கத்னா என்னும் சுன்னத் செய்யச் சொல்லும் தினமலர்!

பயான் குறிப்புகள்: குர்ஆன் கூறும் அறிவியல்

கத்னா என்னும் சுன்னத் செய்யச் சொல்லும் தினமலர்!

ஆண்குழந்தைகளுக்கு கத்னா என்னும் சுன்னத் செய்வதை இஸ்லாம் வழிமுறையாக ஆக்கி உள்ளது.

சுன்னத் என்னும் கத்னா செய்து கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதற்கு ஒரு பெரிய பட்டியலையே இடலாம்; அந்த அளவிற்கு ஆண்களுக்கான ஒரு சிறந்த மருத்துவ முறையாகவும், ஆண்களது இல்லற வாழ்வு சிறப்பாக அமைய சுன்னத் எனும் கத்னா வழிவகை செய்கின்றது என்பதையும் அறிவியல் உலகம் ஆதாரங்களுடன் தற்போது படியலிட்டு வருகின்றது.

சுன்னத் செய்வதால் சுன்னத் செய்த ஆண்களின் மனைவிமார்களுக்கும் அது நன்மை பயக்கும் என்பதை தற்போதைய மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சுன்னத் செய்த ஆண்களை கணவனாகப் பெற்ற மனைவிமார்களுக்கு – அந்த பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் அவர்கள் பாதுகாக்கப்படுகின்றார்கள் என்ற ஆய்வும் சுன்னத் செய்வதன் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த வழிமுறையைத்தான் மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் தொட்டில் குழந்தை திட்டத்தில் போடப்படும் ஆண் குழந்தைகளுக்கு கட்டாயமாக்கினார்.

அமெரிக்காவின் பிரபல குழந்தை மருத்துவர்களும் ஆண் குழந்தைகளுக்கு சுன்னத்செய்வதை பரிந்துரை செய்யும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் சுன்னத் செய்வதன் கூடுதல் முக்கியத்துவத்தை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

ஆண்கள் சுன்னத் செய்வதால் பாலியல் நோய்கள் பரவுவது தடுக்கப்படுகின்றது என்ற ஆய்வும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில்தான் ஜிம்பாப்வே நாட்டில் சுன்னத் செய்வதை சட்டமாக்கி முதலில் அனைத்து பாராளுமன்ற ஆண் எம்பிக்களும் அதற்கு முன்மாதிரியாக சுன்னத் செய்து அந்தச் சட்டத்தை அமுல் படுத்தினர்.

இவ்வாறாக முக்கியத்துவம் பெற்ற இந்த நபி வழியை செய்வதால் ஆண் குழந்தைகளுக்கு பல நன்மைகள் நிகழ்வதாக தற்போது தினமலர் நாளிதழும் ஒப்புக் கொண்டுள்ளது.

தினமலர் நாளிதழில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி செகண்ட் ஃபிரண்ட் பேஜ் பக்கத்தில் குழந்தைகள் நல நிபுணர் சீனிவாசன் என்பவரின் பேட்டியை பிரசுரித்திருந்தது.

அந்த பேட்டி இதோ:

‘சுன்னத்’ செய்வதில் பிரச்னை இல்லை!

‘சுன்னத்’ ஆபரேஷன் செய்யலாமா எனக் கூறும், குழந்தை நல நிபுணர் டாக்டர் சீனிவாசன்: சிறுவர்களுக்கு, ‘சுன்னத்’ ஆபரேஷன் செய்ய பயப்பட தேவையில்லை. அமெரிக்காவில் குழந்தை பிறந்த, ஐந்தாம் நாளே, இந்த ஆபரேஷனை செய்கின்றனர்.

ஆனால், பெற்றோர் விரும்பினால் மட்டும் தான் செய்வர்.

நம் நாட்டை பொறுத்த வரைக்கும், முஸ்லிம்கள் இந்த மருத்துவ நிகழ்வை ஒரு சடங்காகவே, காலங்காலமாக செய்து வருகின்றனர்.

பச்சிளம் ஆண் குழந்தைகளுக்கு, ஆணுறுப்பின் முன் தோல், டைட்டாகத் தான் இருக்கும். அது காலப்போக்கில் இயல்பாகிவிடும். சில பிள்ளைகளுக்கு மட்டும் சிறுநீர் போகும் போது, ஆணுறுப்பு வீங்கும்; சொட்டு சொட்டாக சிறுநீர் போகும். இந்த பிரச்னையை, ‘பிமோசிஸ்’ என, மருத்துவர்கள் சொல்வர். இதற்கு, ‘சுன்னத்’ செய்வது தான் தீர்வு.

இந்த ஆபரேஷன் செய்வதற்கு முன், இடுப்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்ய வேண்டும். சிங்கிள் கிட்னி, டூப்ளிகேட் கட்டி மாதிரியான பிரச்னைகள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளத் தான் இந்த சோதனை. ரத்த பரிசோதனையில், ரத்தம் உறையும் நேரம், கசியம் நேரம் ஆகியவை குறித்து, பரிசோதனை செய்ய வேண்டும்.

ஒரு மணி நேரத்தில், இந்த ஆபரேஷனை முடித்து விடலாம். லோக்கல் அல்லது ஜெனரல் அனஸ்தீஷியா கொடுத்து செய்வர். புண் ஆற, 10 நாட்கள் ஆகும். தையல் தானாக விழுந்துவிடும்.

மற்றபடி அந்த சமயத்தில் குழந்தைகளால் பேன்ட், டிரவுசர்ஸ் போட முடியாது. 100 சதவீதம் ரிஸ்க் இல்லாத ஆபரேஷன் இது.

மேற்கண்டவாறு அந்த செய்தியில் சுன்னத் செய்வதன் முக்கியத்துவத்தை அந்த மருத்துவ நிபுணர் விளக்கியுள்ளார்.

அமெரிக்காவில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோர்கள் ஒப்புக்கொண்டால் ஐந்தாம் நாளே சுன்னத் செய்துவிட்டுவிடுவார்கள் என்று அவர் கூறியிருப்பதன் முக்கியத்துவத்தை நாமும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நன்றி: தினமலர்