என்னைச் சார்ந்தவனில்லை

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!

சாந்தியும், சமாதானமும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீதும், உத்தம சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

நபிகளார் அவர்களின் அறிவுரைகளில், அவர்களது வார்த்தைப் பயன்பாட்டை வைத்து அதன் கடுமையையும் நன்மையையும் மதீப்பிடு செய்து விடலாம். சாதாரணமாகக் கண்டித்த வார்த்தைகள், கடுமையாகக் கண்டித்த வார்த்தைகள் என்று நபிமொழித் தொகுப்புகளில் நபிகளாரின் வார்த்தைப் பயன்பாட்டில் நாம் பார்க்கலாம். அந்த வகையில் சில குறிப்பிட்ட செயல்களை நபி (ஸல்) அவர்கள், இந்தச் செயலைச் செய்தவன் என்னைச் சார்ந்தவன் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

கடும் கோபம் ஏற்படும் போது எப்படி ஒரு தந்தை தன் பிள்ளையைப் பார்த்து, என் பிள்ளையே கிடையாது என்று கூறுவாரோ அதைப் போன்று சில காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து, என்னைச் சார்ந்தவன் இல்லை என்று கடுமையான வாசகத்தை நபிகளார் பயன்படுத்தியுள்ளார்கள். எனவே இவ்வாறு பயன்படுத்தியுள்ள காரியத்திலிருந்து நாம் முற்றிலும் தவிர்ந்திருக்க வேண்டும்.

குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துபவன்

கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் ஏற்படும் போது குடும்பத்திலுள்ளவர்கள் அவர்களின் பிணக்குகளைத் தீர்த்து, அவர்களை சேர்ந்து வாழ ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால் சிலர் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுத்துவதற்காகவே இல்லாததையும் இருப்பதையும் இணைத்து மனைவியிடம் போட்டுக் கொடுத்து, கணவன் மனைவிக்கு மத்தியில் உள்ள உறவில் விரிசலை ஏற்படுத்துகிறார்கள். இவ்வாறு செய்வது மிகப் பெரிய குற்றமாகும்.

قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم
لَيْسَ مِنَّا مَنْ خَبَّبَ امْرَأَةً عَلَى زَوْجِهَا أَوْ عَبْدًا عَلَى سَيِّدِهِ.

கணவனுக்கு எதிரான கருத்துக்களை மனைவியிடம் கூறி பிரச்சனையை ஏற்படுத்துபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: அபூஹுரைரா (ரலி),
நூல்: (அபூதாவூத்: 2175) (1860), அஹ்மத் (8792)

திருமணத்தைப் புறக்கணிப்பவன்

இறைவனுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருப்பதற்காகவும், அவனது அருளைப் பெறுவதற்காகவும் சிலர் குடும்பத்தை விட்டு விட்டு, காடுகளில் தவமிருந்து பல அரிய சக்திகளைப் பெற்றதாகப் பல கதைகளை நாம் கேட்டிருப்போம். ஆனால் இவ்வாறு துறவறம் இருப்பது இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

மாறாக, திருமணம் முடித்து குடும்பத்தினருடன் வாழ்வதே இறையருளைப் பெற்றுத் தரும் என்றும் இதைப் புறக்கணிப்பவன் இஸ்லாமிய மார்க்கத்தின் வழிமுறையைப் புறக்கணித்தவனாகக் கருதப்படுவான் என்றும் கடுமையாக நபிகளார் எச்சரித்துள்ளார்கள். முழுக்க முழுக்க இறைவன் என்றிருக்காமல் குடும்பத்தையும் கவனிக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்கள்.

 أَنَسَ بْنَ مَالِكٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، يَقُولُ
جَاءَ ثَلاَثَةُ رَهْطٍ إِلَى بُيُوتِ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَسْأَلُونَ عَنْ عِبَادَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا أُخْبِرُوا كَأَنَّهُمْ تَقَالُّوهَا فَقَالُوا وَأَيْنَ نَحْنُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَدْ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ قَالَ أَحَدُهُمْ أَمَّا أَنَا فَإِنِّي أُصَلِّي اللَّيْلَ أَبَدًا وَقَالَ آخَرُ أَنَا أَصُومُ الدَّهْرَ ، وَلاَ أُفْطِرُ وَقَالَ آخَرُ أَنَا أَعْتَزِلُ النِّسَاءَ فَلاَ أَتَزَوَّجُ أَبَدًا فَجَاءَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ : أَنْتُمُ الَّذِينَ قُلْتُمْ كَذَا وَكَذَا أَمَا وَاللَّهِ إِنِّي لأَخْشَاكُمْ لِلَّهِ وَأَتْقَاكُمْ لَهُ لَكِنِّي أَصُومُ وَأُفْطِرُ وَأُصَلِّي وَأَرْقُدُ وَأَتَزَوَّجُ النِّسَاءَ فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي.

