89) ஐந்து தடவைக்கு மேல் தக்பீர் கூறலாமா?
ஐந்துக்கு மேல் ஆறு, ஏழு, ஒன்பது தடவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தக்பீர் கூறியதாகச் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் எதுவுமே ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் நான்கு, ஐந்து, ஆறு, ஏழு தக்பீர்கள் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். உமர் (ரலி) அவர்கள் நபித்தோழர்களை ஒன்று திரட்டி அனைவரையும் நான்கு தக்பீர் என்ற கருத்துக்குக் கொண்டு வந்தார்கள்
என்ற செய்தி அபூ வாயில் அறிவிப்பதாக பைஹகியில் (4/37) பதிவாகியுள்ளது.
அபூ வாயில் என்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழவில்லை. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இப்படி இருந்தது என்று இவர் அறிவிப்பதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களின் ஜனாஸா என்றால் ஏழு முறை தக்பீர் கூறுவார்கள். ஹாஷிம் குலத்தவர் என்றால் ஐந்து தடவை தக்பீர் கூறுவார்கள். பின்னர் கடைசிக் காலம் வரை நான்கு தக்பீர்கள் கூறினார்கள் என்று ஒரு ஹதீஸ் தப்ரானியில் (11/160) உள்ளது.
இதன் அறிவிப்பாளர் தொடரில் நாஃபிவு அபூ குர்முஸ் என்பார் இடம் பெறுகிறார். இவர் பெரும் பொய்யர் என்று ஹதீஸ்கலை வல்லுனர்கள் கூறியுள்ளதால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு ஒன்பது ஒன்பதாகவும், பிறகு ஏழு ஏழாகவும் தக்பீர் கூறி வந்தனர். பின்னர் மரணிக்கும் வரை நான்கு தக்பீர் கூறி வந்தனர் என்ற ஹதீஸ் தப்ரானியில் (11/174) பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிஷ்ர் பின் அல்வலீத் அல்கின்தீ என்பவர் வழியாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் பலவீனமானவர். எனவே இதையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது.
உஹதுப் போரில் ஹம்ஸா (ரலி) கொல்லப்பட்டதும் அவரது உடல் வைக்கப்பட்டது. அவருக்கு ஒன்பது தக்பீர் கூறி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள் என்ற செய்தி தப்ரானியில் (11/62) பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஹதீஸ் அஹ்மத் பின் அய்யூப் பின் ராஷித் வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரும் பலவீனமான அறிவிப்பாளர். மேலும் உஹதுப் போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தவில்லை என்று புகாரியில் பதிவான ஆதாரப்பூர்வமான செய்திக்கு இது முரணாக அமைந்துள்ளது.
எனவே நான்கு அல்லது ஐந்து தக்பீர்கள் கூறுவதே நபிவழியாகும்.