04) எவ்வாறு முடிவு செய்வது?
சட்டம் மாற்றப்பட்டுவிட்டது என்பதை எவ்வாறு முடிவு செய்வது?
ஒரு சட்டம் மாற்றப்பட்டுவிட்டது என்பதைப் பின்வரும் அடிப்படைகளின் அடிப்படையில் நாம் முடிவு செய்யலாம்.
- அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதர்களின் நேரடி வாசகத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்
முத்ஆ திருமணம் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறிய வாசகத்தை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “மக்களே! நான் “அல்முத்ஆ” (தவணை முறைத்) திருமணம் செய்துகொள்ள உங்களுக்கு அனுமதியளித்திருந்தேன். (இப்போது) அல்லாஹ் அத்திருமணத்திற்கு மறுமை நாள்வரைத் தடை விதித்துவிட்டான்.
மேற்கண்ட செய்தியில் முத்ஆ திருமணம் முதலில் அனுமதிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது தடைசெய்யப்பட்டுவிட்டது என்பதை நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகளிலிருந்தே நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
பின்வரும் செய்தியையும் இதற்கு நாம் உதாரணமாகக் கூறலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களை அடக்கத்தலங்களைச் சந்திக்க வேண்டாமென்று தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் அவற்றைச் சந்தியுங்கள். குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்துவைக்க வேண்டாமென உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் விரும்பும் நாட்கள்வரை சேமித்துவையுங்கள். பழச்சாறு மதுபானங்கள் ஊற்றிவைக்கப் பயன்படும் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென்று உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகலாம். ஆனால், போதையூட்டுகின்றவற்றை அருந்தாதீர்கள்.
மேற்கண்ட செய்தியில் முதலில் சில சட்டங்கள் தடை செய்யப்பட்டிருந்தன என்பதையும், பின்னர் அந்தத் தடை நீக்கப்பட்டு அவை அனுமதிக்கப்பட்டன என்பதையும் நபி (ஸல்) அவர்கள் கூறிய நேரடி வாசகத்திலிருந்தே நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
இவ்வாறு ஒரு சட்டம் மாற்றப்பட்டது என்பதை அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் நேரடி வாசகத்திலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியும்.
நபித்தோழர் தரும் தகவலில் இருந்து அறிந்து கொள்வது
ஒரு சட்டம் மாற்றப்பட்டுவிட்டது என்பதை நபி (ஸல்) அவர்களுடன் வாழ்ந்த நபித்தோழர்கள் தரும் தகவலிலிருந்தும் நாம் அறிந்து கொள்ள முடியும்.
இதற்குப் பின்வரும் செய்தியை நாம் உதாரணமாகக் கூறலாம்.
முஸ்அப் பின் சஅத் பின் அபீவக்காஸ் அவர்கள் கூறியதாவது:
நான் (தொழுகையில்) இவ்வாறு (கைகளைக் கோத்து என் தொடைகளுக்கிடையே வைத்துக் கொண்டு) ருகூஉச் செய்தபோது என் தந்தை, “நாங்கள் இவ்வாறுதான் செய்து கொண்டிருந்தோம். பின்னர் கைகளை முழங்கால்கள் மீது வைத்துக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டோம்’’ என்று சொன்னார்கள்.
தொழுகையில் ருகூவின் போது கைகளைத் தொடைகளுக்கு மத்தியில் வைக்க வேண்டும் என்ற சட்டம் முதலில் இருந்தது. பின்னர் அது மாற்றப்பட்டு முழங்கால்கள் மீது வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது என்பதை சஅத் (ரலி) அவர்கள் தரும் தகவலிலிருந்து நாம் பெற்றுக் கொள்ள முடிகிறது.
இவ்வாறு ஒரு சட்டம் மாற்றப்பட்டுவிட்டது என்பதை நபி (ஸல்) அவர்களோடு வாழ்ந்த நபித்தோழர்கள் தரும் தகவலில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
காலத்தை வைத்து அறிந்து கொள்ளுதல்
இதற்கு ஜிஹாதின் அடிப்படைகள் தொடர்பாக திருக்குர்ஆன் எடுத்துரைக்கும் பின்வரும் வசனத்தை உதாரணமாகக் கூறலாம்.
