ஒருவனே தேவன்! ஒன்றே குலம்!

பயான் குறிப்புகள்: கொள்கை

ஒருவனே தேவன்! ஒன்றே குலம்!

ஒரே கடவுள் என்ற வட்டத்திற்குள் உலக மக்கள் வந்து விட்டால் கடவுள் நம்பிக்கையில் அவர்களுக்கு மத்தியில் ஓர் இணக்கம், ஐக்கியம் ஏற்பட்டு அதன் மூலம் தத்துவ ரீதியில் அவர்கள் ஒரே குலமாகி விடுகின்றனர். அந்த ஒற்றுமை வெறும் சிந்தனையாக ஏட்டளவில் இருக்கக்கூடாது. அது செயல்பாட்டளவில் வந்து விட வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அதைத் திருக்குர்ஆனில் சொல்லிக் காட்டுகின்றான்.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

(அல்குர்ஆன்: 49:13)

மனித இனம் அனைவரும் ஆதம், ஹவ்வா என்ற ஒரே ஜோடியிலிருந்து தான் படைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மத்தியில் இனம், நிறம், நாடு, மொழி, கலாச்சார அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது என்று திருக்குர்ஆன் பிரகடனம் செய்கின்றது.

ஒரு மனிதனுக்கு மரியாதை, அந்தஸ்து, தகுதி அனைத்தும் அவன் தன்னைப் படைத்த இறைவனை எந்த அளவுக்கு அஞ்சுகின்றானோ அதைப் பொறுத்து தான். பிறப்பால், பணத்தால், நிறத்தால், இனத்தால் உயர்வு, தாழ்வு ஏற்படுவதில்லை என்று திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது.

இறைவனின் அன்பு, ஒரு குறிப்பிட்ட நாட்டவருக்கு – இனத்தவருக்கு – குடும்பத்தாருக்கு – மொழியினருக்குத் தான் கிடைக்கும் என்பதில்லை.

ஒரு வெள்ளையன் இறைவனுக்கு மாற்றமாக நடந்தால் அவன் இறைவனின் அன்பை, மரியாதையைப் பெற முடியாது. அதே சமயம் ஒரு கருப்பன் இறைவனை அஞ்சி நடந்தால் அவன் இறைவனின் அன்பை, மரியாதையைப் பெற முடியும்.

அதே போல் வெள்ளையனும் இறைவனைப் பயந்து நடக்கும் போது இறைவனிடம் உயர்ந்தவனாகி விடுகின்றான். ஒரு கருப்பன் இறைவனுக்கு மாற்றமாக நடந்தால் அவன் இறைவனிடம் தாழ்ந்தவனாகி விடுகின்றான்.

தூய்மையான துலாக்கோல்

ஒரு சாராரை நெற்றியில் பிறக்க வைத்து, அவர்களுக்கு உயர்வையும் மற்றொருவரைக் காலில் பிறக்க வைத்து அவர்களுக்குத் தாழ்வையும் கொடுப்பது இறைப்பண்பு அன்று! இது ஓர் அநியாய அளவுகோல் ஆகும். ஆனால் திருக்குர்ஆன் கூறுவதோ தூய்மையான துலாக்கோல் ஆகும்.

மனு தர்மம், பைபிள் போன்று இறைவனை ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் திருக்குர்ஆன் சொந்தமில்லை. உலகில் உள்ள மனித இனம் அனைத்தும் அவனது படைப்பு! அந்த மனித இனம் ஒரேயொரு ஜோடியிலிருந்து பிறந்திருக்கின்றது என்று கூறி ஒரு நொடியில் உலகில் உள்ள நிறம், மொழி, குலம், கோத்திரம், கலாச்சாரம் என்ற அனைத்து பேதங்களையும் தகர்த்தெறிந்து விடுகின்றது.

குலம், கோத்திரம்

மனிதன் ஒரு சமூகப் பிராணி! அவன் கூட்டாகத் தான் வாழ்ந்தாக வேண்டும். அந்தக் கூட்டு வாழ்க்கைக்கு யாராவது ஒருவன் தலைமைப் பொறுப்பேற்கின்றான். சமூகத்தில் இதனால் அவனது குடும்பத்திற்கு ஒரு மதிப்பு கிடைக்கின்றது. பிறகு அந்த ஊரை, அந்த நாட்டை, தலைமுறை தலைமுறையாக அந்தக் குடும்பம் ஆண்டு வருகின்றது. அது மன்னர் பரம்பரை என்று அழைக்கப்படுகின்றது.

அல்லது ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் ஒரு சீர்திருத்தச் சிந்தனைவாதி தோன்றியிருப்பான். அதனால் அந்தக் குடும்பம் மதிக்கப்படும். இந்தச் சமூக அந்தஸ்து, தலைமுறை தலைமுறையாகத் தொடரும்.

இப்படிப் பல்வேறு காரணங்களால் ஒரு குடும்பம் சமுதாயத்தில் மரியாதையைப் பெறுகின்றது. இப்படி மரியாதை பெறும் இந்தக் குடும்பம் தங்களுக்கு மத்தியில் மட்டும் திருமண உறவு வைத்துக் கொள்கின்றது. மற்ற குடும்பங்களில் திருமண சம்பந்தம் வைத்துக் கொள்வது கிடையாது. தங்கள் குடும்பங்களுக்கென்று சில மரபுகளையும், விதிமுறைகளையும் வைத்துக் கொண்டு, வரம்புகளை வகுத்துக் கொண்டு தங்களைச் சிறந்தவர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறது.

குரைஷிகளின் குலவெறி!

