கடன் தள்ளுபடி பற்றிய சட்டங்கள்

பயான் குறிப்புகள்: குர்ஆன் கூறும் அறிவியல்

கடன் தள்ளுபடி

கடன் கொடுத்தவர் ஒரு பாக்கியசாலி ஆவார். ஏனென்றால் கடன் வாங்கியவர் கடனைத் திருப்பிக் கொடுக்காமல் மரணித்தால் கடன் கொடுத்தவருக்கு அல்லாஹ் அதற்கான கூலியைக் கொடுக்கின்றான். ஆனால் அதே சமயம், கடனைத் தள்ளுபடி செய்து விட்டால் அல்லாஹ் நம்முடைய பாவத்தைத் தள்ளுபடி செய்கின்றான். “கடனை மன்னிக்க மாட்டேன்; மறுமையில் வந்து பார்க்கிறேன்’ என்று கூறிவிட்டால்  மறுமையில் கிடைக்கும். அது குறைவாகத் தான் கிடைக்கும். ஆனால் கடனை மன்னித்துவிட்டால் அதைவிடப் பெரிய நன்மையை எதிர்பார்க்க முடியும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் கைப்பற்றி, அவரிடம் “நீர் ஏதேனும் நல்லது செய்திருக்கிறீரா?” எனக் கேட்டனர். அதற்கு அம்மனிதர், “வசதியானவருக்கு அவகாசம் அளிக்கும்படியும் (அவர் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் செய்வதை) கண்டுகொள்ளாமல் விட்டுவிடும்படியும் நான் எனது ஊழியர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன்!” என்று கூறினார். உடனே, “அவரது தவறுகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள்!” என்று அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டான்!

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)

(புகாரி: 2077)

மற்றோர் அறிவிப்பில், “சிரமப்படுபவருக்கு நான் அவகாசம் அளிப்பவனாகவும் வசதியானவரிடம் மிருதுவாக நடப்பவனாகவும் இருந்தேன்!” என்று அவர் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

இன்னோர் அறிவிப்பில், “வசதியானவருக்கு அவகாசம் வழங்கியும்,  சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்தும் வந்தேன்!” என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.

மற்றோர் அறிவிப்பில் “வசதியானவரிடமிருந்து கடனைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்து வந்தேன்!” என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.

இங்கு நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் எவ்வளவு தான, தர்மம் செய்தாலும் அதற்கு இப்படியான ஒரு வாய்ப்பை அல்லாஹ் தருவானா? இல்லை. ஆனால் கடனுக்கு இப்படியான ஒரு பாக்கியத்தை அல்லாஹ் வைத்துள்ளான்.

நாம் கடன் கொடுத்து, அந்தக் கடனைத் தள்ளுபடி செய்யும் போது, நான் இதை உனக்காகச் செய்யவில்லை. மாறாக எனக்கு அல்லாஹ் சுவர்க்கத்தைத் தரவேண்டும்; மறுமை வாழ்க்கையை அல்லாஹ் எனக்கு எளிதாக்க வேண்டும் என்று நினைத்து தள்ளுபடி செய்ய வேண்டும். மறுமை நன்மையை எதிர்பார்த்து இதைசெய்ய வேண்டும். அதே போல நபி (ஸல்) அவர்கள் ஒரு சம்பவத்தை சொல்லுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முன் காலத்தில்) ஒரு மனிதர் மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் செல்கின்ற) தனது (அலுவலரான) வாலிபரிடம், “(வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீ சென்றால் (அவரைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து) விடு. அல்லாஹ்வும் (நம்மைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து விடக்கூடும்” என்று சொல்லிவந்தார். அவர் (மரணமடைந்து) அல்லாஹ்வைச் சந்தித்த போது அவருடைய பிழைகளைப் பொறுத்து  அவன் மன்னித்து விட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 3480)

கடன் பட்டவருக்காகப் பரிந்துரை செய்தல்

ஒருவர் கடன் பட்டிருக்கிறார். இன்னொருவர் கடன் கொடுத்திருக்கிறார். அப்படி இருக்கும் போது  கடன் வாங்கியவர் நம்மிடம் வந்து, எனக்காக அவரிடத்தில் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்டால், நாம் சொல்வதைக் கடன் கொடுத்தவர் கேட்பார் என்றால் நாம் சென்று அவரிடத்தில் அந்தக் கடனை விட்டுக் கொடுக்குமாறோ, அல்லது அவகாசம் கொடுக்குமாறோ அல்லது மன்னித்து விடுமாறோ அவருக்காகப் பேசலாம். நபியவர்கள் தம்முடைய தோழர்களுக்காக இவ்வாறு பரிந்துரை செய்துள்ளார்கள்.

