3) கனவுகள் மூன்று வகை
‘கனவுகள் மூன்று வகைப்படும். நல்ல கனவுகள் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்செய்தியாகும். மற்றொரு கனவு ஷைத்தான் புறத்திலிருந்து கவலையை ஏற்படுத்துகின்ற கனவாகும். மூன்றாவது தன் உள்ளத்திலிருந்து மனிதன் காண்கின்ற கனவாகும்‘ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 4200)
நமக்கு எதிர்காலத்தில் கிடைக்கவுள்ள பொருட்செல்வம், மழலைச் செல்வம், பட்டம், பதவிகள் போன்றவற்றை முன்கூட்டியே கனவின் மூலம் இறைவன் அறிவிப்பான். இது முதல் வகை கனவு. அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்செய்தி என்பதன் கருத்து இது தான். கவலையை ஏற்படுத்தி வணக்க வழிபாடுகளில் உள்ள ஈடுபாட்டைக் குறைப்பதற்காகவும், போலிகளிடம் விளக்கம் கேட்டு இறை நம்பிக்கைக்கு ஊறு விளைவிப்பதற்காகவும் ஷைத்தான் நடத்தும் நாடகம் இன்னொரு வகையான கனவாகும்.
நமது ஆழ் மனதில் பதிந்துள்ள எண்ணங்களும் கனவுகளாக வெளிப்படுகின்றன. இதில் மகிழ்ச்சியடையவோ கவலைப்படவோ ஒன்றுமில்லை. இதற்கு எந்த அர்த்தமுமில்லை. இது மூன்றாவது வகையாகும். முதல் வகையான நல்ல கனவு பற்றி குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் வழியில் ஆராய்வோம்.
‘நல்ல கனவுகள் நுபுவ்வத்தின் (இறைவனிடமிருந்து தூதர்களுக்கு கிடைக்கும் தூதுச் செய்தியின்) நாற்பத்தி ஆறு பங்கில் ஒரு பங்காகும்’ என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)
நூல்: (புகாரி: 6987, 6988, 6989, 6983, 6994)
சில அறிவிப்புக்களில் ’45ல் ஒரு பங்கு’ என்று கூறப்பட்டுள்ளது. (முஸ்லிம்: 4200)
வேறு சில அறிவிப்புகளில் ’70ல் ஒரு பங்கு’ என்று கூறப்பட்டுள்ளது. (முஸ்லிம்: 4205)
நல்ல கனவுகள் நுபுவ்வத்தில் 45ல் ஒரு பங்கு, அல்லது 46ல் ஒரு பங்கு, அல்லது 70ல் ஒரு பங்கு என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதைச் சரியான முறையில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இறைவனுடைய தூதர்களான நபிமார்களுக்கு நான்கு வழிகளில் இறைச் செய்திகள் கிடைத்தன.
- நேரடியாக இறைவன் தனது தூதர்களிடம் பேசுதல்
- வானவரை அனுப்பி அவர் வழியாக தனது செய்திகளைக் கூறி அனுப்புதல்
- தான் சொல்ல நினைக்கும் செய்தியைத் தனது தூதரின் உள்ளத்தில் உதிக்கச் செய்தல்
- கூற வேண்டிய செய்திகளைக் கனவின் வழியாகக் காட்டுதல்
முதல் மூன்று வழிகளில் இறைச் செய்தி வரும் என்பதை (அல்குர்ஆன்: 42:51) ➚ வசனத்திலிருந்து அறியலாம்.
வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ, அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன்: 42:51) ➚
இந்த நான்கு வழிகளில் முதலிரண்டு வழிகள் இறைத் தூதர்களுக்கு மட்டும் உரியது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதித் தூதர் என்பதால் அவர்களுக்குப் பின் யாருக்கும் முதலிரண்டு வகைகளில் செய்திகள் வராது. (அல்குர்ஆன்: 4:79, 4:170, 7:158, 9:33, 10:57, 10:108, 14:52, 21:107, 22:49, 25:1, 33:40, 34:28, 62:3) ➚ ஆகிய வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி என்பதற்கு சான்றாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபியும் ரஸூலும் வர மாட்டார்கள் என்பதற்கு நபிமொழிகளிலும் சான்றுகள் உள்ளன.