இதற்கு உதாரணமாக, அரபியாவின் குரைஷிக் குலத்தை எடுத்துக் கொள்ளலாம். அந்தக் குடும்பத்தார் இறைத்தூதர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித் தோன்றல்கள். இதன்படி கஅபாவை நிர்வகிக்கும் பொறுப்பைக் குரைஷிகள் தலைமுறை தலைமுறையாகப் பெறுகின்றனர். இவர்கள் தங்கள் குடும்பங்களை தனித்துவமிக்க குடும்பங்களாக ஆக்கிக் கொண்டனர்.

இவர்கள் தங்களை ஹுமுஸ் என்று அழைத்துக் கொண்டனர். ஹுமுஸ் என்றால் கடுமை, கடினம் என்று பொருளாகும். குரைஷிகள் தங்கள் மார்க்கத்தில் பிடிப்பாக இருப்பதால் அவர்களுக்கு இந்தப் பெயர். (நவவீயின் முஸ்லிம் விரிவுரை)

இவர்கள் ஹஜ், உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து விட்டால் இறைச்சி சாப்பிட மாட்டார்கள்; முடி, கம்பளியினால் ஆன ஆடைகளை அணிய மாட்டார்கள். மக்காவுக்கு வந்தால் இந்த ஆடைகளைக் களைந்து விடுவர். (இது அப்துல் அஜீஸ் பின் இம்ரான் அல்மதனீ என்பார் கூறும் விபரமாகும்.)

குரைஷிகளிடம் குரைஷி அல்லாதவர் யாரேனும் பெண் பேசி வந்தால், தங்கள் பிள்ளை தங்கள் மார்க்கத்தில் தான் இருப்பாள் என்று நிபந்தனையிட்டே திருமணம் முடித்துக் கொடுப்பார்கள். இந்த அடிப்படையில் சம்பந்தம் கொள்கின்ற கிளையாரில் தாய்கள் மட்டும் ஹுமுஸைச் சார்ந்தவர்கள் ஆவர். (பத்ஹுல் பாரி)

தகர்க்கப்பட்ட தனித்துவம்

ஆரம்ப காலத்தில் இவர்களது முன்னோர்கள் சீர்திருத்தவாதிகளாக, இறைத்தூதர்களாக இருந்ததால் கஅபா எனும் ஆலயத்தை நிர்வகிக்கும் பொறுப்பைப் பெறுகின்றனர். அதை வைத்துத் தங்கள் குடும்பத்தின் தனித்தன்மையை அப்படியே தலைமுறை தலைமுறையாகத் தக்க வைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஹஜ் என்பது மக்கள் அனைவரும் மக்காவில் ஒன்று கூடுவதாகும். அப்படி ஒன்று கூடும் மக்கள், மக்காவில் கஅபா எனும் ஆலயத்திற்கும், முஸ்தலிபா என்ற இடத்திற்கும், அரஃபா என்ற இடத்திற்கும் கண்டிப்பாக வருகையளிக்க வேண்டும்.

ஆனால் இந்தக் குரைஷிகளோ மற்ற மக்களைப் போன்று அரஃபாவுக்கு வர மாட்டார்கள். முஸ்தலிபா என்ற இடத்திற்கு மட்டும் வருகையளிப்பார்கள்.

மக்காவில் தூய இஸ்லாம் வருவதற்கு முன்னால் ஹும்ஸ் கிளையாரைத் தவிர மற்ற மக்கள் நிர்வாணமாகவே கஅபாவைச் சுற்றி வந்துள்ளனர். ஹும்ஸ் என்றால் குரைஷிகளும் அவர்களது சந்ததிகளும் ஆவர். அவர்களில் ஓர் ஆண் இன்னோர் ஆணுக்கு தவாஃப் (கஃபாவை சுற்றி வருவதற்காக) செய்வதற்காக ஆடை கொடுப்பார். ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு ஆடை கொடுப்பார். இந்த ஹும்ஸ் கிளையார் யாருக்கு ஆடை கொடுக்கவில்லையோ அவர் நிர்வாணமாக தவாஃப் செய்வார். மேலும் மக்கள் அரஃபாவிலிருந்து திரும்புவார்கள். ஆனால் குரைஷிகளோ எல்லாம் முடிந்த பின்னர் முஸ்தலிஃபாவிலிருந்து தான் திரும்புவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(புகாரி: 1665)

(தவாஃப் என்றால் கஃபாவை வலம் வருதலாகும்)

அல்குர்ஆன் அடிக்கும் சாவுமணி

இந்த அறியாமைக் காலப் பழக்கத்திற்கு, அகந்தைக்கு, குலவெறிக்குத் தான் அல்குர்ஆன் சாவுமணி அடிக்கின்றது.

மக்கள் எங்கிருந்து புறப்படுகிறார்களோ அங்கிருந்து நீங்களும் புறப்படுங்கள்! (2:199) என்ற வசனம் குரைஷிகள் தொடர்பாக இறங்கியது தான். (புகாரி: 1665)

அல்குர்ஆனின் இந்த ஆணைப்படி குரைஷிகளின் குடும்ப வெறி அடித்து உடைத்துத் தரைமட்டமாக்கப்படுகின்றது. அதன்படி இறைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்யும் போது அவர்கள் குரைஷிக் குடும்பத்தவராக இருந்தாலும் அரஃபாவில் வந்து நிற்கின்றார்கள்.

அதைப் பார்த்து மற்ற குரைஷிகள் ஆச்சரியப்படுகின்றனர்.

(நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்) அரஃபா தினத்தில் எனது ஒட்டகம் காணாமல் போனது. அதைத் தேடிக் கொண்டு வந்த போது நபி (ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்தில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். அப்போது நான், “இவர் குரைஷிக் குலத்தவராயிற்றே! இவருக்கு இங்கு என்ன வேலை?” என்று எனக்குள் கூறிக் கொண்டேன்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்யிம் (ரலி)

(புகாரி: 1664)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குரைஷிக் குலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அரஃபாவில் தங்காமல் தங்கள் வழக்கத்தை அப்படியே தக்க வைத்துக் கொள்வார்கள் என்று குரைஷிகள் எதிர்பார்த்தனர். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அந்த அறியாமைக் காலத்துப் பழக்கத்திற்கு அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப முடிவு கட்டிவிடுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அரஃபாவை நோக்கி) சென்றார்கள். குறைஷிகள், அறியாமைக் காலத்தில் தாங்கள் செய்து கொண்டிருந்த அதே வழக்கப்படி நபி (ஸல்) அவர்களும் முஜ்தலிஃபாவில் உள்ள மஷ்அரில் ஹராமில் நிற்பார்கள்; அவர்களின் தங்குமிடமும் நிச்சயமாக அங்கு தான் அமையும் என்று உறுதியாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் (அதற்கு மாற்றமாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஜ்தலிஃபாவில் தங்காமல்) கடந்து சென்று அரஃபாவுக்குப் பக்கத்தில் வந்து விட்டார்கள். நமிராவில் அவர்களுக்குக் கூடாரம் அமைக்கப்பட்டுத் தயார் நிலையில் இருக்கக் கண்டு அங்கேயே தங்கினார்கள். (முஸ்லிம்: 2137)

ஹஜ் – ஒரு தீண்டாமை ஒழிப்பு மாநாடு

குரைஷிக் குலத்தைச் சார்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மற்ற மக்களைப் போன்று அரஃபாவிற்குச் சென்று குலவெறியை உடைத்தெறிகின்றார்கள். இதற்குக் காரணம் ஹஜ் ஒரு தீண்டாமை ஒழிப்பு மாநாடாகும்.

இஸ்லாம், உலகத்தில் ஒவ்வொரு பள்ளிவாசலிலும் ஐந்து நேரத் தொழுகைகளின் போது மக்களைக் கூட்டாக தொழச் செய்கின்றது. அதாவது அந்த கூட்டுத் தொழுகையின் போது ஏழை ஒரு பணக்காரரின் பக்கத்தில் நிற்பார். பணக்காரர் ஏழையின் பக்கத்தில் நிற்பார். ஒரு சிவப்பு நிறத்தவர் கருப்பு நிறத்தவர் பக்கத்தில் நிற்பார். அவர் மேனி இவர் மேனியில் உரசும்; இவர் மேனி அவர் மேனியில் உரசும்.

வரிசையில் ஒருவர் பின் ஒருவர் நின்று தொழும்போது ஒருவரது கால் பின்னால் நிற்பவரின் தலையில் படும். முந்தி நிற்பவர் ஏழையாகவும் பிந்தி நிற்பவர் பணக்காரராகவும் இருப்பார்; முந்தி நிற்பவர் பணியாளராக இருப்பார். பிந்தி நிற்பவர் முதலாளியாக இருப்பார். இப்படி ஒரு சந்திப்பை ஐந்து நேரத் தொழுகையின் போது அன்றாடம் அந்தந்த ஊர் பள்ளிவாசல்களில் இஸ்லாம் அமைத்துக் கொடுத்து உள்ளூர் அளவில் தீண்டாமையை ஒழிக்கின்றது.

உலக அளவில் பல மொழி பேசுபவர்களை, பல நிறத்தவர்களை பல நாட்டவர்களை உலகின் பல பாகங்களிலிருந்து வரவழைத்து, அவர்கள் பிரதமர்களாக இருக்கலாம்! ஜனாதிபதிகளாக இருக்கலாம்! அவர்களை சாமானிய மக்களுடன் கஅபா எனும் ஆலயத்தில் வலம் வரச் செய்து தீண்டாமையை ஒழிக்கின்றது. அன்று முஹம்மது நபி அவர்கள் ஒழித்த அந்தத் தீண்டாமை ஒழிப்பு இன்னும் தொடர்கின்றது. உண்மையில் இது இஸ்லாம் தீண்டாமை ஒழிப்புக்கு எதிராக இதுவரை நடைமுறைப்படுத்துகின்ற செயல் திட்டமாகும்.

சம்பந்தியும் சமபந்தியும்

தீண்டாமை தொடர்வதற்கு உயர் குலத்தார், உயர் குலத்தாருடன் மட்டுமே திருமண சம்பந்தம் கொள்வது ஓர் அடிப்படைக் காரணமாக அமைகின்றது. நபி (ஸல்) அவர்கள் இந்தக் குடும்ப வெறியைத் தகர்க்கும் வகையில், தன்னிடம் வளர்ந்த ஸைத் என்ற அடிமைக்கு, குரைஷிக் குலத்தைச் சார்ந்த தனது அத்தை மகள் ஸைனபைத் திருமணம் செய்து வைக்கின்றார்கள். இது அரபுலகிற்கு ஓர் அதிசய நிகழ்வாகும். இவ்விருவருக்கும் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டு விவாக விலக்கு நிகழ்ந்தாலும், அரபகத்தில் நிலவிய ‘உயர் குலத்தவர்கள் தங்களுக்குள் தான் சம்பந்தம் செய்து கொள்ள வேண்டும்’ என்ற மரபு உடைக்கப்பட்டு விட்டது.

அனைவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் என்று திருக்குர்ஆன் கூறுவது போல் குலம் குறுக்கே நிற்காத வண்ணம், இறையச்சம் தான் சம்பந்தத்திற்குரிய அளவுகோல் என்று நிலைநாட்டி, தீண்டாமையைத் தகர்த்தெறிந்தார்கள்.

1980களில், நெல்லை மாவட்டம், மீனாட்சி புரத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது. தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் மதத்தை விட்டு வெளியே போய் விடக் கூடாது என்பதற்காக இந்து மதத் தலைவர்கள் சமபந்தி போஜனம் நடத்தினார்கள்.

அப்போது அந்த மக்கள் எழுப்பிய கேள்வி இது தான். சமபந்தி போஜனம் வேண்டாம்! சம்பந்தி போஜனம் நடத்த முடியுமா? இந்தக் கேள்விக்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. அவர்கள் ஒருபோதும் பதில் சொல்ல முடியாது. காரணம் அவர்களின் திருமணம், மனுசாத்திரம் சொல்வது போன்ற குலரீதியான, சாதி அடிப்படையிலான திருமணம். ஆனால் திருக்குர்ஆன் கூறுவதோ கொள்கை அடிப்படையிலான திருமணமாகும்.

தாழ்த்தப்பட்டவர் தளபதியான அதிசயம்

தலைமைப் பொறுப்புக்குத் தாங்கள் மட்டுமே தகுதி என்று எண்ணிக் கொண்டிருந்த குரைஷிகளின் குருட்டு எண்ணத்தையும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உடைக்கின்றார்கள். அடிமையாக இருந்த ஸைத் (ரலி) அவர்களையும், அதற்குப் பின் அவரது மகன் உஸாமா (ரலி) அவர்களையும் படைகளுக்குத் தளபதியாக நியமித்து, குலப் பெருமையைக் குழி தோண்டிப் புதைக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள், உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உஸாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(இப்போது) இவரது தலைமையை நீங்கள் குறை கூறுகின்றீர்கள் என்றால், இதற்கு முன் (முஃத்தா போரின் போது) இவரது தந்தையின் தலைமையையும் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதி உடையவராகவே இருந்தார். மேலும் அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார். இவர் (உஸாமா) தான் அவருக்குப் பின் எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(புகாரி: 3730)

இதுவரை நாம் கண்டது உயர்குலம் என்ற ரீதியில் ஏற்பட்ட தீண்டாமையாகும். இனி இதர காரணிகளால் ஏற்படுகின்ற தீண்டாமை மற்றும் ஏற்றத்தாழ்வுகளையும் அவற்றிற்குத் திருக்குர்ஆன் தருகின்ற தீர்வுகளையும் இப்போது பார்ப்போம்.

ஆட்சியாளர்களும் அடிமைகளும்

அடுத்து, தீண்டாமையை உருவாக்குவதில் ஆட்சியதிகாரம் ஒரு முக்கியக் காரணியாக அமைந்துள்ளது. பொதுவாக ஒருவனுக்கு அதிகாரம் வந்தவுடனேயே அவன் மற்றவர்கள் தனக்குப் பணிய வேண்டும்; பாதத்தில் விழ வேண்டும் என்று நினைக்கத் துவங்கி விடுகின்றான்.

எனவே ஆள்பவன் கடவுள் நிலைக்கும், ஆளப்படுபவன் அடிமை நிலைக்கும் போய் விடுகின்றான். இதனால் ஆள்பவனின் குடும்பத்தார் உயர் ஜாதியினராகவும், ஆளப்படுபவனின் குடும்பத்தார் தாழ்ந்தவர்களாகவும் கருதப்படும் நிலை உருவாகி விடுகின்றது. இந்த வாசலையும் இஸ்லாம் அடைக்கின்றது.

திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முன்னால் இருந்த அரபிகள், பாரசீகர்கள், ரோமாபுரியினர், கிரேக்கர்கள், இந்தியர்கள் என யாரை எடுத்துக் கொண்டாலும் அவர்களிடம் ஈரடுக்கு வர்க்கங்கள், மூன்றடுக்கு வர்க்கங்கள், நான்கடுக்கு வர்க்கங்கள் இருந்தன. எனவே, அப்போது அருளப்பெற்ற திருக்குர்ஆன் அரபகத்தை மட்டும் கவனத்தில் கொள்ளவில்லை. முழு மனித சமுதாயத்தையும் கவனத்தில் கொண்டது.

மனித குலத்தில் உள்ள இந்த வேறுபாடுகளின் வேரை நோக்கி, குர்ஆன் தனது தூர நோக்குப் பார்வையை, தீர்க்கமான சிந்தனையைச் செலுத்தியது. தீண்டாமை என்ற நோயின் காரணத்தைக் கண்டறிந்தது.

அன்றிருந்த ஆளும் வர்க்கங்கள் தங்களிடம் தெய்வீகத் தன்மை இருப்பதாகப் பறைசாற்றினர். குடிமக்களின் உள்ளங்களிலும், உணர்வுகளிலும் அதை உறையச் செய்தார்கள். இதன் விளைவாக அந்த மக்கள் தங்கள் ஆட்சியாளர்களை, சாதாரண ஆட்சியாளர்கள் என்று பார்க்காமல் கடவுளர்களாகப் பார்த்தனர். அவர்களுக்கு வணக்கமும் செலுத்தினார்கள்.

ஆட்சியாளர்கள் தெய்வங்கள் ஆயினர்; மக்கள் அடிமைகளாயினர். ஆட்சியாளர்கள் சொகுசு வாழ்க்கையில் திளைத்தார்கள்; குடிமக்களோ சுரண்டப்பட்டார்கள்.

ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை

“அவனன்றி (உண்மையான அந்த கடவுளன்றி) நான் தான் வணக்கத்திற்குரியவன்” என்று கூறுபவனுக்கு நரகத்தையே கூலியாக வழங்குவோம். அநீதி இழைத்தோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.

(அல்குர்ஆன்: 21:29)

மேற்கண்ட திருக்குர்ஆனின் இந்த வசனம் மனிதர்களில் எவரும் கடவுளாக முடியாது; கடவுளைத் தவிர்த்துள்ள மற்ற பொருட்கள் அனைத்தும் அவனால் படைக்கப்பட்டவை; எனவே அவையும் கடவுளாக முடியாது என்பதைக் கூறுகின்றது.

தான் ஒருவன் மட்டுமே கடவுள்! தன்னைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லை; எதுவுமில்லை என்று இறைவன் தெளிவுபடுத்தி விடுகின்றான்.

ஏற்கனவே மேலே நாம் சுட்டிக் காட்டிய கடவுளுக்குரிய பண்புகளை, ஆட்சித் தலைவர்களுக்குப் பொருத்திப் பார்த்தோம் என்றால் ஆட்சித் தலைவர்களைக் கடவுளாக்கும் அநியாயம் தடுக்கப்பட்டு, அதனால் ஏற்படுகின்ற தீண்டாமை மற்றும் ஏற்றத்தாழ்வுகள் தலைகாட்டாமல் தவிர்க்கப்படும்.

ஆள்கின்ற ஆட்சியாளர்களும் மனிதர்கள் தான்; அவர்களும் அல்லாஹ்வின் அடிமைகள் என்று ஆகிவிடும் போது மக்கள் அனைவரும் வெள்ளையர், கருப்பர், ஆள்வோர், ஆளப்படுவோர் என்று வேறுபாடு எதுவுமின்றி அல்லாஹ்வின் அடிமைகள் என்றாகி விடுகின்றனர். வல்ல இறைவனைத் தவிர்த்து அவர்களுக்கு வேறு எஜமானர்கள் யாரும் இல்லை. அவன் ஒருவன் தான் அவர்களுக்கு எஜமானன். அதாவது அவன் ஒருவனே தேவன்; மற்றவர்கள் அனைவரும் அடிமைகளே!

தரை மட்டமாக்கப்படும் தனி மனித வழிபாடு

அரசனுக்குச் சிரம் பணிதல் என்ன? அவன் வரும் போது எழுந்து கூட நிற்கக் கூடாது என்று கட்டளையிட்ட மார்க்கம் இஸ்லாம் மார்க்கம். மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரராகத் திகழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமக்காக மற்றவர்கள் எழுந்து நிற்பதைத் தடை செய்கின்றார்கள்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம்.

தொழுகையை முடித்தவுடன், ‘‘பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க, மக்கள் நிற்பார்களே! அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே! இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள். அவர்கள் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள். அவர்கள் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்’’ என்று கூறினார்கள்

(முஸ்லிம்: 701)

உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை என்றாலும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்: அஹ்மது 12068, திர்மிதி 2678

நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபதியாகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் சுபைர் அவர்களும், இப்னு சஃப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) அவர்கள் அமருங்கள் என்றார். “தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதை நான் செவியேற்றுள்ளேன் என்று முஆவியா (ரலி) சொன்னார்கள்.

(அபூதாவூத்: 4552)

தொண்டன் எப்படி இந்திரியத் துளியிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றானோ அப்படித் தான் தலைவனும் படைக்கப்பட்டிருக்கிறான். எனவே ஒரு குடிமகன் தன்னுடைய ஆட்சியாளனிடம் ஒரு நொடிப் பொழுது கூடத் தனது தன்மானத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று சொல்கின்ற தூய மார்க்கம் இஸ்லாம் மார்க்கம் மட்டும் தான். உலகில் எந்தவொரு மார்க்கமும் சொல்லாத ஓர் உயரிய, ஒப்பற்ற தன்மான உணர்வை இஸ்லாம் போதிக்கின்றது.

பிரஞ்சுப் புரட்சி

குலம், கோத்திரத்தால் தீண்டாமை ஏற்படுவது போல் செல்வத்தாலும் தீண்டாமை மற்றும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன.

பதினெட்டாம் நூற்றாண்டில் பிரஞ்சுப் புரட்சி ஏற்பட்டதற்குக் காரணம், பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் ஏற்பட்ட வேறுபாடு தான். பிரான்ஸ் தேசிய சட்டசபையில் பாதிரியார்கள், பிரபுக்கள், நடுத்தர வர்க்கத்தினர் என மூன்று சாரார் இருந்தனர். இம்மூன்று சாராரில் ஆளும் வர்க்கத்தினருக்கும், பணக்கார வர்க்கத்தினருக்கும் ஜால்ரா போடும் பாதிரியார்கள் மற்றும் பிரபுக்கள் ஆகியோருக்குத் தான் வாக்குரிமை இருந்தது. நடுத்தர வர்க்கத்தினருக்கு வாக்களிக்க உரிமை இல்லை.

வாக்களிக்கும் போது தலைகளை எண்ணுங்கள்; தரத்தை எண்ணாதீர்கள் என்று நடுத்தர வர்க்கத்தினர் கோரினர். ஆனால் மன்னர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் தோன்றியது தான் பிரஞ்சுப் புரட்சி!

இப்படி செல்வம் படைத்தவர்கள், செல்வாக்கு மிக்கவர்களால் உருவாக்கப்படும் ஏற்றத்தாழ்வுகளையும் இஸ்லாம் தகர்க்கின்றது.

