கப்ரை வணங்கும் பரேலவி மதத்தினர் (தர்ஹா கூட்டம்)
முன்னுரை
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ
ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.
அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனுக்கு மட்டுமே வழிபட வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் மனிதர்களாகிய நம்மைப் படைத்திருக்கிறான் என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
உண்மையான இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற மக்களுக்கு மத்தியில் ஷைத்தானிய அடிச்சுவடுகளைச் சிறிதும் பிசகாமல் பின்பற்றுகின்ற பரேலவி மதத்தினரால் சமாதி வழிபாடு, தாயத்து, தகடுகள் போன்ற எண்ணற்ற இணை கற்பிக்கின்ற காரியங்கள் புகுந்து விட்டன.
ஆனால் சத்தியத்தை யாருக்கும் அஞ்சாது எடுத்துரைக்கின்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் தீவிரப் பிரச்சாரத்தின் காரணத்தினால் ஷைத்தானிய சக்திகளான கப்ரு வணங்கி பரேலவிகளின் சிலந்திக் கோட்டைகள் தகர்த்தெறியப் பட்டுள்ளன.
بَلْ نَـقْذِفُ بِالْحَـقِّ عَلَى الْبَاطِلِ فَيَدْمَغُهٗ فَاِذَا هُوَ زَاهِقٌ ؕ وَلَـكُمُ الْوَيْلُ مِمَّا تَصِفُوْنَ
உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (இறைவனைப் பற்றி) நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான்.
இன்றைக்கு அதிகமான மக்கள் சத்தியத்தை விளங்கி உண்மையான இஸ்லாத்தைப் பின்பற்றத் துவங்கி விட்டார்கள். இதனால் முஸ்லிம்களைப் போன்று வேடமிட்டு கப்ரை வணங்கும் பரேலவி மதத்தினர், “நாங்கள் கப்ரை வணங்கவில்லை. கப்ரு ஸியாரத்தைத் தான் செய்கிறோம்” என்று கப்ரு வணக்கத்திற்கும் கப்ரு ஸியாரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் அவர்கள் செய்கின்ற இழிசெயலை நற்செயலாகக் காட்டியுள்ளனர்.
இணை கற்பிக்கின்ற, பெரும்பாவ காரியங்களான சமாதிகளைக் கட்டி அதற்கு விழாக்கள் எடுப்பது, ஊர்வலம் நடத்துவது, சமாதியில் சந்தனம் பூசுவது, மாலையிடுவது, மரியாதை செய்வது, மவ்லூது பஜனைகள் பாடுவது, சமாதிகளில் உள்ளோருக்கு நேர்ச்சைகள் செய்வது, சமாதிகள் பெயரில் சினிமாப் பாட்டுகளை இசையுடன் பாடி கச்சேரி நடத்துவது, யானை என்ற மிருகத்துடன் பரேலவியிஸ மாக்களும் சேர்ந்து மிருக ஊர்வலம் செல்வது, சமாதியில் முறையிடுவது, இந்த இணைவைப்பு காரியங்களுக்கு உண்டியல் வைத்து வசூலிப்பது போன்றவையும் உண்மையான இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற காரியங்களே என்பது இஸ்லாத்தைப் படிக்காத, கப்ரை வணங்கும் பரேலவியிஸ மதத்தினருக்கு விளங்கவில்லை.
இவைகள் வணக்கமே அல்ல
உண்மையான இஸ்லாத்தில் கை தட்டுவது, சீட்டியடிப்பது போன்றவை தொழுகையாகக் கருதப்படாது. இதையே பரேலவிகளைப் போன்று அல்லாஹ்வை நம்பிய மக்கா காஃபிர்கள் தாங்கள் வணங்கிய சிலைகளுக்குச் செய்ததால் அக்காரியங்களை அவர்களுடைய தொழுகையாகவே அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
وَمَا كَانَ صَلَاتُهُمْ عِنْدَ الْبَيْتِ اِلَّا مُكَآءً وَّتَصْدِيَةً ؕ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ
சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர (வேறெதுவும்) இந்த ஆலயத்தில் அவர்களின் தொழுகையாக இருக்கவில்லை. “நீங்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருந்த காரணத்தினால் வேதனையை அனுபவியுங்கள்!” (என்று கூறப்படும்).