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்கன் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டு விட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே? என்று சொல்லிக் கொண்டனர்.

அவர்களில் ஒருவர், (இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப்போகிறேன் என்றார். இன்னொருவர், நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன் என்று கூறினார். மூன்றாம் நபர் நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப்போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, இப்படி இப்படியெல்லாம் பேசிக் கொண்டது நீங்கள் தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று சொன்னார்கள்.

அறி: அனஸ் (ரலி),
நூல்: (புகாரி: 5063) 

மோசடி செய்பவன்

பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அடுத்தவர்களை ஏமாற்றி, மோசடி செய்து பணம் பார்ப்பவர்கள் இன்று அதிகரித்துள்ளார்கள். குறிப்பாக அடிப்படைத் தேவையான உணவுகளில் கலப்படம் செய்து, தரமற்ற பொருட்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றும் இவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை என்று நபிகளார் எச்சரிக்கை செய்துள்ளார்கள். உணவு என்றில்லாமல் எதில் மோசடி செய்வதும் கண்டிப்பாகக் கூடாது. கடுமையான குற்றமாகும்.

عَنْ أَبِى هُرَيْرَةَ. أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم
مَرَّ عَلَى صُبْرَةِ طَعَامٍ فَأَدْخَلَ يَدَهُ فِيهَا فَنَالَتْ أَصَابِعُهُ بَلَلاً فَقَالَ « مَا هَذَا يَا صَاحِبَ الطَّعَامِ ». قَالَ أَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُولَ اللَّهِ. قَالَ « أَفَلاَ جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ كَىْ يَرَاهُ النَّاسُ مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّى

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது.

உடனே அவர்கள் உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)? என்று கேட்டார்கள். அதற்கு அவர், இதில் மழைச் சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே! என்றார். அப்போது அவர்கள், ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா? என்று கேட்டு விட்டு, மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று கூறினார்கள்.

அறி: அபூஹுரைரா (ரலி),
நூல்: (முஸ்லிம்: 164) 

சமூகத்தைக் கொன்றழிப்பவன்

தம்மிடையே ஏற்பட்டுள்ள சண்டையின் காரணத்தால் இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராகப் போர் செய்து, அவர்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று பார்க்காமல் கொன்றொழிப்பவன் நம்மைச் சார்ந்தவன் இல்லை. இன்று இஸ்லாத்தின் பெயரால் குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பவர்கள் நபிகளாரின் எச்சரிக்கையைக் கவனத்தில் கொண்டு, நல்லவர்களையும் அப்பாவிக் குழந்தைகளையும் கொலை செய்யும் போக்கை முற்றிலும் கைவிடவேண்டும்.

مَنْ خَرَجَ مِنَ الطَّاعَةِ وَفَارَقَ الْجَمَاعَةَ فَمَاتَ مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً وَمَنْ قَاتَلَ تَحْتَ رَايَةٍ عُمِّيَّةٍ يَغْضَبُ لِعَصَبَةٍ أَوْ يَدْعُو إِلَى عَصَبَةٍ أَوْ يَنْصُرُ عَصَبَةً فَقُتِلَ فَقِتْلَةٌ جَاهِلِيَّةٌ وَمَنْ خَرَجَ عَلَى أُمَّتِى يَضْرِبُ بَرَّهَا وَفَاجِرَهَا وَلاَ يَتَحَاشَ مِنْ مُؤْمِنِهَا وَلاَ يَفِى لِذِى عَهْدٍ عَهْدَهُ فَلَيْسَ مِنِّى وَلَسْتُ مِنْهُ.

யார் என் சமுதாயத்தாருக்கெதிராகப் புறப்பட்டு, அவர்களில் இறைநம்பிக்கையாளர்களைப் பொருட்படுத்தாமல் அவர்களில் நல்லவர்களையும் கெட்டவர்களையும் கொன்று, ஒப்பந்தம் செய்துள்ளவர்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தவறுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவருமில்லை. நான் அவரைச் சேர்ந்தவனுமில்லை.

அறி: அபூஹுரைரா (ரலி),
நூல்: (முஸ்லிம்: 3766) 

இதே கருத்தில் புகாரியில் மற்றொரு செய்தி இடம் பெற்றுள்ளது.

مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلاَحَ فَلَيْسَ مِنَّا

 நமக்கெதிராக எவன் ஆயுதம் ஏந்துகிறானோ அவன் நம்மைச் சார்ந்தவனல்லன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: இப்னு உமர் (ரலி),
நூல்: (புகாரி: 6874) 

துன்பத்தின் போது கன்னத்தில் அறைபவன்

மனிதனின் வாழ்க்கையில் துன்பம் என்பது கண்டிப்பாக வந்து சென்று கொண்டே இருக்கும். அப்போது பொறுமை மேற்கொள்வது இறை நம்பிக்கையாளனின் கடமையாகும். ஆனால் பலர் துன்ப நேரங்களில் கன்னங்களில் அறைந்து கொள்வதும் சட்டையைக் கிழித்துக் கொள்வதும் ரத்தக் காயங்களை ஏற்படுத்திக் கொள்வதும் ஒப்பாரி வைத்து அழுவதும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு நடந்து கொள்பவர்கள் இஸ்லாமியர்களாகக் கணிக்கப்பட மாட்டார்கள். துன்பங்கள் நேரும் போது படைத்தவன் நம்மை சோதிக்கிறான் என்றெண்ணி நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்து, இறைவா! இந்தச் சோதனைக்குப் பகரமாக கூலியைக் கொடு. இதை விட சிறந்ததை வழங்கு என்று கூற வேண்டுமே தவிர, கன்னங்களில் அடித்துக் கொள்வதும் சட்டைகளை கிழித்துக் கொள்வதும் ஒப்பாரி வைத்து அழுவதும் கண்டிப்பாகக் கூடாது.

لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ وَشَقَّ الْجُيُوبَ وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ

(துக்கத்தினால்) கன்னங்களில் அறைந்து கொள்பவனும் சட்டைப் பைகளைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக் கால (பழக்கங்களுக்காக) அழைப்பு விடுப்பவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
நூல்: (புகாரி: 1297) 

وَجِعَ أَبُو مُوسَى وَجَعًا فَغُشِىَ عَلَيْهِ وَرَأْسُهُ فِى حَجْرِ امْرَأَةٍ مِنْ أَهْلِهِ فَصَاحَتِ امْرَأَةٌ مِنْ أَهْلِهِ فَلَمْ يَسْتَطِعْ أَنْ يَرُدَّ عَلَيْهَا شَيْئًا فَلَمَّا أَفَاقَ قَالَ أَنَا بَرِىءٌ مِمَّا بَرِئَ مِنْهُ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَإِنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- بَرِئَ مِنَ الصَّالِقَةِ وَالْحَالِقَةِ وَالشَّاقَّةِ.

(என் தந்தை) அபூமூஸா (ரலி) அவர்கள் கடுமையான வேதனையில் மயக்கமடைந்து விட்டார்கள். அவர்களது தலை அவர்களுடைய குடும்பப் பெண் ஒருவரின் மடி மீது இருந்தது. அப்போது அவர்களுடைய குடும்பத்துப் பெண்மணி ஒருவர் ஓலமிட்டு அழுதார். அபூமூஸா (ரலி) அவர்களால் அப்பெண்ணுக்கு பதிலேதும் சொல்ல முடியவில்லை.

பிறகு மயக்கம் தெளிந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரை விட்டுத் தமது பொறுப்பை விலக்கிக் கொண்டார்களோ அவரை விட்டு நானும் என் பொறுப்பை விலக்கிக் கொள்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (துன்பத்தின் போது) ஓலமிட்டு அழும் பெண், தலையை மழித்துக் கொள்ளும் பெண், ஆடையைக் கிழித்துக்கொள்ளும் பெண் ஆகியோரிடமிருந்து தமது பொறுப்பை விலக்கிக் கொண்டார்கள் என்று கூறினார்கள்.

அறி: அபூபுர்தா பின் அபீமூஸா,
நூல்: (முஸ்லிம்: 167) 

அநீதிக்கு உதவி செய்பவர்கள் அதிகாரம் உள்ள பதவிக்கு வருபவர்கள், தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சுகம் காண்கிறார்கள். மக்களின் தேவைகளையும் அவர்களின் விருப்பங்களையும் கண்டு கொள்வதில்லை. இப்படிப்பட்ட தலைவர்களின் குறைகளை சுட்டிக் காட்டி அநீதிகளை தட்டிக் கேட்பதற்குப் பதிலாக, அவர்கள் செய்யும் அநீதிகளையும் அக்கிரமங்களையும் பொய்களையும் சரி காண்பவர்களும் இன்று இருக்கத் தான் செய்கிறார்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் தலைவர்களிடம் சில பலன்களை பெற்றுக் கொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை நபிகளார் பின்வரும் செய்தியின் மூலம் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

