கடவுளாக்கப்படும் மனிதர்கள்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

முன்னுரை

இறைவனுக்கு இருக்கும் தனிப்பட்ட சக்திகள் உலகில் யாருக்கும் எதற்கும் இல்லை. மேலும் அவனின் ஆற்றலை யாருக்கும் இறைவன் வழங்கவும் இல்லை என்பதே இஸ்லாத்தின் நிலைபாடு. ஆனால் சிலர் இஸ்லாத்தின் பெயரை பயன்படுத்தி, அவ்லியாக்கள் எனும் சில மனிதர்களுக்கு இறைவன் தன் ஆற்றலை கொடுத்திருப்பதாக நம்ப வைத்து அப்பாவி மக்களை வழிகெடுக்கிறார்கள். அதற்கு சான்றாக ஆதாரமற்ற சில அற்புத கதைகளை மக்களிடம் உலவவிட்டுள்ளனர். மனிதர்களும் அற்புதங்களை செய்ய முடியும் என்பதற்கு இறைவன் இறைத்தூதர்களுக்கு கொடுத்த சில அற்புதங்களை ஆதாரமாகவும் காட்டுகின்றனர்.

இது ஆதாரமாகுமா?

ஒருவர் இறைத்தூதர் என்பதற்கு அல்லாஹ் இறைத்தூதர்களுக்கு அற்புதங்களை கொடுத்தது உண்மைதான். என்றாலும் ஒரு அற்புதத்தை இறைவன் வழங்கினால் அவர் எல்லா அற்புதங்களையும் செய்யமுடியும் என்ற பொருளல்ல. மேலும் குறிப்பிட்ட அற்புதங்களை, இறைவன் கூறும் நேரத்தில் மட்டுமே செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இறைவனைப் போன்று எல்லா நேரத்திலும் எல்லா அற்புதங்களையும் அவர்களால் செய்ய முடியாது.

وَقَالُوا لَنْ نُؤْمِنَ لَكَ حَتَّى تَفْجُرَ لَنَا مِنَ الْأَرْضِ يَنْبُوعًا
أَوْ تَكُونَ لَكَ جَنَّةٌ مِنْ نَخِيلٍ وَعِنَبٍ فَتُفَجِّرَ الْأَنْهَارَ خِلَالَهَا تَفْجِيرًا
أَوْ تُسْقِطَ السَّمَاءَ كَمَا زَعَمْتَ عَلَيْنَا كِسَفًا أَوْ تَأْتِيَ بِاللَّهِ وَالْمَلَائِكَةِ قَبِيلًا
أَوْ يَكُونَ لَكَ بَيْتٌ مِنْ زُخْرُفٍ أَوْ تَرْقَى فِي السَّمَاءِ وَلَنْ نُؤْمِنَ لِرُقِيِّكَ حَتَّى تُنَزِّلَ عَلَيْنَا كِتَابًا نَقْرَؤُهُ قُلْ سُبْحَانَ رَبِّي هَلْ كُنْتُ إِلَّا بَشَرًا رَسُولًا

“இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம்” என்று கூறுகின்றனர்.

அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும்.

அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும், வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும்.

அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) “என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன்: 17:90-93)

இவ்வுலகத்தின் அருட்கொடையாக வந்த நபிகளார் நினைத்தாலும் அவர்களால் எந்த அற்புதத்தையும் செய்ய முடியாது என்றால் மற்றவர்களால் செய்ய முடியுமா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நபி மூஸா (அலை) அவர்களுக்கு கைதடியை பாம்பாக மாற்றி ஓர் அற்புதத்தை அல்லாஹ் செய்து காட்டினால் இந்த அற்புதத்தை செய்த காரணத்தால் அந்த கைத்தடி எல்லா நேரத்திலும் கீழே போடும் போதெல்லாம் பாம்பாக மாறவில்லை.

தண்ணீர் வேண்டி மூஸா (அலை) அவர்களிடம் மக்கள் கேட்ட போது இந்த கைத்தடியால் பாறையில் அடித்த போது பாறையிலிருந்து தண்ணீர் வந்தது.

وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِنْ رِزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ

மூஸா, தமது சமுதாயத்திற்காக (நம்மிடம்) தண்ணீர் வேண்டிய போது “உமது கைத்தடியால் அந்தப் பாறையில் அடிப்பீராக!” என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த் துறையை அறிந்து கொண்டனர். “அல்லாஹ் வழங்கியதை உண்ணுங்கள்! பருகுங்கள்! பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!” (என்று கூறினோம்)

(அல்குர்ஆன்: 2:60)

ஒரு கைத்தடி பாம்பாக மாறியது, இன்னொரு தடவை தண்ணீரை வரவழைத்தது. எனவே இந்த கைத்தடிக்கு சக்தி உண்டு எதையும் செய்ய முடியும் என்று மூஸா (அலை) அவர்களும் அவர்களுடன் இருந்தவர்களும் நினைவிக்கவில்லை. அப்படிப்பட்ட நம்பிக்கையை மூஸா (அலை) அவர்கள் ஊட்டவும் இல்லை.

ஏனெனில் பிர்அவ்னின் படை மூஸா (அலை) அவர்களைத் துரத்தி கடல்பகுதியில் நிறுத்திய போது மூஸா (அலை) அவர்களுடன் இருந்தவர்கள், மூஸாவே! உமது மந்திர கோலை எடுத்து நமக்கு வழிகாட்டும் என்று கூறவில்லை. மாறாக பிர்அவ்னிடம் நன்றாக மாட்டிக் கொண்டோம் என்றே கூறினார்கள். மூஸா (அலை) அவர்களும் இதோ மந்திரக் கோல் உள்ளது. இதை வைத்து பிர்அவ்னின் சதியை முறியடிக்கிறேன் என்று கூறாமல் என் இறைவன் வழிகாட்டுவான் என்றே கூறினார்கள்.

فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ
قَالَ كَلَّا إِنَّ مَعِيَ رَبِّي سَيَهْدِينِ
فَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنِ اضْرِبْ بِعَصَاكَ الْبَحْرَ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيمِ

காலையில் (ஃபிர்அவன் கூட்டத்தினர்) அவர்களைப் பின் தொடர்ந்தனர். இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது “நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்” என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். “அவ்வாறில்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்” என்று அவர் கூறினார். “உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக” என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது.

(அல்குர்ஆன்: 26:61-63)

எனவே இறைவன் இறைத்தூதர்களுக்கு வழங்கிய எந்த ஒரு அற்புதமும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட முறையில் மட்டுமே இயங்கும். அது எல்லா நேரத்திலும் அற்புதங்களை செய்ய முடியாது என்பதை விளங்க வேண்டும்.

தவசீலர் முஹ்யித்தீன் ஆண்டகை

இந்த கருத்துக்களை கவனத்தில் வைத்துக் கொண்டு அவ்லியாக்கள் என்ற பெயரில் கூறப்படும் சில கதைகள், மனிதர்களை எப்படி இறைத் தன்மைக்கு கொண்டு சொல்கிறது என்பதை பாருங்கள். இந்த கதைகள் மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் ஆண்டகை என்ற தமிழ் நூலில் இடம்பெற்றுள்ளது.

இந்த நூலில் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் பெயரால் அற்புதங்கள் என்ற பெயரில் திருக்குர்ஆனுக்கும் நபிமொழிகளுக்கும் எதிரான பொய்யான பல கதைகள் புனையப்பட்டுள்ளன.

இராக் காடுகளிலுள்ள கர்க் எனும் பிரதேசத்தை அடைந்து அங்கு பாழடைந்த கட்டிடங்களைத் தம் இருப்பிடமாக்கிக் கொண்டு கடும் தவம் இருந்தார்கள்… அவர்களுடைய தவம் அகோரமானதாய் இருந்தது. ஒரு வருஷம் முழுவதும் அவர்கள் வெறும் காய்கறிகளைக் தின்று, தண்ணீர் குடியாமலிருந்து தவம் செய்தார்கள். மறு ஆண்டில் தண்ணீர் மட்டும் உட்கொண்டு வேறு எதவும் சாப்பிடாது தவம் செய்தார்கள்.

மூன்றாம் ஆண்டில் எதுவும் உண்ணாமலும் தண்ணீர் அருந்தாமலும் தூங்காமலும் தவத்தில் ஈடுபட்டார்கள். அல்லாஹ் உண்ணுவதோ குடிப்பதோ தூங்குவதோ இல்லை அல்லவா! அவனின் அடியான், அல்லாஹ்வின் சில குணங்களைப் பெறும் தகுதியுடையவனானதும் அல்லாஹ்வின் அகப்பண்புகள் அவன் மூலமும் வெளிப்படுவதில் வியப்பென்ன இருக்கிறது!