இது போன்றே கப்ரை வணங்கும் பரேலவிகள் செய்யும் மேற்கண்ட காரியங்களும், இறைவனுக்கு இணை கற்பிக்கும் வணக்கமாகவே கருதப்படும்.
அகில உலகையும் படைத்து, காத்து, பராமரிக்கும் ஒரே ஒரு இறைவனை அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது. “அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை; எதுவும் இல்லை” என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
பல கடவுள்கள் இருப்பதாக நம்புவதும், ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுடைய பண்புகள் ஆற்றல்கள் அவனுக்கு இருப்பது போல் மற்றவர்களுக்கு இருப்பதாக நம்புவதும், அல்லாஹ்வுக்குச் செய்யும் வழிபாடுகளில் எந்தவொன்றையும் மற்றவர்களுக்குச் செய்வதும் இணை கற்பித்தல் என்று இஸ்லாம் கூறுகிறது.
இவ்வாறு இறைவனுக்கு இணை கற்பித்தல், மனிதர்கள் செய்கின்ற குற்றங்களிலேயே மிகவும் பெரிய குற்றம் எனவும், இக்கொள்கையிலிருந்து திருந்திக் கொள்ளாமல் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கு மன்னிப்பு இல்லை; என்றென்றும் நரகத்தில் கிடப்பார் என்றும் இஸ்லாம் கூறுகிறது.
இனி பரேலவிகள் கப்ரை வைத்துக் கொண்டு செய்யும் காரியங்கள் கப்ரு வணக்கமே என்பதற்கான சான்றுகளைப் பார்ப்போம்.
இறந்தவர்களை இறைநேசர்கள் (அவுலியா) என்று தீர்மானிப்பது இணைவைத்தலே!
புத்தன் துறையைச் சேர்ந்த பரேலவி மதத்தினர் அல்ஆரிபுபில்லா என்ற பெயருடைய ஒருவரை இறைநேசர் என்றும் மகான் என்றும் கூறுகின்றனர். இவ்வாறே ஒவ்வொரு தர்ஹாவில் உள்ளவர்களையும் கூறுகின்றனர். இவர்கள் அவுலியா எனக் கூறுபவர்களில் சில குரங்களும், யானையும், அணில்களும், கட்டை பீடி மஸ்தான்களும், அறுபதடி பாவாக்களும் அடங்கியுள்ளனர்.
அல்லாஹ்வும், அவனிடமிருந்து இறைச்செய்தி பெற்றதன் அடிப்படையில் இறைத்தூதரும் யாரையெல்லாம் சுவர்க்கவாசிகள் என்றும் நரகவாசிகள் என்றும் கூறியுள்ளார்களோ அவர்களைத் தவிர வேறு யாரையும் அவர் மரணித்த பிறகு இவர் சுவர்க்கவாசி தான் அல்லது இவர் நரகவாசி தான் என்று தீர்மானிக்கக் கூடிய அதிகாரம் யாருக்கும் கிடையாது. இறைத் தூதர்கள் கூட இறைவன் அவர்களுக்கு அறிவித்தவர்களை மட்டும் தான் கூற முடியுமே தவிர வேறு யாரையும் அவர்களாகத் தீர்மானிக்க முடியாது.
اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ۖ ۚ الَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَؕ
கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள்.