« اسْمَعُوا هَلْ سَمِعْتُمْ أَنَّهُ سَيَكُونُ بَعْدِى أُمَرَاءُ فَمَنْ دَخَلَ عَلَيْهِمْ فَصَدَّقَهُمْ بِكَذِبِهِمْ وَأَعَانَهُمْ عَلَى ظُلْمِهِمْ فَلَيْسَ مِنِّى وَلَسْتُ مِنْهُ وَلَيْسَ بِوَارِدٍ عَلَىَّ الْحَوْضَ وَمَنْ لَمْ يَدْخُلْ عَلَيْهِمْ وَلَمْ يُعِنْهُمْ عَلَى ظُلْمِهِمْ وَلَمْ يُصَدِّقْهُمْ بِكَذِبِهِمْ فَهُوَ مِنِّى وَأَنَا مِنْهُ وَهُوَ وَارِدٌ عَلَىَّ الْحَوْضَ ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ مِسْعَرٍ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ.

எனக்கு பின்னால் சில தலைவர்கள் வருவார்கள். அவர்களிடம் சென்று அவர்களின் பொய்களை உண்மைப்படுத்துவார்கள். அவர்களின் அநீத செயல்களுக்கு உதவி புரிவார்கள். அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் இல்லை. நான் அவனைச் சார்ந்தவனும் இல்லை. அவர்கள் (மறுமைநாளில்) ஹவ்லுல் கவ்ஸர் தடாகத்திற்கு என்னிடம் வர மாட்டார்கள்.

யார் அவர்களிடம் (அநீதி இழைக்கும் தலைவர்களிடம்) செல்லாமல் அவர்களின் அநீதிக்கு உதவி செய்யாமல் அவர்களின் பொய்களை உண்மைப்படுத்தாமல் இருப்பார்களோ அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள், நான் அவர்களைச் சார்ந்தவன். அவர்கள் ஹவ்லுல் கவ்ஸர் தடாகத்திற்கு என்னிடம் வருவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : கஅப் பின் உஜ்ரா (ரலி),
நூல் : (திர்மிதீ: 2259) (2185)

அபகரிப்பவன்

பொருள்களின் மீதுள்ள ஆசையின் காரணத்தால் அடுத்தவர்களின் பொருள்களை அநியாயமாக அபகரித்துக் கொள்ளையடிப்பவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை என்று கடுமையான எச்சரிக்கையை நபிகளார் செய்ததுடன், அவன் அவ்வாறு செய்யும் போது முஃமினாக இருப்பதில்லை என்றும் கூறியுள்ளார்கள்.

 وَمَنِ انْتَهَبَ فَلَيْسَ مِنَّا

(மற்றவர்களின் பொருள்களை) அபகரிப்பவன் என்னைச் சார்ந்தவன் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி),
நூல்கள்: (திர்மிதீ: 1123) (1042), நஸயீ (3283), இப்னுமாஜா (3927), அஹ்மத் (19136)

 وَلاَ يَنْتَهِبُ نُهْبَةً يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ فِيهَا أَبْصَارَهُمْ حِينَ يَنْتَهِبُهَا وَهْوَ مُؤْمِنٌ.

ஒருவன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, (பிறரது பொருளை அபகரித்துக்) கொள்ளையடிக்கும் போது மூமினாக இருந்து கொண்டு கொள்ளையடிப்பதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: அபூஹுரைரா (ரலி), நூல்: (புகாரி: 2475) 

மீசையை வெட்டாதவர்

இஸ்லாம் தூய்மையை வலியுறுத்துகிறது. தூய்மையாக இருப்பது ஈமானின் உள்ளடக்கம் என்றும் தெளிவுபடுத்துகிறது. அந்த அடிப்படையில் மீசையை வெட்டிக் கொள்ளுமாறும், இது இயற்கையான சுன்னத் என்றும் போதிக்கிறது. மேலும் மீசையை அதிகமாக வளர்ப்பதன் காரணத்தால், சாப்பிடும் போதும் குடிக்கும் போதும் மீசையில் பட்டு அதன் மீது படிந்துள்ள தூசிகளும் சேர்ந்து உடலுக்குள் போக வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே இவற்றைத் தவிர்க்கும் விதமாக மீசையை ஒழுங்குற வெட்டிக் கொள்ள வேண்டும். 

مَنْ لَمْ يَأْخُذْ شَارِبَهُ فَلَيْسَ مِنَّا

யார் மீசையை எடுக்கவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: ஸைத் பின் அர்கம் (ரலி),
நூல்: (திர்மிதீ: 2761) (2685), நஸயீ (13)

 عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ:
مِنَ الْفِطْرَةِ قَصُّ الشَّارِبِ

மீசையைக் கத்தரிப்பது இயற்கை மரபில் அடங்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : இப்னு உமர் (ரலி),
நூல் : (புகாரி: 5888) 

என்னைச் சார்ந்தவனில்லை
இப்னு தாஹிரா