தடுக்கப்பட்ட தனி அவை

முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் மக்காவில் உள்ள உயர்குலத்துத் தலைவர்கள், ‘எங்களுக்கு ஒரு சந்திப்பை நீங்கள் அளிக்க வேண்டும்; ஆனால் அந்த சந்திப்பின் போது உங்களுடைய கொள்கையை ஏற்றுக் கொண்ட இந்த ஏழைகள், அடிமைகள் உங்களுடன் இருக்கக் கூடாது’ என்று நிபந்தனையிட்டனர். அவ்வாறு நிபந்தனையிட்டதற்கு உயர்சாதி மனப்பான்மை தான் காரணம். காலா காலம் இந்த ஏழைகளையும், அடிமைகளையும் தங்கள் பக்கம் அண்டவிடாமல் தூரத்திலேயே வைத்திருந்தனர்.

உயர்குலத்துத் தலைவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். ஏழைகளும், அடிமைகளும் நபியவர்களுடன் இருப்பது அவர்களுக்கு ஒரு தடைக்கல்லாக இருந்தது. அதனால் இந்தக் கோரிக்கையை நபி (ஸல்) அவர்களிடம் வைக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்களை அந்த நிபந்தனையின் அடிப்படையில் சந்திப்பதற்கு முடிவு செய்து விடுகின்றார்கள். அதைக் கண்டித்து இறைவனிடமிருந்து கண்டனக் கட்டளை வருகின்றது. அந்த கண்டனம் இதோ:

(முஹம்மதே!) தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டாதீர்! அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே அவர்களை நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராவீர்!

(அல்குர்ஆன்: 6:52)

ஏழைகளுக்கு ஓர் அவை; செல்வந்தர்களுக்கு ஓர் அவை என்று ஈரவை அமைக்கும் உயர்சாதி மனப்பான்மையை இந்த வசனம் அடித்து நொறுக்கி விடுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எதிர்த்தவர்களுக்கு நபிகளாரின் நாணயத்தின் மீது நம்பிக்கை இருந்தது. நாற்பது வருடங்களாக அவர்களின் அப்பழுக்கற்ற வாழ்க்கையைப் பார்த்த அம்மக்கள், இறைத்தூதர் என்று முஹம்மது பொய் சொல்கின்றார் என நினைக்கவில்லை.

அவர்களிடம் உள்ள முக்கியமான தயக்கம் காலா காலம் கட்டிக் காத்து வந்த சாதி அமைப்பை இவர் உடைத்தெறிகின்றார். உயர் குலத்தைச் சேர்ந்த இவர், தங்களால் இழிகுலத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்ளை தம்மோடு சமமாக அமர வைக்கின்றார். இவரோடு நாமும் சேர்ந்தால் அனைவரையும் சமமாக ஆக்கி விடுவார் என்ற அச்சம் தான் நபிகள் நாயகத்தை ஏற்பதற்குப் பெரிய தடையாக அம்மக்களுக்கு இருந்தது.

எனவே தான் அவர்களுக்குத் தனிச் சபையையும், தங்களுக்குத் தனிச் சபையையும் ஏற்படுத்தினால் இஸ்லாத்தை ஏற்கத் தயார் என்று அவர்கள் கோரினார்கள்.

செல்வமும், செல்வாக்கும் மிக்கவர்கள் இஸ்லாத்தில் சேர்வது பலம் சேர்க்கும் என்று நினைத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இதைச் சரி என நினைத்தார்கள். இஸ்லாத்தை ஏற்ற பின் அவர்களைப் பக்குவப்படுத்திக் கொள்ளலாம் என்பது இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு நினைத்தார்கள் என்பதை முஸ்லிம் என்ற நூலில் 2413 எண்ணில் பதிவான ஒரு செய்தி இதைத் தெரிவிக்கின்றது. அதைக் கண்டிக்கும் விதமாகத் தான் மேற்கண்ட வசனம் இறங்கியது என்று அந்த ஆதாரப்பூர்வமான செய்தி தெரிவிக்கின்றது.

ஆனால் இறைவனுக்கு அதில் உடன்பாடில்லை. இஸ்லாத்தை ஏற்பதாக இருந்தால் அனைவரும் சமம் என்ற அடிப்படையையும் சேர்த்து ஏற்றாக வேண்டும். தமக்கு வசதியானதை மட்டும் ஏற்று, மற்றதை ஏற்க மறுப்பவர்களுக்காக வளையத் தேவையில்லை. அவர்கள் வரத் தேவையில்லை என்பது தான் அல்லாஹ்வின் நிலையாக இருந்தது.

எனவே தான் மேற்கண்ட வசனத்தில் கடுமையாகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் எச்சரிக்கிறான். ஏற்கனவே முழு இஸ்லாத்தை ஏற்றவர்களுடன் தான் இருக்க வேண்டுமே தவிர பாதி இஸ்லாத்தை ஏற்பதாகக் கூறுவோரின் செல்வம், செல்வாக்கு போன்றவற்றால் கவரப்பட்டுவிட வேண்டாம் என்று கண்டிக்கின்றான்.

இதே போல் மற்றொரு சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் கண்டிக்கின்றான்.

கண் தெரியாத தோழருக்குக் கண்ணியம் கொடுத்த குர்ஆன்

அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற பார்வையற்ற தோழர் நபிகள் நாயகத்திடம் வந்தார். எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இணை வைப்பவர்களில் முக்கியப் பிரமுகர் ஒருவர் இருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பார்வையற்ற தோழரைப் புறக்கணித்து விட்டு, முக்கியப் பிரமுகரின் பால் கவனம் செலுத்தினார்கள். “நான் கூறுவதில் தவறு ஏதும் காண்கிறாயா?” என்று அந்தப் பிரமுகரிடம் நபியவர்கள் கேட்க, அவர் இல்லை என்று கூறினார். அப்போது தான் அல்குர்ஆன் 80வது அத்தியாயம் 1 முதல் 10 வரையிலான வசனங்கள் அருளப்பட்டன.