(பக்கம் : 33)

நபி (ஸல்) அவர்களும் ஹிரா குகையில் தனிமையில் இருந்தார்கள். ஆனால் இவ்வாறு இருந்தது நபித்துவம் வருவதற்கு முன்னர். வஹி வந்த பின்னார் அவர்கள் தனிமையில் தவம் இருக்கவில்லை. மேலும் அவர்கள் ஹிரா குகையில் இருந்த போது உணவுகளை உண்டுதான் வந்தார்கள்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த வேதஅறிவிப்பு (வஹீ) தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவாகவே) இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று.

(எனவே) அவர்கள் “ஹிரா’ குகையில் தனித்திருந்து தம் வீட்டாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தார்கள். அதற்காக (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் கொண்டு செல்வார்கள். (அந்த உணவு தீர்ந்ததும்) மீண்டும் (தம் துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்பிவந்து அதைப் போன்று (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் பெற்றுச் செல்வார்கள்.

நூல்: (புகாரி: 3) 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “ஒரு பகல்’ அல்லது “ஓர் இரவு’ (தமது இல்லத்திலிருந்து) வெளியே புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வெளியே இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு வர என்ன காரணம்?” என்று கேட்டார்கள். அதற்கு, “பசிதான் (காரணம்), அல்லாஹ்வின் தூதரே!” என்று அவ்விருவரும் பதிலளித்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நானும் (புறப்பட்டு வந்தது அதனால்) தான். உங்கள் இருவரையும் வெளியே வரச்செய்ததே என்னையும் வெளியே வரச்செய்தது” என்று கூறி விட்டு, “எழுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் எழுந்தனர்.

பிறகு (மூவரும்) அன்சாரிகளில் ஒருவரிடம் (அவரது வீட்டுக்குச்) சென்றனர். அப்போது அந்த அன்சாரி வீட்டில் இருக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அந்தத் தோழரின் துணைவியார் கண்டதும், “வாழ்த்துகள்! வருக” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், “அவர் எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், “எங்களுக்காக நல்ல தண்ணீர் கொண்டுவருவதற்காக (வெளியே) சென்றுள்ளார்” என்று பதிலளித்தார்.

அப்போது அந்த அன்சாரி வந்துவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களுடைய இரு தோழர்களையும் (தமது வீட்டில்) கண்டார். பிறகு “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் மிகச் சிறந்த விருந்தினரைப் பெற்றவர் என்னைத் தவிர வேறெவரும் இல்லை” என்று கூறிவிட்டு, (திரும்பிச்) சென்று ஒரு பேரீச்சங்குலையுடன் வந்தார். அதில் நன்கு கனியாத நிறம் மாறிய காய்களும் கனிந்த பழங்களும் செங்காய்களும் இருந்தன.

அவர், “இதை உண்ணுங்கள்” என்று கூறிவிட்டு, (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அவ்வாறே அவர்களுக்காக அவர் ஆடு அறுத்(து விருந்து சமைத்)தார்.

அவர்கள் அனைவரும் அந்த ஆட்டையும் அந்தப் பேரீச்சங்குலையிலிருந்தும் உண்டுவிட்டு (தண்ணீரும்) அருந்தினர். வயிறு நிரம்பி தாகம் தணிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரிடம், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! இந்த அருட்கொடை பற்றி மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். பசி உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது. பின்னர் இந்த அருட்கொடையை அனுபவித்த பிறகே நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : (முஸ்லிம்: 4143) 

இறைவனைத் தவிர எந்த ஒரு மனிதனாக இருந்தால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பசியுடன் இருக்கமுடியாது என்பதை மேற்கூறப்பட்ட சம்பவம் நமக்கு தெளிவாக விளக்கிறது. ஆனால் நபிகளாரை விட தகுதியில் குறைந்த அப்துல்காதிர் ஜீலானியால் எப்படி ஒரு வருடம் உணவு தண்ணீர் இன்றி இருக்க முடிந்தது?

எவரும் திருந்திவிடுவாராம்!

நேர்வழி காட்டுவது வல்ல அல்லாஹ்வின் கையில் உள்ளது. ஆனால் அப்துல்காதிர் ஜீலானி அவர்கள் பயான் செய்தால் அனைவரும் மெய்மறந்து கேட்டு நேர்வழி பெறுவார்கள். இறைவனின் ஒளி அவர்களுக்கு கிடைக்குமாம். அவர்களுடைய சொற்பொழிவைக் கேட்போருள் பகீஹ்கள், ஆலிம்கள், ஷைகுகள், அமீர்கள், உயர்தர அதிகாரிகள், கலீபாக்கள், ஜின்னுகள், மலக்குகள் மற்றும் மறைவான ஜின்கள் ஆகியவை இருப்பதுண்டு.

