எங்கே நிம்மதி.?
அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
இவ்வுலகில் வாழக்கூடிய ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விஷயத்தைத் தேடி அலைகிறான். பொருளாதாரம், கல்வி, பதவி, சாதனை என்று ஒவ்வொருவரின் தேடலும் வித்தியாசப்படுகிறது. இதில் அனைவரும் தேடக்கூடிய தேடல், “நிம்மதி” என்பதே ஆகும். மன நெருக்கடியில்லா வாழ்வில் சந்தோஷங்கள் நிறைந்த நிம்மதியையே அனைத்து மனிதர்களும் தேடி அலைகின்றனர்.
நிம்மதி எங்கேயிருக்கிறது என்ற கேள்விக்குப் பதிலைத் தேடி அலைபவன், ஒரு கட்டத்தில் அது பொருளாதாரத்தில் இருக்கிறது என்று தவறாக நினைத்துக் கொள்கிறான். கோடிகளில் புரண்டு, கார், பங்களா என பொருளாதாரத்தில் தன்னிறைவடைந்த தனவந்தர்களைப் பார்த்து இவர்களது வாழ்க்கை எத்தனை நிம்மதியானது என்று பிரமிக்கிறான்.
பொருளாதாரத்தில் கீழ் நிலையிலுள்ளவன், எங்கே நிம்மதி என்ற கேள்விக்கு, பொருளாதாரத்தில் என்ற தவறான விடையைப் பெற்றவன் அதைத் தேடுவதற்காகக் கண்கள் மூடி ஓடுகிறான். சிலர் அந்தப் பொருளாதாரத்திற்காக குடும்பத்தைப் பிரிகிறார்கள், குழந்தைகளைப் பிரிகிறார்கள், உற்றார் உறவினர் என்று அனைவரையும் துறந்து வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு வாழ்நாளின் முக்கால் வாசியைக் கழித்து ஊர் திரும்புகின்றனர்.
சிலர் உள்நாட்டில் இருந்தாலும் பொருளாதாரத்தைத் தேடுவதையே வாழ்வின் மையமாகக் கொண்டு குடும்பத்தோடு அன்புடன் நேரம் கழிக்காமல் மனதால் தூரமாகியிருப்பர். இப்படிப் பல்வேறு இன்னல்களையெல்லாம் சந்தித்து, வாழ்வின் பிற்பகுதியில் நிம்மதியான வாழ்க்கையை வாழலாம் என்று பொருளாதாரத்தைத் தேடி கண்மூடி ஓடியவன் கடைசியில் கண்கள் திறந்து பார்க்கும் போதுதான், நிம்மதி என்பது பணம் கொடுத்து வாங்கும் பொருளல்ல என்ற வாழ்வின் யதாரத்தத்தை அவன் புரிந்து கொள்கிறான்.
மனைவி மக்களோடு அனுபவிக்கும் சந்தோஷங்களையெல்லாம் இழந்தும் இறுதி வரை நிம்மதி கிடைக்கவில்லை என்று உணர்கிறான். பொருளாதாரத்தில் கீழ் நிலையில் உள்ளவன் மேலுள்ளவனைப் பார்த்து இப்படி நினைக்கிறான் எனில் மேலுள்ளவன் கீழுள்ளவனைப் பார்த்து சந்தோஷமாக, ஆரோக்கியமாக குடும்பத்தில் சச்சரவுகள் ஏதுமின்றி நிம்மதியாய் வாழ்கிறான் என்று நினைப்பான்.
பொருளாதாரம் இல்லாதவன் இருப்பவனைப் பார்த்தும், நோய்கள் இருப்பவன் இல்லாதவனைப் பார்த்தும், குடும்பத்தில் பிரச்சனைகள் உள்ளவன் இல்லாதவனைப் பார்த்து, பள்ளி படிப்பவன் கல்லூரியில் படிப்பவனைப் பார்த்தும் இப்படியாக அவன் இவனை, இவன் அவனைப் பார்த்து அவனிடம் நிம்மதியுள்ளது, இவனிடம் நிம்மதியுள்ளது என்று அங்கலாய்த்துக் கொண்டுதான் ஒவ்வொரு மனிதனும் இருக்கிறான். ஆனால் கடைசி வரை நிம்மதி எங்கே என்று கேள்விக்கு விடை மட்டும் அவர்களுக்குக் கிடைப்பதாய் தெரியவில்லை. எனவே உண்மையான நிம்மதி எதில் உள்ளது என்பதில் இஸ்லாம் காட்டும் வழிமுறைகளை இந்த உரையில் காண்போம்…
ஆனால் அதற்கான பதிலை, நிம்மதி எங்குள்ளது என்று சில வழிமுறைகளுடன் நமக்கு எடுத்துரைக்கிறது இஸ்லாம். இறை நினைவில்தான் நிம்மதியுள்ளது என்ற அந்த வழிமுறைகளின் ஒட்டுமொத்த சாரம்சத்தைத் திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறது.
நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் நிம்மதியுறுகின்றன. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் நிம்மதியுறுகின்றன.
எல்லா மதங்களும் கூறுவது போன்று, ‘ஆன்மீக தியானத்தில் மன நிம்மதி ஏற்படும்; அதனால் தனியாக அமர்ந்து இறைவனை நினைத்து தியானம் செய்யுங்கள்’ என்று பொதுவாக இஸ்லாம் சொல்லவில்லை. இதில் கூறப்படும் இறை நினைவு என்பது தியானத்தை மாத்திரம் குறிக்கும் நினைவல்ல. இறை நம்பிக்கை, அச்சம், வழிபாடு, மறுமை சிந்தனை என்று அல்லாஹ் அமைத்துக் கொடுத்த வாழ்க்கை முறைப்படி வாழ்வின் ஒவ்வொரு நேரத்தையும் இறை நினைவுடன் வாழக்கூடிய வாழ்க்கை முறையாகும்.
நம் வாழ்வில் எப்போது நிம்மதியை இழக்கிறோம் எனில் ஒரு சோதனை, கஷ்டம் நமக்கு வருகிற போதுதான். வாழ்வில் எந்தவொரு கஷ்ட நஷ்டம் வந்தாலும் இறைவன் நிச்சயம் நமக்கு இதிலிருந்து ஒரு விடியலைத் தருவான் என்ற நம்பிக்கை வேண்டும். சிலர் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு அதற்காக உதவிட நண்பர்கள், உறவினர்கள் என்று யாரும் முன்வராவிட்டால் உலகமே சுருங்கி விட்டதைப் போல் இடிந்து விடுகிறார்கள்.
அந்தக் கலக்கம் நம் வாழ்வின் நிம்மதியைக் குலைத்துவிடுகிறது. குடும்பத்தில் உள்ள சந்தோஷத்தைக் கெடுத்துவிடுகிறது. நெருக்கத்தை அழித்துவிடுகிறது. நான்கு மனிதர்கள் உதவுவார்கள் என்று நம்பிக்கை வைத்து, அவர்கள் உதவ முன்வராததால் இடிந்து போகின்றோம். அந்த நான்கு பேர் இல்லை என்றதும் ‘அவ்வளவுதான் முடிந்தது’ என்ற முடிவுக்கு வந்து விடுகிறோம். நான்கு நபர்களின் மீது வைத்த நம்பிக்கை, படைத்த இறைவனின் மீது இல்லாமல் போனதையே இந்த நிலை படம் பிடித்துக் காட்டுகிறது.
இத்தகைய பலவீனமான இறை நம்பிக்கை இருக்கும் என்றால் சிறு கஷ்டம் கூட பூதாகரமாக நமக்குத் தெரியும். ஆழமான இறைநம்பிக்கை இருக்கும் எனில் பெருங்கஷ்டங்கள் கூட ‘இறைவன் எனக்கு உதவுவான்’ என்ற நம்பிக்கையால் சுக்கு நூறாக்கப்படும். நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை இதற்கு சான்றாகப் பார்க்கலாம.
நீங்கள் (இறைத்தூதராகிய) இவருக்கு உதவி செய்யாவிட்டால், இருவரில் ஒருவராக அவர் இருக்கும் நிலையில், இறைமறுப்பாளர்கள் அவரை (ஊரிலிருந்து) வெளியேற்றிய போது அவருக்கு அல்லாஹ் உதவி செய்திருக்கிறான்.
இருவரும் (ஸவ்ர்) குகையில் இருக்கும் சமயத்தில் “நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்” என்று அவர் தமது தோழரிடம் கூறினார். அப்போது அல்லாஹ் அவர் மீது தனது அமைதியை இறக்கிவைத்தான். நீங்கள் காண முடியாத படைகளின் மூலம் அவரைப் பலப்படுத்தினான். இறைமறுப்பாளர்களின் கொள்கையை தாழ்ந்ததாக ஆக்கினான். அல்லாஹ்வுடைய கொள்கையே உயர்ந்தது. அல்லாஹ் மிகைத்தவன், நுண்ணறிவாளன்.