(புகாரி: 2706, 457, 471, 2418, 2424, 2710)

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில்) எனக்கு அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் தர வேண்டியிருந்த ஒரு கடனை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் வைத்து திருப்பித் தரும்படி கேட்டேன். (இது தொடர்பாக எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு) எங்கள் இருவரின் குரல்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்தபடியே அதைக் கேட்கும் அளவிற்கு குரல்கள் உயர்ந்தன. ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிருவரையும் நோக்கிப் புறப்பட்டார்கள்.

தமது அறையின் திரையை விலக்கி, “கஅப்!” என்றழைத்தார்கள். நான், “இதோ வந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இதை (இந்த அளவை) உன் கடனிலிருந்து தள்ளுபடி செய்துவிடு!” என்று கூறி பாதியளவு கடனைக் குறைத்துக் கொள்ளும்படி (என்னிடம் விரலால்) சைகை செய்தார்கள். “அவ்வாறே செய்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் (அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அவர்களை நோக்கி,) “எழுந்து சென்று கடனை அடைப்பீராக!” என்று சொன்னார்கள்.

(புகாரி: 457)

அதே போன்று ஜாபிர் (ரலி) அவர்களுக்காகவும் நபி (ஸல்) அவர்கள் பரிந்த்துரை செய்கின்றார்கள். ஆனால் கடன் கொடுத்தவர் அதனை ஏற்று கொள்ளவில்லை என்ற செய்தியையும் ஹதீஸ்களில் (புகாரி: 2127, 2395, 2396, 2406, 2601, 2709) காணமுடிகிறது.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:  என் தந்தையார் உஹதுப் போரின் போது, அவர் மீது கடன் இருந்த நிலையில் (ஷஹீதாகக்) கொல்லப்பட்டு விட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் தம் உரிமைகளைக் கேட்டுக் கடுமை காட்டினார்கள். உடனே, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (விஷயத்தைக் கூறினேன்.)

நபி (ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவர்களிடம் என் தோட்டத்தின் பேரீச்சம் பழங்களை (கடனுக்குப் பகரமாக) ஏற்றுக் கொண்டு என் தந்தையை மன்னித்து (மீதிக் கடனைத்) தள்ளுபடி செய்து விடும்படி கேட்டுக் கொண்டார்கள். (அவ்வாறு செய்ய) அவர்கள் மறுத்து விட்டனர்.

ஆகவே, அவர்களுக்கு அந்தப் பேரீச்சம் பழங்களை நபி (ஸல்) அவர்கள் கொடுக்கவில்லை. மாறாக, “நாம் உன்னிடம் காலையில் வருவோம்” என்று கூறினார்கள். பிறகு காலையில் என்னிடம் வந்தார்கள். பேரீச்ச மரங்களிடையே சுற்றி வந்து, அவற்றின் கனிகளில் பரக்கத்துக்காக (அருள் வளத்திற்காக) துஆ செய்தார்கள். பிறகு, நான் அவற்றைப் பறித்துக் கடன் கொடுத்தவர்களின் கடன்களையெல்லாம் திருப்பிச் செலுத்தினேன். (முழுக் கடனையும் தீர்த்த பின்பும்) அதன் கனிகள் எங்களுக்கு மீதமாகி விட்டன.