(பக்கம் : 50)

ஒரு அறிஞர் பயான் செய்தார். அதை மக்கள் ரசித்து கேட்கவில்லை. அடுத்து அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் பயான் செய்தார்கள். இதைக் கேட்டவுடன் மக்கள் மனமுருகி கண்ணீர் விட்டனராம். இது பற்றி கேட்டபோது அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் அளித்த பதில் இதோ:

எனக்கோ அந்த மேடையில் ஏறியதுமே அல்லாஹ்விடமிருந்து வந்த ஒரு மின்சார அதிர்ச்சி என் இதயத்துள் புகுந்தது. என் இதயம் விரிந்தது. அப்போது நான் பயபக்தி சூழ்ந்தவனாகச் சில வார்த்தைகள் சொன்னேன். அதன் பயன்தான் நீ கண்டது

(பக்கம்:58)

அதாவது அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் பயான் செய்யும் போது இறைவன் அவர்களின் உள்ளத்தில் ஓர் அதிர்ச்சி ஏற்படுத்தி சிறப்பாக பயான் செய்யும் வகையில் மாற்றிவிடுகின்றானாம். அதனால் மக்கள் அவர்களின் பயானைக் கேட்டு திருந்திவிடுகிறார்களாம்.

அவ்லியாக்களின் பயான் அனைவரின் உள்ளதையும் மாற்றிவிடும் என்று இந்த கதை கூறுகிறது. ஆனால் இறைநேசர்களில் முதன்மையானவரான நபிகளாரின் பயானை ஏராளமானோர் புறக்கணித்துள்ளனர். அதைக் கேட்டு சபித்தும் உள்ளனர்.

لَمَّا نَزَلَتْ {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ} صَعِدَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى الصَّفَا فَجَعَلَ يُنَادِي يَا بَنِي فِهْرٍ يَا بَنِي عَدِيٍّ لِبُطُونِ قُرَيْشٍ حَتَّى اجْتَمَعُوا فَجَعَلَ الرَّجُلُ إِذَا لَمْ يَسْتَطِعْ أَنْ يَخْرُجَ أَرْسَلَ رَسُولاً لِيَنْظُرَ مَا هُوَ فَجَاءَ أَبُو لَهَبٍ وَقُرَيْشٌ فَقَالَ أَرَأَيْتَكُمْ لَوْ أَخْبَرْتُكُمْ أَنَّ خَيْلاً بِالْوَادِي تُرِيدُ أَنْ تُغِيرَ عَلَيْكُمْ أَكُنْتُمْ مُصَدِّقِيَّ قَالُوا نَعَمْ مَا جَرَّبْنَا عَلَيْكَ إِلاَّ صِدْقًا قَالَ فَإِنِّي نَذِيرٌ لَكُمْ بَيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيدٍ فَقَالَ أَبُو لَهَبٍ تَبًّا لَكَ سَائِرَ الْيَوْمِ أَلِهَذَا جَمَعْتَنَا فَنَزَلَتْ {تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ}.

“(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்” எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப் பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் “ஸஃபா’ மலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு, “பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!” என்று குறைஷிக் குலங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வரமுடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூலஹப் உள்ளிட்ட குறைஷியர் (அனைவரும்) வந்(து சேர்ந்)தனர்.

நபி (ஸல்) அவர்கள், “சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?” என்று கேட்க, மக்கள் “ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை” என்று பதிலளித்தனர்.

நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கின்றேன்” என்று (தமது மார்க்கக் கொள்கையைச்) சொன்னார்கள். (இதைக் கேட்ட) அபூலஹப், “நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?” என்று கூறினான். அப்போது தான் “அபூலஹபின் கரங்கள் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்……” என்று தொடங்கும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : (புகாரி: 4770) 

நபிகளாரின் ஓரிறைக் கொள்கை போதனைகளை கேட்டவர்கள் நபிகளாருக்கு அளித்த பதில்கள் மிக மோசமாக இருந்தது. அவர்களின் மனம் புண்படும்படி கடும் சொற்களை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

وَلَقَدْ نَعْلَمُ أَنَّكَ يَضِيقُ صَدْرُكَ بِمَا يَقُولُونَ

அவர்கள் (உம்மைப் பற்றிப்) பேசுவதன் காரணமாக உமது உள்ளம் கலங்குவதை அறிவோம்.

