எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்
அவர்கள் (உம்மைப் பற்றிப்) பேசுவதன் காரணமாக உமது உள்ளம் கலங்குவதை அறிவோம். உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! ஸஜ்தா செய்வீராக! உறுதியானது (மரணம்) வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக!
இம்மூன்று வசனங்களிலும் இறைவன் ஏராளமான படிப்பினைகளை மனித குலத்துக்கு வழங்கியிருக்கின்றான்.
முதல் வசனத்தில் குரைஷி காஃபிர்கள் நபி (ஸல்) அவர்களுக்குச் சில சொற்களின் மூலமாக கஷ்டம் கொடுத்து மனதை நெருக்கடிக்குள்ளாக்கியதை அல்லாஹ் கூறுகின்றான்.
இரண்டாம் வசனத்தில் அந்தக் கஷ்டத்திற்கு நிவாரணமாக அல்லாஹ்வை நபியவர்கள் புகழ வேண்டுமென்றும் தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் தொழுகையின் மூலம் ஸஜ்தா செய்யுமாறும் கூறி நபியவர்களின் மன நெருக்கடிக்கும் மன சஞ்சலத்திற்கும் ஆறுதலளிக்கும் விஷயத்தைக் கூறுகின்றான்.
மூன்றாவது வசனத்திலும் கஷ்டங்கள், சோதனைகள் எது வந்தாலும் மரணம் வருகின்ற வரைக்கும் தளர்ந்து, சோர்ந்து விடாமல் தூதுத்துவச் செய்தியை எடுத்துச் சொல்வதுடன், வணக்க வழிபாடுகளை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று இறைவன் கூறுகின்றான்.
இம்மூன்று வசனங்களுக்குரிய விளக்கங்களையும், அவைகளில் நமக்கிருக்கும் படிப்பினைகளையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
(15:97) ஆம் வசனத்தில் குரைஷி இறை நிராகரிப்பாளர்கள், சில சொற்களால் நபியவர்களைக் குறித்து கூறியதால் தான் நபியவர்களின் உள்ளம் நெருக்கடிக்குள்ளானது என்று பொதுவாக அல்லாஹ் கூறுகின்றான். அவர்கள் பேசிய வார்த்தை இன்னது தான் என்று குறிப்பிட்டு இந்த வசனத்தில் சொல்லவில்லை.
என்றாலும் குர்ஆனில் மற்ற பல இடங்களில் குரைஷிகள் நபியவர்களின் மனதை சஞ்சலப் படுத்த வேண்டும் என்ற நோக்கில் பேசிய பல வார்த்தைகளை குர்ஆன் நெடுகிலும் ஆங்காங்கே காணலாம்.
நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டுமென கேட்பதன் மூலமும், அல்லது நபியுடன் ஒரு வானவர் வருவதை கேட்பதன் மூலமும் நபியவர்களின் மனதை காயப் படுத்தினார்கள் என்று அல்லாஹ் கீழ்க்கண்டவாறு விளக்கமாக கூறுவதைக் காணலாம்.
“இவருக்கு ஒரு புதையல் அருளப்பட வேண்டாமா? அல்லது இவருடன் ஒரு வானவர் வர வேண்டாமா?’’ என்று அவர்கள் கூறுவதால் (முஹம்மதே!) உமக்கு அறிவிக்கப்படும் செய்தியில் சிலவற்றை நீர் விட்டு விடக் கூடும். உமது உள்ளம் சங்கடப்படக் கூடும். நீர் எச்சரிப்பவரே. அல்லாஹ்வே எல்லாப் பொருளுக்கும் பொறுப்பாளன்.
மேலும் 6:8வது வசனத்தில்,
“இவருடன் வானவர் இறக்கப்பட்டிருக்க வேண்டாமா?’’ என அவர்கள் கூறுகின்றனர். வானவரை நாம் அனுப்பியிருந்தால் காரியம் முடிக்கப்பட்டிருக்கும். பின்னர் அவர்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.
மேலும் இறைவனால் மட்டுமே செய்வதற்கு சக்தி பெற்ற பல காரியங்களை (மனிதரான) நபி (ஸல்) அவர்களிடம் செய்யக் கேட்டு ஈமான் கொள்வதற்கு அந்த விஷயங்களையே நிபந்தனையிட்டார்கள்.
இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக அருளப்படக் கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே!) இப்படித்தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம்.
“(மக்கா மதீனா ஆகிய) இவ்விரு ஊர்களில் உள்ள மகத்தான மனிதருக்கு இந்தக் குர்ஆன் அருளப்பட்டிருக்கக் கூடாதா?’’ எனக் கேட்கின்றனர்.