நபி (ஸல்) அவர்களையும், அபூபக்ர் (ரலி) அவர்களையும் எதிரிகள் துரத்துகின்றனர். அப்போது இருவரும் ஒரு குகையில் தஞ்சம் அடைகிறார்கள். இருவரும் எதிரிகளிடம் பிடிபடுகின்ற சூழல் நிலவுகிறது. எதிரிகளிடமிருந்து காப்பாற்ற உதவிக்கு யாரும் அங்கிருக்கவில்லை. அந்த நிலையிலும் உலகமே இருண்டு விட்டதைப் போன்று இடிந்துபோய்விட வில்லை. இரும்பின் திடத்தை விட பலமான நம்பிக்கை கொண்டு இறை உதவியை எதிர்பார்த்தார்கள். இறைவன் நம்மைப் பாதுகாப்பான் என்ற சிந்தனை, நெருக்கடியான நிலையையும் கூட அவர்களுக்கு நிம்மதியாக மாற்றியது.
ஆனால், இன்று சிறுசிறு கஷ்டங்கள் வந்ததும் கலக்கம் கொண்டு கவிழ்ந்து விடுகிறோமே! அதுவே நிம்மதியற்ற வாழ்வின் பிறப்பிடம். இறைவன், தான் விரும்புகின்ற அடியார்களின் நம்பிக்கையின் ஆழத்தை அளக்க கஷ்டங்களைக் கொடுப்பான். அதில் கடைசி எல்லை வரை தாக்குப் பிடிக்கிறோமா என்பதுதான் இறைவன் நமக்கு கொடுக்கும் டாஸ்க். அத்தகைய கட்டங்களில், எத்தனை கஷ்டங்கள் வந்தாலென்ன? அல்லாஹ் இருக்கிறான் என்ற ஆழ்ந்த நம்பிக்கை தான் உள்ளத்தைக் கலக்கம் கொள்ளாமல் நிம்மதியுடன் பெருமூச்சு விட வைக்கிறது.
போதுமென்ற மனநிம்மதியை, இழக்க வைக்கும் மற்றொரு வாழ்க்கை முறை என்னவெனில் இருக்கின்ற வசதிகளை வைத்துப் போதுமாக்கிக் கொள்ளாமல் பிறரைப் போன்று வாழ நினைப்பது. இந்த வாழ்க்கை முறை ஆண்களிடமும், அதை விட அதிகமாகப் பெண்களிடமும் காணப்படுகிறது. தனக்கு இறைவன் கொடுத்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதற்கே ஒவ்வொருவருக்கும் நாட்கள் போதாது. அப்படியிருக்க, கொடுத்ததை எண்ணி நன்றி செலுத்தவதற்குப் பதிலாக பிறரிடம் இருப்பது தன்னிடம் இல்லை என்று தேடிப் பார்க்கும் போது, தான் அவனை விடத் தாழ்ந்தவனோ என்று எண்ணித் துவண்டு போகிறான்.
நிம்மதி இழக்கிறான். பிறரைப் போல் வாழ வேண்டும் என்று பார்ப்பவன் அடுத்தவனிடத்தில் உள்ள நிறைகளையும், தன்னிடம் உள்ள குறைகளையும் மாத்திரமே பார்ப்பான். தான் அவனை விடப் பொருளாதாரத்திலோ, ஆரோக்கியத்திலோ, அழகிலோ, ஆடை அணிகலன்களிலோ என்று ஏதோ ஒரு விஷயத்தில் குறைவுற்று இருப்பதாக உணரும் போது அவனைப் போன்று நான் இல்லையே என்ற எண்ணமே நிம்மதியைக் குலைத்துவிடுகிறது. அதனால்தான், ‘உனக்கு மேலுள்ளவனைப் பார்க்காதே! கீழுள்ளவனைப் பார்’ என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.
“செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 6490)
சிலர் பைக் வைத்திருப்பார்கள். அவர்களின் பார்வை கார் வைத்திருப்பவரை நோக்கியிருந்தால், நம்மால் இயலவில்லை என்ற ஏக்கம் நிம்மதியைக் குலைத்துவிடும். அதனால் அவர் தனக்குக் கீழ்நிலையில் உள்ள, சைக்கிளில் செல்பவரைப் பார்க்க வேண்டும்.