இறை நம்பிக்கை, இறையச்சம் கொண்ட அனைவரும் இறைநேசர்களே என மேற்கண்ட வசனம் கூறுகிறது. ஒருவனுடைய உண்மையான இறையச்சத்தையும், இறை நம்பிக்கையையும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது. நபியவர்களுக்குக் கூட இந்த அதிகாரம் கிடையாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களின் இதயங்களைத் துளையிட்டுப் பார்க்கவோ அவர்களின் வயிறுகளைக் கிழித்துப் பார்க்கவோ எனக்கு உத்தரவிடப்படவில்லை.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நூல்: (புகாரி: 4351)
இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்தும் விளங்கிக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மதீனாவுக்கு வந்த) முஹாஜிர்களில் யார் எவர் வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்டிருந்த போது உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரது உடல் நீராட்டப்பட்டு அவரது ஆடையிலேயே கஃபனிப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள்.
நான் (உஸ்மானை நோக்கி), “ஸாயிபின் தந்தையே! உம்மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சியம் கூறுகிறேன்” எனக் கூறினேன். உடனே நபி (ஸல்) அவர்கள் “அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது, உனக்கெப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத் தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?” என நான் கேட்டேன். அதற்கு, நபி (ஸல்) அவர்கள், “இவர் இறந்து விட்டார். எனவே அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே நான் விரும்புகின்றேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் எனது நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை.
நூல்: (புகாரி: 1243)
உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் மிகச் சிறந்த சஹாபி. ஹிஜ்ரத் செய்தவர். அவர் மரணித்த பிறகு, அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தி விட்டான் என்று தீர்மானிப்பதை நபியவர்கள் கண்டிக்கிறார்கள். ஒருவன் எவ்வளவு நல்லவனாக வாழ்ந்தாலும் அவன் மரணித்த பிறகு அவன் நிலை என்னவென்பதை அல்லாஹ் ஒருவன் தான் அறிந்தவன். அவனைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது.
நம்முடைய பார்வைக்கு ஒருவன் நல்லவனாக வாழ்ந்தாலும் அவன் மரணித்த பிறகு அவன் நல்லவன் தான் என நாம் தீர்மானிக்க முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவாக விளக்குகின்றன. பின்வரும் ஹதீஸ் இதனை நூறு சத விகிதம் உறுதிப்படுத்துகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய (நற்)செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃத் அஸ்ஸாஇதீ (ரலி)
நூல்: (புகாரி: 2898)
ஒருவர் மரணித்த பிறகு அவரை மகான், நல்லவர், அவுலியா, சுவர்க்கவாசி என்று தீர்மானிக்கின்ற அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரியதாகும். இதற்கு மாற்றமாக இறை அதிகாரத்தைக் கையிலெடுத்து ஆரிபு என்பவரையும், முஹைதீன் என்பவரையும் அனைத்து தர்ஹாவில் அடக்கப்பட்டவர்களையும், யானைகளையும், குரங்குகளையும், கட்டைப்பீடி மஸ்தான்களையும் இந்த பரேலவி மதத்தினர் அவுலியாக்கள் என்று தீர்மானித்தது இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற காரியமே! இதை உண்மையான முஸ்லிம்கள் தெளிவாக விளங்கியுள்ளனர்.
கப்ரைக் கடவுளாக்கிய பரேலவி மதத்தினர்
பிரார்த்தனை என்பது வணக்கமாகும். அதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் செய்வது கூடாது. அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களிடம் பிரார்த்தனை செய்தால் நாம் அவர்களைக் கடவுளாக எடுத்துக் கொண்டோம் என்பதே அதன் பொருளாகும்.
பிரார்த்தனை தான் வணக்கமாகும் என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர்(ரலி)
நூல்கள்: (அஹ்மத்: 18352) (17629), திர்மிதீ, ஹாகிம், அபூதாவூத்
இந்த நபிமொழிகள் யாவும் பிரார்த்தனை என்பது ஒரு வணக்கம் என்று கூடச் சொல்லாமல் வணக்கங்களிலேயே தலை சிறந்த வணக்கம் எனத் தெளிவாக அறிவிக்கின்றன.
