கண்களை இழந்த காஷ்மீர் மாணவியின் சாதனை..?

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

பெல்லட் குண்டால் கண்களை இழந்த காஷ்மீர்
மாணவியின் சாதனையும் வேஷம் போடும் ராணுவமும்!

இந்தியக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் காஷ்மீர் பகுதியில் 2016 ஆம் ஆண்டு நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் இந்திய ராணுவம் பெல்லட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

பயன்படுத்துவதற்கான காரணம் என்ன?

பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களைக் காயப்படுத்தி, உடல் வேதனைக்கு உட்படுத்துதலே இவ்வகை துப்பாக்கியைப் பயன்படுத்துவதற்கான முதல் காரணம். குறிப்பிட்ட தூரத்தில் இருந்து இதைப் பயன்படுத்தினால் மட்டுமே சேதம் ஏற்படாது. அருகாமையில் பயன்படுத்தினால் கண், காது போன்ற பாகங்கள் பாதிக்கப்படலாம். பெல்ட்டுகள் மெல்லிய திசுக்களை துளைத்துச் செல்லும். பெல்லட் ரக துப்பாக்கிகளை தேவை ஏற்படும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதுவும் இடுப்புப் பகுதிக்கு கீழ் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சோதனையிலும் சாதனை!

ஆனால் குண்டு வேட்டை நிகழ்த்திய இந்திய ராணுவத்தால் பல அப்பாவி உயிர்களின் வாழ்க்கையும் லட்சியமும் சிதைந்தது என்பது மிகுந்த கவலைக்குரிய ஒன்று. பல அப்பாவி காஷ்மீர் மக்கள் பெல்லட் குண்டுகளால் வாழ்க்கையையும், குடும்பத்தையும் இழந்து தவித்தார்கள், அவர்களில் ஒருவர் தான் இந்தச் சாதனை பெண்மணி இன்ஷா முஸ்தாக். இன்ஷா முஸ்தாக் என்றழைக்கப்படும் இப்பெண்ணிற்கு 16 வயது. சிறுவயதே ஆகும் இப்பெண் அவருடைய கனவாக அவரது கிராமத்திற்கு மருத்துவ சேவைகளைச் செய்யும் ஒரு சிறந்த மருத்துவராக உருவாக வேண்டும் என பெரும் கனவு இருந்தது. ஆம் இறந்த காலம் தான் அந்த கனவு ஒரு பெல்லட் குண்டில் சிதைந்து போனது.

ஆனால் இப்போது பத்தாம் வகுப்பு தேர்வில் வியப்புமிகு வெற்றி பெற்றுள்ளார். அவரின் வெற்றியை அந்த ஊரின் கிராமமே கொண்டாடுகிறது, ஆனால் இன்ஷாவும் அவரது குடும்பத்தினரும் கொடுக்கும் கண்ணீர் பேட்டிகளை bbc  யின் செய்தியாளர் அபிட் பட் வெளிக்கொண்டு வந்துள்ளார். அதன் தமிழ் சுருக்கம்,

சில நொடிகளில்…

ஜூலை 11, 2016 ஆம் ஆண்டு ஒரு பெரும் சத்தம் கேட்கிறது. ஷோபியான் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டின் ஜன்னலை இன்ஷா திறந்து பார்க்கிறார். அவர் ஜன்னலை திறந்த சில நொடிகளில் அவரது கண்களை பெல்லட் குண்டு தாக்குகிறது. அவர் வாழ்கையில் இருள் சூழ்கிறது. அடுத்த மூன்று மாதங்கள் அவர் தனது நாட்களை பார்வையை மீட்டுவிடலாம் என்ற பெரும் நம்பிக்கையில் மருத்துவமனையிலும் வீட்டிலுமாக கழிக்கிறார். ஆனால் அவளது நம்பிக்கை நிஜமாகவில்லை. அந்தச் சமயத்தில், விரக்தியுடன் புத்தகங்களைப் புரட்டியபடியே சொன்னாள்,

“இப்போது என்னால் இவற்றை (புத்தகத்தின் பக்கங்களை) உணர மட்டுமே முடிகிறது.” ஆனால் இந்தத் துயரங்கள் எதுவும், அவர் தேர்விலிருந்து வெற்றிப் பெறுவதைத் தடுக்கவில்லை. நவம்பர் 2017 இல் நடந்த தேர்வில், கேள்விகளை ஒருவர் படித்துக் காட்ட, இவர் பதிலைச் சொல்லி தேர்வெழுதி வெற்றி பெற்றுள்ளார். தேர்வு முடிவுகள் வந்த செவ்வாய்க்கிழமை மாலையிலிருந்து, அவரைப் பற்றி அவரது கிராமம் பேசிக் கொண்டு இருக்கிறது. அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

செய்தியாளர்கள் அவரது வீட்டை முற்றுகை இட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இப்போது தேர்வில் வெற்றி பெற்று இருந்தாலும், அவர் தனது எதிர்காலம் குறித்து எந்த உறுதியான முடிவையும் எடுத்துவிடவில்லை. “நான் மருத்துவம் படிக்க விரும்பினேன். ஆனால், இது இப்போது சாத்தியமில்லை. அடுத்து என்ன என்பதையும் நான் இன்னும் முடிவு செய்யவில்லை.

” ராணுவத்தின் நியாயமற்ற அணுகுமுறை!

