08) கடமையான குளிப்பு

நூல்கள்: தொழுகையின் சட்டங்கள்

கடமையான குளிப்பு

உளூச் செய்யும் அவசியம் ஏற்படும் போது உளூச் செய்து விட்டுத் தான் தொழ வேண்டும் என்பது போல, குளிக்கும் அவசியம் ஏற்பட்டால் குளித்து விட்டுத் தான் தொழ வேண்டும். குளிப்பு கடமையானவர்கள் குளிக்காமல் தொழக் கூடாது.

ஒரு மனிதன் குளிப்பது எப்போது கடமையாகும்? குளிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் யாவை? என்பதைக் காண்போம்.

உடலுறவு குளிப்பைக் கடமையாக்கும்

ஆணும், பெண்ணும் உடலுறவு கொண்டால் இருவர் மீதும் குளிப்பது கடமையாகி விடும். குளித்து விட்டுத் தான் அவர்கள் தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«إِذَا جَلَسَ بَيْنَ شُعَبِهَا الأَرْبَعِ، ثُمَّ جَهَدَهَا فَقَدْ وَجَبَ الغَسْلُ»

‘ஒரு ஆண் தனது மனைவியின் கால்களுக்கிடையே அமர்ந்து பின்னர் முயற்சி செய்தால் குளிப்பு கடமையாகி விடும்’என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: (புகாரி: 291) ,(முஸ்லிம்: 525)

முஸ்லிமின் 525 அறிவிப்பில் விந்து வெளிப்படாவிட்டாலும் குளிப்பது கடமை என்ற வாக்கியம் மேலதிகமாக இடம் பெற்றுள்ளது.

தூக்கத்தில் விந்து வெளிப்படுதல்

பெரும்பாலும் ஆண்களுக்கும் மிகச் சில பெண்களுக்கும் தூக்கத்தின் போது விந்து வெளிப்படுவதுண்டு. சில நேரங்களில் விந்து வெளிப்படுவது போன்ற கனவுகள் ஏற்படும். ஆனால் விழித்துப் பார்த்தால் விந்து வெளிப்பட்டதற்கான எந்த அடையாளமும் ஆடையில் இருக்காது.

விந்து வெளிப்பட்டது உறுதியாகத் தெரிந்தால், ஆடையில் அதற்கான அடையாளம் இருந்தால் குளிப்பது கடமையாகி விடும். குளித்து விட்டுத் தான் தொழ வேண்டும்.

விந்து வெளிப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டு அதற்கான எந்த அடையாளமும் தெரியாவிட்டால் குளிப்பது கடமையில்லை.

عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ أُمَّ سُلَيْمٍ، قَالَتْ
يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي مِنَ الحَقِّ فَهَلْ عَلَى المَرْأَةِ الغَسْلُ إِذَا احْتَلَمَتْ؟ قَالَ: «نَعَمْ، إِذَا رَأَتِ المَاءَ» فَضَحِكَتْ أُمُّ سَلَمَةَ، فَقَالَتْ: تَحْتَلِمُ المَرْأَةُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَبِمَ يُشْبِهُ الوَلَدُ»

‘அல்லாஹ்வின் தூதரே! உண்மை பேசுவதில் அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். ஒரு பெண்ணுக்கு தூக்கத்தில் விந்து வெளிப்பட்டால் அவள் குளிப்பது அவசியமா?’ என்று உம்மு சுலைம் (ரலி) என்ற பெண்மணி கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘விந்து வெளிப்பட்டதை அவள் கண்டால் குளிப்பது அவசியம்’ என்று விடையளித்தார்கள். இதைக் கேட்ட உம்மு ஸலமா (ரலி) அவர்கள், ‘பெண்களுக்கும் விந்து வெளிப்படுமா?’ என்று கேட்டு விட்டுச் சிரித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘சில நேரங்களில் தாயைப் போல் குழந்தை எப்படிப் பிறக்கின்றது?’ என்று திருப்பிக் கேட்டார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்கள்: (புகாரி: 3328) ,(முஸ்லிம்: 471)

…عَلَيْهَا الْغُسْلُ إِذَا وَجَدَتِ الْمَاءَ…

நபி (ஸல்) அவர்களின் மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களின் வீட்டுக்கு அருகில் நான் வசித்தேன். அவர்களின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவேன். நபி (ஸல்) அவர்கள் உள்ளே வந்த போது, ‘அல்லாஹ்வின் தூதரே! தன் கணவன் தன்னுடன் உடலுறவு கொள்வது போல் ஒரு பெண் கனவு கண்டால் அவள் குளிக்க வேண்டுமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘விந்து வெளிப்பட்டதைக் கண்டால் அவள் குளிக்க வேண்டும்’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: உம்மு சுலைம் (ரலி)
நூல்: (அஹ்மத்: 27118) (25869) 

விந்து வெளிப்பட்டால் தான் குளிப்பது கடமை என்பதையும், விந்து வெளிப்படுவது போல் தோன்றினால் குளிப்பது கடமையில்லை என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

மாதவிடாய் நின்றதும் குளிப்பது அவசியம்

மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழக் கூடாது என்பதை நாம் அறிவோம். மாதவிடாய் நின்றவுடன் அவர்கள் குளித்து விட்டுத் தான் தொழ வேண்டும்.

عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ
كَانَتْ تُسْتَحَاضُ، فَسَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «ذَلِكِ عِرْقٌ وَلَيْسَتْ بِالحَيْضَةِ، فَإِذَا أَقْبَلَتِ الحَيْضَةُ، فَدَعِي الصَّلاَةَ وَإِذَا أَدْبَرَتْ فَاغْتَسِلِي وَصَلِّي»

அபூஹுபைஷ் என்பாரின் மகள் ஃபாத்திமா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். ‘அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர் இரத்தப் போக்கிலிருந்து சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டு விடலாமா?’ என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘(தொழுகையை விடக்) கூடாது. அது ஒரு நோய் தானே தவிர மாதவிடாய் அல்ல! எனவே மாதவிடாய் வரும் போது (மட்டும்) தொழுகையை விட்டு விடு! மாதவிடாய் நின்றதும் குளித்து விட்டுத் தொழு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: (புகாரி: 320) 

மாதவிடாய் நின்றதும் குளித்து விட்டுத் தொழ வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.

ஜும்ஆவுக்கு முன் குளிப்பது அவசியம்

வெள்ளிக்கிழமை குளிப்பது கட்டாயக் கடமையாகும். இது பற்றி மிகத் தெளிவான கட்டளை நபி (ஸல்) அவர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«الغُسْلُ يَوْمَ الجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ»

‘பருவ வயது அடைந்த ஒவ்வொருவர் மீதும் வெள்ளிக்கிழமை குளிப்பது (வாஜிப்) கட்டாயக் கடமை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்கள்: (புகாரி: 858) , 879, 880, 895, 2665,(முஸ்லிம்: 1397)

வெள்ளிக்கிழமை குளிப்பது அவசியம் என்று பொதுவாகக் கூறப்படுவதால் வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆவுக்குப் பின்னர் கூட குளிக்கலாம் என்று கருதக் கூடாது. ஏனெனில் வேறு ஹதீஸ்களில் ஜும்ஆவுக்கு முன்னரே குளித்து விட வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«إِذَا جَاءَ أَحَدُكُمُ الجُمُعَةَ، فَلْيَغْتَسِلْ»

‘உங்களில் ஒருவர் ஜும்ஆவுக்கு வருவதாக இருந்தால் அவர் குளித்து விடட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: (புகாரி: 877) 

எனினும், குளிக்க இயலாவிடில் தொழுகை கூடும்.

குளிக்கும் முறை

மர்மஸ்தானத்தையும், உடலில் பட்ட அசுத்தத்தையும் கழுவுதல்

கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது, தாம்பத்தியத்தின் மூலம் உடலில் பட்ட அசுத்தங்களையும், மர்ம ஸ்தானத்தையும் முதலில் கழுவ வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்.

عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اغْتَسَلَ مِنَ الجَنَابَةِ، فَغَسَلَ فَرْجَهُ بِيَدِهِ، ثُمَّ دَلَكَ بِهَا الحَائِطَ، ثُمَّ غَسَلَهَا، ثُمَّ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ فَلَمَّا فَرَغَ مِنْ غُسْلِهِ غَسَلَ رِجْلَيْهِ»

நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது (முதலில்) தங்கள் மர்மஸ்தானத்தைக் கையினால் கழுவினார்கள். பின்னர் கையைச் சுவற்றில் தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் தொழுகைக்குரிய உளூவைச் செய்தார்கள். குளித்து முடித்து, இரு கால்களையும் கழுவினார்கள்.

அறிவிப்பவர்: மைமூனா (ரலி)
நூல்கள்: (புகாரி: 260) ,(முஸ்லிம்: 476)

வலது கையால் இடது கையில் தண்ணீர் ஊற்றி, இடது கையால் மர்மஸ்தானத்தைக் கழுவுவார்கள் என்று(புகாரீ: 259)வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

உளூச் செய்தல்

கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது, அதற்கு முன்னர் உளூச் செய்வது நபிவழியாகும். அவ்வாறு உளூச் செய்யும் போது, கால்களை மட்டும் கடைசியாக (குளித்து முடிக்கும் போது) கழுவுவதும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும்.

عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلّى الله عليه وسلم ” أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
كَانَ إِذَا اغْتَسَلَ مِنَ الجَنَابَةِ، بَدَأَ فَغَسَلَ يَدَيْهِ، ثُمَّ يَتَوَضَّأُ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلاَةِ

நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது தமது கைகளைக் கழுவிக் கொண்டு, தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்வார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: (புகாரி: 248) ,(முஸ்லிம்: 475)

 ثُمَّ نَحَّى رِجْلَيْهِ، فَغَسَلَهُمَا

குளித்து முடித்ததும் தாம் நின்ற இடத்தை விட்டு சற்று விலகி, இரு கால்களையும் நபி (ஸல்) அவர்கள் கழுவுவார்கள்.

அறிவிப்பவர்: மைமூனா (ரலி)
நூல்கள்: (புகாரி: 249) ,(முஸ்லிம்: 476)

தலையைக் கோதி விட்டுப் பின்னர் குளித்தல்

 ثُمَّ يُدْخِلُ أَصَابِعَهُ فِي المَاءِ، فَيُخَلِّلُ بِهَا أُصُولَ شَعَرِهِ، ثُمَّ يَصُبُّ عَلَى رَأْسِهِ ثَلاَثَ غُرَفٍ بِيَدَيْهِ، ثُمَّ يُفِيضُ المَاءَ عَلَى جِلْدِهِ كُلِّهِ

நபி (ஸல்) அவர்கள் கைகளைத் தண்ணீரில் நனைத்து, ஈரக் கையால் தலையின் அடிப் பாகத்தைக் கோதி விட்டுப் பின்னர் மூன்று தடவை தலையில் தண்ணீரை ஊற்றுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: (புகாரி: 248) ,(முஸ்லிம்: 474)….

 ثُمَّ يُخَلِّلُ بِيَدِهِ شَعَرَهُ، حَتَّى إِذَا ظَنَّ أَنَّهُ قَدْ أَرْوَى بَشَرَتَهُ، أَفَاضَ عَلَيْهِ المَاءَ ثَلاَثَ مَرَّاتٍ

பின்னர் தமது கையால் தலை முடியைக் கோதுவார்கள். முடியின் அடிப்பாகம் நனைந்து விட்டது என்று அவர்கள் நினைக்கும் போது மூன்று தடவை தலையில் தண்ணீர் ஊற்றுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: (புகாரி: 272) (273),(முஸ்லிம்: 474)

இரண்டு, மூன்று தடவை தண்ணீர் ஊற்றுவது போதும்

கடமையான குளிப்பை நிறைவேற்றுவதற்கு மணிக் கணக்கில் தண்ணீரில் ஊற வேண்டும் என்பது அவசியமில்லை. மாறாக மூன்று தடவை தலையில் தண்ணீர் ஊற்றிய பின்னர் உடல் முழுவதும் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

قَالَتْ مَيْمُونَةُ
«وَضَعْتُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَاءً لِلْغُسْلِ، فَغَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، ثُمَّ أَفْرَغَ عَلَى شِمَالِهِ، فَغَسَلَ مَذَاكِيرَهُ، ثُمَّ مَسَحَ يَدَهُ بِالأَرْضِ، ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْشَقَ، وَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ، ثُمَّ أَفَاضَ عَلَى جَسَدِهِ، ثُمَّ تَحَوَّلَ مِنْ مَكَانِهِ فَغَسَلَ قَدَمَيْهِ»

நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். தமது இரு கைகளிலும் தண்ணீரைச் சாய்த்து இரண்டு தடவைகள் அல்லது மூன்று தடவைகள் கைகளைக் கழுவினார்கள். பின்னர் தமது வலது கையால் இடது கை மீது தண்ணீரைச் சாய்த்து தமது மர்மஸ்தானத்தைக் கழுவினார்கள். பின்னர் தமது கையைத் தரையில் தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தார்கள். பின்னர் முகத்தையும், கைகளையும் கழுவினார்கள். தமது தலையை மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் உடலில் ஊற்றினார்கள். பின்னர் தாம் நின்ற இடத்திலிருந்து விலகி கால்களைக் கழுவினார்கள்.

அறிவிப்பவர்: மைமூனா (ரலி)
நூல்கள்: (புகாரி: 257) ,(முஸ்லிம்: 476)

நமது முடிகளில் ஒன்றிரண்டு நனையாமல் இருக்குமோ என்று சில பேர் எண்ணிக் கொண்டு குடம், குடமாகத் தண்ணீரை ஊற்றுவார்கள். இவ்வாறு அதிகம் அலட்டிக் கொள்வது தேவையில்லை.