அவர் நடந்து செல்பவரை, அவர் கால்கள் இல்லாமல் தவழ்பவரை என்று ஒவ்வொருவரும் தனக்குக் கீழ் நிலையில் உள்ளவர்களைப் பார்க்கும் போதுதான் நமக்கு இறைவன் கொடுத்த நிறையைக் கவனத்தில் கொண்டு மனம் ஆறுதல் அடையும். இறைவன் கொடுத்ததையே நிறையாக எண்ணி, போதுமாக்கிக் கொள்வதே நிம்மதியான வாழ்க்கைக்கு வித்திடும்.
நபி (ஸல்) அவர்கள் மிக ஏழ்மையான வாழ்க்கையையே வாழ்ந்தார்கள். ஒருவர் படுத்திருந்தால் மற்றவரால் தொழுகையில் ஸஜ்தா செய்ய முடியாத அளவுக்குக் குறுகிய இருப்பிடம். மூன்று நாட்கள் தொடர்ச்சியாக உண்ணாமலிருக்கும் பசி என்று ஏழ்மையின் உச்சத்தில் இருந்தார்கள். ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருந்தும் கூட இத்தகைய வாழ்க்கையையே வாழ்ந்தார்கள்.
இவ்வளவு ஏழ்மையிருந்தும் கூட நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்று வரலாறு சொல்கின்றதே! காரணம் என்ன? அடுத்தவரைப் போல் வாழ எண்ணம் கொள்ளவில்லை. தன் வாழ்விலிருக்கும் குறைகளை எண்ணிக் கொண்டிருக்கவில்லை. இறைவன் கொடுத்ததை நிறையாக ஏற்றுக் கொண்டு இருந்தார்கள்.
நான் என் வீட்டில் அமர்ந்திருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது (தம்மருகே வருமாறு) என்னை நோக்கி சைகை செய்தார்கள். நான் அவர்களிடம் எழுந்து சென்றேன். அவர்கள் எனது கையைப் பிடித்துக்கொண்டார்கள். பிறகு நாங்கள் இருவரும் நடந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரது அறை வந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். பிறகு எனக்கும் (உள்ளே வர) அனுமதியளித்தார்கள். நான் வீட்டாருக்காக இடப்பட்டிருந்த திரைவரை சென்றேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஏதேனும் உணவு உள்ளதா?’’ என்று கேட்டார்கள். வீட்டார், “ஆம்’’ என்றனர். பிறகு மூன்று ரொட்டிகள் கொண்டுவரப்பட்டு, அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ரொட்டியை எடுத்துத் தமக்கு முன்னால் வைத்தார்கள். பிறகு மற்றொரு ரொட்டியை எடுத்து எனக்கு முன்னால் வைத்தார்கள்.
பிறகு மூன்றாவது ரொட்டியை எடுத்து அதை (இரண்டாக)ப் பிட்டு, ஒரு பாதியைத் தமக்கு முன்னாலும் மற்றொரு பாதியை எனக்கு முன்னாலும் வைத்தார்கள். பிறகு (தம் வீட்டாரிடம்), “குழம்பேதும் இருக்கிறதா?’’ என்று கேட்டார்கள். வீட்டார், “இல்லை; சிறிதளவு காடியைத் தவிர வேறெதுவுமில்லை’’ என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதைக் கொண்டுவாருங்கள். குழம்புகளில் அருமையானது அதுவே’’ என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 4172)
வீட்டில் இருப்பதே மூன்று ரொட்டிகள். அதிலும் பாதி ஒன்னரையை மற்றவருக்கு உபசரிக்கிறார்கள். ரொட்டியை நனைத்துச் சாப்பிட குழம்பு எதுவும் இல்லை. காடி எனும் வினிகர் போன்ற புளித்த ஒரு பொருள் தான் உள்ளது. அதில் நனைத்துச் சாப்பிடுகிறார்கள். இதுதான் சிறந்த குழம்பு என்று சொல்கிறார்கள். குழம்பு இல்லாமல் காடியைச் சாப்பிட்டும் கூட அதை ஒரு குறையாக எண்ணாமல் இருப்பதை நிறைவாக ஏற்றுக் கொண்டு, பிறருக்கும் அதை உபசரிக்கிறார்கள் என்றால் இந்த உயரிய உள்ளம்தான் நபிகளாரின் நிம்மதியின் ரகசியமாகும்.