இன்ஷாவின் முகத்தில் ஏற்பட்ட காயங்கள், அவரது முகத்தைச் சிதைத்துவிட்டது. இது உலகின் கவனத்தை ஈர்த்து, “மக்களின் போராட்டத்தை இந்தியா நியாயமற்ற முறையில் அணுகி இருக்கிறது” என்று கண்டிக்க காரணமாக அமைந்தது. மக்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர, ராணுவம் பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தியது. இந்திய ராணுவம், இந்த பெல்லட் குண்டுகள் அனைத்தும் ரப்பரால் செய்யப்பட்டவை, ஆட்களைக் கொல்லுகிற குண்டு இல்லை என்றது.

ஆனால், டஜன் கணக்கான மக்கள் இந்த பெல்லட் குண்டுகளால் இறந்தனர். ஆயிரத்தி ஐநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.பலரது விழிகள் மோசமாக காயமடைந்தது. இந்தியாவின் ஆட்சிக்கு எதிராக நடந்த அந்தச் சண்டையில் காயமடைந்த நூற்றுக்கணக்கானவர்களில் இன்ஷாவும் ஒருவர்.

தந்தையின் தவிப்பு!

அந்தத் தாக்குதல் சம்பவம் நடந்த 2016ஆம் ஆண்டு, இன்ஷாவின் தந்தை செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “இந்தத் தாக்குதலில் அவள் இறந்திருந்தால் கூட, நான் அந்தத் துயரத்திலிருந்து மீண்டு வந்திருப்பேன். ஆனால், அவள் விழிகளை இழந்து இருப்பது என்னை தினம் தினம் கொல்கிறது.” என்றார். அவளது பார்வையைச் சீராக்க பல சுற்று அறுவை சிகிச்சை நடந்தன. ஆனால், எதுவும் பலன் தரவில்லை. “இதனைக் கடந்து, நான் என் எதிர்காலத்தில் கவனம் செலுத்த தொடங்கினேன்,” என்கிறார் இன்ஷா.

இன்ஷாவும் ஆசிரியரும்!

மேலும் அவர், “இந்தக் காயத்திற்குப் பின், எனக்கு மனனம் செய்வதில் சிக்கல் உண்டாகியது. என் ஆசிரியர் நான்கு முறை பாடத்தின் குறிப்புகளைச் சொன்னாலும், என்னால் மனனம் செய்ய முடியவில்லை. சில சமயம் பாடத்தை மறந்து விடுகிறேன்.” என்றார். “அவளுக்குக் காயம் ஏற்படும் முன், மனனம் செய்வதில் அவளுக்கு எந்தச் சிக்கலும் ஏற்பட்டதில்லை. சில சமயங்களில் அவள் இதனால் எரிச்சலடைந்து, நான் இனி படிப்பைத் தொடரப் போவதில்லை என்று கூறி இருக்கிறாள்,” என்று அவரது ஆசிரியர் முஸாஃபர் பட் தெரிவித்துள்ளார். “ஆனால், அவள் இப்போது அனைத்து தடைகளையும் வென்று விட்டாள். அவள் சிறப்பாக தேர்வெழுதினாள். அவள் மன உறுதியுடன் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றிபெற்று இருக்கிறாள்,” என்கிறார்.

சிதைப்பா நடிப்பா?

இன்ஷா போன்ற பல ஆயிரக்கணக்கான பொதுமக்களின் வாழ்க்கையைச் சீரழித்த ராணுவம், போராட்டம் நடத்தும் காஷ்மீர் மக்களைச் சிதைப்பதற்கு பெல்லட் குண்டுகள். அப்பாவிகளை அடிக்க குண்டுகளை பயன்படுத்தும் ராணுவம், இந்திய நாட்டின் எல்லைப் பகுதிகளை ஆக்கிரமித்து இந்தியப் பகுதிகளை தன் வசம் எடுத்துக்கொள்ள திட்டமிடும் சீன அரசின் ராணுவத்தை அழிப்பதற்கு இந்திய ராணுவம் எடுத்து கொண்ட ஆயுதம் என்ன தெரியுமா..? “கல்லால்” சீனா ராணுவ வீரர்களை தாக்கும் லட்சணம். சீனா ராணுவ வீரர்கள் 15 பேர் காஷ்மீரின் லடாக் பகுதியில் அத்துமீறி நுழைந்த பொழுது இந்தியா- சீன ராணுவம் கல்லால் தாக்கிக் கொண்டது.

உலக நாடுகளே பார்த்து கேலியாக வியக்கும் வண்ணம் நடந்த பெரும் நிகழ்வு. (செய்தி: தினமலர் ஆகஸ்ட் 16) இந்தியாவின் எல்லைப் பகுதிகளை ஆக்கிரமித்து அழிக்க துடிக்கும் சீன ராணுவத்திற்கு “கற்கள்” இந்தியாவின் ஓர் அங்கத்தவர்களாக வாழ்ந்து வரும் காஷ்மீரிய மக்களுக்கோ “பெல்லட் குண்டுகள்”. இன்ஷாவைப் போல பலரின் கனவுகளையும், லட்சியம் நிறைந்த வாழ்க்கைகளையும் குண்டுகளால் சிதைத்த ராணுவத்தையும் அதை இயக்கும் ஆளும் மாநில பாஜக அரசையும் இது போன்ற நிகழ்வுகளின் மூலம் இது ஓர் இனத்தின் மீதான சிதைப்பா இல்லை போலியாக பகல் வேஷம் போடும் நடிப்பா என மக்கள் புரிந்து கொள்வார்கள்…