காவல் நிலையங்களில் அதை ஒப்படைக்க வேண்டும். இதுவே நல்ல பண்பு.

«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النُّهْبَى وَالمُثْلَةِ»

அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: கொள்ளையடிப்பதையும் ஒருவரின் அங்கங்களைச் சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

நூல்: (புகாரி: 2474) 

மேற்கண்ட அனைத்து மார்க்கச் சட்டங்களையும் அரசால் பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளையும் கடைபிடித்தோமேயானால் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம். எனவே சாலை விதிகளை முறையாகக் கடைப்பிடித்து சாலை விபத்துகளைத் தவிர்ப்போம்.

இஸ்லாம் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளின் அடிப்படையில் வாழ்ந்து மரணிப்போமாக! மறுமையில் வெற்றி பெறுவோமாக!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.