‘இஸ்ரவேல் சமுதாயத்தினரை அவர்களின் நபிமார்கள் வழிநடத்திச் சென்றனர். ஒரு நபி மரணித்தவுடன் இன்னொரு நபி அவருக்குப் பகரமாக வருவார். நிச்சயமாக எனக்குப் பின் எந்த நபியும் இல்லை. கலீஃபாக்கள் தான் தோன்றுவார்கள். அவர்கள் அதிகமாகவும் இருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: (புகாரி: 3455)
‘தூதுத்துவமும், நபித்துவமும் முற்றுப் பெற்றுவிட்டன. எனவே எனக்குப் பின் எந்த நபியும் இல்லை. எந்த ரஸூலும் இல்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். இது மக்களுக்கு கவலையளிப்பதாக இருந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘எனினும் நற்செய்தி கூறுபவை உண்டு’ என்றார்கள். நற்செய்தி கூறுபவை என்றால் என்ன என்று நபித்தோழர்கள் கேட்ட போது ‘முஸ்லிம் காணுகின்ற கனவாகும்’ என்று விளக்கினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: (அஹ்மத்: 13322)
மூன்றாவது வகையான உள்ளுனர்வை ஏற்படுத்துதல் அவ்வப்போது இறைத் தூதர்கள் அல்லாத மனிதர்களிடமும் ஏற்படலாம்.
ஈஸா நபியின் சீடர்களுக்கு இத்தகைய வஹீ வந்தததாக (அல்குர்ஆன்: 5:111) ➚வசனம் கூறுகிறது.
என்னையும், என் தூதரையும் நம்புங்கள்!’ என்று (ஈஸாவின்) சீடர்களுக்கு நான் அறிவித்த போது ‘நம்பிக்கை கொண்டோம்! நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீரே சாட்சியாக இருப்பீராக!’ என அவர்கள் கூறினர்.
தேனீக்களுக்கு இத்தகைய வஹீயை அனுப்பியதாக (அல்குர்ஆன்: 16:68) ➚ வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
‘மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கிற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.
மூஸா நபியின் தாயாருக்கு இத்தகைய வஹீயை அனுப்பியதாக (அல்குர்ஆன்: 20:38) ➚ வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
அறிவிக்கப்பட வேண்டியதை உமது தாயாருக்கு நாம் அறிவித்ததை எண்ணிப் பார்ப்பீராக!
தான் அறிவித்த செய்தியைப் பற்றி இவ்வசனங்களில் குறிப்பிடும் போது வஹீ என்ற சொல்லையே இறைவன் பயன்டுத்தியுள்ளான்.
இல்லாத செய்திகளை உள்ளுணர்வு ஏற்படுத்துவதன் மூலம் இறைவன் சிலருக்கு சில நேரங்களில் அறிவிப்பான் என்பதை இவ்வசனங்களின் வாயிலாக அறியலாம். இதுபோல் கனவுகள் மூலம் இறைச் செய்தி மனிதர்களுக்குக் கிடைக்கும் வாசலும் முழுமையாக அடைக்கப்படவில்லை. மேலே நாம் எடுத்துக் காட்டிய நபிமொழி இதற்குச் சான்றாக அமைந்துள்ளது.
உள்ளுணர்வு மூலம் இறைச் செய்தி கிடைத்தல், கனவு மூலம் இறைச் செய்தி கிடைத்தல் என்பது இறைத்தூதர்களுக்கு வருவது போல் மற்றவர்களுக்கும் வரும் என நாம் நினைக்கக் கூடாது. ஏனெனில் இறைத் தூதர்களுக்குக் கனவின் மூலம் கொள்கை விளக்கங்கள், சட்ட திட்டங்கள் கூட வரலாம். மேலும் உள்ளுணர்வின் மூலமும் சட்டங்களும் அவற்றுக்கான விளக்கமும் இறைத் தூதர்களுக்கு வரலாம். இவ்வாறு வந்துள்ளன.