நபி (ஸல்) அவர்கள் செய்தது போல் ஈரக் கையால் தலையின் அடிப் பாகத்தில் தடவிக் கோதிய பின் மூன்று தடவை தலையின் மீது தண்ணீர் ஊற்றிக் கொள்வதே போதுமானதாகும். இதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அறியலாம். இது பற்றி இன்னும் தெளிவாக ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، قَالَ
تَمَارَوْا فِي الْغُسْلِ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَ بَعْضُ الْقَوْمِ: أَمَّا أَنَا فَإِنِّي أَغْسِلُ رَأْسِي كَذَا وَكَذَا. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَّا أَنَا فَإِنِّي أُفِيضُ عَلَى رَأْسِي ثَلَاثَ أَكُفٍّ»

நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் குளிக்கும் முறை பற்றி சிலர் தர்க்கம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சிலர், ‘நான் என் தலையை இப்படி, இப்படியெல்லாம் (தேய்த்துக்) கழுவுவேன்’ என்று கூறினார்கள். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘நான் மூன்று கை தண்ணீர் எடுத்து என் தலையில் ஊற்றிக் கொள்வதோடு சரி’ என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 545) (493)

‘நானோ இரண்டு கைகளாலும் தண்ணீர் எடுத்துத் தலையில் ஊற்றிக் கொள்வதோடு சரி’ என்று நபி (ஸல்) கூறியதாக (புகாரீ: 254) அறிவிப்பில் உள்ளது.

கடமையான குளிப்பு அல்லாத சாதாரண குளிப்பைப் பற்றியதாக இது இருக்குமோ என்று சிலர் நினைக்கக் கூடும். (முஸ்லிம்: 547) (494) இல் இடம் பெற்ற ஹதீஸில் கடமையான குளிப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாகக் கூறப்பட்டுள்ளது.

எனவே கடமையான குளிப்புக்கும் இவ்வாறு செய்யலாம் என்பதில் ஐயமில்லை.

பெண்கள் சடைகளை அவிழ்க்க வேண்டுமா?

பின்னப்பட்ட சடைகளை அவிழ்த்து விட்டுத் தான் கடமையான குளிப்பை நிறைவேற்ற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். அது தவறாகும். ஹதீஸ்களை ஆராயும் போது முடிக்குக் கீழே உள்ள தோல் தான் கட்டாயமாக நனைய வேண்டுமே தவிர ஒவ்வொரு முடியும் நனைய வேண்டும் என்பது கட்டாயமில்லை என்பதை அறியலாம்.

நபி (ஸல்) அவர்கள் ஈரக் கையால் தலையின் அடிப்பாகத்தைத் தேய்ப்பார்கள் என்றும் அடிப்பாகம் நனைந்து விட்டது என்று நினைக்கும் போது தலையில் தண்ணீர் ஊற்றுவார்கள் என்றும் கூறப்பட்ட விளக்கத்திலிருந்து இதை அறியலாம்.

இதை இன்னும் தெளிவாகவே விளக்கும் ஹதீஸ்களும் உள்ளன.

قُلْتُ يَا رَسُولَ اللهِ إِنِّي امْرَأَةٌ أَشُدُّ ضَفْرَ رَأْسِي فَأَنْقُضُهُ لِغُسْلِ الْجَنَابَةِ؟ قَالَ: «لَا. إِنَّمَا يَكْفِيكِ أَنْ تَحْثِي عَلَى رَأْسِكِ ثَلَاثَ حَثَيَاتٍ ثُمَّ تُفِيضِينَ عَلَيْكِ الْمَاءَ فَتَطْهُرِينَ»

‘அல்லாஹ்வின் தூதரே! நான் தலையில் சடை போட்டிருக்கிறேன். கடமையான குளிப்புக்காக நான் சடையை அவிழ்க்க வேண்டுமா?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘வேண்டியதில்லை; உன் தலையில் மூன்று தடவை தண்ணீர் ஊற்றிக் கொள்வதே போதுமானதாகும்; பின்னர் உன் மீது தண்ணீரை ஊற்றிக் கொள்; நீ தூய்மையாகி விடுவாய்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 549) (497)

எனவே தலையின் அடிப்பாகம் நனைவது தான் கட்டாயமானது. மேலே உள்ள முடிகள் நனையாமல் இருப்பதால் குளிப்புக்கு எந்தக் குறைவும் ஏற்படாது.

சடையை அவிழ்க்காமல் குளிக்கும் போது, பாதிக்கு மேற்பட்ட முடிகள் நனைவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி இருந்தும் சடையை அவிழ்க்கத் தேவையில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.