யார் இறைவனல்லாத மற்றவர்களைப் பிரார்த்திக்கின்றார்களோ அவர்கள் இறைவனல்லாதவர்களை வணங்கியவர்களாகவே இறைவனால் கருதப்படுவர். லாயிலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை) என்பதில் இவர்களுக்கு நம்பிக்கையில்லை.
எனவே கப்ரிடம் பிரார்த்தனை செய்யும் பரேலவி மதத்தினர் கப்ரு வணங்கிகளே!
கப்ரில் உள்ளவர் கேட்கிறார் என்ற நம்பிக்கை
எங்கிருந்து அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும், எப்போது அழைத்தாலும் செவியேற்றுப் பதிலளிக்கும் ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு அவ்வாற்றல் இருப்பதாக நம்புபவர்கள் இறை வணக்கத்தை இறைவனல்லாத மற்றவர்களுக்குச் செய்தவர்களாவர். இதோ இறைவன் கூறுவதைப் பாருங்கள்.
அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள்.
செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!
செத்தவன் செவியேற்க மாட்டான் என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன.
ஆனால் பரேலவி மதத்தினர் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் கப்ருக்கு முன்னால் நின்று கேட்கின்றனர். கப்ரில் உள்ளவர் அனைவரின் கூற்றையும் கேட்கிறார் என்ற நம்பிக்கையிலேயே இவ்வாறு பிரார்த்திக்கின்றனர்.
மேலும் எங்கோ வாழ்கின்ற தமிழ் பேசுகின்ற ஒரு பரேலவி மதத்தைச் சார்ந்தவன், தமிழே தெரியாத என்றைக்கோ இறந்து பக்தாதில் அடங்கி மண்ணோடு மண்ணாகி விட்ட முஹைதீன் என்பவரை அழைக்கின்றான். எங்கிருந்து அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும் செத்தவன் கேட்கின்றான் என்ற நம்பிக்கையிலேயே இவ்வாறு செய்கின்றனர். முஹைதீனை ஆயிரம் தடவை அழைத்தால் அவர் கண்ணெதிரே வருவார் என்றும் மவ்லிதுகளில் எழுதி வைத்துள்ளனர்.
எங்கிருந்து அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும், எப்போது அழைத்தாலும் செவியேற்றுப் பதிலளிக்கும் ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. இவ்வாற்றல் கப்ருக்கு இருப்பதாக நம்புவதால் பரேலவிகள் கப்ரு வணங்கிகளே!
கப்ருக் கடவுளிடம் உதவி தேடும் பரேலவி மதத்தினர்
اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ
(அல்லாஹ்வே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.
மிகைத்தவனும், ஞானமிக்கோனுமான அல்லாஹ்விடமிருந்தே தவிர எந்த உதவியும் இல்லை.
اِنْ يَّنْصُرْكُمُ اللّٰهُ فَلَا غَالِبَ لَـكُمْۚ وَاِنْ يَّخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِىْ يَنْصُرُكُمْ مِّنْۢ بَعْدِهٖ ؕ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ
அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்வோர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.
நபி (ஸல்) கூறினார்கள்:
நீ எதைக் கேட்டாலும் அல்லாஹ்விடமே கேள். நீ உதவி தேடினால் அல்லாஹ்விடம் (மட்டுமே) உதவி தேடு.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: (திர்மிதீ: 2516) (2440)
அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடும்படி மேற்கண்ட வசனங்களும் ஹதீஸ்களும் நமக்குக் கற்றுத் தருகின்றன. எனவே உதவி தேடுதல் என்பது வணக்கமாகும்
இந்தப் பரேலவி மதத்தினர் இறைவனிடம் மட்டுமே உதவி தேட வேண்டும் என்பதன் சரியான பொருளைத் திரிக்கின்றனர்.