இது போன்ற இறைச் செய்திகள் இறைத் தூதர்களைத் தவிர மற்றவர்களுக்கு எந்த வகையிலும் வந்து சேராது. ஏனெனில் சட்டதிட்டங்கள், கொள்கை விளக்கங்கள் யாவும் நபிகள் நாயகம் (ஸல்) வாழும் காலத்திலேயே இறைவனால் முழுமைப்படுத்தப்பட்டு விட்டன.
‘இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை நான் முழுமைப்படுத்தி விட்டேன்; எனது அருளை நிறைவாக்கி விட்டேன்; இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக நான் பொருந்திக் கொண்டேன்’ என்று இறைவன் கூறுகிறான்.
இஸ்லாம் மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது என்றால் இதன் பின்னர் எந்தக் கொள்கை விளக்கமும், சட்டதிட்டமும் வழிபாட்டு முறைகளும் இறைவன் புறத்திலிருந்து வராது என்பது பொருள். மார்க்கம் என்ற பெயரால் கூற வேண்டிய அனைத்தையும் ஒன்று விடாமல் இறைவன் கூறி விட்டான் என்பது பொருள்.
கனவின் மூலமோ, உள்ளுணர்வின் மூலமோ கிடைக்கும் செய்திகளில் ‘இத்தனை ரக்அத் தொழு! இந்த நாளில் நோன்பு வை! இந்த உண்டியலில் காணிக்கை செலுத்து’ என்பன போன்ற செய்திகள் அறவே இருக்காது. இவற்றையெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) வழியாக ஏற்கனவே இறைவன் கூறிவிட்டான். அவற்றை விளக்க வேண்டிய வகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நமக்கு விளக்கி விட்டனர். அவை இறைவனால் பாதுகாக்கப்பட்டு நம்மையும் வந்து அடைந்து விட்டன.
‘இதைச் செய்யுமாறு தனக்குக் கனவில் செய்தி வந்தது!’ என்று ஒருவர் நம்பினால் அவர் நபிகள் நாயகம் (ஸல்) வழியாக இஸ்லாம் முழுமைப்படுத்தப்படவில்லை என்று கருதியவராவார். அவர் தனது கனவில் இது போல் கண்டாலும் அது ஷைத்தானின் சேட்டை என்று தான் நம்ப வேண்டுமே தவிர இறைவன் கனவு மூலம் தனக்குக் கட்டளையிட்டான் என்று நம்பக் கூடாது.
கனவின் மூலம் கொள்கை வழிகாட்டுதலோ, சட்ட விளக்கமோ வராது என்றால் ‘நல்ல கனவுகள் நுபுவ்வத்தின் நாற்பத்தி ஆறில் ஒரு பங்கு’ என நபிகள் நாயகம் (ஸல்) கூறியதன் பொருள் என்ன?
இதையும் விளக்கமாக நாம் அறிந்து கொள்ள வேண்டும். இறைவனிடமிருந்து இறைத்தூதர்களுக்கு வரும் செய்திகள் இரண்டு அம்சங்களைக் கொண்டவையாக இருந்தன. இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடு, வணக்க வழிபாடு மற்றும் சட்ட திட்டங்கள் பற்றிய செய்தி முதல் வகை.
எதிர்காலத்தில் நடக்கவுள்ள நிகழ்வுகளை முன் கூட்டியே அறிவித்துக் கொடுத்தல் இரண்டாவது வகை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டதன் மூலம் முதல் வகையான செய்திகளின் வருகை நிறுத்தப்பட்டு விட்டது. உலகம் உள்ளளவும் யாருக்கும் சட்டதிட்டங்களைப் பற்றிய எந்தச் செய்தியும் வராது.
ஆனால் இரண்டாம் வகையான இறைச் செய்தியில் மார்க்கத்துடன் தொடர்புடைய முன்னறிவிப்புக்கள், மார்க்கத்துடன் தொடர்பில்லாத தனிப்பட்ட மனிதனுக்கு ஏற்படுவதை முன்கூட்டியே அறிவித்தல் என இரு வகைகள் உள்ளன. இந்த இரு வகை முன் அறிவிப்புக்களில் மார்க்கம் தொடர்பான முன் அறிவிப்புக்களின் வருகையும் நிறுத்தப்பட்டு விட்டது. மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது என்ற வசனமே இதற்கும் போதிய ஆதாரமாகும்.
