ஏமாற்று வியாபாரம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

இனி வியாபாரத்தில் அனுமதிக்கப்பட்ட வியாபாரம் எது? தடுக்கப்பட்ட வியாபாரம் எது? என்பதைப் பாப்போம்.

ஏமாறுவதும், ஏமாற்றுவதும் கூடாது. அளவு நிறுவையில் மோசடி செய்வது கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான்.

மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை உங்கள் இறைனிடமிருந்து உங்களிடம் சான்று வந்துள்ளது. எனவே அளவையும், நிறுவையையும் நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது” என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன்: 7:85)

மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை (அனுப்பினோம்) “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அல்லாஹ்வையன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அளவையிலும் நிறுவையிலும் குறைவு செய்யாதீர்கள்! நீங்கள் நல்ல நிலையில் இருப்பதாகவே நான் காண்கிறேன். சுற்றி வளைக்கும் நாளின் வேதனை குறித்து உங்கள் விஷயத்தில் நான் பயப்படுகிறேன்” என்றார். “என் சமுதாயமே! அளவையும், நிறுவையையும் நேர்மையாக நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! இப்பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!”

(அல்குர்ஆன்: 11:84-85)

அளக்கும் போது நிறைவாக அளங்கள்! நேரான தராசு கொண்டு எடை போடுங்கள்! இதுவே சிறந்தது. அழகிய முடிவு.

(அல்குர்ஆன்: 17:35)

மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!

(அல்குர்ஆன்: 26:183)

அனாதையின் செல்வத்தை அவன் பருவமடையும் வரை அழகிய முறையில் தவிர நெருங்காதீர்கள்! அளவையும், நிறுவையையும் நேர்மையாக நிறைவேற்றுங்கள்! எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம். உறவினராகவே இருந்தாலும் பேசும் போது நீதியையே பேசுங்கள்! அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்! நீங்கள் படிப்பினை பெறுவதற்காக அவன் இதையே உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

(அல்குர்ஆன்: 6:152)

அளவு நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடு தான்! அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும் போது நிறைவாக வாங்கிக் கொள்கின்றனர். மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத்தால் குறைத்து விடுகின்றனர். மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்பட உள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள்.

(அல்குர்ஆன்: 83:1-6)

சுண்டு வியாபரம்

கல்லெறி வியாபாரம் (பைஉல் ஹஸாத்) மற்றும் மோசடி வியாபாரம் (பைஉல் ஃகரர்) ஆகியவை தடை செய்யப்பட்டவை.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கல்லெறி வியாபாரத்திற்கும் மோசடி வியாபாரத்திற்கும் தடை விதித்தார்கள்.

(முஸ்லிம்: 3033)

சுண்டு வியாபாரத்தை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள். இன்றைய நமது காலத்தில் ரூபாயை வைத்துச் சுண்டி விடுவது போன்ற நடைமுறை உள்ளது. இம்மாதிரியான வியாபாரத்தை தடை செய்தார்கள்.

வாங்கும் போதும் கொடுக்கும் போதும் ஏமாற்றுவதாக இருந்தால் ஹராம் ஆகும், இன்னும் வியாபாரத்தில் அதிகமான ஏமாற்றம் இருக்கிறது. அதில் நாம் கண்டிப்பாகக் கவனத்துடன் இருக்கவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

அப்துல் மஜீத் பின் வஹ்ப் என்பார் அறிவிக்கின்றார்கள்: அதாவு பின் ஹாலித் (ரலி) அவர்கள் என்னிடம் “நபியவர்கள் எனக்கு எழுதிக் கொடுத்த ஒரு கடிதத்தை உனக்கு நான் படித்துக் காட்டட்டுமா? என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அவர் ஒரு ஏட்டை வெளியில் எடுத்தார். அதில் (பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது)

“அதாஉ பின் காலித் என்பாரிடமிருந்து அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் இந்த அடிமையை விலைக்கு வாங்கிக் கொண்டார்; இது ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிடம் செய்த வியாபாரமாகும்; இதில் எந்தக் குறையுமில்லை; இவரிடம் கெட்ட குணமில்லை, குற்றம்புரியும் தன்மையுமில்லை” என்று எனக்கு எழுதித் தந்தார்கள்.