“நன்மையான காரியங்களிலும் இறையச்சத்தை ஏற்படுத்தும் காரியங்களிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்!”
இந்த வசனத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதை அல்லாஹ் அனுமதிக்கிறான்; வலியுறுத்தவும் செய்கிறான்.
எனவே ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக் கொள்வதும், மனிதர்களை மனித நிலையில் வைத்து உதவி தேடுவதும் இணை வைத்தலாகாது.
ஆனால் மனிதனை இறைவனது அம்சம் பொருந்தியவனாகக் கருதும் விதமாக உதவி தேடுவது மட்டுமே இணை வைத்தலாகும். கப்ரில் அடங்கி மண்ணோடு மண்ணாகி விட்ட ஒருவரை, ஒருவன் அழைத்து உதவி தேடும் போது அவர் இறைவனது அம்சம் கொண்டவராக நம்பப்படுகிறார்.
எங்கிருந்து அழைத்தாலும் எந்த மொழியில் அழைத்தாலும் எப்போது அழைத்தாலும் செவியேற்றுப் பதிலளிக்கும் ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.
இவ்வாற்றல் கப்ருக்கு இருப்பதாக நம்புவதாலும் எவ்வித உபகரணங்களும் இல்லாமல் நோய் நீக்குதல், குழந்தை பாக்கியத்தை அளித்தல் போன்ற ஆற்றல்கள் இறைவனுக்கு இருப்பதைப் போன்று கப்ருக்கு இருப்பதாக நம்பி இறைவனிடம் மட்டுமே முறையிட வேண்டியவற்றை கப்ரிடம் முறையிடும் பரேலவிகள் கப்ரு வணங்கிகளே!
கப்ருக்கு அறுத்துப் பலியிட்டு நேர்ச்சை செய்தல்
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ؕ
உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!
இந்த வசனத்தில் இறைவனுக்காக மட்டுமே தொழ வேண்டும். அவனுக்காக மட்டுமே அறுத்துப் பலியிட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
தொழுகை எப்படி வணக்கமோ அது போல் அறுத்துப் பலியிடுவதும் வணக்கமே! தொழுகைகளை எப்படி இறைவனல்லாத எவருக்கும் செய்யக் கூடாதோ, அது போல் அறுத்துப் பலியிடுவதையும் இறைவனல்லாத எவருக்கும் செய்யக் கூடாது என்று இங்கே தெளிவுபடுத்தப்படுகின்றது.
“யார் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்காக அறுக்கின்றானோ, அவனை அல்லாஹ் லஃனத் செய்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: (முஸ்லிம்: 4001)
“யார் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதாக நேர்ச்சை செய்கிறாரோ, அதை அவர் நிறைவு செய்யட்டும்! யார் இறைவனுக்கு மாறு செய்யும் விஷயங்களில் நேர்ச்சை செய்கிறாரோ, அதை நிறைவேற்றலாகாது” என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: (புகாரி: 6696)
அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்காகவும் உயிரே போய் விடும் என்ற நிலை ஏற்பட்டாலும், எதனையும் பலியிடக் கூடாது. அற்ப ஈ போன்ற மதிப்பற்ற உயிரினங்களைக் கூட, அல்லாஹ் அல்லாதவர்களுக்குப் பலியிடக் கூடாது; நேர்ச்சை செய்யக் கூடாது என்பதை இந்த ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.
நேர்ச்சையும் அறுத்துப் பலியிடலும் ஒரு இபாதத் – வணக்கம் என்பதை எவர் அறியவில்லையோ, அதன்படி நடக்கவில்லையோ, அவர்கள் இறைவனல்லாதவர்களை வணங்கியவர்களாக ஆகி நிரந்தர நரகத்திற்குத் தகுதி பெறுகிறார்கள்.
எனவே கப்ருகளுக்கு அறுத்துப் பலியிடுதல், நேர்ச்சை செய்தல் என்ற வணக்கங்களைச் செய்யும் பரேலவி மதத்தினர் கப்ரு வணங்கிகளே!