“இவருக்கு, இவரது இறைவனிடமிருந்து தக்க சான்று அருளப்பட வேண்டாமா?’’ என்று (ஏக இறைவனை) மறுப்போர் கேட்கின்றனர். “தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். திருந்தியோருக்கு, தன் பக்கம் வழிகாட்டுகிறான்’’ என்று கூறுவீராக!
இவ்வாறு ஈமான் கொள்வதற்கு நபி (ஸல்) அவர்களிடம் கோரிக்கை வைத்தும், நபி (ஸல்) அவர்களின் மனதை நெருக்கடிக்கு உள்ளாக்கி சஞ்சலப்படுத்தியதாகவும் அல்லாஹ் 17:90-94 ஆகிய வசனங்களில் கூறுவதைப் பார்க்கின்றோம்.
“இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம்’’ என்று கூறுகின்றனர். அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளைப் பெருக்கெடுத்து நீர் ஓடச் செய்ய வேண்டும்.
அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும், வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும்.
அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) “என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்’’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!
“மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்?’’ என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர்வழி வந்தபோது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது.
ஏகத்துவப் பிரச்சாரத்தை மக்களிடம் வீரியமாக எடுத்துச் சென்று மக்களுக்கு அழைப்பு விடுக்கும் போது, நம்மை எதிர்ப்பவர்கள் வாய் வார்த்தைகளால் எவ்வளவுதான் ஏளனமாகப் பேசினாலும் கேலி செய்தாலும் நபியவர்கள் எவ்வாறு தமது பிரச்சாரத்தை நிறுத்திவிடாமல் இவ்வளவு மனக்கஷ்டத்திற்குப் பிறகும் தூதுத்துவச் செய்தியைச் சிறிதும் குறைவின்றி மக்களுக்கு மத்தியில் தொடர்ந்து சொல்லி வந்தார்களோ அது போன்று நாமும் செய்ய வேண்டும்.
மேற்கண்டவாறு நபியவர்களின் உள்ளத்தைச் சொற்களால் எப்படி காஃபிர்கள் காயப்படுத்தி மனசஞ்சலத்திற்கு ஆளாக்கியதோடு நிறுத்திவிடாமல் நபியவர்களின் உடலுறுப்புகளுக்கும் பலவிதமான தொல்லைகளைக் கொடுத்து அவர்களைக் காயப்படுத்தினார்கள்.
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களிடம், “இணைவைப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது எது என்று எனக்கு அறிவியுங்கள்’’ என்று கேட்டேன். அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் ‘ஹிஜ்ர்’ பகுதியில் தொழுது கொண்டிருந்தபோது, உக்பா பின் அபீமுஜத் என்பவன் முன்னோக்கி வந்து, தன் துணியை நபி (ஸல்) அவர்களுடைய கழுத்தில் வைத்து (முறுக்கி), அவர்கள் மூச்சுத் திணறும்படி (அவர்களின் கழுத்தைக்) கடுமையாக நெறித்தான்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் முன்னால் வந்து அவனது தோளைப் பிடித்து நபி (ஸல்) அவர்களை விட்டு விலக்கினார்கள். மேலும், ‘‘என் இறைவன் அல்லாஹ் தான்’ என்று சொல்கிறார் என்பதற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்கிறீர்கள்?’’(40:28) என்று கேட்டார்கள்.
ஆதாரம்:(புகாரி: 3856)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு முறை (கஅபா அருகில்) நபி (ஸல்) அவர்கள் (தொழுது) சிர வணக்கம் (சஜ்தா) செய்து கொண்டிருக்க, அவர்களைச் சுற்றிலும் குறைஷிகளில் சிலர் இருந்தனர். அப்போது (குறைஷித் தலைவன்) உக்பா பின் அபீமுஜத், ஒட்டகக் கருவைச் சுற்றியுள்ள மெல்லிய சவ்வைக் கொண்டு வந்து, நபி (ஸல்) அவர்களின் முதுகின் மீது எறிந்தான். நபி (ஸல்) அவர்கள் தம் தலையை உயர்த்தவில்லை. உடனே ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்து, அதை நபி (ஸல்) அவர்களுடைய முதுகிலிருந்து எடுத்து விட்டு, அதைச் செய்தவனுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.