நூல்: திர்மிதி-1137

அதாவு பின் ஹாலித் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் ஒரு அடிமையை வாங்கும் போது, “எனக்கு எழுதி கொடுங்கள்” என்று அதாவு பின் ஹாலித் (ரலி) கேட்கின்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் எழுதி கொடுக்கின்றார்கள் என்ற செய்தியை இந்த ஹதீஸில் பார்க்கிறோம்.

எனவே வியாபாரம் என்றால் இப்படி இருக்க வேண்டும். வியாபாரம் செய்யும் போது நாம் விற்கக் கூடியவராக இருந்தால் அதை எழுதிக் கேட்டால் உடனே எழுதிக் கொடுக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு வழிகாட்டியாக உள்ளது

குறைகளை வெளிப்படுத்த வேண்டும்

வியாபாரி ஒரு பொருளை விற்கும் போது அதில் என்ன குறைகள் இருக்கிறது என்பதை வெளிப்படுத்த வேண்டும். வெளிப்படுத்தாமல் விற்கக் கூடாது. இது வாங்குபவனுக்கும் விற்பவனுக்கும் சமமானது. எந்தக் குறைகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்தி விற்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசி, குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் அருள்வளம் (பரக்கத்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள அருள்வளம் நீக்கப்படும்!

அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி)

(புகாரி: 2079)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்குச் சகோதரன் ஆவான். ஒரு குறையுடைய பொருளை விற்கும்போது அதனைத் தெளிவுபடுத்தாமல் விற்பது ஒரு முஸ்லிமிற்கு ஆகுமானதல்ல.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

(இப்னு மாஜா: 2237)

அடங்காத தாகமுள்ள ஒட்டகத்தையும் சிரங்கு பிடித்த ஒட்டகத்தையும் வாங்குதல்

அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இங்கே (மக்காவில்) நவ்வாஸ் என்ற பெயருடைய ஒருவர் இருந்தார். அவரிடம் அடங்காத் தாகமுடைய ஓர் ஒட்டகம் இருந்தது. இப்னு உமர் (ரலி) அவர்கள் அந்த ஒட்டகத்தை நவ்வாஸுடைய கூட்டாளி ஒருவரிடமிருந்து வாங்கினார்கள். அந்தக் கூட்டாளி நவ்வாஸிடம் சென்று “அந்த ஒட்டகத்தை நாம் விற்றுவிட்டோம்!” என்றார். நவ்வாஸ் “யாரிடம் விற்றீர்?” என்று கேட்டார். அதற்கு அவர், “இன்ன பெரியாரிடம் விற்றேன்!” என்றார்.

அதற்கு நவ்வாஸ், “உமக்கு கேடு உண்டாகட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! அந்தப் பெரியவர் இப்னு உமர் (ரலி) அவர்கள்தாம்!” என்று கூறிவிட்டு இப்னு உமர் (ரலி) அவர்களிடம் சென்றார். “எனது பங்காளி அடங்காத் தாகமுள்ள ஒட்டகத்தை உங்களிடம் விற்று விட்டார்; அவர் உங்களை யாரென்று அறியவில்லை” என்று கூறினார்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “அப்படியானால் அதை ஓட்டிச் செல்வீராக!” என்றார்கள். அவர் அதை ஓட்டிச் செல்ல முயன்றதும், இப்னு உமர் (ரலி) அவர்கள், “அதை விட்டுவிடுவீராக! தொற்று நோய் கிடையாது‘ என்ற நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்! (இந்த நோயுள்ள ஒட்டகத்தினால் எனது ஏனைய ஒட்டகங்களுக்கு பாதிப்பு ஏற்படாது)” என்றார்கள்.

(புகாரி: 2099)

ஒருவரிடம் குறையைத் தெளிவுபடுத்தி அதை அவர் பொருந்திக் கொண்டால் விற்பது கூடும் என்பதை மேற்கண்ட செய்தியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

வணிகப் பேரத்தில் பொய் சத்தியம்

ஒரு மனிதர் அவருடைய பொருளில் இல்லாதவற்றையெல்லாம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விற்றார். இதை அல்லாஹ் கண்டித்து ஒரு வசனத்தை இறக்கி வைத்தான்.