(அல்குர்ஆன்: 15:97)

மிகச் சிறந்த இறைத்தூதரான நபிகளாரின் பேச்சு அவர்களை ஈர்க்கவில்லை. ஆனால் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் பேசினால் அனைவரும் திருந்திவிடுவார்கள். மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளவார்கள் என்று கூறினால் இந்த கதையின் அடிப்படை கருத்து என்ன? நபிமார்களைவிட இவர்கள் கூடுதல் தகுதி உள்ளவர்கள் என்ற கருத்தை தரவில்லையா?

இதுபோன்று ஏராளமான இறைத்தூதர்களை மக்கள் புறக்கணித்துள்ளனர். ஏன் கொலைகூட செய்துள்ளனர்.

إِنَّا أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ أَنْ أَنْذِرْ قَوْمَكَ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَهُمْ عَذَابٌ أَلِيمٌ
قَالَ يَاقَوْمِ إِنِّي لَكُمْ نَذِيرٌ مُبِينٌ
أَنِ اعْبُدُوا اللَّهَ وَاتَّقُوهُ وَأَطِيعُونِ
يَغْفِرْ لَكُمْ مِنْ ذُنُوبِكُمْ وَيُؤَخِّرْكُمْ إِلَى أَجَلٍ مُسَمًّى إِنَّ أَجَلَ اللَّهِ إِذَا جَاءَ لَا يُؤَخَّرُ لَوْ كُنْتُمْ تَعْلَمُونَ
قَالَ رَبِّ إِنِّي دَعَوْتُ قَوْمِي لَيْلًا وَنَهَارًا
فَلَمْ يَزِدْهُمْ دُعَائِي إِلَّا فِرَارًا
وَإِنِّي كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوا أَصَابِعَهُمْ فِي آذَانِهِمْ وَاسْتَغْشَوْا ثِيَابَهُمْ وَأَصَرُّوا وَاسْتَكْبَرُوا اسْتِكْبَارًا

“உமது சமுதாயத்திற்குத் துன்புறுத்தும் வேதனை வருவதற்கு முன் அவர்களை எச்சரிப்பீராக” என்று நூஹை அவரது சமுதாயத்திடம் நாம் அனுப்பினோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள் என்று நான் உங்களுக்குத் தெளிவாக எச்சரிப்பவன். அவன் உங்கள் பாவங்களை மன்னிப்பான். குறிப்பிட்ட தவணை வரை உங்களுக்கு அவகாசம் தருவான். அல்லாஹ்வின் தவணை வரும் போது அது பிற்படுத்தப்படாது. நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?” என்று அவர் கூறினார்.

“என் இறைவா! என் சமுதாயத்தை இரவிலும், பகலிலும் நான் அழைத்தேன்” என்று அவர் கூறினார். “எனது அழைப்பு வெறுப்பைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு அதிகமாக்கவில்லை” “நீ அவர்களை மன்னிப்பதற்காக நான் அவர்களை அழைத்த போதெல்லாம் தமது விரல்களைத் தமது காதுகளில் வைத்துக் கொள்கின்றனர். தமது ஆடைகளால் மூடிக் கொள்கின்றனர். பிடிவாதம் பிடிக்கின்றனர். அதிகம் அகந்தை கொள்கின்றனர்”

(அல்குர்ஆன்: 71:1-7)

لَقَدْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ وَأَرْسَلْنَا إِلَيْهِمْ رُسُلًا كُلَّمَا جَاءَهُمْ رَسُولٌ بِمَا لَا تَهْوَى أَنْفُسُهُمْ فَرِيقًا كَذَّبُوا وَفَرِيقًا يَقْتُلُونَ

இஸ்ராயீலின் மக்களிடம் உறுதி மொழி எடுத்தோம். அவர்களிடம் தூதர்களையும் அனுப்பினோம். அவர்கள் விரும்பாததைத் தூதர் அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம் சிலரைப் பொய்யர் என்றனர். மற்றும் சிலரைக் கொன்றனர்.

(அல்குர்ஆன்: 5:70)

இவ்வாறு இறைவன் கூறும் போது, அவ்லியாவோ, மற்ற எவருமோ அறிவுரை கூறிவிட்டால், அவர் திருந்தி விடுவார். மார்க்கத்தை ஏற்றுக் கொள்வார் என்று கூறினால், அவர்களை அல்லாஹ்வாக, கடவுளாக ஆக்குகிறார்கள் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.  இதை விளங்கி நடக்க, இது போன்ற மூடத்தனத்திலிருந்து விடுபட, அல்லாஹ் நம் அனைவர் மீதும் அருள்புரிவானாக! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.