ஆதாரம் : திர்மிதி – 3452, 3328,

முஸ்னத் அபூயஃலா – 4848

தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்.

(அல்குர்ஆன்: 80:1-10)

ஏற்கனவே இஸ்லாத்தை ஏற்ற பலவீனரை விட, இஸ்லாத்தை ஏற்காதவர் பிரமுகர் என்பதற்காக நபிகள் நாயகம் முக்கியத்துவம் அளித்தார்கள் என்பதால் எவ்வளவு கடுமையான சொற்களால் இறைவன் கண்டிக்கிறான் என்பதைக் காணும் போது பெரும் பாவமான இணை வைத்தலுக்கு அடுத்தபடியாக, குலத்தால் உயர்வு கற்பித்தல் இறைவனுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தும் காரியம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே இந்த விஷயத்திற்காக மிகவும் கடுமையாகக் கண்டிக்கப் பட்டுள்ளதால் தான் முஸ்லிம்கள் சாதி, குலம், நிறம், மொழி, இனம், தேசம் போன்ற காரணங்களால் மனிதர்களுக்கிடையே உயர்வு தாழ்வு கற்பிப்பதைக் காண முடியவில்லை. எத்தனையோ சட்டங்கள் போட்டு ஒழிக்க முடியாத தீண்டாமையை அடியோடு இஸ்லாம் ஒழித்துக் கட்டியதற்கு இத்தகைய கடுமையான நிலைபாடே காரணமாக இருக்கின்றது.

சாதாரண மக்களுக்காகத் தனது தூதரையே இறைவன் கண்டிக்கிறான் என்பதால் தான் மனிதர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு கற்பித்தல் கூடாது என்பது முஸ்லிம்களின் இரத்தங்களில் இரண்டறக் கலந்து விட்டது.

தொண்டருக்கு ஸலாம் கூறும் தலைவர்

செல்வம், செல்வாக்கு மிக்கவர்களுக்காக ஏழைகளின் உணர்வைக் காயப்படுத்தும் அந்தக் காட்டுத்தன்மை, ஏழைகளின் இயக்கமான இஸ்லாம் மார்க்கத்தை உலகுக்குக் கூற வந்த உத்தம நபி முஹம்மது (ஸல்) அவர்களின் உள்ளத்தில் வந்து விடக் கூடாது என்பதற்காக அதை முளையிலேயே கிள்ளி எறிகின்றான்.

ஒரு தலைவர் தொண்டரிடத்தில் பார்க்க வேண்டியது இறையச்சம், மார்க்கப் பற்று ஆகிய அம்சங்களைத் தானே தவிர செல்வம், செல்வாக்கு ஆகியவற்றை அல்ல என்று வல்ல அல்லாஹ் ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறான். அத்துடன் இன்னொரு விஷயத்தையும் தன் தூதரிடம் அழுத்தமாகப் பதிவு செய்கின்றான்.

(முஹம்மதே!) நமது வசனங்களை நம்புவோர் உம்மிடம் வந்தால் “உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அருள் புரிவதைத் தன் மீது உங்கள் இறைவன் கடமையாக்கிக் கொண்டான். உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக தீமையைச் செய்து விட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டால் அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன்: 6:54)

இன்று உலகில் தொண்டர்கள் தான் தலைவருக்கு முகமன், வாழ்த்துச் சொல்ல வேண்டும். மாணவர் தான் ஆசிரியருக்கு முகமன் சொல்ல வேண்டும். மனைவி தான் கணவனுக்கு முகமன் சொல்ல வேண்டும்.

இந்தக் கலாச்சாரத்தை மாற்றியமைத்து, தலைவரான முஹம்மது நபி (ஸல்) அவர்களைத் தொண்டர்களுக்கு ஸலாம் சொல்லுமாறு இறைவன் கட்டளையிடுகின்றான்.

ஏழைகளுக்கு இஸ்லாம் மார்க்கம் கொடுக்கும் மரியாதையைப் போன்று வேறு எந்த இயக்கமும் மரியாதை வழங்குமா? இந்த இயக்கத்தில் தீண்டாமை எள்ளளவு, எள் முனையளவாவது தலை காட்ட முடியுமா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

அடிமைத் தளையை அகற்றிய குர்ஆன்

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார்.  தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார்.

அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.

(அல்குர்ஆன்: 7:157)

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது பணிகளைப் பட்டியலிடும் போது அடிமைத்தளைகளை, விலங்குகளை அகற்றுவதையும் குறிப்பிடுகின்றான். ஆம்! அடிமைத்தனத்தை அகற்றுவது என்பது அந்த இறைத்தூதரின் பணி.

அந்த அடிப்படையில் அவர்கள் பல்வேறு சட்டங்கள் மூலம் அடிமைத்தனத்தை அழித்தொழிக்கின்றார்கள். இதனால் ஏற்படுகின்ற சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சாதனை படைக்கின்றார்கள்.

