103) கப்ருகளைக் கட்டக் கூடாது
ஒருவர் இறந்து விட்டால் அவர் எவ்வளவு பெரிய மகான் என்று நாம் கருதினாலும் அவரது அடக்கத் தலத்தின் மேல் கட்டுமானம் எழுப்பக் கூடாது..
இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
நபியின் மனைவியரான உம்மு ஹபீபா (ரலி), உம்மு ஸலமா (ரலி) ஆகிய இருவரும் அபீஸீனியாவில் தாங்கள் பார்த்த ஆலயத்தைப் பற்றியும், அதில் உள்ள உருவங்களைப் பற்றியும் நபிகள் நாயகத்திடம் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேலே வழிபாட்டுத் தலத்தை கட்டிக் கொள்கிறார்கள். அவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுகிறார்கள். கியாமத் நாளில் இவர்கள் தான் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
(புகாரி: 427, 34, 1341, 3850, 3873)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மரணம் நெருங்கிய போது தமது போர்வையை முகத்தில் போட்டுக் கொண்டார்கள். காய்ச்சல் தணிந்ததும் முகத்தைத் திறந்தார்கள். இந்த நிலையில் இருக்கும் போது ‘யஹூதிகள் மீதும் நஸாராக்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உள்ளது. (ஏனெனில்) அவர்கள் தங்களது நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கி விட்டனர்’ என்று கூறினார்கள். அவர்களின் செயலை எச்சரிக்கும் வகையில் இவ்வாறு கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி)
(புகாரி: 436, 3454, 4444, 5816)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணத்தைத் தழுவிக் கொண்ட அந்த நோயின் போது ‘யஹூதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்கள் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக (தர்காவாக) ஆக்கிக் கொண்டனர்’ என்று குறிப்பிட்டார்கள். இவ்வாறு எச்சரிக்கை செய்து இருக்காவிட்டால் அவர்களின் கப்ரையும் உயர்த்தி இருப்பார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
‘உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் தங்கள் நபிமார்கள் மற்றும் நல்லோரின் கப்ருகளை வழிபாட்டுத் தலங்களாக (தர்காக்களாக) ஆக்கி விட்டனர். எச்சரிக்கை! கப்ருகளை தர்காக்களாக ஆக்காதீர்கள். இதை விட்டு உங்களை நான் தடுக்கிறேன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுன்துப் ((ரலி)
நல்லடியார்கள் ஆனாலும் அவர்களின் அடக்கத் தலங்களைக் கட்டுவதையும், அதன் மேல் ஆலயம் எழுப்புவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவு கடுமையாகக் கண்டித்துள்ளனர் என்பதை மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து அறியலாம்.
நல்லடியார்களில் நபிமார்கள் தான் முதலிடத்தில் உள்ளவர்கள். மற்றவர்களை நல்லடியார்கள் என்று நாம் திட்டவட்டமாகக் கூற முடியாது. நம்மால் நல்லடியார்கள் எனக் கருதப்பட்டவர்கள் மறுமையில் கெட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நபிமார்கள் நல்லடியார்கள் தான் என்பதில் ஐயமில்லை.
நபிமார்களுக்குக் கூட தர்காக்கள் கட்டக் கூடாது என்றால் மற்றவர்களுக்கு எப்படிக் கட்டலாம்?
மேலும் நமது முன்னோர்கள் அவ்வாறு கட்டிச் சென்றிருப்பார்களானால் நமக்குச் சக்தியும், அதிகாரமும் இருந்தால் அவற்றை இடித்துத் தள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை எதற்கு அனுப்பினார்களோ அதற்காக உன்னை நான் அனுப்புகிறேன். எந்தச் சிலைகளையும் தகர்க்காது விடாதே! உயர்த்தப்பட்ட எந்தச் சமாதியையும் தரை மட்டமாக்காமல் விடாதே!’ என்று அலீ (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல் ஹய்யாஜ்
இவ்வளவு தெளிவான கட்டளைக்குப் பின்னரும் போலி மார்க்க அறிஞர்கள் இந்த நபிமொழிக்குத் தவறான பொருள் கூறி மக்களை வழி கெடுத்து வருவதையும் நாம் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
மேற்கண்ட நபிமொழியில் ‘கப்ரைத் தரை மட்டமாக்காமல் விடாதே’ என்று கூறப்படவில்லை. மாறாக ‘கப்ரைச் சீர்படுத்து’ என்று தான் உள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.
‘தரை மட்டமாக்கு’ என்று நாம் பொருள் கொண்ட இடத்தில் ஸவ்வைத்தஹு என்ற மூலச் சொல் இடம் பெற்றுள்ளது. ஸவ்வா என்பதிலிருந்து இச்சொல் பிறந்துள்ளது. இச்சொல்லின் நேரடிப் பொருள் ‘சீர்படுத்துதல்’ என்பது தான் எனவும் வாதிடுகின்றனர்.