யானையைக் கடவுளாக்கிய கப்ரு வணங்கிகள்
கப்ரு வணக்கத்தை கப்ரு ஸியாரத் என்று பெயர் மாற்றம் செய்யும் பரேலவிகள் தங்களுடைய வணக்கத் தலங்களாகிய தர்ஹாக்களில் யானையைக் கட்டி வைத்து தீனி போடுகின்றனர். ஆண்களும் பெண்களும் கலர்ஃபுல்லாகக் காட்சி தந்து ஒருவரை ஒருவர் பார்த்து ரசிப்பதற்காவும், சினிமாப் பாட்டுப் பாடி பக்தர்களைக் குஷிப்படுத்தவும், கோயில்களில் சிலைகளுக்காக பாடப்படும் பஜனைகளை தங்களது கோயில்களாகிய தர்ஹாக்களில் பாடுவதற்காவும் இன்னும் மார்க்கத்திற்கு புறம்பான பல அனாச்சாரங்களை அரங்கேற்றுவதற்காகவும் கந்தூரி விழா என்று ஏற்பாடு செய்வர்.
இதற்குக் கூட்டம் சேர்ப்பதற்காக யானையைத் தெருத் தெருவாக அழைத்து வருவர். இந்த யானையைப் பார்க்கும் போது தான் மக்களுக்கு அவுலியாவின் ஞாபகம் வந்து இவர்களின் வணக்கத்தலங்களாகிய தர்ஹாவில் நடக்கும் லீலைகளில் கலந்து கொள்வார்கள் என்பதற்காவே இவ்வாறு செய்கிறோம் என பரேலவிகள் கூறுகின்றனர்.
நபியவர்கள் இவ்வாறு தான் கப்ரு ஸியாரத் செய்தார்களா? என்றெல்லாம் இவர்களிடம் கேள்வி கேட்கக் கூடாது. ஏனென்றால் இவர்கள் பரேலவி மதத்தினர்.
இந்தப் பரேலவி மதத்தினர், யானை தனது தும்பிக்கையால் தண்ணீரை உறிஞ்சி ஒரு பக்தனின் மீது சிந்தினால் அவன் பாக்கியம் பெற்றவனாகி விடுவான் என நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த யானை தண்ணீரை உறிஞ்சி அடிப்பதின் மூலமே தர்ஹாக்களுக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் வருமானம் வருகிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
மேலும் இந்தப் பரேலவி மதத்தினர் யானை ஊர்வலம் வரும் போது அதன் முதுகிலிருக்கும் கொடிகளின் பூக்களைப் பெறுவதையும், தங்கள் குழந்தைகளை அதன் முதுகில் ஏற்றி இறக்குவதையும் பெரும்பாக்கியமாகவே கருதுகின்றனர்.
இவர்கள் யானையைக் கடவுளாகக் கருதுவதாலேயே இது போன்ற வணக்கங்களைத் தங்களுடைய யானைக் கடவுளுக்குச் செய்கின்றனர் என்பதை உண்மையான முஸ்லிம்கள் நன்றாக விளங்கியே வைத்துள்ளனர்.
சந்தனம், கொடி, நெருப்பை வணங்கும் பரேலவிகள்
பரேலவி மதத்தினர் தங்களது வணக்கத்தலங்களாகிய தர்ஹாக்களில் அவர்கள் கடவுளாக வணங்கும் கப்ருகளுக்கு சந்தனத்தைப் பூசுகின்றனர். முஸ்லிம் அல்லாதவர்கள் கற்சிலைகளுக்குப் பாலை ஊற்றி அபிஷேகம் செய்கின்றனர். அது போன்று கற்சிலையை விடக் கீழ் நிலையில் உள்ள கப்ருகளுக்கு சந்தன அபிஷேகம் செய்தல், சந்தனம் பூசுதல் என்பது இணை கற்பிக்கின்ற காரியம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
அது போன்ற கப்ருகளில் பூசப்பட்ட சந்தனம் தங்களுக்கு பரக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் அதனைக் கழுத்துகளில் பூசிக் கொள்கின்றனர். இறைவனல்லாத ஒரு பொருள் இறைவனைப் போன்று நமக்கு நன்மை ஏற்படுத்தும் என நம்பிக்கை வைப்பதால் இதுவும் இணை கற்பிக்கின்ற காரியமே!