நபிகளாரின் இத்தகைய நிம்மதியான வாழ்விற்குக் காரணங்களில் ஒன்று மறுமை நம்பிக்கையும்தான். அண்டை நாட்டு மன்னர்களெல்லாம் செல்வச் செழிப்பில் உலா வந்து கொண்டிருந்த காலத்தில், ஆட்சித் தலைவர் ஆன்மீகத் தலைவர் இருபெரும் தலைமைப் பொறுப்புகளைத் தன்னகத்தே வைத்திருந்தாலும் கூட பிற மன்னனைப் போல் வாழ வேண்டும் என்ற ஆசை சற்றும் இல்லாதிருந்தார்கள். சிறு வசதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று நபித்தோழர்கள் சொன்ன போதும் கூட, மறுமைக்காக வாழ்பவனுக்கு ஏன் அதெல்லாம் என்றார்கள்.
நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க வந்த உமர் (ரலி) அவர்கள் தொடர்பான நிகழ்வை சற்றுப் பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு பாயில் சாய்ந்து படுத்திருந்தார்கள். நான் அமர்ந்தவுடன் அவர்கள் தமது கீழாடையைச் சுருட்டினார்கள். அப்போது அவர்கள் உடலில் அந்த ஆடையைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அந்தப் பாய் அவர்களது விலாப் புறத்தில் அடையாளம் பதித்திருந்தது. அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தனி அறையை நோட்டமிட்டேன்.
அங்கு ஒரு ‘ஸாஉ’ அளவு தொலி நீக்கப்படாத கோதுமையும், அறையின் ஒரு மூலையில் அதே அளவு கருவேல இலையும் இருந்தன. நன்கு பதனிடப்படாத ஒரு தோல் அங்கு தொங்கவிடப்பட்டிருந்தது. (இதைக் கண்ட) என் கண்கள் (என்னையும் அறியாமல்) கண்ணீர் சொரிந்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கத்தாபின் புதல்வரே! ஏன் அழுகிறீர்கள்?’’ என்று கேட்டார் கள்.
நான், “அல்லாஹ்வின் நபியே! என்னால் எவ்வாறு அழாமலிருக்க முடியும்? இந்தப் பாய் உங்களது விலாப் புறத்தில் அடையாளப்படுத்தியுள்ளதே! (இதோ) இதுதான் உங்களது தனி அறை. இதில் நான் காணுகின்ற (விலை மலிவான) சில பொருட்களைத் தவிர வேறெதையும் நான் காணவில்லை. அந்த (பாரசீகம் மற்றும் இத்தாலி அரசர்களான) குஸ்ருவும் சீசரும் கனி வர்க்கங்களிலும் நதிகளிலும் (உல்லாசமாக) இருக்கின்றனர்.
நீங்களோ அல்லாஹ்வின் தூதரும் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவீர்கள். ஆனால், உங்களது தனி அறை இவ்வாறு இருக்கிறதே!’’ என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கத்தாபின் புதல்வரே! நமக்கு மறுமையும் அவர்களுக்கு இம்மையும் இருப்பது உங்களுக்குத் திருப்தி இல்லையா?’’ என்று கேட்டார்கள். நான் “ஆம் (திருப்திதான்)’’ என்றேன்.
நூல்: (முஸ்லிம்: 2947) (சுருக்கம்)
ஒரு சிறு வசதியை ஏற்படுத்திக் கொள்ளுமாறு கோரிக்கை வைத்த போது கூட, அதுவெல்லாம் மறுமையில் பெற்றுக் கொள்ளலாம் என்று நபிகளார் சொல்கிறார்கள். இந்த உலகம் நிரந்தரம் அல்ல! இது ஒரு பயணி, மரத்தின் கீழ் நிழல் அனுபவிக்கின்ற நேரம் போன்ற அற்பமானது தான் என்பதாகக் கூறியிருக்கிறார்கள்.
நபி (ஸல்) ஒரு பாயில் படுத்திருக்கும்போது அவர்களிடம் உமர் (ரலி) வந்தார்கள். அந்த பாய் அவர்களின் விலாப் புறத்தில் தடம்பதித்திருந்தது. (அதை கண்ட) உமர் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! இதை விட மென்மையான ஒரு விரிப்பைத் தாங்கள் எடுத்துக் கொள்ள கூடாதா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எனக்கும் இந்த உலகத்திற்கு என்ன சம்பந்தம்?
எனக்கும் இந்த உலகத்திற்கும் உதாரணம் என்பது, ஒருவன் கோடை நாளில் பயணிக்கின்றான். பகலில் சிறிது நேரம் ஒரு மரத்திற்குக் கீழ் நிழலாடுகிறான். பிறகு அதை விட்டுவிட்டு சென்று விடுகிறானே! அத்தகையவனைத் போன்றது தான்” என்று கூறினார்கள்.