(புகாரி: 2395)

கடனை தள்ளுபடி செய்வதன் சிறப்பு

அப்துல்லாஹ் பின் அபீகத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அபூகத்தாதா (ரலி) அவர்கள், தமக்குக் கடன் தர வேண்டிய ஒருவரைத் தேடினார்கள். அவர் தலைமறைவாகிவிட்டார். பின்னர் அவரைக் கண்டபோது அவர், “நான் (வசதியின்றி) சிரமப்படுபவன்” என்று கூறினார். அதற்கு அபூகத்தாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாகவா?” என்று கேட்டார்கள்.

அவர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாகத்தான்” என்றார். அபூகத்தாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மறுமை நாளின் துயரங்களிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்ற வேண்டுமென விரும்புகின்றவர், (கடனை அடைக்க முடியாமல்) சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிக்கட்டும். அல்லது கடனைத் தள்ளுபடி செய்துவிடட்டும்‘ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

(முஸ்லிம்: 3184)

கடனைத் தள்ளுபடி செய்வதால் எவ்வளவு பெரிய சிறப்பு இருக்கிறது என்பதைப் பாருங்கள். நபித்தோழர்கள் மறுமை வாழ்வின் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார்கள்; கஷ்டப்படுகிறேன் என்று சொன்னவுடன் எப்படி கட்டுப்பட்டு நடந்தார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

பிரச்சனை ஏற்பட்டால்….

கடன் வாங்கிய ஒருவனுக்கும் கடன் கொடுத்த ஒருவனுக்கும்  பிரச்சனை ஏற்பட்டு, இஸ்லாமிய ஆட்சிக்கு வழக்கு முறையாக வந்து, அதை விசாரித்துப் பார்த்தால் கடன் வாங்கியவன் திருப்பிக் கொடுப்பதற்கு வசதியில்லாமல் இருக்கிறான். அவனிடத்தில் இருப்பது, கடனை விடக் குறைவாக உள்ளது. இந்த நேரத்தில் ஓர் இஸ்லாமிய ஆட்சி எப்படித் தீர்வு அளிக்கவேண்டும்?

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் பழங்களை விலைக்கு வாங்கிய ஒருவர் (நஷ்டமடைந்து) பாதிக்கப்பட்டார். அவருக்குக் கடன் அதிகமாகிவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவருக்குத் தர்மம் செய்யுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே மக்கள் அவருக்குத் தர்மம் செய்தனர்.

அது அவரது கடனை அடைக்கப் போதுமான அளவுக்குத் தேறவில்லை. எனவே, அவருக்குக் கடன் கொடுத்தவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவரிடமிருந்து) கிடைப்பதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதைத் தவிர உங்களுக்கு வேறெதுவுமில்லை” என்று கூறினார்கள்.

(முஸ்லிம்: 3170)

கடனை எழுதிக் கொள்ளுதல்

ஒருவரிடம் கடன் வாங்கும் போது அவரிடத்தில் எழுதிக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆனால் இன்றைக்கு ஒரு மனிதனிடம் நல்ல முறையில் பழகிவிட்டோம் என்றால் அவரிடம் கடன் வாங்கும் போது “எழுதிக் கொள்ளுவோம்’ என்று கேட்டால் அவர் என்ன சொல்லுவார்? “என் மீது உனக்கு நம்பிக்கையில்லையா? எப்படி எல்லாம் நாம் பழகியிருக்கிறோம்’ என்று கூறுவார்.

இந்த நேரத்தில் அல்லாஹ் எப்படிப் பாதுகாக்கிறான் என்பதைப் பாருங்கள். அதாவது உங்கள் மீது எனக்கு நூறு சதவீதம் நம்பிக்கை தான் என்றாலும் அல்லாஹ் எழுதச் சொன்னதற்காக இதை எழுதுகிறோம் என்றால் பேச்சு முடிந்துவிடும். அண்ணன் தம்பியிடம் கடன் வாங்கும் போது அல்லது தம்பி அண்ணனிடம் வாங்கும் போது, “எப்படி எழுத முடியும்?’ என்ற கேள்விக்கே இடமில்லாமல் போய்விடுகிறது. இதை அல்லாஹ் தன் திருமறையில் கூறிக் காட்டுகின்றான்.