பின்னர் நபி (ஸல்) அவர்கள், “இறைவா! குறைஷித் தலைவர்களான அபூஜஹ்ல் பின் ஹிஷாம், உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, உமய்யா பின் கலஃப் …அல்லது உபை பின் கலஃப்… ஆகியோரை நீ கவனித்துக் கொள்’’ என்று பிரார்த்தித்தார்கள். (அதன்படியே) இவர்கள் அனைவரும் பத்ருப் போரில் கொல்லப்பட்டு ஒரு (பாழுங்) கிணற்றில் போடப்பட்டிருக்கக் கண்டேன்; உமய்யா பின் கலஃப் ..அல்லது உபையைத் …தவிர. அவனுடைய மூட்டுகள் துண்டாகி (தனித் தனியாகி) விட்டிருந்த காரணத்தால் அவன் மட்டும் கிணற்றில் போடப்படவில்லை.
ஆதாரம்:(புகாரி: 3854)
நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் நபி (ஸல்) அவர்களிடம், “(தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான காலகட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்ததுண்டா?’’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உன் சமுதாயத்தாரால் நிறைய துன்பங்களைச் சந்தித்து விட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது “அகபா (தாயிஃப்) உடைய நாளன்று சந்தித்த துன்பமேயாகும்.
ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். ‘கர்னுஸ் ஸஆனிப்’ என்னுமிடத்தை நான் அடையும்வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை.
அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக்கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, “உங்கள் சமுதாயத்தார் உங்களிடம் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்’’ என்று கூறினார்கள்.
உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு சலாம் சொல்லி, பிறகு, “முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரு மருங்கிலுமுள்ள) இந்த இரு மலைகளையும் அவர்கள் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)’’ என்று கூறினார்.
உடனே நான், “(வேண்டாம்) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)’’ என்று சொன்னேன்.
ஆதாரம்:(புகாரி: 3231)
இன்றைய காலகட்டத்தில் வீரியமான முறையிலும், அறிவுப்பூர்வமான முறையிலும், குர்ஆன் – ஹதீஸ் அடிப்படையிலும் ஏகத்துவப் பிரச்சாரத்தை எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். ஆனாலும் பெரும்பான்மையான மக்கள் ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்கள்.
அப்படிப்பட்ட அசத்தியத்தில் இருப்பவர்களை வெறுத்து விடாமலும், அவர்களுக்கு எதிராக இறைவனிடத்தில் கையேந்திவிடாமலும், பொறுமை காத்து, பின்னால் அவர்களின் சந்ததிகள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கின்றது; எனவே அமைதி காத்து இருக்க வேண்டும் என்று இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துகின்றது.
அடுத்த வசனமான 15:98,99 ஆகிய வசனங்களில் நபியவர்களின் மனநெருக்கடிக்குத் தீர்வு தரும் விஷயங்களாக நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து, தூய்மைப்படுத்தி, தொழுகையின் மூலம் ஸஜ்தாவும் செய்து மரணம் வருகின்ற வரை வணக்க வழிபாடுகளைச் செய்ய வேண்டும் என்பதை சொல்லிக் காட்டுகின்றான்.
நபி (ஸல்) அவர்களுக்கு ஏதாவது ஒரு காரியம் கஷ்டத்தை ஏற்படுத்தினால் தொழுகையின் பக்கம் விரைவார்கள்.
ஆதாரம்:(அபூதாவூத்: 1319),(அஹ்மத்: 23299)
இதில் நமக்குக் கிடைக்கும் படிப்பினை என்னவென்றால், நமக்கும் அழைப்புப் பணியை எடுத்துச் சொல்லும்போது கஷ்டங்கள், துன்பங்கள் மன நெருக்கடிகள் போன்ற பல்வேறு விதமான எதிர்ப்பலைகள் வந்து தாக்கும். அப்படிப்பட்ட எதிர்ப்புகளை சகித்துக்கொண்டு, பொறுமையோடு இருக்க வேண்டும் என்று இந்த வசனம் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றது.
எனவே அழைப்புப் பணியின் மூலமாக ஏற்படும் சொல்லெணாத் துன்பங்கள், துயரங்கள் எது வந்தாலும், அவற்றுக்காகத் தளர்ந்து போய் விடாமல் நபி (ஸல்) அவர்கள் மன உறுதியோடு போராடியது போல நாமும் வீரியமாக, மன உறுதியோடு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
அது போன்று, உலகம் மற்றும் குடும்பம் சார்ந்த பிரச்சனைகளின் மூலம் ஏற்படும் மன சஞ்சலத்தின் போதும் துவண்டு விடாமல் மன உறுதியோடு இருக்க வேண்டும்.
அத்துடன் அந்த மன நெருக்கடிக்கு நிவாரணமாக இறைவனைப் புகழ்வதுடன் தஸ்பீஹ் செய்து, தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு இறையுதவி தேட வேண்டும் என்ற படிப்பினையை மேற்கண்ட வசனங்களில் இருந்து பாடமாகப் பெற்று வாழ்க்கையில் கடைப்பிடிப்போமாக!!!