102) கப்ரின் மேல் எழுதக் கூடாது

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

அடக்கத் தலத்தின் மேல் மீஸான் என்ற பெயரில் கல்வெட்டை ஊன்றி வைக்கும் வழக்கம் சில பகுதிகளில் உள்ளது. சில ஊர்களில் இதற்காகக் கூடுதல் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு வசதி படைத்தவர்கள் மட்டும் இவ்வாறு கல்வெட்டு வைக்க அனுமதிக்கப்படுகின்றனர். சமரசம் உலாவும் அடக்கத் தலத்திலும் இறந்த பிறகு கூட அநியாயமான இந்தப் பாரபட்சம் காட்டப்பட்டு வருகிறது.

கப்ருகள் மீது எழுதுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

(அபூதாவூத்: 2807)

மேலே சுட்டிக் காட்டிய ஹதீஸில் கப்ரின் மேல் எழுதுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர். இத்தடையில் மேற்கண்ட செயலும் அடங்கும் என்பதில் ஐயமும் இல்லை.

மக்கள் தொகை அதிகரித்து அடக்கத்தலம் சுருங்கிவிட்ட இன்றைய காலத்தில் ஒரு இடத்தில் ஒருவர் அடக்கம் செய்யப்பட்டால் குறிப்பிட்ட காலத்துக்குப் பின் அதே இடத்தில் மற்றொருவரை அடக்கினால் தான் நெருக்கடி குறையும். வசதி படைத்தவர்கள் அடக்கத்தலத்திலும் தங்களுக்கென ஒரு இடத்தை நிரந்தரமாகச் சொந்தமாக்கிக் கொண்டால் எதிர் காலத்தில் அடக்கம் செய்ய அறவே இடம் இல்லை என்ற நிலைமை ஏற்பட்டு விடும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.