நூல்: (அஹ்மத்: 2744)
இதுபோல் இந்த உலகத்தை அனைவரும் எண்ணி விட்டால் எதிர்பார்ப்புகள் ஏதும் இருக்காது. எதிர்பார்ப்புகள் இல்லையென்றாலே ஏமாற்றங்கள் இருக்காது. ஏமாற்றங்கள் குறைந்து விட்டாலே நிம்மதி மேலோங்கும். உலக எதிர்பார்ப்புகள் குறைந்து, மறுமை எதிர்பார்ப்பு மேலோங்குவதும் நிம்மதிக்கான வழியாகும். மேலும், இந்த உலகத்தில் எந்தவொரு கஷ்டம் வந்தாலும் அதற்கு இறைவன் நமக்கு மறுமையில் பாவங்களை மன்னிக்கிறான், நன்மையை வழங்குகிறான் எனும்போது அந்த நிரந்தரத்தை எண்ணி ஆறுதல் பெற வேண்டும்.
“ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: (புகாரி: 5641) , 5642
இந்த உலகத்தில் ஒரு பொருளாதாரம் நமக்குக் கிடைக்க வேண்டுமென்றால் அதற்காக எவ்வளவோ கஷ்டம் கொள்கிறோம். நாளை மறுமையில் நாம் இந்த உலகத்தில் அடைகின்ற கஷ்டத்திற்காக நன்மைகள் கிடைக்கிறது எனும் நம்பிக்கை ஆழமாகும் போது கஷ்டங்கள் எல்லாம் தூசுகளாகும். எல்லாம் நன்மைக்கே! எல்லாவற்றிற்கும் மேலாக விதி தொடர்பான நம்பிக்கை சரியாக இருந்து விட்டால் கவலைகள் நீங்கி, நிம்மதி பெறலாம். எதிர்காலத்திற்காக முயற்சி செய்ய வேண்டும். இறந்த காலத்திற்காகக் கவலைப்படக்கூடாது. எது கிடைத்தாலும் அல்லாஹ் வழங்கியது என்ற பணிவு வேண்டும்.
தன்னால் கிடைத்தது என்ற அகந்தை கூடாது. தவறிவிட்டால் அதற்காகக் கலங்கக் கூடாது என்பதற்காகவே விதி ஏற்பாடு.
مَاۤ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ فِى الْاَرْضِ وَلَا فِىْۤ اَنْفُسِكُمْ اِلَّا فِىْ كِتٰبٍ مِّنْ قَبْلِ اَنْ نَّبْـرَاَهَا ؕ اِنَّ ذٰ لِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌۚ ۖ
لِّـكَيْلَا تَاْسَوْا عَلٰى مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوْا بِمَاۤ اٰتٰٮكُمْؕ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرِۙ
இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.
உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும் (விதியை ஏற்படுத்தியுள்ளான்). கர்வமும், பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
எந்தக் கஷ்டம் வந்தாலும் இறைவன் கொடுத்த விதி என்று கடந்து போகிற போது நமது மன அழுத்தம் குறைந்து நிம்மதியுடன் இருக்கலாம். இறைவன் ஏற்படுத்திய இந்த விதியில் ஏதேனும் நன்மையை இறைவன் வைத்திருப்பான்.
நீங்கள் ஒன்றை வெறுக்கலாம். அது உங்களுக்கு நன்மையாக இருக்கும். நீங்கள் ஒன்றை விரும்பலாம். அது உங்களுக்கு தீயதாக இருக்கும். அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.
நமக்கு எது சிறந்தது என்று படைத்தவனுக்குத் தெரியும். நாம் நன்மையாக நினைப்பது நமக்குத் தீங்காக இருக்கலாம். நாம் தீங்காக நினைப்பது நன்மையாக இருக்கலாம். அவனே அறிவான். அதைதான் நமக்கு வழங்குவான் என்ற விதியின் நம்பிக்கை வாழ்வின் அனைத்துக் கஷ்டங்களின் போதும் மன நெருக்கடியைக் குறைத்து நிம்மதியைத் தரும்.
எனவே இஸ்லாம் மனித வாழ்வின் நிம்மதிக்கான இத்தனை வழிமுறைகளை நமக்கு கற்றுத்தருகிறது. இந்த வழிமுறைகளை நம்முடைய வாழ்வில் கடைப்பிடித்து வாழ்வோமாக.! அப்படிப்பட்ட நன்மக்களாக அல்லாஹு ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.!
வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.