கப்ரை அழகான முறையில் கட்ட வேண்டும் என்பதைத் தான் மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது என்று சாதிக்கின்றனர்.
வானத்தை ஒழுங்கு படுத்தினான் என்று பல வசனங்களில் இதே ஸவ்வா என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படியானால் வானத்தைத் தரை மட்டமாக்கினான் என்று பொருள் கொள்வீர்களா? என்று நம்மைப் பார்த்துக் கேட்கின்றனர்.
ஸவ்வா என்பதன் பொருள் சீர்படுத்துவது தான். ஒவ்வொன்றையும் சீர்படுத்தும் முறைகள் வெவ்வேறாகவுள்ளதால் இடத்திற்கு ஏற்ப அதற்குப் பொருள் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையை இவர்கள் அறியாததே இந்த விளக்கத்துக்குக் காரணம்.
கிழிந்த துணியைச் சீராக்கு என்று கூறினால் அதைத் தைக்க வேண்டும் என்று பொருள்.
அழுக்குத் துணியைச் சீராக்கு என்றால் அதைக் கழுவு எனப் பொருள்.
அளவுக்குப் பொருந்தாமல் பெரிதாகத் தைக்கப்பட்ட ஆடையைச் சீராக்கு என்றால் அதிகப்படியானதை வெட்டிக் குறைத்தல் என்பது பொருள்.
இச்சொல்லுடன் சேர்க்கப்படும் அடைமொழிக்கேற்ப பொருளும் மாறும். கிழிந்த, அழுக்கான, பெரியதாக என்பன போன்ற அடை மொழிகள் சேர்க்கப்படும் போது அந்த அம்சத்தைச் சரி செய்ய வேண்டும் என்ற பொருளைத் தரும்.
உயரமாக்கப்பட்ட எந்தக் கப்ரையும்… என்ற சொற்றொடரில் உயரமாக்கப்பட்ட என்ற அடைமொழி காரணமாக உயரத்தை நீக்குவது தான், அதாவது இடிப்பது தான் இங்கே சரி செய்வது எனக் கூறப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுன் நபவி கட்டிய இடத்தில் சில குட்டிச் சுவர்கள் இருந்தன. அதைச் சரி செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர். (புகாரி: 410, 1735, 3963)
இந்த இடத்திலும் ஸவ்வா என்ற சொல்லே இடம் பெற்றுள்ளது.
குட்டிச் சுவருக்கு வெள்ளை அடித்து அழகு படுத்த வேண்டும் என்று நபித்தோழர்கள் பொருள் கொண்டிருந்தால் மஸ்ஜிதுன்னபவிக்குள் இன்று வரை அந்தக் குட்டிச் சுவர்கள் நின்று கொண்டிருக்க வேண்டும். ஆனால் அந்தக் குட்டிச் சுவர்கள் இடிக்கப்பட்டு சரிசமமாக ஆக்கப்பட்டன.
‘உயரமாக்கப்பட்ட எந்தக் கப்ரையும் சரிப்படுத்தாமல் விடாதே!’ என்பதற்கு ‘தரை மட்டமாக்காமல் விடாதே!’ என்பதைத் தவிர வேறு பொருள் கொள்ள முடியாது. மேலும் கப்ரின் மேல் வெளிப் பொருள்களால் அதிகப்படுத்தக் கூடாது என்பதை முன்னரே நாம் எடுத்துக் காட்டியிருக்கிறோம்.
அதன் அடிப்படையில் சிந்திக்கும் போது கப்ரிலிருந்து எடுக்கப்பட்ட மண் நாளடைவில் படிந்து தரை மட்டமாகி விடும். அதற்கு மேல் இருப்பது அனைத்தும் அதிகமாக்கப்பட்டவை தான். அதிகமாக்கப்பட்டதை அப்புறப்படுத்துவது தான் மேற்கண்ட கட்டளையைச் செயல்படுத்துவதாக அமையும்.
நபிகள் நாயகத்தின் கப்ர் மீது குப்பா எழுப்பப்பட்டதையும் இவர்கள் ஆதாரமாகக் காட்டுவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்த ஒன்றை மற்றவர்கள் செய்தால் அது எப்படி ஆதாரமாகும் என்பதைக் கூட இவர்கள் விளங்க மறுக்கின்றனர்..
ஸுஃப்யான் அத்தம்மார் என்பவர் நபிகள் நாயகத்தின் கப்ரை உயரமாகப் பார்த்தார் என்று புகாரி (1302) செய்தியையும் எடுத்துக் காட்டுகின்றனர்.
ஸுஃப்யான் அத்தம்மார் என்பவர் நபித்தோழர் அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகத் தடை செய்த ஒன்றை இது போன்ற செய்திகளால் முறியடிப்பதில் இவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.
நபிகள் நாயகத்தின் பெயராலேயே அவர்களின் கட்டளையை மீறுவதை ஷைத்தான் இவர்களுக்கு அழகாக்கிக் காட்டியுள்ளான்.