நம்பிக்கை கொண்டோரே! குறிப்பிட்ட காலக்கெடு விதித்து ஒருவருக்கொருவர் கடன் கொடுத்தால் அதை எழுதிக் கொள்ளுங்கள்! எழுதுபவர் உங்களுக்கிடையே நேர்மையான முறையில் எழுதட்டும். அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தது போல் எழுதிட எழுத்தர் மறுக்காது எழுதட்டும். கடன் வாங்கியவர், எழுதுவதற்குரிய வாசகங்களைச் சொல்லட்டும்! தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அதில் எதையும் குறைத்து விடக் கூடாது. கடன் வாங்கியவர் விபரமறியாதவராகவோ, பலவீனராகவோ, எழுதுவதற்கு ஏற்பச் சொல்ல இயலாதவராகவோ இருந்தால் அவரது பொறுப்பாளர் நேர்மையாகச் சொல்லட்டும். உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லா விட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்!) அவ்விரு பெண்களில் ஒருத்தி மறந்து விட்டால் மற்றொருத்தி நினைவு படுத்துவாள்.

அழைக்கப்படும் போது சாட்சிகள் மறுக்கக் கூடாது. சிறிதோ, பெரிதோ தவணையைக் குறிப்பிட்டு எழுதிக் கொள்வதை அலட்சியம் செய்யாதீர்கள்! இதுவே அல்லாஹ்விடம் நேர்மையானது; சாட்சியத்தை நிரூபிக்கத் தக்கது; ஒருவருக் கொருவர் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கு ஏற்றது. உங்களுக்கிடையே உடனுக்குடன் நடைபெறும் வியாபாரமாக இருந்தால் தவிர, (கடனில்லாத) வியாபாரத்தை எழுதிக் கொள்ளாமல் இருப்பது உங்களுக்குக் குற்றமாகாது. ஒப்பந்தம் செய்யும் போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! எழுத்தருக்கோ, சாட்சிக்கோ எந்த இடையூறும் அளிக்கப்படக் கூடாது. அவ்வாறு செய்தால் அது உங்கள் மீது குற்றம். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தருவான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 2:282)

இதை ஏன் அல்லாஹ் கட்டளை இட்டுச் சொல்கின்றான் என்றால் இன்றைக்குக்  கடன் வாங்கியவன் கடனைக் கொடுக்காமல் மறுத்து விடுவதையும், வாங்கியதை இல்லை என்று சொல்வதையும் பார்க்கிறோம்

கடனை எழுதிக் கொள்ள வேண்டும் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.

  1. முதலில் அடிப்படையை, அதாவது கடன் வாங்கியதையே மறுத்து விடுவான்.
  2. எவ்வளவு தொகை என்பதில் பிரச்சனை ஏற்படலாம்.
  3. தவணை விஷயத்தில் பிரச்சனை எழலாம்.

கடனை எழுதும் முறை

இந்தக் காலத்தில் அரசாங்க சட்டத்துக்கு உட்பட்டு எழுத வேண்டும்.  நம்முடைய இஷ்டத்துக்கு எழுதக் கூடாது. அன்றைய காலத்தில் ஒரு துண்டில் எழுதினார்கள் என்றால் அது அந்தக் காலத்துக்குப் பொருத்தமாக இருந்தது. இப்போது எப்படி எழுதினால் அதைத் திருப்பி வாங்க முடியுமோ அப்படி எழுதிக் கொள்ள வேண்டும்.

அப்படி எழுதிக் கொள்ள முடியாத சூழ்நிலை இருக்குமானால் அடமானம் வாங்கி விட்டுக் கொடுங்கள். அப்படி இல்லாமல் அவரை நன்றாக நம்புகிறீர்கள் என்றால் கொடுத்து கொள்ள முடியும். ஆனால் தவறு நடந்தால் மார்க்கத்தின் மீது குற்றம் சுமத்த முடியாது.

நீங்கள் பயணத்தில் இருக்கும் போது எழுத்தர் கிடைக்காவிட்டால் அடைமானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பினால் நம்பப்பட்டவர் தனது நாணயத்தை நிறைவேற்றட்டும். தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்! சாட்சியத்தை மறைத்து விடாதீர்கள்! அதை மறைப்பவரின் உள்ளம் குற்றம் புரிந்தது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 2:283)