அது போன்று தர்ஹாக்களில் விளக்குகளை ஏற்றி வைத்து அந்த நெருப்பைத் தொட்டு முத்தமிடுகின்றனர். அதற்கு விளக்கு ராத்திரி என்றும் பெயர் வைத்துள்ளனர். இவ்வாறு செய்வதால் துன்பங்கள் நீங்கும் என நம்பிக்கை வைத்துள்ளனர். இதே நம்பிக்கையில் தான் கொடிக்களைகளையும் தொட்டு முத்தமிடுகின்றனர். நமக்கு துன்பத்தையும், இன்பத்தையும் ஏற்படுத்தக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டும் தான்.
وَاِنْ يَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ ۚ وَاِنْ يُّرِدْكَ بِخَيْرٍ فَلَا رَآدَّ لِفَضْلِهٖ ؕ يُصِيْبُ بِهٖ مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ ؕ وَهُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
சந்தனமும், நெருப்பும், கொடிகளும் இறைவனைப் போன்று இன்ப துன்பங்களைத் தரக் கூடியவை என பரேலவி மதத்தினர் நம்பிக்கை வைத்திருப்பதால் கொடி ஊர்வலமும், தர்ஹாக்களில் விளக்கேற்றுவதும் இணை கற்பிக்கின்ற காரியங்கள் தாம் என்பதில் சந்தேகமில்லை.
பஜனை பாடுவதும் உண்டியல் வைப்பதும் இணை கற்பித்தலே!
கப்ரை வணங்கும் பரேலவி மதத்தினர் தங்களுடைய வணக்கத் தலங்களிலே தங்களுடைய கடவுளாகிய கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவரைப் புகழ்ந்து பஜனைகளைப் பாடுகின்றனர். இந்த பஜனைகள் அனைத்துமே இறைவனுடைய பண்புகளை இறைவனின் அடிமைகளுக்கு வழங்கி அவர்களைக் கடவுளாக வழிபடக்கூடிய பாடல்களாகவே அமைந்துள்ளன.
இதற்கு ஒரு சிறிய உதாரணமாக அனைவரும் அறிந்த யாகுத்பா என்ற பஜனையில் இடம் பெற்ற ஒரு கருத்தைக் கூறலாம். அதாவது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து பாக்தாத்தில் மரணமடைந்த முஹைதீன் அவர்களை, யார், எங்கிருந்து, எந்த மொழியில், எந்த நேரத்திலும் “முஹைதீனே! வந்து விடுங்கள்!’ என்று ஆயிரம் தடவை அழைத்தால் அவர் கண் முன்னே காட்சி தருவார் என்று பாடுகின்றனர்.
நபிமார்களின் உடல்களைத் தவிர மற்றவர்களின் உடல்களை மண் சாப்பிட்டு விடும் என்று நபியவர்கள் கூறியுள்ளனர். ஆனால் மண்ணோடு மண்ணாகி விட்ட முஹைதீன் என்பவர் இறைவனைப் போன்று ஆற்றலுள்ளவர் என பரேலவி மதத்தினர் பஜனை பாடுவதாலும் இவர்களுடைய பஜனைகள் அனைத்தும் இவ்வாறு அமைந்துள்ளதாலும், இந்தப் பஜனைகளை இறந்தவர் கேட்கிறார் என்ற நம்பிக்கை வைத்திருப்பதாலும் பஜனைகள் பாடுவது இணை கற்பிக்கின்ற காரியமே!