8:65 يٰۤـاَيُّهَا النَّبِىُّ حَرِّضِ الْمُؤْمِنِيْنَ عَلَى الْقِتَالِ ؕ اِنْ يَّكُنْ مِّنْكُمْ عِشْرُوْنَ صَابِرُوْنَ يَغْلِبُوْا مِائَتَيْنِ ۚ وَاِنْ يَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ يَّغْلِبُوْۤا اَ لْفًا مِّنَ الَّذِيْنَ كَفَرُوْا بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُوْنَ
8:66 اَلْـٰٔـنَ خَفَّفَ اللّٰهُ عَنْكُمْ وَعَلِمَ اَنَّ فِيْكُمْ ضَعْفًاؕ فَاِنْ يَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ صَابِرَةٌ يَّغْلِبُوْا مِائَتَيْنِۚ وَاِنْ يَّكُنْ مِّنْكُمْ اَلْفٌ يَّغْلِبُوْۤا اَلْفَيْنِ بِاِذْنِ اللّٰهِؕ وَ اللّٰهُ مَعَ الصّٰبِرِيْنَ
நபியே! நம்பிக்கை கொண்டோருக்கு போர் செய்ய ஆர்வமூட்டுவீராக! உங்களில் சகித்துக் கொள்கின்ற இருபது பேர் இருந்தால் இருநூறு பேரை அவர்கள் வெல்வார்கள். உங்களில் நூறு பேர் இருந்தால் (ஏக இறைவனை) மறுப்போரில் ஆயிரம் பேரை வெல்வார்கள். அவர்கள் புரிந்து கொள்ளாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம். இப்போது அல்லாஹ் உங்களுக்கு எளிதாக்கி விட்டான். உங்களிடம் பலவீனம் இருப்பதை அவன் அறிவான். எனவே உங்களில் சகிப்புத் தன்மையுடைய நூறு பேர் இருந்தால் இரு நூறு பேரை அவர்கள் வெல்வார்கள். உங்களில் ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் விருப்பப்படி இரண்டாயிரம் பேரை வெல்வார்கள். அல்லாஹ் சகிப்புத் தன்மையுடையோருடன் இருக்கிறான்.
போர் செய்யும் அவசியம் ஏற்பட்டு எதிரிகளின் படைபலத்தில் பத்தில் ஒரு பங்கு இருந்தால் போர் செய்ய வேண்டும் என முதலில் சட்டம் இருந்ததாக (8:65.) வசனம் சொல்கிறது.
பின்னர் மக்களிடம் காணப்பட்ட பலவீனத்தைக் கருத்தில் கொண்டு எதிரியின் படைபலத்தில் பாதி படைபலம் இருந்தால் மட்டுமே இஸ்லாமிய அரசின் மீது போர் கடமையாகும்; அதை விடக் குறைவாக இருந்தால் போர் செய்யாமல் அடங்கிச் செல்ல வேண்டும் என்று (அல்குர்ஆன்: 8:66) ➚.) வசனம் மூலம் அறிவிக்கப்பட்டது.
“இப்போது அல்லாஹ் உங்களுக்கு எளிதாக்கி விட்டான்” என்ற வாசகத்திலிருந்து எதிரியின் பலத்தில் பத்தில் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்பது காலத்தால் முந்திய சட்டம் என்பதையும், எதிரியின் படைபலத்தில் பாதி படைபலம் இருந்தால் போதும் என்பது பிந்திய சட்டம் என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
2வது அத்தியாயம் 187வது வசனத்தையும் இதற்கு நாம் உதாரணமாகக் கூறலாம்.
நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை.465 உங்களுக்கு நீங்கள் துரோகம் செய்து கொண்டிருந்தது அல்லாஹ்வுக்குத் தெரியும். எனவே உங்கள் மன்னிப்பை ஏற்று உங்களைப் பிழை பொறுத்தான். இப்போது (முதல்) அவர்களுடன் கூடுங்கள்!50 அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை (சந்ததியை)த் தேடுங்கள்! வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்! பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும்போது மனைவியருடன் கூடாதீர்கள்! இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை நெருங்காதீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காகத் தனது வசனங்களை அல்லாஹ் மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.
ரமாலானில் இரவு நேரங்களில் மனைவிமார்களுடன் கூடுவது முதலில் தடை செய்யப்பட்டிருந்தது. பின்னர் அது அனுமதிக்கப்பட்டது.
”இப்போது (முதல்) அவர்களுடன் கூடுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை (சந்ததியை)த் தேடுங்கள்!” (அல்குர்ஆன்: 2:187) ➚ என்ற வார்த்தைகளிலிருந்து இதனை நாம் அறிந்து கொள்ளலாம்.
நாம்(அல்குர்ஆன்: 8:65) ➚வது வசனத்தில் கூறப்பட்ட சட்டம்(அல்குர்ஆன்: 8:66) ➚வது வசனம் மூலம் மாற்றப்பட்டுவிட்டது என்பதைக் கண்டோம்.
(அல்குர்ஆன்: 8:65) ➚வசனத்தின் சட்டம் மாற்றப்பட்டு விட்டாலும் அந்த வசனங்கள் தற்போதும் திருமறைக் குர்ஆனில் உள்ளன. அந்த வசனங்களை நாம் ஓதுவது வணக்கமாகும். இறைவனுடைய கருணையைப் புரிந்து கொள்வதற்காகவும், சட்டம் எளிதாக மாற்றப்பட்டுவிட்டது என்பதை நாம் அறிந்து கொள்வதற்காகவும் இறைவன் சட்டத்தை மாற்றினாலும் அந்த வார்த்தைகளை நாம் ஓதும் வகையில் நிலைத்து நிற்கும் வார்த்தைகளாக ஆக்கியுள்ளான்.