அல்லாஹ்விடம் செய்த உறுதி மொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

(அல்குர்ஆன்: 3:77)

ஒரு மனிதர் கடைவீதியில் விற்பனைப் பொருட்களைப் பரப்பினார்; அப்போது அவர் (கொள்முதல் செய்யும்போது) கொடுக்காத (பணத்)தைக் கொடுத்ததாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தார். முஸ்லிம்களைக் கவர்(ந்து அவர்களிடம் தம் பொருளை விற்பனை செய்)வதற்காக இப்படிச் செய்தார்! அப்போது “யார் தங்களுடைய உடன்படிக்கை மூலமும் சத்தியங்களின் மூலமும் அற்பக் கிரயத்தைப் பெற்றுக் கொள்கிறாரோ….’ என்னும் (அல்குர்ஆன்: 3:77) இறைவசனம் இறங்கியது!

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி)

(புகாரி: 377, 2088, 2675)

வியாபாரத்தில் தன்னுடைய நேர்மையை வெளிப்படுத்தி விற்க வேண்டும். அல்லாஹ் மீது சத்தியத்தைச் செய்து வியாபாரத்தை அதிகப்படுத்த விரும்பினால் அதில் எந்த பரக்கத்தும் கிடையாது. அதில் எந்தத் தேவையும் நிறைவேறாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பொய்) சத்தியம் செய்வது சரக்கை (சுலபமாக) விற்பனை செய்ய உதவும். ஆனால், பரக்கத்(எனும் அருள் வளத்)தை அழித்துவிடும்!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 2087)

குறையை மக்கள் பார்க்கும்படி வைத்தல்

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் “உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இதில் மழைச் சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!” என்றார். அப்போது அவர்கள், “ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டுவிட்டு, “மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று கூறினார்கள்.

(முஸ்லிம்: 164)

ஒட்டகம், மாடு, ஆடு மற்றும் கால்நடைகளை விற்பவர், பாலைக் கறக்காமல் விட்டு, கனத்த மடியுடன் காட்டி விற்பனை செய்வது கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒட்டகம், ஆடு ஆகியவற்றை (அவற்றின் பாலைக் கறக்காமல் விட்டுவைத்திருந்து) மடி கனக்கச் செய்யாதீர்கள்! மடி கனக்கச் செய்த இத்தகைய பிராணிகளை வாங்கியவர் விரும்பினால் பால் கறந்து பார்த்து அதை வைத்துக் கொள்ளலாம்! விரும்பாவிட்டால் ஒரு ஸாஉ பேரீச்சம் பழத்துடன் அதை விற்றவரிடமே திருப்பிக் கொடுத்துவிடலாம். இந்த இரண்டில் எதைச் செய்வதற்கும் அவருக்கு அனுமதி உண்டு.

மற்றோர் அறிவிப்பில் “(விரும்பாவிட்டால்) ஒரு ஸாஉ உணவுப் பொருளுடன் திருப்பிக் கொடுக்கும் இந்த உரிமை (பிராணியை வாங்கிய நாளிலிருந்து) மூன்று நாட்கள் வரையிலும் தான்” என்றும் காணப்படுகிறது.

பேரீச்சம் பழத்தின் ஒரு “ஸாஉ‘ என்பதே அதிகமான அறிவிப்புக்களில் காணப்படுகின்றது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 2148, 2150)

மூன்று நாட்கள் என்பதைப்  பின்வரும் ஹதீஸ்கள் உறுதிப்படுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மடி கனக்கச் செய்யப்பட்ட ஆட்டை வாங்கியவருக்கு மூன்று நாட்கள் விருப்ப உரிமை உண்டு. அதைத் திருப்பிக் கொடுப்பதானால், ஒரு “ஸாஉ‘ உணவுப் பொருளுடன் அதைத் திருப்பிக் கொடுக்கட்டும். (உணவு என்பது) கோதுமையாகத் தான் இருக்க வேண்டும் என்பதல்ல. (பேரீச்சம் பழமாகக் கூட இருக்கலாம்.)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(முஸ்லிம்: 3054)

தனது கட்டுப்பாட்டில் இல்லாதவற்றையும், தனது உடைமையல்லாத வற்றையும் அளவோ, தரமோ, தன்மையோ தெரியாதவற்றையும் விற்பதும் (பய்உல் ஃகரர்), பிறக்காத உயிரினத்தை விற்பதும் கூடாது.