அடிமைகள் எனப்படுவோர் உலக முழுவதும் அடக்குமுறைகளுக்கும் அத்துமீறல்களுக்கும் இலக்காயினர். அடிப்படை உரிமைகள் கூட அவர்களுக்கு மறுக்கப்பட்டு, மிருகத்தை விடவும் கீழாக நடத்தப்பட்டனர். சித்திரவதைக் குள்ளாக்கப்பட்டனர். மனித சுதந்திரம், நாகரிகம் பேசிய ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் இந்த அநியாயத்திலும் அக்கிரமத்திலும் முன்னணி வகித்தன.

ஆனால் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள், அடிமைகள் வாழ்வில் விடுதலை என்னும் விளக்கேற்றி அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தார்கள். திருக்குர்ஆன் அந்தத் திட்டத்தை அவர்களுக்கு வழங்கியது.

மனிதன் பாவம் செய்யக்கூடியவன். அவன் செய்யக்கூடிய பல பாவங்களுக்கு அடிமையை விடுதலை செய்வதைப் பரிகாரமாக ஆக்கி, அடிமைத்தனத்தை அகற்றி அப்புறப்படுத்தியது.

உதாரணத்திற்குப் பின்வரும் வசனத்தைக் குறிப்பிடலாம்.

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக, திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே.

(அல்குர்ஆன்: 5:89)

அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஒரு காரியத்தை ஒருவர் செய்வேன் என்றோ அல்லது செய்யமாட்டேன் என்றோ முடிவெடுக்கலாம். ஆனால் மனிதன் என்ற அடிப்படையில் இதை மீறி விட்டால் அதற்கு ஓர் அடிமையை விடுதலை செய்வதைத் திருக்குர்ஆன் பரிகாரமாக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக மேற்கண்ட வசனத்தைக் கூறியுள்ளோம். இப்படிப் பல பாவங்களுக்கு அடிமை விடுதலையைப் பரிகாரமாக்கி அடிமைத் தளையை திருக்குர்ஆன் ஒழித்தது.

தேசியம் மற்றும் மொழி வெறி

மனிதர்களிடையே ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கு வித்திடும் தீய சத்துக்களாக, தேசப்பற்றும் மொழிவெறியும் திகழ்கின்றன. இது இன்னொரு தேசத்துக்காரனையும் மொழி பேசுபவனையும் அந்நியப்படுத்திப் பார்க்க வைக்கின்றது. அவனை மட்டரகமாக நினைக்க வைத்து அதன் மூலம் ஒரு தீண்டாமையை உருவாக்குகின்றது.

இலங்கை பற்றி எரிந்ததற்கும், இலட்சக் கணக்கான உயிர்கள் பலியானதற்கும் இந்த மொழி வெறி தான் காரணம். நமது நாட்டிலேயே தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் கேரளத்திற்கும் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு இந்த மொழிவெறி தான் காரணம்.

இந்தக் குறுகிய சிந்தனையை உள்ளத்திலிருந்து இஸ்லாம் கழற்றி விடுகின்றது. இஸ்லாத்தில் இருந்து கொண்டு யாராவது ஒருவர் மொழி, தேசியம் என்ற அடிப்படையில் சண்டையிட்டுக் கொண்டார் என்றால், அந்தச் சண்டையில் உயிர் துறப்பார் என்றால் அவர் முஸ்லிமாக மரணிக்கவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

“(தன்) இனத்தை ஆதரித்து, குருட்டு சிந்தனை என்ற கொடியின் கீழ் போரிட்டு கொல்லப்படுபவரின் மரணம் அறியாமைக் காலத்து மரணமே” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் அல்பஜலி (ரலி)

நூல்: (முஸ்லிம்: 3770) (3440)

இரு சமுதாயங்களுக்கு மத்தியில் ஏதேனும் விவகாரம் ஏற்பட்டால் அந்த விவகாரத்தில் நியாயம், அநியாயம் என்ற அடிப்படையில் தான் பார்க்க வேண்டுமே தவிர, இவர் நம் இனத்தவர், இவர் நம் எதிரி இனத்தார் என்று பார்க்கக் கூடாது. அப்படிப் பார்க்கின்ற அந்த உணர்வுக்குப் பெயர் தான் தேசியம், மொழி உணர்வு!

என் நாடு உயர்ந்தது, என் மொழி உயர்ந்தது என்ற சிந்தனையால் மனிதர்கள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். தீமைக்கும், தீண்டாமைக்கும் வித்திடும் இந்தக் குறுகிய சிந்தனையை, தேசியம் மற்றும் மொழி வெறியின் குரல்வளையைப் பிடித்து இஸ்லாம் நெறித்து விடுகின்றது.

எந்த மொழி பேசுபவனாக இருந்தாலும், உலகில் அவன் எந்த நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவன் ஆதமின் மகன் தான்; அவனும் உன் சகோதரன் தான். எனவே நீங்கள் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் ஒரு குலத்தார் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவன் தான் என்று திருக்குர்ஆன் உணர்த்துகின்றது.

இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

“மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை, இறையச்சத்தைத் தவிர!”

(அஹ்மத்: 22391)

மொழி வெறி பிடித்த அரபியரைப் பார்த்து, உலக மக்கள் அனைவரும் கூடி நிற்கும் ஹஜ்ஜின் போது இந்தச் சகோதர முழக்கத்தை, தீண்டாமை ஒழிப்புப் பிரகடனத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்கின்றார்கள்.

இவை அனைத்தும் உணர்த்தும் உண்மை என்ன? தீண்டாமை, ஏற்றத்தாழ்வு போன்ற சமூகக் கொடுமைகள் எந்த சந்துபொந்து வழியாகவும் நுழைந்து விடாத அளவுக்கு, அவை நுழையக் கூடிய அத்தனை வாசல்களையும் திருக்குர்ஆன் அடைத்து விடுகின்றது.