உலகம் அழிவதற்கு முன் ஏற்படவுள்ள மாறுதல்கள், யுக முடிவு நாளின் அடையாளங்கள் போன்ற செய்திகள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழும் காலத்திலேயே தெரிவிக்கப்பட்டு நம்மையும் வந்து அடைந்து விட்டன.
ஏழையாக இருப்பவன் நாளை செல்வந்தனாகலாம். பல வருடங்களாக குழந்தை இல்லாத ஒருவனுக்கு விரைவில் குழந்தை பிறக்க இருக்கலாம். இது போன்ற செய்திகள் மார்க்கத்துடன் தொடர்பில்லாதவை. தனிப்பட்ட மனிதன் சம்மந்தப்பட்டவை. இத்தகைய எதிர்கால நிகழ்வுகளில் சிலவற்றை இறைவன் யாருக்கு நாடுகிறானோ அவருக்குக் கனவின் மூலம் காட்டுவான். இந்த வாசல் அடைக்கப்படவில்லை. ‘நல்ல கனவுகள் நுபுவ்வத்தின் நாற்பத்தி ஆறில் ஒரு பங்கு’ என்ற நபிமொழியின் கருத்து இது தான்.
இதை நாம் கற்பனையாகக் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே இந்த விளக்கத்தை அளித்துள்ளார்கள்.
‘நற்செய்தி கூறுவதைத் தவிர நுபுவ்வத்தில் (இறைவனிடமிருந்து மனிதனுக்கு வரும் செய்தியில்) எதுவும் மிச்சம் வைக்கப்படவில்லை’ என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ‘நற்செய்தி கூறுபவை யாவை?’ என நபித்தோழர்கள் கேட்ட போது, ‘நல்ல கனவுகள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 6990)
‘நபித்துவமும், தூதுத்துவமும் முற்றுப் பெற்று விட்டன. எனவே எனக்குப் பின் எந்த நபியும் இல்லை. எந்த ரஸூலும் (தூதரும்) இல்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். இது மக்களுக்குக் கவலையளிப்பதாக இருந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘எனினும் நற்செய்தி கூறுபவை உள்ளன’ என்றார்கள். நற்செய்தி கூறுபவை என்றால் என்ன என்று நபித்தோழர்கள் கேட்ட போது ‘முஸ்லிம் காணும் கனவாகும். இது நபித்துவத்தின் ஒரு பகுதியாகும்’ என்று விடையளித்தனர்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: (அஹ்மத்: 13322)
இறைவனிடமிருந்து மனிதனுக்குக் கிடைக்கும் செய்திகள் (நுபுவ்வத்) இரு வகைகள் உள்ளன என்ற கருத்தும், அதில் நற்செய்தி கூறுபவை தவிர மற்றவை நிறுத்தப்பட்டு விட்டன என்ற கருத்தும், அவை கனவுகள் வழியாக மனிதனை வந்தடையும் என்ற கருத்தும் இந்த நபிமொழிக்குள் அடங்கியிருப்பதை அறிந்து கொள்ளலாம்.
இதைப் பற்றி இன்னும் விளக்கமாக அறிந்து கொண்டால் கனவுகளால் வழி தவறுவதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.
‘இந்த இரவில் இத்தனை ரக்அத்கள் தொழு!’ என்று ஒருவர் கூறுவது போல் ஒருவர் காண்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இது நிச்சயம் இறைவன் புறத்திலிருந்து வந்த கனவல்ல. ஏனெனில் இந்த நாளில் இவ்வளவு தொழ வேண்டும் என்பதையெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) வழியாக இறைவன் நமக்குக் காட்டித் தந்து விட்டான். கனவின் மூலம் காட்டித் தரும் வகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறை ஏதும் வைக்கவில்லை.