ஒருவர் ஒரு பொருளை விற்கிறார் என்றால் அந்தப் பொருள் அவர் முன்பாக  இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் விலை பேசப்பட வேண்டும். மாறாக தன்னிடம் இல்லாமல் இருக்கும் போது அதற்கு விலை பேசக்கூடாது. உதாரணமாக ஒரு ஆடு இருக்கிறது. அந்த ஆட்டுக்குத் தான் விலை பேச வேண்டும். மாறாக அதனுடைய குட்டிக்கு விலை பேசக் கூடாது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பிறக்காத உயிரினத்தை விற்பதற்குத் தடை விதித்தார்கள்; அறியாமைக் கால மக்கள் இத்தகைய வியாபாரம் செய்து வந்தனர். “இந்த ஒட்டகம் குட்டி போட்டு, அந்தக் குட்டிக்குப் பிறக்கும் குட்டியை நான் வாங்கிக் கொள்கிறேன்! (அல்லது விற்கிறேன்!)’ என்று செய்யப்படும் வியாபாரமே இது!

நூல்: ஆதாரம்(புகாரி: 2143)

விற்கும் போது தெளிவுபடுத்துதல்

நாம் ஒரு தோட்டத்தை விற்கிறோம் என்றால் அதைக் கொடுக்கும் போதே தெளிவுபடுத்திக் கொடுக்க வேண்டும். உதாரணமாக, தோட்டத்தைக் கொடுக்கும் போது முழுவதுமாகக் கொடுத்து விட வேண்டும். அப்படி இல்லாமல் கொடுத்ததன் பின்னால் நல்லதை மட்டும் திருப்பி எடுத்துக் கொள்ளக்கூடாது.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “முஹாகலா‘, “முஸாபனா‘, “முஆவமா‘, “முகாபரா‘ ஆகியவற்றையும், “ஒரு பகுதியைத் தவிர‘ என்று கூறி விற்பதையும் தடை செய்தார்கள். “அராயா‘வில் மட்டும் (இவற்றுக்கு) அனுமதியளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் அபுஸ் ஸுபைர் (ரஹ்), சயீத் பின் மீனா ஆகிய இருவரில் ஒருவர் ” “முஆவமா‘ என்பது, (மரத்திலுள்ள) பழங்களின் பல்லாண்டு விளைச்சலை விற்பதாகும்” என்று கூறினார்.

(முஸ்லிம்: 3114)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “முஹாகலா‘, “முஸாபனா‘, “முகாபரா‘ ஆகிய வியாபாரங்களையும், கனிவதற்கு முன் மரத்(திலுள்ள பழ)த்தை (உலர்ந்த பழத்திற்குப் பதிலாக) விற்பதையும் தடை செய்தார்கள். “கனிதல்‘ (“இஷ்காஹ்‘) என்பது, பழம் சிவப்பாகவோ மஞ்சளாகவோ உண்பதற்கு ஏற்றதாகவோ மாறுவதாகும். “முஹாகலா‘ என்பது, (அறுவடை செய்யப்படாத) பயிர்களை அளவு அறியப்பட்ட (அறுவடை செய்யப்பட்ட) உணவுப் பொருளுக்குப் பதிலாக விற்பதாகும்.

“முஸாபனா‘ என்பது, பேரீச்ச மரத்(திலுள்ள பழத்)தை (பறிக்கப்பட்ட) குறிப்பிட்ட அளவிலான உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக விற்பதாகும். “முகாபரா‘ என்பது, விளைச்சலில் மூன்றில் ஒரு பாகத்தை அல்லது நான்கில் ஒரு பாகத்தை அல்லது அது போன்றதை (தனக்குத் தந்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் ஒரு நிலத்தை)க் கொடுப்பதாகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

(முஸ்லிம்: 3112)

முலாமஸா எனும் வியாபாரம்

முலாமஸா என்பது துணியை விரித்துப் பார்க்காமலேயே அதைத் தொட்டவுடன் வியாபாரம் உறுதியாகிவிடும் என்ற நிபந்தனையுடன் விற்பனை செய்வதாகும். இதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்.

அபூசயீத்(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் “முனாபதா‘ வியாபாரத்தைத் தடை செய்தார்கள். “முனாபதா‘ என்பது, ஒருவர் தமது துணியை, வாங்குபவர் விரித்துப் பார்ப்பதற்கு முன் அதை வாங்குபவரை நோக்கி எறிந்து(விட்டால் அதை அவர் வாங்கியே ஆகவேண்டும் என்ற நிபந்தனையுடன்)அவரிடம் விற்பதாகும். மேலும் முலாமஸா எனும் வியாபாரத்தையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

(புகாரி: 2144)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆடை அணியும் முறைகள் இரண்டையும், வியாபார முறைகள் இரண்டையும் தடை செய்தார்கள்.

வியாபாரத்தில் “முலாமஸா’ மற்றும் “முனாபஃதா’ ஆகிய முறைகளைத் தடை செய்தார்கள். “முலாமஸா’ என்றால், இரவிலோ பகலிலோ (ஒரு பொருளை வாங்கும்) ஒருவர் (விற்கும்) மற்றொருவரின் துணியைத் தமது கரத்தால் தொடுவதாகும். (அவ்வாறு தொட்டுவிட்டாலே வியாபாரம் உறுதியாகி விடும் என்ற நிபந்தனையின் பேரில்) அதைத் தொட்டதோடு முடித்துக் கொண்டு விரித்துப் பார்க்காமலேயே வாங்குவதாகும்.

“முனாபதா‘ என்பது, ஒருவர் மற்றொருவரை நோக்கித் தமது துணியை எறிய அந்த மற்றவர் இவரை நோக்கித் தமது துணியை எறிய (துணியைப் பிரித்துப்) பார்க்காமலும் பரஸ்பர திருப்தி இல்லாமலும் இருவருக்குமிடையிலான வியாபார(ஒப்பந்த)மாக அதுவே ஆகிவிடுவதாகும். (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

(புகாரி: 5820)

லிமாஸ் அல்லது முலாமஸா என்பதற்குத் தொடுதல் என்று பொருள். ஒருவர் தாம் வாங்க விரும்பும் துணியைக் கையால் தொட்டுப் பார்த்துவிட்டாலே வியாபார ஒப்பந்தம் நிறைவேறியதாகக் கருதப்பட்டு, விரித்துப் பார்க்கும்போது குறையிருந்தாலும் வியாபாரத்தை ரத்துச் செய்ய முடியாத வணிக முறைக்கே “முலாமஸா’ என்று பெயர்.

நபாத் அல்லது முனாபஃதா என்பதற்கு எறிதல் என்று பொருள். வாங்க வந்தவர் மீது துணியைத் தூக்கி எறிந்துவிட்டாலே அதை அவர் வாங்கி விட்டதாகக் கருதப்பட்டு, விரித்துப் பார்த்த பின் குறை தென்பட்டாலும் அதைத் திருப்பிக் கொடுக்க முடியாத முறைக்கே “முனாபஃதா’ என்பர்.

இந்த இரு முறைகளாலும் நுகர்வோர் பாதிக்கப்பட இடமுண்டு என்பதால் இவற்றுக்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

பொதுவாகவே இஸ்லாமியப் பொருளாதாரம் என்பது எவரையும் ஏமாற்றாமல் இருப்பதாகும். பிறரை ஏமாற்றிச் சம்பாதிப்பது ஒரு முஸ்லிமிற்கு ஹராமாகும். வியாபாரத்திலும் விற்பவனும் வாங்குபவனும் ஏமாற்றம் அடையக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பேரீச்சையும் திராட்சையும் இருந்தது. இதை மரத்தில் பிஞ்சாக இருக்கும் போதே, “கனியான உடன் வாங்கிக் கொள்கிறேன்” என்று கூறி விலை பேசுவார்கள். இந்த வியாபாரத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். ஆனால் பிஞ்சை விற்பதையோ, விலை பேசுவதையோ நபி (ஸல்) தடுக்கவில்லை.

மரத்தில் உள்ள பிஞ்சை விலை பேசலாமே தவிர, காயான உடன் வாங்கிக் கொள்கிறேன் என்று பிஞ்சாக இருக்கும் போதே விலை பேசக்கூடாது. ஏனென்றால் விற்பவனும் வாங்குபவனும் ஏமாற்றம் அடையக்கூடாது என்பது இஸ்லாமிய வியாபாரத்தின் அடிப்படை.

உதாரணத்திற்கு, ஒரு மரத்தில் பேரீச்சையோ திராட்சையோ பிஞ்சாக இருக்கிறது. இதை வாங்குபவன், இதைக் கனியான உடன் நான் வாங்கிக் கொள்கிறேன் என்கிறான். காயாக இருக்கும் போதே அந்தப் பொருள் இவ்வளவு வரும் என்று அவன் ஒரு கணக்கை வைத்திருப்பான். அந்தக் கணக்கு வந்தால் பொருளை வாங்கியவன் நஷ்டமடைய மாட்டான்.

ஆனால் அவன் போட்ட கணக்கு வரவில்லை என்றால் பொருளை வாங்கியவன் நஷ்டமடைகின்றான். பொருளை விற்றவன் இதில் ஒரு கணக்கை வைத்திருப்பான். அதாவது, இவ்வளவு தான் இதில் லாபம் வரும் என்று பொருளை விற்றவன் போட்ட கணக்கின் அடிப்படையில் லாபம் வந்தால் அவன் நஷ்டமடைய மாட்டான். இவனது கணக்கை விட அதிகமான கனிகள் வந்தால் விற்றவனுக்கு நஷ்டமாகின்றது.

இப்படி இருவர் மனம் புண்பட்டுச் செய்யும் வியாபாரத்தை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. இந்த வியாபாரத்தில் ஏமாற்றும் நோக்கம் இல்லாவிட்டாலும் நபி (ஸல்) அவர்கள் இதைத் தடை செய்தார்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையாதவரை விற்பதற்குத் தடை விதித்தார்கள். இத்தடை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் உள்ளதாகும்.

(புகாரி: 2194)

ஹுமைத் அவர்கள் கூறியதாவது: “பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன் மரத்திலுள்ள கனிகளை விற்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடையாத வரை பேரீச்ச மரத்தை விற்பதற்குத் தடை விதித்தார்கள்” என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள். அனஸ் (ரலி) அவர்களிடம், “பக்குவம் அடைவது என்றால் என்ன?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “சிவப்பாகவோ மஞ்சளாகவோ மாறுவது” என்று விடையளித்தார்கள்.

(புகாரி: 2197)

பேரீச்சம்பழம் மரத்தில் பிஞ்சாக இருக்கும் போது விற்கக் கூடாது. அப்படியே விற்கவேண்டும் என்றால் கனியாக ஆனவுடன் உள்ள விலையைப் பேசக்கூடாது. பிஞ்சிற்கு என்ன விலையோ அதைத் தான் பேசவேண்டும். பேரீச்சம்பழத்தை பொறுத்த வரை அது மஞ்சள் நிறத்தையோ சிவப்பு நிறத்தயோ அடைந்துவிட்டால் அதற்குப் பிறகு அது மரத்திலேயே இருந்தாலும் அதற்கு விலை பேசுவது குற்றமில்லை. ஏனென்றால் அது எல்லாவிதமான ஆபத்தையும் கடந்துவிட்டது.

பயிரை எடுத்துக் கொண்டால் அதில் உள்ள அனைத்தும் அரிசியாக வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் அதன் கீழ்பகுதி மஞ்சள் நிறத்தை அடைந்துவிட்டால் அதன் பிறகு அதற்கு ஆபத்தில்லை பேரீச்சம்பழத்தைப் பொறுத்த வரை அது மஞ்சள் அல்லது சிவப்பு நிறமாகவோ ஆனதற்குப் பிறகு காய்க்குறிய பணத்தை வாங்கிக் கொள்ளலாம் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கிக் கெள்ளளாம்.

ஒவ்வொன்றிற்கும் ஒரு ஆபத்து இருக்கிறது. அந்த ஆபத்தை அது கடந்துவிட்டால் அதற்குப் பிறகு எந்த இடையூறும் இருக்காது என்று தெரிந்ததற்குப் பின்னால் அதை விலை பேசுவதை நபி (ஸல்) அவர்கள் தடுக்கவில்லை என்பது கீழ்கண்ட ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பலன் உறுதிப்படுவதற்கு முன்னால் பழங்களை விற்பதைத் தடுத்துள்ளார்கள். அவர்களிடத்தில் “பலன் உறுதிப்படுவது என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டது. “(அப்பழங்கள்) பாழாகும் நிலையைக் கடந்துவிடுவதே!” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

(புகாரி: 1486)

மரத்தில் உள்ள பிஞ்சைக் காட்டி, காய்க்கு விலை பேசி பணத்தை வாங்குவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் ஒரு மனிதர் மற்றொரு மனிதனிடத்தில் மரத்தில் உள்ள பிஞ்சைக் காட்டி பணத்தை வாங்கிக் கொண்டு, இது காயான உடன் எடுத்துக் கொள் என்று சொல்கிறார். அந்த மனிதரும் சரி என்று சொல்கிறார்.

பிறகு பருவ நிலையாலோ அல்லது மழை வந்ததாலோ அல்லது வெயிலின் காரணமாகவோ அந்தப் பிஞ்சு காயாகவில்லை; உதிர்ந்து விடுகிறது. இப்போது ஒரு சகோதரன் தனது மற்றொரு சகோதரருடைய பணத்தை வாங்குவது எப்படிக் கூடும் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்கிறார்கள்

ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகள் பக்குவமடைவதற்கு முன் அவற்றை விற்பதைத் தடை செய்தார்கள்! என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம், பக்குவமடைதல் என்றால் என்ன? என்று கேட்டோம். அதற்கவர்கள், “சிவப்பாக, மஞ்சளாக மாறுவதாகும்!‘ என்று பதிலளித்தார்கள். மேலும், “அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளை அழித்துவிட்டால் உம் சகோதரரின் பொருளை எந்த அடிப்படையில் நீர் ஹலாலாக (உண்பதற்கு அனுமதிக்கப்பட்டதாக) கருதுவீர்!” என்றும் கேட்டார்கள்.

(புகாரி: 2208)

இந்த ஹதீஸை வைத்து நாம் பார்க்கும் போது விற்பவன் மீது மட்டும் குற்றம் என்பதைக் காட்டுகிறது ஆனால் நபி (ஸல்) அவார்கள் சொல்லும் போது விற்பவன் மீதும் வாங்குபவன் மீதும் குற்றம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையாதவரை விற்பதற்குத் தடை விதித்தார்கள். இத்தடை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் உள்ளதாகும்.

(புகாரி: 2194)

ஒரு காய் மரத்தில் இருக்கும் நிலையில் அதை அப்படியே விற்பது தவறில்லை. இந்த நிலையைக் காட்டி இதற்கு அடுத்த நிலையில் உள்ளதற்கு விற்கக் கூடாது. வியாபாரம் என்பது மன நிறைவாக இருக்க வேண்டும். விற்பவனும் வாங்குபவனும் பாதிக்கப்படக் கூடாது.

முஸாபனா என்கின்ற மற்றொரு வியாபாரத்தையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். முஸாபனா என்றால் மரத்திலுள்ள பக்குவப்பட்ட பேரீச்சம்பழத்திற்கு பக்குவப்படாத பேரீச்சம்பழத்தை விற்பது. ஒரு இனத்தை அதே இனத்தைச் சேர்ந்த ஒன்றிற்கு விற்பது. இந்த வகையான வியாபாரம் தவணை முறையில் தான் நடைபெறும்.

உதாரணமாக, பேரீச்சம்பழத்திற்குப் பதிலாக பேரீச்சம்பழத்தை, திராட்சைக்குப் பதிலாக திராட்சையை, மிளகாய்க்குப் பதிலாக மிளகாயை விற்பது, அதாவது ஒரே இனத்தைச் சேர்ந்த இரண்டை விற்பது மார்க்கத்தில் தடையில்லை. மரத்தில் உள்ளதைக் காட்டி, “இதில் 100 கிலோ இருக்கும்; இது பழமான உடன் நீ எடுத்துக் கொள். இப்போது எனக்கு 100 கிலோ கொடு’ என்ற ஒருவர் கேட்கிறார். அவர் சொன்னதைப் போன்று 100 கிலோ கிடைத்தால் பிரச்சனையில்லை.

அப்படி இல்லாமல் வாங்கியவர் 100 கிலோவை வாங்கிவிட்டு மரத்தில் உள்ளது 90 கிலோவாகவோ 80 கிலோவாகவோ இருந்தால் மரத்தில் உள்ள பொருளை வாங்கியவர் பாதிக்கப்படுகிறார். இப்போது 100 கிலோ வாங்கியவர் கிடைக்காமல் போன 10 கிலோவிற்கு என்ன பதில் சொல்வார்? இதை நபி (ஸல்) அவர்கள் வட்டி என்று சொல்கிறார்கள். அப்படி மரத்தில் உள்ளது 100 கிலோவிற்கு அதிகமாக இருந்தால் விற்றவன் பாதிக்கப்படுகிறான்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் முஸாபனாவைத் தடை செய்தார்கள். “முஸாபனா‘ என்பது மரத்திலுள்ள பேரீச்சங்கனிகளை உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்கு முகத்தலளவையில் விற்பதும் கொடியிலுள்ள திராட்சையை உலர்ந்த திராட்சைக்கு முகத்தலளவையில் விற்பதுமாகும்!

(புகாரி: 2185)

முஹாக்கலா வியாபாரத்தை நபி (ஸல்) தடை செய்தார்கள். முஹாக்கலா என்றால் பக்குவப்பட்ட நெல்லை அதே இனத்தைச் சேர்ந்த ஒரு பொருளுக்கு விற்பதாகும்.

நெற்கதிர்களை கதிரில் வைத்து விற்பதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். அது மஞ்சள் நிறம் ஆனதற்குப் பின்னால் விற்பதை அனுமதித்தார்கள். நெற்கதிர்கள் பச்சையாக இருக்கும் போது விற்றால் பச்சைக்கு என்ன விலையோ அதைத் தான் விலை பேசவேண்டும். அது மஞ்சளாதனற்குப் பின்னால் உள்ள நிலைக்கு விலை பேசக்கூடாது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “முஹாகலா, முஸாபனா ஆகிய வியாபாரங்களைத் தடை செய்தார்கள்.

(புகாரி: 2187)

நபி (ஸல்) அவர்கள் வியாபாரத்தில் ஏமாறக்கூடிய, ஏமாற்றக்கூடிய அனைத்து வாயில்களையும் அடைக்கிறார்கள். வியாபாரம் என்று வரும் போது விற்பவனும் வாங்குபவனும் நஷ்டமடையாமல் இருப்பது இஸ்லாமிய வியாபாரத்தின் அடிப்படையாகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ஒரு பழம் அதன் பக்குவத்தை அடையும் வரையும் இன்னும் கால்நடையின் முதுகின் மீதுள்ள முடியையும் (அறுப்பதுக்கு முன்) இன்னும் மடுவிலுள்ள பாலையும் இன்னும் பாலிலுள்ள நெய்யையும் விற்பதை நபிகள் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

நூல்: தாரகுத்னி

ஆட்டினுடைய ரோமத்திலிருந்து கம்பளி செய்யப்படுகிறது. எனவே ஆட்டின் ரோமத்தை விற்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. எப்போது தடுக்கிறது என்றால் ஆட்டை அறுப்பதற்கு முன்னாலே ரோமத்திற்கு விலை பேசுவதை இஸ்லாம் தடுக்கிறது.

அதேபோல மாட்டிலிருந்து பால் கறப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. அதே சமயம், ஒருவனிடத்தில் மாட்டைக் காட்டி ஒரு 100 ரூபாய் வாங்கி விட்டு, இதிலுள்ள பாலைக் கறந்து கொள் என்று சொன்னால் அது தவறாகும்.

அந்த மாட்டின் மடுவில் 100 ரூபாய்க்கான பால் இருந்தால் இரண்டு பேருக்கும் நஷ்டம் ஏற்படாது. ஆனால் அதில் 100 ரூபாய்க்கான பால் இல்லை என்றால் வாங்கியவன் நஷ்டமடைகிறான். அதில் 100 ரூபாய்க்கும் அதிகமான அளவுக்குப் பால் இருந்தால் விற்றவன் நஷ்டமடைகிறான். இந்த வகையான வியாபாரத்தை இஸ்லாம் தடுக்கிறது.

இருவர் வியாபாரம் செய்தால் இருவர் மனதிற்கும் வருத்தம் ஏற்படாமல் மன நிறைவோடு இருக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கின்றது.

பாலில் வெண்ணை இருக்கும். அந்தப் பாலைக் காட்டி, “எனக்கு இன்ன தொகை தா! அதன் பிறகு இந்தப் பாலைக் கடை. அதில் வரும் வெண்ணையை நீ எடுத்துக் கொள்’ என்று சொல்லி பாலைக் கடைவதற்கு முன்னரே விலை பேசுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்கின்றார்கள்.

ஆகவே மறுமையில் அல்லாஹ்விற்கு முன் நிற்கும் நாளை அஞ்சி பயந்து இவ்வுலக வாழ்கையில் நல்லடியார்களாக வாழ்ந்து மறையும் பாக்கியமிக்கவர்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்குவானாக.!