இது போன்றே நாம் எந்த ஒன்றைச் செலவு செய்தாலும் இறைவனுக்காக மட்டுமே செலவிட வேண்டும். இறைவனைத் தவிர மற்றவர்களின் திருப்திக்காகவோ அவர்கள் தனக்கு அருள்புரிய வேண்டும் என்ற நம்பிக்கையிலோ ஒருவன் மக்களுக்கு வாரியிறைத்தாலும் உண்டியலில் போட்டாலும் அக்காரியம் இணை கற்பிக்கின்ற காரியமே!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக அல்லாஹ் அவனுக்காக மனத்தூய்மையுடனும் அவனுடைய திருமுகத்தை நாடியும் செய்கின்ற செயலைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
நூல்: (நஸாயீ: 3140) (3089)
ஆனால் பரேலவி மதத்தினர் தங்களுடைய கப்ருக் கடவுளின் திருப்திக்காகவும், அருளுக்காகவும் உண்டியல் வைத்து வசூலித்து கொள்ளையடிப்பதால் தர்ஹாக்களில் வைக்கப்பட்ட உண்டியல்களில் காசு போடுவதும் இணை கற்பிக்கின்ற காரியமாகும்.
பரேலவி மதத்தினர் கப்ரை வணங்குகிறார்கள் என்பதற்கு இன்னும் பல சான்றுகள் உள்ளன. யூத, நஸராக்களின் கலாச்சாரமாகிய இந்தச் சமாதி வழிபாட்டை ஒழிப்பதற்காகத் தான் நபியவர்கள் பின்வரும் எச்சரிக்கைகளைக் கூறியுள்ளார்கள்.
கப்ரைக் கட்டுவது, பூசுவது கூடாது!
நபி (ஸல்) அவர்கள் கப்ருகளை பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 1765) (1610)
கப்ருகளைத் தரைமட்டமாக்குதல்
அபுல்ஹய்யாஜ் அல்அஸதி அறிவிக்கிறார்கள்:
அலீ (ரலி) அவர்கள் என்னிடம், “நபி (ஸல்) அவர்கள் எந்தப் பணிக்காக அனுப்பினார்களோ அதே பணிக்கு உன்னை அனுப்புகிறேன். எந்தச் சிலையையும் அதனை அழிக்காமலும் எந்தக் கப்ரையும் அதனைத் தரைமட்டம் ஆக்காமலும் விட்டு விடாதே!” என்று கூறினார்கள்.
நூல்: (முஸ்லிம்: 1764) (1609)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுடைய கப்ருகளைத் தரையோடு மட்டமாக ஆக்குங்கள்.
அறிவிப்பவர்: ஃபழாலா பின் உபைத்(ரலி)
நூல்: (அஹ்மத்: 23934) (22834)
அல்லாஹ்வின் சாபம்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூத, நஸராக்களை அல்லாஹ் சபித்து விட்டான். (ஏனென்றால்) தங்களுடைய நபிமார்களின் கப்ருகளை தர்ஹாக்களாக எடுத்துக் கொண்டனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: (புகாரி: 1330)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் சமாதிகளை தர்ஹாக்களாக ஆக்கிக் கொண்டார்கள். நான் அதை விட்டும் உங்களைத் தடுக்கிறேன்.
அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 925) (827)
படைப்பினங்களிலேயே மோசமானவர்கள்
அறிந்து கொள்ளுங்கள், மக்களிலேயே மோசமானவர்கள் தங்களின் நபிமார்களின் கப்ருகளை தர்ஹாக்களாக ஆக்கிக் கொண்டவர்கள் தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஉபைதா (ரலி)
நூல்: (அஹ்மத்: 1691) (1599)
எனவே சாபத்தைத் தரும் இந்தச் சமாதி வழிபாட்டைப் புறக்கணிப்போம். சத்தியத்தை நோக்கி அணி திரள்வோம்.
அப்துந்நாஸிர்