மேலும் இது போன்ற செய்திகள் இறைவன் புறத்திலிருந்து வந்தவை என்றால் அனைத்து முஸ்லிம்களின் கனவிலும் இது போல் கூறப்பட வேண்டும். ஏனெனில் வணக்க வழிபாடுகளில் அனைவரும் சமமானவர்களே. மார்க்கத்தில் உள்ள நல்ல செயல் ஒன்றை ஒரே ஒருவருக்கு மட்டும் காட்டிவிட்டு மற்றவர்களுக்கு அதைக் காட்டாமல் இருப்பது இறைவனின் நீதிக்கு எதிரானதாகும்.
‘இந்த இடத்தில் ஒரு நல்லடியார் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்; அவருக்காக அந்த இடத்தில் ஒரு தர்ஹாவைக் கட்டு’ என்று ஒருவரது கனவில் கூறப்பட்டால் அதுவும் ஷைத்தானிடமிருந்து வந்த கனவு தான்.
ஏனெனில் இறந்தவர்களின் அடக்கத்தலங்களில் கட்டடங்கள் கட்டுவதையும் வழிபாட்டுத் தலங்கள் எழுப்புவதையும், சமாதிகள் பூசப்படுவதையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்து விட்டனர். எழுப்பப்பட்ட கட்டடங்களை இடித்துத் தகர்க்கும் படியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் இறைவன் ஏற்கனவே நமக்கு அறிவித்து விட்டான்.
அந்த அறிவிப்புக்கு எதிரான ஒரு செய்தியை இறைவன் கூற மாட்டான் என்பதால் இது ஷைத்தானின் வேலை தான் என்று கண்டு கொள்ளலாம்.
அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவைகளை அனுமதிப்பது போன்றவை
அல்லது அனுமதித்தவைகளைத் தடுப்பது போன்றவை
வணக்க வழிபாடுகளைச் சொல்லித் தரும் வகையில் அமைந்தவை
போன்ற கனவை யார் கண்டாலும் அது ஷைத்தானின் வேலை தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கனவுகள் மூலம் சட்டங்கள் வர முடியாது என்றால் இப்ராஹீம் நபியவர்கள் தமது மகனை அறுத்துப் பலியிடுவது பற்றிய கட்டளையைக் கனவின் மூலமாகத் தானே பெற்றார்கள் என்ற சந்தேகம் ஏற்படலாம்.
இந்தச் சந்தேகம் தேவையற்றதாகும். ஏனெனில் இறைவனின் தூதர்களுக்கு மட்டும் சட்டதிட்டங்கள் பற்றிய செய்திகள் இறைவன் புறத்திலிருந்து கிடைக்கும். இத்தகைய செய்திகள் கனவின் மூலமும் மற்ற மூன்று வழிகளிலும் அவர்களுக்குக் கிடைக்கலாம்.
இறைத்தூதர்களின் கனவுகளில் ஷைத்தான் குறுக்கிட முடியாது. எனவே அவர்களுக்கு கனவில் வரும் கட்டளைகளும் இறைவனின் கட்டளையாகத் தான் இருக்க முடியும். அப்படித் தான் அதை இப்ராஹீம் நபியவர்கள் புரிந்து கொண்டார்கள்.
அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது ‘என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு’ என்று கேட்டார். ‘என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்’ என்று பதிலளித்தார். இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, ‘இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூ வழங்குவோம்’ என்று அவரை அழைத்துக் கூறினோம்.
‘கனவை மெய்ப்பித்து விட்டீர்! இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் பதிலளிப்போம்’ என்று கூறுவதன் மூலம் அந்தக் கனவு தன்னுடைய செய்தி தான் என்று இறைவன் உறுதிப்படுத்துகிறான்.
நபிமார்களுக்கும் ஷைத்தானின் கனவுகள் வர முடியும் என வைத்துக் கொண்டாலும் அவர்களுக்கு வேறு மூன்று வழிகளில் இறைவனிடமிருந்து செய்திகள் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே தாம் கண்ட கனவின் நிலையை அந்த வழிகளில் அவர்களால் அறிந்து கொள்ள இயலும். மற்றவர்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை.