83) எழுந்து நிற்கும் சட்டம் மாற்றப்படவில்லை

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நிற்க வேண்டும் என்ற சட்டம் மாற்றப்பட்டு விட்டது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். பின் வரும் ஹதீஸ்களை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸாவில் எழுந்ததைக் கண்டோம். நாங்களும் எழுந்தோம். உட்கார்ந்ததைக் கண்டோம். நாங்களும் உட்கார்ந்தோம்’

அறிவிப்பவர் அலீ (ரலி)

(முஸ்லிம்: 1599)

இந்த ஹதீஸை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டதன் அடிப்படையில் இவ்வாறு வாதிடுகின்றனர்.

எழுந்து நின்றார்கள்; பின்னர் எழுந்து நிற்கவில்லை’ என்பது போன்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தால் முதலில் எழுந்துவிட்டு பின்னர் எழாமல் இருந்துள்ளனர் என்று பொருள் கொள்ள முடியும்.

ஆனால் மேற்கண்ட ஹதீஸின் வாசகம் அவ்வாறு இல்லை. எழுந்தார்கள்; நாங்களும் எழுந்தோம். உட்கார்ந்தார்கள்; நாங்களும் உட்கார்ந்தோம் என்று தான் ஹதீஸின் வாசகம் உள்ளது. அதாவது ஜனாஸாவைக் கண்டவுடன் எழுந்தார்கள். பின்னர் உட்கார்ந்தார்கள் என்ற கருத்திலேயே மேற்கண்ட வாசகம் அமைந்துள்ளது.

ஜனாஸாவைக் கண்டவுடன் நின்று கொண்டே இருக்க வேண்டும் என்பதில்லை; எழுந்துவிட்டு உட்கார்ந்து விடலாம் என்ற கருத்தைத் தான் இது தரும்.

எழுந்தார்கள்’ என்பதை எழவில்லை’ அல்லது எழுவதைத் தடுத்தார்கள்’ என்பன போன்ற சொற்கள் தான் மாற்றும்.

எழுந்தார்கள்’ என்பதை உட்கார்ந்தார்கள்’ என்பது மாற்றாது.

இந்தக் கருத்தில் அமைந்த மற்றொரு ஹதீஸும் உள்ளது.

நாங்கள் ஒரு ஜனாஸாவில் நின்று கொண்டிருக்கும் போது என்னை நாஃபிவு பின் ஸுபைர் என்பார் பார்த்தார். ஜனாஸா வைக்கப்படுவதை எதிர்பார்த்தவராக அவர் உட்கார்ந்திருந்தார். ‘ஏன் எழுந்து நிற்கிறாய்?’ என்று என்னிடம் கேட்டார். ‘ஜனாஸா வைக்கப்படுவதற்காகக் காத்திருக்கிறேன்; இவ்வாறு அபூ ஸயீத் அல்குத்ரீ அவர்கள் அறிவித்துள்ளனர்’ என்று நான் கூறினேன். ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்துவிட்டு பின்னர் உட்கார்ந்தார்கள்’ என்று அலீ (ரலி) அவர்கள் அறிவித்ததாக மஸ்வூத் பின் ஹகம் எனக்குக் கூறினார்’ என அவர் பதிலளித்தார்.

அறிவிப்பவர்: வாகித் பின் அம்ர்

(முஸ்லிம்: 1597)

இந்த ஹதீஸும் இவர்கள் கூறுகின்ற கருத்தில் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்தார்கள்; பின்னர் உட்கார்ந்தார்கள் என்ற சொற்றொடர் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டையும் செய்தார்கள் என்ற கருத்தைத் தருமே தவிர எழுந்து நிற்பதை விட்டு விட்டார்கள் என்ற கருத்தைத் தராது.